27 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 30

வங்கி மேலாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை பலவகையில் வகைப்படுத்துவது வழக்கம்.

ஒரு கிளையிலுள்ள எல்லா வாடிக்கையாளர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது வங்கிகளின் முக்கியமான நியதிகளுள் ஒன்று என்றாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம்.

ஒரு கோடி ரூபாய்வரை வரவு செலவு வைத்திருக்கும் வாடிக்கையாளரையும் சில ஆயிரங்கள் வரவு செலவு வைத்திருக்கும் வாடிக்கையாளரையும் சமமாக பாவிக்க முடியாதல்லவா? முன்னவரும் பின்னவரும் ஒரே நேரத்தில் கிளைக்கு வருகைதரும் நேரத்தில் முன்னவர் நேரே மேலாளரையும் பின்னவர் குமாஸ்தாக்களையும் அணுகுவது வாடிக்கை. இது எங்களுடைய வங்கி மட்டுமல்லாமல் எல்லா வங்கிகளுக்குமே பொருந்தும்.

இறைவனை தரிசிப்பவதற்கே வசதி படைத்தவர்களுக்கும் பதவியிலுள்ளவர்களுக்கும் தனிச்சலுகைகள் காட்டப்படும் இந்த கலியுகத்தில் வங்கி மேலாளரை குறை சொல்வதில் அர்த்தமில்லையே.

அப்போதெல்லாம் ஒரு கோடி ரூபாய் வரவு செலவு வைத்திருக்கும் வாடிக்கையாளரை தங்கள் வசம் இழுக்க பல வங்கிகளும் தங்களுக்குள் போட்டி போடுவதில் முனைப்பாயிருந்ததால் எல்லா வங்கிகளுமே அவர்களுக்கு ஒரு பிரத்தியேக வசதிகளைச் செய்துக்கொடுப்பதுண்டு. இப்போதும் அந்த சலுகை இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை ஒரு கோடி வரம்பு என்பது வேண்டுமானால் உயர்த்தப்பட்டிருக்கலாம்.

மேலும் வங்கிகளில் முதலீடு அல்லது சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் (Depositors), வங்கிகளிலிருந்து கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் (Borrowers) எனவும் வாடிக்கையாளர்கள் வகைப்படுத்தப்படிருப்பர்.

கிளை அமைந்திருக்கும் இடம் (place of business), கிளையிலுள்ள வணிகத்தின் வகை (type of business) ஆகியவற்றைப் பொருத்து இவர்களுக்கு கிளை மேலாளர்கள் வழங்கும் சேவையும் அமைந்திருக்கும்.

உதாரணத்திற்கு சென்னையில் குடியிருப்புகள் அதிகம் அமைந்துள்ள கோடம்பாக்கம், அண்ணாநகர், பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிளைகள் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுண்டு. அத்தகைய கிளைகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருப்பர்.

மாறாக சென்னை பாரீஸ் கார்னர் பகுதியிலுள்ள லிங்கிச் செட்டித்தெரு மற்றும் அதனையொட்டியுள்ள கிளைச் சாலைகள் அல்லது அண்ணா சாலை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிளைகளில் கடன் பெற்று வணிகம் நடத்திவரும் நிறுவனங்களின் கணக்குகளே அதிகம் இருக்கும்.

ஆகவே இத்தகைய கிளைகளுக்கு மேலாளர்களாக பதவியில் அமர்த்தப்படும் மேலாளர்களை தெரிந்தெடுக்கும் நேரத்தில் வங்கி உயர் அதிகார்கள் இதை கவனத்தில் கொள்வது வழக்கம்.

என்னுடைய முந்தைய மேலாளர் தன்னுடைய பதவிக்காலத்தில் பெரும்பான்மையான காலத்தை நான் மேற்கூறிய இருவகைக் கிளைகளில் முந்தைய வகையைச் சார்ந்த கிளைகளிலேயே பணியாற்றியிருந்தார். அதுவும் அவருடைய சொந்த மாநிலத்தில்.

சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது மிகவும் எளிது. கிளையுடனான அவர்களுடைய உறவின் அளவை (size of the deposits) முன்பே அறிந்திருந்தால் மட்டும் போதும். அதற்கேற்றாற்போல் அவர்களை வரவேற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமைக் காண்பித்து முடித்துக் கொடுப்பதுடன் அவர்களைப் பற்றியும் அவர்களுடைய குடும்பத்தினரைப் பற்றியும் சம்பிரதாயமாக விசாரித்து புன்னகையுடன் வழியனுப்பி வைத்துவிட்டால் போதும். கிளைக்குள் நுழையும்போதே புன்னகையுடன் 'How are you Sir?' அல்லது 'Very good morning Sir' என்பதிலும் விடைபெறுகையில், 'Good Day Sir' அல்லது 'All the very best Sir' என்றாலே அவர்கள் குளிர்ந்து போவதை பலநேரங்களில் பார்த்திருக்கிறேன்.

ஆனால் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் அப்படியல்ல. அவர்களுக்கு மேலாளருடைய புன்னகையிலோ அல்லது அவருடைய அறைக்குள் சென்று அமர்ந்து குசலம் விசாரிப்பதிலோ அக்கறையிருக்காது. தங்களுக்கு வங்கியிலிருந்து எவ்வளவு கடன் கிடைக்கும், அதற்கு அவர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதில் தான் அவர்களுடைய கவனம் முழுவதும் செல்லும்.

இத்தகைய வாடிக்கையாளர்களையும் வகைப்படுத்தி வைத்திருப்போம்.

1. Disciplined Borrowers: தங்களுடைய வணிகத்தை நடத்திச் செல்ல எவ்வளவு கடன் தேவை. அதில் தங்களுடைய பங்கு என்ன (Margin) என்பதில் மிகவும் தெளிவாய் இருப்பர். தங்களுடைய தேவையை தெளிவாக தங்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிடுவதுடன் அதற்கு தேவையான ஜாமீன், செக்யூரிட்டியாக என்னவெல்லம் அளிக்க முடியும், எத்தனை வருடங்களில் திருப்பிச் செலுத்த முடியும், தாங்கள் எதிர்பார்க்கும் வட்டி விகிதம் என்ன என்பதையெல்லம் எவ்வித ஐயப்பாட்டிற்கு இடமளிக்காமல் குறிப்பிடுவதுண்டு. இத்தகைய வாடிக்கையாளர்கள் கடன் தொகைப் பெற்றதற்கு பிறகும் அதில் வரவு செலவு வைப்பதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் கூட வங்கி நியதிகளுக்கு கட்டுப்பட்டே நடந்துக்கொள்வர்.

2. Clever Borrowers: இவர்கள் எத்தர்கள் அல்ல. ஆனால் கடன் வழங்குவதில் வங்கி மேலாளரின் அதிகாரம் என்ன, அதாவது மேலதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் அவரால் எவ்வளவு கடன் வழங்க முடியும் என்பதை முதலில் கேட்டு தெரிந்து வைத்திருப்பார்கள். அதைக் கடந்து மேலதிகாரிகளுடைய பார்வைக்கு அனுப்பி வைக்கும் கடன்கள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதையும் கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களுடைய தேவையை கணிப்பிடுவார்கள். 'சார் ஒங்களால இப்போ எவ்வளவு சாங்ஷன் பண்ண முடியுமோ செய்ங்க சார். கூட தேவைப்படறப்போ ஒங்க ஜோனல் ஆஃபீசுக்கு அனுப்பலாம்.' என்பார்கள். அதாவது தங்களுடைய வணிகத்திற்கு எவ்வளவு கடன் தேவை என்பதை விட உடனடியாக எவ்வளவ கிடைக்குமோ அதைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாயிருப்பார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று ஒரு மேலாளர் வாடிக்கையாளருடைய நெடுங்கால தேவையை சரிவர கணிக்காமல் கடன் வழங்கிவிட்டால் அதற்குப்பிறகு அவருடைய நச்சரிப்புக்கு ஆளாக வேண்டியதுதான். 'சார் நா எதிர்பார்த்ததுக்கு மேல பிசினஸ் டெவலப் ஆயிருச்சி அதனால இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்..' என்று கடன் வழங்கிய அடுத்த மாதத்திலிருந்தே நச்சரிப்பு துவங்கிவிடும். 'சார் நீங்க மனசு வச்சா முடியும் சார். எனக்கு வேண்டியத குடுத்துட்டு நீங்க ஒங்க ஜோனல் ஆஃபீஸ்லருந்து அப்ரூவல் வாங்கிக்குங்களேன்.' என்று நமக்கே சொல்லித்தருவார்கள். வரவு செலவு செய்வதிலும் ஒரு ஒழுங்கு இருக்காது. கணக்கிலிருந்து எடுக்கக்கூடிய தொகைக்கு மேலாக காசோலைகளை வழங்கிவிட்டு அது கிளைக்கு வரும் நேரத்தில் மேலாளர் முன் வந்து நிற்பார்கள். 'சார் இந்த ஒரு நேரம் மட்டும் பாஸ் பண்ணிருங்க. இன்னைக்குள்ள பணத்த கட்டிடறேன்.' அவர்கள் 'இன்னைக்குள்ள' என்பது இரண்டு நாட்கள் அல்லது சில சமயங்களில் ஒரு வாரமாகக் கூட இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் அப்படித்தான் கெடு முடிந்த பிறகும், 'சார் இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் டைம் குடுங்களேன். பீனல் வட்டி வேணும்னாலும் குடுத்துடறேன்.' என்பார்கள் சரி என்று தவணையை நீட்டி கொடுத்தால் இறுதியில் அசலை மட்டும் செலுத்திவிட்டு 'என்ன சார் இது அநியாயம் பீனல் வட்டின்னு இப்படி டெபிட் பண்ணி வச்சிருக்கீங்க? மொதல்லயே சொல்லியிருந்தா ட்யூ டேட்லயே கட்டித் தொலைச்சிருப்பேனே.' என்று முன்னுக்குப் புரனாக பேசுவார்கள். ஆனால் இறுதியில் அழுதுக்கொண்டே முழுத்தொகையையும் செலுத்தி விடுவார்கள். இறுதியில் வெறுப்புடன் 'ஒங்க சகவாசமே வேணாம் சார்' என்று செல்வார்கள். ஆனால் அடுத்த அல்லது அதற்கடுத்த மாசமே மீண்டும் வந்து ஒரு அசட்டுப் புன்னகையுடன் நிற்பார்கள். எதற்கு? கடனுக்குத்தான்!

3. Cunning Borrowers: இவர்களும் எத்தர்கள் அல்ல. ஆனால் நேர்மையற்றவர்கள். குறுக்கு வழியிலேயே சிந்திப்பவர்கள். சரியான வணிகம் இருக்காது. அதாவது வங்கிகள் கடன் வழங்கக்கூடிய அளவுக்கு வலுவுள்ளதாக இருக்காது. அவர்களுக்கு என்ன அல்லது எவ்வளவு தேவை என்பது அவர்களுக்கே தெரியாததுபோல், 'சார் நீங்களே ஒரு எஸ்டிமேட் போட்டு குடுங்களேன் சார். ஒங்களுக்கு தெரியாததா?' என்று வந்து நிற்பார்கள். அவர்களுடைய வணிக சம்பந்தப்பட்ட கோப்புகள், வரவு செலவு புத்தகங்கள் ஆகியவற்றைக் கேட்டால், 'என்ன சார், அதெல்லாம் வச்சாத்தான் சேல்ஸ் டாக்ஸ்காரங்களோட தொல்லையில மாட்டிக்கறமே. அதவிட டர்னோவர் ஜாஸ்திதான்னாலும் ரெக்கார்ட் வச்சிக்க பயமாருக்கு சார். நம்ம கணக்குபிள்ளைய வேணும்னா கூட்டிக்கிட்டு வரேன். நீங்களே கேட்டுக்குங்க.' என்பார்கள். அத்துடன் நில்லாமல், 'நீங்க குடுக்கறதுல எத்தன பர்சண்ட் ஒங்களுக்கு ஹி, ஹி.. அதான் சார்..' என்று சொல்லவந்ததை குறிப்பால் உணர்த்துவார்கள். எந்த மேலாளரிடம் எப்படி பேசினால் காரியம் கைகூடும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்து அதற்கேற்ப நடந்துக்கொள்வதில் இவர்கள் படு சமர்த்தர்கள்! மேலாளரை முதன் முதல் சந்திக்கச் செல்லும் நேரத்திலேயே அவருக்கு 'கொடுக்க' வேண்டியதை உறையிலிட்டு கொண்டு சென்று அதை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்துவிடுவார்கள். அதை வாங்கிக்கொண்டுவிட்டால் அந்த மேலாளர் தீர்ந்தார். அதைச் சொல்லிச் சொல்லியே அவரிடமிருந்து கறக்க வேண்டியதை கறந்துவிடுவார்கள். இத்தகைய வாடிக்கையாளர்களும் கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவார்கள். ஆனால் காலங்கடந்து மேலாளரை நடையாய் நடக்க வைத்ததற்குப் பிறகு. மேலாளர் வங்கி நியதிகளைச் சுட்டிக்காட்டி மிரட்டினால்.. 'என்ன சார் என்னமோ ரூல் படி கடன் குடுத்தா மாதிரி பேசறீங்க. வாங்க வேண்டியத வாங்கிக்கிட்டுத்தான குடுத்தீங்க? போங்க.. எப்ப முடியுமோ அப்ப கட்டறேன். ஏமாத்த மாட்டேன் சார்.' என்பார்கள் பதிலுக்கு..

சரி.. முந்தைய மேலாளர பத்தி சொல்றேன்னுட்டு வாடிக்கையாளர்கள பத்தி சொல்லிக்கிட்டே போறீங்களே என்று கேட்பது தெரிகிறது..

வாடிக்கையாளர்களில் சில வகைகளைப் பற்றி சொல்லி விட்டேன்.. இன்னும் சிலவகை வாடிக்கையாளர்களைப் பற்றி நாளை சொல்கிறேன்.

அத்துடன் நில்லாமல் வாடிக்கையாளர்களைப் போலவே மேலாளர்களிலும் பலவகைப் பட்டவர்கள் உள்ளனர். அதைப்பற்றியும் சொல்கிறேன்..

பிறகு புரியும் நான் என்ன சொல்ல வந்தேன் என்பது...

தொடரும்

10 comments:

siva said...

"பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்.."
-கவிஞர் கண்ணதாசன்


சிவஞானம்ஜி

Krishna said...

என்ன அருமையான பாடம்! அட்டகாசம் சார். தெரிந்த விஷயங்கள் கூட, வரிசைப்படுத்தும் போது புது பரிமாணம் காண்பிப்பது போல, உங்கள் வகைப்படுத்துதல் பிரமாதம் சார்.

அது சரி, ஒருத்தர் என்னமோ சொல்றாரே, என்னன்னு பாருங்க....

ஒரு மிகத்தேர்ந்த ஆசிரியர்/எழுத்தாளர்/மேலாண்மையாளர்(!) சேர்ந்து செய்த கலவை நான் - இப்படிக்கு டிபிஆர்....

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

அடுத்த வரிய விட்டுட்டீங்களே

பார்வைகள் பலவிதம்..

இதுவும் ஒரு முக்கியமான விஷயம்..

ஒருத்தர பல கோணங்கள்ல பாக்கலாம் இல்லையா.. எனக்கு இன்டிசிப்ளினிண்ட் கஸ்டமரா தெரியற ஒருத்தர் இன்னொரு மேனேஜருக்கு டிசிப்ளினிண்டா தெரிய வாய்ப்பிருக்கே..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா,

அது சரி, ஒருத்தர் என்னமோ சொல்றாரே, என்னன்னு பாருங்க....//

யாரு ஜியா! அவருக்கென்ன வாத்தியார்.. அப்படித்தான் எதையாச்சும் சொல்லிக்கிட்டிருப்பார்.

ஒரு மிகத்தேர்ந்த ஆசிரியர்/எழுத்தாளர்/மேலாண்மையாளர்(!) சேர்ந்து செய்த கலவை நான் - இப்படிக்கு டிபிஆர்.... //

இப்படிக்கு கிருஷ்ணானும்னு கூட போட்டுருங்க..

G.Ragavan said...

பெங்களூர்ல இது போல personalized banks இருக்கு. சென்னையிலும் இருக்கனும். அங்க அக்கவுண்ட் தொடங்குனப்புறம் ரொம்ப நல்லாயிருக்கு. போனா வந்தா மரியாதையா நடத்துறாங்க. மத்த பேங்குகள்ல பொதுவா வள்ளுன்னு விழுவாங்க. இங்க அப்படியில்ல. நீங்க சொல்லும் போதுதான் சூச்சுமம் புரியுது.

இதென்னங்க...வகைவகையா பிரிச்சுச் சொல்றீங்க. பேசாம நீங்க இது தொடர்பா ஒரு புத்தகம் போடலாம்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

பெங்களூர்ல இது போல personalized banks இருக்கு. சென்னையிலும் இருக்கனும். அங்க அக்கவுண்ட் தொடங்குனப்புறம் ரொம்ப நல்லாயிருக்கு. போனா வந்தா மரியாதையா நடத்துறாங்க. மத்த பேங்குகள்ல பொதுவா வள்ளுன்னு விழுவாங்க. இங்க அப்படியில்ல. நீங்க சொல்லும் போதுதான் சூச்சுமம் புரியுது.//

இப்ப இதுதான் ஃபேஷன்.. அப்பவும் இருந்தது ஆனா அத சரியா விளம்பரப்படுத்தலை.. நான் இந்த மாதிரி கிளைகள்லயும் இருந்துருக்கேன்.. பிசினஸ் பண்றது ரொம்ப ஈசி.. டென்ஷனும் ஜாஸ்தி இருக்காது..

இதென்னங்க...வகைவகையா பிரிச்சுச் சொல்றீங்க. பேசாம நீங்க இது தொடர்பா ஒரு புத்தகம் போடலாம்.//

புத்தகமா? அத ஏன் கேக்கறீங்க.. ஒரு பதிப்பகத்தார் அவங்களாவே வந்து ஒரு மேட்டர எழுதிதாங்க புத்தகமா போடலாம்னாங்க. எழுதி குடுத்து சுமார் ரெண்டு மாசம் ஆகுது.. மெயிலுக்கு மேல மெயிலா அனுப்பனதுதான் மிச்சம்..

என்னோட பொறுமையே போயிரும் போலருக்கு..

Sivaprakasam said...

<---
ஒரு பதிப்பகத்தார் அவங்களாவே வந்து ஒரு மேட்டர எழுதிதாங்க புத்தகமா போடலாம்னாங்க. எழுதி குடுத்து சுமார் ரெண்டு மாசம் ஆகுது.. மெயிலுக்கு மேல மெயிலா அனுப்பனதுதான் மிச்சம்..
--->
நீங்க அதுக்குப்(பதிப்பிக்கறதுக்கு) பணம் கொடுத்தீங்களா? இல்லையா? அதான்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவா,

நீங்க அதுக்குப்(பதிப்பிக்கறதுக்கு) பணம் கொடுத்தீங்களா? இல்லையா? அதான் //

என்னது நான் குடுக்கறதா? அப்படீன்னா நா இதுவரைக்கும் எழுதியிருக்கற எல்லாத்தையுமே புத்தகமா கொண்டு வந்திருப்பேனே..

அப்படி பதிப்பிக்கலேன்னு யார் அழுதா?

sivasankar said...

:) வணக்கம் ஐயா :)
நலமா? தங்களின் கட்டுரை அஜீவன் ரேடியோவில் கேட்டேன், இந்த வாரத்திற்கான தொகுப்பில் (25-02-2007), தங்களின் நினைவு உடனே வரவே ஓடிவந்துவிட்டேன் :) வாணி அவர்கள் படித்து வலையேற்றியிருக்கின்றார்கள், http://radio.ajeevan.com, கேட்டு மகிழுங்கள் ஐயா :) வணக்கம், ஸ்ரீஷிவ்...:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஸ்ரீஷிவ்,

மிக்க நன்றிங்க..

அஜீவனுக்கும் நன்றி.