28 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 31

நேற்றைய பதிவில் மூன்று வகைப்பட்ட வாடிக்கையாளர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

4. Indisciplined Borrowers: இவர்களில் சிலர் எத்தர்கள். பலர் ஒழுங்கீனமானவர்கள். இவர்கள் வணிகம் செய்வதிலும் எவ்வித ஒழுங்கும் இருக்காது. வசதிக்கு மீறிய வணிகத்தில் ஈடுபடுவது, தேவைக்கு மீறிய வரவு செலவு செய்வது, லாபம் வருகிறதோ இல்லையோ வரவு செலவை (turnover) கூட்டுவதிலேயே குறியாயிருப்பது என்பதுபோன்ற நோக்கம் உடையவர்கள். தங்களுடைய இத்தகைய வணிக நோக்கத்திற்காக தேவைக்கு மீறிய கடனை வங்கிகளிலிருந்து மட்டுமல்லாமல் வெளியிலும் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பிச் செலுத்த இயலாமல் எல்லாவற்றையும் வாழ்க்கையையும் சேர்த்து தொலைத்துவிட்டு நிற்பவர்கள்.

5. Honest Borrowers: நேர்மையானவர்கள். தங்களுடைய வணிகத்திலும் சட்டத்திற்கு விரோதமாகவோ அல்லது தங்களுடைய மனசாட்சிக்கு விரோதமாகவோ எதையும் செய்யாதவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களில் சிலர் நடைமுறை நிதர்சனத்தை உணராதவர்கள். வங்கிகளை அணுகுவதிலும் இவர்களுடைய போக்கில் விசித்திரம் இருக்கும். தங்களுக்கு தேவையான கடன் தொகையை வழங்குவது வங்கிகளுக்கு கடமை என்று நினைத்திருப்பார்கள். 'Since I am honest I expect you to be honest. I've a genuine business. I've all the papers that you would expect from a businessman. You are supposed to grant me the loan I want. Sanction it without any conditions.' என்பதுபோலிருக்கும் இவர்களுடைய அணுகுமுறை. அவர்கள் அணுகும் வங்கியின் நியதிகளைவிட இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகள் இவர்களுக்கு அத்துப்படி. நாம் எந்த விவரத்தைஅல்லது ஆவணத்தை கேட்டாலும், 'As per RBI guidelines you are not supposed to demand that.' என்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் கோரும் கடனை அதே அளவிலோ அல்லது அவர்கள் விரும்பிய ஷரத்துகளுக்குட்பட்டோ கொடுக்க இயலாமற் போகலாம். 'If you don't sanction the loan I need or if you stipulate conditions that I can't comply with, I'll complain to RBI' என்பார்கள். சில அனுபவமில்லாத மேலாளர்கள் இவர்களுடைய அதிகார தொனியைக் கண்டு அஞ்சி தங்கள் வங்கி நியதிகளையும் மீறி கடன் வழங்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டு பிறகு திண்டாடுவார்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான். ஆனால் நாளடைவில் '
Sorry Sir.. If that's you want please go ahead and complain. I can't accede to your request' என்று பவ்யத்துடன் மறுத்துவிடுவேன். உடனே இவர்களில் பலரும் சரண்டராகிவிடுவார்கள். சரி நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் கடன் வழங்கினார்களே என்ற நன்றியுணர்வு இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. கடன் பெறும் நேரத்தில் 'Don't expect 'anything' from me.' என்று மறைமுகமாக எச்சரிப்பார்கள். ஆனால் தங்களுக்கு தேவையான எல்லா சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வட்டி விகிதத்தில் சலுகை, நீண்டகால தவணைகள், திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் பீனல் வட்டியில்லாத கால நீட்டிப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கேட்டால் 'That's what RBI guideline to Banks says.. When borrowers are in financial strain banks should not insist on loan repayment.' அத்துடன் வழங்கப்பட்ட தொகைக்கு மேல் தேவைப்படும்போதெல்லாம் மேலாளர் முகம் கோணாமல் வழங்கிவிட வேண்டும். 'அப்போதும் 'RBI has specific guidelines for additional financial requirements, I am entitled to exceed my sanctioned limit at least up to 10% of my limit.' என்று வாதிடுவார்கள். இத்தகைய கூடுதல் தேவையை நியாயப்படுத்த ஏதாவது ஆவணங்களையோ, அல்லது விவரங்களையோ கோரினால் அதற்கும் மசிய மாட்டார்கள். 'You look at my turnover in the account and sanction the additional funds.' என பதில் வரும். இவர்களை கையாள்வதற்கே மேலாளர்களுக்கு போறும் போறும் என ஆகிவிடும். யாராவது - அதாவது என்னைப் போன்ற பிடிவாதமுள்ள மேலாளர்கள் - மறுத்தால் அடுத்த நொடியே ரிசர்வ் வங்கிக்கோ அல்லது மேலதிகாரிகளுக்கோ இன்னார் என்னிடமிருந்து கையூட்டு கோரினார் என்ற புகார் பறக்கும். அதில் உண்மையில்லை என்பதை நிருபிப்பது சம்பந்தப்பட்ட மேலாளரின் பொறுப்பு. அதாவது நான் நேர்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு எனக்கு! அவருடைய புகார் உண்மையானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கில்லையாம். எப்படியிருக்கிறது நியாயம்! அவர் ஏற்கனவே நேர்மையானவர் என்ற பட்டம் உள்ளதல்லவா? அதான் காரணம். இருபது, முப்பது வருடங்கள் உண்மையுடன் பணியாற்றிய மேலாளரை நம்பாத வங்கி நிர்வாகம் இத்தகையோரது புகாருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் வேதனை.

இறுதியாக..

6. Dishonest Borrowers: இவர்கள்தான் எத்தர்கள். வணிகம் துவங்குவதிலும் எவ்வித அடிப்படைக் கொள்கைகளும் இல்லாதவர்கள். வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட எண்ணம் உடைய இவர்கள்தான் இன்று வங்கித்துறையிலிருந்து வழங்கப்பெறும் கடன் தொகையில் ஒரு பெருமளவு விகிதத்தை வளைத்துப் போடிருப்பவர்கள். வணிகத்தைத் துவக்க எப்படி எவ்வளவு வேண்டுமானாலும் 'கொடுக்க' தயாராயிருப்பார்களோ அதே அளவு தொகையை வங்கி மேலாளர்களுக்கு மட்டுமல்ல அவருக்கு மேலுள்ள சகல உயர் அதிகாரிகளுக்கும் 'கொடுத்து' தங்களுக்கு தேவையான கடனை பெற்றுவிடுவார்கள். சரி, அதை சரிவர அதாவது எந்த நோக்கத்திற்காக கடனைப் பெற்றார்களோ அதற்காக, உபயோகிப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. தேவைக்கு மீறிய அளவு கடனைப் பெறுவது, உபரி கடந்தொகையை தங்களுடைய வணிகத்திற்கு வெளியே அதாவது சம்பந்தமில்லாத சில சமயங்களில் சட்டத்திற்குப் புறம்பான துறைகளில் முதலீடு செய்து பன்மடங்கு லாபம் ஈட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பர். வாங்கிய கடனை பயன்படுத்தி அதிலிருந்து ஈட்டிய லாபத்தைக் கொண்டு வங்கி கடனை திருப்பிச் செலுத்துவார்களா என்றால் அதுவுமிருக்காது. வாங்கிய கடனை எப்படியெல்லாம் திருப்பிச் செலுத்தாமல் இருக்க முடியுமோ அத்தனை வழிகளும் அவர்களுக்கு அத்துப்படி.

சரி.. இனி இத்தகையோரை தங்களுடைய அன்றாட அலுவலில் சந்திக்கும் மேலாளர்களுள் எப்படிப்பட்டவர்கள் அடங்குவர் என்பதை சொல்கிறேன்..

1. Disciplined Managers: இவருக்கு முதலில் தான் யார் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். தன்னுடைய அலுவல் என்ன (Role), தன்னுடைய பொறுப்பு (Responsibility)என்ன, அதிகாரம் (Powers) என்ன, தன்னுடைய நோக்கம் (Aim) என்ன, என்பதுபோன்றவைகளை நன்றாகவே அறிந்திருப்பார். அத்துடன் தன்னுடைய எல்லை (Limitations) என்ன என்பதும் தெரிந்திருக்கும். ஆகவே இவற்றிற்குள் மட்டுமே இயங்குவதில் குறியாயிருப்பார். இத்தகைய மேலாளர்கள் திறமையானவர்கள் (Effificient) என்ற வகைக்குள் இருந்தாலும் அவர்களுடைய மேலாளர்களால் Performers என்று மட்டுமே கணிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுள் பெரும்பாலோனோர் outstanding performers என்ற மேலதிகாரியின் கணிப்பில் இருப்பதில்லை. அதாவது ஒருபோதும் star performer என கணிக்கப்படமாட்டார்கள். இவர்கள் வங்கியின் நியதிகளுக்குட்பட்டே வணிகம் செய்வார்கள். ஆனால் இவர்களுடைய நோக்கத்திற்கேற்ப வாடிக்கையாளர்கள் அமைவதும் சிரமம் என்பதால் இவர்களால் தங்களுடைய கிளை வணிகத்தை ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு விரிவுபடுத்த இயலாமற்போய்விடும். உதாரணத்திற்கு வங்கிகளில் வைப்பு நிதி கணக்குகளை (Fixed Deposits) துவக்குவதற்கும் சில விதிமுறைகள் உண்டு. இப்போது, வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருட வட்டித்தொகை ரூ.5000/-க்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து TDS பிடிக்கப்பட வேண்டும். அதாவது அதிகபட்ச வட்டி விகிதம் 9% ஆக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த விருப்பமில்லாத ஒருவர் தன்னுடைய பெயரில் ரூ.55000/-க்கும் கூடுதலாக வைப்பு நிதி கணக்கு துவங்க முடியாது. ஆகவே ஒருவரே தனக்குக் கீழ் பணிபுரிபவர்களில் பெயரிலோ அல்லது இல்லாத ஒருவரின் பெயரிலோ (fictitious) வைப்பு நிதி கணக்கு துவங்க விரும்பினால் இத்தகைய disciplined மேலாளர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 'I am sorry Sir.. I can't allow that.' என்று மறுத்துவிடுவார்கள். ஆனால் இன்றும் பல வங்கிகளில் இது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சரி. இதற்கே மறுப்பு தெரிவிக்கும் மேலாளர்கள் வங்கியிலிருந்து கடன் வழங்குவதில் வங்கியின் நியதிகளை மீறுவார்களா? வங்கி விதிக்கும் நியதிகளுக்குட்பட்டு கடன் பெற நினைக்கும் வாடிக்கையாளர் இவர் மேலாளராக இருக்கும் வங்கி கிளையிலிருந்து கடன் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. அவருக்கு எங்கு சென்றாலும் கடன் கிடைக்குமே. ஆகவே இத்தகைய மேலாளர் இருக்கும் கிளையில் வணிகம் பெருமளவில் விரிவாகாது. தங்களுக்கு மேலதிகாரிகள் நிர்ணயிக்கும் எல்லைகளை (Targets) எட்டுவதிலேயே திருப்தியடைந்துவிடும் இவர்கள் Satisfactory Performers ஆகவே இருப்பர்கள். ஒருபோதும் Outstanding Performers ஆக மின்னுவதில்லை. ஆனால் தங்களுடைய நேர்மையான, திறமையான, ஒழுங்கான அலுவலுக்காக அங்கீகாரம் பெற்று பெரும் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டு பணியிலிருந்து ஓய்வு பெறுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகும் வேறொரு பணியில் சேர்ந்து ஜீவனம் நடத்தவேண்டிய நிலையிலேயே இருப்பார்கள்.

2. Indisciplined Managers: இவர் முன்னவருக்கு நேர் எதிர். இவருக்கு தன்னையும் தெரியாது தன்னுடைய வாடிக்கையாளரையும் தெரியாது. சிலருக்கு தன்னுடைய மேலதிகாரிகளையும் தெரியாது. என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது தெரியாமலேயே தங்களையும் குழப்பிக்கொண்டு தங்களை சுற்றியுள்ளவரையும் குழுப்பி விடுவார்கள். இத்தகையோருடைய அலுவலக மேசையை ஒருமுறை பார்த்தாலே போறும். நான் ஒரு கிளைக்கு பொறுப்பேற்க சென்றபோது அவருடைய மேசையின் மேற்புறத்தை பார்க்க முடியாத அளவு கோப்புகள் நிறைந்து வழிந்தன. என்ன சார் கையெழுத்து போடறதுக்குக் கூட இடத்த காணமே என்றேன். அவர் படு சீரியசாக 'நீங்க இந்த மாதிரி பிராஞ்சிலல்லாம் வேலை செஞ்சிருக்கலையே டிபிஆர். அதான் ஒங்களுக்கு புரிய மாட்டேங்குது. இங்கல்லாம் ஒரே நேரத்துல பல வேலைங்கள பாக்க வேண்டியிருக்கும்.' என்றார். அதெப்படிதான் ஒரே நேரத்துல ரெண்டு ஃபைல படிப்பாரோ.. இத்தன வருசமாகியும் என்னால அது முடியறதில்லை. சேமிப்பு கணக்குகளை துவக்குவதிலும் சரி கடன் வழங்குவதிலும் சரி எவ்வித நியதிகளையும் கடைபிடிக்கமாட்டார்கள். கேட்டால் 'அதையெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா பிசினஸ் பண்ண முடியாது சார்.' என்பார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களுடைய கிளைகளை ஆய்வு செய்ய வரும் ஆய்வாளர்கள் என்ன எழுதி வைத்துவிட்டுச் சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படவே மாட்டார்கள். இவர்களுள் பெரும்பாலோர் தங்களை மேலார்களாகப் பார்ப்பதில்லை. முதலாளிகளாகவே கற்பித்துக்கொண்டுவிடுவார்கள். ஆனால் ஒன்று. இவர்கள்தான் star performersஆக இருப்பார்கள். இவர்கள் பதவியிலிருக்கும் காலத்தில் கிளையின் வர்த்தகம் பன்மடங்காகிவிடும். தடைகள் இல்லாத காட்டாற்று வெள்ளம் போல வணிகத்தின் அளவும் அதன் பயனாக லாபத்தின் அளவும் கணிசமாக பெருகிவிடும். அதை மட்டுமே பார்வையிடும் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதும் வழக்கம். விருதுகளும் இவர்களுக்கு அத்துப்படி. மிக விரைவில் எட்ட முடியாத அளவுக்கு உயர்வார்கள். ஆனால் சரியான அடித்தளம் இல்லாத காரணத்தில் உயர்ந்த வேகத்திலேயே விழவும் செய்வார்கள். அடியும் பலமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

3. Dishonest and corrupt Managers:

இவர்கள் பயங்கரமானவர்கள். இன்று வங்கித்துறையில் செயலிழந்துப்போன கடன் கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் ஒரு லட்சம் கோடிக்கு மேலுள்ள தொகையில் பெரும்பாலானவை இத்தகையோர் வழங்கிய கடன்களாகத்தான் இருக்கும். ஒரு dishonest borrowerம் ஒரு dishonest managerம் சேர்ந்துவிட்டால் பொதுமக்களின் சேமிப்பு அதோகதிதான். இவர்களுடைய நோக்கம் முழுவதும் எத்தனை விரைவில் எத்தனை கொள்ளையடிக்கலாம் என்பதுதான். அத்துடன் சிக்கிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி என்பதையும் கரைத்துக் குடித்திருப்பார்கள். தங்களுக்கு 'கிடைப்பதில்' கொடுக்க வேண்டியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதிலும் சமர்த்தராயிருப்பர். 'நமக்கு கிடைக்கறதுல ஒரு பர்செண்ட் ஷேர் யாருக்கு குடுக்கணுமோ அங்க குடுத்திரனுங்க.. அப்பத்தான் நாம மாட்டிக்கறப்போ தப்பிக்க முடியும்.' இதுதான் இவர்களுடைய தாரக மந்திரம். இவரிடம் வரும் நேர்மையான கடந்தாரர்களையும் இவர்களுடைய வழிக்கு கொண்டு வருவதிலும் சூரர்களாயிருப்பர். இவர்களுடைய பதவிகாலத்தில் இவர்கள் அளிக்கும் சலுகைகளையெல்லாம் அனுபவித்து மகிழ்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இவரையடுத்து இவரைப் போன்றவரே மேலாளராக வந்தால் பிழைத்தார்கள்.. மாறாக ஒரு disciplined மேலாளர் வந்தால் அவ்வளவுதான்..

சரி இறுதியாக ஒருவரைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்..

4. Cunning Managers

இத்தகையோர் உண்மையில் மூன்றாம் வகை ஆட்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் வெளியில் பார்த்தால் 'இவரா? இருக்காது சார்.' என்ற தோற்றம் இருக்கும். இவர்கள் ஒரு Disciplined Manageருடைய எல்லா தகுதி மற்றும் திறமையைக் கொண்டிருப்பர். எல்லா நியதிகளையும் கரைத்துக் குடித்திருப்பர். அத்துடன் தன்னுடைய மேலதிகாரிகள், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள், தன்னுடைய வாடிக்கையாளர்கள் என அனைவரையும் வளைத்துப் போட்டு தன்னைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடுவதிலும் சமர்த்தர்களாயிருப்பர். கையூட்டு பெறுவதிலும் ஒரு கோணம் இருக்கும். ஒரு Dishonest மேலாளரைப் போன்று நேரடியாக கேட்க மாட்டார்கள். ஆனால் குறிப்பால் உணர்த்திவிடுவார்கள். அதாவது கொடுத்தால் வாங்கிக்கொள்கிறேன் என்று. வாடிக்கையாளர் ஏதோ நிர்பந்தித்து அளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுவார்கள். கிளையின் செயல்பாடுகளில் எவரையும் தலையிட அனுமதிக்கமாட்டார்கள். எல்லாம் நம்மால்தான் முடியும் என்ற போக்கு எல்லாவற்றிலும் தெரியும். விடுப்பே எடுக்காமல் வருடத்தில் 365 நாளும் பணிக்கு வருவார்கள். இவர்களுள் பெரும்பாலோனோர் தங்களுடைய மேசை இழுவைகளை மட்டுமல்லாமல் அறைக் கதவையும் பூட்டி சாவியை தங்களுடன் கொண்டுசென்றுவிடுவார்கள். இவர்கள் மாற்றலாகிச் சென்ற பிறகும் கூட இவருக்கு பின்னால் வரும் மேலாளர்களால் இவர்கள் செய்துவைத்திருந்த குளறுபடிகளை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத அளவுக்கு இவருடைய வேலை அத்தனை பிரமாதமாக இருக்கும். இவர்தான் இந்த குளறுபடிக்குக் காரணம் என்பதை நிரூபிக்க இவரை தொடர்ந்து வரும் மேலாளர் படாதபாடு படவேண்டியிருக்கும். பார்த்தா பசு பாஞ்சா புலி என்பார்களே அந்த ரகம் என்றாலும் மிகையல்ல..

இன்னைக்கி கொஞ்சம் ஜாஸ்தியாவே எழுதிட்டேன்னு நினைக்கேன்.. இதுல என்னோட முந்தைய மேலாளர் எந்த ரகத்தைச் சார்ந்தவர்னு ஏதாச்சும் தெரியுதா.. திங்கட் கிழமை பாக்கலாம்..

தொடரும்

27 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 30

வங்கி மேலாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை பலவகையில் வகைப்படுத்துவது வழக்கம்.

ஒரு கிளையிலுள்ள எல்லா வாடிக்கையாளர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது வங்கிகளின் முக்கியமான நியதிகளுள் ஒன்று என்றாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம்.

ஒரு கோடி ரூபாய்வரை வரவு செலவு வைத்திருக்கும் வாடிக்கையாளரையும் சில ஆயிரங்கள் வரவு செலவு வைத்திருக்கும் வாடிக்கையாளரையும் சமமாக பாவிக்க முடியாதல்லவா? முன்னவரும் பின்னவரும் ஒரே நேரத்தில் கிளைக்கு வருகைதரும் நேரத்தில் முன்னவர் நேரே மேலாளரையும் பின்னவர் குமாஸ்தாக்களையும் அணுகுவது வாடிக்கை. இது எங்களுடைய வங்கி மட்டுமல்லாமல் எல்லா வங்கிகளுக்குமே பொருந்தும்.

இறைவனை தரிசிப்பவதற்கே வசதி படைத்தவர்களுக்கும் பதவியிலுள்ளவர்களுக்கும் தனிச்சலுகைகள் காட்டப்படும் இந்த கலியுகத்தில் வங்கி மேலாளரை குறை சொல்வதில் அர்த்தமில்லையே.

அப்போதெல்லாம் ஒரு கோடி ரூபாய் வரவு செலவு வைத்திருக்கும் வாடிக்கையாளரை தங்கள் வசம் இழுக்க பல வங்கிகளும் தங்களுக்குள் போட்டி போடுவதில் முனைப்பாயிருந்ததால் எல்லா வங்கிகளுமே அவர்களுக்கு ஒரு பிரத்தியேக வசதிகளைச் செய்துக்கொடுப்பதுண்டு. இப்போதும் அந்த சலுகை இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை ஒரு கோடி வரம்பு என்பது வேண்டுமானால் உயர்த்தப்பட்டிருக்கலாம்.

மேலும் வங்கிகளில் முதலீடு அல்லது சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் (Depositors), வங்கிகளிலிருந்து கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் (Borrowers) எனவும் வாடிக்கையாளர்கள் வகைப்படுத்தப்படிருப்பர்.

கிளை அமைந்திருக்கும் இடம் (place of business), கிளையிலுள்ள வணிகத்தின் வகை (type of business) ஆகியவற்றைப் பொருத்து இவர்களுக்கு கிளை மேலாளர்கள் வழங்கும் சேவையும் அமைந்திருக்கும்.

உதாரணத்திற்கு சென்னையில் குடியிருப்புகள் அதிகம் அமைந்துள்ள கோடம்பாக்கம், அண்ணாநகர், பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிளைகள் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுண்டு. அத்தகைய கிளைகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருப்பர்.

மாறாக சென்னை பாரீஸ் கார்னர் பகுதியிலுள்ள லிங்கிச் செட்டித்தெரு மற்றும் அதனையொட்டியுள்ள கிளைச் சாலைகள் அல்லது அண்ணா சாலை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிளைகளில் கடன் பெற்று வணிகம் நடத்திவரும் நிறுவனங்களின் கணக்குகளே அதிகம் இருக்கும்.

ஆகவே இத்தகைய கிளைகளுக்கு மேலாளர்களாக பதவியில் அமர்த்தப்படும் மேலாளர்களை தெரிந்தெடுக்கும் நேரத்தில் வங்கி உயர் அதிகார்கள் இதை கவனத்தில் கொள்வது வழக்கம்.

என்னுடைய முந்தைய மேலாளர் தன்னுடைய பதவிக்காலத்தில் பெரும்பான்மையான காலத்தை நான் மேற்கூறிய இருவகைக் கிளைகளில் முந்தைய வகையைச் சார்ந்த கிளைகளிலேயே பணியாற்றியிருந்தார். அதுவும் அவருடைய சொந்த மாநிலத்தில்.

சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது மிகவும் எளிது. கிளையுடனான அவர்களுடைய உறவின் அளவை (size of the deposits) முன்பே அறிந்திருந்தால் மட்டும் போதும். அதற்கேற்றாற்போல் அவர்களை வரவேற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமைக் காண்பித்து முடித்துக் கொடுப்பதுடன் அவர்களைப் பற்றியும் அவர்களுடைய குடும்பத்தினரைப் பற்றியும் சம்பிரதாயமாக விசாரித்து புன்னகையுடன் வழியனுப்பி வைத்துவிட்டால் போதும். கிளைக்குள் நுழையும்போதே புன்னகையுடன் 'How are you Sir?' அல்லது 'Very good morning Sir' என்பதிலும் விடைபெறுகையில், 'Good Day Sir' அல்லது 'All the very best Sir' என்றாலே அவர்கள் குளிர்ந்து போவதை பலநேரங்களில் பார்த்திருக்கிறேன்.

ஆனால் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் அப்படியல்ல. அவர்களுக்கு மேலாளருடைய புன்னகையிலோ அல்லது அவருடைய அறைக்குள் சென்று அமர்ந்து குசலம் விசாரிப்பதிலோ அக்கறையிருக்காது. தங்களுக்கு வங்கியிலிருந்து எவ்வளவு கடன் கிடைக்கும், அதற்கு அவர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதில் தான் அவர்களுடைய கவனம் முழுவதும் செல்லும்.

இத்தகைய வாடிக்கையாளர்களையும் வகைப்படுத்தி வைத்திருப்போம்.

1. Disciplined Borrowers: தங்களுடைய வணிகத்தை நடத்திச் செல்ல எவ்வளவு கடன் தேவை. அதில் தங்களுடைய பங்கு என்ன (Margin) என்பதில் மிகவும் தெளிவாய் இருப்பர். தங்களுடைய தேவையை தெளிவாக தங்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிடுவதுடன் அதற்கு தேவையான ஜாமீன், செக்யூரிட்டியாக என்னவெல்லம் அளிக்க முடியும், எத்தனை வருடங்களில் திருப்பிச் செலுத்த முடியும், தாங்கள் எதிர்பார்க்கும் வட்டி விகிதம் என்ன என்பதையெல்லம் எவ்வித ஐயப்பாட்டிற்கு இடமளிக்காமல் குறிப்பிடுவதுண்டு. இத்தகைய வாடிக்கையாளர்கள் கடன் தொகைப் பெற்றதற்கு பிறகும் அதில் வரவு செலவு வைப்பதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் கூட வங்கி நியதிகளுக்கு கட்டுப்பட்டே நடந்துக்கொள்வர்.

2. Clever Borrowers: இவர்கள் எத்தர்கள் அல்ல. ஆனால் கடன் வழங்குவதில் வங்கி மேலாளரின் அதிகாரம் என்ன, அதாவது மேலதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் அவரால் எவ்வளவு கடன் வழங்க முடியும் என்பதை முதலில் கேட்டு தெரிந்து வைத்திருப்பார்கள். அதைக் கடந்து மேலதிகாரிகளுடைய பார்வைக்கு அனுப்பி வைக்கும் கடன்கள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதையும் கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களுடைய தேவையை கணிப்பிடுவார்கள். 'சார் ஒங்களால இப்போ எவ்வளவு சாங்ஷன் பண்ண முடியுமோ செய்ங்க சார். கூட தேவைப்படறப்போ ஒங்க ஜோனல் ஆஃபீசுக்கு அனுப்பலாம்.' என்பார்கள். அதாவது தங்களுடைய வணிகத்திற்கு எவ்வளவு கடன் தேவை என்பதை விட உடனடியாக எவ்வளவ கிடைக்குமோ அதைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாயிருப்பார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று ஒரு மேலாளர் வாடிக்கையாளருடைய நெடுங்கால தேவையை சரிவர கணிக்காமல் கடன் வழங்கிவிட்டால் அதற்குப்பிறகு அவருடைய நச்சரிப்புக்கு ஆளாக வேண்டியதுதான். 'சார் நா எதிர்பார்த்ததுக்கு மேல பிசினஸ் டெவலப் ஆயிருச்சி அதனால இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்..' என்று கடன் வழங்கிய அடுத்த மாதத்திலிருந்தே நச்சரிப்பு துவங்கிவிடும். 'சார் நீங்க மனசு வச்சா முடியும் சார். எனக்கு வேண்டியத குடுத்துட்டு நீங்க ஒங்க ஜோனல் ஆஃபீஸ்லருந்து அப்ரூவல் வாங்கிக்குங்களேன்.' என்று நமக்கே சொல்லித்தருவார்கள். வரவு செலவு செய்வதிலும் ஒரு ஒழுங்கு இருக்காது. கணக்கிலிருந்து எடுக்கக்கூடிய தொகைக்கு மேலாக காசோலைகளை வழங்கிவிட்டு அது கிளைக்கு வரும் நேரத்தில் மேலாளர் முன் வந்து நிற்பார்கள். 'சார் இந்த ஒரு நேரம் மட்டும் பாஸ் பண்ணிருங்க. இன்னைக்குள்ள பணத்த கட்டிடறேன்.' அவர்கள் 'இன்னைக்குள்ள' என்பது இரண்டு நாட்கள் அல்லது சில சமயங்களில் ஒரு வாரமாகக் கூட இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் அப்படித்தான் கெடு முடிந்த பிறகும், 'சார் இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் டைம் குடுங்களேன். பீனல் வட்டி வேணும்னாலும் குடுத்துடறேன்.' என்பார்கள் சரி என்று தவணையை நீட்டி கொடுத்தால் இறுதியில் அசலை மட்டும் செலுத்திவிட்டு 'என்ன சார் இது அநியாயம் பீனல் வட்டின்னு இப்படி டெபிட் பண்ணி வச்சிருக்கீங்க? மொதல்லயே சொல்லியிருந்தா ட்யூ டேட்லயே கட்டித் தொலைச்சிருப்பேனே.' என்று முன்னுக்குப் புரனாக பேசுவார்கள். ஆனால் இறுதியில் அழுதுக்கொண்டே முழுத்தொகையையும் செலுத்தி விடுவார்கள். இறுதியில் வெறுப்புடன் 'ஒங்க சகவாசமே வேணாம் சார்' என்று செல்வார்கள். ஆனால் அடுத்த அல்லது அதற்கடுத்த மாசமே மீண்டும் வந்து ஒரு அசட்டுப் புன்னகையுடன் நிற்பார்கள். எதற்கு? கடனுக்குத்தான்!

3. Cunning Borrowers: இவர்களும் எத்தர்கள் அல்ல. ஆனால் நேர்மையற்றவர்கள். குறுக்கு வழியிலேயே சிந்திப்பவர்கள். சரியான வணிகம் இருக்காது. அதாவது வங்கிகள் கடன் வழங்கக்கூடிய அளவுக்கு வலுவுள்ளதாக இருக்காது. அவர்களுக்கு என்ன அல்லது எவ்வளவு தேவை என்பது அவர்களுக்கே தெரியாததுபோல், 'சார் நீங்களே ஒரு எஸ்டிமேட் போட்டு குடுங்களேன் சார். ஒங்களுக்கு தெரியாததா?' என்று வந்து நிற்பார்கள். அவர்களுடைய வணிக சம்பந்தப்பட்ட கோப்புகள், வரவு செலவு புத்தகங்கள் ஆகியவற்றைக் கேட்டால், 'என்ன சார், அதெல்லாம் வச்சாத்தான் சேல்ஸ் டாக்ஸ்காரங்களோட தொல்லையில மாட்டிக்கறமே. அதவிட டர்னோவர் ஜாஸ்திதான்னாலும் ரெக்கார்ட் வச்சிக்க பயமாருக்கு சார். நம்ம கணக்குபிள்ளைய வேணும்னா கூட்டிக்கிட்டு வரேன். நீங்களே கேட்டுக்குங்க.' என்பார்கள். அத்துடன் நில்லாமல், 'நீங்க குடுக்கறதுல எத்தன பர்சண்ட் ஒங்களுக்கு ஹி, ஹி.. அதான் சார்..' என்று சொல்லவந்ததை குறிப்பால் உணர்த்துவார்கள். எந்த மேலாளரிடம் எப்படி பேசினால் காரியம் கைகூடும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்து அதற்கேற்ப நடந்துக்கொள்வதில் இவர்கள் படு சமர்த்தர்கள்! மேலாளரை முதன் முதல் சந்திக்கச் செல்லும் நேரத்திலேயே அவருக்கு 'கொடுக்க' வேண்டியதை உறையிலிட்டு கொண்டு சென்று அதை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்துவிடுவார்கள். அதை வாங்கிக்கொண்டுவிட்டால் அந்த மேலாளர் தீர்ந்தார். அதைச் சொல்லிச் சொல்லியே அவரிடமிருந்து கறக்க வேண்டியதை கறந்துவிடுவார்கள். இத்தகைய வாடிக்கையாளர்களும் கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவார்கள். ஆனால் காலங்கடந்து மேலாளரை நடையாய் நடக்க வைத்ததற்குப் பிறகு. மேலாளர் வங்கி நியதிகளைச் சுட்டிக்காட்டி மிரட்டினால்.. 'என்ன சார் என்னமோ ரூல் படி கடன் குடுத்தா மாதிரி பேசறீங்க. வாங்க வேண்டியத வாங்கிக்கிட்டுத்தான குடுத்தீங்க? போங்க.. எப்ப முடியுமோ அப்ப கட்டறேன். ஏமாத்த மாட்டேன் சார்.' என்பார்கள் பதிலுக்கு..

சரி.. முந்தைய மேலாளர பத்தி சொல்றேன்னுட்டு வாடிக்கையாளர்கள பத்தி சொல்லிக்கிட்டே போறீங்களே என்று கேட்பது தெரிகிறது..

வாடிக்கையாளர்களில் சில வகைகளைப் பற்றி சொல்லி விட்டேன்.. இன்னும் சிலவகை வாடிக்கையாளர்களைப் பற்றி நாளை சொல்கிறேன்.

அத்துடன் நில்லாமல் வாடிக்கையாளர்களைப் போலவே மேலாளர்களிலும் பலவகைப் பட்டவர்கள் உள்ளனர். அதைப்பற்றியும் சொல்கிறேன்..

பிறகு புரியும் நான் என்ன சொல்ல வந்தேன் என்பது...

தொடரும்

26 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 29

அடுத்த நாள் வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட இடங்களில் கையொப்பமிடும் வேலையை என்னுடைய உதவி மேலாளர் என்னுடைய மேற்பார்வையில் செய்வார். இதற்கும் காரணங்கள் உண்டு.

ஒன்று. சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாளில் நான் ஊரிலேயே இல்லை என்று ஆதாரத்துடன் வாதாடுவார்கள்.

இரண்டாவது சில சமயங்களில் அதாவது நான் கடனே வாங்கவில்லை என்று வாடிக்கையாளர் வாதிடும் சமயங்களில் கடன் வழங்கிய மேலாளரைத் தவிர அதே கிளையிலுள்ள வேறொரு அதிகாரியும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை கோர்ட்டில் அடையாளம் காட்ட வேண்டியிருக்கும்.

ஆனால் முந்தைய மேலாளர் ஏனோ ஆவணங்களை தயாரிப்பதிலிருந்து வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெறுவது வரை எல்லாவற்றையும் அவரே செய்திருந்தார். கிளையிலிருந்த மற்றொரு அதிகாரியுடைய ஈடுபாடு இதில் இருந்திருந்தால் ஆவணத்தில் நான் கண்ட தவறுகளை தவிர்த்திருக்க முடிந்திருக்கும். அத்துடன் அவரே கைப்பட தயாரித்திருந்ததால் வேறொருவரைக் கொண்டு அவற்றை சரிசெய்யவும் இயலாது.

இது கடன் பத்திரங்களில் இருந்த தவறுகள்.

கடனுக்கு ஈடாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களிலும் சில குளறுபடிகள் இருந்தன.

முந்தைய மேலாளர் நல்ல திறமைசாலி என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தன் ஒருவரால் மட்டுமே சரியாக செய்ய முடியும் என்ற எண்ணம் அவருக்கிருந்ததை அவருடைய செயல்பாடுகளிலிருந்து என்னால் உணர முடிந்தது. அவர் வழங்கியிருந்த பல கடன்களுக்குண்டான பத்திரங்களிலும் ஆங்காங்கே சிறு, சிறு தவறுகள் இருந்தன. இத்தகைய தவறுகள் கடன் வசூலிப்பதை பாதிக்க வாய்ப்பில்லையென்றாலும் அவற்றுள் ஒரு சில கடன்கள் வசூலாகமல் நின்றுபோய் வழக்காடு மன்றம் வழியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிவந்தால் பத்திரங்களிலுள்ள சிறு தவறுகளும் வழக்கு தள்ளுபடியாக காரணமாக இருந்துவிடக்கூடும். சில நீதிபதிகள் இத்தகைய தவறுகளை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உபயோகிப்பதையும் நான் என்னுடைய அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வங்கி அதிகாரிகள் விஷய ஞானம் உள்ளவர்களாயிருப்பதுடன் இதுபோன்ற தவறுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது என்ற எண்ணம் உடைய நீதிபதிகள் இதுபோன்ற காரணங்களுக்காக வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதுடன் அதற்கு காரணமான வங்கி அதிகாரிகளிடமிருந்தே நிலுவையில் நிற்கும் தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுவிடுவதுண்டு!

ஆகவேதான் கடன் பத்திரங்களை தயாரிப்பதிலும் அவற்றை கடன் தொகை முழுவதும் வசூலிக்கப்படும் வரை பாதுகாப்பதற்குமென பிரத்தியேக பயிற்சி வகுப்புகள் எங்களுடைய பயிற்சிக் கல்லூரியில் நடத்தப்படுவதுண்டு.

இருப்பினும் இத்தகைய தவறுகள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் எதிலும் அவசரம் என்ற போக்கும் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் மீது நம்பிக்கையில்லாத்தனமும்தான்.

இதில் வேறொரு சிக்கலும் இருப்பதை பெரும்பான்மையான மேலாளர்கள் உணர்வதில்லை. இத்தகைய பணிகளில் தங்களை ஈடுபடுத்தாத மேலாளர்கள் தவறுகள் இழைத்துவிடும்போது அவர்களுடைய உதவியாளர்கள் 'எங்களையெல்லாம் இதுல கலந்துக்கவே மாட்டார் சார். அதனால எங்களுக்கு ஒன்னும் தெரியாது.' என்று நழுவிவிடுவார்கள்.

அப்படித்தான் நடந்தது அந்த மேலாளருடைய விஷயத்திலும் நடந்தது. தவறுகளை திருத்துவது இருக்கட்டும். கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்களை கண்டுபிடிப்பதிலேயே சிக்கல் இருந்தது. பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் கடன் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு மட்டுமே வங்கிக்கு வருவார்கள். கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தும் வாடிக்கையாளர்களும் கூட வங்கி அலுவலகத்திற்கு நேரில் வந்து தவணையை செலுத்துவது மிகவும் அபூர்வம். அதுவும் நிறுவனங்களைப் பொறுத்தவரை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே வங்கிக்கு வந்து செல்வது வழக்கம். சில சமயங்களில் நிறுவனத்தின் சார்பாக பத்திரங்களில் கையொப்பமிடும் இயக்குனர்கள் அல்லது உயர் அதிகாரிகள் வங்கி மேலாளர்களை அவர்களுடைய அலுவலகத்திற்கே வந்து கையொப்பம் பெற்று செல்லுமாரு நிர்பந்திப்பதும் உண்டு. கடன் வழங்க நீ, நான் என்று போட்டிப் போடும் இன்றைய வங்கி உலகில் அதுவும் மும்பைப் போன்ற நகரங்களில் இது மிகவும் சர்வ சாதாரணம்.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கடன் பத்திரத்தை தங்களுடைய கைப்பட தயாரிக்கும்போது அதன் நம்பகத்தன்மையே விவாதப் பொருளாக மாறிவிடும் சூழலில் பத்திரத்தைத் தயாரித்த வங்கி அதிகாரியே நேரில் வந்து சாட்சியம் அளிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக நேரிடுவதுண்டு. அந்நேரத்தில் அதை தன் கைப்பட தயாரித்த அதிகாரி ஒருவேளை வெகுதொலைவிலுள்ள கிளைக்கோ அல்லது அலுவலகத்திற்கோ மாற்றலாகிச் சென்றிருப்பார். இருப்பினும் வழக்கில் அவருடைய சாட்சியம் தேவைப்படும் சமயங்களில் அவர் அங்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டி வரும். பத்திரங்கள் தயாரித்ததில் தவறுகள் ஏதும் இல்லாதிருக்கும் பட்சத்தில் வங்கியே சம்பந்தப்பட்ட மேலாளருடைய பயணச் செலவு மற்றும் தங்கும் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளும். இல்லையென்றால் தவறிழைத்த அதிகாரியே தன்னுடைய சொந்த செலவில் பயணம் செய்து சாட்சியமளிக்க வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் முன்கூட்டியே ஆலோசித்து செயல்படுவதற்கு அனுபவம் தேவை. அது இல்லாதிருக்கும் பட்சத்தில் என்னுடைய முந்தைய மேலாளரைப் போன்று சிக்கலில் சிக்கி அவதிப்பட வேண்டியதுதான்!

அன்று மாலை அலுவலக நேரம் முடிந்த பிறகும் என்னுடைய வட்டார மேலாளர் என்னுடன் அமர்ந்து கிளையிலிருந்த குறைபாடுகள் இருந்த கடன் பத்திரங்களையெல்லாம் முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன், 'ஒங்களுக்கு நா சொல்லாம கொள்ளாம வந்தது வருத்தமாயிருந்தாலும் எனக்கு என்னவோ நான் இன்னைக்கி வந்தது ஒங்களுக்கும் நல்லதாத்தான் இருக்கும்னு தோனுது. என்ன சொல்றீங்க?' என்றார்.

'உண்மைதான் சார். இல்லன்னா நா ஏதோ வேணும்னே அவர் மேல பழிபோடறதா நம்ம எச்.ஓவுலருக்கறவங்க நினைக்க வாய்ப்பிருக்கு.' என்ற நான் தொடர்ந்து என்னெ நல்லா தெரிஞ்ச நீங்களே அப்படித்தான சார் நினைச்சீங்க?' என்று லேசாக ஒரு 'உள்குத்து' வைக்க அவர் சிரித்தார்.
'Well said tbr, I deserve that.'

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு. 'இதற்காகவா அவரை இங்கிருந்து மாற்றியிருப்பார்கள்?' என்றார்.

நானும் 'அதானே' என்று நினைத்தேன். ஒருவேளை நம் கண்களுக்கு புலப்படாத தவறுகள் வேறு ஏதேனும் இருக்குமோ? அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது என்று ஓடியது என்னுடைய சிந்தனை. 'எனக்கும் அதுதான் சார் டவுட்டா இருக்கு. அது தெரியவரைக்கும் டென்ஷந்தான் சார். நீங்களாவது யார்கிட்டயாவது கேளுங்களேன்.' என்று அவரிடம் கேட்டேன்.

அவரும், 'Let me try tbr..' என்று உறுதியளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் என்னுடைய தலைமையக அதிகாரிகளாலும் அதை தெளிவாகக் கூற முடியவில்லை என்று அடுத்த நாள் என்னிடம் அவர் கூறியபோது என்னால் நம்பமுடியவில்லை. யாரோ எதையோ நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாமாகவே ஆராய்ந்து அது என்னவென்று தெரிந்துக்கொள்வது என முடிவு செய்தேன்.

கடந்த இரு வார காலங்களில் என்னால் இயன்றவரை முந்தைய மேலாளருடைய பணிக்காலத்தில் நடந்தவற்றையெல்லாம் ஆய்வு செய்திருந்ததால் என்னுடைய சந்தேகக் கண்களிலிருந்து அது தப்பிக்க வாய்ப்பில்லையென்றே நினைத்தேன்.

ஆனால் அடுத்த சில தினங்களில் நான் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து அது வெளிப்பட்டதும் முந்தைய மேலாளரை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

ஒரு வாடிக்கையாளருக்கு உதவி செய்வதில் தவறில்லை. ஆனால் அதற்கும் ஒரு வழிமுறை உண்டல்லவா? அதை எப்படி அவர் மறந்துபோனார் என்று வியந்தேன்.

அவருடைய செயலுக்கு அவருக்கு கிடைத்த தண்டனை லேசானதோ என்றும் தோன்றியது..

ஆனால் சில மாதங்கள் கழித்துத்தான் தெரிந்தது.. அவர் மாற்றபட்டது அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கத்தான் என்பது..

அவர் உண்மையிலேயே அப்பாவிதானா என்ற சந்தேகமும் எழுந்தது.

தொடரும்..

22 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 28

நான் கிளைக்கு பொறுப்பேற்ற முதல் ஒரு வாரத்தில் நான் கண்டவற்றிலிருந்து உணர்ந்ததைத்தான் என்னுடைய விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தேன் என்பதை விளக்கியும் என்னுடைய வட்டார மேலாளர் அதை மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டார். அதை மறுத்ததில்கூட எனக்கு வருத்தம் இல்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் கூடுதல் செலவு செய்தால் என்னுடைய பணியை முடித்திருக்க முடியும். ஆனால் அவர் நான் ஏதோ ஒரு உள்நோக்கத்துடந்தான் கூடுதல் அவகாசம் கேட்கிறேன் என்று என்னிடமே தெரிவித்தபோது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் அவருடன் வாதாடி அதுவரை அவருடன் எனக்கிருந்த சுமுகமான உறவை கெடுத்துக்கொள்ள விரும்பாமல், 'சரி சார். நீங்க அப்படி நினைக்கறதாருந்தா நா ஒன்னும் சொல்றதுக்கில்லை. நீங்க என் அப்ளிக்கேஷன ரிஜெக்ட் பண்ணி அனுப்பிருங்க.' என்று தொலைபேசியை துண்டித்தேன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த நாள் காலையில் சரியாக பத்து மணிக்கு அவரே என்னுடைய அலுவலகத்தில் ஆஜரானார். ஆய்வு என்ற போர்வையில். சாதாரணமாக ஒரு வட்டார மேலாளர் ஒரு கிளைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட மேலாளரை அழைத்து அவருடைய வசதியையும் கேட்டு தெரிந்துக்கொண்ட பின்னரே செல்வது வழக்கம்.

ஆகவே எனக்கு அவருடைய முன்னறிவிப்பில்லாத வருகை சற்று எரிச்சலை மூட்டினாலும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் 'இதுவும் நல்லதுக்குத்தான்' என்ற நினைப்பில் அவரை வரவேற்றேன்.

வந்தவர் இருக்கையில் அமர்ந்ததுமே, 'சொல்லுங்க டிபிஆர். எந்த டாக்குமெண்ட்சோட ஜெனூயின்னெஸ்ல ஒங்களுக்கு சந்தேகம். Take those documents' என்றது வேறு என்னுடைய எரிச்சலை தூண்டியது. நான் ஏதோ வேண்டுமென்றே முந்தைய மேலாளரை குறை சொல்லும் நோக்கத்துடன் பொய்யாக ஒரு குற்றசாட்டை முன்வைத்து கால அவகாசம் கோரியதுபோலிருந்தது அவருடைய பேச்சு.

இருப்பினும் நான் மறுத்துப் பேசாமல் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து நான் குறித்து வைத்திருந்த கடன்களுடைய பத்திரங்களையும் அவற்றிற்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களையும் மற்று ஆவணங்களையும் எடுத்து வர பணித்தேன்.

அந்த பத்திரங்கள்/ஆவணங்கள் ஆகியவற்றில் நான் கண்டிருந்த குறைபாடுகளை, ஐயங்களை குறித்து வைத்திருந்த குறிப்புகளை அவரிடம் காண்பிக்காமல் அவர் அவற்றை ஆய்வு செய்து முடிக்கும்வரை எனக்கிருந்த மற்ற அலுவல்களைப் பார்த்தேன்.

அடுத்த இரண்டு மணி நேரம் அவர் அதை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டு, 'இதுல நீங்க சொல்றா மாதிரி பெருசா ஒன்னும் குறைகள் இல்லையே டிபிஆர்.' என்றார் சலிப்புடன். நான் அமைதியாக குறித்துவைத்திருந்தவற்றை அவரிடம் நீட்டினேன்.

அவர் மறுமொழி பேசாமல் மீண்டும் பத்திரங்களை சரிபார்க்க ஆரம்பித்தார். நான் அவருடைய பணியில் தலையிடாமல் என்னுடைய அலுவலிலேயே குறியாயிருந்தேன். மீண்டும் ஒரு மணி நேரம் சென்றது.

இறுதியில் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பத்திரங்களை என்னிடமே திருப்பியளித்துவிட்டு என்னைப் பார்த்தார். 'I am sorry tbr. I should not have suspected your motives. இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க.'

என்னுடைய குறிப்புகளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, 'சார்.. என்னோட பிரடிசெசர ப்ளேம் பண்ணனும்னு எனக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனா ஒரு பிராஞ்சோட சார்ஜ் எடுக்கறப்ப சில விஷயங்கள வெளியில சொல்லாம இருந்தா எனக்கே அது வெனையா முடிஞ்சிருங்கறத நான் ஏற்கனவே அனுபவிச்சிருக்கேன். அதுவுமில்லாம எனக்கு இதுல சந்தேகம் இருக்குன்னு மட்டுந்தான் சொல்லியிருக்கேன். மேற்கொண்டு இந்த டாக்குமெண்ட்ஸ இன்வெஸ்ட்டிகேட் பண்ணணும்னுதான் கேட்டிருக்கேன். நீங்க என் ரிக்வெஸ்ட ரெக்கமெண்ட் பண்ணி அனுப்பனா போதும்.' என்றேன்.

'நீங்க சொல்றது வாஸ்தவம்தான் டிபிஆர். ஆனா இத நா ரெக்கமெண்ட் பண்ணேன்னா ஹெட் ஆஃபீஸ்லருந்து அப்படியென்ன டாக்குமெண்ட்ஸ் மேல டவுட்.. நீங்க ஏற்கனவே இதையெல்லாம் இன்ஸ்பெக்ட் பண்ணதுதானே.. நீங்க ஜோனல் மேனேஜரா இருந்தப்போ குடுத்த லோன்ஸ்தானேன்னுல்லாம் கேள்வி கேட்காம இருக்க மாட்டாங்க. I do not know how it happened? I was entirely dependent on the reports furnished by our previous CM in charge of the credit department in our office. இந்த லோன்ஸ் எல்லாம் குடுக்கறப்பவே இப்படியொரு டிஃபெக்ட்ஸ் ப்ராப்பர்ட்டி டாக்குமெண்ட்ஸ்ல இருந்திருக்குன்னு தெரியவந்தா they will question me also tbr... that's why I hesitated to recommend your request.. That's is the reason I chose to come here and see the documents.. Sorry if you are offended by my sudden visit. I just could not help it.' என்றவர் சிறிது நேரத்திற்குப் பிறகு, 'Could this be the reason why he was transferred? நீங்க என்ன நினைக்கிறீங்க?' என்றார்.

நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் யார் வழியாக இந்த விபரம் தலைமையகத்துக்கு சென்றிருக்க முடியும்? முந்தைய ஓராண்டு காலத்திற்குள் எந்த ஆய்வும் நடந்திருக்கவில்லை. இதே வட்டார மேலாளர் மட்டுமே இருமுறை கிளைக்கு விஜயம் செய்திருந்தார். கடந்த நிதியாண்டின் இறுதியில் கிளையின் ஆண்டிறுதி நிதியறிக்கைகளை வெளியிலிருந்து வந்திருந்த தணிக்கையாளரைத் தவிர வேறு எவரும் கிளையை விஜயம் செய்திருக்காத சூழலில்.. வட்டார அலுவலகத்திற்கும் தெரியாமல் எப்படி இது தலைமையகத்திற்கு அதுவும் வங்கி முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்க முடியும்?

'என்னால இப்போ எதுவும் சொல்ல முடியல சார். ஆனா நம்ம எச்.ஓ குடுத்துருக்கற டைமுக்குள்ள என்னால இத டீட்டெய்லா இன்வெஸ்ட்டிகேட் பண்ண முடியும்னு தோனலை. இத என்னோட சார்ஜ் டேக்கிங் ரிப்போர்ட்லயும் குறிப்பிடாம இருக்க முடியுது. நீங்க தப்பா நினைச்சிக்கக் கூடாது.' என்றேன்.

அவர் உடனே, 'சேச்சே.. I will not prevent you from mentioning it in your report.' என்றார். 'ஆனா அதுக்கு முன்னால இதுக்கு என்ன ரெமடின்னும் யோசிக்கனுமே.'

'நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா அதுக்கு முன்னாலருந்த மேனேஜரோட ப்ரெசென்ஸ் வேண்டியிருக்கும். ஏன்னா இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாமே அவரே கைப்பட தயாரிச்சதுன்னு சொல்றார் நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர். அதனால அவர மறுபடியும் இங்க கொண்டு வரணும். அதுக்கு இந்த டிஃபெக்ட்சையெல்லாம் ரிப்போர்ட் பண்ணித்தான் ஆகணும். ஆனா என்னோட ரிலீவிங் மேனேஜர் ரிப்போர்ட்ல போட முடியாதுங்கறதும் உண்மைதான். அதனால ஒரு கான்ஃபிட்ன்ஷியல் ரிப்போர்ட் அனுப்பலாம்னு நினைக்கிறேன். அதுக்கு ஒங்க பர்மிஷன் வேணும்.'

'Yes.. That's a good idea.'

'அப்புறம், இன்னொரு சிக்கலும் இருக்கு சார்.'

'என்ன சொல்லுங்க?'

'சில டாக்குமெண்ட்சுலருக்கற டிஃபெக்ட்ச சரிபண்றதுக்கு சம்பந்தப்பட்ட கஸ்டமர்சோட கோப்பரேஷனும் வேண்டியிருக்கும்.'

அவர் உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்தார். 'ஆனா டிபிஆர். அதுலயும் ஒரு ரிஸ்க் இருக்கே?'

'நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது சார். டாக்குமெண்ட்ஸ்லருக்கற டிஃபெக்ட்ஸ் கஸ்டமர்சுக்கு தெரியவந்துரும்னு சொல்றீங்க.'

'ஆமாம். அப்புறம் அத வச்சே நம்மளால இந்த டாக்குமெண்ட்ச என்ஃபோர்ஸ் பண்ணமுடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு கடன அடைக்காம இழுத்தடிச்சாலும் செய்வாங்க இல்லையா?'

ஆம்.. என்னுடைய அனுபவத்தில் பல சந்தர்ப்பங்களில் இப்படி நடந்திருக்கிறது. சாதாரணமாக நான் ஒருவருக்கு கடன் வழங்குவதென தீர்மானித்தால் அதை வழங்க வேண்டிய நாளுக்கும் முந்தைய நாளே அமர்ந்து அவர்களிடமிருந்து பெற வேண்டிய அனைத்து ஆவனங்களையும் தயார் செய்து எந்த இடத்திலெல்லாம் அவர்களுடைய கையொப்பத்தைப் பெறவேண்டுமென்பதை பென்சிலால் X குறியிட்டு வைத்துவிடுவேன். (பேனாவால் குறியிடுவது சரியல்ல. ஏனென்றால் அந்த X குறியும் கையொப்பத்தின் ஒரு பாகமாக கருதப்பட்டுவிட வாய்ப்புள்ளது. இதை வைத்தே சில வாடிக்கையாளர்கள் அது எங்களுடைய கையொப்பமல்ல என்று கோர்ட்டில் வாதாடுவார்கள்! அப்படிப்பட்ட எத்தர்கள் நிறைந்த உலகத்தில் என்னைப்போன்ற வங்கி அதிகாரிகள் செய்யும் சிறு, சிறு தவறுகளும் சிக்கலில் முடிவதை பார்த்திருக்கிறேன்.).

தொடரும்..

21 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 27

நான் மதுரை கிளையிலிருந்து மாற்றப்பட்டது நான் எதிர்பாராதது. அதுவும் வட்டார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதை அறிந்ததும் மிகவும் சோர்ந்துபோயிருந்தேன்.

ஆனால் வட்டார அலுவலகத்தில் நான் இருந்த ஒருவருட காலம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தேன். சொல்லப் போனால் அதை நான் வெகுவாக விரும்பத் துவங்கிய சமயத்தில்தான் மீண்டும் என்னுடைய விருப்பத்தை கேட்டறியாமலே என்னை அங்கிருந்து மாற்றி மீண்டும் கிளை மேலாளர் பதவியை அளித்தனர்.

என்னுடைய திடீர் மாற்றத்திற்கான உத்தரவு தபாலில் வந்து சேர்ந்தது. சாதாரணமாக இத்தகைய மாற்றங்கள் குறைந்த பட்சம் ஒரு வார காலத்திற்கு முன்பாக தொலைபேசியில் தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் என்ன காரணத்தாலோ என்னுடைய தலைமையகம் நான் பணியாற்றி வந்திருந்த வட்டார மேலாளருக்குக் கூட விபரத்தை தெரிவிக்காமல் இருந்துவிட்டனர். ஆகவே எனக்கும் அதில் ஏதோ பங்கு இருக்கிறது என்று நினைத்து உத்தரவு வந்து சேர்ந்து ஒரு வார காலமாகியும் என்னை விடுவிக்காமல் இருந்தார் என்னுடைய வட்டார மேலாளர்.

இதை என்னுடைய சீஃப் மேலாளர் வழியாக அறிந்த நான் அவரிடம் நேரில் சென்று அங்கிருந்து மாற்றப்படுவதில் எனக்கும் விருப்பமில்லை என்றும் அவர் விரும்பினால் அதை ரத்து செய்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லையென்றும் தெரிவித்தேன். அவரும் அதை செயல்படுத்தும் விதமாக எங்களுடைய தலைமை எச்.ஆர் அதிகாரியை அழைத்திருப்பார் போலிருக்கிறது. அங்கிருந்து என்ன உத்தரவு கிடைத்ததோ தெரியவில்லை அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் என்னை விடுவிக்கும் உத்தரவை தயார் செய்து அன்று மாலையே ஒரு அவசர பிரிவு உபசார கூட்டத்தையும் ஏற்பாடு செய்து சென்று வா மகனே என்று அனுப்பி வைத்தனர்.

அன்று மாலை, அவரிடமிருந்து விடைபெறுவதற்காக வட்டார மேலாளருடைய அறைக்குள் நுழைந்தபோது ஒரு சில நொடிகள் நான் அறைக்குள் வந்ததையே கவனிக்காதவர்போல் நடித்ததைப் பார்த்த நான் என்மீது அவருக்கு ஏதோ மனத்தாங்கல் உள்ளது என்பதை உணர்ந்தேன்.அவரிருந்த மனநிலையில் நான் என்ன சொன்னாலும் எடுபடப் போவதில்லை என்பதை உணர்ந்த நான், 'Thank you for all your held and guidance Sir.' என்று மட்டும் கூறினேன்.

அவர் சட்டென்று என்னைப் பார்த்து. 'ஒங்கள இங்கருந்து மாற்றுனத என்கிட்டக் கூட முன்கூட்டியே கன்சல் பண்ணலேங்கறதுல எனக்கு லேசான வருத்தம் தான் டிபிஆர். ஆனா அதவிட பெரிய வருத்தம் ஒரு நல்ல மேனேஜர பிராஞ்சிக்கு வந்து ரெண்டு வருசம் ஆகாத நிலையில திடீர்னு என்ன ஏதுன்னு சொல்லாமலே எச்.ஓவுக்கு மாத்தினதுதான். இதுல டிராஜடி என்னன்னா போன வருசம் நம்ம ஜோன்லயே பெஸ்ட் மேனேஜர்னு அவார்ட் வாங்குனவர் அவர். என்ன காரணம்னு கேட்டா எங்கிட்ட கூட சொல்ல மாட்டேங்கறாங்க. நீங்கதான் அங்க போனப்புறம் கண்டுபிடிச்சி சொல்லணும்.' என்றார். அவருடைய முகத்திலிருந்த சலிப்பு என்னைக் குறித்து அல்ல என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

அவர் கூறியிருந்ததுபோலத்தான் இருந்தது என்னுடைய தலைமையகத்தின் செயல்பாடும். எங்களுடைய அப்போதைய வட்டார மேலாளர்களிலேயே சீனியரும் மிகுந்த அனுபவசாலியுமாக இருந்தவர் அவர். அவரிடமே தெரிவிக்காமல் அவருக்கு கீழ் இயங்கிவந்த அதுவும் கடந்த ஆண்டில் சிறந்த மேலாளராக தெரிவு செய்யப்பட்ட ஒரு மேலாளரை அப்பதவியிலிருந்து அகற்றியது துரதிர்ஷ்டம்தான். ஆகவே அவருடைய மனவருத்தத்தில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தேன். அதற்கு என்னையும் ஒரு பகடைக்காயாய் உபயோகித்ததில் எனக்கும் வருத்தம்தான்.

ஆனால் என்ன செய்ய? இந்த உத்தரவு என்னுடைய அப்போதைய வங்கி முதல்வரின் தலையீட்டால் இடப்பட்டது என்பதையும் அறிந்தபோது என்னுடைய வட்டார மேலாளரால் ஒன்றும் செய்ய இயலாமற்போனது. வங்கி முதல்வருக்கு நான் சற்று நெருக்கமாயிருந்ததால் ஒருவேளை எனக்கு சகாயம் செய்வதற்காக நன்றாக பணியாற்றிவந்த ஒரு மேலாளரை மாற்றியிருப்பாரோ என்ற ஐயமும் என்னுடைய வட்டார மேலாளருக்கு இருந்திருக்கவேண்டும். ஆகவேதான் அவர் என்னிடம் வருத்தத்துடன் இருந்தார் என்பதை பிறகுதான் நான் கேள்விப்பட்டேன்.

ஆக இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய சூழலில் நான் மீண்டும் மேலாளரானேன்.

***

நான் பதவியேற்க செல்வதற்கு முன்பே கிளை மேலாளர் அவருடைய உதவியாளரிடன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தார். அதுவும் ஒருவகையில் எனக்கு நிம்மதியாக இருந்தது. ஏனெனில் அவரும் என்னுடைய பேட்ச் மேட்தான். ஒரே காலக்கட்டத்தில்தான் இருவரும் மேலாளர் பதிவிக்கு உயர்த்தப்பட்டோம். நெடுங்காலமாக சிறிய, சிறிய ஊர்களில் மேலாளராக இருந்தவர் என்பதைத் தவிர எங்களுக்குள் அப்படியொன்றும் வித்தியாசம் இருக்கவில்லை.

அதற்கு முன்பு நான் பொறுப்பேற்றிருந்த கிளைகளை மேலாளர்களைப் போலல்லாமல் அவருடைய செயல்பாடு மிகவும் அருமையாக இருந்தது. அவர் பொறுப்பேற்றிருந்த தியதிலியிருந்து கிளையின் வர்த்தகமும் இரு மடங்காக உயர்ந்திருந்தது. லாப விழுக்காடும் அப்படியே. அவர் வழங்கியிருந்த கடன்களில் சுமார் ஐந்து விழுக்காடுக்கும் குறைவான கடன்களே வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன.

அத்தனை திறம்பட கிளையை நடத்திச் சென்றிருந்த ஒருவரை ஏன் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் மாற்றினார்கள் என்பதை கிளைக்கு பொறுப்பேற்ற ஒரு வார காலம் வரை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

சாதாரணமாக ஒரு கிளைக்கு பொறுப்பேற்ற தியதியிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் பொறுப்பேற்பு அறிக்கையை தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே பொறுப்பேற்றதுமே முந்தைய மேலாளர் வழங்கியிருந்த கடன்கள் அதற்கு ஈடாக வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், பொருட்கள் (Securities such as gold ornaments) ஆகியவற்றை சரிபார்த்து முடிக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் இவற்றை செய்து முடிக்க வங்கி அனுமதித்திருந்த ஒரு மாத கால அவகாசம் போறாமல் போகலாம். அத்தகைய சமயங்களில் அதற்குறிய விண்ணப்பம் ஒன்றை எழுத்து மூலமாக கால நீட்டிப்பிற்கான காரணங்களுடன் வட்டார அலுவலகம் மூலமாக தலைமையகத்திற்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் என்பதும் நியதி.

நான் பொறுப்பேற்றிருந்த கிளையின் வணிகத்தின் அளவு சற்று அதிகமானதாக இருந்ததுடன் முந்தைய மேலாளருடைய பதவி காலத்தில் சற்று அதிக அளவிலான எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட்டிருந்ததால் குறைந்தபட்சம் இருவார கால கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை என்னுடைய வட்டார அலுவலகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தேன்.

நான் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த காரணங்களுள் ஒன்று: 'முந்தைய மேலாளர் வழங்கியிருந்த கடன்களுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சில ஆவணங்களின் நம்பகத்தன்மையில் சில ஐயப்பாடுகள் உள்ளன. ஆகவே அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய போதிய நேரம் தேவை' என்று இருந்தது. இது என்னுடைய வட்டார மேலாளரை ஆத்திரமடையச் செய்திருந்தது.

'டிபிஆர் அவருடைய இன்ஸ்பெக்ஷன் புத்திய காட்ட ஆரம்பிச்சிட்டார்னு' நம்ம ஜோனல் மேனேஜர் சொல்றார் டிபிஆர். அதனால நீங்களே அவர்கிட்ட நேர்ல விளக்கணுமாம் என்று என்னை தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்தார் என்னுடைய சீஃப் மேனேஜர்.

என்னடாயிது சோதனை என்றிருந்தது எனக்கு

தொடரும்..

16 February 2007

கடந்து வந்த பாதை - ரவி 2

ரவியும் அவருடைய மனைவி மல்லிக்காவும் மாலையும் கழுத்துமாய் வீட்டு வாசலில் வந்து நின்றபோது அவருடைய தாயாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சாஸ்திரங்களின் மீதும் சம்பிரதாயங்களின் மீதும் தான் வைத்திருந்த நம்பிக்கையை தன்னுடைய சொந்த அதுவும் ஒரே மகனே மதிக்கவில்லை என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த மகன் தான் பார்த்து வைக்கவேண்டிய பெண்ணை மட்டுமே திருமணம் செய்துக்கொள்வான் என அக்கம்பக்கத்தினரிடமெல்லாம் கூறிவந்திருந்த அவருக்கு தன்னுடைய மகனுடைய செயல் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது என்பது அன்று அவர் நடந்துக்கொண்ட விதமே தெளிவாக எடுத்துக்காட்டியது.

அந்த சோக நிகழ்ச்சியை எத்தனை முயன்றாலும் வார்த்தைகளில் வடித்தெடுக்க இயலாது. ஏற்கனவே இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர் ரவி ரகசியமாய் அதுவும் வேறொரு இனத்தைச் சார்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு வந்து நின்றதை பார்த்தபோது கொதித்தெழ புதுமணப் பெண்ணை வரவேற்க வேண்டிய சமயத்தில் அது ஒரு துக்க வீடாக மாறிப்போனது.

ஆம்.. ரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் போய் மயக்கமடைந்து விழ ரவியின் தந்தை செய்வதறியாமல் திகைத்து நிற்க ரவி சடுதி நேரத்தில் மாலையைக் கழற்றிவிட்டு என்னுடைய வாகனத்தில் தாயைக் கிடத்த நானும் அவரும் அடுத்திருந்த மருத்துவமனையை நோக்கி ஓடினோம்.

இருவார சிகிச்சை. நினைவு திரும்பியது. ஆனால் ஒரு கை, கால் செயலிழந்துபோயின. பேச்சும் பறிபோனது.

அந்த நேரத்திலும் நிதானமிழக்காமல் தன்னுடைய மனைவியையும் தாயையும் அணைத்துச் சென்ற ரவியின் பக்குவத்தையும் அவனுக்கு துணையாய் நின்று மருமகளை வீட்டிற்குள் சேர்த்துக்கொண்ட அவனுடைய தந்தையையும் இப்போதும் நினைத்து வியக்கிறேன்.

அதுபோலவே புதுமணப்பெண் மல்லிகாவும். வயதுக்கு மீறிய பக்குவத்துடன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்த ரவியின் தாய்க்கு ஒரு கைதேர்ந்த தாதியைப் போல் அடுத்து வந்த சில மாதங்கள் சேவை செய்ததைப் பார்த்து அந்த குடியிருப்பில் இருந்த அனைவருமே வியந்து நின்றனர் என்றால் மிகையாகாது.

அடுத்த சில மாதங்களில் ரவியின் தாயாருடைய உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் அடைந்தது.

மல்லிகாவின் பணிவிடை அவருடைய மனதை மாற்றியிருக்கும் என்றுதான் நானும் மற்றவர்களும் நினைத்திருந்தோம். ஆனால் எங்களுடைய நினைப்பைப் பொய்யாக்கினார் அவர். செயலிழந்த கையும், காலும் சற்று சரியானதுமே தன் மருமகளை வெளியேற்றுவதிலேயே குறியாயிருந்தார் அவர். ரவியும் அவருடைய தந்தையும் எத்தனை முயன்றும் பலனளிக்கவில்லை. அவர் நினைத்திருந்தது மல்லிகாவை வெளியேற்றிவிட்டு தன்னுடைய மகனுக்கு வேறொரு திருமணம் வைப்பது என்று!

ஆனால் அதற்கு ரவி ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்று தெரிந்திருந்தும் அவர் அதிலேயே குறியாயிருந்ததுதான் வேதனை. ரவியின் தந்தை ஒரு சாதுவான மனிதர். மனைவி சொல்லை தட்டாத கணவர். தன்னுடைய மனைவி ரவி வீட்டில் இல்லாத சமயங்களில் மல்லிகாவிடம் நிர்த்தான்சயமாக பேசும் வார்த்தைகளுக்கு எதிர் பேச்சு பேச விரும்பியும் பேச முடியாத கோழை..

மல்லிகா குணத்தில் சொக்கத் தங்கம். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்து சகோதரனுடைய அரவணைப்பில் வளர்ந்திருந்த அவளுக்கு ரவியின் தாயாருடைய அரக்கக் குணம் பழகிப்போனது. எந்த ஒரு சுடுசொல்லுக்கும் புன்னகையையே பதிலாய் தந்தவரை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். 'என்ன பொண்ணும்மா நீ? அவங்க இவ்வளவு பேசறாங்க எப்படி பொறுத்துக்கறே?' என்று அந்த குடியிருப்பிலிருந்த அவர் வயதொத்த பெண்கள் சிலர் சீண்டிப்பார்த்தபோது அதற்கும் ஒரு புன்னகை..

ரவியின் தாயாருக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்த மல்லிகா ஒரு சமயத்தில் அந்த வேலையையும் ராஜிநாமா செய்ய நினைத்தபோது என்னுடைய மனைவி அதை எப்படியோ தடுத்து நிறுத்தினார். 'இல்லக்கா.. நா ஆஃபீசுக்கு போயி பெருசா என்ன ஆவப்போவுது? ரவியோட சம்பளமும், மாமாவோட பென்ஷனுமே ஜாஸ்திக்கா. மாமி எப்படியாவது நல்லபடியா ஆயி மறுபடியும் வேலைக்கு போனா அவங்க போக்குலயும் மாறுதல் இருக்கும்னு நினைக்கேன்..அதான்..' என்றவரை நானும் தலையிட்டு 'வேலைய மட்டும் விட்டுராதம்மா.' என்று தடுத்து நிறுத்தினோம்.

அதுவே வினையாய் போனது. தன்னுடைய தாயார் முழுவதும் நலமடையாத நிலையில் மல்லிகா பணிக்கு திரும்புவதை ரவியே விரும்பவில்லை. 'இன்னும் எதுக்கு மல்லி வேலை? அம்மா இப்ப என்ன சொன்னாலும் என்னைக்காவது ஒருநா ஒன்னெ ஏத்துக்காம போயிரமாட்டாங்க. அதனால நீ பேசாம ராஜிநாமா செஞ்சிட்டு வீட்டோடயே இரு. அம்மா மறுபடியும் வேலைக்கு போற நிலைம வந்ததும் நானே ஒனக்கு வேற ஒரு வேலை பார்த்து தரேன்.' என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் மல்லிகா வேலையை உதறுவதில் காட்டிய தயக்கம் ரவியை மேலும் ஆத்திரமூட்டியது.

நானும் என்னுடைய மனைவியும் கூறிய அறிவுரையால்தான் மல்லிகா வேலையை விட மறுக்கிறார் என்பதை எப்படியோ அறிந்துக்கொண்ட ரவி ஒரு சந்தர்ப்பத்தில் என்னையே எடுத்தெறிந்து பேசிவிட அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் தலையிட்டால் நமக்கு மரியாதையில்லை என்பதை உணர்ந்த நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் ரவியின் தந்தை என்னுடன் நட்பாகவே இருந்தார்.

அடுத்த சில மாதங்கள் அந்த குடும்பத்தில் அன்றாடம் நடந்த சச்சரவுகளையும் ரவியும் தன்னுடைய தாயாருடன் சேர்ந்துக்கொண்டு மல்லிகாவை பழித்துரைத்ததையும் பார்த்தும் பாராமுகமாக இருந்து அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்.. 'ஏங்க நம்மால என்ன பண்ண முடியும். மல்லிகாவுக்கு கவலப்படறதத் தவிர நம்மால் இப்போதைக்கி ஒன்னும் பண்ணமுடியாது.' என்றார் என் மனைவி.

ஒரு கட்டத்தில் அந்த குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்களுடைய சங்க செயலாளரே தலையிடும் அளவுக்கு குடும்பச் சண்டை பெரிதாகிப் போனது. 'இது எங்க குடும்ப விஷயம். ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க.' என்று அவரையும் ரவி எடுத்தெறிந்து பேச அவரும் வேறு வழியில்லாமல் ஒதுங்கிப் போனார். ரவியின் தாயாருடைய போக்கால் அந்த குடியிருப்பிலிருந்த பெரும்பாலோனோர் அந்த குடும்பத்தையே ஒதுக்க துவங்கினர்.

இதற்கு மல்லிகாவே காரணம் என்று கருதிய ரவியின் தாய் அவளை மேலும் தன்னுடைய வார்த்தைகளால் நிந்திக்க துவங்கினார். பொறுத்தது போதும் என்று நினைத்தாரோ என்னவோ ஒருநாள் திடீரென்று மல்லிகா யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதை முற்றிலும் எதிர்பாராத ரவி மல்லிகாவின் அலுவலக நண்பர்கள் மூலமாக அலைந்து திரிந்தும் பலனில்லாததால் கலங்கிப்போனார். அந்த குடியிருப்பிலிருந்த எல்லோருடனும் பகையை வளர்த்துக்கொண்டிருந்ததால் எவரும் அவருடைய உதவிக்கு வர முன்வரவில்லை. எனக்கு விருப்பமிருந்தும் தயக்கமாக இருந்தது.

காவல்துறையினரிடம் செல்லவும் அவர்களுக்கு தயக்கம். வேறு வழியின்றி ரவியின் தந்தை என்னை அணுகி, 'அவனெ பாக்கவே பாவமாயிருக்கு சார். அவனோட அம்மா பக்கம் பேசறதா நினைச்சி மல்லிகாவ திட்டுனாலும் அவனுக்கு அந்த பொண்ணு இல்லாம முடியல சார். அந்த அளவுக்கு அவ மேல உசிரையே வச்சிருக்கான்.. எல்லாத்தையும் அவ அம்மாவுக்காக மறைச்சி வச்சிருந்துருக்கான். ஒங்கக் கிட்ட வந்து உதவி கேக்கவும் தயக்கம். நீங்கதான் ஏதாவது செய்யணும் சார்.' என்றார் பரிதாபமாக.

நல்லவேளையாக என்னுடைய கிளையில் வாடிக்கையாளராக ஒரு உயர் காவல்துறை அதிகாரி இருந்தார். அடுத்த நாளே நான் ரவியை அழைத்துக்கொண்டு மல்லிகாவின் சமீபத்திய புகைப்படத்துடன் அவரைச் சென்று சந்தித்தேன்.

அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்திலேயே அவரிடமிருந்து அழைப்பு வந்தது. 'மிஸ்டர் ஜோசப், நீங்க மட்டும் வாங்க. அவருக்கு தெரிய வேணாம். ' என்ற அவருடைய அழைப்பின் பொருள் விளங்காமல் அவருடைய அலுவலகத்திற்கு ஓடிச் சென்றேன்.. 'மிஸ்டர் ஜோசப் நீங்க சொன்ன பொண்ணு இதா பாருங்க?' என்று ஒரு பெண்ணின் சடலத்தின் புகைப்படத்தை காட்ட நான் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் ஆமாம் என்று தலையை அசைத்தேன். முட்டாள் பெண்.. கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டாள்! 'சாரி சார்.. இத நீங்களே அவங்கக்கிட்ட சொல்ற விதத்துல சொல்லி அவர கூட்டிக்கிட்டு போய் ஜி.எச் மார்ச்சுவரியிலருக்கற பாடிய வாங்கிக்கிருங்க.'

எப்படிச் சொல்வேன் அவரிடம்?

ஆனால் சொல்லத்தானே வேண்டும், வேறு வழி?

நான் எதிர்பார்த்திருந்ததுபோலவே ரவி நிலைகுலைந்துப் போனார். அவருடைய தந்தையோ குற்றவுணர்வால் குன்றிப்போனார். ரவியின் தாயாரோ 'விட்டது சனியன். அந்த ஒடம்ப அவங்களே எரிச்சிக்கட்டும் நீ போகக்கூடாது.' என்றார் தன் மகனிடம்.

அப்போதும் தன்னுடைய மனைவியை எதிர்த்துப் பேச முடியாமல் எங்களைப் பார்த்து அழுத ரவியின் தந்தையை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. வெறுப்புடன் விலகிப் போனேன். ரவி முதன் முதலாக தன்னுடைய தாயை பொருட்படுத்தாமல் தன்னுடைய நண்பர்களுடைய உதவியுடன் மல்லிகாவின் உடலை பெற்று தகனம் செய்ய முனைய நானும் குடியிருப்பிலிருந்த சில ஆண்களும் அவருடன் சென்று ஈமக்கடனை நிறைவேற்றினோம். இறுதியில் திரும்பி வரும் நேரத்தில் அவர் என்னுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, 'நீங்க சொன்னப்பவே அவள கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிருந்தா என் மல்லிகாவ நா இழந்துருக்கவே மாட்டேனே சார்..' என்று கதறியழுத காட்சியை நெடுநாட்கள் என்னால் மறக்கவே முடியவில்லை.

அத்துடன் நின்றாரா அவர்?

அன்று இரவே தன்னுடைய படுக்கையறையிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார், தன்னுடைய முடிவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு!

மரித்தபோதும் தன்னுடைய தாயை குறைசொல்ல விரும்பாத அன்பு மகனாக!

அதன் பிறகு கதறியழுத அவருடைய தாயை அந்த குடியிருப்பிலிருந்த யாருமே தேற்ற முன்வரவில்லை. செய்தி கேட்டு வந்திருந்த அவர்களுடைய உறவினர்களும் விட்டேத்தியாக கடமைக்கு இறுதிச்சடங்கில் பங்குகொண்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

அடுத்த ஆறே மாதத்தில் இருவருமே அந்த குடியிருப்பில் இருக்க விருப்பமில்லாமல் வெளியேற நானும் அடுத்த சில மாதங்களில் சென்னையிலிருந்து மாற்றலாகிப் போனேன்.

அந்த குடியிருப்பை வாங்க யாருமே முன்வராமல் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் காலியாகவே கிடந்தது என பிறகு கேள்விப்பட்டேன்.

*****

15 February 2007

கடந்து வந்த பாதை - ரவி

ரவியை நான் சந்தித்த நாள் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

அப்போது அவருக்கு இருபது வயதிருக்கும். நான் எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளைகளுள் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த சமயம். 1988ம் வருடம்.

என்னுடைய மூத்த மகளுக்கு அப்போது ஐந்து வயது. நாங்கள் வசித்த குடியிருப்பில் சுமார் பத்து குடியிருப்புகள். கீழ் தளத்தில் நான்கு குடியிருப்புகள். அதில் ஒன்றில் நானும் எனக்கு அடுத்த குடியிருப்பில் ரவியின் குடும்பமும் இருந்தது. அப்பா, அம்மா பிள்ளை என சிறிய குடும்பம்.

'ரவிக்கப்புறம் ரெண்டு பொண்ணுங்க பொறந்தது. ஒன்னு குறைப்பிரசவம். இன்னொன்னு பொறந்து நாலு மாசத்துலயே போயிருச்சி. அதுக்கப்புறம் போறும்னு இருந்துட்டோம். பத்து மாசம் சொமந்து பெத்து பிறந்தவுடனே பறிகுடுக்கறதவிட பெரிய கொடுமை இல்ல சார்.' என்றார் ரவியின் தந்தை ஒரு நாள்.

உண்மைதான். எனக்கும் அப்படியொரு அனுபவம் இருந்ததால் அவர்களுடைய வேதனையை நானும் என் மனைவியும் முழுமையாக உணர்ந்தோம். என்னுடைய இரண்டாவது மகள் பிறந்து பத்தே நாட்களில் ஒரே நாள் காய்ச்சலில் மரித்துப்போனதை மறக்க முடியாமல் எத்தனை இரவுகள் நானும் என் மனைவியும் கலங்கிப்போயிருந்தோம்!

ரவியின் அப்பா ஒரு அரசு ஊழியர். குமாஸ்தா பதவியே போதும் என்ற முடிவுடன் இருந்தவர். 'எதுக்கு சார் ப்ரொமோஷன் ஒன்னுக்கு பின்னால ஓடி என்ன பிரயோசனம்? ஒரே ஊர்ல இருக்க முடியாது. ஒங்கள மாதிரி மூனு வருசத்துக்கு ஒரு தடவ ஊர்விட்டு ஊர் ஓடணும்.. நேரங்காலம் இல்லாத வேலை.. எதுக்கு இந்த தலவலின்னு நெனச்சித்தான் வேணாம்னு இருந்துட்டேன்.' என்றார் ஒருமுறை. ரவியோட அம்மாவும் சென்னையிலேயே இருந்த தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக இருந்தார். அவருடைய பள்ளிக்கு அருகிலேயே இருந்த அந்த கட்டடத்தில் சுமார் ஆயிரம் ச.அடிகள் கொண்ட குடியிருப்பை வாங்கி ஆறுமாத காலமே ஆகியிருந்தது.

நான் குடியிருந்த குடியிருப்பும் அதே அளவைக் கொண்டதுதான். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருடையதுதான். அவர் என்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுள் ஒருவர் என்பதால் எனக்கு சுமாரான வாடகைக்கு கொடுத்திருந்தார். என்னுடைய அலுவலகமும் குடியிருப்பிலிருந்து ஐந்து நிமிட நடை தூரம்தான்.

ஒருநாள் நான் அலுவலகத்திலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் ரவி என்னையழைத்து 'சார் ஒங்கக் கூட கொஞ்ச நேரம் பேசலாம்னுதான் கூப்ட்டேன்.' என்றார் தயக்கத்துடன். நான் வியப்புடன் 'சொல்லுங்க ரவி. என்ன புதுசா ஃபோன்ல கூப்டறீங்க? வீட்டுக்கு வரவேண்டியதுதானே?' என்றேன்.

'இல்ல சார்.. வீட்ல வச்சி பேசமுடியாது. நான் ஒங்க ஆஃபீசுக்கு எதிர்த்தாப்புலருந்துதான் பேசறேன். மேல வர்றதுக்கு முன்னாடி ஒங்கள கேட்டுக்கலாமேன்னுதான் கூப்ட்டேன்.. ஒங்களுக்கு அப்ஜெக்ஷ்ன் இல்லேன்னா..' என்று அவர் தயங்க நான், 'மேல வாங்க ரவி.. எனக்கென்ன அப்ஜெக்ஷன்' என்று நானே வாசல்வரை சென்று அவரை அழைத்துவந்தேன்.

அவருடைய முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. இருப்பினும் அவராக கூறட்டும் என்று காத்திருந்தேன்.

ரவி குடும்பத்திற்கு ஒரே பிள்ளை. அதுவும் அவருக்குப் பிறகு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் மரித்துப்போனதால் ரவியின் பெற்றோர் முக்கியமாக அவருடைய அன்னை அவர் மீது மிகவும் பொசஸ்சிவாக இருப்பவர்.

ரவியின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்ததால் ரவிக்கு உடனே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ரவி அப்போதுதான் படிப்பு முடிந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தார். நான்கிலக்க ஊதியம்தான் என்றாலும் அவருக்கு அது போறாது என்ற கணிப்பு. ஆகவே இனி இரண்டு அல்லது மூன்றாண்டுகள் போகட்டுமே என்று நினைத்திருந்தார். ஆனால் அவருடைய திருமணத்தை ஒத்திப்போட அதை அவருடைய பெற்றோர்கள் ஒரு தகுதியான காரணமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை.

'எதுக்கு இவன் இப்படியெல்லாம் நினைக்கிறானே தெரியல ஜோசப். எங்களுக்கு அவன் ஒரே பிள்ளை.. நாங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சதுல மிச்சம் புடிச்சித்தான் இந்த ஃப்ளாட்ட வாங்குனோம். நான் ரிட்டையர் ஆனாலும் பென்ஷன் வரும். என் வய்ஃப் ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் அஞ்சாறு வருசம் இருக்கு.. ரவிக்கு வர்ற சம்பளத்தோட சேர்த்து மொத்தமா குடும்பத்துக்கு இருபதாயிரத்துக்கு மேல மாசம் வருது. இது போறாதுன்னா இவன் இப்போ கல்யாணம் வேணாங்கறான்? நீங்களே எடுத்து சொல்லுங்க சார்.' என்றார் அவருடைய தந்தை ஒரு நாள்.

இது விஷயமாகத்தான் அவர் என்னை சந்திக்க நினைத்திருப்பார் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ரவி என்னிடம் கூறியது நேரெதிராக இருந்தது.

'சார்.. நா ஒரு பொண்ண விரும்பறேன். அதுவும் இந்துப்பொண்ணுதான். ஆனா வேற சாதி. என்னோட ஆஃபீஸ் கொல்லீக் சார்.'

நான் அதிர்ந்து போனேன். 'என்ன ரவி சொல்றீங்க? இது நடக்கற காரியமா? ஒங்கம்மா அந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதமானவங்களாச்சே?'

ஆம். ரவியின் தந்தை மட்டுமே என்னுடைய வீட்டிற்குள் வந்து அமர்ந்து எங்களுடன் சகஜமாக உரையாடுவார். அவருடைய தாயாரோ ஒதுங்கியே இருப்பார். சாஸ்திரம், சம்பிரதாயத்தில் ஊறிப்போன பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

'அதனாலத்தான் ஒங்கக்கிட்ட வந்தேன் சார்.. உதவி கேக்கறதுக்கு.'

'நானா என்ன சொல்றீங்க ரவி' என்றேன் குழப்பத்துடன். என்னால் அப்படியென்ன உதவி செய்துவிட முடியும் என்று தோன்றியது எனக்கு.

'நான் அந்த பொண்ணெ ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கறதுக்கு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும் சார்.'

நான் மீண்டும் அதிர்ந்துபோனேன். பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் இவரா? என்ன சர்வசாதாரணமாக கூறிவிட்டார்? அவருடைய வீட்டுக்கு அடுத்த குடியிருப்பில் வசிக்கும் நானே அவர்களுடைய பெற்றோர்க்கு எதிராக எப்படி இவருக்கு உதவ முடியும்? என்னை எதற்கு இவர் தர்மசங்கடத்தில் ஆழ்த்த நினைக்கிறாரே என்ற லேசான எரிச்சலும் எட்டிப்பார்த்தது.

'என்ன சார்.. ஒங்களுக்கே இதுல விருப்பம் இல்லையா? அப்படீன்னா சொல்லிருங்க சார். நா வேற ஏற்பாடு செஞ்சிக்கறேன்.' என்றவாறு எழுந்து நின்ற ரவியை தோள்களைப் பிடித்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினேன்.

'அப்படியில்ல ரவி. நம்ம ஏரியா ரிஜிஸ்திரார் ஆஃபீஸ் பக்கத்துலயே இருக்கு. ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கறதுக்குன்னு சில ஃபார்மாலிட்டீசெல்லாம் இருக்குன்னு ஒங்களுக்கு தெரியுமில்ல. அதுல ஒன்னு ஒங்க ரெண்டு பேரோட மேரேஜ் நோட்டிச முப்பது நாளைக்கு முன்னால் நோட்டீஸ் போர்ட்ல டிஸ்ப்ளே பண்றது. நம்ம வீட்டுக்கு கிட்டக்கவே இருக்கற ஆஃபீஸ்ல போடற நோட்டீஸ் ஒங்கப்பா கண்ணுலருந்து தப்புமா ரவி.. அப்படியே இல்லன்னாலும் வேற யாராவது பார்த்துட்டு ஒங்கப்பாக் கிட்ட போயி சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இது சரிவராது ரவி. ஐ ஆம் சாரி.'

அவர் என்ன நினைத்தாரோ மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் நான் தடுத்தும் கேட்காமல் வெளியேறினார்.

அவருக்கு நான் சொல்ல வந்தது புரிந்திருக்கும், ஆகவே இந்த எண்ணத்தை கைவிட்டுவிடுவார் என்றே நினைத்தேன்.

ஆனால் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாயிருந்தார் என்பது அடுத்த வாரத்திலேயே தெரிந்தது. ரிஜிஸ்தர் திருமணத்தில் இருந்த சிக்கலை உணர்ந்த அவர் அந்த பெண்ணை திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் புரிந்துக்கொண்டு மாலையும் கழுத்துமாக குடியிருப்பின் வாசலில் வந்து நின்றபோதுதான் விளங்கியது அவர் அன்று எடுத்திருந்த முடிவு என்னவென்று.

நாளை நிறைவு பெறும்..

02 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 26

அறிக்கையை எழுதி கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை என்ற நினைப்புடன் ஊர் திரும்பிய முதல் நாளே என்னுடைய இருக்கையில் அமர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் என்னுடைய மேலதிகாரி அதற்கு சம்மதிக்கவில்லை. ‘டிபிஆர். நீங்க ஊர்ல இல்லாதப்போ எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருச்சி. அதனால எங்கிட்டருக்கற ஃபைல்சையெல்லாம் ஒங்கக்கிட்ட ஒப்படைக்கச் சொல்லியிருக்கார் நம்ம ஜோனல் மேனேஜர். என்னெ ரிலீஃப் பண்றவர் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம் வுமாம். அதனால அதுவரைக்கும் நீங்கதான் என் வேலையையும் சேர்த்து பாக்கப் போறீங்க.’ என்றார்.

நேற்று இரவு ரயிலில் பயணம் செய்தபோதே ‘போதும் இந்த ஆய்வு வேலை. ஊர் திரும்பியதும் வட்டார மேலாளரிடம் கூறி இலாக்காவை மாற்றச் சொல்ல வேண்டும்’ என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது இவரும் மாறிப் போய் அவருடைய வேலையையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்று நொந்துப்போனேன்.

இனி புதிய சீஃப் மேலாளர் வந்து, பொறுப்பேற்று... அவருக்கு இதில் எவ்வளவு அனுபவம் இருக்கிறதோ தெரியவில்லையே. இதே போன்ற அலுவலகத்திலிருந்து வருபவராயிருந்தால் தேவலை. அதல்லாமல் வேறு ஏதாவது இலாக்காவிலிருந்து வருபவராயிருந்தால் அவருக்கு உதவியாக நம்மை இனியும் இதே இலாக்காவில் பிடித்து வைத்துவிடுவார்களோ என்று நினைத்தேன்.

‘சார்.. அப்ப இந்த இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்?’ என்றேன்.

‘அதுக்கு இப்ப என்ன அவசரம் டிபிஆர். சாதாரணமா ரிப்போர்ட் சப்மிட் பண்றதுக்கு ஒங்களுக்கு ரெண்டு வாரம் டைம் குடுக்கணுமில்லே.. இன்னைக்கும் நாளைக்கும் என் கூடவே இருந்து இந்த ஃபைல்சையெல்லாம் படிச்சி வச்சிக்குங்க. அப்புறம் புது சி.எம் வந்ததும் அவருக்கு நீங்கதான் ப்ரீஃப் பண்ண வேண்டியிருக்கும். என்ன சொல்றீங்க?’

என்னத்த சொல்றது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவருடனேயே அமர்ந்தேன். அவர் பொறுப்பிலிருந்த கோப்புகளையெல்லாம் வாசித்து குறிப்பெடுப்பதற்கு இரண்டல்ல, மூன்றல்ல அந்த வார இறுதிவரை ஆகிப்போனது. மனிதர் அத்தனை கோப்புகளில் முடிவெடுக்காமல் முடக்கி வைத்திருந்தார்!

சில அதிகாரிகள் இப்படித்தான். தங்களுக்கு அடியில் பணிபுரிபவர்களை மேய்ப்பதிலேயே குறியாயிருப்பார்களே தவிர தங்களுடைய பணியை சரிவர ஆற்றமாட்டார்கள். ‘ஊருக்குதானடி உபதேசம், உனக்கில்லையடி கண்ணே’ என்பதுபோல்தான்.

சாதாரணமாக சீஃப் மேலாளருக்கு கீழே பணிபுரியும் என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளை அவர் உடனுக்குடன் மேற்பார்வையிட்டு பைசல் செய்ய வேண்டும். அவருடைய அதிகாரத்துக்கு மேற்பட்ட கோப்புகளை வட்டார மேலாளருடைய பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென காலவரம்பு ஒன்றும் நிர்னயிக்கப்படவில்லையென்றாலும் தங்களிடம் வந்த கோப்புகளை அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கலாகாது என்பது நியதி.

அப்போதெல்லாம் கணினி வசதிகள் இல்லாததால் எந்த அதிகாரியிடம் எந்த கோப்பு எத்தனை நாள் இருந்தது என்பதை சரிவர கணிக்க முடியாதிருந்தது. கோப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டவுடனே அவரிடம் தேதியிட்டு கையொப்பம் பெற வேண்டும் என்பதும் நியதி. ஆனால் நம்முடைய மேலதிகாரியிடம் சமர்ப்பிக்கும் கோப்புக்கு தேதியிட்டு அவராக கையொப்பமிட்டுத் தந்தால்தான் ஆயிற்று. நாமாக அதை நிர்பந்திக்க முடியாது. மீறி நிர்பந்தித்தால் அனாவசிய பிரச்சினைதான் வரும். மேலதிகாரியுடனான சுமுக உறவை எதற்கு இதற்காக முறித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லா மேசை அதிகாரியும் நினைப்பார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் கோப்புகள் ஒரு மேசையிலிருந்து இன்னொரு மேசைக்கு நகரும்போது அதற்கென உள்ள மென்பொருளில் பதிந்துவிட்டுத்தான் நகர்த்தவேண்டும். ஆகவே எந்த மேசையில் எந்த கோப்பு எத்தனை நாள் இருந்தது என்று மிக எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆகவேதான் இப்போது இத்தகைய அலுவலகங்களில் பணியாற்ற எந்த அதிகாரியும் முன்வருவதில்லை!

கணினி இல்லாத சூழலில் இத்தனை கோப்புகள் என்னுடைய அதிகாரியிடம் குவிந்துக் கிடந்தன என்பதை எங்களுடைய வட்டார மேலாளரும் அறிந்திருக்கவில்லை என்பது நான் தயாரித்திருந்த பட்டியலை அவருக்கு சமர்ப்பித்தபோதுதான் தெரிந்தது.

இருப்பினும் மாற்றலாகிச் செல்பவருடன் சர்ச்சையில் இறங்குவதில் அர்த்தமில்லையென்று நினைத்தாரோ என்னவோ, ‘இத பெரிசு பண்ணி பலனில்லை டிபிஆர். ஒங்களால ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாருங்க.. இல்லையா அடுத்த சி.எம் வந்து பாத்துக்கட்டும்.’ என்றார் சலிப்புடன்.

கோப்புகளில் பெரும்பாலானவை என்னுடைய அதிகாரியின் வரம்புக்குள்ளேயே இருந்திருந்தும் அதை பைசல் செய்யாமல் ஏன் வைத்திருந்தார் என்பது புரியாத புதிராக இருந்தது.

சாதாரணமாக ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் இரண்டு சீஃப் மேலாளர்கள் இருப்பார்கள். ஒருவர் விடுப்பில் சென்றால் மற்றவர் அவருடைய பணிகளைக் கவனிக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே விடுப்பில் செல்லும் அதிகாரி தன்வசமுள்ள பைசல் செய்யப்படாத கோப்புகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

ஆனால் அதற்கு இரு அதிகாரிகளுக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். என்னுடைய அலுவலகத்திலிருந்த இரு அதிகாரிகளுக்குள் அது இருக்கவில்லையென்பது அவரிடமிருந்த பைசல் செய்யப்படாத கோப்புகள் உறுதி செய்தன.

‘நான் என்ன செய்யட்டும் டிபிஆர். ஒங்க சீஃப் மேனேஜர் லீவுல போறப்ப அவருடைய டேபிள் சாவிங்கள கூட என்கிட்ட குடுக்க மாட்டார். அப்படியிருக்கறப்போ நா எப்படி அவர் ஃபைல்ச பாக்கறது? கவலப்படாதீங்க, அத க்ளியர் பண்றதுக்கு நா ஒங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.’ என்று கூறிய மற்றொரு முதன்மை மேலாளர் அவர் கூறியபடியே அடுத்த இரு வாரங்களில் அவருடைய அலுவல்கள் முடிந்ததும் என்னுடன் அமர்ந்து புதிய அதிகாரி வந்து பொறுப்பேற்பதற்குள் மீதமிருந்த அனைத்து கோப்புகளையும் பைசல் செய்ய உதவினார்.

என்னுடைய அதிகாரிக்கு நேர் எதிரான குணம் கொண்டவராயிருந்தார் அந்த அதிகாரி. பொறுமை, பெருந்தன்மை, அயரா உழைப்பு என ஒரு மேலதிகாரிக்குரிய எல்லா தகுதிகளும் அவருக்கிருந்தன. அவரிடம் இருந்த ஒரே கெட்டப் பழக்கம் குடி. அதுவும் தன்னுடைய எல்லையை அறியாமலே குடிப்பார். பாவம் அந்த ஒரே கெட்டப் பழக்கம் மிக இளைய வயதிலேயே அதாவது பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மரணமடைய வைத்தது.

பந்தா பரமசிவம் என்று பெயர் எடுத்த என்னுடைய அதிகாரியோ நல்ல திடகாத்திரமான உடலுடன் தனக்குக் கீழ் பணியாற்றிய அனைவருக்கும் தொல்லையாயிருந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.. ஆனால் இறுதிவரை சீஃப் மேலாளராகவே இருந்தார் என்பது அவரிடம் அவதிப்பட்ட என்னைப் போன்ற மேசை அதிகாரிகளுக்கு ஒரு சின்ன ஆறுதல்!

நான் இறுதியாக ஆய்வுக்குச் சென்ற கிளையின் (ஆம். புதிய அதிகாரி வந்து பொறுப்பேற்றதுமே என்னை அவருடைய இலாக்காவிலிருந்து மாற்றுவதற்கு சம்மதித்தார். அவரும் மிக நல்ல அதிகாரிதான். அவர் இறுதியில் வங்கியின் ஒரே பொது மேலாளராக ஓய்வு பெற்றார்) அறிக்கையை தயாரித்து முடித்து புதிதாக பொறுப்பேற்றிருந்த அதிகாரியிடம் சமர்ப்பித்தேன்.

அவர் என்னுடைய வட்டார மேலாளரைப் போன்றே நாட்டின் எல்லா பெருநகரங்களிலும் மேலாளரக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் என்னுடைய அறிக்கையில் நான் மேலாளரின் அணுகுமுறையைப் பற்றி குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததும் என்னை அழைத்து, ‘டிபிஆர் இந்த ரிப்போர்ட்டை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால நான் அவர்கிட்ட ஃபோன்ல பேசிப் பாக்கறேன். I want to give him a final change to change his attitude.. If he doesn’t listen to me we wil go ahead with your report.’ என்றார்.

அவருடைய அறிவுரையை விட அவர் என்னிடம் பேசிய விதம் என்னைக் கவர்ந்ததால் நானும் சம்மதித்தேன்.

ஆனால் அந்த மேலாளருடைய துரதிர்ஷ்டம் சாந்தமான என்னுடைய சீஃப் மேலாளரையும் எரிச்சல் கொள்ள வைத்தது. அடுத்த சில நாட்களிலேயே என்னுடைய அறிக்கையை அப்படியே இறுதி செய்து வட்டார மேலாளருக்கு அனுப்பி வைத்தார்.

அவரும் வேறு வழியில்லாமல் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க ஒரே வாரத்திற்குள் அந்த மேலாளர் தண்டனைக்குறிய இடம் என எங்களுடைய வங்கி அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டிருந்தட கொல்கொத்தா நகருக்கு மாற்றப்பட்டார்.

அந்த தண்டனையும் அவரை மாற்றவில்லை. அங்கு வாடிக்கையாளர் ஒருவரிடம் எக்குத்தப்பாக நடந்து அங்கிருந்த மார்க்சிஸ்ட் தோழர்களால் தாக்கப்பட்டு, உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இறுதியில் வங்கியின் ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகி மிக இளம் வயதிலேயே பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதுதான் நான் ஆய்வு செய்த இறுதி கிளை..

அதன் பிறகு ஐந்து மாதங்கள் வட்டார அலுவலகத்தின் கடன் வழங்கும் இலாக்காவில் பணியாற்றினேன். சொல்லிக்கொள்ளும்படி எந்த சுவாரஸ்யமான அனுபவங்களும் இல்லை..

அதன்பிறகு அதாவது வட்டார அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்து ஓராண்டு நிறைவடையும் தருவாயில் முன்னறிவிப்பில்லாமல் மாற்றப்பட்டு சென்னையிலேயே ஒரு கிளைக்கு மேலாளராக்கப்பட்டேன்.

ஆனால் அந்த மாற்றம் ஒரு அப்பாவி மேலாளருக்கு தண்டனையாக அமைந்ததுதான் பரிதாபம்.

தொடரும்..

01 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 25

நான், ‘நீங்களும் ஒரு பொறுப்பான ஆஃபீசர்தானே நீங்க ஏன் நம்ம ஜோனல் மேனேஜருக்கு இன்ஃபார்ம் பண்ணலே?’ என்றேன்.

அவர் அதற்கு அளித்த பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

‘என்ன சார் சொல்றீங்க?’ என்றேன்.

‘ஆமா சார்.. இவர் பண்றத பொறுக்க முடியாம எங்க அசிஸ்டெண்ட் மேனேஜர்ல ஒருத்தர் நம்ம ஜோனல் மேனேஜர் போனதடவ விசிட்டுக்கு வந்திருந்தப்போ இவர பத்தி போட்டு குடுத்துட்டார். அவரும் கேரளாக்காரர்தான். என்னைய விட ரெண்டு வருசம் சீனியர் வேற. ஜோனல் மேனேஜரோட ஊர்காரர் போலருக்கு. அன்னைக்கி நம்ம மேனேஜருக்கு நல்லா டோஸ் விழுந்தது. நான் சொல்லித்தான் ஒங்கள இங்க போட்டுருக்கு. ஒங்கள எதுக்கு போட்டேனோ அதுல நீங்க கான்சண்ட்ரேட் பண்ணுங்கன்னு ஏற்கனவே ஒருமுறை ஒங்கக்கிட்ட சொல்லியிருக்கேன். அத விட்டுட்டு தேவையில்லாத விஷயங்கள்ல இறங்கி don’t spoil your career.. அவனவன் சொந்த ஊர்ல போஸ்ட்டிங் கிடைக்காதான்னு தவமிருக்கான். கிடைச்ச சான்ஸ கெடுத்துக்காதீங்க.. அவ்வளவுதான் சொல்வேன்..’ அப்படீன்னு அட்வைஸ் பண்ணிட்டு போய்ட்டார்.’ என்றதும் இவ்வளவுதானா என்று நினைத்தேன்..

என்னுடைய பார்வையிலும் அது தெரிந்திருக்க வேண்டும். ‘சார்.. நீங்க நினைக்கறா மாதிரி இல்லை. அடுத்த ரெண்டு நாள்ல நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர ஹாஸ்பட்டல்ல சேர்க்க வேண்டியதாயிருச்சி சார்.. கேட்டா ஸ்கூட்டர் க்சிடெண்ட்டுன்னு சொல்றார்.. ஆனா அத நேர்ல பாத்தவங்க.. ஒரு வேன் வந்து இவர முட்டித்தள்ளிட்டு போயிருச்சின்னு சொல்றாங்க.. மனுசன் ட்ரீட்மெண்ட்டுக்குன்னு ஊருக்கு போனவர்தான்.. அங்கயே யார் யாரையோ புடிச்சி டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போய்ட்டார். ரிலீஃப் ஆவறதுக்குக் கூட இங்க வரவேயில்லைன்னா பாத்துக்குங்களேன்.’

என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நம்முடைய வங்கியில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று நினைத்து மலைத்துப் போனேன். இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.. இதெப்படி நம் அலுவலகத்தில் தெரியாமற்போனது? அல்லது நம்மிடமிருந்து மறைத்துவிட்டார்களா?

‘இது நடந்து எவ்வளவு நாள் இருக்கும்?’ என்றேன்.

‘சுமார் அஞ்சாறு மாசம் இருக்கும் சார்..’

ஓ! அதாவது நாம் அலுவலகத்தில் வந்து சேர்வதற்கு இரு மாதங்களுக்கு முன்னர்.. அதனால்தான் நமக்கு இது தெரியாமல் போய்விட்டது. இருப்பினும் நாம் இங்கு ஆய்வுக்கு வரும்போது யாராவது நம்மை எச்சரித்திருக்கலாமே என்று நினைத்தேன்..

அதேசமயம்.. என்னவென்று சொல்லியிருக்க முடியும்? இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படாத விஷயமாயிருக்கலாம் அல்லவா?

அன்று நான் சென்றிருந்த இடங்களில் ஓரிருவரைத் தவிர வேறு எவரையும் சந்திக்கவியலாமல் சோர்ந்துப்போனேன். சந்தித்த ஓரிருவரும் அப்போதைய மேலாளரைக் குறைகூறுவதிலேயே குறியாயிருந்தனரே தவிர கடனை ஏன் திருப்பியடைக்க முடியவில்ல¨ என்றோ அல்லது இனியாவது சரிவர அடைக்கிறேன் என்றோ கூறாதது என்னுடைய சோர்வை கூட்டியது. இறுதியில் இதற்கு ஒரே வழி எங்களுடைய கிளை மேலாளரை இடமாற்றம் செய்வதுதான் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது

ஆகவே இனியும் வாடிக்கையாளர்களை சந்திப்பதில் பயனில்லை என்ற முடிவுடன் அன்று மாலை அலுவலகம் திரும்பியதும் அன்றே ஆய்வை முடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பலாம் என்று தீர்மானித்தேன்.

நாங்களிருவரும் அலுவலகம் திரும்பியதுமே நான் மீண்டும் மேலாளரை சந்தித்துப் பேச விருப்பமில்லாமல் நேரே வணிக ஹாலுக்குள் நுழைந்து கிளையிலிருந்து கொண்டு சென்றிருந்த கோப்புகளை வைத்துவிட்டு அருகிலேயே இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன். அலுவலக நேரம் முடிந்திருந்ததால் அலுவலகம் காலியாய் அமைதியாயிருந்தது.

என்னுடன் வந்திருந்த உதவி மேலாளர் தன்னுடைய மேலாளருடன் பேசிக்கொண்டிருந்தது மெலிதாக கேட்க அதை பொருட்படுத்தாமல் அன்று இரவு புறப்படவிருக்கும் ரயிலில் இடம் கிடைக்குமா என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சென்னையிலிருந்து சுமார் ஏழு மணி நேரமே பயணம் செய்ய வேண்டியிருந்ததால் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் அதுவும் முதல் வகுப்பு பெட்டி எப்போதுமே காலியாகத்தான் இருக்கும் என்று என்னுடன் வந்திருந்த அதிகாரி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.

மேலும் நேரத்தை வீணடிக்காமல் கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுந்து வாசலை நெருங்கினேன். போகும் வழியில் மேலாளருடைய அறைக் கண்ணாடி வழியாக ‘நா கெளம்பறேன்..’ என்று சைகைக் காட்டினேன். அவரை மீண்டும் சந்தித்து பேசும் மனநிலையில் நான் இல்லை.

ஆனால் அவரோ விடுவதாயில்லை.. அறைக்கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தார். நானும் வேறு வழியில்லாமல் அவருடன் அறைக்குள் செல்ல வேண்டியதாயிற்று.

அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டேன். இறுதியில், ‘இதை எதுக்கு எங்கிட்ட சொல்றீங்க? உங்க மேல எந்த தப்பும் இல்லேன்னு நான் எழுதணும்னா?’ என்றேன்.

‘ஆமா சார். அதுதான் உண்மை. நான் என்ன முயற்சி பண்ணியிருந்தாலும் இவங்கள்ல யாருமே கடன அடைச்சிருக்க மாட்டாங்க. ஏன்னா அவங்க யாருமே கடன திருப்பி அடைக்கணுங்கற நோக்கத்தோட எடுத்தவங்க இல்ல சார்.’

அவர் கூறியதை விட அதை அவர் கூறிய விதம் எனக்கு எரிச்சல் முட்டியாலும் பொறுமையுடன், ‘எப்படி சொல்றீங்க? நீங்கதான் அவங்கள யாரையுமே இதுவரைக்கும் போய் மீட் பண்ணலையாமே?’ என்றேன். ‘இன்னைக்கி நான் சந்திச்ச எந்த கஸ்டமரும் ஒங்கள சந்திச்சதாவே சொல்லலையே. ஏன் ஒங்க அசிஸ்டெண்ட் ஒன்னும் சொல்லலையா?’

அவர் எரிச்சலுடன் திரும்பி அறைக்கு வெளியே புறப்பட தயாராய் நின்ற தன் உதவி மேலாளரைப் பார்த்தார். சைகைக் காட்டி உள்ளே அழைத்து என் கண்ணெதிரிலேயே அவரை வசைபாட ஆரம்பித்தார். ‘ஏய்யா.. ஒங்கள இவர் கூட அனுப்புனது எதுக்கு? அந்த கஸ்டமர்ங்க நா அவங்கள போயி சந்திக்கலேன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணா நீங்க என்ன செஞ்சிருக்கணும்? ஏங்க இப்படி அபாண்டமா எங்க மேனேஜர் மேல பழிய போடறீங்கன்னு பதிலுக்கு கேட்டிருக்கணுமில்ல? அத விட்டுட்டு வாய மூடிக்கிட்டு நின்னீங்களா?’

ஆக மேலாளரைப் பற்றி அவருடைய உதவியாளர் என்னிடம் அன்று முழுவதும் கூறியது தவறல்ல என்பது உறுதியானது. இவர் யாரையும் போய் சந்திக்காமலிருந்தது கூட எனக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் அதை என்னிடமிருந்து மறைக்க முயன்றதல்லமால் தன்னுடைய உதவியாளரும் அதையே செய்திருக்க வேண்டும் என்று என் கண்ணெதிரிலேயே அவரை வசைபாடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் புறப்படும் நேரத்தில் இவருடன் சர்ச்சையில் ஈடுபட விரும்பாமல் எழுந்து நின்றேன்.

அவரோ அவ்வளவு எளிதில் என்னை விடுவதாயில்லை. ‘என்ன சார் எழுந்துட்டீங்க? நீங்க இதே எண்ணத்தோட போய் ஒங்க ரிப்போர்ட்ல எழுதிட்டீங்கன்னா.. நான் இங்க வந்து ஒரு வருசம் கூட ஆகலை சார்..’என்றார்.

‘நான் இப்ப என்ன செய்யணுங்கறீங்க? நீங்க எல்லா வாடிக்கையாளரையும் போய் மீட் பண்ணி ரிக்கவர் பண்ண முயற்சி செஞ்சீங்க.. ஆனா அவங்க யாருமே நேர்மையில்லாதவங்கன்றதுனால கடன நம்ம மேனேஜரால ரிக்கவர் பண்ண முடியல. அதனால எல்லார் மேலயும் கேஸ் போடறதுதான் நல்லது.. அப்படீன்னு எழுதச் சொல்றீங்களா?’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் வியப்புடன் என்னைப் பார்த்தார். ‘அதான் சார் உண்மை. இவர ஒங்கக்கூட அனுப்புனது நல்லதுக்குத்தான்னு இப்பத்தான் சார் புரியுது. இந்த மாதிரி அசிஸ்டெண்ட்டுங்கள வச்சிக்கிட்டு நா எவ்வளவு பாடுபடறேங்கறது உங்களுக்கு புரியணும்.. அத நீங்க நம்ம ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லணுங்கற நோக்கத்துலதான் இவர ஒங்கக்கூட அனுப்புனேன்.’

அதாவது இவர் தன்னுடைய கடமையை சரிவர செய்ய இயலாமற் போனதற்கு இவருடைய உதவியாளர்கள்தான் காரணம். அதை நான் என்னுடைய அறிக்கையில் எழுதி அவர்களை உடனே கிளையிலிருந்து மாற்ற வேண்டும்.

இவர் நான் நினைத்திருந்ததையும் விடவும் கைதேர்ந்தவராயிருப்பார் என்று நினைத்தேன். இனியும் இவரிடம் வாதாடிக்கொண்டிருந்தால் அன்று இரவு ரயிலில் எனக்கு இடமே கிடைக்காமல் போய்விடும் என்ற நோக்கத்துடன், ‘சரி சார். நான் என்ன எழுதணுங்கறத இப்ப என்னால தீர்மானம் பண்ண முடியல. நா இன்னைக்கே ராத்திரி வண்டியில கிளம்பி போறதா இருக்கேன். அதனால I would like to leave.’ என்றேன்.

‘என்ன சார் நாலு நாள்னு வந்துட்டு ரெண்டு நாள்லயே கெளம்பறீங்க? டிக்கட் கிடைக்காதே சார்?’ என்றார் அக்கறையுடன்.

நான் சிரித்தவாறு.. ‘Don’t worry.. I’ll manage.’ என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினேன். அன்றைய இரவு வண்டியில் இடம் கிடைக்காவிட்டால் அதே விடுதிக்கு திரும்பி வரலாம் என்ற நோக்கத்துடன் விடுதியில் கூறிவிட்டு அறையை காலி செய்துவிட்டு என்னுடைய வண்டி வருவதற்கு இன்னும் சுமார் இரண்டு மணி நேரம் இருந்தும் பயணச் சீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரயில் நிலையத்துக்கு விரைந்தேன்.

ஆனால் நான் கேட்காமலேயே என்னுடன் அன்று நாள் முழுவதும் இருந்த உதவி மேலாளர் எனக்கு முன்பே ரயில் நிலையத்திற்கு சென்று அவருக்கு பழக்கமான ரயில் நிலைய அதிகாரி வழியாக முதல் வகுப்பில் பயணச் சீட்டைப் பெற்று வைத்திருந்தார். நான் நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டு சீட்டுக்குண்டான பணத்தை கொடுத்தேன்.

‘சார்.. நம்ம மேனேஜர் சொன்னா மாதிரி எங்களப்பத்தி எழுதுவீங்களா சார்?’ என்றார் பரிதாபமாக.

நான் புன்னகையுடன், ‘அவர் சொன்னதுல உண்மை இருந்தா எழுதுவேன்..’ என்றேன்.

அவர் பதற்றத்துடன், ‘சார்.. அதுல கொஞ்சம் கூட உண்மையில்லை சார். நீங்க வேணும்னா நா இதுக்கு முன்னால வேல செஞ்ச மானேஜர் கிட்ட கேட்டுப் பாருங்க.’ என்றார்.

நான், ‘கவலைப்படாதீர்கள்... என்னுடைய வேலை அதுவல்ல.. ஆனால் நீங்களும் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்க மேல உங்க மேனேஜர் மிகவும் கோபத்துடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நீங்க இப்போ இங்கு வந்து எனக்கு உதவி செஞ்சீங்கன்னு தெரியவந்தாலும் அவர் ஒங்க மேல கோபப்பட வாய்ப்பிருக்கு. அதனால வண்டி வரும் வரை காத்திருக்காம புறப்பட்டு போங்க.’ என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தேன்.

நான் நினைத்ததுபோலவே மேலாளர் வண்டி நிலயத்துக்குள் வந்து சேர்வதற்கு பத்து நிமிடத்திற்கு முன் பரபரப்புடன் வந்து, ‘சார் கவலப்படாதீங்க நா நம்ம ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட சொல்லிருக்கேன். ஒங்களுக்கு நிச்சயம் பர்த் கிடைச்சிரும் என்றார்.’ பெருமையுடன்.

நான் அவருடைய உதவி மேலாளர் செய்த உதவியைப் பற்றி மூச்சு விடாமல் வண்டி வந்து நின்றதும் ஏறிக்கொண்டு அவருக்கு விடைகொடுத்தேன்..

தொடரும்..