06 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 33

நம்முடைய மூளை ஆக்டிவாக இருக்கும் சமயத்தில் உறக்கம் வருவதில்லை என்பது உண்மை!

இதை நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். நம்முடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை விட அலுவலகத்தில் அதாவது நம்முடைய உத்தியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளால்தான் நம்முடைய உறக்கம் பல சமயங்களில் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பர்சனல் பிரச்சினைகளை நம் குடும்பத்திலுள்ளவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வு காண முடிகிறது. ஆனால் அது நம்முடைய அலுவலகத்தில் முடிவதில்லை.

அதுவும் மேலாளர் பதவி என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பதவி. அந்த கிளையைப் பொறுத்தவரை அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் முக்கியமாக தீயவைகளுக்கு அவரே பொறுப்பு. நல்லவைகளை அதாவது வணிகத்தில் அவர் அடையும் வெற்றிகளுக்கு தங்களையும் ஒரு காரணியாக காட்டிக்கொள்ள பலரும் அதாவது கிளையிலுள்ள உதவி அல்லது துணை மேலாளர்களிலிருந்து வட்டார அலுவலக அதிகாரிகள் மற்றும் தலைமையக அதிகாரிகள் என பலரும் முன்வருவார்கள். ஆனால் அவருடைய தவறுகளுக்கும் அதனால் வணிகத்தில் ஏற்படும் சரிவுக்கும், வங்கிக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க அவரை விட்டால் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் தனிமைப்படுத்தப்படுவது நிச்சயம்.

ஆகவே அவரே அதைப் பற்றி சிந்தித்து அதற்கு ஒரு தீர்வு காண வேண்டியிருக்கும். அதன் காரணமாகவே பல இரவுகளில் தூக்கம் கலைந்து அவதிப்படுவார்கள். நானும் அத்தகைய சூழலில் இருந்திருப்பதால் அதன் வேதனையை, அதன் பாதிப்புகளை அனுபவித்திருக்கிறேன்.

அப்படித்தான் அவதிப்பட்டேன் அன்றைய இரவும்.

அடுத்த நாள் அலுவலகம் புறப்படுகையில் அலுவலகத்திலுள்ள விடுப்பு ரிஜிஸ்தரை எடுத்துவரச் சொல்லி சரிபார்த்துவிட்டு என்னுடைய தலைமையதிகாரியை அழைத்து அதற்குண்டான சாங்ஷன் எதுவும் கோப்பில் இல்லை என்பதை கூறவேண்டும் என குறித்துக்கொண்டு கோப்பிலிருந்து எடுத்து தனியாக வைத்திருந்த கடிதங்களையும் கோப்புடன் சேர்த்து எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றடைந்தேன்.

அலுவலகம் சென்றடைந்ததும் முதல் வேலையாக விடுப்பு ரிஜிஸ்தரைக் கொண்டு வர பணித்தேன். நான் நினைத்தது போலவேதான் இருந்தது. அந்த தியதிக்கான விடுப்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. பிறகு என்னுடைய அலுவலக வருகை குறிப்பு (Attendance) புத்தகத்தை எடுத்து வரச்சொல்லி பார்த்தேன். முந்தைய மேலாளர் அத்தியதிகளில் கையொப்பமிட்டிருந்தார்! ஆனால் அதை பிறகு அழிக்க முயன்றிருந்தது தெரிந்தது.

ஏன்? அப்படியென்ன நடந்திருக்கும் அத்தியதிகளுள்? அதைத் தெரிந்துக்கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. கிளையிலிருந்த எந்த அதிகாரியாலும் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியவில்லை. அவர்களில் பலரும் அப்போதுதான் அதைப் பார்த்தனர் என்பதை அவர்களுடைய முகபாவமே காட்டிக்கொடுத்தது.

அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டால் அன்றைய அலுவல் முழுவதும் பாழாகிவிடும் என்ற நினைப்பில் முந்தைய தினம் அழைத்த அதிகாரியை அழைத்து நான் கண்டவற்றை தெரிவித்துவிட்டு அன்று பல அலுவல்களுக்காக என்னை சந்திக்க வந்திருந்த வாடிக்கையாளர்களைக் கவனிக்க துவங்கினேன். அன்று பகலுணவு நேரம் வரை மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் போனது என்பார்களே அந்த அளவுக்கு இருந்தது.

தமிழ்நாட்டில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் என்றாலே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்ற நாட்களை விடவும் சற்று அதிகமாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். வாரத்தில் செவ்வாய் கிழமைகளில் மட்டும் கூட்டம் குறைவாக இருக்கும். சாதரணமாகவே நம்மவர்களுக்கு இந்த நாள், கிழமைப் பார்க்கும் வழக்கம் உண்டும். அதுவும் வணிகர்களுக்கு சற்று அத்தகைய குணம் சற்று கூடுதலாகவே இருப்பதுண்டு.

என்னுடைய குடியிருப்பு என்னுடைய அலுவலகத்திலிருந்து நடை தூரம்தான் என்பதால் கடும் மழைக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் பகலுணவுக்கு வீட்டுக்குச் சென்றுவிடுவேன்.

பகலுணவுக்குப் பிறகு அலுவலகம் திருமிபிய நான் முதல் வேலையாக முந்தைய தின இரவு கோப்பிலிருந்து எடுத்து என்னுடைய கைப்பெட்டியில் வைத்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கோப்புகளில் சேர்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் செயல்படத் துவங்கினேன். கடிதங்களை வாடிக்கையாளர்கள் வாரியாக பிரித்தெடுத்து அதனதன் கோப்புகளை எடுத்துவரச் சொல்லி அதில் இணைக்க முற்பட்டபோதுதான் எதற்காக முந்தைய மேலாளர் அக்கடிதங்களை தன்னுடைய கோப்பில் வைத்திருந்தார் என்பது புலனாயிற்று!

துவக்கத்தில் சில கடிதங்களைப் படித்துப்பார்த்தபோது அதிலிருந்த விஷயங்கள் என்னை துணுக்குறச் செய்தது. என்னுடைய நண்பர் நான் நினைத்திருந்தவரைப் போல சாது அல்ல என்பது புலனாகியது. பயங்கர சாமர்த்தியமானவர் என்பதும் விளங்கியது.

வங்கி நியதிகளுக்கு முரணாக பல வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்பது ஒவ்வொரு கடிதத்திலிருந்தும் தெரிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய கோப்புகளையும் அவர்களுக்கு கிளையிலிருந்து வழங்கியிருந்த கடன் கணக்குகளையும் ஆய்வு செய்து பார்த்ததில் வங்கிக்கு பாதகம் விளையக்கூடிய விதத்தில் எதுவும் நடந்திருக்கவில்லையென்பதும் விளங்கியது. அவர் நியதிகளுக்கு புறம்பாக சலுகைகளை செய்திருப்பினும் அதை தகுந்த சமயத்திற்குள் சரிசெய்தும் இருந்தார். அவர் செய்துக் கொடுத்திருந்த சலுகைகளையெல்லாம் இங்கு விவரிப்பது உசிதமாயிருக்காது என்பதால் அதை தவிர்த்திருக்கிறேன்.

ஆனால் ஒரேயொரு கடிதத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன். அதன் மூலம் அந்த காலத்திலும் வணிகர்கள் எத்தனை சாதுரியக்காரர்களாய் இருந்திருக்கிறனர் என்பது தெளிவாகும். என்னுடைய மேலாள நண்பர் சாமர்த்தியசாலிதான் என்றாலும் எனக்கென்னவோ அவரும் சாதுரியமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றே தோன்றியது.

அக்கடிதம் சென்னையிலிருந்த வேறொரு வங்கியின் கிளைக்கு எழுதப்பட்டிருந்தது. எங்களுடைய வாடிக்கையாளர் வழங்கியிருந்த காசோலையை எதிர்கொள்ளவேண்டிய தொகை (required balance) அவருடைய கணக்கில் இருப்பதாகவும் ஆகவே அவருடைய கடன் கணக்கை முடித்து அதற்கு ஈடாக அடகு வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களை உடனே திருப்பிக் கொடுக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இது சாதாரணமாக வங்கி அலுவலில் ஒரு மேலாளர் செய்யக் கூடிய செயல்தான். ஆகவே இதை தன்னுடைய பர்சனல் கோப்பில் வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லையே என்று துவக்கத்தில் நினைத்து அதை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கோப்பில் வைத்துவிடுவதுதான் நல்லது என்று நினைத்து அந்த கோப்பைக் கொண்டுவரச் செய்தேன். கடிதத்தை சரியான இடத்தில் இணைக்க வேண்டுமென்றால் அந்த தியதிக்குப் பிறகு இணைக்கப்பட்டிருந்த பல கடிதங்களை எடுத்தால்தான் முடியும் என்று தோன்றியது. ஆகவே என்னுடைய சிப்பந்திகளுள் ஒருவரை அழைத்து அந்த தியதிக்குப்பிறகு இருந்த எல்லா கடிதங்களையும் எடுக்கச் செய்தேன்.

நான் இணைக்க வேண்டிய கடிதத்திற்கு முன்பு ஒரேயொரு கடிதம் மட்டுமே இருந்தது. அதாவது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கென தனியான கோப்பு ஒன்று உருவாக்கப்பட்டதே என் கையிலிருந்த கடிதத்திற்கு சரியாக ஒரு தினத்திற்கு முன்புதான் என்பது விளங்கியது!

அதிலும் விசித்திரம் ஒன்றுமில்லை. ஏனெனில் சாதாரணமாக வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்தவர்களுக்கே பிரத்தியேகமாக கோப்பு ஒன்று உருவாக்கப்படும். அவரிடமிருந்து பெறும் கடன் விண்ணப்ப நகலிலிருந்தே பெருவாரியான கோப்புகள் துவக்கப்பட்டிருக்கும். ஆகவே என்னுடைய சிப்பந்தியாளரை கோப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தவைகளை மீண்டும் கோப்பில் இணைக்குமாறு பணித்தேன். அவர், 'சார் திருப்பி ஃபைல் பண்றதுக்கு டைம் ஆவும். அதனால வெளியில போய் செய்துக்கொண்டு வரேன்.' என்றார். அவர் கூறியது உண்மைதான். எடுப்பது எளிது. மீண்டும் அதே வரிசையில் கோப்பில் இணைப்பது சிரமம். பொறுமையாக செய்ய வேண்டிய வேலை. சாதாரணமாக 'சரி. அப்படியே செய்ங்க.' என அனுமதிக்கும் நான் ஆனால் என்ன காரணத்தாலோ அன்று, 'இல்லைங்க. இங்கயே வச்சி செய்ங்க.' என்றேன்.

அதைத்தான் உள்ளுணர்வு என்பார்களோ?

அவர் நான் குறிப்பிட்ட கடிதத்திற்கு பிறகு இணைக்க நினைத்த முதல் ஆவணமே என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது.

என்னுடைய முந்தைய மேலாளர் பாசாகும் என்று சான்று வழங்கியிருந்தாரே அந்த வங்கிக் கிளையின் கணக்கிலிருந்து அதே வாடிக்கையாளர் அதே தொகைக்கு என்னுடைய வங்கியின் பெயரில் வழங்கியிருந்த ஒரு காசோலை. அப்படியொரு கணக்கே இல்லை என்ற காரணத்துடன் திரும்பி வந்திருந்தது. காசோலையின் தியதியைப் பார்த்தேன். என்னுடைய கிளையிலிருந்து வழங்கப்பட்டிருந்த கடிதத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னார் வழங்கப்பட்டிருந்தது!

தொடரும்..

8 comments:

sivagnanamji(#16342789) said...

இவ்வளவு ஏடாகூடமாகச் செய்ய முடியும் என்று என்போன்ற சாமானியர்களால் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

சாமானியர்களால் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. //

உண்மைதான்.. வங்கித்துறை சற்று அபாயகரமானதுதான்..

Krishna said...

விழிப்புணர்வோடு இருந்ததால், உள்ளுணர்வும் உதவி செய்துவிட்டதே...

உங்கள மாதிரி, செய்யுந்தொழிலே தெய்வம், சோறு போடற வேலைக்கு முதல்ல உண்மையா இருக்கணும், மத்ததெல்லாம் அப்புறம்தான்னு, இருக்கறவங்களுக்கு வேணா, வீட்டுப் பிரச்சினைய விட, அலுவலகப் பிரச்சினைகளால, தூக்கம் வராம இருக்கலாம். நிறைய பேருக்கு, வீட்டுப்பிரச்சினைகளால, வீட்டுல வராத தூக்கம் கூட, அலுவலகலத்தில சுகமா வருமாக்கும்...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா,

நிறைய பேருக்கு, வீட்டுப்பிரச்சினைகளால, வீட்டுல வராத தூக்கம் கூட, அலுவலகலத்தில சுகமா வருமாக்கும்...//

ஆனா வங்கி மேலாளர்கள் அந்த வரிசையில் வருவது அபூர்வம்தான்..

G.Ragavan said...

ஆகா! வாழைப் பழத் திருடன்னு கேள்விப் பட்டிருக்கேன். தோலிருக்கப் பழம் விழுங்கியாம். இங்க அத விடப் பெரிய ஆளுங்கெல்லாம் இருப்பாங்க போல! விட்டா ஆளிருக்கப் பணம் விழுங்கிகளாயிருவாங்க போல!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,


ஆளிருக்கப் பணம் விழுங்கிகளாயிருவாங்க போல//

அப்படீன்னு சொல்லிர முடியாது..

ஆனா சில வங்கி மேலாளர்களுக்கு எது முக்கியம் என்பது தெரிவதில்லை..

Misplaced priorities என்பார்களே அதுபோல..

வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று தங்களுக்கே சிக்கலை உருவாக்கிக் கொள்வார்கள்..

அதுபோலத்தான் இவரும்..

நன்மனம் said...

Accomodation cheque.... for the manager to absolve himself that he did in good faith....

is it correct?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க நன்மனம்,

Accomodation cheque.... for the manager to absolve himself that he did in good faith....

is it correct? //

Yes this is the defense most of the BMs resort to, to justify their action..