05 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 32

என்னுடைய முந்தைய மேலாளர் எந்த வகையைச் (Type) சார்தவர் என்பதை ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு வங்கி மேலாளருக்கு நல்ல விஷயஞானம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவே சிலருக்கு தங்களுடைய கணிப்பின் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வந்துவிடுகிறது என்பதும் உண்மைதான்.

அத்துடன் தன்னால் மற்றவர்களைக் கணிக்கும் திறமை உள்ளது என்கிற நினைப்பும் ஏற்பட்டுவிட்டால் ஆபத்துதான். இது போதாதென்று தன்னால் மட்டுமே எல்லாவற்றையும் சரிவர செய்ய முடியும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.

அதனால்தானோ என்னவோ அவருடைய செயல்பாடுகளில் ஒருவித ரகசியம் இருந்தது. முக்கியமாக அவர் பதவியிலிருந்த காலத்தில் அவர் வழங்கிய கடன்கள் பெற்ற கடந்தாரர்களைப் பற்றிய விவரங்கள் அவருடைய உதவியாளர்களுக்கே தெரியாத புதிராக இருந்தன.

அத்துடன் அவர் கடந்த இரண்டாண்டுகளில் ஒரு சில நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் பணிக்கு வந்திருந்ததையும் கவனித்தேன். அதைக் குறித்து அவருடைய உதவி மேலாளர்கள் ஒருவரிடம் கேட்டபோது, 'சார் அவர் சிக்காகி நாங்க பார்த்தே இல்ல சார். காலையில அஞ்சி மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரத்துக்கு குறையாம வாக், ஜாகிங்குன்னு போவார். குடிக்கறதுல கூட ஸ்ட்ரிக்டா இருப்பார். மிஞ்சிப்போனா மூனு பெக். சிகரெட் குடிக்க மாட்டார். சினிமா, ட்ராமா ஹூஹும்.. இங்க ஃபேமிலியோட இருக்கார். ஒணத்துக்குக் கூட ஊருக்கு போமாட்டார். அப்புறம் எதுக்கு சார் அவருக்கு லீவ்?' என்றார். 'எந்நேரமும் ஞாயித்துக் கிழமைகள்ல கூட இங்க வந்து ஒக்காந்துருப்பார்னா பாத்துக்குங்களேன்.'

அப்படியென்ன செய்வார் என்று நினைத்தேன். எந்த ஒரு காரணத்திற்காகவும் ஞாயிறன்று அலுவலகத்திற்கு செல்வதில்லை என்பதில் உறுதியாயிருப்பவன் நான். அத்துடன் என்னுடன் பணியாற்றும் எவரையும் அன்று அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று கட்டளையிடுவேன். அந்தக் காலத்தில் என்னுடன் பணியாற்றிய இளைஞர்கள் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ எனக்காக வரமாட்டார்கள். ஆனால் இக்கால இளைஞர்களுள் பலரும் நான் என்ன சொன்னாலும் கேட்காமல் ஞாயிறன்றும் அலுவலகத்திற்கு வந்து கணினி முன்னால் அமர்ந்திருப்பது வழக்கமாகிப் போய்விட்டது. இது ஒருவகை addiction அல்லது obsession ஆகிப்போய்விட்டது. ஏன் fashion ஆகிவிட்டது எனவும் சொல்லலாம்.

அவர் எதையாவது அதாவது என்னால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செய்து வைத்திருப்பாரோ என்ற எண்ணம் என்னை நிம்மதியிழக்க செய்தது. எதற்காக அவர் திடீரென்று மாற்றப்பட்டிருப்பார் என்ற சிந்தனை என்னை என்னுடைய பொறுப்பேற்ற அறிக்கையை அனுப்பவிடாமல் செய்தது. என்னுடைய வட்டார மேலாளர் முதலில் மறுத்தாலும் பிறகு என்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் இருவார கால அவகாசத்தை என்னுடைய தலைமையகத்திலிருந்து பெற்றுத் தந்தார்.

அந்த இரு வாரக் காலத்தில் கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்களிலிருந்த தவறுகளையெல்லாம் ஒரு பட்டியலிட்டு அதில் எவற்றையெல்லாம் சரிசெய்ய முந்தைய மேலாளருடைய உதவி தேவை என்பதையும் குறிப்பிட்டு ஒரு பிரத்தியேக ரகசிய அறிக்கையை தயார் செய்து முடித்தேன். கடந்தாரர்களிடமிருந்து பெற்றிருந்த பத்திரங்களிலிருந்த தவறுகளை என்னால் இயன்றவரை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் உதவியுடன் சரிசெய்து முடித்தேன். மீதமிருந்த பத்திரங்களை அதிலிருந்த சிறு, சிறு தவறுகளுடன் அப்படியே வைத்திருந்தாலும் வங்கியின் உரிமை (rights) எவ்வகையிலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என என்னுடைய சட்ட ஆலோசகரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்றேன்.

இரு வார காலம் முடிய இன்னும் இரண்டொரு நாட்கள் இருந்த சமயம். ஒரு நாள் மாலை என்னுடைய தலைமையக எச்.ஆர் அதிகாரி ஒருவரிடமிருந்து ஒரு தொலைப்பேசி வந்தது. 'டிபிஆர். நம்ம மேனன் சாரோட (என்னுடைய முந்தைய மேலாளரின் கற்பனைப் பெயர்) ஃபைல பார்த்து போன வருசம் பிப்ரவரி (இதுவும் கற்பனைதான்) மாசம் 10, 11 தேதியில அவர் லீவில இருந்தாரான்னு பார்த்து சொல்லுங்களேன்.'

எனக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. சாதாரணமாக ஒரு கிளை மேலாளரின் விடுப்புகள் அனைத்துமே தலைமையகத்திலிருந்த எச்.ஆர் பிரிவிலிருந்துதான் சாங்ஷன் செய்யப்படுவது வழக்கம். அத்துடன் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அவ்வருடத்தில் கிளையிலிருந்த அனைவரும் விடுப்பு எடுத்த அறிக்கையொன்று தலைமையகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதும் நியதி. அப்படியிருக்க என்னுடைய முந்தைய மேலாளர் குறிப்பிட்ட தினத்தில் விடுப்பில் இருந்தாரா என்பதை இலாக்காவிலிருந்த அறிக்கைகளிலிருந்தே அறியமுடியுமே என்று நினைத்தேன்.

'நீங்க சொல்றது சரிதான் டிபிஆர். எங்க ரெக்கார்ட் படி மேனன் சார் அந்த ரெண்டு நாள்லயும் ட்யூட்டியிலதான் இருந்திருக்கார். ஆனா ஒங்க பிராஞ்சிலருந்து வந்துருக்கற லீவ் ஸ்டேட்மெண்டுல அவர் லீவ்ல இருந்துருக்கறதா இருக்கு. அவர கேட்டா நா லீவ் லெட்டர் அனுப்பியிருந்தேன். நீங்களும் சாங்ஷன் பண்ணியிருந்தீங்கன்னு சொல்றார். அவர் பேர்ல இங்கருக்க ஃபைல்லயும் நாங்க குடுத்த சாங்ஷன் காப்பிய காணம். அதான் அங்கருக்கற ஃபைல்ல இருக்கான்னு பாக்கணும். பாத்துட்டு அப்புறமா ஃபோன் பண்ணுங்க.' என இணைப்பு துண்டிக்கப்பட சரி என்று அவருடைய கோப்பை எடுக்கச் செய்தேன்.

சாதாரணமாக அலுவலகத்தில் பணியாற்றுபவர்களின் பெயரில் இருக்கும் கோப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுப்பு சாங்ஷன்கள், கடன் விபரங்கள், வருடாந்த ஊதிய உயர்வு கடிதங்கள் ஆகியவை மட்டுமே இருக்கும். ஆகவே கோப்புகள் சிறியதாகவே இருக்கும். அதிகம் போனால் பத்திலிருந்து இருபது தாள்கள் அடங்கிய கோப்பாகவே இருக்கும்.

ஆனால் முந்தைய மேலாளருடைய கோப்பு அசாதாரண அளவுக்கு பெரிதாக இருந்ததைக் கண்டு அதிசயித்தேன். இருப்பினும் அதைக் கொண்டு வந்த ஊழியரிடம் ஒன்றும் கேட்காமல் அதை வாங்கி லேசாக புரட்டினேன். அதில் அவர் சம்பந்தப்பட்ட கடிதங்களுடன் அலுவலக சம்பந்தப்பட்ட பல கடிதங்களும் இருப்பதைப் பார்த்தேன். சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது அவரிடமிருந்து பெறப்படும் கடிதங்கள் எல்லாமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பெயரில் பராமரிக்கப்படும் கோப்புகளில் ஃபைல் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் அவருடைய கோப்பில் இதுபோன்ற பல கடிதங்களும் இருந்தது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே அதை அலுலகத்தில் வைத்து பரிசீலிப்பதால் என்னுடைய மற்ற அலுவல்கள் பாதிக்கப்படலாம் என்று நினைத்து அதை என்னுடைய கைப்பெட்டியில் வைத்தேன், வீட்டில் இரவு உறங்கச் செல்லும் முன் பார்க்கலாம் என்ற நினைப்பில்.

அன்று இரவு அமர்ந்து அவருடைய கோப்பிலிருந்த அவருக்கு சம்பந்தமில்லாத கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசிக்க துவங்கினேன். அதற்கே இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. அதன் முடிவில் என்னுடைய முந்தைய மேலாளரைப் பற்றிய பல ரகசியங்கள் எனக்கு தெரிய வந்தன.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு புதிராகவே இருந்தது. இத்தனை முன்யோசனையுடன் இத்தகைய கடிதங்களை தன்னுடைய கோப்பில் வைத்த மனிதர் அதை எப்படி விட்டுவிட்டுப் போனார்? அவர் மாற்றலாகிச் செல்கையில் தன் கையோடு கொண்டு சென்றிருக்கலாமே. அல்லது குறைந்தபட்சம் இத்தகைய கடிதங்களை தன் கையோடு கொண்டு சென்றிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?

இதுவும் இத்தகையோருடைய பலவீனம் எனலாம். அதாவது தன்னுடைய செயல்பாடுகளில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாது என்ற எண்ணம். தனக்கிருக்கும் புத்திசாலித்தனம் மற்றெவருக்கும் இருக்காது என்ற எண்ணம்! அல்லது வேண்டுமென்றால் கண்டுபிடியுங்களேன் என்கிற ஒரு ஆணவம்!

அவருக்கு சம்பந்தமில்லாத கடிதங்களை நீக்கிவிட்டு என்னுடைய தலைமையக அதிகாரி குறிப்பிட்ட தியதிகளுக்கான விடுப்பு சாங்ஷன் உள்ளதா என தேடிப்பார்த்தேன். குறிப்பிட்ட தியதிகளுக்கு விடுப்பு கோரி என்னுடைய முந்தைய மேலாளர் தலைமையகத்திற்கு அனுப்பியிருந்த விண்ணப்பத்தின் நகல் மட்டும் இருந்தது. அத்துடன் அவர் அந்த ஆண்டிலும் அதற்கு பிந்தைய ஆண்டிலும் அதாவது அவர் மாற்றலாகிச் செல்லும் வரை எடுத்திருந்த ஓரிரு விடுப்புகளுக்கான தலைமையக சாங்ஷன் கடிதங்களும் இருந்தன.

இதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதாக நினைத்தேன். சாதாரணமாக விடுப்பு கோரி அனுப்பும் விண்ணப்பங்களுக்கு நகல் எடுத்து வைக்கும் பழக்கம் எனக்கு மட்டுமல்ல மற்றெந்த மேலாளருக்கும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஏனெனில் நாம் அனுப்பும் விண்ணப்பத்தின் விவரங்களை அதற்கன வைக்கப்பட்டுள்ள விடுப்பு புத்தகத்தில் (Leave Register) பதிந்தப் பிறகே விண்ணப்பம் தலைமையகத்திற்கு அனுப்புவோம். அப்படியிருக்க இக்குறிப்பிட்ட தியதிக்குண்டான விண்ணப்பம் மட்டும் எதற்காக கோப்பில் வைத்துள்ளார் என்று நினைத்தேன். ஆனால் அதைக் குறித்து நேரத்தை வீணாக்க விருப்பமில்லாமல் கோப்பை மூடி வைத்துவிட்டு உறங்கச் சென்றேன்.

ஆனால் உறக்கம் வந்தபாடில்லை...

தொடரும்

13 comments:

இலவசக்கொத்தனார் said...

//அறிக்கைகளிலிருந்தே அறியமுடியுமே என்று நினைத்தேன்.

'நீங்க சொல்றது சரிதான் டிபிஆர். எங்க ரெக்கார்ட் படி மேனன் சார் அந்த ரெண்டு நாள்லயும் ட்யூட்டியிலதான் இருந்திருக்கார்.//

நினைத்ததை வெளியே சொல்லவும் சொல்லி விட்டீர்கள் போல இருக்கிறது. Thinking aloud?!

இந்தப் புத்தில் எந்த பாம்பு இருக்கோ. பார்க்கலாம்.

sivagnanamji(#16342789) said...

இந்த சஸ்பென்ஸ் அனேகமாக புதன்கிழமை பதிவின் முற்பகுதியில்
முடியலாம்...பிற்பகுதியில் அடுத்த சஸ்பென்ஸ் வரலாம்....

Sivaprakasam said...

<--- இக்கால இளைஞர்களுள் பலரும் நான் என்ன சொன்னாலும் கேட்காமல் ஞாயிறன்றும் அலுவலகத்திற்கு வந்து கணினி முன்னால் அமர்ந்திருப்பது வழக்கமாகிப் போய்விட்டது --->
அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.
அந்தக் காலத்திலும்,இந்தக் காலத்திலும் ஒரே மாதிரிதான்.

அந்தக் காலத்தில்
====================
வீட்டில் இருந்தால் (திருமணமானவர்களுக்கு) பிள்ளை,பெண்டாட்டி தொந்தரவெல்லம் இருக்கும்.(திருமணமாகதவர்க்கு) போர் அடிக்கும்.

அன்றைக்கு வேலை(பைலிங் கூட ஒரு வேலைதான்)யை ரொம்ப ரெலாxஆகச் செய்யலாம் துறைத்தலைவர் வராவிட்டால். இல்லாவிட்டலும் அவருக்காக வர வேண்டும்.
உடன் வேலை செய்பவர்களுடன் ஜாலியாக ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்கலாம்.
சில நிறுவனஙளில் சாப்பாடு இலவசம்.
[ நான் பல வருடங்கள் இந்த மாதிரி நிறுவனங்களில் குப்பை கொட்டியிருக்கிறென்]
இந்தக் காலத்தில்
====================
கம்ப்யூடெர்,இன்டெர்னெட் தொடர்பு,குளு குளூ அறை,

என்னுடைய முந்தைய மானேஜர் சொன்ன மாதிரி - யாரும் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்வதற்க்கு முன் அனுமதி பெற வெண்டும் - சொன்னல் தவிர, எல்லோரும் விடுமுறை தினங்களில் அலுவலகம் வரத்தான் செய்வார்கள்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் - மாதச் சம்பளம்தான். மணிக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு கொடுத்து பாருங்கள்.எட்டு மணி நேரத்துக்குமேல் ஒழுங்காக வேலை செய்வது மிகவும் சிரமம்.

நன்மனம் said...

//ஆனால் உறக்கம் வந்தபாடில்லை...//

இத கதையா படிக்கற எங்களுக்கே அடுத்த பதிவு வரைக்கும் தூக்கம் போச்சு... அந்த கடித்தத்த எல்லாம் படிச்ச ஒங்களுக்கு தூக்கம் வந்தா தான் அது ஆச்சரியம்.

எப்பா எவ்வளவு மனிதர்கள்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கொத்தனார்,

நினைத்ததை வெளியே சொல்லவும் சொல்லி விட்டீர்கள் போல இருக்கிறது. Thinking aloud?! //

அப்படித்தான் போலிருக்கிறது:)

இருந்தாலும் நீங்க ரொம்ப ஷார்ப்!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

இந்த சஸ்பென்ஸ் அனேகமாக புதன்கிழமை பதிவின் முற்பகுதியில்
முடியலாம்...பிற்பகுதியில் அடுத்த சஸ்பென்ஸ் வரலாம்.... //

அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்லிட்டீங்க..

என்னெ நல்லா புரிஞ்சி வச்சிருக்கற ஒரே ஆள் நீங்கதான் போலருக்கு:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவா,

அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.
அந்தக் காலத்திலும்,இந்தக் காலத்திலும் ஒரே மாதிரிதான்.//

இருக்கலாம். ஆனா இப்ப அது ரொம்ப ஜாஸ்தியாருக்கோன்னு தோனுது..

எங்க ஆஃபீஸ் இருக்கற காம்ப்ளெக்ஸ்ல சுமார் நூறு அலுவலகங்கள் இருக்கு. அதுல பாதிக்கும் மேல ராத்திரி பத்து மணிக்கும் மேல லைட் எரிஞ்சிக்கிட்டிருகும்.. அதாவது வாரத்துல ஏழுநாளும்.. ஏசி இருக்குன்னு எல்லாருமே இருப்பாங்களா என்ன?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க நன்மனம்,

அந்த கடித்தத்த எல்லாம் படிச்ச ஒங்களுக்கு தூக்கம் வந்தா தான் அது ஆச்சரியம்.//

கரெக்டா சொல்லிட்டீங்க:)

Krishna said...

உங்கள (சீரியல் எழுத்தாளர சொன்னேன் சார்) நல்லா புரிஞ்சிக்கிட்டிருக்கற ஒரு பெரிய படையே இங்க இருக்கு சார். என்ன ஒண்ணு, கொத்ஸ், Thinking aloud பண்ணிட்டார். நாங்கெல்லாம் உள்ளுக்குள்ளயே வெச்சிருக்கோம்...

"ந்த வாரம், துருவித் துருவித் துப்பறியும் டிபிஆர் வாரம்..."

இந்த லீவு நாட்கள்ல, அலுவலகம் வர்றது, இங்க ஜப்பான் பல்கலை கழகங்கள், ஆய்வுக்கூடங்கள்ல, பெரிய பிரச்சினை சார். நாமளும் சனிக்கிழமைகள்ல கட்டாயம் வரணும்னு எதிர்பார்ப்பாங்க....ஆனா, ஞாயிறு, 90 சதவிகிதம் பேர் கட்டாயம் வர மாட்டாங்க..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா,

"ந்த வாரம், துருவித் துருவித் துப்பறியும் டிபிஆர் வாரம்..."//

இந்த வாரம் மட்டுமில்லீங்க.. எல்லா வாரமும்தான்:) நாம மாட்டிக்காம இருக்கணும்னா மத்தவங்க செஞ்சத கண்டுபிடிச்சிரணும்.. இல்லன்னா அந்த பழி நம்ம மேலேயே வந்து விழும்.. இத அனுபவிச்சி படிச்சவன் நான்..

இந்த லீவு நாட்கள்ல, அலுவலகம் வர்றது, இங்க ஜப்பான் பல்கலை கழகங்கள், ஆய்வுக்கூடங்கள்ல, பெரிய பிரச்சினை சார். நாமளும் சனிக்கிழமைகள்ல கட்டாயம் வரணும்னு எதிர்பார்ப்பாங்க....ஆனா, ஞாயிறு, 90 சதவிகிதம் பேர் கட்டாயம் வர மாட்டாங்க.. //

அங்கயுமா? சனிக்கிழமை இங்க அரைநாள்தான்னாலும் முழு நாளும் இருக்கத்தான் வேண்டியிருக்கு..

ஆனா சன்டே ஃபேமிலிக்குத்தான்..

sivagnanamji(#16342789) said...

//தனக்கிருக்கும் புத்திசாலித்தனம் வேறெவருக்கும் இருக்காது என்ற எண்ணம். அல்லது முடிந்தால் கண்டுபிடியுங்களேன் என்ற ஒரு ஆணவம்.//

இந்நிலை பற்றி முன்பே ஒரு பின்னூட்டம் இட்டுள்ளேன்....
எவ்வளவு தேர்ந்த குற்றவாளியானாலும் ஏதோ ஒரு
தடயத்தை விட்டுவிடுகின்றான். காரணம் பல. அவற்றுள் ஒன்று:-
'முடிந்தால் பிடித்துப்பார்' எனும் ஆணவம்..இதை Russian Syndrome
என்று Criminology யில் குறிப்பிடுகின்றனர்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

மீண்டும் வாங்க ஜி!

அவற்றுள் ஒன்று:-
'முடிந்தால் பிடித்துப்பார்' எனும் ஆணவம்..இதை Russian Syndrome
என்று Criminology யில் குறிப்பிடுகின்றனர் //

Russian Syndrome! ம்ம்ம்ம்ம்ம்... நல்ல எடுத்துக்காட்டு..

முன்பெல்லாம் ரஷ்யர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது..

Sivaprakasam said...

<---
எங்க ஆஃபீஸ் இருக்கற காம்ப்ளெக்ஸ்ல சுமார் நூறு அலுவலகங்கள் இருக்கு. அதுல பாதிக்கும் மேல ராத்திரி பத்து மணிக்கும் மேல லைட் எரிஞ்சிக்கிட்டிருகும்.. அதாவது வாரத்துல ஏழுநாளும்.. ----->
எல்லாம் பழைய வேலைகளாக இருக்கும். அது சங்கிலித் தொடர் போன்ற வேலைகள்.ஒரு துறையில் வேலை முடிவதைப் பொறுத்துதான் அடுத்த துறையின் வேலை தொடரும். இதையும் மீறி, சில சமயங்களில், உண்மையாகவே ஆள் பற்றாக்குரை இருக்கும். கேஷியர் மாதிரி அன்றைய வேலையை அன்றே முடிக்க வெண்டும் என்ற காலக்கெடு இல்லாவிட்டல் இப்படித்தான்.
எங்களுக்கெல்லாம் அவ்வப்பொது உள்ள வேலையை அவ்வப்போது முடிக்க வேண்டும் என்று உள்ளதால், நாளை செய்யலாம் என்றே (பெரும்பாலும்) இருக்காது.