14 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 36

எப்படி வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் பணியாற்றுகிற ஒரு மேலாளருக்குப் பிறகு பொறுப்பேற்பதைப் போன்ற சிரமமான விஷயம் வேறெதுவும் இல்லையென்பதை அந்த கிளையில்தான் நன்கு உணர்ந்தேன்.

என்னுடைய முந்தைய மேலாளர் நல்ல விஷயஞானம் உள்ளவர் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். விஷயஞானம் இல்லாத மேலாளர்கள் செய்யும் தவறுகளை அல்லது தில்லுமுல்லுகளை கண்டுபிடிப்பது எளிது. அவர்கள் செய்வது சரியா தவறா என்பது பலசமயங்களில் அவர்களுக்கே தெரியாது என்பதால் அவர்களுக்கு அவற்றை மறைக்கவும் திறமை இருக்காது.

மாறாக, விஷயஞானம் உள்ளவர்கள் பல தவறுகளை தெரிந்தே அதாவது திட்டமிட்டே செய்வதால் அவற்றை கண்டுபிடிப்பது அத்தனை எளிதல்ல. அதுவுமல்லாமல் என்னுடைய முந்தைய மேலாளர் என்னுடைய வட்டார மேலாளர் மற்றும் தலைமையகத்திலிருந்த சில உயரதிகாரிகளால் திறமையான அதுவும் வெற்றிகரமான மேலாளராக கணிக்கப்பட்டிருந்ததால் அவர் செய்து வைத்திருந்தவைகளைப் பற்றி முறையிடுவதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

நல்லவேளையாக அப்போதிருந்த வங்கி முதல்வருடைய நேரடி உத்தரவின்படி என்னுடைய தலைமை ஆய்வு இலாக்கா ஒரு முழு பிரத்தியேக ஆய்வுக்கு உத்தரவிட்டார். அவர்கள் ஒருமாத காலம் என்னுடைய கிளையில் தங்கியிருந்து ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்தளித்தனர்.

ஆனால் அதுவே எனக்கு பெரிய தலைவலியாகிப் போனது. ஏனெனில் அவர்களுடைய அறிக்கையில் காணப்பட்டிருந்த பல்வேறு தவறுகள் மற்றும் ஒழுங்கீனங்களை சரிசெய்யும் பொறுப்பு என் தலைமீதே விழுந்தது. என்னுடைய எச்.ஆர். இலாக்கா அதிகாரிகளில் சிலர் என்னுடைய முந்தைய மேலாளருக்கு நெருங்கியவர்களாயிருந்ததால் எங்களுடைய தலைமை ஆய்வு இலாக்காவின் பிரத்தியேக ஆய்வுக்கு நானே காரணம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

விளைவு?

என்னுடைய முந்தைய மேலாளரை எனக்கு துணையாக ஒரு மாத காலம் என்னுடைய கிளைக்கு அனுப்பவேண்டும் என்ற ஆய்வுக் குழுவினரின் பரிந்துரையை ஏற்கவியலாது என ஏற்றுக்கொள்ளவியலாத பல காரணங்களைக் காட்டி மறுத்துவிட்டது. இதில் எனக்கு வருத்தம்தான் என்றாலும் அதுவே இறுதியில் ஒரு blessing in disguise ஆகிவிட்டது.

கடந்த வாரத்தில் நான் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளரும் சரி கிளையில் நடந்திருந்த பல தவறுகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வாடிக்கையாளர்களும் சரி நல்ல ஸ்திரமான வணிகம் செய்பவர்களாயிருந்தனர். அத்துடன் மேலாளர் செய்திருந்த தவறுகளால் வங்கிக்கு பெரிதாக நஷ்டம் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. அவர் செய்திருந்த பலவும் வங்கி நியதிகளை மீறுவதாயிருந்தது என்பதுதான் அவர் மீதிருந்த புகார்.

எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளருக்கு ரு.10 லட்சம் கடனாக அளித்திருந்தால் எப்போதாவது தேவைப்படும்போது அதில் சுமார் ரூ.1 லட்சம் வரை அதாவது அதிகபட்ச கடன் தொகையில் (Limit) பத்து விழுக்காடு வரை கூடுதலாக வழங்க மேலாளருக்கு அனுமதி உண்டு. அதற்கு மேல் கொடுக்க வேண்டுமானால் வட்டார மேலாளருக்கோ அல்லது மத்திய கடன் வழங்கும் இலாக்காவிற்கோ பரிந்துரைக்க வேண்டும். ஆனால் மெய்ல் வசதிகள் இல்லாதிருந்த அந்த காலத்தில் அங்கிருந்து அனுமதி கிடைப்பதற்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் பிடிக்கும். (இப்போதோ சில மணி நேரங்களில் அல்லது அதிகபட்சம் ஒரு நாளைக்குள் கிடைத்துவிடுகிறது). ஆகவே என்னுடைய மேலாளர் அதற்கெல்லாம் காத்திருக்க மாட்டார். சிலசமயங்களில் ரூ.10 லட்சம் கடன் கணக்கில் ரூ.20 லட்சம் வரை கூட வழங்கியிருந்தார்.

இத்தகைய கூடுதல் தொகை ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வழங்கலாம் என்பது நியதி. அப்படியே வழங்கினால் ஒன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் சரிசெய்துவிடவேண்டும். ஆனால் பல கணக்குகளில் இத்தகைய கூடுதல் தொகை சகட்டு மேனிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சில கணக்குகளில் தலைமையகம் அனுமதித்திருந்த தியதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் கொடுக்கப்பட்ட கூடுதல் தொகை சரிசெய்யப்படாமல் மாதக் கணக்கில் இருந்தது.

அடுத்து, ஓவர்டிராஃப்ட் எனப்படும் கடன் கணக்கு சாதாரணமாக ஒரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டும். அப்படி புதுப்பிக்கப்படாத கணக்குகள் இப்போதெல்லாம் non performing assets என கருதப்பட்டுவிடும். ஆனால் அப்போது இத்தகைய நியதிகள் இல்லை. இருப்பினும் இத்தகைய புதுப்பிக்கப்படாத கணக்குகளுக்கு புதுகணக்குகளிலிருந்து வசூலிக்கப்படும் வட்டித்தொகைக்கு மேலாக ஒரு விழுக்காடு அபராத வட்டியாக வசூலிக்கப்படும். ஆனால் என்னுடைய நண்பரோ அதை வசூலிக்கமாட்டார். கணக்குகளை குறித்த காலத்தில் புதுப்பிக்கவும் மாட்டார். நான் பொறுப்பேற்ற சமயத்தில் அவர் வழங்கியிருந்த எல்லா ஓவர்டிராஃப்ட் கணக்குகளுமே இரண்டு வருடங்களுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததைக் காண முடிந்தது..

இப்படி எத்தனையோ, எத்தனையோ..

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் ஒருவர் ஒருவராக நான் சந்திக்க சென்றபோது ஏறக்குறையை எல்லோருமே வலுவான வணிகங்களுக்கு உரிமையாளராக இருந்ததைக் காண முடிந்தது. அத்துடன் அனைவருமே நல்ல கணக்காளர்கள், தணிக்கையாளர்களை பணிக்கும் வைத்திருந்ததையும் காண முடிந்தது.

பிறகு ஏன் இவர்கள் வங்கி நியதிகளுக்குட்பட்டு தங்களுடைய கடன் கணக்குகளை நடத்த முடியவில்லை என்று துவக்கத்தில் நினைத்தேன். 'எங்கள என்ன பண்ண சொல்றீங்க சார்? மேனேஜர் எப்ப பார்த்தாலும் பிசியா இருக்கார். அவருக்கு புதுசு புதுசா கடன் குடுக்கறதுக்கே நேரமில்லேங்கறார். அப்புறம் எப்படி எங்க கணக்க புதுப்பிக்கிறது? நாங்க எங்க லிமிட்டுக்கு மேல எடுக்கறதுக்கு காரணமே இதான் சார். ஒங்க பேங்க்ல கடன் வாங்குன டைம்லருந்து எங்க பிசினஸ் ரெண்டு, மூனு மடங்கு கூடிருச்சி. ஓவர்டிராஃப்ட் மட்டும் அதே அளவுதான்னா பிசினஸ் பண்ண வேணாமா சார்? ஆனா நாங்க கணக்குலருந்து எவ்வளவு கேட்டாலும் சுணங்காம குடுத்துருவார். கணக்க புதுப்பிக்கலன்னாலும் எங்களுக்கு தேவையானது கிடைச்சிருதில்லையா? அதான்..' என்றனர் பெரும்பாலான வாடிக்கையாளர்கள்.

வட்டார மேலாளரும் தலைமையகத்திலிருந்த உயர் அதிகாரிகளும் ஸ்டெடியாக வளர்ந்த வணிகத்தின் அளவையும் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்து வந்த லாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்திருந்தனரே தவிர மேலாளருடைய விதி மீறல்களை கண்டுக்கொள்ளவில்லை.

அவருடைய விதி மீறல்களுக்கு அவர் ஏதும் 'கையூட்டு' பெற்றிருந்ததாக ஆதாரம் ஏதும் இருக்கவில்லை. அப்படி கேட்டு பெற்றதாகவும் யாரும் புகார் செய்யவில்லை. 'குடுத்தா வாங்கிக்கிருவார் சார். அவரா எதுவும் கேட்டதில்லை.' என்றுதான் பலரும் கூறினார்கள்.

ஆகவேதான் அவர் வங்கியின் பல நியதிகளையும் மீறியிருந்தாலும் விசாரனையின் இறுதியில் பதவியிறக்கத்தோடு அவருடைய தண்டனை முடிந்தது. இல்லையென்றால் வேலை பறிபோனதுடன் சிறைத்தண்டனையும் கிடைத்திருக்கும்.

அந்த கிளையில் நான் இருந்த சமயத்தில்தான் சமீபத்தில் காலமான ஒரு நடிகையின் சேமிப்புக் கணக்கில் அவருடைய கணவரே கையாடல் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதுவும் முந்தைய மேலாளரின் கவனக் குறைவால்தான். கவனக் குறைவு என்பதைவிடவும் வணிகத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம் எனவும் கூறலாம்.

நடிகை அப்போது மிகவும் பிரபலமாகவும் பிசியாகவும் இருந்தவர். ஆகவே அவருடைய கணக்கில் வரவு செலவு செய்ய அவருடைய கணவருக்கு power of attroney கொடுத்திருந்தார். அதன்படி கணக்கில் லட்சக் கணக்கில் வரவு செலவு செய்திருந்தார் அவருடைய கணவர். அதற்காக வங்கிக்கு வந்து செல்லும் கணவருடன் மேலாளருக்கு நட்பு ஏற்பட அதுவே அவருடைய தில்லுமுல்லுவுக்கு வழியாகிப் போனது.

அத்துடன் திரையுலகினருடைய கணக்கில் வராத வருமானத்தையும் உங்களுடைய வங்கிக்கு டெப்பாசிட்டாக பிடித்துத் தருகிறேன் என்று அவர் ஆசைகாட்டியதை நம்பி வங்கியின் நியதிகளுக்கு புறம்பாக அவர் நடத்திய பலவற்றையும் கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் விளைவு நடிகையின் கணக்கில் நடந்த குளறுபடிகளுக்கு வங்கி மேலாளரும் உடந்தை என்ற புகாருக்கு ஆளாக வேண்டியிருந்தது.

அதைப்பற்றி நாளை...

தொடரும்..

4 comments:

siva said...

non performing assets என்பதை செயலாக்கமற்ற சொத்துகள்(வாராக் கடன்கள்) என்று ஒரு கட்டுரையில்
நான் குறிப்பிட்டேன். இது சரியா?
அல்லது வேறு சொல் எதேனும் உள்ளதா?

சிவஞானம்ஜி

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!


non performing assets என்பதை செயலாக்கமற்ற சொத்துகள்(வாராக் கடன்கள்) என்று ஒரு கட்டுரையில்
நான் குறிப்பிட்டேன். இது சரியா?
அல்லது வேறு சொல் எதேனும் உள்ளதா?//

செயலிழந்த கடன்கள் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன். அவை வங்கிகளுக்குத்தான் சொத்து..

மா சிவகுமார் said...

அழகாக வங்கி நடைமுறைகளை உறுத்தாத தமிழ் பதங்களுடன் கொடுக்கிறீர்கள். திரும்பிப் பார்க்கிறேன் IIல் துறை சார்ந்த தகவல்கள் அதிகமாக கிடைக்கின்றன. நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

இத்தொடரை தொடர்ந்து படித்துவரும் உங்களுக்கும் நன்றி சிவக்குமார்..