07 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 34

நேற்றைய தினம் நான் விவரித்த சம்பவத்தின் பின்னணி என்ன?

அதற்கு முன் ஒரு சிறு எடுத்துக்காட்டு.

ஒரு வாடிக்கையாளருக்கு 'அ' மற்றும் 'ஆ' வங்கிகளில் கணக்கு உள்ளது என வைத்துக்கொள்வோம்.

. அவருக்கு அத்தியாவசியமாக ஒரு சில தினங்களுக்கு (அதிகபட்சம் ஒரு வாரம்) ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் இரண்டு கணக்குகளிலும் பணம் இல்லை. அவருக்கு வரவேண்டிய இடத்திலிருந்து எதிர்பார்த்த பணம் வந்து சேரவில்லை. ஆனால் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும்.

ஆகவே 'அ' வங்கியின் மேலாளருடைய துணையுடன் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்.

'ஆ' வங்கியின் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை எழுதி அதை 'அ' வங்கியிலுள்ள கணக்கில் டெப்பாசிட் செய்கிறார்.

'அ' வங்கியின் மேலாளர் உடனே அக்காசோலைக்கான தொகையை அவருடைய கணக்கில் வங்கியின் விதிகளை மீறி வரவு வைத்து வாடிக்கையாளர் அத்தொகையை உடனே எடுக்கவும் வகை செய்கிறார்.

ஆனால் 'ஆ' வங்கியின் காசோலையை உள்ளூர் க்ளியரிங் மூலம் அந்த வங்கிக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்கிறார்.

இதற்கிடையில் வாடிக்கையாளருக்கு வேறு இடத்திலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேர்கிறது. 'ஆ' வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு 'அ' வங்கி மேலாளரிடம் தெரிவிக்கிறார். காசோலையை உள்ளூர் க்ளியரிங்கில் அனுப்புகிறார். காசோலை பாசாகிறது.

இப்போது, எதற்காக இந்த வேலையை தன்னுடைய வங்கியின் நியதிகளை மீறி ஒரு மேலாளர் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ஒன்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் உண்மையிலேயே கிளைக்கு மிகவும் வேண்டப்பட்டவராயிருக்கலாம். அவரால் வங்கிக்கு பெருத்த வருமானம் கிடைத்திருக்கலாம்.

அல்லது வாடிக்கையாளர் உண்மையிலேயே வடித்தெடுத்த எத்தனாயிருக்கலாம். மேலாளரை வசியப்படுத்தியோ (இதற்கு பல காரணங்கள் இருக்கும்) அல்லது மிரட்டியோ பணிய வைத்திருக்கலாம்.

சரி.. இதனால் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் ஒரு கிளையில் பணியாற்றும் துணை மற்றும் உதவி மேலாளர்கள் புத்திசாலிகளாகவோ அல்லது விவரம் தெரிந்தவர்களாகவோ இருந்தால் ஒரு மேலாளர் நினைத்தாலும் இது சாத்தியமில்லை. ஆனால் எல்லோரும் சேர்ந்து இத்தகைய காரியங்களை நடத்துவதென்றால் கிளையிலுள்ளவர்களைத் தவிர வேறெவருக்கும் தெரியாமல் இதைச் செய்ய முடியும். வருடாந்தர ஆய்வாளர்களால் கூட இதை அத்தனை எளிதாக - கணினி மயமாக்கப்பட்ட இக்காலத்திலும் - கண்டுபிடித்துவிட முடியாது.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் வாடிக்கையாளருக்கு வேறு இடத்திலிருந்து பணம் வரவேண்டியிருந்தது. அது எப்படியும் இன்னும் ஒரு வார காலத்தில் வந்துவிடும் என்று உறுதியளித்ததால் மேலாளர் அந்த திட்டத்திற்கு இசைந்திருக்கிறார்.

ஆனால் நான் நேற்று கூறிய வாடிக்கையாளர் விஷயத்தில் நடந்திருந்தது அதுவல்ல.

அதை தெரிந்துக்கொள்ள நான் சாம, பேத, தான, தண்டம் என பல வழிகளிலும் முயற்சித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வாயிலிருந்தே வரவழைத்தேன். ஆனால் அவர் கூறியதை அப்படியே நம்பாமல் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரையும் நேரில் சென்று விசாரிக்க வேண்டியிருந்தது.

நடந்தது இதுதான்..

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் ஒரு Honest Borrower வகையைச் சார்ந்தவர்.. நான் கடந்த வாரம் கூறிய இவ்வகை வாடிக்கையாளர்களின் குணாதிசயங்களை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்..

1. இத்தகையோருக்கு கடன் வழங்குவது வங்கிகளுடைய கடமை.

2. தங்களுக்கு தேவையான எல்லா சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வட்டி விகிதத்தில் சலுகை, நீண்டகால தவணைகள், திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் பீனல் வட்டியில்லாத கால நீட்டிப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

3. வழங்கப்பட்ட கடன் தொகைக்கு மேல் தேவைப்படும்போதெல்லாம் மேலாளர் முகம் கோணாமல் வழங்கிவிட வேண்டும்.

4. இத்தகைய கூடுதல் தேவையை நியாயப்படுத்த ஏதாவது ஆவணங்களையோ, அல்லது விவரங்களையோ கோரினால் அதற்கும் மசிய மாட்டார்கள்.

5. யாராவது - அதாவது என்னைப் போன்ற பிடிவாதமுள்ள மேலாளர்கள் - மறுத்தால் அடுத்த நொடியே ரிசர்வ் வங்கிக்கோ அல்லது மேலதிகாரிகளுக்கோ இன்னார் என்னிடமிருந்து கையூட்டு கோரினார் என்ற புகார் பறக்கும்.

இவருடைய நிறுவனம் ஒரு வங்கியிலிருந்து கணிசமான தொகை கடன் பெற்றிருந்தது. ஆனால் அதில் அடிக்கடி கூடுதல் தொகை கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வங்கி அதிகாரி ஒருவர் ஒரு கட்டத்தில் பிடிவாதமாக இவருடைய வேண்டுகோளை மறுத்திருக்கிறார். இவர் உடனே குறிப்பிட்ட அதிகாரி கையூட்டு கேட்கிறார் என நேரே லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்கிறார். அவர்களும் அதை உண்மையென நம்பி இவர் வழியாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வலைவீச அந்த அப்பாவி அதிகாரி வாடிக்கையாளர் அளித்த உறையில் என்ன இருக்கிறதென தெரியாமலே பெற்றுக்கொண்டு பிடிபடுகிறார். வங்கி நிர்வாகம் உடனே அவரை இடைநிலை பணிநீக்கம் செய்கிறது.

அதன் பிறகு அதிகாரியின் நேர்மையில் நம்பிக்கை வைத்திருந்த கிளை மேலாளரும் மற்ற அதிகாரிகளும் வாடிக்கையாளரை பழிவாங்கும் எண்ணத்துடன் அவருக்கு எந்த சலுகையையும் வழங்க மறுத்துவிடுகிறார்கள். வாடிக்கையாளரின் வணிகம் ஸ்தம்பித்துப் போகிறது.

நம்முடைய மேலாளர் நண்பருடைய மாநிலைத்தைச் சார்ந்தவர் இந்த வாடிக்கையாளர். இருவருமே சென்னனயில் ஒரே பகுதியில் (area) வசிப்பவர்கள். எப்படி பரிச்சயமானர்களோ தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட நிலையை நம் நண்பரிடம் எடுத்துரைத்திருக்க வேண்டும்.

மேலாளர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தொழிற்சாலையை சென்று பார்வையிடுகிறார். நல்ல நிலையிலிருந்த அந்த தொழிற்சாலையைப் பார்த்ததும் திருப்தியடைந்தவர் வாடிக்கையாளர் கடன் பெற்றிருந்த வங்கியிலிருந்த கடன் தொகை முழுவதையும் அவருடைய கிளைக்கு மாற்றிக்கொள்ள தீர்மானித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கிக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிவிக்குமாறு அந்த வங்கிக்கு கடிதம் எழுதுகிறார்.

எப்படியோ தொலைந்தால் போதும் என்று கருதிய அந்த வங்கி மேலாளர் வட்டியுடன் சேர்த்து அடைக்க வேண்டிய தொகையை தெரிவிக்கிறார். ஆனால் அதை திரட்டி அடைக்க வாடிக்கையாளர் கைவசம் பணம் இல்லை.

எங்களுடைய மேலாளர் அவருடைய நிலையைக் கண்டு பரிதாபப்பட்டாரோ என்னவோ ஒருதிட்டத்தை உருவாக்கி தருகிறார். அதன்படி அந்த வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை அதே கணக்கிலிருந்து காசோலையாக பெற்று எங்களுடைய வங்கியில் புதிதாய் ஒரு கணக்கை துவக்கி அதில் வரவு வைத்து அன்றே வாடிக்கையாளரை பணத்தை எடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அடைக்க உதவுகிறார். (அவரும் கூடவே வந்தார் என்றார் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்.)

சாதாரணமாக ஒருவர் தன்னுடைய கடனை அடைத்ததும் அவர் அதற்கு ஈடாக வைத்திருந்த பத்திரங்களை உடனே திருப்பியளித்துவிட வேண்டும் என்பது எல்லா வங்கிகளுக்கும் உள்ள பொதுவான நியதி. ஆனால் நம்முடைய வாடிக்கையாளர் ஒரு நேர்மையான அதிகாரியின் மீது பொய்யான ஒரு புகாரை செய்திருந்ததால் அந்த வங்கி மேலாளர் அவரை சற்று இழுத்தடிக்க தீர்மானித்தார் போலும்..

இதோ தருகிறேன் நாளை தருகிறேன்.. என்று இழுத்தடிக்க நம்முடைய மேலாளர் பாடு திண்டாட்டமாகி இருக்கிறது..

கையில் வாடிக்கையாளர் கொடுத்த காசோலை வேறு.. அதை க்ளியரிங்கில் அனுப்ப வேண்டும். ஏற்கனவே கணக்கு முடிக்கப்பட்டிருந்ததால் அது நிச்சயம் திரும்பிவரும் என்றும் நம் மேலாளருக்கு தெரியும்..

கடன் பத்திரங்களை அந்த வங்கி ரிலீஸ் செய்திருந்தால் நம்முடைய மேலாளரால் கடனை வழங்கியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லையென்பது வேறு விஷயம்.

கடன் பத்திரங்களும் இல்லாத சூழலில் வாடிக்கையாளரை நம்பி எப்படி இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுப்பதென நினைத்திருப்பார் போலிருக்கிறது. சரி வருவது வரட்டும் என்று தன் கைவசமிருந்த காசோலையை க்ளியரிங்கில் இடுகிறார். இரண்டு நாட்கள் கழித்து காசோலை 'கணக்கு முடிக்கப்பட்டுவிட்டது' என்ற காரணத்துடன் திரும்பிவருகிறது..

தொடரும்..

19 comments:

sivagnanamji(#16342789) said...

நன்றி!
இம்முறைகேடு எப்படி செயல்படுத்தப்
படுகின்றது, விளைவுகள் என்ன என்று
தெரியாமல் குழம்பியிருந்தேன்.
இப்பொழுது தெளிவாகி விட்டது

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

விளைவுகள் என்ன என்று
தெரியாமல் குழம்பியிருந்தேன்.
இப்பொழுது தெளிவாகி விட்டது //


அப்ப்ப்ப்ப்ப்ப்பா நான் பாசாயிட்டேன்:)

இலவசக்கொத்தனார் said...

நல்ல அழகா எல்லாருக்கும் புரிய மாதிரி சொல்லி இருக்கீங்க. இதை படிச்சுட்டு யாராவது தம் வங்கி மேலாளரிடம் இந்த வம்பு பண்ணாம இருந்தா சரி!! ;-D

இலவசக்கொத்தனார் said...

நல்ல அழகா எல்லாருக்கும் புரிய மாதிரி சொல்லி இருக்கீங்க. இதை படிச்சுட்டு யாராவது தம் வங்கி மேலாளரிடம் இந்த வம்பு பண்ணாம இருந்தா சரி!! ;-D

இவருதான் நேர்மையான வாடிக்கையாளராச்சே. கடனைப் பைசல் பண்ணுன உடனே பத்திரங்கள் தரலைன்னா அதுக்கு இவரு ஒரு வம்பும் பண்ணலையா?

ஒருவரிடம் நான் ஒரு காசோலையைக் கொடுத்து வங்கியில் போடாதே எனச் சொல்லி இருந்தால், அதனை மீறி அவர் அந்த காசோலையை வங்கியில் செலுத்துவாரேயானால் அது சரியா?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கொத்தனார்,

இதை படிச்சுட்டு யாராவது தம் வங்கி மேலாளரிடம் இந்த வம்பு பண்ணாம இருந்தா சரி//

இத படிக்கறவங்களுக்கு வேணும்னா இது புதுசா இருக்கலாம். ஆனா வங்கி மேலாளருக்கு இது பழசுதானே. அதனால ஏமாறமாட்டார்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

இவருதான் நேர்மையான வாடிக்கையாளராச்சே. கடனைப் பைசல் பண்ணுன உடனே பத்திரங்கள் தரலைன்னா அதுக்கு இவரு ஒரு வம்பும் பண்ணலையா? //

பண்ணாம இருந்திருப்பாரா.. நிச்சயம் பண்ணியிருப்பார். ஆனால் அவர்கள் அதற்கு மசிந்திருக்க மாட்டார்கள்.

ஒருவரிடம் நான் ஒரு காசோலையைக் கொடுத்து வங்கியில் போடாதே எனச் சொல்லி இருந்தால், அதனை மீறி அவர் அந்த காசோலையை வங்கியில் செலுத்துவாரேயானால் அது சரியா?//

சரியில்லைதான். ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.. அதை எழுத்துமூலம் நீங்கள் தெரீவித்து அவரும் அதற்கு எழுத்து மூலம் ஒப்புதல் அளித்திருந்தால் ஒருவேளை நடவடிக்கை எடுக்க முடியும். அதிலும் consideration என்றொரு சிக்கல் உள்ளது. அதை விளக்க வேண்டுமென்றால் ஒரு தனி பதிவே வேண்டியிருக்கும்.

sivagnanamji(#16342789) said...

//consideration என்றொரு சிக்கல் உள்ளது...பதிவு...//

தனிப்பதிவு போட்டால் தப்பில்லை; நல்லதுதான்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

தனிப்பதிவு போட்டால் தப்பில்லை; நல்லதுதான் //

ஆனா ஏதோ பேங்கிங் க்ளாஸ் மாதிரி ஆயிரும்..

G.Ragavan said...

பொய்ப் புகார் வேறயா? எவ்வளவு பெரிய தப்பு! நியாயமான காரணங்களுக்காக செய்ய வேண்டிய புகார்களுக்கு என்ன மதிப்பு இருக்கும். இது மிகப் பெரிய தப்பு. ஆனா ஒன்னுங்க....தப்பு செய்யனும்னு துணிஞ்சிட்டா எதுவும் தப்பாத் தெரியாது. ஆனா அப்படித் துணியக் கூடாது. எண்ணித் துணிக கருமம். இல்லைன்னா கருமந்தான்.

Sun said...

படிக்கவே தலை சுத்துது டி.பி.ஆர்!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

எண்ணித் துணிக கருமம். இல்லைன்னா கருமந்தான். //

எப்பவும் போலவே சரியா சொன்னீங்க:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சன்,

படிக்கவே தலை சுத்துது டி.பி.ஆர்! //

அத நேர்ல பாத்தப்போ எனக்கு எப்படி சுத்தியிருக்கும்..

இதவிட பயங்கரமெல்லாம் நடந்திருக்கு.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

அரவிந்தன்,

ஒங்க கமெண்ட்ல பேங்க் மற்றும் அதன் பிராஞ்ச் பேரையும் குறிப்பிட்டிருக்கறதுனால வெளியடலீங்க..

தப்பா நினைச்சிக்காதீங்க..

இதெல்லாம் பேங்க்ல ரொம்பவும் சகஜமாயிருச்சி..

Sivaprakasam said...

<----
இம்முறைகேடு எப்படி செயல்படுத்தப்
படுகின்றது, விளைவுகள் என்ன என்று
தெரியாமல் குழம்பியிருந்தேன்.
இப்பொழுது தெளிவாகி விட்டது
--->
னான் ஏதோ எனக்கு மட்டும்தான் புரியவில்லை என்று நினைத்தேன் -)))

Sivaprakasam said...

<---
அத நேர்ல பாத்தப்போ எனக்கு எப்படி சுத்தியிருக்கும்..
---->
னீங்கள் அந்த தொழிலில்தானே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு சகஜமாகத்தானே இருக்க வேண்டும். எங்காவது டாக்டருக்கு (அடுத்தவருடைய) இரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வருமா?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவா,

நான் ஏதோ எனக்கு மட்டும்தான் புரியவில்லை என்று நினைத்தேன்//

வங்கித்துறையில சம்பந்தப்படாதவங்க யாருக்குமே இது குழப்பமாத்தான் இருக்கும்..

நான் விளக்குனதும் எத்தன பேருக்கும் புரிஞ்சிருக்கும்னு தெரியலை..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

உங்களுக்கு சகஜமாகத்தானே இருக்க வேண்டும்.//

இந்த மாதிரி காரியங்கள் எங்கள் வங்கியில் சகஜமில்லீங்க.. அப்ப மட்டுமில்லை இப்பவும்தான்.

அதுவும் அப்போது நான் ஒரு மிட்ல் லெவல் அதிகாரி. உயர் அதிகாரிகளுக்கு வேண்டுமானால் இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற அதிகாரிகள் இப்படியொரு காரியத்தைச் செய்து பிடிபட்டால் வேலையே கூட போய்விட்டிருக்கும்.

பாலராஜன்கீதா said...

// ஆனால் 'ஆ' வங்கியின் காசோலையை உள்ளூர் க்ளியரிங் மூலம் அந்த வங்கிக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்கிறார். //

கலெக்ஷன் என்றால்கூட கால தாமதம் செய்ய இயலும். ஆனால் க்ளியரிங்கில் அவ்வாறு செய்ய இயலுமா டிபிஆர் அய்யா ? அவ்வாறு செய்தால் தினம் தினம் முடிக்கவேண்டிய கணக்குகள் சரியாக இருக்காது என்பது என் ஐயம்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க பாலா,

அவ்வாறு செய்தால் தினம் தினம் முடிக்கவேண்டிய கணக்குகள் சரியாக இருக்காது என்பது என் ஐயம். //

உங்களுடைய ஐயம் சரியானதுதான். ஆனால் அதை தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கு விவரிப்பது உசிதமாக இருக்காது.