02 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 26

அறிக்கையை எழுதி கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை என்ற நினைப்புடன் ஊர் திரும்பிய முதல் நாளே என்னுடைய இருக்கையில் அமர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் என்னுடைய மேலதிகாரி அதற்கு சம்மதிக்கவில்லை. ‘டிபிஆர். நீங்க ஊர்ல இல்லாதப்போ எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருச்சி. அதனால எங்கிட்டருக்கற ஃபைல்சையெல்லாம் ஒங்கக்கிட்ட ஒப்படைக்கச் சொல்லியிருக்கார் நம்ம ஜோனல் மேனேஜர். என்னெ ரிலீஃப் பண்றவர் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம் வுமாம். அதனால அதுவரைக்கும் நீங்கதான் என் வேலையையும் சேர்த்து பாக்கப் போறீங்க.’ என்றார்.

நேற்று இரவு ரயிலில் பயணம் செய்தபோதே ‘போதும் இந்த ஆய்வு வேலை. ஊர் திரும்பியதும் வட்டார மேலாளரிடம் கூறி இலாக்காவை மாற்றச் சொல்ல வேண்டும்’ என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது இவரும் மாறிப் போய் அவருடைய வேலையையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்று நொந்துப்போனேன்.

இனி புதிய சீஃப் மேலாளர் வந்து, பொறுப்பேற்று... அவருக்கு இதில் எவ்வளவு அனுபவம் இருக்கிறதோ தெரியவில்லையே. இதே போன்ற அலுவலகத்திலிருந்து வருபவராயிருந்தால் தேவலை. அதல்லாமல் வேறு ஏதாவது இலாக்காவிலிருந்து வருபவராயிருந்தால் அவருக்கு உதவியாக நம்மை இனியும் இதே இலாக்காவில் பிடித்து வைத்துவிடுவார்களோ என்று நினைத்தேன்.

‘சார்.. அப்ப இந்த இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்?’ என்றேன்.

‘அதுக்கு இப்ப என்ன அவசரம் டிபிஆர். சாதாரணமா ரிப்போர்ட் சப்மிட் பண்றதுக்கு ஒங்களுக்கு ரெண்டு வாரம் டைம் குடுக்கணுமில்லே.. இன்னைக்கும் நாளைக்கும் என் கூடவே இருந்து இந்த ஃபைல்சையெல்லாம் படிச்சி வச்சிக்குங்க. அப்புறம் புது சி.எம் வந்ததும் அவருக்கு நீங்கதான் ப்ரீஃப் பண்ண வேண்டியிருக்கும். என்ன சொல்றீங்க?’

என்னத்த சொல்றது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவருடனேயே அமர்ந்தேன். அவர் பொறுப்பிலிருந்த கோப்புகளையெல்லாம் வாசித்து குறிப்பெடுப்பதற்கு இரண்டல்ல, மூன்றல்ல அந்த வார இறுதிவரை ஆகிப்போனது. மனிதர் அத்தனை கோப்புகளில் முடிவெடுக்காமல் முடக்கி வைத்திருந்தார்!

சில அதிகாரிகள் இப்படித்தான். தங்களுக்கு அடியில் பணிபுரிபவர்களை மேய்ப்பதிலேயே குறியாயிருப்பார்களே தவிர தங்களுடைய பணியை சரிவர ஆற்றமாட்டார்கள். ‘ஊருக்குதானடி உபதேசம், உனக்கில்லையடி கண்ணே’ என்பதுபோல்தான்.

சாதாரணமாக சீஃப் மேலாளருக்கு கீழே பணிபுரியும் என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளை அவர் உடனுக்குடன் மேற்பார்வையிட்டு பைசல் செய்ய வேண்டும். அவருடைய அதிகாரத்துக்கு மேற்பட்ட கோப்புகளை வட்டார மேலாளருடைய பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென காலவரம்பு ஒன்றும் நிர்னயிக்கப்படவில்லையென்றாலும் தங்களிடம் வந்த கோப்புகளை அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கலாகாது என்பது நியதி.

அப்போதெல்லாம் கணினி வசதிகள் இல்லாததால் எந்த அதிகாரியிடம் எந்த கோப்பு எத்தனை நாள் இருந்தது என்பதை சரிவர கணிக்க முடியாதிருந்தது. கோப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டவுடனே அவரிடம் தேதியிட்டு கையொப்பம் பெற வேண்டும் என்பதும் நியதி. ஆனால் நம்முடைய மேலதிகாரியிடம் சமர்ப்பிக்கும் கோப்புக்கு தேதியிட்டு அவராக கையொப்பமிட்டுத் தந்தால்தான் ஆயிற்று. நாமாக அதை நிர்பந்திக்க முடியாது. மீறி நிர்பந்தித்தால் அனாவசிய பிரச்சினைதான் வரும். மேலதிகாரியுடனான சுமுக உறவை எதற்கு இதற்காக முறித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லா மேசை அதிகாரியும் நினைப்பார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் கோப்புகள் ஒரு மேசையிலிருந்து இன்னொரு மேசைக்கு நகரும்போது அதற்கென உள்ள மென்பொருளில் பதிந்துவிட்டுத்தான் நகர்த்தவேண்டும். ஆகவே எந்த மேசையில் எந்த கோப்பு எத்தனை நாள் இருந்தது என்று மிக எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆகவேதான் இப்போது இத்தகைய அலுவலகங்களில் பணியாற்ற எந்த அதிகாரியும் முன்வருவதில்லை!

கணினி இல்லாத சூழலில் இத்தனை கோப்புகள் என்னுடைய அதிகாரியிடம் குவிந்துக் கிடந்தன என்பதை எங்களுடைய வட்டார மேலாளரும் அறிந்திருக்கவில்லை என்பது நான் தயாரித்திருந்த பட்டியலை அவருக்கு சமர்ப்பித்தபோதுதான் தெரிந்தது.

இருப்பினும் மாற்றலாகிச் செல்பவருடன் சர்ச்சையில் இறங்குவதில் அர்த்தமில்லையென்று நினைத்தாரோ என்னவோ, ‘இத பெரிசு பண்ணி பலனில்லை டிபிஆர். ஒங்களால ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாருங்க.. இல்லையா அடுத்த சி.எம் வந்து பாத்துக்கட்டும்.’ என்றார் சலிப்புடன்.

கோப்புகளில் பெரும்பாலானவை என்னுடைய அதிகாரியின் வரம்புக்குள்ளேயே இருந்திருந்தும் அதை பைசல் செய்யாமல் ஏன் வைத்திருந்தார் என்பது புரியாத புதிராக இருந்தது.

சாதாரணமாக ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் இரண்டு சீஃப் மேலாளர்கள் இருப்பார்கள். ஒருவர் விடுப்பில் சென்றால் மற்றவர் அவருடைய பணிகளைக் கவனிக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே விடுப்பில் செல்லும் அதிகாரி தன்வசமுள்ள பைசல் செய்யப்படாத கோப்புகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

ஆனால் அதற்கு இரு அதிகாரிகளுக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். என்னுடைய அலுவலகத்திலிருந்த இரு அதிகாரிகளுக்குள் அது இருக்கவில்லையென்பது அவரிடமிருந்த பைசல் செய்யப்படாத கோப்புகள் உறுதி செய்தன.

‘நான் என்ன செய்யட்டும் டிபிஆர். ஒங்க சீஃப் மேனேஜர் லீவுல போறப்ப அவருடைய டேபிள் சாவிங்கள கூட என்கிட்ட குடுக்க மாட்டார். அப்படியிருக்கறப்போ நா எப்படி அவர் ஃபைல்ச பாக்கறது? கவலப்படாதீங்க, அத க்ளியர் பண்றதுக்கு நா ஒங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.’ என்று கூறிய மற்றொரு முதன்மை மேலாளர் அவர் கூறியபடியே அடுத்த இரு வாரங்களில் அவருடைய அலுவல்கள் முடிந்ததும் என்னுடன் அமர்ந்து புதிய அதிகாரி வந்து பொறுப்பேற்பதற்குள் மீதமிருந்த அனைத்து கோப்புகளையும் பைசல் செய்ய உதவினார்.

என்னுடைய அதிகாரிக்கு நேர் எதிரான குணம் கொண்டவராயிருந்தார் அந்த அதிகாரி. பொறுமை, பெருந்தன்மை, அயரா உழைப்பு என ஒரு மேலதிகாரிக்குரிய எல்லா தகுதிகளும் அவருக்கிருந்தன. அவரிடம் இருந்த ஒரே கெட்டப் பழக்கம் குடி. அதுவும் தன்னுடைய எல்லையை அறியாமலே குடிப்பார். பாவம் அந்த ஒரே கெட்டப் பழக்கம் மிக இளைய வயதிலேயே அதாவது பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மரணமடைய வைத்தது.

பந்தா பரமசிவம் என்று பெயர் எடுத்த என்னுடைய அதிகாரியோ நல்ல திடகாத்திரமான உடலுடன் தனக்குக் கீழ் பணியாற்றிய அனைவருக்கும் தொல்லையாயிருந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.. ஆனால் இறுதிவரை சீஃப் மேலாளராகவே இருந்தார் என்பது அவரிடம் அவதிப்பட்ட என்னைப் போன்ற மேசை அதிகாரிகளுக்கு ஒரு சின்ன ஆறுதல்!

நான் இறுதியாக ஆய்வுக்குச் சென்ற கிளையின் (ஆம். புதிய அதிகாரி வந்து பொறுப்பேற்றதுமே என்னை அவருடைய இலாக்காவிலிருந்து மாற்றுவதற்கு சம்மதித்தார். அவரும் மிக நல்ல அதிகாரிதான். அவர் இறுதியில் வங்கியின் ஒரே பொது மேலாளராக ஓய்வு பெற்றார்) அறிக்கையை தயாரித்து முடித்து புதிதாக பொறுப்பேற்றிருந்த அதிகாரியிடம் சமர்ப்பித்தேன்.

அவர் என்னுடைய வட்டார மேலாளரைப் போன்றே நாட்டின் எல்லா பெருநகரங்களிலும் மேலாளரக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் என்னுடைய அறிக்கையில் நான் மேலாளரின் அணுகுமுறையைப் பற்றி குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததும் என்னை அழைத்து, ‘டிபிஆர் இந்த ரிப்போர்ட்டை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால நான் அவர்கிட்ட ஃபோன்ல பேசிப் பாக்கறேன். I want to give him a final change to change his attitude.. If he doesn’t listen to me we wil go ahead with your report.’ என்றார்.

அவருடைய அறிவுரையை விட அவர் என்னிடம் பேசிய விதம் என்னைக் கவர்ந்ததால் நானும் சம்மதித்தேன்.

ஆனால் அந்த மேலாளருடைய துரதிர்ஷ்டம் சாந்தமான என்னுடைய சீஃப் மேலாளரையும் எரிச்சல் கொள்ள வைத்தது. அடுத்த சில நாட்களிலேயே என்னுடைய அறிக்கையை அப்படியே இறுதி செய்து வட்டார மேலாளருக்கு அனுப்பி வைத்தார்.

அவரும் வேறு வழியில்லாமல் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க ஒரே வாரத்திற்குள் அந்த மேலாளர் தண்டனைக்குறிய இடம் என எங்களுடைய வங்கி அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டிருந்தட கொல்கொத்தா நகருக்கு மாற்றப்பட்டார்.

அந்த தண்டனையும் அவரை மாற்றவில்லை. அங்கு வாடிக்கையாளர் ஒருவரிடம் எக்குத்தப்பாக நடந்து அங்கிருந்த மார்க்சிஸ்ட் தோழர்களால் தாக்கப்பட்டு, உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இறுதியில் வங்கியின் ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகி மிக இளம் வயதிலேயே பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதுதான் நான் ஆய்வு செய்த இறுதி கிளை..

அதன் பிறகு ஐந்து மாதங்கள் வட்டார அலுவலகத்தின் கடன் வழங்கும் இலாக்காவில் பணியாற்றினேன். சொல்லிக்கொள்ளும்படி எந்த சுவாரஸ்யமான அனுபவங்களும் இல்லை..

அதன்பிறகு அதாவது வட்டார அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்து ஓராண்டு நிறைவடையும் தருவாயில் முன்னறிவிப்பில்லாமல் மாற்றப்பட்டு சென்னையிலேயே ஒரு கிளைக்கு மேலாளராக்கப்பட்டேன்.

ஆனால் அந்த மாற்றம் ஒரு அப்பாவி மேலாளருக்கு தண்டனையாக அமைந்ததுதான் பரிதாபம்.

தொடரும்..

15 comments:

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

நண்பர்களுக்கு..

என்னுடைய முந்தைய பதிவையே வெற்றிகரமாக(!) பீட்டாவுக்கு மாற்றிவிட்டதால் 1.2.07 முதல் இயங்கிவந்த http://ennulagamnew.blogspot.com பதிவை விலக்கிவிட்டேன்.

ஜிரா மற்றும் சிபி அவர்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி. உபயோகத்தில் இல்லாத இரு ப்ளாகர் ஐடிகள் இதற்கு மிகவும் உதவியாயிருந்தன. பயனில்லாதவை என்று எதையும் புறக்கணிக்கலாகாது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி:)

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

செந்தழல் ரவி said...

//தனிமடல்//

சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு வாங்களேன்...உங்களை பார்க்கனும் என்று ரொம்ப நாள் ஆவல்...///

முடிந்தால்....நடேசன் பார்க்...சனிக்கிழமை மாலை 5 மணி...

Krishna said...

//பயனில்லாதவை என்று எதையும் புறக்கணிக்கலாகாது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி:)//

சார், இப்படியே போனா, எதையுமே தூக்கி எறிய முடியாது போலிருக்கே...இங்கெல்லாம், வருஷ கடைசியில, பழசுகள், உபயோகிக்க முடியாம, ஒடஞ்சி இருப்பவைகள தூக்கி போட்டுட்டு, அப்புறமா, முடியப் போற வருஷத்த வழியனுப்பி வைக்கறதுக்கு ஒரு பார்ட்டி (Bonenkai party) கொண்டாடிட்டுத்தான் மறு வேலை...

இதே வேலையா போச்சு சார் உங்களுக்கு, ஒன்னு உங்களுக்கு தொந்தரவு/தண்டனை (அநியாயமான தண்டனைதான்) அல்லது, இன்னொருத்தர தண்டிக்கறதுக்கு/தொந்தரவு பண்றதுக்கு, இதுக்காகத்தான் மாற்றலா வாங்கிட்டே(!) இருந்திருக்கீங்களே. பாவம் சார் உங்க வீட்டம்மா, கொஞ்ச நஞ்ச கஷ்டம் குடுக்கல போல. எதோ அந்த மட்டுல, சென்னையிலேயே மாற்றல்...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

இப்படியே போனா, எதையுமே தூக்கி எறிய முடியாது போலிருக்கே..//

உண்மைதான்..

இன்னொருத்தர தண்டிக்கறதுக்கு/தொந்தரவு பண்றதுக்கு, இதுக்காகத்தான் மாற்றலா வாங்கிட்டே(!) இருந்திருக்கீங்களே. //

ஓ! இதுக்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கோ.. ஆனா இந்த மாற்றத்துக்கு நான் மட்டும் காரணமில்லை.. ஒரு பொருத்தமில்லாத கிளை மேலாளரை மாற்றவது என தீர்மானித்தபிறகு யாரையாவது அங்கு அனுப்ப வேண்டுமே.. அருகிலேயே நான் இருந்ததுடன் என்னுடைய வங்கி முதல்வர் எனக்கு ஏதோ நல்லது செய்வதாய் நினைத்திருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு பிரச்சினையில் முடியும் என்று அவர் நினைத்திருப்பாரா என்ன?

Krishna said...

சார் ரொம்ப அநியாயம் சார்...மீண்டும் கிருஷ்ணாவ, ராகவனா ஆக்கிட்டீங்களே...

அந்தளவுக்கு ராகவன் நெஞ்சில இடம் பிடிச்சிருக்கார்னு சொல்லுங்க...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

கிருஷ்ணா.. கிருஷ்ணா..

என்ன அநியாயம்.. வர்றதே ஒரு ஆளு..இப்பவே இப்படீன்னா இன்னும் நூத்துக்கணக்குல ஆளுங்க வந்தா என்னாவறது.

இத ஏன் கேக்கறீங்க?

இப்ப எங்க கொச்சு இலாக்காவில் சீஃப் மேனேஜரா இருக்கறவர இன்னமும் தனஞ்செய் என்றே தொலைப்பேசியில் அழைப்பேன். அவரும் உங்களைப் போலவே நொந்துப்போயிருவார்..

இனி அப்படியொரு தவறாது நிகழாது என்பதை அருதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்:)

siva said...

ஏதேதொ செய்து 25 & 26 படிச்சிட்டேன்
பின்னூட்டம் போட பிறகு முயல்வேன்

siva said...

" u r currently posting as SIVA" னு வருது..ஞானம் இல்லேனு நினைக்குதா?
ஒண்ணுமே புரியல்லே...

சிவஞானம்ஜி
3/2/07 1=15 p.m

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

ஏதேதொ செய்து

ஏன்.. என்னுடைய பதிவ access பண்றதுக்கு கஷ்டமாருக்கா என்ன?


siva said...
" u r currently posting as SIVA" னு வருது..ஞானம் இல்லேனு நினைக்குதா?
ஒண்ணுமே புரியல்லே.../

ஏன்? நீங்க என்ன லாகின் பேரா குடுத்தீங்களோ அதான் வரும்..

ஞானம் இருக்கு இல்லேன்னாலும் சிஸ்டமே கண்டுபிடிக்கற காலம் வந்தா எவ்வளவு நல்லாருக்கும்:)

dondu(#11168674346665545885) said...

நான் அப்படியே முழுக்க பிளாக்கருக்கு தொல்லை இல்லாமல் மாறிவிட்டேனே. வெறுமனே ஒரு புது ஜி மெயில் ஐடி வைத்து கொண்டேன் அவ்வளவே.

என்னுலகத்தில் ஏன் பிரேக்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன் சார்,

என்னுலகத்தில் ஏன் பிரேக்?//

பிரத்தியேகமா காரணம்னு ஒன்னுமில்லை.. ஒரு சின்ன ப்ரேக் விடலாமேன்னு தோனிச்சி.. அவ்வளவுதான்..

Sun said...

//என்ன அநியாயம்.. வர்றதே ஒரு ஆளு..இப்பவே இப்படீன்னா இன்னும் நூத்துக்கணக்குல ஆளுங்க வந்தா என்னாவறது.//

டி.பி.ஆர், உங்கள் பதிவில் நான் பின்னூட்டிடாவிட்டாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு தேர்ந்த எழுத்தாளராக, படு சுவாரசியமாக எழுதி வருகிறீர்கள். பின்னூட்டிடாமைக்கு என் சோம்பலே காரணம், மன்னிக்கவும் :(

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சன்,


பின்னூட்டிடாமைக்கு என் சோம்பலே காரணம், மன்னிக்கவும் //

அதனால பரவாயில்லைங்க. நா சும்மா தமாஷுக்கு கிருஷ்ணாவ கிண்டல் பண்ணேன். அவர் நம்ம தோஸ்த்தாச்சே..:)

Sivaprakasam said...

Here, blog is BLOCKed in our Co.
Please announce when will be publishing of your next blog. Or, u can send us emails when u publish[Sending emails to your readers may not be that much difficult, I think].

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவப்பிரகாசம்,

I am planning to resume my serial from Wednesday the 21st as I will be out of station on Monday and Tuesday..

Thanks for the interest shown by you.