26 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 29

அடுத்த நாள் வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட இடங்களில் கையொப்பமிடும் வேலையை என்னுடைய உதவி மேலாளர் என்னுடைய மேற்பார்வையில் செய்வார். இதற்கும் காரணங்கள் உண்டு.

ஒன்று. சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாளில் நான் ஊரிலேயே இல்லை என்று ஆதாரத்துடன் வாதாடுவார்கள்.

இரண்டாவது சில சமயங்களில் அதாவது நான் கடனே வாங்கவில்லை என்று வாடிக்கையாளர் வாதிடும் சமயங்களில் கடன் வழங்கிய மேலாளரைத் தவிர அதே கிளையிலுள்ள வேறொரு அதிகாரியும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை கோர்ட்டில் அடையாளம் காட்ட வேண்டியிருக்கும்.

ஆனால் முந்தைய மேலாளர் ஏனோ ஆவணங்களை தயாரிப்பதிலிருந்து வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெறுவது வரை எல்லாவற்றையும் அவரே செய்திருந்தார். கிளையிலிருந்த மற்றொரு அதிகாரியுடைய ஈடுபாடு இதில் இருந்திருந்தால் ஆவணத்தில் நான் கண்ட தவறுகளை தவிர்த்திருக்க முடிந்திருக்கும். அத்துடன் அவரே கைப்பட தயாரித்திருந்ததால் வேறொருவரைக் கொண்டு அவற்றை சரிசெய்யவும் இயலாது.

இது கடன் பத்திரங்களில் இருந்த தவறுகள்.

கடனுக்கு ஈடாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களிலும் சில குளறுபடிகள் இருந்தன.

முந்தைய மேலாளர் நல்ல திறமைசாலி என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தன் ஒருவரால் மட்டுமே சரியாக செய்ய முடியும் என்ற எண்ணம் அவருக்கிருந்ததை அவருடைய செயல்பாடுகளிலிருந்து என்னால் உணர முடிந்தது. அவர் வழங்கியிருந்த பல கடன்களுக்குண்டான பத்திரங்களிலும் ஆங்காங்கே சிறு, சிறு தவறுகள் இருந்தன. இத்தகைய தவறுகள் கடன் வசூலிப்பதை பாதிக்க வாய்ப்பில்லையென்றாலும் அவற்றுள் ஒரு சில கடன்கள் வசூலாகமல் நின்றுபோய் வழக்காடு மன்றம் வழியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிவந்தால் பத்திரங்களிலுள்ள சிறு தவறுகளும் வழக்கு தள்ளுபடியாக காரணமாக இருந்துவிடக்கூடும். சில நீதிபதிகள் இத்தகைய தவறுகளை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உபயோகிப்பதையும் நான் என்னுடைய அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வங்கி அதிகாரிகள் விஷய ஞானம் உள்ளவர்களாயிருப்பதுடன் இதுபோன்ற தவறுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது என்ற எண்ணம் உடைய நீதிபதிகள் இதுபோன்ற காரணங்களுக்காக வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதுடன் அதற்கு காரணமான வங்கி அதிகாரிகளிடமிருந்தே நிலுவையில் நிற்கும் தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுவிடுவதுண்டு!

ஆகவேதான் கடன் பத்திரங்களை தயாரிப்பதிலும் அவற்றை கடன் தொகை முழுவதும் வசூலிக்கப்படும் வரை பாதுகாப்பதற்குமென பிரத்தியேக பயிற்சி வகுப்புகள் எங்களுடைய பயிற்சிக் கல்லூரியில் நடத்தப்படுவதுண்டு.

இருப்பினும் இத்தகைய தவறுகள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் எதிலும் அவசரம் என்ற போக்கும் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் மீது நம்பிக்கையில்லாத்தனமும்தான்.

இதில் வேறொரு சிக்கலும் இருப்பதை பெரும்பான்மையான மேலாளர்கள் உணர்வதில்லை. இத்தகைய பணிகளில் தங்களை ஈடுபடுத்தாத மேலாளர்கள் தவறுகள் இழைத்துவிடும்போது அவர்களுடைய உதவியாளர்கள் 'எங்களையெல்லாம் இதுல கலந்துக்கவே மாட்டார் சார். அதனால எங்களுக்கு ஒன்னும் தெரியாது.' என்று நழுவிவிடுவார்கள்.

அப்படித்தான் நடந்தது அந்த மேலாளருடைய விஷயத்திலும் நடந்தது. தவறுகளை திருத்துவது இருக்கட்டும். கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்களை கண்டுபிடிப்பதிலேயே சிக்கல் இருந்தது. பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் கடன் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு மட்டுமே வங்கிக்கு வருவார்கள். கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தும் வாடிக்கையாளர்களும் கூட வங்கி அலுவலகத்திற்கு நேரில் வந்து தவணையை செலுத்துவது மிகவும் அபூர்வம். அதுவும் நிறுவனங்களைப் பொறுத்தவரை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே வங்கிக்கு வந்து செல்வது வழக்கம். சில சமயங்களில் நிறுவனத்தின் சார்பாக பத்திரங்களில் கையொப்பமிடும் இயக்குனர்கள் அல்லது உயர் அதிகாரிகள் வங்கி மேலாளர்களை அவர்களுடைய அலுவலகத்திற்கே வந்து கையொப்பம் பெற்று செல்லுமாரு நிர்பந்திப்பதும் உண்டு. கடன் வழங்க நீ, நான் என்று போட்டிப் போடும் இன்றைய வங்கி உலகில் அதுவும் மும்பைப் போன்ற நகரங்களில் இது மிகவும் சர்வ சாதாரணம்.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கடன் பத்திரத்தை தங்களுடைய கைப்பட தயாரிக்கும்போது அதன் நம்பகத்தன்மையே விவாதப் பொருளாக மாறிவிடும் சூழலில் பத்திரத்தைத் தயாரித்த வங்கி அதிகாரியே நேரில் வந்து சாட்சியம் அளிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக நேரிடுவதுண்டு. அந்நேரத்தில் அதை தன் கைப்பட தயாரித்த அதிகாரி ஒருவேளை வெகுதொலைவிலுள்ள கிளைக்கோ அல்லது அலுவலகத்திற்கோ மாற்றலாகிச் சென்றிருப்பார். இருப்பினும் வழக்கில் அவருடைய சாட்சியம் தேவைப்படும் சமயங்களில் அவர் அங்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டி வரும். பத்திரங்கள் தயாரித்ததில் தவறுகள் ஏதும் இல்லாதிருக்கும் பட்சத்தில் வங்கியே சம்பந்தப்பட்ட மேலாளருடைய பயணச் செலவு மற்றும் தங்கும் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளும். இல்லையென்றால் தவறிழைத்த அதிகாரியே தன்னுடைய சொந்த செலவில் பயணம் செய்து சாட்சியமளிக்க வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் முன்கூட்டியே ஆலோசித்து செயல்படுவதற்கு அனுபவம் தேவை. அது இல்லாதிருக்கும் பட்சத்தில் என்னுடைய முந்தைய மேலாளரைப் போன்று சிக்கலில் சிக்கி அவதிப்பட வேண்டியதுதான்!

அன்று மாலை அலுவலக நேரம் முடிந்த பிறகும் என்னுடைய வட்டார மேலாளர் என்னுடன் அமர்ந்து கிளையிலிருந்த குறைபாடுகள் இருந்த கடன் பத்திரங்களையெல்லாம் முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன், 'ஒங்களுக்கு நா சொல்லாம கொள்ளாம வந்தது வருத்தமாயிருந்தாலும் எனக்கு என்னவோ நான் இன்னைக்கி வந்தது ஒங்களுக்கும் நல்லதாத்தான் இருக்கும்னு தோனுது. என்ன சொல்றீங்க?' என்றார்.

'உண்மைதான் சார். இல்லன்னா நா ஏதோ வேணும்னே அவர் மேல பழிபோடறதா நம்ம எச்.ஓவுலருக்கறவங்க நினைக்க வாய்ப்பிருக்கு.' என்ற நான் தொடர்ந்து என்னெ நல்லா தெரிஞ்ச நீங்களே அப்படித்தான சார் நினைச்சீங்க?' என்று லேசாக ஒரு 'உள்குத்து' வைக்க அவர் சிரித்தார்.
'Well said tbr, I deserve that.'

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு. 'இதற்காகவா அவரை இங்கிருந்து மாற்றியிருப்பார்கள்?' என்றார்.

நானும் 'அதானே' என்று நினைத்தேன். ஒருவேளை நம் கண்களுக்கு புலப்படாத தவறுகள் வேறு ஏதேனும் இருக்குமோ? அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது என்று ஓடியது என்னுடைய சிந்தனை. 'எனக்கும் அதுதான் சார் டவுட்டா இருக்கு. அது தெரியவரைக்கும் டென்ஷந்தான் சார். நீங்களாவது யார்கிட்டயாவது கேளுங்களேன்.' என்று அவரிடம் கேட்டேன்.

அவரும், 'Let me try tbr..' என்று உறுதியளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் என்னுடைய தலைமையக அதிகாரிகளாலும் அதை தெளிவாகக் கூற முடியவில்லை என்று அடுத்த நாள் என்னிடம் அவர் கூறியபோது என்னால் நம்பமுடியவில்லை. யாரோ எதையோ நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாமாகவே ஆராய்ந்து அது என்னவென்று தெரிந்துக்கொள்வது என முடிவு செய்தேன்.

கடந்த இரு வார காலங்களில் என்னால் இயன்றவரை முந்தைய மேலாளருடைய பணிக்காலத்தில் நடந்தவற்றையெல்லாம் ஆய்வு செய்திருந்ததால் என்னுடைய சந்தேகக் கண்களிலிருந்து அது தப்பிக்க வாய்ப்பில்லையென்றே நினைத்தேன்.

ஆனால் அடுத்த சில தினங்களில் நான் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து அது வெளிப்பட்டதும் முந்தைய மேலாளரை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

ஒரு வாடிக்கையாளருக்கு உதவி செய்வதில் தவறில்லை. ஆனால் அதற்கும் ஒரு வழிமுறை உண்டல்லவா? அதை எப்படி அவர் மறந்துபோனார் என்று வியந்தேன்.

அவருடைய செயலுக்கு அவருக்கு கிடைத்த தண்டனை லேசானதோ என்றும் தோன்றியது..

ஆனால் சில மாதங்கள் கழித்துத்தான் தெரிந்தது.. அவர் மாற்றபட்டது அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கத்தான் என்பது..

அவர் உண்மையிலேயே அப்பாவிதானா என்ற சந்தேகமும் எழுந்தது.

தொடரும்..

10 comments:

sivagnanamji(#16342789) said...

தி.பா வை அவசரப்பட்டு முடித்துவிடாதீர்கள்.
சரியாக 'எடிட்' செய்தால் "வங்கிமேலாண்மை"(Bank Management)பற்றிய நல்ல புத்தகமாக இருக்கும். வங்கித்துறை றெக்கை கட்டி பறக்கும் இக்காலத்தில் இது பலருக்கும் பயன்படும்(Ofcourse including TBR)

சிவஞானம்ஜி

Krishna said...

ஆக, சந்தேகப்படறதே வாழ்க்கையா/வேலையா இருந்திருக்கு உங்களுக்கு...mistrust the obvious அப்படின்னு சொல்லுவாங்க...உங்க வேலையில, mistrust everything அப்படின்னு இருக்கணும் போல...

சரி சார், ஒரு கேள்வி. உங்களுடையது ஒரு தனியார் வங்கி, என்பதால், மேலாளர்களுக்கு கூடுதல் தலைவலியோ...அதாவது, இதே ஒரு அரசுடைமை வங்கி என்றால், மேலாளர் தன் தவறுக்குக் குறைவான தண்டனை/தலைவலியோடு தப்பி விடுவாரோ?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

முடித்துவிடாதீர்கள்.
சரியாக 'எடிட்' செய்தால் "வங்கிமேலாண்மை"(Bank Management)பற்றிய நல்ல புத்தகமாக இருக்கும். வங்கித்துறை றெக்கை கட்டி பறக்கும் இக்காலத்தில் இது பலருக்கும் பயன்படும்(Ofcourse including TBR)//

அப்படியா சொல்றீங்க?

அந்த கடைசி லைன்.. நல்ல பஞ்ச்.. ஜி யோட ட்ரேட் மார்க்..:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா,

சரி சார், ஒரு கேள்வி. உங்களுடையது ஒரு தனியார் வங்கி, என்பதால், மேலாளர்களுக்கு கூடுதல் தலைவலியோ...அதாவது, இதே ஒரு அரசுடைமை வங்கி என்றால், மேலாளர் தன் தவறுக்குக் குறைவான தண்டனை/தலைவலியோடு தப்பி விடுவாரோ? //

அதுதான் இல்லை. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும்.

G.Ragavan said...

அப்பாவிக்கும் அடப்பாவிக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். அதுதான் ட. நீங்க சொல்ற நபர் எந்த டவுக்குள்ள விழுந்தாரோ தெரியலையே!

வங்கியில் டாக்குமெண்டுகள் போல மென்பொருள் துறையில் மின்னஞ்சல் அனுப்புவது மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் அனுப்பிய மெயில் நமக்கே எதிராகத் திரும்பவும் வாய்ப்புள்ளது.

இலவசக்கொத்தனார் said...

யார் யார் என்னென்ன செய்யணும் அதை யார் மேற்பார்வை இடணும் அப்படினு விதிமுறைகள் இல்லையா? இன்னைக்கு நாம எல்லாரும் பேசற Four Eyes Principle இந்த மாதிரி பத்திரங்கள் தயாரிக்கிற விஷயங்களில் கிடையாதா?

balarajangeetha said...

// உங்க வேலையில, mistrust everything அப்படின்னு இருக்கணும் போல... //

ஆமாங்க அப்படித்தான். எடுத்துக்காட்டாக, வங்கிக்கு ஒரு காசோலை பணம் எடுக்கப்படவோ / ஒரு கணக்கிலிருந்து அடுத்த கணக்கிற்கு மாற்றப்படவோ / வேறொரு வங்கிமுலமாகவோ வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் காசோலையில் எப்படியாவது ஏதாவது பிழை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது வங்கி ஊழியரின் /அதிகாரியின் பணியாகும். சரியான காரணம் சொல்லியோ / எழுத்துமூலமாகவோ பணம் கொடுக்காது / வங்கியில் உள்ள கணக்கில் பற்று வைக்காது :-))) காசோலையைத் திருப்பி அனுப்புவது இயல்பான நடைமுறைதான்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

அப்பாவிக்கும் அடப்பாவிக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். அதுதான் ட. நீங்க சொல்ற நபர் எந்த டவுக்குள்ள விழுந்தாரோ தெரியலையே!//

அத இன்னமும் என்னால சரியா ஜட்ஜ் பண்ண முடியலன்னா அதான் உண்மை!

வங்கியில் டாக்குமெண்டுகள் போல மென்பொருள் துறையில் மின்னஞ்சல் அனுப்புவது மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் அனுப்பிய மெயில் நமக்கே எதிராகத் திரும்பவும் வாய்ப்புள்ளது. //

கரெக்டா சொன்னீங்க. அதனால வேல போனவங்கக் கூட இருக்காங்க. ஒங்க கம்பெனியில கூட ஒரு ஃப்ரெஷ்ஷர் அனுப்புன மெயில் மேலிடம் வரைக்கும் போயி அவர் வேலையே போயிர்ச்சின்னு கேள்விப்பட்டிருக்கேன்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கொத்தனார்,

யார் யார் என்னென்ன செய்யணும் அதை யார் மேற்பார்வை இடணும் அப்படினு விதிமுறைகள் இல்லையா? இன்னைக்கு நாம எல்லாரும் பேசற Four Eyes Principle இந்த மாதிரி பத்திரங்கள் தயாரிக்கிற விஷயங்களில் கிடையாதா?//

இப்ப மட்டுமில்ல அப்பவும் இருந்துது. ஆனா ஒரு ப்ராஞ்சில மேனேஜர்தான் தலைவர். அவருக்கு மேலருக்கறவர் ஜோனல் மேனேஜர். அவர் டெய்லி பிராஞ்சில நடக்கற விஷயங்கள நேரடியா மேற்பார்வை பார்க்க முடியாதே. அதனால வங்கி நியதிகளை பி.எம் மீறும்போது அத அப்பப்போ தட்டி கேட்க ஆளில்லாம போயிருது. எல்லாமே postmortemதான்..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க பாலா,

அந்தக் காசோலையில் எப்படியாவது ஏதாவது பிழை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது வங்கி ஊழியரின் /அதிகாரியின் பணியாகும். சரியான காரணம் சொல்லியோ / எழுத்துமூலமாகவோ பணம் கொடுக்காது / வங்கியில் உள்ள கணக்கில் பற்று வைக்காது :-))) காசோலையைத் திருப்பி அனுப்புவது இயல்பான நடைமுறைதான். //

இது கொஞ்சம் ஓவர்னாலும் உண்மையில்லாமலில்லை..

நம்ம கிருஷ்ணாவோட கேள்விய நான் மிஸ் பண்ணிட்டேன்..

அதாவது mistrust everything கறத விட mistrust the obviousங்கறதுதான் சரி. இது வங்கி வேலைக்கு மட்டுமல்ல எல்லா வேலைக்கும் பொருந்தும். கண்ணால் காண்பதை நம்பாதே என்பது போல.