21 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 27

நான் மதுரை கிளையிலிருந்து மாற்றப்பட்டது நான் எதிர்பாராதது. அதுவும் வட்டார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதை அறிந்ததும் மிகவும் சோர்ந்துபோயிருந்தேன்.

ஆனால் வட்டார அலுவலகத்தில் நான் இருந்த ஒருவருட காலம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தேன். சொல்லப் போனால் அதை நான் வெகுவாக விரும்பத் துவங்கிய சமயத்தில்தான் மீண்டும் என்னுடைய விருப்பத்தை கேட்டறியாமலே என்னை அங்கிருந்து மாற்றி மீண்டும் கிளை மேலாளர் பதவியை அளித்தனர்.

என்னுடைய திடீர் மாற்றத்திற்கான உத்தரவு தபாலில் வந்து சேர்ந்தது. சாதாரணமாக இத்தகைய மாற்றங்கள் குறைந்த பட்சம் ஒரு வார காலத்திற்கு முன்பாக தொலைபேசியில் தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் என்ன காரணத்தாலோ என்னுடைய தலைமையகம் நான் பணியாற்றி வந்திருந்த வட்டார மேலாளருக்குக் கூட விபரத்தை தெரிவிக்காமல் இருந்துவிட்டனர். ஆகவே எனக்கும் அதில் ஏதோ பங்கு இருக்கிறது என்று நினைத்து உத்தரவு வந்து சேர்ந்து ஒரு வார காலமாகியும் என்னை விடுவிக்காமல் இருந்தார் என்னுடைய வட்டார மேலாளர்.

இதை என்னுடைய சீஃப் மேலாளர் வழியாக அறிந்த நான் அவரிடம் நேரில் சென்று அங்கிருந்து மாற்றப்படுவதில் எனக்கும் விருப்பமில்லை என்றும் அவர் விரும்பினால் அதை ரத்து செய்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லையென்றும் தெரிவித்தேன். அவரும் அதை செயல்படுத்தும் விதமாக எங்களுடைய தலைமை எச்.ஆர் அதிகாரியை அழைத்திருப்பார் போலிருக்கிறது. அங்கிருந்து என்ன உத்தரவு கிடைத்ததோ தெரியவில்லை அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் என்னை விடுவிக்கும் உத்தரவை தயார் செய்து அன்று மாலையே ஒரு அவசர பிரிவு உபசார கூட்டத்தையும் ஏற்பாடு செய்து சென்று வா மகனே என்று அனுப்பி வைத்தனர்.

அன்று மாலை, அவரிடமிருந்து விடைபெறுவதற்காக வட்டார மேலாளருடைய அறைக்குள் நுழைந்தபோது ஒரு சில நொடிகள் நான் அறைக்குள் வந்ததையே கவனிக்காதவர்போல் நடித்ததைப் பார்த்த நான் என்மீது அவருக்கு ஏதோ மனத்தாங்கல் உள்ளது என்பதை உணர்ந்தேன்.அவரிருந்த மனநிலையில் நான் என்ன சொன்னாலும் எடுபடப் போவதில்லை என்பதை உணர்ந்த நான், 'Thank you for all your held and guidance Sir.' என்று மட்டும் கூறினேன்.

அவர் சட்டென்று என்னைப் பார்த்து. 'ஒங்கள இங்கருந்து மாற்றுனத என்கிட்டக் கூட முன்கூட்டியே கன்சல் பண்ணலேங்கறதுல எனக்கு லேசான வருத்தம் தான் டிபிஆர். ஆனா அதவிட பெரிய வருத்தம் ஒரு நல்ல மேனேஜர பிராஞ்சிக்கு வந்து ரெண்டு வருசம் ஆகாத நிலையில திடீர்னு என்ன ஏதுன்னு சொல்லாமலே எச்.ஓவுக்கு மாத்தினதுதான். இதுல டிராஜடி என்னன்னா போன வருசம் நம்ம ஜோன்லயே பெஸ்ட் மேனேஜர்னு அவார்ட் வாங்குனவர் அவர். என்ன காரணம்னு கேட்டா எங்கிட்ட கூட சொல்ல மாட்டேங்கறாங்க. நீங்கதான் அங்க போனப்புறம் கண்டுபிடிச்சி சொல்லணும்.' என்றார். அவருடைய முகத்திலிருந்த சலிப்பு என்னைக் குறித்து அல்ல என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

அவர் கூறியிருந்ததுபோலத்தான் இருந்தது என்னுடைய தலைமையகத்தின் செயல்பாடும். எங்களுடைய அப்போதைய வட்டார மேலாளர்களிலேயே சீனியரும் மிகுந்த அனுபவசாலியுமாக இருந்தவர் அவர். அவரிடமே தெரிவிக்காமல் அவருக்கு கீழ் இயங்கிவந்த அதுவும் கடந்த ஆண்டில் சிறந்த மேலாளராக தெரிவு செய்யப்பட்ட ஒரு மேலாளரை அப்பதவியிலிருந்து அகற்றியது துரதிர்ஷ்டம்தான். ஆகவே அவருடைய மனவருத்தத்தில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தேன். அதற்கு என்னையும் ஒரு பகடைக்காயாய் உபயோகித்ததில் எனக்கும் வருத்தம்தான்.

ஆனால் என்ன செய்ய? இந்த உத்தரவு என்னுடைய அப்போதைய வங்கி முதல்வரின் தலையீட்டால் இடப்பட்டது என்பதையும் அறிந்தபோது என்னுடைய வட்டார மேலாளரால் ஒன்றும் செய்ய இயலாமற்போனது. வங்கி முதல்வருக்கு நான் சற்று நெருக்கமாயிருந்ததால் ஒருவேளை எனக்கு சகாயம் செய்வதற்காக நன்றாக பணியாற்றிவந்த ஒரு மேலாளரை மாற்றியிருப்பாரோ என்ற ஐயமும் என்னுடைய வட்டார மேலாளருக்கு இருந்திருக்கவேண்டும். ஆகவேதான் அவர் என்னிடம் வருத்தத்துடன் இருந்தார் என்பதை பிறகுதான் நான் கேள்விப்பட்டேன்.

ஆக இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய சூழலில் நான் மீண்டும் மேலாளரானேன்.

***

நான் பதவியேற்க செல்வதற்கு முன்பே கிளை மேலாளர் அவருடைய உதவியாளரிடன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தார். அதுவும் ஒருவகையில் எனக்கு நிம்மதியாக இருந்தது. ஏனெனில் அவரும் என்னுடைய பேட்ச் மேட்தான். ஒரே காலக்கட்டத்தில்தான் இருவரும் மேலாளர் பதிவிக்கு உயர்த்தப்பட்டோம். நெடுங்காலமாக சிறிய, சிறிய ஊர்களில் மேலாளராக இருந்தவர் என்பதைத் தவிர எங்களுக்குள் அப்படியொன்றும் வித்தியாசம் இருக்கவில்லை.

அதற்கு முன்பு நான் பொறுப்பேற்றிருந்த கிளைகளை மேலாளர்களைப் போலல்லாமல் அவருடைய செயல்பாடு மிகவும் அருமையாக இருந்தது. அவர் பொறுப்பேற்றிருந்த தியதிலியிருந்து கிளையின் வர்த்தகமும் இரு மடங்காக உயர்ந்திருந்தது. லாப விழுக்காடும் அப்படியே. அவர் வழங்கியிருந்த கடன்களில் சுமார் ஐந்து விழுக்காடுக்கும் குறைவான கடன்களே வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன.

அத்தனை திறம்பட கிளையை நடத்திச் சென்றிருந்த ஒருவரை ஏன் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் மாற்றினார்கள் என்பதை கிளைக்கு பொறுப்பேற்ற ஒரு வார காலம் வரை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

சாதாரணமாக ஒரு கிளைக்கு பொறுப்பேற்ற தியதியிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் பொறுப்பேற்பு அறிக்கையை தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே பொறுப்பேற்றதுமே முந்தைய மேலாளர் வழங்கியிருந்த கடன்கள் அதற்கு ஈடாக வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், பொருட்கள் (Securities such as gold ornaments) ஆகியவற்றை சரிபார்த்து முடிக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் இவற்றை செய்து முடிக்க வங்கி அனுமதித்திருந்த ஒரு மாத கால அவகாசம் போறாமல் போகலாம். அத்தகைய சமயங்களில் அதற்குறிய விண்ணப்பம் ஒன்றை எழுத்து மூலமாக கால நீட்டிப்பிற்கான காரணங்களுடன் வட்டார அலுவலகம் மூலமாக தலைமையகத்திற்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் என்பதும் நியதி.

நான் பொறுப்பேற்றிருந்த கிளையின் வணிகத்தின் அளவு சற்று அதிகமானதாக இருந்ததுடன் முந்தைய மேலாளருடைய பதவி காலத்தில் சற்று அதிக அளவிலான எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட்டிருந்ததால் குறைந்தபட்சம் இருவார கால கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை என்னுடைய வட்டார அலுவலகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தேன்.

நான் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த காரணங்களுள் ஒன்று: 'முந்தைய மேலாளர் வழங்கியிருந்த கடன்களுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சில ஆவணங்களின் நம்பகத்தன்மையில் சில ஐயப்பாடுகள் உள்ளன. ஆகவே அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய போதிய நேரம் தேவை' என்று இருந்தது. இது என்னுடைய வட்டார மேலாளரை ஆத்திரமடையச் செய்திருந்தது.

'டிபிஆர் அவருடைய இன்ஸ்பெக்ஷன் புத்திய காட்ட ஆரம்பிச்சிட்டார்னு' நம்ம ஜோனல் மேனேஜர் சொல்றார் டிபிஆர். அதனால நீங்களே அவர்கிட்ட நேர்ல விளக்கணுமாம் என்று என்னை தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்தார் என்னுடைய சீஃப் மேனேஜர்.

என்னடாயிது சோதனை என்றிருந்தது எனக்கு

தொடரும்..

12 comments:

இலவசக்கொத்தனார் said...

ஏங்க அப்படி எல்லாம் எழுதாம பொதுவா செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருக்கு, இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும் அப்படின்னு கேட்டு இருக்கலாமில்ல.

Meenapriya said...

welcome back sir...

G.Ragavan said...

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காது பூமீன்னு பாடலையா சார்?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க இ.கொத்தனார்,

செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருக்கு, இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும் அப்படின்னு கேட்டு இருக்கலாமில்ல. //

உண்மையச் சொன்னா அது வில்லங்கத்துலதான் முடியும்னு இப்ப தெரியுது.. அப்போ தெரியலையே..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க மீனா,

நன்றி..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காது பூமீன்னு பாடலையா சார்//

சில சமயங்கள்ல அப்படியும் தோனியிருக்கு.. ஆனா என்ன செய்ய வேலைன்னு வந்தாச்சி.. பட்டுத்தான ஆகணும்..

sivagnanamji(#16342789) said...

ஒடுற வண்டி ஓடிட்டே இருக்கணும்..
ஒரு தடவ நிறுத்தினா ரிஸ்டார்ட் செய்றப்ப பிக்கப் ஆறது அடிக்கடி தடை படும்
பாருங்க..ஒருத்தருக்கு ஒரு மாசம் ஓய்வு கொடுத்தோம்...அவரா கொஞ்சம் என்ஸ்டெண்ட் செஞ்சார்...
வந்தப்புறமும் அடிக்கடி அம்பேல்.....
ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.........
என்ன, நா சொல்றது சரிதானே.....?

சிவஞானம்ஜி

Krishna said...

என்னடாயிது சோதனை, இந்த என்னுலகத்திற்கு என நினைத்திருந்த வேளையில் மீண்டும் உங்கள் உலகத்தில் உலாவ ஆரம்பித்தது மகிழ்ச்சி.

ஆமாம் சார், ஒரு இரண்டு மூன்று முறை இப்படி, சரியாக தவறுகளை கண்டுபிடித்துவிட்டால், நம்ம கண்ணுக்கு எல்லாமே தப்பாத்தான் தெரியும்னு முடிவு பண்ணிடுவாங்க சார்...என்ன, அவங்களால, கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்படற விஷயங்க உங்கள மாதிரி நக்கீரப் பரம்பரை ஆளுங்களால(!) பார்த்த உடனே கண்டுபிடிக்கப் பட்டுவிடும்...

இங்க இணைவி, ஏதாவது ரிப்போர்ட் எழுதி, சரி பாருங்கன்னு சொல்லுவாங்க, பார்த்தமாத்திரத்திலேயே மூணு, நாலு திருத்தம் சொல்லுவேனா...அப்புறம் என்ன, சொ.செ.சூ.வெ....

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.........
என்ன, நா சொல்றது சரிதானே.....?//

ஆமா.. நீங்க ரிட்டையர் ஆய்ட்டீங்களா இல்லையா.. இருந்தாலும் இந்த வாத்தியார் மெண்டாலிட்டி போகவே போகாதா..

ஒருதரம் டீச்சர் நிரந்தர டீச்சர்ம்பாங்க..
சரிதான் போல:)

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா அதுக்கு எத்தன மார்க் குறைக்கணுமோ குறைச்சிருங்க சார்..

வராம மட்டும் இருந்துராதீங்க..

சரீஈஈஈ என்னெ அம்பேல்னு சொல்ற நீங்களே ரொம்ப நாளா அம்பேலாய்ட்டீங்களே.. என்ன நா சொல்றதும் சரிதானே:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா (அப்பா கரெக்டா சொல்லிட்டேன்!)

இங்க இணைவி, ஏதாவது ரிப்போர்ட் எழுதி, சரி பாருங்கன்னு சொல்லுவாங்க, பார்த்தமாத்திரத்திலேயே மூணு, நாலு திருத்தம் சொல்லுவேனா...அப்புறம் என்ன, சொ.செ.சூ.வெ.... //

கடைசி ரெண்டு வார்த்தை சூடு வெச்சிருவாங்க.. சரியா.. ஆனா அதுக்கு முன்னாலருக்கறது?

balarajangeetha said...

சிஜி அய்யா மன்னிக்கவும்.
//
கொஞ்சம் ***என்ஸ்டெண்ட்*** செஞ்சார்...
வந்தப்புறமும் அடிக்கடி அம்பேல்.....
ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.........
//
:-)))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க பாலா,

சிஜி அய்யா மன்னிக்கவும்.
//
கொஞ்சம் ***என்ஸ்டெண்ட்*** செஞ்சார்...
வந்தப்புறமும் அடிக்கடி அம்பேல்.....
ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.........
//
:-))) //

வாத்தியாருக்கு வாத்தியார்..:))))