15 February 2007

கடந்து வந்த பாதை - ரவி

ரவியை நான் சந்தித்த நாள் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

அப்போது அவருக்கு இருபது வயதிருக்கும். நான் எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளைகளுள் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த சமயம். 1988ம் வருடம்.

என்னுடைய மூத்த மகளுக்கு அப்போது ஐந்து வயது. நாங்கள் வசித்த குடியிருப்பில் சுமார் பத்து குடியிருப்புகள். கீழ் தளத்தில் நான்கு குடியிருப்புகள். அதில் ஒன்றில் நானும் எனக்கு அடுத்த குடியிருப்பில் ரவியின் குடும்பமும் இருந்தது. அப்பா, அம்மா பிள்ளை என சிறிய குடும்பம்.

'ரவிக்கப்புறம் ரெண்டு பொண்ணுங்க பொறந்தது. ஒன்னு குறைப்பிரசவம். இன்னொன்னு பொறந்து நாலு மாசத்துலயே போயிருச்சி. அதுக்கப்புறம் போறும்னு இருந்துட்டோம். பத்து மாசம் சொமந்து பெத்து பிறந்தவுடனே பறிகுடுக்கறதவிட பெரிய கொடுமை இல்ல சார்.' என்றார் ரவியின் தந்தை ஒரு நாள்.

உண்மைதான். எனக்கும் அப்படியொரு அனுபவம் இருந்ததால் அவர்களுடைய வேதனையை நானும் என் மனைவியும் முழுமையாக உணர்ந்தோம். என்னுடைய இரண்டாவது மகள் பிறந்து பத்தே நாட்களில் ஒரே நாள் காய்ச்சலில் மரித்துப்போனதை மறக்க முடியாமல் எத்தனை இரவுகள் நானும் என் மனைவியும் கலங்கிப்போயிருந்தோம்!

ரவியின் அப்பா ஒரு அரசு ஊழியர். குமாஸ்தா பதவியே போதும் என்ற முடிவுடன் இருந்தவர். 'எதுக்கு சார் ப்ரொமோஷன் ஒன்னுக்கு பின்னால ஓடி என்ன பிரயோசனம்? ஒரே ஊர்ல இருக்க முடியாது. ஒங்கள மாதிரி மூனு வருசத்துக்கு ஒரு தடவ ஊர்விட்டு ஊர் ஓடணும்.. நேரங்காலம் இல்லாத வேலை.. எதுக்கு இந்த தலவலின்னு நெனச்சித்தான் வேணாம்னு இருந்துட்டேன்.' என்றார் ஒருமுறை. ரவியோட அம்மாவும் சென்னையிலேயே இருந்த தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக இருந்தார். அவருடைய பள்ளிக்கு அருகிலேயே இருந்த அந்த கட்டடத்தில் சுமார் ஆயிரம் ச.அடிகள் கொண்ட குடியிருப்பை வாங்கி ஆறுமாத காலமே ஆகியிருந்தது.

நான் குடியிருந்த குடியிருப்பும் அதே அளவைக் கொண்டதுதான். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருடையதுதான். அவர் என்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுள் ஒருவர் என்பதால் எனக்கு சுமாரான வாடகைக்கு கொடுத்திருந்தார். என்னுடைய அலுவலகமும் குடியிருப்பிலிருந்து ஐந்து நிமிட நடை தூரம்தான்.

ஒருநாள் நான் அலுவலகத்திலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் ரவி என்னையழைத்து 'சார் ஒங்கக் கூட கொஞ்ச நேரம் பேசலாம்னுதான் கூப்ட்டேன்.' என்றார் தயக்கத்துடன். நான் வியப்புடன் 'சொல்லுங்க ரவி. என்ன புதுசா ஃபோன்ல கூப்டறீங்க? வீட்டுக்கு வரவேண்டியதுதானே?' என்றேன்.

'இல்ல சார்.. வீட்ல வச்சி பேசமுடியாது. நான் ஒங்க ஆஃபீசுக்கு எதிர்த்தாப்புலருந்துதான் பேசறேன். மேல வர்றதுக்கு முன்னாடி ஒங்கள கேட்டுக்கலாமேன்னுதான் கூப்ட்டேன்.. ஒங்களுக்கு அப்ஜெக்ஷ்ன் இல்லேன்னா..' என்று அவர் தயங்க நான், 'மேல வாங்க ரவி.. எனக்கென்ன அப்ஜெக்ஷன்' என்று நானே வாசல்வரை சென்று அவரை அழைத்துவந்தேன்.

அவருடைய முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. இருப்பினும் அவராக கூறட்டும் என்று காத்திருந்தேன்.

ரவி குடும்பத்திற்கு ஒரே பிள்ளை. அதுவும் அவருக்குப் பிறகு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் மரித்துப்போனதால் ரவியின் பெற்றோர் முக்கியமாக அவருடைய அன்னை அவர் மீது மிகவும் பொசஸ்சிவாக இருப்பவர்.

ரவியின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்ததால் ரவிக்கு உடனே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ரவி அப்போதுதான் படிப்பு முடிந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தார். நான்கிலக்க ஊதியம்தான் என்றாலும் அவருக்கு அது போறாது என்ற கணிப்பு. ஆகவே இனி இரண்டு அல்லது மூன்றாண்டுகள் போகட்டுமே என்று நினைத்திருந்தார். ஆனால் அவருடைய திருமணத்தை ஒத்திப்போட அதை அவருடைய பெற்றோர்கள் ஒரு தகுதியான காரணமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை.

'எதுக்கு இவன் இப்படியெல்லாம் நினைக்கிறானே தெரியல ஜோசப். எங்களுக்கு அவன் ஒரே பிள்ளை.. நாங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சதுல மிச்சம் புடிச்சித்தான் இந்த ஃப்ளாட்ட வாங்குனோம். நான் ரிட்டையர் ஆனாலும் பென்ஷன் வரும். என் வய்ஃப் ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் அஞ்சாறு வருசம் இருக்கு.. ரவிக்கு வர்ற சம்பளத்தோட சேர்த்து மொத்தமா குடும்பத்துக்கு இருபதாயிரத்துக்கு மேல மாசம் வருது. இது போறாதுன்னா இவன் இப்போ கல்யாணம் வேணாங்கறான்? நீங்களே எடுத்து சொல்லுங்க சார்.' என்றார் அவருடைய தந்தை ஒரு நாள்.

இது விஷயமாகத்தான் அவர் என்னை சந்திக்க நினைத்திருப்பார் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ரவி என்னிடம் கூறியது நேரெதிராக இருந்தது.

'சார்.. நா ஒரு பொண்ண விரும்பறேன். அதுவும் இந்துப்பொண்ணுதான். ஆனா வேற சாதி. என்னோட ஆஃபீஸ் கொல்லீக் சார்.'

நான் அதிர்ந்து போனேன். 'என்ன ரவி சொல்றீங்க? இது நடக்கற காரியமா? ஒங்கம்மா அந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதமானவங்களாச்சே?'

ஆம். ரவியின் தந்தை மட்டுமே என்னுடைய வீட்டிற்குள் வந்து அமர்ந்து எங்களுடன் சகஜமாக உரையாடுவார். அவருடைய தாயாரோ ஒதுங்கியே இருப்பார். சாஸ்திரம், சம்பிரதாயத்தில் ஊறிப்போன பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

'அதனாலத்தான் ஒங்கக்கிட்ட வந்தேன் சார்.. உதவி கேக்கறதுக்கு.'

'நானா என்ன சொல்றீங்க ரவி' என்றேன் குழப்பத்துடன். என்னால் அப்படியென்ன உதவி செய்துவிட முடியும் என்று தோன்றியது எனக்கு.

'நான் அந்த பொண்ணெ ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கறதுக்கு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும் சார்.'

நான் மீண்டும் அதிர்ந்துபோனேன். பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் இவரா? என்ன சர்வசாதாரணமாக கூறிவிட்டார்? அவருடைய வீட்டுக்கு அடுத்த குடியிருப்பில் வசிக்கும் நானே அவர்களுடைய பெற்றோர்க்கு எதிராக எப்படி இவருக்கு உதவ முடியும்? என்னை எதற்கு இவர் தர்மசங்கடத்தில் ஆழ்த்த நினைக்கிறாரே என்ற லேசான எரிச்சலும் எட்டிப்பார்த்தது.

'என்ன சார்.. ஒங்களுக்கே இதுல விருப்பம் இல்லையா? அப்படீன்னா சொல்லிருங்க சார். நா வேற ஏற்பாடு செஞ்சிக்கறேன்.' என்றவாறு எழுந்து நின்ற ரவியை தோள்களைப் பிடித்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினேன்.

'அப்படியில்ல ரவி. நம்ம ஏரியா ரிஜிஸ்திரார் ஆஃபீஸ் பக்கத்துலயே இருக்கு. ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கறதுக்குன்னு சில ஃபார்மாலிட்டீசெல்லாம் இருக்குன்னு ஒங்களுக்கு தெரியுமில்ல. அதுல ஒன்னு ஒங்க ரெண்டு பேரோட மேரேஜ் நோட்டிச முப்பது நாளைக்கு முன்னால் நோட்டீஸ் போர்ட்ல டிஸ்ப்ளே பண்றது. நம்ம வீட்டுக்கு கிட்டக்கவே இருக்கற ஆஃபீஸ்ல போடற நோட்டீஸ் ஒங்கப்பா கண்ணுலருந்து தப்புமா ரவி.. அப்படியே இல்லன்னாலும் வேற யாராவது பார்த்துட்டு ஒங்கப்பாக் கிட்ட போயி சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இது சரிவராது ரவி. ஐ ஆம் சாரி.'

அவர் என்ன நினைத்தாரோ மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் நான் தடுத்தும் கேட்காமல் வெளியேறினார்.

அவருக்கு நான் சொல்ல வந்தது புரிந்திருக்கும், ஆகவே இந்த எண்ணத்தை கைவிட்டுவிடுவார் என்றே நினைத்தேன்.

ஆனால் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாயிருந்தார் என்பது அடுத்த வாரத்திலேயே தெரிந்தது. ரிஜிஸ்தர் திருமணத்தில் இருந்த சிக்கலை உணர்ந்த அவர் அந்த பெண்ணை திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் புரிந்துக்கொண்டு மாலையும் கழுத்துமாக குடியிருப்பின் வாசலில் வந்து நின்றபோதுதான் விளங்கியது அவர் அன்று எடுத்திருந்த முடிவு என்னவென்று.

நாளை நிறைவு பெறும்..

2 comments:

logasundar said...

Hello Sir,

I wish you belated happy anniversay. Wish you many more happy returns too.

(Just saw that yesterday was your wedding anniversary in Dondu's Blog)

Logasundar

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

I wish you belated happy anniversay. Wish you many more happy returns too.//

Thankyou so much Sundar.