29 March 2007

எனக்குள் ஒரு பைத்தியம் (weird mega serial!)

இந்த weirdங்கற சமாச்சாரமே weirdதான்..

நம்ம எல்லாருக்குள்ளயுமே இந்த மாதிரி ஒரு ஆசாமி இருக்கறது சகஜம்தான்.

அப்படீன்னா எனக்குள்ளயும் ஒருத்தன் இருக்கணுமில்லே..

மொதல்ல நம்ம ரஷ்யா (தஞ்சை) இராமனாதன்தான் அவரோட weird லிங்க அனுப்பி படிச்சி பாருங்கய்யான்னார்.

அத படிச்சதும் அவர் சொன்னதுல பலதும் எனக்கும் ஒத்துப்போறத பார்த்தேன்.

அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம மா.சிவக்குமார்கிட்டருந்து ஒரு SMS. சார் உங்களயும் நம்ம weird பட்டியல்ல சேர்த்துருக்கேன்ன்னு.. அப்ப நா கொச்சியிலருந்தேன். சரின்னு பதில் குடுத்துட்டு ஊருக்கு போயி பாத்துக்கலாம்னு இருந்தேன்..

ரெண்டு நா கழிச்சி சென்னை வந்தா நம்ம துளசி அப்புறம் சீனியர் ராகவன் சார் கிட்டருந்து கூகுள்ல மெயில்.. வாங்க நம்ம கிறுக்கர்கள் (மன்னிச்சிக்குங்க.. weirdக்கு அப்படியும் அர்த்தம் சொல்லலாம்!) க்ளப்புல வந்து மெம்பராவுங்கன்னு..

சரி வேறு வழியில்லை.. ஆனா இன்னைக்கி எழுதலாம் நாளைக்கி எழுதலாம்ணு.. தள்ளிப் போயி இன்னைக்கி எப்படியும் எழுதிறணும்னு...

1. நா புடிச்ச முயலுக்கு மூனு காலு.

இது ரொம்ப நாளா எங்கிட்ட இருந்த கிறுக்குத்தனம். இத ஒருமாதிரியான ஈகோன்னும் சொல்லலாம். ஒருதரம் - ரெண்டு வருசத்துக்கு முன்னாலன்னு நினைக்கேன் - எனக்கு ப்ரஷர் அதிகமாயி ஹாஸ்ப்பிடல்ல சேக்க வேண்டியதாயிருச்சி. ஒரு வாரம் தங்கியிருந்து hypertensiveங்கற முத்திரையோட வீட்டுக்கு வந்திருந்தேன். ஒரு ரெண்டு மூனு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் உத்தரவு. ஆனா அதெல்லாம் தேவையில்லை நா இல்லன்னா ஆஃபீசே அஸ்தமிச்சிப் போயிரும்னு வொய்ஃப் கிட்ட வாதம் பண்ணிக்கிட்டிருக்கேன். திடீர்னு எங்க சேர்மன் - ரெண்டு நாள் அஃபிஷியல் விசிட்ல சென்னைக்கு வந்துருக்கார் போல. சரி இவன் ஒரு வழியா காலியாயிருவான் அதுக்கு முன்னால ஒரு பார்வை பாத்துருவோம்னு நினைச்சாரோ என்னவோ - வீட்டுக்கு வந்துட்டார். என் மனைவி இவர் நா என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கார் சார். நீங்களாவது சொல்லுங்களேன்னு புகார். அவர் சிரிச்சிக்கிட்டே 'அட நீங்க ஒன்னும்மா இவரு நாங்க சொன்னால கேக்கமாட்டார். அவர் சொன்னதுதான் சரின்னு நிப்பார்.' அப்படீன்னார்.

உண்மைதான் நான் அப்படித்தான்.. இதுவரைக்கும்.. இப்ப கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாக்கறேன்.. முடிஞ்சாத்தானே?

2. ஒரு நேரத்துக்கு ஒரு பேச்சு

இதுவும் ரொம்ப நாளா இருந்துக்கிட்டு வர்ற கிறுக்குத்தனம். இத அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தறது என் இரண்டு மகள்கள். 'நீங்க எந்த நேரத்துல என்ன பேசுவீங்கன்னே புரிஞ்சிக்க முடியலப்பா' என்பார்கள். என் மனைவி ஒரு அப்பாவி. நான் எந்த நேரத்தில் என்ன பேசினாலும் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்னு சொல்லிருவாங்க. ஒருவேளை மேக்கொண்டு கேட்டா முன்னால சொன்னதுக்கு நேர்மாறா சொல்லிருவேன்னு நினைப்பாங்களோ என்னவோ. வீட்டுலயே இப்படீன்னா ஆஃபீஸ்ல கேக்கவே வேணாம். நம்ம ஜூனியர்ங்க கிட்டன்னா பரவால்லை.. இது சரியான லூசுன்னு விட்டுருவாங்க. ஆனா சில சமயத்துல எங்க டைரக்டர்ஸ்ங்களோட கமிட்டி கூட்டத்துலயே முன்னுக்குபுரணா (இந்த வார்த்த சரிதானா?)_ பேசி மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன். Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..

இதையும் மாத்திக்கலாம்னுதான் பாக்கேன்.. முடிய மாட்டேங்குது..

3. வீட்டுப் பைத்தியம்

'கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு பொறந்துட்டே போலருக்குடா'ன்னு பலதடவ ஏசியிருக்காங்க எங்கம்மா. 'நல்லா சொல்லுங்க அப்பவும் உரைக்காது'. அப்படீம்பாங்க என் மனைவி, அதாவது நா வீட்ல இல்லாதப்போ..

எங்க பேங்க்ல எல்லாருக்கும் மூனு வருசத்துக்கு ஒருமுறைதான் டிரான்ஸ்ஃபர் வரும். நா ஆஃபீசராயி சுமார் முப்பது வருசம் ஆவுது. அப்படிப்பாக்கப்போனா நா பத்து வீடுதான் மாறியிருக்கணும். அதாவது ஊர விட்டு மாறும்போது மட்டும். மூனு வருசத்துக்கு ஒரு வீடுன்னு..
ஆனா நா ஏறக்குறைய ஒவ்வொரு ஊர்லயும் குறைஞ்சது மூனு வீடாவது மாறியிருப்பேன். சென்னையிலயே பத்து வீடுக்கும் மேல.. ''எல்லா வீட்லயும் ஏதாச்சும் குறை இருக்கத்தாண்டா செய்யும்? அதுக்குன்னு இப்படியா நரிக்குறவன் மாதிரி.. நீ போடற ஆட்டத்துக்கெல்லாம் ஒம் பெஞ்சாதியும் சேர்ந்து ஆடறா பாரு... அதான் இப்படி வீடு வீடா ஓடறீங்க"ம்பாங்க எங்கம்மா இப்பவும். அது ஏன்னுதான் தெரியல.. எந்த வீட்டுக்கு போனாலும் ஒரே வருசம்.. மிஞ்சிப் போனா ரெண்டு வருசம்.. கடைசியா கொச்சியிலருந்து மாறி வந்து 26 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள ரெண்டு வீடு மாறியாச்சி. இப்பருக்கற வீட்டோட லீஸ் வர்ற ஜூலை மாசம் முடியுது.. 'ஹூம்.. இருப்பமா மாறுவமான்னு இப்பவே சொல்லிருங்க..' அப்படீங்கறாங்க என் மனைவி. 'அப்பா இதான் கடைசி.. இங்கருந்து பத்து நிமிசத்துல நா ஆஃபீசுக்கு போயிடறேன்.. இனியும் வீடு மார்ற வேலையெல்லாம் வேணாம்.. நா வரமாட்டேன்'னு க்ளியரா சொல்லிட்டா என் ரெண்டாவது மகள். 'என்னப்பா இன்னும் மாறலையா'ன்னு நக்கலா கேக்கறா என் முதல் மகள் கோலாலம்பூர்லருந்து..

இத்தோட நிறுத்திக்கணும்னுதான் தோன்றது.. ஆனா என்ன பண்றதுன்னு தெரியலையே..

4. பேனா பைத்தியம்..

இது ஒருகாலலத்துல இருந்தது.. கட்டுபடியாகாம விட்டுட்டேன்.. அதுவும் இங்க் பேனா.. எத்தன இருந்ததுன்னே கணக்கு மறந்துப் போச்சு.. எப்படி ஆரம்பிச்சதுங்கறதும் மறந்து போச்சு.. ஆனா ஒரு காலத்துல அதுவே பைத்தியமா அலைஞ்சேன்.. ப்ளாட்பாரம், ப்ளாட்பாரமா.. அது போறாதுன்னு விதம் விதமா எழுதற நிப்புங்க வேற.. ஞாயித்துக் கிழமையானா எல்லாத்தையும் எடுத்து தொடைச்சி.. இங்க் ஊத்தி.. சாயந்தரம் ஆகறதுக்குள்ள தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன். ஹூம்.. இப்படியொரு மனுசன கட்டி வச்சிட்டாங்களேன்னு நொந்துப் போயிருவாங்க என் மனைவி. ஆனா வாய தொறந்து ஒருநாளும் திட்டுனதில்லை. சென்னையிலருந்து பம்பாய் மாறி போனப்போ வீடு சரியா அமையாம என்னோட ஜாமானெல்லாம் ஒரு லாரி ஆஃபீஸ்ல ரெண்டு வாரமா கெடக்க வேண்டியாதா போச்சு. அதுவும் நல்ல மழையில. அதுக்கப்புறம் ஒடஞ்சி பாதி ஒடயாம பாதின்னு வீடுவந்து சேர்ந்ததுல முதல் விக்டிம் நம்ம பேனா கலெக்ஷந்தான். அத்தோட விட்டுது அந்த கிறுக்கு..

5. புத்தக பைத்தியம்

இதுவும் இப்ப இல்லை. அப்பத்தான் (முப்பது வருசத்துக்கு முன்னாடி) லெண்டிங் லைப்ரரி சென்னையில அறிமுகமான காலம். பழைய பேப்பர் எடுத்து விக்கற ஒருத்தர் சென்னை புரசைவாக்கத்துல, அதாவது எங்க வீட்டுப் பக்கத்துலயே, ஒரு லெண்டிங் லைப்ரரி துவக்கி ஒங்களமாதிரி (அதாவது பைத்தியக்காரங்க) ஆளுங்கதான் சார் எங்களுக்கு வேணும்னு ரொம்பவும் மரியாதையா கூப்ட்டு மெம்பராக்கினார். அப்போ இருபத்தஞ்சி ரூபா டெப்பாசிட். ஒரு புத்தகத்துக்கு வாரத்துக்கு ஒரு ரூபா. ரெண்டு நாள்ல திருப்பித் தந்துட்டா அம்பது பைசா டிஸ்கவுண்ட். அப்படி ஆரம்பிச்சது இந்த பைத்தியம். ஆஃபீசராயி மும்பைக்கி மாறிப் போயும் இது விடல. நா தங்கியிருந்த செம்பூர்ல ஸ்டேஷன் எறங்குனதுமே ஒரு லைப்ரரி இருந்தது (அது இப்பவும் அதே எடத்துல இருக்குங்கறதுதான் ஆச்சரியம்!) வசதியா போச்சு. வாரம் ரெண்டு மூனுன்னு பரீட்சைக்குக் கூட அப்படி படிச்சிருப்பனோ என்னவோ.. இந்த ஆத்தர் இந்த டைட்டில்னுல்லாம் ஒன்னும் கிடையாது அய்ன் ராண்ட்லருந்து ஹெரால்ட் ராபின்சன் வரைக்கும் தமிழ்ல நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன்லருந்து சுஜாதா வரைக்கும் எது கெடச்சாலும் விடறதில்லை. க்ரைம் பக்கம் மட்டும் போக மாட்டேன். அதுமாதிரியே பெண் எழுத்தாளர் பக்கமும் போமாட்டேன் (தயவு செஞ்சி ஏன்னு கேட்டுறாதீங்க) கண்ணாடி இல்லாம படிக்க முடியாதுன்னு வந்ததும் விட்டுட்டேன்..

6. எமோஷனல் பைத்தியம்

'நீ சரியான எமோஷனல் ஃபூல்றா'ம்பானுங்க என்னோட ஆஃபீஸ் நண்பர்கள். ரொம்ப கஷ்டம்னு வந்து' நீங்க நெனச்சா ஹெல்ப் பண்லாம் சார்'னு சொன்னா போறும். எந்த செக்யூரிட்டியும் இல்லன்னா கூட பரவால்லை.. என் அதிகாரத்துக்குள்ள செக்யூரிட்டி இல்லாம எவ்வளவு லோன் குடுக்க முடியுமோ அத குடுத்துருவேன். சிலர் அத ஒழுங்கா யூஸ் பண்ணி பெரிய ஆளா வந்திருக்காங்க. பலர் என்னெ இளிச்ச வாயனாக்கிட்டு போயிருக்காங்க. மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன். வார்னிங்கும் கிடைச்சிருக்கு. ஆனா இவன் ஒரு எமோஷனல் ஃபூல் மட்டும்தான், ஃப்ராடு இல்லைன்னு எங்க பேங்க்லருக்கறவங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால பெரிசா எதுவும் பனிஷ்மெண்ட் இதுவரைக்கும் கிடைக்கல.. கடவுள் புண்ணியம்னுதான் சொல்லணும்.. பிராஞ்ச் மேனேஜர் பதவியிலருந்து விலகி வந்து பத்து வருசத்துக்கு மேல ஆயிருச்சி.. அதனால தப்பிச்சேன்.

சொந்த வாழ்க்கையிலும் இப்படி பல தடவைகள்ல ஏமாந்துருக்கேன். ஆனாலும் பெரிசா எதுவும் இழப்பு வந்துரலை.

இவ்வளவுதாங்க...

'எனக்குள் ஒரு பைத்தியம்'கற தலைப்புக்கு பதிலா 'எனக்குள் இருக்கும் பைத்தியங்கள்'னு தலைப்பு வச்சிருக்கலாம் போல.. அத்தன பேர் இருக்காங்க..

ஒவ்வொரு நேரத்துல ஒவ்வொன்னு வரும், போவும்...

இன்னும் எத்தன வருமோ எத்தன போவுமோ.. .பொறுத்திருந்துதான் பாக்கணும்..

சரி.. இந்த காலத்து இளைஞர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்..

தப்பா நினைச்சிக்காம வந்து வரிசையா சொல்லுங்க..

ஜோ,
ஜிராகவன்,
இலவச கொத்தனார்,
முத்து (தமிழினி) இவர் சனிக்கிழமைகள்ல மட்டுந்தான் வருவார் போலருக்கு.

28 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 42

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவிகாலத்தில்தான் நான் குறிப்பிட்டிருந்த தலைமை குமாஸ்தா பதவி உயர்வு பெற்று என்னுடைய கிளைக்கு வந்திருந்தார்.

சாதாரணமாக தலைமைக் குமாஸ்தா பதவி அதிகாரியாக (officer) பதவி உயர்வுபெற லாயக்கில்லாதவர்களூக்கு அளிக்கப்படும் ஆறுதல் பரிசு என்ற கருத்து வங்கி ஊழியர்கள் மத்தியில் நிலவி வந்த காலம் அது. இப்போது அந்த பதவி எங்கள் வங்கியில் இல்லை.

ஒரு அதிகாரியாக பதவி உயர்வுபெற அப்போது குறைந்தபட்சம் பள்ளியிறுதி வகுப்பு முடித்திருக்கவேண்டும் (அன்றைய SSLC). ஆங்கிலம் சரளமாக எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

ஆகவே அத்தகைய பதவி உயர்வு பெற்று வருவோரை கிளையிலுள்ள அதிகாரிகள் மட்டுமல்லாமல் சக குமாஸ்தாக்களும் கூட பெரிதாக மதிக்கமாட்டார்கள். அத்துடன் அத்தகையோருடைய பணிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் என்பதால் அவரிடம் வேலை வாங்குவதற்கும் அதிகாரிகளுக்கு தயக்கமாக இருக்கும்.

ஆனால் தங்களுக்கும் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகளூக்கும் இடையேயுள்ள வயது வித்தியாசத்தையே தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு அவர்களை ஆட்டிப்படைப்பார்கள் இத்தகைய த.குமாஸ்தாக்கள்.

அதுவும் தான் ஒரு தொழிற்சங்க பதவியிலுள்ளவர் என்கிற மமதையும் சேர்ந்துக்கொள்ள என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு குட்டி ராஜாங்கத்தையே நடத்தி வந்திருந்தார். ஏற்கனவே தன் சக்திக்கும் மீறிய அளவில் வணிகத்தை வளர்த்துவிட்டிருந்த என்னுடைய முந்தைய மேலாளர் தனக்கிருந்த வேலைப்பளுவில் இவருடைய தொல்லையும் தேவையா என்பதை கருத்தில்கொண்டு அவரிருந்த திசைக்கே திரும்பாமல் இருந்திருப்பார் போலிருந்தது. ஆகவே அவருடைய அதிகாரம் எவ்வித தடையுமில்லாமல் கொடிகட்டிப் பறந்துவந்திருந்தது.

'யார் பேங்குக்கு வந்தாலும்.. மேனேஜர் கிட்ட போறாங்களோ இல்லையோ அவர்கிட்ட போய்ட்டுத்தான் சார் நம்மக்கிட்டயே வருவாங்க. நாங்க எதையாவது மேனேஜர கேக்காம செய்ய முடியாதுன்னு சொன்னம்னா அவர் அதெல்லாம் நா பாத்துக்கறேன் நீங்க செஞ்சி குடுங்கன்னு கஸ்டமர்ஸ் முன்னாலயே சொல்றதும் அத மேனேஜர் கேட்டும் கேக்காதமாதிரி இருக்கறதும்தான் சார் அவருக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்திருக்கு. நீங்களும் அவரோட யூனியன் கனெக்ஷன பாத்து சும்மா இருந்தீங்கன்னா...' என்று என்னுடைய கிளை அதிகாரிகள் அனைவரும் ஒருமுறை என்னிடம் வந்து முறையிட்டபோது, 'பொறுமையா இருங்க.. அவர டீல் பண்றதுக்கு சரியான நேரம் வரணும். நானும் அதுக்குத்தான் காத்துக்கிட்டிருக்கேன். அவசரப்பட்டு எதையாவது செஞ்சி காரியத்த கெடுத்துராதீங்க..' என்று அறிவுறுத்தி அனுப்பிவிட்டு தகுந்த சமயத்திற்கு காத்திருந்தேன்..

அது நான் எதிர்பார்த்ததையும் விடவும் விரைவில் வந்தது.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா தன்னை உதவி மேலாளர் என்று வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளதாக என்னுடைய அதிகாரிகளுள் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு சாட்சியமோ அல்லது ஆதாரமோ என்னிடம் இருக்கவில்லை. ஆகவே அந்த விஷயத்தில் மடக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று காத்திருந்தேன்.

ஒருமுறை நான் என்னுடைய அறையில் அமர்ந்து ஒரு வாடிக்கையாளரிடம் உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் திடீரென்று, 'சார் நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர்கிட்ட ஒரு லோன் ப்ரொப்போசல் குடுத்திருந்தேன். குடுத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி.. எப்ப கேட்டாலும் சரியா பதில் சொல்ல மாட்டேங்குறார். நீங்கதான் என்னாச்சின்னு சொல்லணும் என்றார்.

அப்போது நான் கிளைக்கு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியிருந்தன. எனக்கு தெரிந்தவரை ஒரேயொரு உதவி மேலாளர்தான் என்னுடைய கிளையிலிருந்தார். அவரோ நாளொன்றுக்கு ஐந்தாறு முறையாவது என்னுடன் உரையாடுபவர். அப்படியிருக்க இவருடைய கடன் விண்ணப்பத்தைப் பற்றி என்னிடம் கூறவேயில்லையே என நினைத்தேன். மேலும் அவர் கடன்பெற வரும் வாடிக்கையாளர்களிடம் அவ்வளவாக உரையாடி நான் பார்த்ததேயில்லையே என்றும் நினைத்தேன்.

'நீங்க யார சொல்றீங்க? சாதாரணமா நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர் இதுலல்லாம் தலையிடவே மாட்டாரே?' என்றேன்.

அவர் உடனே பெயரைச் சொல்லாமல் நாசூக்காக என்னுடைய தலைமைக் குமாஸ்தா இருந்த இடத்தை நோக்கி சைகைக் காட்டினார். நான் நினைத்திருந்த சந்தர்ப்பம் வந்துவிட்டது என மகிழ்ந்த நான் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அவர் கிட்டயா? நீங்க குடுத்த ப்ரொப்போசல் காப்பி இருக்கா?' என்றேன்.

அவர் விளங்காமல், 'ஏன் எதுக்கு சார் கேக்கீங்க? உங்கக்கிட்ட தரலையா? அவரையே கேக்கட்டுமா?' என்றார்.

நான் புன்னகையுடன் வேண்டாம் என தலையை அசைத்தேன். பிறகு அவர் எதிர்பாராத நேரத்தில், 'அவர் உங்கக்கிட்ட நான் அசிஸ்டெண்ட் மேனேஜர்னு சொன்னாரா?' என்றேன்.

அவர் மேலும் குழம்பிப்போனார். இதில் ஏதோ வில்லங்கம் என்று நினைத்தாரோ என்னவோ, 'என்ன சார் எதுக்கு கேக்கீங்க? அவர் ஒங்க அசிஸ்டெண்ட்டுன்னு சொன்னாரே சார்? அவர் குடுத்த விசிட்டிங் கார்ட்ல கூட போட்டுருந்துதே?'' என்றவாறு தன்னுடைய கைப்பையில் துழாவி ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார்.

நான் அவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் அதை வாங்கி என்னுடைய மேசை இழுப்பில் வைத்து மூடிவிட்டு, 'நீங்க கவலைப்படாம போங்க. நான் அவர் கிட்ட ஒங்க ப்ரொப்போசல கேட்டு வாங்கிக்கறேன். இனிமே இதப்பத்தி அவர்கிட்ட எதுவும் கேக்க வேணாம். ஒருவாரம் கழிச்சி வாங்க.. நான் பாத்துட்டு சொல்றேன்.' என்று அவரை அனுப்பிவைத்தேன்.

அவர் சென்றதும் என்னுடைய இழுப்பிலிருந்து அவர் விட்டுச்சென்ற அட்டையை பார்த்தேன். அதில் தெளிவாக அவருடைய பெயருக்கு கீழே உதவி மேலாளர் என்று அச்சிட்டிருந்தது. ஆனால் இதை மட்டுமே வைத்து அவரை மடக்க முடியாது என்று நினைத்தேன். இத நான் குடுத்தேங்கறதுக்கு உங்கக்கிட்ட ஆதாரம் இருக்கான்னு மடக்கக் கூடியவர் என்பதால் அவர் கைவசமுள்ள மீதமுள்ள அட்டைகளையும் கைப்பற்ற வேண்டும்.

அன்று மாலைவரை காத்திருந்து தலைமைக் குமாஸ்தாவும் மற்ற குமாஸ்தாக்களும் கிளையிலிருந்து சென்றபிறகு என்னுடைய உதவி மேலாளரை அழைத்து, 'நம்ம பிராஞ்சிலருக்கற எல்லா மேசைகளோட சாவிக் கொத்து எனக்கு வேணும். முக்கியமா நம்ம ஹெட் க்ளார்க்கோடது வேணும். இருந்தா கொண்டாங்க.' என்றேன்.

அவர் தயக்கத்துடன், 'சார் அது கூட அவர் கஸ்டடியிலதான் இருக்கு.' என்றார் பரிதாபமாக.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். 'ஏன் எதுக்காக அவர்கிட்ட அது இருக்கணும்?'

'எங்களால என்ன பண்ண முடியும் சார். அவர்தான் இங்க எல்லாமே. நீங்க வர்ற வரைக்கும் எச்.ஓவிலருந்து வர்ற தபால கூட அவர்தான் தொறந்துக்கிட்டிருந்தார். அவரால அதுலருக்கற லெட்டர்ச படிச்சி புரிஞ்சிக்க முடிஞ்சாக்கூட பரவால்லை. பந்தாவா படிக்கறாமாதிரி ஆக்ட் குடுத்துட்டு மேனேஜர் ரூமுக்கு அனுப்புவார். அவரும் ஒன்னும் சொல்லாம அவருக்கு வேண்டியத மட்டும் எடுத்துக்கிட்டு என்கிட்ட அனுப்புவார். எச். ஓ கவரே அப்படீன்னா மத்தத பத்தி என்ன சொல்றது சார்.' என்றவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு (அப்போது கிளையில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம் என்பது வேறுவிஷயம்) 'எங்களுக்கு பர்சனலா வர்ற இன்லெண்ட் லெட்டர்ச கூட திருட்டுத்தனமா படிச்சி பாப்பார்னா பாத்துக்குங்களேன்.' என்றார்.

வியப்புடன் சில நொடிகள் அவரையே பார்த்தேன். 'என்ன சார் சொல்றீங்க? என்ன இது அக்கிரமம். இதையெல்லாம் ஏன் நீங்க முன்னாலயே சொல்லல?'

'உங்ககிட்ட சொன்னது நாந்தான்னு தெரிஞ்சா அவ்வளவுதான் சார்.. அப்புறம் நா இங்க நிம்மதியா வேலை செய்ய முடியாது.' என்று அவர் பரிதாபமாக கூறியபோது இதை லேசில் விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்..

'சரி நாளைக்கு நீங்க ஒன்னு பண்ணுங்க.. ஒங்கக்கிட்டருக்கற சேஃப் ரூம் சாவிங்கள ஒங்க டிராயர்ல வச்சி பூட்டி ஒங்க டிராயர் சாவிய எங்கிட்ட குடுத்துருங்க. நாளைக்கி காலைல வந்ததும் சாவிய காணாம போட்டுட்டேன்னு எங்கிட்ட வந்து கம்ப்ளையண்ட் பண்ணுங்க. நானும் டூப்ளிக்கேட் சாவி உங்க கஸ்டடியிலதான் இருக்கும் அதவச்சி தொறக்க வேண்டியதுதானேன்னு சொல்றேன்.. அப்ப நீங்க அது ஹெட்க்ளார்க் கிட்ட இருக்கு சார். அவர் நா கேட்ட தருவாரோ என்னவோன்னு சொல்லுங்க.. மத்தத நா பாத்துக்கறேன்.' என்றேன்..

அவரும் மகிழ்ச்சியுடன் நான் கூறியவாறே செய்துவிட்டு சாவியை என்னிடம் கொடுக்க வந்தார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். 'நீங்க புத்திசாலின்னு நினைச்சேனே சார்?'

அவர் திடுக்கிட்டு, 'என்ன சார் நீங்கதான சொன்னீங்க?' என்றார்.

நான் புன்னகையுடன், 'நான் சொன்னா நீங்க ஒங்க ஜாய்ண்ட் கஸ்டடி சாவிய டிராயர்ல வச்சிட்டு அந்த சாவிய எங்கிட்டு குடுக்கலாமா? நா அத எடுத்து எங்கிட்ட இருக்கற இன்னொரு ஜாய்ண்ட் கஸ்டடி சாவியயும் சேர்த்து சேஃப் ரூம தொறக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?' என்றேன்.. 'எந்த ஒரு டைம்லயும் நிதானத்த இழக்காம இருக்கணும்.. நான் சும்மா ஒரு பேச்சுக்கு எங்கிட்டு குடுத்துட்டு போங்கன்னு சொன்னேன். நீங்களே வச்சுக்குங்க.. நாளைக்கு வரும்போது கையோட கொண்டும் வாங்க. ஆனா தொலைச்சா மாதிரி நடிச்சா போறும்..'

அவர் தன் தவறை உணர்ந்து, 'சாரி சார்.' என்றவாறு வெளியேற நான் நாளை நடத்தவிருக்கும் நாடகத்தை எப்படி திறம்பட நடத்துவதென்ற சிந்தனையில் என் இருக்கையில் அமர்ந்து சிந்திக்கலானேன்..

கரணம் தப்பினால் மரணம் என்கிற அளவுக்கு சீரியசான விஷயம் என்பது எனக்கு தெரிந்துதானிருந்தது. ஆனால் அவருடைய கொட்டத்தையடக்க வேண்டுமென்றால் வேறு வழியில்லை..

அவர் கைவசமிருந்த டூப்ளிகேட் சாவிக்கொத்து என் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் அவருடைய மேசை இழுப்பில் வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளரின் கோப்பு கிடைக்கும். அதைவிட முக்கியம் வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்வதற்கெனவே அவர் போலியாய் அச்சிட்டு வைத்திருந்த விசிட்டிங் கார்டுகளை என்னால் கைபற்றமுடியும்..

அவை மட்டும் கிடைத்துவிட்டால் போதும்.. அவரை பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உட்கார்த்திவைத்துவிடலாம்...

தொடரும்..

27 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 41

நடிகையின் கணவருடைய பிரச்சினை அன்றுடன் ஓய்ந்துவிடவில்லை. . நடிகையின் கணக்கில் அவர் செய்திருந்த தில்லுமுல்லுகள் அவர்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த விரிசலை மேலும் விரிவாக்கி இறுதியில் விவாகரத்து என்று முடிந்தது.

ஆனால் அதற்கு முன்பு அவர் தன்னுடைய கணவரின் மீது போலீசில் புகாரளிக்க அவர்கள் என்னுடைய கிளைக்கு வந்து விசாரிக்க அடுத்த சில மாதங்கள் நானும் என்னுடைய கிளை அதிகாரிகளும் பட்ட அவஸ்தையை இப்போதும் நினைத்தாலும்...

நல்லவேளையாக சில வருடங்களுக்கு முன்பு நான் என்னுடைய முதல் கிளையில் மேலாளராக இருந்த சமயத்தில் எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த ஒரு மலையாள திரையுலக இயக்குனர் மூலமாக நடிகையை அணுகி என்னுடைய கிளை அதிகாரிகளை அந்த சிக்கலிலிருந்து விடுவிக்கக் கோரினேன். முதலில் தயங்கிய அவர் பிறகு பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். ஆகவே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதுபோல் அதிலிருந்து எங்களுடைய வங்கியும் என்னுடைய முந்தைய மேலாளரும் மீளமுடிந்தது.

அதுவரை என் மீது தனிப்பட்ட விரோதம் பாராட்டி வந்த என்னுடைய மேலாளர் நண்பர் என்னுடைய உதவியாளர் மூலமாக நான் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி கேள்விப்பட்டு என்னுடன் சுமுகமானார்.

அதற்குப் பிறகு அவருக்கெதிராக நடைபெற்ற இலாக்கா விசாரனையில் நானும் என்னுடைய கிளை அதிகாரிகளும் சாட்சியமளிக்க வேண்டி வந்தபோதும் அவர் எங்களை தவறாக கருதவில்லை. அவர் நினைத்திருந்தால் தன்னுடைய தவறுகளில் தன்னுடைய துணை மற்றும் உதவி அதிகாரிகளையும் உட்படுத்தியிருக்க முடியும்.

என்னுடைய அலுவலக வாழ்க்கையில் தாங்கள் செய்த தவறுகளுக்கு தங்களுடைய துணை அதிகாரிகளைப் பொறுப்பாக்கிய எத்தனையோ மேலாளர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரு கிளையில் நடைபெறும் பெரும்பான்மையான தவறுகளுக்கு மேலாளரே பொறுப்பு என்று எங்களுடைய வங்கி கருதுவதால் அவர் எவ்வளவுதான் தன்னுடைய உதவி அதிகாரிகளை குறை கூறினாலும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பேயில்லை. ஆயினும் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றிருக்கிறதல்லவா? அதுபோலவே தனக்கு கிடைக்கும் தண்டனையும் தன்னைச் சார்ந்த அனைவருக்கும் கிடைக்கட்டும் என்ற 'நல்ல' எண்ணம் சில மேலாளர்களுக்கு இன்றும் உள்ளதை காணலாம்.

*****

நான் மேலாளர் பதவியேற்று முதலாவது பத்தாண்டுகள் நிறைவேறியது அந்தக் கிளையில்தான். அந்த பத்தாண்டுகளில் நான் பெரிதாக சாதித்து ஸ்டார் பெர்ஃபார்மர் என்ற பட்டத்தை பெறவில்லையென்றாலும் எந்த ஒரு பெரிய சிக்கலிலும் சிக்கி தண்டனையும் பெறவில்லை. அதாவது மதுரைக் கிளையில் ஒரு அரசியல்வாதியிடம் மோதி பதவியிழந்ததைத் தவிர.

எங்களுடைய வங்கியில் (ஏன் எல்லா வங்கியிலும்தான்) தண்டனை எனக் கருதப்படுவது ஊதிய இழப்புடனான பதவியிறக்கம் (Demotion to the lower grade with monetary loss), பதவியிறக்கமில்லாத ஊதிய இழப்பு (Monetary loss without demotion) , அதாவது இரண்டிலிருந்து நான்கைந்து வருடாந்தர ஊதிய உயர்வு இல்லாமல் செய்வது (Loss of annual increments). இவற்றுடன் வெறும் எச்சரிக்கையும் (Caution) அளிக்கப்படுவதுண்டு. அதிகப்பட்ச தண்டனையாக பணிபறிபோவதும் உண்டு. ஒருசிலர் சிறைபடுத்தப்பட்டதும் உண்டு.

வங்கிக்கு பெருமளவு இழப்பு ஏற்படும் சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வங்கி காவல்துறையில் புகார் செய்வதுண்டு. பெரிதாக இழப்பில்லாவிட்டாலும் ஊழல் நடந்திருப்பதாக கருதப்படும் பட்சத்தில் ஊதிய இழப்புடனான பதவியிறக்கமும், வங்கிகளின் நியதிகளை வேண்டுமென்றே மீறுபவர்களுக்கு பதவியிறக்கமில்லாத ஊதிய இழப்பும், விதிமுறைகளை மீறாவிட்டாலும் வங்கியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்படுபவர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கப்படும்.

இது அதிகாரியாக இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் Staff எனப்படும் குமாஸ்தாக்களுக்கும் Sub Staff எனப்படும் சிப்பந்திகளுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு இருப்பதால் அவர்களை தண்டித்து பணியிலிருந்து வெளியேற்றுவது (Termination) மட்டுமல்ல தற்கால பணிபறிப்பும் (Suspension) அத்தனை எளிதல்ல. அதுவும் தொழிற்சங்கத்தில் ஏதாவது ஒரு பதவியிலிருப்பவர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் எங்களுடையதைப் போன்ற தனியார் வங்கிகளில் நிலமை பரவாயில்லை. அரசு வங்கிகள் பலவற்றில் சமீப காலம் வரை இத்தகையோர் வைத்ததுதான் சட்டம். பல கிளை மேலாளர்கள் இவர்களுடைய தயவில்லாமல் கிளையை நடத்திச் செல்லவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். கணினி மயமாக்கப்பட்ட பிறகு இந்த இழிநிலை சற்றே குறைந்திருக்கிறது எனலாம்.

என்னுடைய கிளையிலும் ஒரு தொழிற்சங்க தலைவர் தலைமைக் குமாஸ்தாவாக இருந்தார். அவர் கடைநிலை சிப்பந்தியாக பணிக்கு சேர்ந்து பிறகு காசாளராக பதவி உயர்வு பெற்று இறுதியில் தலைமைக் குமாஸ்தாவாக உயர்வு பெற்றிருந்தவர்.

அவருடைய வளர்ச்சிக்கு அவருடைய திறமையும் அயரா உழைப்பும் என்பதைவிட தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கே காரணம் என்றாலும் மிகையாகாது.

நான் கிளைக்கு பொறுப்பேற்ற சமயத்தில் விடுப்பில் இருந்த அவர் பணிக்கு திரும்பியதுமே நேரே என்னுடைய அறைக்குள் நுழைந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் அறிமுகப்படுத்திய விதமே அலாதியானது.

சாதாரணமாக முதல் சந்திப்பிலேயே ஒருவரை எடைபோட முடியும் என்பதில் நம்பிக்கையில்லாதவன் நான். ஆனால் அவருடைய முதல் நாள் நடவடிக்கையே அவரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு அறிவுறுத்தியது. மேலும் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் இரண்டு வருடங்களே இருந்தன. என்னுடைய வயது அவருடைய வங்கி அனுபவமாக இருந்தது!

அத்துடன் அவர் முந்தைய மேலாளருக்கு 'வலதுகை மாதிரி' என்று வேறு என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் ரகசியமாக தெரிவித்திருந்ததும் நினைவிலிருந்தது.

அவருக்கு மேலாளராக இருந்த அனைவருக்குமே அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதும் உண்மை.

அவர் தன்னை கிளை அதிகாரிகளுள் ஒருவராக வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பதாக என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் ஒருமுறை தெரிவித்தபோது, 'அப்படியா? இது ஒங்க பழைய மேனேஜருக்கு தெரியுமா?' என்றேன் வியப்புடன்.

'நல்லா தெரியும் சார். ஆனா அவர தட்டிக்கேட்க தைரியமில்லாம விட்டுட்டார்.'

அவர் பணிக்கு திரும்பிய நாள்முதல் சில நாட்கள்வரை அவருடைய நடவடிக்கைகளை கவனித்தேன். என்னுடைய உதவி மேலாளர் கூறியதுபோலவே அவர் ஒரு அதிகாரியுடைய தோரணையில் வாடிக்கையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல் மற்ற கிளை அதிகாரிகளிடமும் நடந்துக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.

சில நாட்கள் அதில் தலையிடாமல் இருந்தேன். ஆனால் கிளைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுள் பலரும் கவுண்டருக்குள் நுழைந்து அவருடைய இருக்கைவரை சென்று வணக்கம் செலுத்துவதும் அவரும் பந்தாவாக தன்னுடைய இருக்கைக்கு முன்னாலிருந்த இருக்கைகளில் அவர்களை அமர்த்தி உரையாடுவதும் அவர்களுக்கு தேவையானவற்றை மற்ற அதிகாரிகளை, அதாவது அவருடைய பதவிக்கு மேலிருந்த அதிகாரிகளை, அழைத்து அவற்றை உடனே செய்துக்கொடுக்க உத்தரவிடுவதும்...

எனக்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் அவருடைய தொழிற்சங்க பதவியை கருத்தில்கொண்டு அவரை எப்படி கையாள்வதென சிந்திக்க ஆரம்பித்தேன்..

நானும் குமாஸ்தாவாக இருந்த சமயத்தில் தொழிற்சங்க கமிட்டி அங்கத்தினராக இருந்தவந்தான். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் பங்குபெற்றவந்தான். ஆகவே அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் இறங்கலாகாது.. நேரம் வரும்.. அப்போது லாவகமாக கையாளுவோம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்...

அது நான் எதிர்பார்த்ததையும் விட விரைவாகவே வந்தது...

தொடரும்..

26 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 40

சாதாரணமாக சேமிப்புக் கணக்கிலிருந்து (savings bank account) ரொக்கம் (cash) எடுப்பதற்கு சில வரைமுறகள் உண்டு. அதாவது ஒரு வாரத்திற்கு இத்தனை முறை என்று. அல்லது ஒரு வாரத்திற்கு இத்தனை மொத்த ரொக்கம் என்று.

ஆனால் இதை நடைமுறைப் படுத்துவது அத்தனை எளிதல்ல. சேமிப்பு கணக்குகளைத் துவக்குகையில் இத்தனை நியதிகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன் என்று வாடிக்கையாளர்கள் கையொப்பமிட்டு அளிப்பது உண்மைதான் என்றாலும், 'கணக்கு துவக்குறப்ப இதையெல்லாம் எங்க சார் படிச்சி பாக்கறது?' என்பார்கள்.

அத்துடன் இத்தகைய நியதிகளை அப்பகுதியில் இயங்கிவரும் எல்லா வங்கிகளும் கடைப்பிடித்தால் நம்முடைய வாடிக்கையாளர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே, 'சார் அந்த பேங்குலல்லாம் இப்படியெல்லாம் பாக்கறதில்லை. உங்களால முடியலன்னா சொல்லுங்க, கணக்க அந்த பேங்குல வச்சிக்கறோம்.' என்று வாடிக்கையாளர்கள் முறையிடுகையில் மேலாளர்களால் ஒன்றும் செய்யவியலாது. 'மேக்சிமம் நான் வச்சிருக்கற பேலன்சுக்கு வட்டிக் குடுக்க முடியாதுன்னு சொல்வீங்க. சரி குடுக்காதீங்க. ஆனா என்னுடைய கணக்குலருந்து இவ்வளவுதான் எடுக்க முடியும்னுல்லாம் கண்டிஷன் போடாதீங்க.' என்றும் வாடிக்கையாளர்கள் வாதிடுவதுண்டு.

ஒரு மேலாளரின் முதல் கடமை வங்கியின் நியதிகளைக் கடைபிடிப்பதுதான் என்றாலும் ஒரு கிளையின் வணிகத்தைப் பெருக்குவதும் அதற்கு இணையான பொறுப்பாகும். ஒரு புது வாடிக்கையாளரை வங்கிக்கு கொண்டுவருவது எத்தனை கடினம் என்பது மேலாளருக்குத்தான் தெரியும். ஆகவே அவர் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே ஒரு வாடிக்கையாளரை இழக்க தயாராக இருப்பார்.

இது மேலாளருக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கும் நன்றாகவே தெரியும். ஆகவேதான் வங்கி நியதிகளை மதிக்காத வாடிக்கையாளர்கள் அதை வைத்தே மேலாளர்களை மிரட்டுவார்கள். இதைத்தான் செய்தார் நடிகையின் கணவரும். அவருடைய கணக்கிலிருந்த தொகை அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் கணிசமான தொகை. அதை ஒரே தவணையில் இழப்பது என்னுடைய கிளையின் வணிக அளவைக் குறைத்துவிடக்கூடிய சூழல்.

அதே சமயம் அவருடைய கணக்கிலிருந்த முழுத்தொகையுமே அவருடைய மனைவியின் கணக்கிலிருந்து வங்கியின் விதிகளை மீறி மாற்றப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. எதிர்வரும் நாட்களில் இத்தகைய விதிமீறல் அவருக்கு தெரியவரும்பட்சத்தில் தன்னுடைய கணக்கிலிருந்து நியதிகளுக்குப் புறம்பாக மாற்றிய தொகையை திருப்பித் தரவேண்டுமென்று என்று கோர வாய்ப்புள்ளது.

அவருடைய கணக்கிலிருந்த தொகை முழுவதுமே எனக்கு முந்தைய மேலாளருடைய பதவிக்காலத்தில்தான் மாற்றப்பட்டிருந்தது என்றாலும் அதை வங்கியிலிருந்து அவர் எடுக்க முயற்சித்தது என்னுடைய பதவிக்காலத்திலாயிற்றே. அவர் விதிகளை மீறிய செயலுக்கு அவரே பொறுப்பாவார் என்பது உண்மையானாலும் அதை அறிந்தும் தேவையான நடவடிக்கை எதுவும் எடுக்காதது ஏன் என நானும் கேட்கப்பட வாய்ப்பிருந்தது.

ஆகவேதான் இதை அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் அதை சாதுரியமாக கையாளவில்லையெனில் அதுவே என்னை மேலும் சிக்கலுக்குள்ளாக்கிவிடும் என்பதையும் உணர்ந்திருந்தேன்.

என்னுடைய முடிவுக்கு காத்திருந்த என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தேன். 'நீங்க போய் அவர சேஃப் ரூம் பக்கம் கூட்டிக்கிட்டு போங்க. ஏன்னு கேட்டா அவர் வித்ட்றா பண்ண வேண்டிய பணம் சைசபிளாருக்கறதால கவுண்டர்ல வச்சி குடுக்க முடியாதுன்னு சொல்லுங்க. Arrange the cash to be paid to him on a table and ask him to count it. மீதி தொகைக்கு அவர் கேட்டபடி டிராஃப்ட் ரெடி பண்றதுக்கு அவர் முன்னாலயே இன்னொரு கிளார்க்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுங்க. அவர் கேஷ் கவுண்ட்றதுல பிசியாருக்கறப்ப அவருக்கு தெரியாம மேடத்தோட ஃபோன் நம்பர ஒரு சீட்டுல எழுதி எனக்கு குடுத்தனுப்புங்க. நான் ஃபோன் பண்ணி முடிக்கற வரைக்கும் நீங்க அவர் பக்கத்துலய இருங்க.. I will handle the rest of the things.' அவர் நான் சொன்னபடியே நடிகையின் கணவருக்கு சந்தேகம் வராதபடி நடிகையின் தொலைப்பேசி எண்ணை என்னுடைய அறைக்கு அனுப்பினார்.

என்னுடைய கிளையில் ரொக்கம் மற்றும் அடகு வைக்கப்படும் பாதுகாப்பு அறை (safe room) கிளையின் பின்புறக் கோடியில் அமைந்திருந்ததால் அதன் அருகிலிருந்த மேசையில் அமர்ந்து பணத்தை எண்ணுவதில் குறியாயிருந்த நடிகையின் கணவர் நான் கிளையை விட்டு வெளியேறியதை கவனிக்கவியலாது என்பதை உணர்ந்த நான் உடனே எழுந்து என்னுடைய கிளை அமைந்திருந்த கட்டிடத்தின் தரைதளத்திலிருந்த ஜவுளிக் கடை உரிமையாளரை அணுகி, 'சார் அர்ஜண்டா நான் ஒரு ஃபோன் பண்ணணும்.. கொஞ்சம் கான்ஃபிடன்ஷியல் மேட்டர்.. அதனால இங்கருந்து பேசாம.. உள்ள வேற ஏதாவது ஃபோன் இருக்கா?' என்றேன். அவரும் என்னுடைய தேவையை உணர்ந்தவாறு என்னை அவருடைய பிரத்தியேக அறையை நோக்கி சைகை செய்தார்.

துரதிர்ஷ்டவசமாக நடிகை படப்பிடிப்பில் இருப்பதாகவும் உணவு இடைவேளை சமயத்தில் அவரிடம் தெரிவிப்பதாகவும் அவருடைய உதவியாளர் தெரிவிக்க நான் உடனே அவரிடமே விஷயத்தை நாசூக்காக தெரிவித்து முடியுமானால் அதை நடிகையிடம் தெரிவித்துவிடும்படி கூறிவிட்டு என்னுடைய கிளையை அடைந்தேன். அப்போதும் நடிகையின் கணவர் பணத்தை எண்ணி முடிக்காமலிருந்தது எனக்கு வசதியாகிப்போனது.

அவர் பணத்தை எண்ணி முடிப்பதற்குள் நடிகையின் தொலைப்பேசி வராதா என்று சற்றே பதற்றத்துடன் என்னுடைய உதவியாளர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிளையே காத்திருந்ததை என்னால் உணரமுடிந்தது. எங்களுடைய துரதிர்ஷ்டம் அவர் பாதி எண்ணி முடித்ததுமே போறும் என்று முடிவு செய்து எழுந்து நிற்பதை என்னுடைய அறையிலிருந்தே கவனித்தேன். அவர் கொண்டு செல்லவேண்டிய தொகை சற்று கணிசமானதாக இருந்ததால் அதை கொண்டுசெல்ல பெட்டியொன்று அவருக்கு நிச்சயம் தேவைப்படும். ஆனால் அவர் அப்படியேதும் கொண்டுவரவில்லை என்பதை உணர்ந்த நான் உடனே என்னுடைய அறையிலிருந்த அழைப்பு மணியை அடித்து சப்தம் கேட்டு திரும்பிப்பார்த்த சிப்பந்தியை சைகைக் காட்டி அழைத்தேன்.

அவர் வந்ததும், 'அவர் பெட்டி ஏதாவது கேட்டா இல்லைன்னு சொல்லிருங்க. போங்க, போய் அசிஸ்டெண்ட் மேனேஜர்கிட்டயும் சொல்லுங்க. சீக்கிரம்.' என்றேன். அவர் என்னுடைய எண்ணத்தை புரிந்துக்கொண்டு உடனே சென்று என்னுடைய உதவி மேலாளரிடமும் காசாளரிடமும் சொல்ல அவர்களிருவரும் என்னுடைய அறையை நோக்கி திரும்பிப்பார்த்து சரி என்று தலையை அசைத்தனர். நான் எதிர்பார்த்தது போலவே அவர் சிப்பந்தியிடம் சைகைக் காட்டி பெட்டி இருக்கிறதா என்று கேட்பதை கவனித்தேன். அவரும் உடனே இல்லையே சார் என்று கைவிரித்ததையும் கவனிக்க முடிந்தது. அவர் கோபத்துடன் என்னுடைய உதவி மேலாளரை அணுகி கேட்க அவரும் இல்லையென கோபம் மேலிட அவர் என்னுடைய அறையை நோக்கி வருவதை கவனியாதவன்போல் என்னுடைய அலுவலை நான் கவனித்தேன்.

'சார் எல்லாருமா சேர்ந்து சதி பண்றீங்கன்னு நல்லாவே தெரியுது. இத நிச்சயமா நா ஒங்க ஜோனல் மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணப் போறேன்.' என்றார் உரக்க. நான் அதை பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்திருக்க அவர் கோபத்துடன் வெளியேறினார். தன்னுடைய வாகனத்திலிருந்தோ அல்லது அடுத்திருந்த கடைகளிலிருந்தோ பெட்டியொன்றை வாங்கி வர சென்றிருக்கிறார் என்பதையுணர்ந்த நான் என்னுடைய உதவியாளரை அழைத்து, 'சார் நீங்க ஒடனே மேடத்துக்கு ஃபோன் பண்ணுங்க. அவரோட அசிஸ்டெண்ட் எடுத்தா நீங்க யார்னு சொல்லாம மேடத்தோட அர்ஜண்டா பேசணும்னு மட்டும் சொல்லுங்க. மேடமே எடுத்தா விஷயத்த சுருக்கமா சொல்லி என்னெ காண்டாக்ட் பண்ண சொல்லுங்க. க்விக்.' என்றேன். அவர் தன் இருக்கையை நோக்கி நகர நான் தடுத்து நிறுத்தி, 'வேணாம்.. இங்கருந்தே பண்ணுங்க. அவங்க எப்படியும் லஞ்சுக்கு வீட்டுக்கு வந்திருப்பாங்க.' என்றேன்.

அதிர்ஷ்டவசமாக நான் எதிர்பார்த்ததுபோலவே மேடமே எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. 'சார் மேடம்தான். பேசறீங்களா?' என்றவாறு அவர் என்னிடம் ஒலிவாங்கியை கொடுக்க நான் சுருக்கமாக நடந்ததை அவரிடம் தெரிவிக்க ஒரு சில நொடிகள் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அவர் தயங்குவது தெரிந்தது. 'மேடம் ஒங்க ஹஸ்பெண்ட் மேல கம்ப்ளெய்ண்ட் பண்றேன்னு நினைக்காதீங்க. ஆனா அவர் மொத்த பேலன்சையும் உடனே வித்ட்ரா பண்ண ட்ரை பண்ணதாலத்தான் டவுட் வந்தது.' என்றேன்.

அவர் உடனே, 'தாங்ஸ் சார். But don't stop him. I will handle it. Thanks for the information.' என்றவாறு அவர் இணைப்பைத் துண்டிக்க நான் நிம்மதி பெருமூச்சுடன் ஒலிவாங்கியை வைத்துவிட்டு என் உதவியாளரைப் பார்த்தேன். 'அவர் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டார். நீங்க அவர் பெட்டியோட வந்தா அவர ஸ்டாப் பண்ண வேணாம். மீதிய டிராஃப்டா குடுக்காம கேஷாவே கொண்டு வந்து தந்துடறோம் சொல்லிருங்க. அவர் ஏதாவது சொன்னா நீங்க வரவேணாம் சார். நாங்களே ஒங்க ஆஃபீசுக்கோ வீட்டுக்கோ கொண்டுவந்து குடுத்துடறோம்னு சொல்லுங்க. என்ன சொல்றார்னு பார்ப்போம்.'

நடிகையின் கணவர் பெட்டியுடன் திரும்பி வர அரை மணிக்கும் மேல் ஆகவே நான் ஒரு அதிகாரியையும் ஒரு குமாஸ்தாவையும் தேவைப்படும் தொகையை எடுத்துவர என்னுடைய சென்னை மத்திய கிளைக்கு அனுப்பி வைத்தேன். பிறகு என்னுடைய உதவியாளரை அழைத்து, 'சார் அவர் வந்து டிராஃப்ட்தான் வேணும்னு ஏதும் தகராறு பண்ணா மேனேஜர் இல்லாத நேரத்துல எங்களால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிருங்க. நான் லஞ்ச்சுக்கு போயிருக்கறேன்னு சொல்லி சமாளிங்க. நான் ஒரு மூனு மணி போல ஃபோன் பண்ணிட்டு வரேன்.' என்று கூறிவிட்டு கிளையை விட்டு வெளியேறினேன்.

தொடரும்..

20 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 39

நடிகையின் கணவருடைய காசோலைக்குண்டான தொகையில் எழுபது விழுக்காடுக்கும் குறையாமல் ரொக்கம் கையிருப்பில் இருந்தும் அதை அவருக்கு உடனே வழங்காமல் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது என்பதை என்னுடைய உதவி அதிகாரி அறிந்திருப்பார் போலிருந்தது.
ஆகவேதான் அவர் என்னை சங்கடத்துடன் பார்த்தார்.

ஆனால் நடிகையின் கணவர் அதை தவறாகப் புரிந்துக்கொண்டார். 'என்ன சார் ஒங்க மேனேஜர எதுக்கு பாக்கறீங்க? வாங்க, கையிலிருக்கற கேஷ குடுத்துட்டு மீதிக்கு செக்கோ டிராஃப்டோ குடுங்க சார், டைம் ஆவுது.' என்றவாறு அவர் என்னுடைய அறையை விட்டு வெளியேற நான் என்னுடைய அதிகாரியைப் பார்த்தேன்.

'இப்ப என்ன பண்றது சார்? நீங்க எதுக்காக கையில கேஷ் இருந்தும் அவருக்கு குடுக்க தயங்கறீங்கன்னு தெரியுது சார். எங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கு. அவர் கணக்குல இருக்கற முழு தொகையுமே அவங்க வைஃபோட கணக்குலருந்து டிரான்ஸ்ஃபர் பண்ணதுதான் சார். அத செய்யறதுக்கு எங்களுக்கு இஷ்டமில்லன்னாலும் மேனேஜர் சொன்னப்போ எங்களால ரெஃப்யூஸ் பண்ண முடியல. இப்ப இவர் கணக்குலருக்கறத எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போயி பின்னால அந்த மேடத்துக்கு தெரிய வந்தா பிரச்சினையாயிருமோன்னு பயமாருக்கு சார். இத அலவ் பண்ணாம இருக்கறதுக்கு நீங்கதான் ஏதாச்சும் செய்யணும் சார், ப்ளீஸ்.' என்றார் அவர்.

அவரைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது.

ஒரு கிளையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் அதன் மேலாளர்தான் பொறுப்பு என்றாலும் பெரிய கிளைகளில் மேலாளருக்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு மேற்பட்ட துணை மற்றும் உதவி அதிகாரிகள் இருக்கையில் கிளையில் நடக்கும் தவறுகளுக்கு மேலாளருடன் சேர்த்து அவர்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

கிளைகளின் செயல்பாடுகளில் (operations) இரு வகை உண்டு.

முதலாவது, அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வரவு செலவுகள் (Daily Transactions), கணக்குகளை சரிபார்ப்பது, தலைமையகத்திற்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிப்பது, உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுடனான கடிதப் போக்குவரத்து ஆகியவை..

இரண்டாவது கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது. கடனுக்குண்டான ஆவணங்களை தயாரிப்பது, பராமரிப்பது, புதுப்பிப்பது, வாராமல் நிற்கும் கடன்களை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது, வாடிக்கையாளர்களுடனான கடிதப் போக்குவரத்து இத்யாதிகள்..

இவற்றில் முதல் செயல்பாடுகளுக்கு முழுப்பொறுப்பு கிளையதிகாரிகள் அதாவது மேலாளரல்லாத அதிகாரிகள் அனைவரும் இதற்கு பொறுப்பு. ஆனால் இவர்களுடைய செயல்பாடுகள் வங்கிகளின் நியதிகளுக்குட்பட்டு உள்ளனவா என்பதை அவ்வப்போது மேற்பார்வையிடுவது மேலாளரின் பொறுப்பு.

இரண்டாவதில் மேலாளருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பது மட்டுமே அவர்களுடைய பொறுப்பு. மற்றவை மேலாளருடையதாகும்.

வங்கியின் நியதிகளின்படி ஒரு மேலாளருடைய நடவடிக்கைகள் வங்கிகளின் நியதிக்குட்பட்டு நடைபெறுகின்றனவா என்பதை கண்கானிக்கும் பொறுப்பும் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகளுக்கு உண்டு. அவர் நியதிகளுக்கு எதிராக செயல்படும்போதும், அல்லது அவருக்குள்ள அதிகாரத்தை மீறி குறிப்பாக வங்கியின் நலனுக்கு எதிராக செயல்படுகையிலும் அதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கலாகாது என்றும் தேவைப்பட்டால் அதை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கின்றன வங்கியின் நியதிகள். மேலும் கிளை மேலாளருடைய அதிகார வரம்பின் கீழ் வழங்கப்படும் கடன்களை பெறும் வாடிக்கையாளர்களுடைய பொருளாதார மற்றும் வணிக/தொழில் நிலமையை கணித்து மேலாளருக்கு பரிந்துரைக்கும் பொறுப்பும் உதவி அதிகாரிகளுக்கு உண்டு.

ஆனால் நடைமுறை சங்கடங்களுக்கு (practical difficulties) அஞ்சி பெரும்பாலான உதவி அதிகாரிகள் இதில் அத்தனை ஈடுபாடு காட்டுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. கிளை மேலாளர் வயதில் மிகவும் மூத்தவராகவும் அனுபவமுள்ளவராகவும் இருப்பது (அனுபவம் என்றால் தவறுகள் செய்வதில்!),
2. அல்லது மேலிடத்தில் செல்வாக்குள்ளவராயிருப்பது,

மேலும் உதவி அதிகாரிகளுடைய வருடாந்தர கணிப்பு அறிக்கையை (appraisal report) சமர்ப்பிக்கும் உரிமை மேலாளருக்கு இருப்பதால் அவரை பகைத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றும் உதவி அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் தங்கள் போக்கில் செயல்படுவது நேர்மையற்ற மற்றும் ஒழுங்கீனமான மேலாளர்கள். மேலும் இத்தகையோர் தாங்கள் செய்யவிருப்பதைக் குறித்து தங்களுடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமலிருப்பதற்கு மூல காரணம் அவர்கள் செய்யும் பல காரியங்களும் வங்கியின் நியதிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் என்பதுடன் அவர்களுள் பெரும்பாலோருக்கு வங்கியின் நியதிகளைப் பற்றிய முழுவிவரமே இருப்பதில்லை. எதற்கு நம்முடைய அறியாமையை நம்முடைய உதவியாளர்களிடம் காட்டிக்கொண்டு பிறகு அவமானப்படுவது என்ற நினைப்பிலேயே அவர்களுடனான ஆலோசனையை தவிர்ப்பதுண்டு.

ஆனால் நேர்மையான அதிகாரிகளும் கூட தாங்கள் எதைச் செய்தாலும் அவற்றைக் குறித்து தன்னுடைய உதவி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க தேவையில்லை என்றும் நினைப்பதுண்டு. இதற்கு தங்களுடைய விஷயஞானம் மற்றும் ஆற்றலில் மீது அவர்களுக்குள்ள அபார நம்பிக்கை. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. தங்களுடைய உதவி அதிகாரிகளால் தங்களை விட திறமையாக செயல்பட முடியாது என்ற நினைப்பு. சிலருக்கு எங்கே இவர்கள் தங்களை விடவும் விஷயஞானம் உள்ளவர்களாகவோ அல்லது திறமையுள்ளவர்களாகவோ இருந்துவிடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.

இத்தகைய சூழலில்தான் வங்கிக் கிளைகளில் தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான தவறுகள் நிகழ்கின்றன.

நான் மேலே கூறிய கிளை செயல்பாடுகளில் நடிகையின் கணவருடைய கணக்கில் நடந்தவை அன்றாட வரவு செலவுகளின் கீழ் வருபவை. ஆகவே அவற்றிற்கு பொறுப்பு உதவி அதிகாரிகள்தான். ஆயினும் அவர்களை வங்கியின் நியதிக்குட்பட்டு செயல்பட விடாமல் செய்திருந்தார் என்னுடைய முன்னால் மேலாளர் என்பது அதிகாரிகளுடைய குற்றச்சாட்டு.

சாதாரணமாக வங்கியின் நியதிகளை நியாயமான காரணங்களுக்காக மேலாளர்கள் வங்கியின் நியதிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக மீறுவதுண்டு. அதாவது அத்தகைய விதிமீறல்கள் (violation of the procedures) வங்கியின் நலனைக் கருத்தில் கொண்டோ அல்லது அவற்றால் வங்கிக்கு எவ்வித இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்ற கருத்துடனோ மீறப்படும்போது.

ஆனால் நடிகையின் கணவருடைய கணக்கில் மேலாளர் அனுமதித்திருந்த விதி மீறல்கள் இதன் அடிப்படையில் வராது என்பதை கிளை அதிகாரிகள் உணர்ந்திருந்ததால்தான் வருங்காலத்தில் தன்னுடைய கணக்கிலிருந்து விதிகளுக்கு புறம்பாக மாற்றப்பட்டுள்ள தொகை முழுவதையும் திருப்பித்தரவேண்டுமென்று நடிகை புகார் செய்தால் அதற்கு முழுப்பொறுப்பும் மேலாளருடன் சேர்த்து தங்களுக்கும் ஏற்படுமோ என்று அஞ்சினர்.

ஆகவேதான் நடிகையின் கணவருடைய கணக்கிலிருந்த முழுவதையும் அவர் ஒரே காசோலை மூலம் எடுக்க அனுமதிக்கலாகாது என்று அதிகாரிகள் நினைத்தனர். ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவருடைய மனைவியின் கணக்கிலிருந்து அவர் தன்னுடைய கணக்கிற்கு மாற்றிய செயல் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை மீறிய செயல் என்பதை அறிந்தவுடனே அதை அனுமதித்திருக்கலாகாது. அப்படி செய்திருந்தால் அவரால் எதுவும் செய்திருக்க முடியாது. அதை விட்டுவிட்டு இப்போது அவருடைய கணக்கிலுள்ள தொகையை எடுக்க அனுமதிக்காமலிருந்தால் அவரால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆகவே இதை எப்படி சாதுரியமாக கையாளுவது என யோசித்தேன்..

thodarum…

19 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 38

நடிகையின் கணவரிடமிருந்து பெற்ற காசோலையை திருப்பியளிக்க மறுத்தது அது ஒரு ஆதாரமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட கணக்கில் இதுபோன்ற செயல்களை அவர் செய்திருக்கிறாரா என்பதை ஆய்வு செய்யவும் உதவுமே என்ற எண்ணமும் இருந்தது.

என்னிடம் கோபித்துக்கொண்டு சென்றவர் அத்தனை எளிதில் திரும்பி வர மாட்டார் என்று நான் நினைத்திருக்க அடுத்த சில நிமிடங்களிலேயே திரும்பி வந்து நேரே கவுண்டரிலிருந்த என்னுடைய உதவி அதிகாரியிடம் செல்வதைப் பார்த்தேன். அவரை உளவு பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லையெனினும் அவர் காசோலைபோன்றதொரு பொருளை அதிகாரியிடம் நீட்டுவதைக் கவனித்த நான் இனியும் வாளாவிருப்பது சரியாயிருக்காதென நினைத்து இண்டர்காமில் அவரை அழைத்து, 'அந்த செக் யாருடையது?' என்றேன்.

அவர் தயக்கத்துடன், சாரோடதுதான் சார். கேஷ் செக்.' என்றார்.

'சரி.. மேடத்தோட செக் ஏதும் வந்தா எங்கிட்ட கேக்காம பாஸ் பண்ணக்கூடாது.' என்று கூறிவிட்டு என்னுடைய வேலையை கவனிக்கலானேன்.

வங்கி நியதிகளின்படி துணை மற்றும் உதவி அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட தொகைவரையுள்ள காசோலைகளை (cash cheques) மட்டுமே பைசல் செய்ய (Pass for payment) முடியும். அதற்கு மேலுள்ளவற்றை கிளை மேலாளருடைய ஒப்புதலுக்கு (authorisation) அனுப்ப வேண்டும்.

நான் பொறுப்பேற்றிருந்த கிளை சற்று பெரிது என்பதாலும் இத்தகைய காசோலைகள் வணிக நேரத்தில் (business hours) அதிக அளவிலான எண்ணிக்கையில் வரும் என்பதாலும் உடனுக்குடன் காசோலைகள் என்னுடைய ஒப்புதலுக்கு வருவது சாத்தியமல்ல. ஆகவே ஒரு குறிப்பிட்ட தொகைவரையுள்ள காசோலைகளை என்னுடைய உதவியாளர்களே அனுமதித்துவிட்டு வணிக நேர இறுதியில் - அதாவது உணவு இடைவேளைக்குப் பிறகு - மொத்தமாக என்னுடைய ஒப்புதலுக்கு அனுப்புவதை அனுமதித்திருந்தேன். இது வங்கி நியதிகளுக்கு முறனானதுதான் என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லையே என்பதால் அனுமதிக்க வேண்டியிருந்தது. அப்படி ஏதேனும் ஒரு சில காசோலைகள் நான் குறிப்பிட்டிருந்த தொகைக்கு மேலிருக்கும் பட்சத்தில் என்னுடைய உதவியாளர்கள் ஒரு சிப்பந்தி மூலமாக அவற்றை என்னுடைய ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைப்பதும் வழக்கம்.

ஆனால் நடிகையின் கணவர் அளித்திருந்த காசோலையில் என்னுடைய உதவி மேலாளருக்கே ஏதோ ஐயம் இருந்ததாலோ என்னவோ அதை உடனே என்னுடைய ஒப்புதலுக்கு சிப்பந்தி வழியாக அனுப்பாமல் அவரே எடுத்துக்கொண்டு என்னுடைய அறைக்குள் நுழைந்தார்.

இது வழக்கத்திலில்லாத செயலாக இருக்கவே இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நினைத்து உஷாரானேன். என்னுடைய உதவியாளர் அவரே காசோலையை எடுத்துக்கொண்டு என்னுடைய அறைக்கு வருவதை கவனித்த நடிகையின் கணவர் கோபத்துடன் என்னுடைய அறையை நோக்கி வருவதைக் கவனித்த நான் என்னுடைய உதவியாளர் நீட்டிய காசோலையை வாங்கிப் பார்த்தேன்.

'சார்... அவரோட கணக்குலருக்கற கம்ப்ளீட் அமவுண்டையும் வித்ட்றா பண்றதுக்கு செக் குடுத்துருக்கார்.. எனக்கென்னவோ டவுட்டாருக்கு. அதுமட்டுமில்லாம நம்மக்கிட்ட அவ்வளவு காஷும் இல்ல சார். மெய்ன் ப்ராஞ்சுக்கு போய்த்தான் கொண்டு வரணும்..' என்றார் அவர்.

நான் நல்லதாய் போயிற்று என்று நினைத்தேன். ஏனெனில் காசோலையின் தொகையைக் கவனித்த எனக்கும் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தோன்றியது. தற்போதைக்கு கைவசம் இத்தனை தொகை இல்லை என்பதைக் காரணம் காட்டிவிடலாம் என்ற நினைப்புடன் கோபத்துடன் என்னுடைய அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவரைப் பார்த்தேன். 'என்ன சார் கணக்குலருக்கற எல்லாத்தையும் கேஷா ட்ரா பண்றீங்க போலருக்கு?' என்றேன். 'கைவசம் அவ்வளவு கேஷ் இல்லையே.. என்ன பண்ணலாம்?'

அவரோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. பெருங்குரலெடுத்து வசைபாட ஆரம்பித்தார். 'ஏன் சார் இப்படி சொல்றதுக்கு ஒங்களுக்கு வெக்கமாயில்ல? பெரிசா ரூலெல்லாம் பேசறீங்க? கேவலம் ஒரு ------- லட்சம் குடுக்க முடியல.. நீங்கல்லாம் எதுக்கு சார் மேனேஜரா ஒக்காந்துருக்கீங்க?' இதுமட்டுமல்லாமல் இனியும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீச கிளையிலிருந்த அத்தனை கண்களும் என்னுடைய அறையை நோக்கி திரும்பின. அவர் செய்த களேபரத்தில் கிளையே ஸ்தம்பித்துப் போனது.

நான் என்ன சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளாமலிருக்கவே நான் என்னுடைய சிப்பந்திகள் இருவரையழைத்து அவரை என்னுடைய அறையை விட்டு வெளியேற்ற வேண்டியதாயிற்று.

அவர் கோபத்தின் உச்சிக்கே போய் கிளை வாசலில் நின்றுக்கொண்டு வசைபாடியதை இன்றளவும் என்னால் மறக்கவியலவில்லை. அவருடைய கோபக்குரல் முதல் மாடியிலிருந்து சாலைவரை கேட்டிருக்க வேண்டும். என்னுடைய கிளை இருந்த கட்டடத்தின் வாயிலிலேயே பல்லவன் பேருந்து நிறுத்தமும் இருந்ததால் 'பஸ்சுக்கு காத்துக்கிட்டிருக்கற எல்லாரும் மேலே பாக்கறாங்க சார். ஏதாச்சும் செய்ங்க சார்.' என்றார் தரைதளத்தில் ஜவுளிக்கடை வைத்திருந்தவர் படியேறி வந்து.

நான் என்ன செய்வதென விளங்காமல் திகைத்து நிற்க கிளையிலிருந்த ஒரு சில வாடிக்கையாளர்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுத்த முயன்றனர். அவரோ, 'ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க சார்..' என்று விரட்டியடிக்க அவர்கள் நேரே என்னுடைய அறைக்குள் நுழைந்து 'சார் நீங்க பேசாம போலீசுக்கு போன் போடுங்க. அவங்க வந்து விசாரிச்சிக்கட்டும். நாங்களும் சாட்சி சொல்றோம்.' என்றனர் உரத்த குரலில்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. கிளைக்கு காவல்துறையினரை அழைப்பது அத்தனை எளிதல்ல. அத்துடன் அதற்கு என்னுடைய மேலதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அவர்கள் என்ன, ஏது என்று விசாரிக்காமல் அனுமதியளிப்பது சிரமம். என் மீதே குறைகாணவும் வாய்பிருந்தது. ஆனால் அதே சமயம் வேண்டுமென்றே பிரச்சினை செய்யும் இவரை சமாளிக்க வேறு வழியில்லை என்றும் தோன்றியது.

சட்டென்று தோன்றிய யோசனையில் தொலைப்பேசியை எடுத்து டயல் செய்ய துவங்கினேன்.

வாடிக்கையாளர்கள் காவல்துறையினரை அழைக்க பரிந்துரைத்ததை அறைக்கு வெளியிலிருந்த கேட்ட நடிகையின் கணவர் நான் அதைத் தொடர்ந்து தொலைப்பேசியை எடுத்து எண்களை சுழற்றுவதைக் கண்டதும் ஆவேசத்துடன் என்னுடைய அறைக்குள் நுழைந்து என் கையிலிருந்த ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தார்.

உண்மையில் நான் டயல் செய்வதைப் போல் பாவனைதான் செய்தேன். ஆகவே அவருடைய செய்கை என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. நான் அமைதியுடன், 'சொல்லுங்க.. இப்ப நா என்ன செய்யணும்? நீங்க என்ன கலாட்டா பண்ணாலும் நீங்க கேட்ட தொகை என்கிட்ட இல்லை. ஏன்னா அவ்வளவு பெரிய தொகை நான் பிராஞ்சில வச்சிக்க முடியாது. அது எங்க எச்.ஓ. போட்ட கண்டிஷன். ஒன்னு எங்க மெய்ன் ப்ராஞ்சுக்கு இதே தொகைக்கு ஒரு டிராஃப்ட் குடுக்கேன்.. நீங்களே போய் வாங்கிக்கலாம். இல்லன்னா நான் ரெண்டு பேர அனுப்பி வாங்கி வந்து வைக்கறேன். நீங்க மதியம் மூனு மணிபோல வந்து வாங்கிக்குங்க. இதுதான் என்னால செய்ய முடியும்.' என்றேன் உறுதியாக.

அவர் என்ன நினைத்தாரோ. சிறிது நேரத்திற்குப் பிறகு, 'அத மொதல்லயே க்ளியரா சொல்ல வேண்டியதுதானய்யா.. அதவிட்டுட்டு போலீஸ்னு பயமுறுத்தரே..' என்றார் ஏக வசனத்தில். அதையும் நான் பெரிதுபடுத்தாமல் என் உதவியாளரையழைத்து, 'சார்.. நீங்க நம்ம மெய்ன் ப்ராஞ்சுக்கு ஃபோன் பண்ணி இவ்வளவு கேஷ் வேணும் இன்னும் அரை மணி நேரத்துல எங்க கஸ்டமர் ஒருத்தர் அங்க டிராஃப்டோட அங்க வரோம்னு சொல்லுங்க. அப்புறம் இவருக்கு ஒரு டிராஃப்ட் எழுதி குடுங்க.' என்றேன்.

ஆனால் அவரோ, 'சார் என்னாலல்லாம் அங்க போக முடியாது. இப்ப இருக்கறத குடுங்க.. மீதிக்கு என் பேர்ல ஒரு டிராஃப்ட் குடுத்துருங்க. நா எங்க பேங்க்ல போட்டுக்கறேன். இனி ஒங்க பேங்க் சவகாசமே வேணாம்.' என்றார் கேலியுடன்.

இதென்னடா புது பிரச்சினை என்பதுபோல் என்னைப் பார்த்தார் என்னுடைய அதிகாரி...


தொடரும்..

15 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 37

வாடிக்கையாளர்கள் பல காரணங்களுக்காக தங்களுடைய கணக்கில் வரவு செலவு செய்வதற்கு வேறொருவரை நியமிப்பதுண்டு. இவர்களுடைய அதிகாரங்களை நிர்ணயிக்கும் ஆவணம் power of attorney எனப்படுகிறது. நியமிக்கப்படுபவர் PA Holder என அழைக்கப்படுவார்.

இத்தகைய POA சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படுவது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வம். இப்போது அயல்நாடுகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இப்பழக்கம் பரவலாக உள்ளது.

இவ்வகையில் நியமிக்கப்படுபவர்கள் கணக்கில் வரவு செலவு செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி இத்தகைய கணக்கிலிருந்து வழங்கப்படும் காசோலைகளில் அவர் கையொப்பமிடுகையில் அவர் இன்னாரின் பிரதிநிதி (PA Holder of the account holder) என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதை குறிப்பிடாமல் வழங்கப்படும் காசோலைகள் கணக்கில் பணமில்லாமல் திரும்புமானால் அதற்கு கணக்கு வைத்திருப்பவரை பொறுப்பாளியாக்க முடியாது. இன்னின்ன செலவினங்களுக்கு மட்டுமே ஒரு பிரதிநிதி கணக்கிலிருந்து தொகையை எடுக்கலாம் என்ற விதிமுறைகள் POAல் குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதை வங்கி கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

சாதாரணமாக அத்தகைய பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட கணக்கிலிருந்து தங்களுடைய சொந்த கணக்குகளுக்கு மாற்றுவதற்கு (transfer to the PA Holder's personal account) பிரத்தியேகமான அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதில்லை. அதாவது நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த நடிகையின் கணக்கிலிருந்து அவருடைய பிரதிநிதியான கணவரின் கணக்கிற்கு காசோலை மூலமாக மாற்றுவதற்கு அதற்குரிய ஆவணத்தில் பிரத்தியேக அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தெளிவாக கூறவேண்டுமானால் கணக்கிலிருந்து மாற்றுவதற்கென உபயோகப்படுத்தப்படும் காசோலையில் பிரதிநிதி என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டிருக்குமானால் வங்கி மேலாளர்கள் அதை கவனமுடன் கையாள வேண்டியிருக்கும்.

நியாயமான காரணத்திற்கான மாற்றத்தை (Transfer for funds for genuine reasons) அனுமதிக்க வேண்டுமானால் அதற்கான காசோலையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரே கையொப்பமிட்டிருக்கவேண்டும். அல்லது தன் கையொப்பமிட்ட கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இதனுடைய அடிப்படை நோக்கம் என்னவென்றால் தன்னுடைய கணக்கில் வரவு செலவு செய்ய அனுமதிக்கும் வாடிக்கையாளர் மைனராகக் கூட இருக்கலாம். ஆகவே விவரமில்லாத அவருக்கு தெரியாமல் அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி கணக்கிலுள்ள தொகையை கையாடல் செய்துவிட முடியுமல்லவா? அத்துடன் நடிகையைப் போன்று பணம் வரவு செலவு செய்யும் விவகாரத்தில் அத்தனை விவரம் இல்லாதவர்களும், போதிய படிப்பறிவு இல்லாதவர்களும், வயோதிகர்களும், உடல்நலக் குறைவுள்ளவர்களும் ஏமாற்றப்படலாகாது என்பதற்காகவே இந்த நியதி அமுலில் உள்ளது.

வங்கி சம்பந்தப்பட்ட எந்த விதிமுறைகளை மேலாளர்கள் மீறினாலும் பொறுத்துக்கொள்ளும் நீதிமன்றங்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுபவர்கள் செய்யும் கையாடல்களுக்கு துணை செல்லும் வங்கி மேலாளர்களை மிகவும் கடுமையான தண்டனைக்குள்ளாக்குவதை நான் கண்டிருக்கிறேன்.

அப்படித்தான் என்னுடைய முந்தைய மேலாளர் தன்னையறியாமல் செய்திருந்தார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நடிகையின் கணவருடன் ஏற்பட்டிருந்த நட்பின் நெருக்கத்தால் அவரை முழுமையாக நம்பியிருந்தது. இரண்டு அவர் மூலமாக வங்கிக்கு கிடைக்கவிருந்த வணிக தொடர்புகளை மேலாளர் விரும்பியது.

ஒவ்வொரு முறையும் கிளைக்கு வரும்போதெல்லாம் நடிகையின் கணவர் மேலாளருடனான நட்பை பயன்படுத்திக்கொண்டு நேரடியாக மேலாளர் அறைக்குள் சென்று அமர்ந்துக் கொள்வது வழக்கம். கணக்கிலிருந்து எடுக்கப்பட வேண்டிய தொகைக்கான காசோலையை நேரடியாக மேலாளரிடமே கொடுப்பதும் வழக்கம். அவர் தன்னுடைய சிப்பந்தியை அழைத்து காசோலைக்கான தொகையை காசாளரிடமிருந்து பெற்று வர பணிப்பதும் வழக்கம். அதுபோலவே நடிகையின் கணக்கிலிருந்து தன்னுடைய பர்சனல் சேமிப்பு கணக்கிற்கு அவ்வப்போது மாற்றுவதற்காக வழங்கப்படும் காசோலைகளும் மேலாளரிடமே நேரடியாக அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல சமயங்களில் மேலாளரிடம் பேசிக்கொண்டே காசோலைகளை அளிக்க அவற்றையும் மேலாளர் சரிவர கவனிக்காமல் பெற்று தன்னுடைய அதிகாரிகளிடம் அனுப்பியிருக்கிறார். அதிகாரிகளும் மேலாளர்தானே தங்களிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்ற எண்ணத்துடன் அதை நடிகையின் கணக்கில் பற்று வைத்திருக்கின்றனர்.

நடிகையின் கணவர் திட்டமிட்டு செய்த செயல் மேலாளரின் கவனத்தை ஈர்க்காமலே இருந்திருக்கிறது.. ஒன்று இரண்டு மாதங்கள் அல்ல.. இரண்டு வருடங்களுக்கும் மேலாக..

நான் பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே கிளைக்கு வந்திருந்த நடிகையின் கணவர் நான் வேற்று மாநிலத்தவன் என்பதை உணர்ந்துக்கொண்டார். அத்துடன் நான் சாதாரணமாக யாரிடமும் உடனே சகஜமாக பழகாதவன். இப்போது பரவாயில்லை.

அத்துடன் அட்டகாசமான சிரிப்புடன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரைக் கண்டதுமே ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவருடைய தோற்றத்திலும் சிரிப்பிலும் ஒரு நாடகத் தன்மையும் ஒரு போலித்தனமும் தெரிந்ததாகப் பட்டது எனக்கு. மேலும் முதல் சந்திப்பிலேயே இடைவெளியில்லாமல் தன்னைப் பற்றியும் தன்னுடைய மனைவியைப் பற்றியும் மிகைப்படுத்தி பேசியதையும் கவனித்த எனக்கு அவரிடம் சற்று கவனமாகவே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

பேச்சுவாக்கில் ஒரு கணிசமான தொகைக்கு காசோலையை என்னிடம் நீட்டினார். நடிகையின் கணக்கிலிருந்து அவருடைய கணக்கிற்கு மாற்றுவதற்கென வழங்கப்பட்டிருந்தது. நான் தயக்கத்துடன், 'this is not allowed. I am sorry.' என்றேன். அவர் உடனே ஒரு வீரப்பா சிரிப்புடன், 'இதுதான் ஒங்களுக்கு மொதல் பிராஞ்சா சார்?' என்றார். அவருடைய தொனியிலிருந்த கேலி என்னை அவமதிப்பதாகப் பட்டாலும் நான் கோபப்படுவதில் பயனில்லை என உணர்ந்து என்னுடைய துணை மேலாளரை அழைத்து சம்பந்தப்பட்ட POA நகலைக் கொண்டுவர பணித்து அது வந்ததும் அதை படித்துப் பார்த்தேன்.

அவரோ பொறுமையிழந்து, 'சார்... நீங்க என்னை அவமானப்படுத்தறீங்க. நா இந்த மாதிரி transactionஐ பலதடவ செஞ்சிருக்கேன். ஒங்களுக்கு முன்னால இருந்த மேனேஜர் இதுவரைக்கும் ஒன்னும் சொன்னதில்லை... இதோ இங்க நிக்கற ஒங்க அசிஸ்டெண்டுக்கும் தெரியும்.' என்று குரலெழுப்பி பேச ஆரம்பித்தார்.

நான் என்னுடைய அதிகாரியைப் பார்த்தேன் இவர் சொல்வது சரிதானா என்பதுபோல். அவர் பதிலளிக்காமல் தலையைக் குனிந்துக்கொண்டார்.
அதாவது மேனேஜரே ஒன்னும் சொல்லாம இருக்கறப்போ நாங்க என்ன சார் பண்றது என்ற பாவனையில்..

நான் கடகடவென ஆவணத்தை படித்து முடித்துவிட்டு, 'I am sorry Sir.. the POA does not permit such transactions. ஒன்னு மேடமே இந்த செக்ல சைன் செய்யணும்.. இல்லன்னா அவங்க சைன் பண்ண லெட்டர் வேணும்.' என்றேன்.

அவர் உடனே கோபத்துடன் எழுந்து என் கையிலிருந்த காசோலையை பறிக்க முயல நான் பிடிவாதமாக அதை என்னுடைய இழுப்பில் வைத்து பூட்டி எழுந்து நின்றேன். 'I am extremely sorry Sir.. I can't return the cheque now.' என அவருடைய கோபம் உச்சிக்கே சென்றது. 'I will teach you a lesson.' என்ற எச்சரிக்கையுடன் எழுத்தில் எழுதவியலாத வார்த்தைகளால் என்னை அர்ச்சித்துவிட்டு எழுந்து செல்ல வங்கி அலுவலகமே வெலவெலத்துப் போனது. குழுமியிருந்த வாடிக்கையாளர்கள் எல்லாரும் என்னையே பார்க்கத் துவங்கினர்.

அவர்களில் பலருக்கும் முந்தைய மேலாளர் வழங்கியிருந்த சலுகைகளை நான் ஏற்கனவே மறுத்திருந்ததால் அவர்களுள் ஒருவர் உரக்க கூறியதும் குழுமியிருந்த பல வாடிக்ககயாளர்கள் 'கொல்' என்று சிரித்ததும் இன்னும், இதை எழுதும்போதும் என் செவிகளில் ஒலிக்கின்றன.. 'இவர் கோழிக்கு --- புடுங்கக் கூட லாயக்கில்லை.. இவரெல்லாம் மேனஜரா வந்து... இன்னும் கொஞ்ச நாள் இவர் இங்கயே இருந்தா இந்த பிராஞ்சையே இழுத்து மூடிற வேண்டியதுதான்..'

சரி.. இத கொஞ்சம் க்ளிக் பண்ணி புண்ணியம் கட்டுக்குங்க:)

http://friends.unicefusa.org/r/14d6c8b02402102a8408

தொடரும்..

14 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 36

எப்படி வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் பணியாற்றுகிற ஒரு மேலாளருக்குப் பிறகு பொறுப்பேற்பதைப் போன்ற சிரமமான விஷயம் வேறெதுவும் இல்லையென்பதை அந்த கிளையில்தான் நன்கு உணர்ந்தேன்.

என்னுடைய முந்தைய மேலாளர் நல்ல விஷயஞானம் உள்ளவர் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். விஷயஞானம் இல்லாத மேலாளர்கள் செய்யும் தவறுகளை அல்லது தில்லுமுல்லுகளை கண்டுபிடிப்பது எளிது. அவர்கள் செய்வது சரியா தவறா என்பது பலசமயங்களில் அவர்களுக்கே தெரியாது என்பதால் அவர்களுக்கு அவற்றை மறைக்கவும் திறமை இருக்காது.

மாறாக, விஷயஞானம் உள்ளவர்கள் பல தவறுகளை தெரிந்தே அதாவது திட்டமிட்டே செய்வதால் அவற்றை கண்டுபிடிப்பது அத்தனை எளிதல்ல. அதுவுமல்லாமல் என்னுடைய முந்தைய மேலாளர் என்னுடைய வட்டார மேலாளர் மற்றும் தலைமையகத்திலிருந்த சில உயரதிகாரிகளால் திறமையான அதுவும் வெற்றிகரமான மேலாளராக கணிக்கப்பட்டிருந்ததால் அவர் செய்து வைத்திருந்தவைகளைப் பற்றி முறையிடுவதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

நல்லவேளையாக அப்போதிருந்த வங்கி முதல்வருடைய நேரடி உத்தரவின்படி என்னுடைய தலைமை ஆய்வு இலாக்கா ஒரு முழு பிரத்தியேக ஆய்வுக்கு உத்தரவிட்டார். அவர்கள் ஒருமாத காலம் என்னுடைய கிளையில் தங்கியிருந்து ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்தளித்தனர்.

ஆனால் அதுவே எனக்கு பெரிய தலைவலியாகிப் போனது. ஏனெனில் அவர்களுடைய அறிக்கையில் காணப்பட்டிருந்த பல்வேறு தவறுகள் மற்றும் ஒழுங்கீனங்களை சரிசெய்யும் பொறுப்பு என் தலைமீதே விழுந்தது. என்னுடைய எச்.ஆர். இலாக்கா அதிகாரிகளில் சிலர் என்னுடைய முந்தைய மேலாளருக்கு நெருங்கியவர்களாயிருந்ததால் எங்களுடைய தலைமை ஆய்வு இலாக்காவின் பிரத்தியேக ஆய்வுக்கு நானே காரணம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

விளைவு?

என்னுடைய முந்தைய மேலாளரை எனக்கு துணையாக ஒரு மாத காலம் என்னுடைய கிளைக்கு அனுப்பவேண்டும் என்ற ஆய்வுக் குழுவினரின் பரிந்துரையை ஏற்கவியலாது என ஏற்றுக்கொள்ளவியலாத பல காரணங்களைக் காட்டி மறுத்துவிட்டது. இதில் எனக்கு வருத்தம்தான் என்றாலும் அதுவே இறுதியில் ஒரு blessing in disguise ஆகிவிட்டது.

கடந்த வாரத்தில் நான் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளரும் சரி கிளையில் நடந்திருந்த பல தவறுகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வாடிக்கையாளர்களும் சரி நல்ல ஸ்திரமான வணிகம் செய்பவர்களாயிருந்தனர். அத்துடன் மேலாளர் செய்திருந்த தவறுகளால் வங்கிக்கு பெரிதாக நஷ்டம் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. அவர் செய்திருந்த பலவும் வங்கி நியதிகளை மீறுவதாயிருந்தது என்பதுதான் அவர் மீதிருந்த புகார்.

எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளருக்கு ரு.10 லட்சம் கடனாக அளித்திருந்தால் எப்போதாவது தேவைப்படும்போது அதில் சுமார் ரூ.1 லட்சம் வரை அதாவது அதிகபட்ச கடன் தொகையில் (Limit) பத்து விழுக்காடு வரை கூடுதலாக வழங்க மேலாளருக்கு அனுமதி உண்டு. அதற்கு மேல் கொடுக்க வேண்டுமானால் வட்டார மேலாளருக்கோ அல்லது மத்திய கடன் வழங்கும் இலாக்காவிற்கோ பரிந்துரைக்க வேண்டும். ஆனால் மெய்ல் வசதிகள் இல்லாதிருந்த அந்த காலத்தில் அங்கிருந்து அனுமதி கிடைப்பதற்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் பிடிக்கும். (இப்போதோ சில மணி நேரங்களில் அல்லது அதிகபட்சம் ஒரு நாளைக்குள் கிடைத்துவிடுகிறது). ஆகவே என்னுடைய மேலாளர் அதற்கெல்லாம் காத்திருக்க மாட்டார். சிலசமயங்களில் ரூ.10 லட்சம் கடன் கணக்கில் ரூ.20 லட்சம் வரை கூட வழங்கியிருந்தார்.

இத்தகைய கூடுதல் தொகை ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வழங்கலாம் என்பது நியதி. அப்படியே வழங்கினால் ஒன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் சரிசெய்துவிடவேண்டும். ஆனால் பல கணக்குகளில் இத்தகைய கூடுதல் தொகை சகட்டு மேனிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சில கணக்குகளில் தலைமையகம் அனுமதித்திருந்த தியதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் கொடுக்கப்பட்ட கூடுதல் தொகை சரிசெய்யப்படாமல் மாதக் கணக்கில் இருந்தது.

அடுத்து, ஓவர்டிராஃப்ட் எனப்படும் கடன் கணக்கு சாதாரணமாக ஒரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டும். அப்படி புதுப்பிக்கப்படாத கணக்குகள் இப்போதெல்லாம் non performing assets என கருதப்பட்டுவிடும். ஆனால் அப்போது இத்தகைய நியதிகள் இல்லை. இருப்பினும் இத்தகைய புதுப்பிக்கப்படாத கணக்குகளுக்கு புதுகணக்குகளிலிருந்து வசூலிக்கப்படும் வட்டித்தொகைக்கு மேலாக ஒரு விழுக்காடு அபராத வட்டியாக வசூலிக்கப்படும். ஆனால் என்னுடைய நண்பரோ அதை வசூலிக்கமாட்டார். கணக்குகளை குறித்த காலத்தில் புதுப்பிக்கவும் மாட்டார். நான் பொறுப்பேற்ற சமயத்தில் அவர் வழங்கியிருந்த எல்லா ஓவர்டிராஃப்ட் கணக்குகளுமே இரண்டு வருடங்களுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததைக் காண முடிந்தது..

இப்படி எத்தனையோ, எத்தனையோ..

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் ஒருவர் ஒருவராக நான் சந்திக்க சென்றபோது ஏறக்குறையை எல்லோருமே வலுவான வணிகங்களுக்கு உரிமையாளராக இருந்ததைக் காண முடிந்தது. அத்துடன் அனைவருமே நல்ல கணக்காளர்கள், தணிக்கையாளர்களை பணிக்கும் வைத்திருந்ததையும் காண முடிந்தது.

பிறகு ஏன் இவர்கள் வங்கி நியதிகளுக்குட்பட்டு தங்களுடைய கடன் கணக்குகளை நடத்த முடியவில்லை என்று துவக்கத்தில் நினைத்தேன். 'எங்கள என்ன பண்ண சொல்றீங்க சார்? மேனேஜர் எப்ப பார்த்தாலும் பிசியா இருக்கார். அவருக்கு புதுசு புதுசா கடன் குடுக்கறதுக்கே நேரமில்லேங்கறார். அப்புறம் எப்படி எங்க கணக்க புதுப்பிக்கிறது? நாங்க எங்க லிமிட்டுக்கு மேல எடுக்கறதுக்கு காரணமே இதான் சார். ஒங்க பேங்க்ல கடன் வாங்குன டைம்லருந்து எங்க பிசினஸ் ரெண்டு, மூனு மடங்கு கூடிருச்சி. ஓவர்டிராஃப்ட் மட்டும் அதே அளவுதான்னா பிசினஸ் பண்ண வேணாமா சார்? ஆனா நாங்க கணக்குலருந்து எவ்வளவு கேட்டாலும் சுணங்காம குடுத்துருவார். கணக்க புதுப்பிக்கலன்னாலும் எங்களுக்கு தேவையானது கிடைச்சிருதில்லையா? அதான்..' என்றனர் பெரும்பாலான வாடிக்கையாளர்கள்.

வட்டார மேலாளரும் தலைமையகத்திலிருந்த உயர் அதிகாரிகளும் ஸ்டெடியாக வளர்ந்த வணிகத்தின் அளவையும் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்து வந்த லாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்திருந்தனரே தவிர மேலாளருடைய விதி மீறல்களை கண்டுக்கொள்ளவில்லை.

அவருடைய விதி மீறல்களுக்கு அவர் ஏதும் 'கையூட்டு' பெற்றிருந்ததாக ஆதாரம் ஏதும் இருக்கவில்லை. அப்படி கேட்டு பெற்றதாகவும் யாரும் புகார் செய்யவில்லை. 'குடுத்தா வாங்கிக்கிருவார் சார். அவரா எதுவும் கேட்டதில்லை.' என்றுதான் பலரும் கூறினார்கள்.

ஆகவேதான் அவர் வங்கியின் பல நியதிகளையும் மீறியிருந்தாலும் விசாரனையின் இறுதியில் பதவியிறக்கத்தோடு அவருடைய தண்டனை முடிந்தது. இல்லையென்றால் வேலை பறிபோனதுடன் சிறைத்தண்டனையும் கிடைத்திருக்கும்.

அந்த கிளையில் நான் இருந்த சமயத்தில்தான் சமீபத்தில் காலமான ஒரு நடிகையின் சேமிப்புக் கணக்கில் அவருடைய கணவரே கையாடல் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதுவும் முந்தைய மேலாளரின் கவனக் குறைவால்தான். கவனக் குறைவு என்பதைவிடவும் வணிகத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம் எனவும் கூறலாம்.

நடிகை அப்போது மிகவும் பிரபலமாகவும் பிசியாகவும் இருந்தவர். ஆகவே அவருடைய கணக்கில் வரவு செலவு செய்ய அவருடைய கணவருக்கு power of attroney கொடுத்திருந்தார். அதன்படி கணக்கில் லட்சக் கணக்கில் வரவு செலவு செய்திருந்தார் அவருடைய கணவர். அதற்காக வங்கிக்கு வந்து செல்லும் கணவருடன் மேலாளருக்கு நட்பு ஏற்பட அதுவே அவருடைய தில்லுமுல்லுவுக்கு வழியாகிப் போனது.

அத்துடன் திரையுலகினருடைய கணக்கில் வராத வருமானத்தையும் உங்களுடைய வங்கிக்கு டெப்பாசிட்டாக பிடித்துத் தருகிறேன் என்று அவர் ஆசைகாட்டியதை நம்பி வங்கியின் நியதிகளுக்கு புறம்பாக அவர் நடத்திய பலவற்றையும் கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் விளைவு நடிகையின் கணக்கில் நடந்த குளறுபடிகளுக்கு வங்கி மேலாளரும் உடந்தை என்ற புகாருக்கு ஆளாக வேண்டியிருந்தது.

அதைப்பற்றி நாளை...

தொடரும்..

13 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 35

சாதாரணமாக வாடிக்கையாளருடைய கணக்கில் வரவு வைத்தபிறகு வசூலுக்கு அனுப்பப்பட்ட ஒரு காசோலை ஏதாவது ஒரு காரணத்திற்காக திரும்பி வருமானால் அதனுடைய தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடைய கணக்கில் பற்று வைத்து உடனே அதாவது அன்றைய வணிக நேரம் (Business Hours) முடிவதற்குள் வசூலித்துவிட வேண்டும் என்பது வங்கி நியதிகளுள் ஒன்று.

அதற்கு தேவையான தொகை கணக்கில் இல்லாமலிருக்கும் பட்சத்தில் சில மேலாளர்கள் திரும்பி வந்த காசோலையை கணக்கில் பற்று வைக்காமல் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை தொலைபேசியில் அழைத்து தொகையை விரைவில் செலுத்த கோருவார்கள். அது பலனளிக்காத பட்சத்தில் நேரில் சந்திக்க வேண்டியிருக்கும். சிலர் ஒரு சில நாட்களில், பலர் ஒரு வாரத்தில் தேவைப்படும் தொகையை மொத்தமாகவோ தவணை முறையிலோ அடைத்துவிடுவார்கள். அவர்கள் அடைக்க வேண்டிய தொகை அடைக்கப்பட்டதும் மேலாளர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் காசோலையை தங்களுடைய துணை அதிகாரிகளிடம் கொடுத்து கணக்கில் பற்று வைக்க சொல்வார்கள்.

ஆனால் வங்கி நியதிகளின்படி அது விதியை மீறிய செயலாகும். மனத் துணிவுள்ள உதவி மேலாளர்கள் இத்தகைய செயலுக்கு சம்மதிக்க மாட்டார்கள். அப்போது மேலாளரே அந்த காரியத்தை செய்ய வேண்டியிருக்கும். அடுத்து வரும் ஆய்வில் பிடிபட்டால் விசாரனை, விளக்கம் என மேலாளர் அல்லல்படுவார்.

இங்கனம் காசோலை திரும்பி வந்த தினமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடைய கணக்கில் பற்று வைக்காமலிருப்பது வங்கி நியதிகளுக்கு மட்டுமல்லாமல் சட்ட நியதிகளுக்கும் புறம்பான செயல் என்பது பல மேலாளர்கள் உணர்வதில்லை. காசோலை திரும்பி வந்த தினத்திலிருந்து பற்று வைக்கும் தினம் வரையிலான இடைபட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மரணமடைய நேர்ந்தால், அதன்பிறகு காசோலைக்கான தொகையை கணக்கில் பற்று வைப்பது செல்லாது. வாடிக்கையாளர்களின் வாரிசுகள் ஒருவேளை அத்தொகையை திருப்பி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.

ஆகவேதான் காசோலை திரும்பிவரும் தினத்தன்றே கணக்கில் தொகை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பற்று வைத்திவிடவேண்டும் என்கிறது வங்கி நியதிகள். போதிய தொகை கணக்கில் இல்லாதிருக்கும் பட்சத்தில் கணக்கில் overdraft வசதி வழங்கப்பட வேண்டியிருக்கும். வழங்கவேண்டிய ஓவர்டிராஃப்ட் கணிசமான தொகையாக இருக்கும் பட்சத்தில் அதை வழங்க பெரும்பாலான மேலாளர்களுக்கு அதிகாரம் இருக்காது என்பதால்தான் அவர்கள் நியதிகளுக்கு புறம்பாக காசோலையை தங்கள் கைவசம் வைத்திருப்பதுண்டு.

ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. மேலாளருடைய பொறுப்பிலிருக்கும் காசோலை களவுபோகும் பட்சத்தில் அவரே வசூலிக்கப்பட வேண்டிய தொகைக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய மேலாளர் நண்பர் ஒருவருக்கு நடந்ததை இங்கே குறிப்பிடுகிறேன்.

இதே போன்ற சந்தர்ப்பம் ஒன்றில் திரும்பி வந்த காசோலையின் பணத்தை வாடிக்கையாளர் திருப்பி செலுத்த மறுத்திருக்கிறார். கேட்டால் 'ஒங்கள யார் சார் செக்கோட பணத்த ஒடனே வரவு வைக்கச் சொன்னா? என்னெ கேக்காம வரவு வச்சிட்டீங்க. நா அத கவனிக்காம வேறொருத்தருக்கும் செக் குடுத்துட்டேன். அது பாசாகி போயிருச்சி. இப்ப எங்கிட்ட பணமில்லை. பணம் வரும்போதுதான் கட்ட முடியும். என்ன பண்ணணுமோ பண்ணிக்குங்க.' என்றும் கூறியிருக்கிறார்.

மேலாளர் அந்த பதவிக்கு புதியவர். காசோலைக்கான தொகையை வசூலிக்காவிட்டால் தன்னுடைய வேலைக்கே ஆபத்து என்று நினைத்தவர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நெருங்கிய நண்பர் ஒருவரையும் தன்னுடைய கிளை ஊழியர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அவரை நேரில் சென்று சந்தித்து தயவு செய்து தொகையை அடைத்துவிடுங்கள், இல்லையென்றால் என்னுடைய வேலைக்கே ஆபத்து என்று புலம்பியிருக்கிறார். வாடிக்கையாளரும் சரி மேலாளருடன் சென்ற அவருடைய நண்பரும் சரி எமகாதர்கள். 'சரி சார். ரிட்டர்ன ஆன செக்க கொண்டு வாங்க. பணத்த ஒங்கக்கிட்டவே குடுத்துடறோம்' என்று கூற அப்பாவி மேலாளர் 'இதோ கொண்டு வந்திருக்கேன் சார்' என்று அவருடைய ஊழியர் தடுத்தும் கேளாமல் கைவசம் கொண்டு வந்திருந்த காசோலையை அவரிடம் கொடுக்க அவரோ 'கொஞ்சம் இருங்க சார் உள்ள போய் பணத்த கொண்டு வரேன்' என்று சென்றவர்தான். அரைமணி நேரத்திற்கும் மேல் வரவில்லை. காத்திருந்த வாடிக்கையாளருடைய நண்பரும் 'சார் எனக்கு வேற வேலையிருக்கு' என்று கிளம்பி செல்ல மேலாளரும் ஊழியரும் மணிக்கணக்கில் காத்திருந்ததுதான் மிச்சம். வாடிக்கையாளர் வரவேயில்லை. சில மணி நேரம் கழித்து வந்த வாடிக்கையாளர் ஒன்றும் தெரியாததுபோல், 'என்ன சார் என்ன விஷயம்?' என்று வினவ மிரண்டு போயிருக்கிறார் மேலாளர். பிறகு காசோலை விவரம் குறித்து கேட்க வாடிக்கையாளர் வெகுண்டு 'என்ன சார் வெளையாடறீங்களா? போய் ரிட்டர்ன் ஆன செக்க கொண்டு வாங்க. பணத்த குடுக்கறேன். இல்லன்னா போலீசுக்கு போக வேண்டியிருக்கும்.' என்று மிரட்டி அனுப்ப மேலாளர் தான் ஏமாற்றப்பட்ட விஷயத்தையும் யாரிடமும் சொல்ல முடியாமல் இறுதியில் தன் கையிலிருந்து தொகையை அடைத்திருக்கிறார்! சுமார் ஒரு வருடம் அவருக்கு கிடைக்கக் கூடிய மாத ஊதியத்தை ஒரேயொரு தவறால் இழக்க வேண்டியிருந்தது.

சரி விஷயத்துக்கு வருவோம்..

என்னுடைய முந்தைய மேலாளர் கொடுத்திருந்த தொகையோ மிகப் பெரியது. அவரே விரும்பினாலும் கைவசமிருந்து அடைக்கக் கூடிய தொகையல்ல. வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வசூல் செய்தே ஆகவேண்டும். ஆனால் எப்படியென்றுதான் குழம்பிப் போயிருக்கிறார். வாடிக்கையாளர் நினைத்திருந்தால் சந்தை வட்டிக்கு பணத்தி புரட்டியிருக்க முடியும். ஆனால் அவருடைய தற்போதைய தேவை நிறைவேறிவிட்ட சூழலில் 'சாரி சார். அவ்வளவு பெரிய தொகைய நான் எப்படி சார் புரட்டறது. நீங்களே அந்த பேங்க் மேனேஜர மீட் பண்ணி பத்திரத்த ரிலீஸ் பண்ணி தாங்க சார். அத அப்படியே ஒங்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணிடறேன்.' என்று கூறியிருக்கிறார்.

வேறு வழி என்னுடைய மேலாளர் அந்த வங்கிக்கு மீண்டும் நேரில் சென்று தன்னுடைய இக்கட்டான சூழலை விவரித்து, கெஞ்சி கூத்தாடியிருக்கிறார். அவர் அனுபவசாலி போலிருக்கிறது. 'சார் நாங்க அந்தாள்கிட்ட பத்திரத்த குடுக்கறாப்பல இல்ல சார். அவர் ஒங்களையும் ஏமாத்திட்டு பத்திரத்தோட போயிருவார். அவர் எங்கக்கிட்ட கட்டுன தொகை நீங்க லோனா குடுத்ததுதான், அதனால பத்திரங்கள நேரடியா எங்க பேங்குக்கே அனுப்பிருங்கன்னு ஒரு லெட்டர் குடுங்க. நா ஒங்க பிராஞ்சுக்கு ரிஜிஸ்தர் போஸ்ட்ல அனுப்பிடறேன்.' என்று அறிவுரை கூறி அனுப்ப என்னுடைய மேலாளர் அதே போல செய்து பத்திரத்தை பெற்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அந்த வங்கிக்கு கொடுத்த அக்கடிதமே பிறகு அவருக்கு எதிராக உபயோகப்படுத்தப்பட்டது.

ஆனால் வாடிக்கையாளருக்கு அத்தனை பெரிய தொகையை கடனாக அளிக்கும் அதிகாரம் வங்கி முதல்வருக்கும் கூட அப்போது இருக்கவில்லை. ஆகவே வங்கியின் இயக்குனர் குழுவுக்கு(Board of Directors) சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு மாத காலம் பிடிக்கும். அதுவரை வாடிக்கையாளருடைய கணக்கில் நிற்கும் ஓவர்டிராஃப்ட் தொகை அப்படியே நிலுவையில் நிற்கும். ஆகவே அந்த தகவலையும் மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும். தெரிவித்தால் உடனே விளக்கம் கோரி கடிதம் வரும். தெரிவிக்காமலிருந்து பிறகு ஆய்வு மூலம் தெரியவந்தால் அது முன்னதைவிடவும் வில்லங்கமாகிவிடக்கூடும்.

என்னுடைய மேலாளர் இதையெல்லாம் ஆலோசித்தாரோ என்னவோ காசோலை பெறப்பட்ட விஷயத்தையும் அது திரும்பி வந்த விஷயத்தையும் தெரிவிக்காமலே புதிதாக ஒரு கடனுக்குண்டான விண்ணப்பத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று தன்னுடைய பரிந்துரையுடன் வட்டார அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க இவருடைய திறமையில் முழு நம்பிக்கை வைத்திருந்த வட்டார மேலாளரும் தன்னுடைய பரிந்துரையுடன் என்னுடைய தலைமையகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

வட்டார மேலாளர் பரிந்துரைத்தபிறகு சாதாரணமாக தலைமையகம் அதற்கு அனுமதி வழங்கிவிடுவது மரபு. ஆனால் என்னுடைய மேலாளர் சற்றும் எதிர்பாராத விதமாக காசோலையை திருப்பியனுப்பிய வங்கிக் கிளை அதிகாரிகளுள் ஒருவர் என்னுடைய அப்போதைய வங்கி முதல்வருக்கு நெருங்கிய உறவினர்! அவருக்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது ஏற்கனவே கடுங்கோபம். அப்படிப்பட்டவருக்கு என்னுடைய மேலாளர் வங்கி நியதிகளுக்கு புறம்பாக உதவி செய்ய முன்வந்திருக்கிறாரே என்ற கோபத்தில் அவருடைய உறவினரான என்னுடைய வங்கி முதல்வரிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. அவர் உடனே வட்டார மேலாளருக்கும் தெரியாமல் ரகசியமாக விசாரனை செய்து யாரும் எதிர்பாராத நேரத்தில் என்னுடைய முந்தைய மேலாளரை கிளையிலிருந்து அகற்றியதுடன் அவரை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள தீர்மானித்து மாற்றியிருக்கிறார். அவர் கிளையில் செய்திருந்த காரியங்கள் முழுவதும் வெளிவரவேண்டுமென்றால் தனக்கு மிகவும் நன்கு பரிச்சயமாயிருந்த ஒருவரைத்தான் மேலாளராக நியமிக்க வேண்டுமென்று தீர்மானித்ததன் விளைவுதான் என்னை வட்டார அலுவலகத்திலிருந்து மாற்றியது!

இதுபோலத்தான் இருந்தது அவருடைய பர்சனல் கோப்பிலிருந்து எடுத்த ஒவ்வொரு கடிதங்களின் பின்னணியும்!

இதை என்னுடைய தலைமையகத்துக்கு தெரிவிக்காமலிருந்தால் நாளை அது என் மீதே விழ வாய்ப்புள்ளதே என்ற நினைத்தேன். ஆனால் அதே சமயம் இவற்றையெல்லாம் துருவி துருவி ஆய்வு செய்து எதற்கு நம்முடைய நேரத்தை வீணாக்குவதெனவும் நினைத்தேன். ஆகவே இங்கும் அங்கும் படாமல் ஒரு ரகசிய அறிக்கையை தயார் செய்து என்னுடைய தலைமையகத்துக்கு அனுப்பினேன். என்னுடைய அறிக்கை கிடைத்ததுமே ஒரு பெரிய ஆய்வுக் குழுவே அடுத்த சில வாரங்களில் என்னுடைய கிளைக்கு வந்து இறங்கியது. பிறகென்ன அடுத்த ஒரு மாதம் அவர்கள் துருவி, துருவி பார்த்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட மேலாளர் மீது விசாரனை, தண்டனை என தொடர்ந்தது. கடந்த ஆண்டு நட்சத்திர மேலாளராக தெரிவு செய்யப்பட்டவர் இரண்டு நிலைகள் பதவியிறக்கப்பட்டு... கடந்த இருபதாண்டுகளாக அதே நிலையில் நீடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். பிறகு வெளிவந்த VRS Schemeல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதுதான் மேலாளர்களுடைய அவல நிலை!


தொடரும்..

07 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 34

நேற்றைய தினம் நான் விவரித்த சம்பவத்தின் பின்னணி என்ன?

அதற்கு முன் ஒரு சிறு எடுத்துக்காட்டு.

ஒரு வாடிக்கையாளருக்கு 'அ' மற்றும் 'ஆ' வங்கிகளில் கணக்கு உள்ளது என வைத்துக்கொள்வோம்.

. அவருக்கு அத்தியாவசியமாக ஒரு சில தினங்களுக்கு (அதிகபட்சம் ஒரு வாரம்) ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் இரண்டு கணக்குகளிலும் பணம் இல்லை. அவருக்கு வரவேண்டிய இடத்திலிருந்து எதிர்பார்த்த பணம் வந்து சேரவில்லை. ஆனால் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும்.

ஆகவே 'அ' வங்கியின் மேலாளருடைய துணையுடன் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்.

'ஆ' வங்கியின் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை எழுதி அதை 'அ' வங்கியிலுள்ள கணக்கில் டெப்பாசிட் செய்கிறார்.

'அ' வங்கியின் மேலாளர் உடனே அக்காசோலைக்கான தொகையை அவருடைய கணக்கில் வங்கியின் விதிகளை மீறி வரவு வைத்து வாடிக்கையாளர் அத்தொகையை உடனே எடுக்கவும் வகை செய்கிறார்.

ஆனால் 'ஆ' வங்கியின் காசோலையை உள்ளூர் க்ளியரிங் மூலம் அந்த வங்கிக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்கிறார்.

இதற்கிடையில் வாடிக்கையாளருக்கு வேறு இடத்திலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேர்கிறது. 'ஆ' வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு 'அ' வங்கி மேலாளரிடம் தெரிவிக்கிறார். காசோலையை உள்ளூர் க்ளியரிங்கில் அனுப்புகிறார். காசோலை பாசாகிறது.

இப்போது, எதற்காக இந்த வேலையை தன்னுடைய வங்கியின் நியதிகளை மீறி ஒரு மேலாளர் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ஒன்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் உண்மையிலேயே கிளைக்கு மிகவும் வேண்டப்பட்டவராயிருக்கலாம். அவரால் வங்கிக்கு பெருத்த வருமானம் கிடைத்திருக்கலாம்.

அல்லது வாடிக்கையாளர் உண்மையிலேயே வடித்தெடுத்த எத்தனாயிருக்கலாம். மேலாளரை வசியப்படுத்தியோ (இதற்கு பல காரணங்கள் இருக்கும்) அல்லது மிரட்டியோ பணிய வைத்திருக்கலாம்.

சரி.. இதனால் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் ஒரு கிளையில் பணியாற்றும் துணை மற்றும் உதவி மேலாளர்கள் புத்திசாலிகளாகவோ அல்லது விவரம் தெரிந்தவர்களாகவோ இருந்தால் ஒரு மேலாளர் நினைத்தாலும் இது சாத்தியமில்லை. ஆனால் எல்லோரும் சேர்ந்து இத்தகைய காரியங்களை நடத்துவதென்றால் கிளையிலுள்ளவர்களைத் தவிர வேறெவருக்கும் தெரியாமல் இதைச் செய்ய முடியும். வருடாந்தர ஆய்வாளர்களால் கூட இதை அத்தனை எளிதாக - கணினி மயமாக்கப்பட்ட இக்காலத்திலும் - கண்டுபிடித்துவிட முடியாது.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் வாடிக்கையாளருக்கு வேறு இடத்திலிருந்து பணம் வரவேண்டியிருந்தது. அது எப்படியும் இன்னும் ஒரு வார காலத்தில் வந்துவிடும் என்று உறுதியளித்ததால் மேலாளர் அந்த திட்டத்திற்கு இசைந்திருக்கிறார்.

ஆனால் நான் நேற்று கூறிய வாடிக்கையாளர் விஷயத்தில் நடந்திருந்தது அதுவல்ல.

அதை தெரிந்துக்கொள்ள நான் சாம, பேத, தான, தண்டம் என பல வழிகளிலும் முயற்சித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வாயிலிருந்தே வரவழைத்தேன். ஆனால் அவர் கூறியதை அப்படியே நம்பாமல் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரையும் நேரில் சென்று விசாரிக்க வேண்டியிருந்தது.

நடந்தது இதுதான்..

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் ஒரு Honest Borrower வகையைச் சார்ந்தவர்.. நான் கடந்த வாரம் கூறிய இவ்வகை வாடிக்கையாளர்களின் குணாதிசயங்களை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்..

1. இத்தகையோருக்கு கடன் வழங்குவது வங்கிகளுடைய கடமை.

2. தங்களுக்கு தேவையான எல்லா சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வட்டி விகிதத்தில் சலுகை, நீண்டகால தவணைகள், திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் பீனல் வட்டியில்லாத கால நீட்டிப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

3. வழங்கப்பட்ட கடன் தொகைக்கு மேல் தேவைப்படும்போதெல்லாம் மேலாளர் முகம் கோணாமல் வழங்கிவிட வேண்டும்.

4. இத்தகைய கூடுதல் தேவையை நியாயப்படுத்த ஏதாவது ஆவணங்களையோ, அல்லது விவரங்களையோ கோரினால் அதற்கும் மசிய மாட்டார்கள்.

5. யாராவது - அதாவது என்னைப் போன்ற பிடிவாதமுள்ள மேலாளர்கள் - மறுத்தால் அடுத்த நொடியே ரிசர்வ் வங்கிக்கோ அல்லது மேலதிகாரிகளுக்கோ இன்னார் என்னிடமிருந்து கையூட்டு கோரினார் என்ற புகார் பறக்கும்.

இவருடைய நிறுவனம் ஒரு வங்கியிலிருந்து கணிசமான தொகை கடன் பெற்றிருந்தது. ஆனால் அதில் அடிக்கடி கூடுதல் தொகை கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வங்கி அதிகாரி ஒருவர் ஒரு கட்டத்தில் பிடிவாதமாக இவருடைய வேண்டுகோளை மறுத்திருக்கிறார். இவர் உடனே குறிப்பிட்ட அதிகாரி கையூட்டு கேட்கிறார் என நேரே லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்கிறார். அவர்களும் அதை உண்மையென நம்பி இவர் வழியாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வலைவீச அந்த அப்பாவி அதிகாரி வாடிக்கையாளர் அளித்த உறையில் என்ன இருக்கிறதென தெரியாமலே பெற்றுக்கொண்டு பிடிபடுகிறார். வங்கி நிர்வாகம் உடனே அவரை இடைநிலை பணிநீக்கம் செய்கிறது.

அதன் பிறகு அதிகாரியின் நேர்மையில் நம்பிக்கை வைத்திருந்த கிளை மேலாளரும் மற்ற அதிகாரிகளும் வாடிக்கையாளரை பழிவாங்கும் எண்ணத்துடன் அவருக்கு எந்த சலுகையையும் வழங்க மறுத்துவிடுகிறார்கள். வாடிக்கையாளரின் வணிகம் ஸ்தம்பித்துப் போகிறது.

நம்முடைய மேலாளர் நண்பருடைய மாநிலைத்தைச் சார்ந்தவர் இந்த வாடிக்கையாளர். இருவருமே சென்னனயில் ஒரே பகுதியில் (area) வசிப்பவர்கள். எப்படி பரிச்சயமானர்களோ தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட நிலையை நம் நண்பரிடம் எடுத்துரைத்திருக்க வேண்டும்.

மேலாளர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தொழிற்சாலையை சென்று பார்வையிடுகிறார். நல்ல நிலையிலிருந்த அந்த தொழிற்சாலையைப் பார்த்ததும் திருப்தியடைந்தவர் வாடிக்கையாளர் கடன் பெற்றிருந்த வங்கியிலிருந்த கடன் தொகை முழுவதையும் அவருடைய கிளைக்கு மாற்றிக்கொள்ள தீர்மானித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கிக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிவிக்குமாறு அந்த வங்கிக்கு கடிதம் எழுதுகிறார்.

எப்படியோ தொலைந்தால் போதும் என்று கருதிய அந்த வங்கி மேலாளர் வட்டியுடன் சேர்த்து அடைக்க வேண்டிய தொகையை தெரிவிக்கிறார். ஆனால் அதை திரட்டி அடைக்க வாடிக்கையாளர் கைவசம் பணம் இல்லை.

எங்களுடைய மேலாளர் அவருடைய நிலையைக் கண்டு பரிதாபப்பட்டாரோ என்னவோ ஒருதிட்டத்தை உருவாக்கி தருகிறார். அதன்படி அந்த வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை அதே கணக்கிலிருந்து காசோலையாக பெற்று எங்களுடைய வங்கியில் புதிதாய் ஒரு கணக்கை துவக்கி அதில் வரவு வைத்து அன்றே வாடிக்கையாளரை பணத்தை எடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அடைக்க உதவுகிறார். (அவரும் கூடவே வந்தார் என்றார் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்.)

சாதாரணமாக ஒருவர் தன்னுடைய கடனை அடைத்ததும் அவர் அதற்கு ஈடாக வைத்திருந்த பத்திரங்களை உடனே திருப்பியளித்துவிட வேண்டும் என்பது எல்லா வங்கிகளுக்கும் உள்ள பொதுவான நியதி. ஆனால் நம்முடைய வாடிக்கையாளர் ஒரு நேர்மையான அதிகாரியின் மீது பொய்யான ஒரு புகாரை செய்திருந்ததால் அந்த வங்கி மேலாளர் அவரை சற்று இழுத்தடிக்க தீர்மானித்தார் போலும்..

இதோ தருகிறேன் நாளை தருகிறேன்.. என்று இழுத்தடிக்க நம்முடைய மேலாளர் பாடு திண்டாட்டமாகி இருக்கிறது..

கையில் வாடிக்கையாளர் கொடுத்த காசோலை வேறு.. அதை க்ளியரிங்கில் அனுப்ப வேண்டும். ஏற்கனவே கணக்கு முடிக்கப்பட்டிருந்ததால் அது நிச்சயம் திரும்பிவரும் என்றும் நம் மேலாளருக்கு தெரியும்..

கடன் பத்திரங்களை அந்த வங்கி ரிலீஸ் செய்திருந்தால் நம்முடைய மேலாளரால் கடனை வழங்கியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லையென்பது வேறு விஷயம்.

கடன் பத்திரங்களும் இல்லாத சூழலில் வாடிக்கையாளரை நம்பி எப்படி இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுப்பதென நினைத்திருப்பார் போலிருக்கிறது. சரி வருவது வரட்டும் என்று தன் கைவசமிருந்த காசோலையை க்ளியரிங்கில் இடுகிறார். இரண்டு நாட்கள் கழித்து காசோலை 'கணக்கு முடிக்கப்பட்டுவிட்டது' என்ற காரணத்துடன் திரும்பிவருகிறது..

தொடரும்..

06 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 33

நம்முடைய மூளை ஆக்டிவாக இருக்கும் சமயத்தில் உறக்கம் வருவதில்லை என்பது உண்மை!

இதை நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். நம்முடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை விட அலுவலகத்தில் அதாவது நம்முடைய உத்தியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளால்தான் நம்முடைய உறக்கம் பல சமயங்களில் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பர்சனல் பிரச்சினைகளை நம் குடும்பத்திலுள்ளவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வு காண முடிகிறது. ஆனால் அது நம்முடைய அலுவலகத்தில் முடிவதில்லை.

அதுவும் மேலாளர் பதவி என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பதவி. அந்த கிளையைப் பொறுத்தவரை அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் முக்கியமாக தீயவைகளுக்கு அவரே பொறுப்பு. நல்லவைகளை அதாவது வணிகத்தில் அவர் அடையும் வெற்றிகளுக்கு தங்களையும் ஒரு காரணியாக காட்டிக்கொள்ள பலரும் அதாவது கிளையிலுள்ள உதவி அல்லது துணை மேலாளர்களிலிருந்து வட்டார அலுவலக அதிகாரிகள் மற்றும் தலைமையக அதிகாரிகள் என பலரும் முன்வருவார்கள். ஆனால் அவருடைய தவறுகளுக்கும் அதனால் வணிகத்தில் ஏற்படும் சரிவுக்கும், வங்கிக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க அவரை விட்டால் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் தனிமைப்படுத்தப்படுவது நிச்சயம்.

ஆகவே அவரே அதைப் பற்றி சிந்தித்து அதற்கு ஒரு தீர்வு காண வேண்டியிருக்கும். அதன் காரணமாகவே பல இரவுகளில் தூக்கம் கலைந்து அவதிப்படுவார்கள். நானும் அத்தகைய சூழலில் இருந்திருப்பதால் அதன் வேதனையை, அதன் பாதிப்புகளை அனுபவித்திருக்கிறேன்.

அப்படித்தான் அவதிப்பட்டேன் அன்றைய இரவும்.

அடுத்த நாள் அலுவலகம் புறப்படுகையில் அலுவலகத்திலுள்ள விடுப்பு ரிஜிஸ்தரை எடுத்துவரச் சொல்லி சரிபார்த்துவிட்டு என்னுடைய தலைமையதிகாரியை அழைத்து அதற்குண்டான சாங்ஷன் எதுவும் கோப்பில் இல்லை என்பதை கூறவேண்டும் என குறித்துக்கொண்டு கோப்பிலிருந்து எடுத்து தனியாக வைத்திருந்த கடிதங்களையும் கோப்புடன் சேர்த்து எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றடைந்தேன்.

அலுவலகம் சென்றடைந்ததும் முதல் வேலையாக விடுப்பு ரிஜிஸ்தரைக் கொண்டு வர பணித்தேன். நான் நினைத்தது போலவேதான் இருந்தது. அந்த தியதிக்கான விடுப்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. பிறகு என்னுடைய அலுவலக வருகை குறிப்பு (Attendance) புத்தகத்தை எடுத்து வரச்சொல்லி பார்த்தேன். முந்தைய மேலாளர் அத்தியதிகளில் கையொப்பமிட்டிருந்தார்! ஆனால் அதை பிறகு அழிக்க முயன்றிருந்தது தெரிந்தது.

ஏன்? அப்படியென்ன நடந்திருக்கும் அத்தியதிகளுள்? அதைத் தெரிந்துக்கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. கிளையிலிருந்த எந்த அதிகாரியாலும் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியவில்லை. அவர்களில் பலரும் அப்போதுதான் அதைப் பார்த்தனர் என்பதை அவர்களுடைய முகபாவமே காட்டிக்கொடுத்தது.

அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டால் அன்றைய அலுவல் முழுவதும் பாழாகிவிடும் என்ற நினைப்பில் முந்தைய தினம் அழைத்த அதிகாரியை அழைத்து நான் கண்டவற்றை தெரிவித்துவிட்டு அன்று பல அலுவல்களுக்காக என்னை சந்திக்க வந்திருந்த வாடிக்கையாளர்களைக் கவனிக்க துவங்கினேன். அன்று பகலுணவு நேரம் வரை மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் போனது என்பார்களே அந்த அளவுக்கு இருந்தது.

தமிழ்நாட்டில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் என்றாலே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்ற நாட்களை விடவும் சற்று அதிகமாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். வாரத்தில் செவ்வாய் கிழமைகளில் மட்டும் கூட்டம் குறைவாக இருக்கும். சாதரணமாகவே நம்மவர்களுக்கு இந்த நாள், கிழமைப் பார்க்கும் வழக்கம் உண்டும். அதுவும் வணிகர்களுக்கு சற்று அத்தகைய குணம் சற்று கூடுதலாகவே இருப்பதுண்டு.

என்னுடைய குடியிருப்பு என்னுடைய அலுவலகத்திலிருந்து நடை தூரம்தான் என்பதால் கடும் மழைக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் பகலுணவுக்கு வீட்டுக்குச் சென்றுவிடுவேன்.

பகலுணவுக்குப் பிறகு அலுவலகம் திருமிபிய நான் முதல் வேலையாக முந்தைய தின இரவு கோப்பிலிருந்து எடுத்து என்னுடைய கைப்பெட்டியில் வைத்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கோப்புகளில் சேர்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் செயல்படத் துவங்கினேன். கடிதங்களை வாடிக்கையாளர்கள் வாரியாக பிரித்தெடுத்து அதனதன் கோப்புகளை எடுத்துவரச் சொல்லி அதில் இணைக்க முற்பட்டபோதுதான் எதற்காக முந்தைய மேலாளர் அக்கடிதங்களை தன்னுடைய கோப்பில் வைத்திருந்தார் என்பது புலனாயிற்று!

துவக்கத்தில் சில கடிதங்களைப் படித்துப்பார்த்தபோது அதிலிருந்த விஷயங்கள் என்னை துணுக்குறச் செய்தது. என்னுடைய நண்பர் நான் நினைத்திருந்தவரைப் போல சாது அல்ல என்பது புலனாகியது. பயங்கர சாமர்த்தியமானவர் என்பதும் விளங்கியது.

வங்கி நியதிகளுக்கு முரணாக பல வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்பது ஒவ்வொரு கடிதத்திலிருந்தும் தெரிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய கோப்புகளையும் அவர்களுக்கு கிளையிலிருந்து வழங்கியிருந்த கடன் கணக்குகளையும் ஆய்வு செய்து பார்த்ததில் வங்கிக்கு பாதகம் விளையக்கூடிய விதத்தில் எதுவும் நடந்திருக்கவில்லையென்பதும் விளங்கியது. அவர் நியதிகளுக்கு புறம்பாக சலுகைகளை செய்திருப்பினும் அதை தகுந்த சமயத்திற்குள் சரிசெய்தும் இருந்தார். அவர் செய்துக் கொடுத்திருந்த சலுகைகளையெல்லாம் இங்கு விவரிப்பது உசிதமாயிருக்காது என்பதால் அதை தவிர்த்திருக்கிறேன்.

ஆனால் ஒரேயொரு கடிதத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன். அதன் மூலம் அந்த காலத்திலும் வணிகர்கள் எத்தனை சாதுரியக்காரர்களாய் இருந்திருக்கிறனர் என்பது தெளிவாகும். என்னுடைய மேலாள நண்பர் சாமர்த்தியசாலிதான் என்றாலும் எனக்கென்னவோ அவரும் சாதுரியமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றே தோன்றியது.

அக்கடிதம் சென்னையிலிருந்த வேறொரு வங்கியின் கிளைக்கு எழுதப்பட்டிருந்தது. எங்களுடைய வாடிக்கையாளர் வழங்கியிருந்த காசோலையை எதிர்கொள்ளவேண்டிய தொகை (required balance) அவருடைய கணக்கில் இருப்பதாகவும் ஆகவே அவருடைய கடன் கணக்கை முடித்து அதற்கு ஈடாக அடகு வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களை உடனே திருப்பிக் கொடுக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இது சாதாரணமாக வங்கி அலுவலில் ஒரு மேலாளர் செய்யக் கூடிய செயல்தான். ஆகவே இதை தன்னுடைய பர்சனல் கோப்பில் வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லையே என்று துவக்கத்தில் நினைத்து அதை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கோப்பில் வைத்துவிடுவதுதான் நல்லது என்று நினைத்து அந்த கோப்பைக் கொண்டுவரச் செய்தேன். கடிதத்தை சரியான இடத்தில் இணைக்க வேண்டுமென்றால் அந்த தியதிக்குப் பிறகு இணைக்கப்பட்டிருந்த பல கடிதங்களை எடுத்தால்தான் முடியும் என்று தோன்றியது. ஆகவே என்னுடைய சிப்பந்திகளுள் ஒருவரை அழைத்து அந்த தியதிக்குப்பிறகு இருந்த எல்லா கடிதங்களையும் எடுக்கச் செய்தேன்.

நான் இணைக்க வேண்டிய கடிதத்திற்கு முன்பு ஒரேயொரு கடிதம் மட்டுமே இருந்தது. அதாவது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கென தனியான கோப்பு ஒன்று உருவாக்கப்பட்டதே என் கையிலிருந்த கடிதத்திற்கு சரியாக ஒரு தினத்திற்கு முன்புதான் என்பது விளங்கியது!

அதிலும் விசித்திரம் ஒன்றுமில்லை. ஏனெனில் சாதாரணமாக வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்தவர்களுக்கே பிரத்தியேகமாக கோப்பு ஒன்று உருவாக்கப்படும். அவரிடமிருந்து பெறும் கடன் விண்ணப்ப நகலிலிருந்தே பெருவாரியான கோப்புகள் துவக்கப்பட்டிருக்கும். ஆகவே என்னுடைய சிப்பந்தியாளரை கோப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தவைகளை மீண்டும் கோப்பில் இணைக்குமாறு பணித்தேன். அவர், 'சார் திருப்பி ஃபைல் பண்றதுக்கு டைம் ஆவும். அதனால வெளியில போய் செய்துக்கொண்டு வரேன்.' என்றார். அவர் கூறியது உண்மைதான். எடுப்பது எளிது. மீண்டும் அதே வரிசையில் கோப்பில் இணைப்பது சிரமம். பொறுமையாக செய்ய வேண்டிய வேலை. சாதாரணமாக 'சரி. அப்படியே செய்ங்க.' என அனுமதிக்கும் நான் ஆனால் என்ன காரணத்தாலோ அன்று, 'இல்லைங்க. இங்கயே வச்சி செய்ங்க.' என்றேன்.

அதைத்தான் உள்ளுணர்வு என்பார்களோ?

அவர் நான் குறிப்பிட்ட கடிதத்திற்கு பிறகு இணைக்க நினைத்த முதல் ஆவணமே என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது.

என்னுடைய முந்தைய மேலாளர் பாசாகும் என்று சான்று வழங்கியிருந்தாரே அந்த வங்கிக் கிளையின் கணக்கிலிருந்து அதே வாடிக்கையாளர் அதே தொகைக்கு என்னுடைய வங்கியின் பெயரில் வழங்கியிருந்த ஒரு காசோலை. அப்படியொரு கணக்கே இல்லை என்ற காரணத்துடன் திரும்பி வந்திருந்தது. காசோலையின் தியதியைப் பார்த்தேன். என்னுடைய கிளையிலிருந்து வழங்கப்பட்டிருந்த கடிதத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னார் வழங்கப்பட்டிருந்தது!

தொடரும்..

05 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 32

என்னுடைய முந்தைய மேலாளர் எந்த வகையைச் (Type) சார்தவர் என்பதை ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு வங்கி மேலாளருக்கு நல்ல விஷயஞானம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவே சிலருக்கு தங்களுடைய கணிப்பின் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வந்துவிடுகிறது என்பதும் உண்மைதான்.

அத்துடன் தன்னால் மற்றவர்களைக் கணிக்கும் திறமை உள்ளது என்கிற நினைப்பும் ஏற்பட்டுவிட்டால் ஆபத்துதான். இது போதாதென்று தன்னால் மட்டுமே எல்லாவற்றையும் சரிவர செய்ய முடியும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.

அதனால்தானோ என்னவோ அவருடைய செயல்பாடுகளில் ஒருவித ரகசியம் இருந்தது. முக்கியமாக அவர் பதவியிலிருந்த காலத்தில் அவர் வழங்கிய கடன்கள் பெற்ற கடந்தாரர்களைப் பற்றிய விவரங்கள் அவருடைய உதவியாளர்களுக்கே தெரியாத புதிராக இருந்தன.

அத்துடன் அவர் கடந்த இரண்டாண்டுகளில் ஒரு சில நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் பணிக்கு வந்திருந்ததையும் கவனித்தேன். அதைக் குறித்து அவருடைய உதவி மேலாளர்கள் ஒருவரிடம் கேட்டபோது, 'சார் அவர் சிக்காகி நாங்க பார்த்தே இல்ல சார். காலையில அஞ்சி மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரத்துக்கு குறையாம வாக், ஜாகிங்குன்னு போவார். குடிக்கறதுல கூட ஸ்ட்ரிக்டா இருப்பார். மிஞ்சிப்போனா மூனு பெக். சிகரெட் குடிக்க மாட்டார். சினிமா, ட்ராமா ஹூஹும்.. இங்க ஃபேமிலியோட இருக்கார். ஒணத்துக்குக் கூட ஊருக்கு போமாட்டார். அப்புறம் எதுக்கு சார் அவருக்கு லீவ்?' என்றார். 'எந்நேரமும் ஞாயித்துக் கிழமைகள்ல கூட இங்க வந்து ஒக்காந்துருப்பார்னா பாத்துக்குங்களேன்.'

அப்படியென்ன செய்வார் என்று நினைத்தேன். எந்த ஒரு காரணத்திற்காகவும் ஞாயிறன்று அலுவலகத்திற்கு செல்வதில்லை என்பதில் உறுதியாயிருப்பவன் நான். அத்துடன் என்னுடன் பணியாற்றும் எவரையும் அன்று அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று கட்டளையிடுவேன். அந்தக் காலத்தில் என்னுடன் பணியாற்றிய இளைஞர்கள் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ எனக்காக வரமாட்டார்கள். ஆனால் இக்கால இளைஞர்களுள் பலரும் நான் என்ன சொன்னாலும் கேட்காமல் ஞாயிறன்றும் அலுவலகத்திற்கு வந்து கணினி முன்னால் அமர்ந்திருப்பது வழக்கமாகிப் போய்விட்டது. இது ஒருவகை addiction அல்லது obsession ஆகிப்போய்விட்டது. ஏன் fashion ஆகிவிட்டது எனவும் சொல்லலாம்.

அவர் எதையாவது அதாவது என்னால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செய்து வைத்திருப்பாரோ என்ற எண்ணம் என்னை நிம்மதியிழக்க செய்தது. எதற்காக அவர் திடீரென்று மாற்றப்பட்டிருப்பார் என்ற சிந்தனை என்னை என்னுடைய பொறுப்பேற்ற அறிக்கையை அனுப்பவிடாமல் செய்தது. என்னுடைய வட்டார மேலாளர் முதலில் மறுத்தாலும் பிறகு என்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் இருவார கால அவகாசத்தை என்னுடைய தலைமையகத்திலிருந்து பெற்றுத் தந்தார்.

அந்த இரு வாரக் காலத்தில் கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்களிலிருந்த தவறுகளையெல்லாம் ஒரு பட்டியலிட்டு அதில் எவற்றையெல்லாம் சரிசெய்ய முந்தைய மேலாளருடைய உதவி தேவை என்பதையும் குறிப்பிட்டு ஒரு பிரத்தியேக ரகசிய அறிக்கையை தயார் செய்து முடித்தேன். கடந்தாரர்களிடமிருந்து பெற்றிருந்த பத்திரங்களிலிருந்த தவறுகளை என்னால் இயன்றவரை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் உதவியுடன் சரிசெய்து முடித்தேன். மீதமிருந்த பத்திரங்களை அதிலிருந்த சிறு, சிறு தவறுகளுடன் அப்படியே வைத்திருந்தாலும் வங்கியின் உரிமை (rights) எவ்வகையிலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என என்னுடைய சட்ட ஆலோசகரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்றேன்.

இரு வார காலம் முடிய இன்னும் இரண்டொரு நாட்கள் இருந்த சமயம். ஒரு நாள் மாலை என்னுடைய தலைமையக எச்.ஆர் அதிகாரி ஒருவரிடமிருந்து ஒரு தொலைப்பேசி வந்தது. 'டிபிஆர். நம்ம மேனன் சாரோட (என்னுடைய முந்தைய மேலாளரின் கற்பனைப் பெயர்) ஃபைல பார்த்து போன வருசம் பிப்ரவரி (இதுவும் கற்பனைதான்) மாசம் 10, 11 தேதியில அவர் லீவில இருந்தாரான்னு பார்த்து சொல்லுங்களேன்.'

எனக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. சாதாரணமாக ஒரு கிளை மேலாளரின் விடுப்புகள் அனைத்துமே தலைமையகத்திலிருந்த எச்.ஆர் பிரிவிலிருந்துதான் சாங்ஷன் செய்யப்படுவது வழக்கம். அத்துடன் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அவ்வருடத்தில் கிளையிலிருந்த அனைவரும் விடுப்பு எடுத்த அறிக்கையொன்று தலைமையகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதும் நியதி. அப்படியிருக்க என்னுடைய முந்தைய மேலாளர் குறிப்பிட்ட தினத்தில் விடுப்பில் இருந்தாரா என்பதை இலாக்காவிலிருந்த அறிக்கைகளிலிருந்தே அறியமுடியுமே என்று நினைத்தேன்.

'நீங்க சொல்றது சரிதான் டிபிஆர். எங்க ரெக்கார்ட் படி மேனன் சார் அந்த ரெண்டு நாள்லயும் ட்யூட்டியிலதான் இருந்திருக்கார். ஆனா ஒங்க பிராஞ்சிலருந்து வந்துருக்கற லீவ் ஸ்டேட்மெண்டுல அவர் லீவ்ல இருந்துருக்கறதா இருக்கு. அவர கேட்டா நா லீவ் லெட்டர் அனுப்பியிருந்தேன். நீங்களும் சாங்ஷன் பண்ணியிருந்தீங்கன்னு சொல்றார். அவர் பேர்ல இங்கருக்க ஃபைல்லயும் நாங்க குடுத்த சாங்ஷன் காப்பிய காணம். அதான் அங்கருக்கற ஃபைல்ல இருக்கான்னு பாக்கணும். பாத்துட்டு அப்புறமா ஃபோன் பண்ணுங்க.' என இணைப்பு துண்டிக்கப்பட சரி என்று அவருடைய கோப்பை எடுக்கச் செய்தேன்.

சாதாரணமாக அலுவலகத்தில் பணியாற்றுபவர்களின் பெயரில் இருக்கும் கோப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுப்பு சாங்ஷன்கள், கடன் விபரங்கள், வருடாந்த ஊதிய உயர்வு கடிதங்கள் ஆகியவை மட்டுமே இருக்கும். ஆகவே கோப்புகள் சிறியதாகவே இருக்கும். அதிகம் போனால் பத்திலிருந்து இருபது தாள்கள் அடங்கிய கோப்பாகவே இருக்கும்.

ஆனால் முந்தைய மேலாளருடைய கோப்பு அசாதாரண அளவுக்கு பெரிதாக இருந்ததைக் கண்டு அதிசயித்தேன். இருப்பினும் அதைக் கொண்டு வந்த ஊழியரிடம் ஒன்றும் கேட்காமல் அதை வாங்கி லேசாக புரட்டினேன். அதில் அவர் சம்பந்தப்பட்ட கடிதங்களுடன் அலுவலக சம்பந்தப்பட்ட பல கடிதங்களும் இருப்பதைப் பார்த்தேன். சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது அவரிடமிருந்து பெறப்படும் கடிதங்கள் எல்லாமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பெயரில் பராமரிக்கப்படும் கோப்புகளில் ஃபைல் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் அவருடைய கோப்பில் இதுபோன்ற பல கடிதங்களும் இருந்தது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே அதை அலுலகத்தில் வைத்து பரிசீலிப்பதால் என்னுடைய மற்ற அலுவல்கள் பாதிக்கப்படலாம் என்று நினைத்து அதை என்னுடைய கைப்பெட்டியில் வைத்தேன், வீட்டில் இரவு உறங்கச் செல்லும் முன் பார்க்கலாம் என்ற நினைப்பில்.

அன்று இரவு அமர்ந்து அவருடைய கோப்பிலிருந்த அவருக்கு சம்பந்தமில்லாத கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசிக்க துவங்கினேன். அதற்கே இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. அதன் முடிவில் என்னுடைய முந்தைய மேலாளரைப் பற்றிய பல ரகசியங்கள் எனக்கு தெரிய வந்தன.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு புதிராகவே இருந்தது. இத்தனை முன்யோசனையுடன் இத்தகைய கடிதங்களை தன்னுடைய கோப்பில் வைத்த மனிதர் அதை எப்படி விட்டுவிட்டுப் போனார்? அவர் மாற்றலாகிச் செல்கையில் தன் கையோடு கொண்டு சென்றிருக்கலாமே. அல்லது குறைந்தபட்சம் இத்தகைய கடிதங்களை தன் கையோடு கொண்டு சென்றிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?

இதுவும் இத்தகையோருடைய பலவீனம் எனலாம். அதாவது தன்னுடைய செயல்பாடுகளில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாது என்ற எண்ணம். தனக்கிருக்கும் புத்திசாலித்தனம் மற்றெவருக்கும் இருக்காது என்ற எண்ணம்! அல்லது வேண்டுமென்றால் கண்டுபிடியுங்களேன் என்கிற ஒரு ஆணவம்!

அவருக்கு சம்பந்தமில்லாத கடிதங்களை நீக்கிவிட்டு என்னுடைய தலைமையக அதிகாரி குறிப்பிட்ட தியதிகளுக்கான விடுப்பு சாங்ஷன் உள்ளதா என தேடிப்பார்த்தேன். குறிப்பிட்ட தியதிகளுக்கு விடுப்பு கோரி என்னுடைய முந்தைய மேலாளர் தலைமையகத்திற்கு அனுப்பியிருந்த விண்ணப்பத்தின் நகல் மட்டும் இருந்தது. அத்துடன் அவர் அந்த ஆண்டிலும் அதற்கு பிந்தைய ஆண்டிலும் அதாவது அவர் மாற்றலாகிச் செல்லும் வரை எடுத்திருந்த ஓரிரு விடுப்புகளுக்கான தலைமையக சாங்ஷன் கடிதங்களும் இருந்தன.

இதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதாக நினைத்தேன். சாதாரணமாக விடுப்பு கோரி அனுப்பும் விண்ணப்பங்களுக்கு நகல் எடுத்து வைக்கும் பழக்கம் எனக்கு மட்டுமல்ல மற்றெந்த மேலாளருக்கும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஏனெனில் நாம் அனுப்பும் விண்ணப்பத்தின் விவரங்களை அதற்கன வைக்கப்பட்டுள்ள விடுப்பு புத்தகத்தில் (Leave Register) பதிந்தப் பிறகே விண்ணப்பம் தலைமையகத்திற்கு அனுப்புவோம். அப்படியிருக்க இக்குறிப்பிட்ட தியதிக்குண்டான விண்ணப்பம் மட்டும் எதற்காக கோப்பில் வைத்துள்ளார் என்று நினைத்தேன். ஆனால் அதைக் குறித்து நேரத்தை வீணாக்க விருப்பமில்லாமல் கோப்பை மூடி வைத்துவிட்டு உறங்கச் சென்றேன்.

ஆனால் உறக்கம் வந்தபாடில்லை...

தொடரும்