13 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 35

சாதாரணமாக வாடிக்கையாளருடைய கணக்கில் வரவு வைத்தபிறகு வசூலுக்கு அனுப்பப்பட்ட ஒரு காசோலை ஏதாவது ஒரு காரணத்திற்காக திரும்பி வருமானால் அதனுடைய தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடைய கணக்கில் பற்று வைத்து உடனே அதாவது அன்றைய வணிக நேரம் (Business Hours) முடிவதற்குள் வசூலித்துவிட வேண்டும் என்பது வங்கி நியதிகளுள் ஒன்று.

அதற்கு தேவையான தொகை கணக்கில் இல்லாமலிருக்கும் பட்சத்தில் சில மேலாளர்கள் திரும்பி வந்த காசோலையை கணக்கில் பற்று வைக்காமல் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை தொலைபேசியில் அழைத்து தொகையை விரைவில் செலுத்த கோருவார்கள். அது பலனளிக்காத பட்சத்தில் நேரில் சந்திக்க வேண்டியிருக்கும். சிலர் ஒரு சில நாட்களில், பலர் ஒரு வாரத்தில் தேவைப்படும் தொகையை மொத்தமாகவோ தவணை முறையிலோ அடைத்துவிடுவார்கள். அவர்கள் அடைக்க வேண்டிய தொகை அடைக்கப்பட்டதும் மேலாளர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் காசோலையை தங்களுடைய துணை அதிகாரிகளிடம் கொடுத்து கணக்கில் பற்று வைக்க சொல்வார்கள்.

ஆனால் வங்கி நியதிகளின்படி அது விதியை மீறிய செயலாகும். மனத் துணிவுள்ள உதவி மேலாளர்கள் இத்தகைய செயலுக்கு சம்மதிக்க மாட்டார்கள். அப்போது மேலாளரே அந்த காரியத்தை செய்ய வேண்டியிருக்கும். அடுத்து வரும் ஆய்வில் பிடிபட்டால் விசாரனை, விளக்கம் என மேலாளர் அல்லல்படுவார்.

இங்கனம் காசோலை திரும்பி வந்த தினமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடைய கணக்கில் பற்று வைக்காமலிருப்பது வங்கி நியதிகளுக்கு மட்டுமல்லாமல் சட்ட நியதிகளுக்கும் புறம்பான செயல் என்பது பல மேலாளர்கள் உணர்வதில்லை. காசோலை திரும்பி வந்த தினத்திலிருந்து பற்று வைக்கும் தினம் வரையிலான இடைபட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மரணமடைய நேர்ந்தால், அதன்பிறகு காசோலைக்கான தொகையை கணக்கில் பற்று வைப்பது செல்லாது. வாடிக்கையாளர்களின் வாரிசுகள் ஒருவேளை அத்தொகையை திருப்பி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.

ஆகவேதான் காசோலை திரும்பிவரும் தினத்தன்றே கணக்கில் தொகை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பற்று வைத்திவிடவேண்டும் என்கிறது வங்கி நியதிகள். போதிய தொகை கணக்கில் இல்லாதிருக்கும் பட்சத்தில் கணக்கில் overdraft வசதி வழங்கப்பட வேண்டியிருக்கும். வழங்கவேண்டிய ஓவர்டிராஃப்ட் கணிசமான தொகையாக இருக்கும் பட்சத்தில் அதை வழங்க பெரும்பாலான மேலாளர்களுக்கு அதிகாரம் இருக்காது என்பதால்தான் அவர்கள் நியதிகளுக்கு புறம்பாக காசோலையை தங்கள் கைவசம் வைத்திருப்பதுண்டு.

ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. மேலாளருடைய பொறுப்பிலிருக்கும் காசோலை களவுபோகும் பட்சத்தில் அவரே வசூலிக்கப்பட வேண்டிய தொகைக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய மேலாளர் நண்பர் ஒருவருக்கு நடந்ததை இங்கே குறிப்பிடுகிறேன்.

இதே போன்ற சந்தர்ப்பம் ஒன்றில் திரும்பி வந்த காசோலையின் பணத்தை வாடிக்கையாளர் திருப்பி செலுத்த மறுத்திருக்கிறார். கேட்டால் 'ஒங்கள யார் சார் செக்கோட பணத்த ஒடனே வரவு வைக்கச் சொன்னா? என்னெ கேக்காம வரவு வச்சிட்டீங்க. நா அத கவனிக்காம வேறொருத்தருக்கும் செக் குடுத்துட்டேன். அது பாசாகி போயிருச்சி. இப்ப எங்கிட்ட பணமில்லை. பணம் வரும்போதுதான் கட்ட முடியும். என்ன பண்ணணுமோ பண்ணிக்குங்க.' என்றும் கூறியிருக்கிறார்.

மேலாளர் அந்த பதவிக்கு புதியவர். காசோலைக்கான தொகையை வசூலிக்காவிட்டால் தன்னுடைய வேலைக்கே ஆபத்து என்று நினைத்தவர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நெருங்கிய நண்பர் ஒருவரையும் தன்னுடைய கிளை ஊழியர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அவரை நேரில் சென்று சந்தித்து தயவு செய்து தொகையை அடைத்துவிடுங்கள், இல்லையென்றால் என்னுடைய வேலைக்கே ஆபத்து என்று புலம்பியிருக்கிறார். வாடிக்கையாளரும் சரி மேலாளருடன் சென்ற அவருடைய நண்பரும் சரி எமகாதர்கள். 'சரி சார். ரிட்டர்ன ஆன செக்க கொண்டு வாங்க. பணத்த ஒங்கக்கிட்டவே குடுத்துடறோம்' என்று கூற அப்பாவி மேலாளர் 'இதோ கொண்டு வந்திருக்கேன் சார்' என்று அவருடைய ஊழியர் தடுத்தும் கேளாமல் கைவசம் கொண்டு வந்திருந்த காசோலையை அவரிடம் கொடுக்க அவரோ 'கொஞ்சம் இருங்க சார் உள்ள போய் பணத்த கொண்டு வரேன்' என்று சென்றவர்தான். அரைமணி நேரத்திற்கும் மேல் வரவில்லை. காத்திருந்த வாடிக்கையாளருடைய நண்பரும் 'சார் எனக்கு வேற வேலையிருக்கு' என்று கிளம்பி செல்ல மேலாளரும் ஊழியரும் மணிக்கணக்கில் காத்திருந்ததுதான் மிச்சம். வாடிக்கையாளர் வரவேயில்லை. சில மணி நேரம் கழித்து வந்த வாடிக்கையாளர் ஒன்றும் தெரியாததுபோல், 'என்ன சார் என்ன விஷயம்?' என்று வினவ மிரண்டு போயிருக்கிறார் மேலாளர். பிறகு காசோலை விவரம் குறித்து கேட்க வாடிக்கையாளர் வெகுண்டு 'என்ன சார் வெளையாடறீங்களா? போய் ரிட்டர்ன் ஆன செக்க கொண்டு வாங்க. பணத்த குடுக்கறேன். இல்லன்னா போலீசுக்கு போக வேண்டியிருக்கும்.' என்று மிரட்டி அனுப்ப மேலாளர் தான் ஏமாற்றப்பட்ட விஷயத்தையும் யாரிடமும் சொல்ல முடியாமல் இறுதியில் தன் கையிலிருந்து தொகையை அடைத்திருக்கிறார்! சுமார் ஒரு வருடம் அவருக்கு கிடைக்கக் கூடிய மாத ஊதியத்தை ஒரேயொரு தவறால் இழக்க வேண்டியிருந்தது.

சரி விஷயத்துக்கு வருவோம்..

என்னுடைய முந்தைய மேலாளர் கொடுத்திருந்த தொகையோ மிகப் பெரியது. அவரே விரும்பினாலும் கைவசமிருந்து அடைக்கக் கூடிய தொகையல்ல. வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வசூல் செய்தே ஆகவேண்டும். ஆனால் எப்படியென்றுதான் குழம்பிப் போயிருக்கிறார். வாடிக்கையாளர் நினைத்திருந்தால் சந்தை வட்டிக்கு பணத்தி புரட்டியிருக்க முடியும். ஆனால் அவருடைய தற்போதைய தேவை நிறைவேறிவிட்ட சூழலில் 'சாரி சார். அவ்வளவு பெரிய தொகைய நான் எப்படி சார் புரட்டறது. நீங்களே அந்த பேங்க் மேனேஜர மீட் பண்ணி பத்திரத்த ரிலீஸ் பண்ணி தாங்க சார். அத அப்படியே ஒங்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணிடறேன்.' என்று கூறியிருக்கிறார்.

வேறு வழி என்னுடைய மேலாளர் அந்த வங்கிக்கு மீண்டும் நேரில் சென்று தன்னுடைய இக்கட்டான சூழலை விவரித்து, கெஞ்சி கூத்தாடியிருக்கிறார். அவர் அனுபவசாலி போலிருக்கிறது. 'சார் நாங்க அந்தாள்கிட்ட பத்திரத்த குடுக்கறாப்பல இல்ல சார். அவர் ஒங்களையும் ஏமாத்திட்டு பத்திரத்தோட போயிருவார். அவர் எங்கக்கிட்ட கட்டுன தொகை நீங்க லோனா குடுத்ததுதான், அதனால பத்திரங்கள நேரடியா எங்க பேங்குக்கே அனுப்பிருங்கன்னு ஒரு லெட்டர் குடுங்க. நா ஒங்க பிராஞ்சுக்கு ரிஜிஸ்தர் போஸ்ட்ல அனுப்பிடறேன்.' என்று அறிவுரை கூறி அனுப்ப என்னுடைய மேலாளர் அதே போல செய்து பத்திரத்தை பெற்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அந்த வங்கிக்கு கொடுத்த அக்கடிதமே பிறகு அவருக்கு எதிராக உபயோகப்படுத்தப்பட்டது.

ஆனால் வாடிக்கையாளருக்கு அத்தனை பெரிய தொகையை கடனாக அளிக்கும் அதிகாரம் வங்கி முதல்வருக்கும் கூட அப்போது இருக்கவில்லை. ஆகவே வங்கியின் இயக்குனர் குழுவுக்கு(Board of Directors) சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு மாத காலம் பிடிக்கும். அதுவரை வாடிக்கையாளருடைய கணக்கில் நிற்கும் ஓவர்டிராஃப்ட் தொகை அப்படியே நிலுவையில் நிற்கும். ஆகவே அந்த தகவலையும் மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும். தெரிவித்தால் உடனே விளக்கம் கோரி கடிதம் வரும். தெரிவிக்காமலிருந்து பிறகு ஆய்வு மூலம் தெரியவந்தால் அது முன்னதைவிடவும் வில்லங்கமாகிவிடக்கூடும்.

என்னுடைய மேலாளர் இதையெல்லாம் ஆலோசித்தாரோ என்னவோ காசோலை பெறப்பட்ட விஷயத்தையும் அது திரும்பி வந்த விஷயத்தையும் தெரிவிக்காமலே புதிதாக ஒரு கடனுக்குண்டான விண்ணப்பத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று தன்னுடைய பரிந்துரையுடன் வட்டார அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க இவருடைய திறமையில் முழு நம்பிக்கை வைத்திருந்த வட்டார மேலாளரும் தன்னுடைய பரிந்துரையுடன் என்னுடைய தலைமையகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

வட்டார மேலாளர் பரிந்துரைத்தபிறகு சாதாரணமாக தலைமையகம் அதற்கு அனுமதி வழங்கிவிடுவது மரபு. ஆனால் என்னுடைய மேலாளர் சற்றும் எதிர்பாராத விதமாக காசோலையை திருப்பியனுப்பிய வங்கிக் கிளை அதிகாரிகளுள் ஒருவர் என்னுடைய அப்போதைய வங்கி முதல்வருக்கு நெருங்கிய உறவினர்! அவருக்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது ஏற்கனவே கடுங்கோபம். அப்படிப்பட்டவருக்கு என்னுடைய மேலாளர் வங்கி நியதிகளுக்கு புறம்பாக உதவி செய்ய முன்வந்திருக்கிறாரே என்ற கோபத்தில் அவருடைய உறவினரான என்னுடைய வங்கி முதல்வரிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. அவர் உடனே வட்டார மேலாளருக்கும் தெரியாமல் ரகசியமாக விசாரனை செய்து யாரும் எதிர்பாராத நேரத்தில் என்னுடைய முந்தைய மேலாளரை கிளையிலிருந்து அகற்றியதுடன் அவரை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள தீர்மானித்து மாற்றியிருக்கிறார். அவர் கிளையில் செய்திருந்த காரியங்கள் முழுவதும் வெளிவரவேண்டுமென்றால் தனக்கு மிகவும் நன்கு பரிச்சயமாயிருந்த ஒருவரைத்தான் மேலாளராக நியமிக்க வேண்டுமென்று தீர்மானித்ததன் விளைவுதான் என்னை வட்டார அலுவலகத்திலிருந்து மாற்றியது!

இதுபோலத்தான் இருந்தது அவருடைய பர்சனல் கோப்பிலிருந்து எடுத்த ஒவ்வொரு கடிதங்களின் பின்னணியும்!

இதை என்னுடைய தலைமையகத்துக்கு தெரிவிக்காமலிருந்தால் நாளை அது என் மீதே விழ வாய்ப்புள்ளதே என்ற நினைத்தேன். ஆனால் அதே சமயம் இவற்றையெல்லாம் துருவி துருவி ஆய்வு செய்து எதற்கு நம்முடைய நேரத்தை வீணாக்குவதெனவும் நினைத்தேன். ஆகவே இங்கும் அங்கும் படாமல் ஒரு ரகசிய அறிக்கையை தயார் செய்து என்னுடைய தலைமையகத்துக்கு அனுப்பினேன். என்னுடைய அறிக்கை கிடைத்ததுமே ஒரு பெரிய ஆய்வுக் குழுவே அடுத்த சில வாரங்களில் என்னுடைய கிளைக்கு வந்து இறங்கியது. பிறகென்ன அடுத்த ஒரு மாதம் அவர்கள் துருவி, துருவி பார்த்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட மேலாளர் மீது விசாரனை, தண்டனை என தொடர்ந்தது. கடந்த ஆண்டு நட்சத்திர மேலாளராக தெரிவு செய்யப்பட்டவர் இரண்டு நிலைகள் பதவியிறக்கப்பட்டு... கடந்த இருபதாண்டுகளாக அதே நிலையில் நீடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். பிறகு வெளிவந்த VRS Schemeல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதுதான் மேலாளர்களுடைய அவல நிலை!


தொடரும்..

4 comments:

sivagnanamji(#16342789) said...

//இதுதான் மேலாளர்களுடைய அவல நிலை.....//

த்சு...த்சு...
எல்லா மேலாளர்களுக்குமா இந்நிலை?
விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு மட்டுந்தானே..?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு மட்டுந்தானே..? //

அதென்னவோ உண்மைதான்..

Krishna said...

பாவமாத்தானிருக்கு அவர நினச்சா...பாடமும் கத்துக்கணும் நாங்க...

அந்த காசோலைய வாங்கிட்டு அப்புறம் ஏமாத்தன ஆளுங்க இப்பல்லாம் நிறைய ஆகிட்டாங்க சார். இதனால, இப்பல்லாம், நியாயமா இருக்கறவங்கள கூட அவநம்பிக்கையா பார்க்கறதுதான் நியதியா போயிடிச்சி சார்.

வெளியிலயிருந்து பார்த்தா, சுகமான வேலை மாதிரி தெரிஞ்சாலும், மேலாளர் மாதிரி ஆகிட்டா, நிறைய மன உளைச்சலுக்கு ஆளாக்கிற வேலையாத்தான் இருக்கு, வங்கிப் பணி...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா,

பாடமும் கத்துக்கணும் நாங்க...//

ஒருவர் அடையும் வெற்றியை விட அவருடைய தோல்வியே பிறருக்கு பாடமாக அமைகின்றன..

மேலாளர் மாதிரி ஆகிட்டா, நிறைய மன உளைச்சலுக்கு ஆளாக்கிற வேலையாத்தான் இருக்கு, வங்கிப் பணி...//

உண்மைதான் கிருஷ்ணா.. முக்கியமாக வங்கிகளுக்கிடையே இப்போது நிலவி வரும் ஆரோக்கியமற்ற போட்டியும் இதற்கு காரணம்.