01 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 25

நான், ‘நீங்களும் ஒரு பொறுப்பான ஆஃபீசர்தானே நீங்க ஏன் நம்ம ஜோனல் மேனேஜருக்கு இன்ஃபார்ம் பண்ணலே?’ என்றேன்.

அவர் அதற்கு அளித்த பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

‘என்ன சார் சொல்றீங்க?’ என்றேன்.

‘ஆமா சார்.. இவர் பண்றத பொறுக்க முடியாம எங்க அசிஸ்டெண்ட் மேனேஜர்ல ஒருத்தர் நம்ம ஜோனல் மேனேஜர் போனதடவ விசிட்டுக்கு வந்திருந்தப்போ இவர பத்தி போட்டு குடுத்துட்டார். அவரும் கேரளாக்காரர்தான். என்னைய விட ரெண்டு வருசம் சீனியர் வேற. ஜோனல் மேனேஜரோட ஊர்காரர் போலருக்கு. அன்னைக்கி நம்ம மேனேஜருக்கு நல்லா டோஸ் விழுந்தது. நான் சொல்லித்தான் ஒங்கள இங்க போட்டுருக்கு. ஒங்கள எதுக்கு போட்டேனோ அதுல நீங்க கான்சண்ட்ரேட் பண்ணுங்கன்னு ஏற்கனவே ஒருமுறை ஒங்கக்கிட்ட சொல்லியிருக்கேன். அத விட்டுட்டு தேவையில்லாத விஷயங்கள்ல இறங்கி don’t spoil your career.. அவனவன் சொந்த ஊர்ல போஸ்ட்டிங் கிடைக்காதான்னு தவமிருக்கான். கிடைச்ச சான்ஸ கெடுத்துக்காதீங்க.. அவ்வளவுதான் சொல்வேன்..’ அப்படீன்னு அட்வைஸ் பண்ணிட்டு போய்ட்டார்.’ என்றதும் இவ்வளவுதானா என்று நினைத்தேன்..

என்னுடைய பார்வையிலும் அது தெரிந்திருக்க வேண்டும். ‘சார்.. நீங்க நினைக்கறா மாதிரி இல்லை. அடுத்த ரெண்டு நாள்ல நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர ஹாஸ்பட்டல்ல சேர்க்க வேண்டியதாயிருச்சி சார்.. கேட்டா ஸ்கூட்டர் க்சிடெண்ட்டுன்னு சொல்றார்.. ஆனா அத நேர்ல பாத்தவங்க.. ஒரு வேன் வந்து இவர முட்டித்தள்ளிட்டு போயிருச்சின்னு சொல்றாங்க.. மனுசன் ட்ரீட்மெண்ட்டுக்குன்னு ஊருக்கு போனவர்தான்.. அங்கயே யார் யாரையோ புடிச்சி டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போய்ட்டார். ரிலீஃப் ஆவறதுக்குக் கூட இங்க வரவேயில்லைன்னா பாத்துக்குங்களேன்.’

என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நம்முடைய வங்கியில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று நினைத்து மலைத்துப் போனேன். இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.. இதெப்படி நம் அலுவலகத்தில் தெரியாமற்போனது? அல்லது நம்மிடமிருந்து மறைத்துவிட்டார்களா?

‘இது நடந்து எவ்வளவு நாள் இருக்கும்?’ என்றேன்.

‘சுமார் அஞ்சாறு மாசம் இருக்கும் சார்..’

ஓ! அதாவது நாம் அலுவலகத்தில் வந்து சேர்வதற்கு இரு மாதங்களுக்கு முன்னர்.. அதனால்தான் நமக்கு இது தெரியாமல் போய்விட்டது. இருப்பினும் நாம் இங்கு ஆய்வுக்கு வரும்போது யாராவது நம்மை எச்சரித்திருக்கலாமே என்று நினைத்தேன்..

அதேசமயம்.. என்னவென்று சொல்லியிருக்க முடியும்? இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படாத விஷயமாயிருக்கலாம் அல்லவா?

அன்று நான் சென்றிருந்த இடங்களில் ஓரிருவரைத் தவிர வேறு எவரையும் சந்திக்கவியலாமல் சோர்ந்துப்போனேன். சந்தித்த ஓரிருவரும் அப்போதைய மேலாளரைக் குறைகூறுவதிலேயே குறியாயிருந்தனரே தவிர கடனை ஏன் திருப்பியடைக்க முடியவில்ல¨ என்றோ அல்லது இனியாவது சரிவர அடைக்கிறேன் என்றோ கூறாதது என்னுடைய சோர்வை கூட்டியது. இறுதியில் இதற்கு ஒரே வழி எங்களுடைய கிளை மேலாளரை இடமாற்றம் செய்வதுதான் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது

ஆகவே இனியும் வாடிக்கையாளர்களை சந்திப்பதில் பயனில்லை என்ற முடிவுடன் அன்று மாலை அலுவலகம் திரும்பியதும் அன்றே ஆய்வை முடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பலாம் என்று தீர்மானித்தேன்.

நாங்களிருவரும் அலுவலகம் திரும்பியதுமே நான் மீண்டும் மேலாளரை சந்தித்துப் பேச விருப்பமில்லாமல் நேரே வணிக ஹாலுக்குள் நுழைந்து கிளையிலிருந்து கொண்டு சென்றிருந்த கோப்புகளை வைத்துவிட்டு அருகிலேயே இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன். அலுவலக நேரம் முடிந்திருந்ததால் அலுவலகம் காலியாய் அமைதியாயிருந்தது.

என்னுடன் வந்திருந்த உதவி மேலாளர் தன்னுடைய மேலாளருடன் பேசிக்கொண்டிருந்தது மெலிதாக கேட்க அதை பொருட்படுத்தாமல் அன்று இரவு புறப்படவிருக்கும் ரயிலில் இடம் கிடைக்குமா என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சென்னையிலிருந்து சுமார் ஏழு மணி நேரமே பயணம் செய்ய வேண்டியிருந்ததால் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் அதுவும் முதல் வகுப்பு பெட்டி எப்போதுமே காலியாகத்தான் இருக்கும் என்று என்னுடன் வந்திருந்த அதிகாரி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.

மேலும் நேரத்தை வீணடிக்காமல் கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுந்து வாசலை நெருங்கினேன். போகும் வழியில் மேலாளருடைய அறைக் கண்ணாடி வழியாக ‘நா கெளம்பறேன்..’ என்று சைகைக் காட்டினேன். அவரை மீண்டும் சந்தித்து பேசும் மனநிலையில் நான் இல்லை.

ஆனால் அவரோ விடுவதாயில்லை.. அறைக்கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தார். நானும் வேறு வழியில்லாமல் அவருடன் அறைக்குள் செல்ல வேண்டியதாயிற்று.

அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டேன். இறுதியில், ‘இதை எதுக்கு எங்கிட்ட சொல்றீங்க? உங்க மேல எந்த தப்பும் இல்லேன்னு நான் எழுதணும்னா?’ என்றேன்.

‘ஆமா சார். அதுதான் உண்மை. நான் என்ன முயற்சி பண்ணியிருந்தாலும் இவங்கள்ல யாருமே கடன அடைச்சிருக்க மாட்டாங்க. ஏன்னா அவங்க யாருமே கடன திருப்பி அடைக்கணுங்கற நோக்கத்தோட எடுத்தவங்க இல்ல சார்.’

அவர் கூறியதை விட அதை அவர் கூறிய விதம் எனக்கு எரிச்சல் முட்டியாலும் பொறுமையுடன், ‘எப்படி சொல்றீங்க? நீங்கதான் அவங்கள யாரையுமே இதுவரைக்கும் போய் மீட் பண்ணலையாமே?’ என்றேன். ‘இன்னைக்கி நான் சந்திச்ச எந்த கஸ்டமரும் ஒங்கள சந்திச்சதாவே சொல்லலையே. ஏன் ஒங்க அசிஸ்டெண்ட் ஒன்னும் சொல்லலையா?’

அவர் எரிச்சலுடன் திரும்பி அறைக்கு வெளியே புறப்பட தயாராய் நின்ற தன் உதவி மேலாளரைப் பார்த்தார். சைகைக் காட்டி உள்ளே அழைத்து என் கண்ணெதிரிலேயே அவரை வசைபாட ஆரம்பித்தார். ‘ஏய்யா.. ஒங்கள இவர் கூட அனுப்புனது எதுக்கு? அந்த கஸ்டமர்ங்க நா அவங்கள போயி சந்திக்கலேன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணா நீங்க என்ன செஞ்சிருக்கணும்? ஏங்க இப்படி அபாண்டமா எங்க மேனேஜர் மேல பழிய போடறீங்கன்னு பதிலுக்கு கேட்டிருக்கணுமில்ல? அத விட்டுட்டு வாய மூடிக்கிட்டு நின்னீங்களா?’

ஆக மேலாளரைப் பற்றி அவருடைய உதவியாளர் என்னிடம் அன்று முழுவதும் கூறியது தவறல்ல என்பது உறுதியானது. இவர் யாரையும் போய் சந்திக்காமலிருந்தது கூட எனக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் அதை என்னிடமிருந்து மறைக்க முயன்றதல்லமால் தன்னுடைய உதவியாளரும் அதையே செய்திருக்க வேண்டும் என்று என் கண்ணெதிரிலேயே அவரை வசைபாடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் புறப்படும் நேரத்தில் இவருடன் சர்ச்சையில் ஈடுபட விரும்பாமல் எழுந்து நின்றேன்.

அவரோ அவ்வளவு எளிதில் என்னை விடுவதாயில்லை. ‘என்ன சார் எழுந்துட்டீங்க? நீங்க இதே எண்ணத்தோட போய் ஒங்க ரிப்போர்ட்ல எழுதிட்டீங்கன்னா.. நான் இங்க வந்து ஒரு வருசம் கூட ஆகலை சார்..’என்றார்.

‘நான் இப்ப என்ன செய்யணுங்கறீங்க? நீங்க எல்லா வாடிக்கையாளரையும் போய் மீட் பண்ணி ரிக்கவர் பண்ண முயற்சி செஞ்சீங்க.. ஆனா அவங்க யாருமே நேர்மையில்லாதவங்கன்றதுனால கடன நம்ம மேனேஜரால ரிக்கவர் பண்ண முடியல. அதனால எல்லார் மேலயும் கேஸ் போடறதுதான் நல்லது.. அப்படீன்னு எழுதச் சொல்றீங்களா?’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் வியப்புடன் என்னைப் பார்த்தார். ‘அதான் சார் உண்மை. இவர ஒங்கக்கூட அனுப்புனது நல்லதுக்குத்தான்னு இப்பத்தான் சார் புரியுது. இந்த மாதிரி அசிஸ்டெண்ட்டுங்கள வச்சிக்கிட்டு நா எவ்வளவு பாடுபடறேங்கறது உங்களுக்கு புரியணும்.. அத நீங்க நம்ம ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லணுங்கற நோக்கத்துலதான் இவர ஒங்கக்கூட அனுப்புனேன்.’

அதாவது இவர் தன்னுடைய கடமையை சரிவர செய்ய இயலாமற் போனதற்கு இவருடைய உதவியாளர்கள்தான் காரணம். அதை நான் என்னுடைய அறிக்கையில் எழுதி அவர்களை உடனே கிளையிலிருந்து மாற்ற வேண்டும்.

இவர் நான் நினைத்திருந்ததையும் விடவும் கைதேர்ந்தவராயிருப்பார் என்று நினைத்தேன். இனியும் இவரிடம் வாதாடிக்கொண்டிருந்தால் அன்று இரவு ரயிலில் எனக்கு இடமே கிடைக்காமல் போய்விடும் என்ற நோக்கத்துடன், ‘சரி சார். நான் என்ன எழுதணுங்கறத இப்ப என்னால தீர்மானம் பண்ண முடியல. நா இன்னைக்கே ராத்திரி வண்டியில கிளம்பி போறதா இருக்கேன். அதனால I would like to leave.’ என்றேன்.

‘என்ன சார் நாலு நாள்னு வந்துட்டு ரெண்டு நாள்லயே கெளம்பறீங்க? டிக்கட் கிடைக்காதே சார்?’ என்றார் அக்கறையுடன்.

நான் சிரித்தவாறு.. ‘Don’t worry.. I’ll manage.’ என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினேன். அன்றைய இரவு வண்டியில் இடம் கிடைக்காவிட்டால் அதே விடுதிக்கு திரும்பி வரலாம் என்ற நோக்கத்துடன் விடுதியில் கூறிவிட்டு அறையை காலி செய்துவிட்டு என்னுடைய வண்டி வருவதற்கு இன்னும் சுமார் இரண்டு மணி நேரம் இருந்தும் பயணச் சீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரயில் நிலையத்துக்கு விரைந்தேன்.

ஆனால் நான் கேட்காமலேயே என்னுடன் அன்று நாள் முழுவதும் இருந்த உதவி மேலாளர் எனக்கு முன்பே ரயில் நிலையத்திற்கு சென்று அவருக்கு பழக்கமான ரயில் நிலைய அதிகாரி வழியாக முதல் வகுப்பில் பயணச் சீட்டைப் பெற்று வைத்திருந்தார். நான் நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டு சீட்டுக்குண்டான பணத்தை கொடுத்தேன்.

‘சார்.. நம்ம மேனேஜர் சொன்னா மாதிரி எங்களப்பத்தி எழுதுவீங்களா சார்?’ என்றார் பரிதாபமாக.

நான் புன்னகையுடன், ‘அவர் சொன்னதுல உண்மை இருந்தா எழுதுவேன்..’ என்றேன்.

அவர் பதற்றத்துடன், ‘சார்.. அதுல கொஞ்சம் கூட உண்மையில்லை சார். நீங்க வேணும்னா நா இதுக்கு முன்னால வேல செஞ்ச மானேஜர் கிட்ட கேட்டுப் பாருங்க.’ என்றார்.

நான், ‘கவலைப்படாதீர்கள்... என்னுடைய வேலை அதுவல்ல.. ஆனால் நீங்களும் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்க மேல உங்க மேனேஜர் மிகவும் கோபத்துடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நீங்க இப்போ இங்கு வந்து எனக்கு உதவி செஞ்சீங்கன்னு தெரியவந்தாலும் அவர் ஒங்க மேல கோபப்பட வாய்ப்பிருக்கு. அதனால வண்டி வரும் வரை காத்திருக்காம புறப்பட்டு போங்க.’ என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தேன்.

நான் நினைத்ததுபோலவே மேலாளர் வண்டி நிலயத்துக்குள் வந்து சேர்வதற்கு பத்து நிமிடத்திற்கு முன் பரபரப்புடன் வந்து, ‘சார் கவலப்படாதீங்க நா நம்ம ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட சொல்லிருக்கேன். ஒங்களுக்கு நிச்சயம் பர்த் கிடைச்சிரும் என்றார்.’ பெருமையுடன்.

நான் அவருடைய உதவி மேலாளர் செய்த உதவியைப் பற்றி மூச்சு விடாமல் வண்டி வந்து நின்றதும் ஏறிக்கொண்டு அவருக்கு விடைகொடுத்தேன்..

தொடரும்..

2 comments:

Krishna said...

வாங்க சார்(!)...

வெற்றிகரமா, பிரச்சினையில்லாம மாறிட்டீங்க போலிருக்கு.

" உலகில் நடப்பவை - என்னுடைய பார்வையில்" -- நல்லாயிருக்கு. உங்கள் உலகில் நடந்த/நடப்பவைகளை, எங்கள் பார்வைக்கு வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

புது பதிவில முதல் விருந்தினர்..

வாங்க கிருஷ்ணா,

வெற்றிகரமா, பிரச்சினையில்லாம மாறிட்டீங்க போலிருக்கு. //

இதையே ஒரு பதிவா போட்டுரலாம் போலருக்கு.. அவ்வளவு சிரமம் இருந்திச்சி..

இன்னமும் கதையுலகம் பழசுலதான் இருக்கு..

தமிழ்மண பதிவு பட்டையையும் இன்னும் போடல..

எங்கள் பார்வைக்கு வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. //

சந்தோஷம்:)