29 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 24

வாடிக்கையாளர்களை சந்திப்பதென்று தீர்மானித்ததுமே தயங்கிய மேலாளர் அடுத்த நாள் காலையில் நான் கிளைக்குச் சென்றபோதும் என்னுடன் வருவதற்கு தயக்கம் காண்பித்தார்.

‘சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா என்னோட அசிஸ்டெண்ட் மானேஜர்ல ஒருத்தர ஒங்களோட அனுப்பறேனே. அவரும் இந்த ஊர்க்காரர்தான். போன மேனேஜர் இருந்தப்பவும் இங்க இருந்தவர்.’ என்றார் தயக்கத்துடன்.

எனக்கு அவருடைய போக்கில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும் முந்தைய தினம் அவருக்கும் நான் சந்திக்கச் சென்ற தணிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை நினைத்து அவருடைய ஆலோசனைக்கு சம்மதித்தேன்.

என்னுடைய சம்மதம் அவருடைய முகத்தில் ஒரு நிம்மதியை தெளிவாகக் காட்டியது. இவருடைய நடவடிக்கைகளைப் பற்றியும் இவருடைய உதவி மேலாளர் வழியாக தெரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதே என்பதுதான் அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மற்றுமொரு காரணம். நான் நினைத்ததுபோலவேதான் அன்றைய தினம் கழிந்தது.

எங்களுடைய கிளை இயங்கிவந்த நகரம் ஒரு நடுத்தர நகரம். நாற்சக்கர வாகனத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் நகரிலிருந்த வணிகசந்தையைச் சுற்றிப் பார்த்துவிட முடியும்.

நகரின் பிரதானத் தொழில் பருத்தி நூற்பாலைகள் மற்றும் ஜின்னிங் ஆலைகள். நகரைச் சுற்றிலுமிருந்த கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பருத்தி விவாசயத்தில் பெருமளவில் ஈடுபட்டிருந்ததே இதற்குக் காரணம்.

ஜின்னிங் ஆலைகள் பருத்தியைக் கொள்முதல் செய்து அதிலிருந்த பருத்திக்கொட்டைகளை தனியே பிரித்து பருத்தியை நூற்பாலைகள் பயன்படுத்த தயாரான நிலைக்குக் கொண்டுவந்து நூற்பாலைகளுக்கு விற்பது வழக்கம்.

இத்தகைய ஜின்னிங் ஆலைகள் தங்களுக்குத் தேவையான பருத்தியை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில்லை. இதற்கெனவே தரகர்கள் இருந்தனர். இத்தரகர்கள் ஒவ்வொருவருடைய கட்டுப்பாட்டிலும் பல ஏழை விவசாயிகள் இருந்தனர். விவசாயத்திற்கு தேவையான விதை, உரம், பராமரிப்பு மற்றும் இதர சிலவுகளுக்கு அசுர வட்டிக்கு கடன் வழங்கும் தரகர்கள் அவர்களுடைய விளைச்சல் முழுவதையும் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து ஜின்னிங் தொழிற்சாலைகளுக்கு விற்றுவந்தனர்.

நகரிலிருந்த பெரும்பாலான ஜின்னிங் ஆலைகள் தங்களுடைய தேவைக்கு மிகுதியான திறனை (Surplus capacity) ஒப்பந்த அடிப்படையில் (On contract) ஆலையை பிறருடைய பயன்பாட்டிற்கு வழங்குவதுண்டு.

இவ்வசதியையும் தரகர்களை ஆக்கிரமித்துக் கொள்வதைப் பார்த்தேன். இத்தகையோருக்குத்தான் பெரும்பாலான வங்கிககளும் விவசாயக் கடன் என்ற பெயரில் சலுகை வட்டியில் கடன் வழங்கியிருந்தன.

நான் அன்று சந்திக்கச் சென்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இத்தகைய தரகர்களாகவே இருந்தனர். என்னுடைய மேலாளர் கூறியதைப் போன்று அவர்கள் வங்கிக்கு அளித்திருந்த விலாசம் போலியானதல்ல. ஆனால் அவர்களில் எவருமே அந்த விலாசத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

இவர்களில் பெரும்பாலோனோர் நகரைச் சுற்றியிருந்த கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பதுடன் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்தியை நேரடியாக ஜின்னிங் ஆலைகளுக்கு விற்பதுடன் மீதமுள்ள பருத்தியை பதப்படுத்த இவர்களே ஜின்னிங் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்வதுண்டு.

இத்தகைய அலுவல்களுக்கு நகரில் ஒரு சிறு அறையை - பெரும்பாலான அறைகள் நூறிலிருந்து இருநூறு சதுர அடிக்கும் குறைவான அளவிலேயே இருந்தன – வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதை ஒரு அலுவலகம் போல் பயன்படுத்தத் தேவையான மேசை, நாற்காலிகள் தேவைப்பட்டால் சில இரவுகள் மட்டும் தங்குவதற்கு வசதியாக ஒரு சிறு படுக்கை ஆகியவற்றை அதில் இட்டு வைத்திருப்பார்கள். இந்த அலுவலக அறையின் விலாசம் மட்டுமே வங்கிகளுக்கு சமர்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களில் இருக்கும்.

இவர்களுக்கு தேவையான நிதியறிக்கைகளைத் தயாரித்து, வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிதியறிக்கைகளைப் பூர்த்தி செய்து தேவைப்பட்டால் அத்தகைய கடன்களுக்கு ஈடாக அளிக்கப்பட வேண்டிய கூடுதல் ஜாமீனுக்கு தேவையானவர்களைப் பிடித்துக்கொடுத்து, அத்துடன் நின்றுவிடாமல் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரைச் சந்தித்து அவரை ‘கவனிக்க’ வேண்டிய விதத்தில் கவனித்து கடனைப் பெற்றுத் தருவதற்கெனவே தரகர்கள் என்ற போர்வையில் இயங்கிவந்தவர்களுள் பெரும்பாலோனோர் தணிக்கையாளர்கள் என்றால் மிகையாகாது.

கடன் வழங்குவது வங்கி மேலாளர்களுடைய அன்றாட அலுவல்களில் முக்கியமானது. வங்கியின் தகுதிகளை சரிவர பூர்த்திசெய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் கிடைப்பது அரிதல்லவா? அதுவும் வங்கி இயங்கி வரும் நகருக்கு முற்றிலும் புதியவர்களான வங்கி மேலாளர்கள் கடன் வழங்க சார்ந்திருப்பது இத்தகைய தரகர்கள் என்ற புல்லுருவிகளைத்தான்.

அத்துடன் விவசாயத்தைப் பற்றி நகரிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் பெரும்பாலான வங்கி மேலாளர்களுக்கு ஒன்றும் தெரிய வாய்ப்பில்லையே. பெரும்பாலான வங்கி அதிகாரிகள் விளை நிலங்களைப் பார்ப்பதே அதுதான் முதல் முறையாக இருக்கும். நான் தஞ்சையில் மேலாளராக பணியாற்றிய காலத்தில்தான் முதல்முறையாக பச்சைப்பசேலென்றிருந்த விளைநிலங்களைப் பார்த்தேன் என்றால் நம்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும்.

என்னைப் போன்ற ‘விவரம்’ உள்ளவர்கள்தான் பெரும்பாலான வங்கி அதிகாரிகள்!

நாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலான க்ளப்புகளில் இவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். வாரந்தர கூட்டங்களில் எங்களைப் போன்றோர்களிடம் நட்பு பாராட்டுவதிலும் சூரர்கள் இவர்கள். நகருக்கு புதியவர்களை இனங்கண்டுக்கொள்வதிலும் சமர்த்தர்கள். ‘சார் ஊருக்கு புதுசு போலருக்கு? கவலைப்படாதீங்க சார், அதுக்குத்தான நாங்க இருக்கோம். ஒங்களுக்கு என்ன வேணும்னாலும் தாராளமாக எங்கக்கிட்ட சொல்லுங்க சார்.’ என்ற வார்த்தைகளுடன் நெருங்குவார்கள். எங்களுக்கு தங்குவதற்கு வீடு பிடித்துக்கொடுப்பது, குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது, காஸ் இணைப்பு பெற்றுத்தருவது என்று துவங்கும் இத்தகைய நட்பு நாளடைவில் வங்கி வணிகத்தைப் பெருக்குவதில் உதவி செய்வதில் நுழையும்.. பிறகென்ன? சுதாரிப்பில்லாத மேலாளர்கள் இவர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னாமவதைத் தவிர்க்கவியலாமல் போய்விடும்.

அப்படித்தான் நேர்ந்தது என்னுடைய முந்தைய மேலாளருக்கும். அவருடைய தந்தையும் நகரைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்து வந்தவர். விவசாயத்துடன் தையல் தொழிலையும் செய்து வந்தவர். தான் படும் அவஸ்தையை தன்னுடைய வாரிசுகளும் படலாகாது என்ற நோக்கத்தில் அவர்களை தன்னுடைய தகுதிக்கும் மீறி செலவழித்து படிக்க வைத்தவர். அதற்குத் தேவையான தொகையை கிராமத்திலிருந்த தரகர்களிடமிருந்து கடனாக பெற்ற பெற்றிருந்தவர்.

ஆகவே அவர்களுடைய நட்பைப் புறக்கணிக்கவியலாத சூழலில் இருந்தவர் அவருடைய மூத்த புதல்வரான என்னுடைய மேலாளர். போதாதற்கு தரகர்களின் தணிக்கையாளருடைய நட்பும் சேர அவர் பரிந்துரைத்திருந்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயிருக்கிறார். கிளைக்கு அடிக்கடி விஜயம் செய்த என்னுடைய வட்டார மேலாளர் அவர் சிக்கியிருந்த சூழ்ச்சி வலையிலிருந்து அவரை விடுவிக்கவே ஒரே வருடத்தில் அவரை அங்கிருந்து மாற்றி அதே நகரைச் சார்ந்த இப்போதைய மேலாளரை கிளை மேலாளராக நியமிக்க பரிந்துரைத்திருக்கிறார்.

அவருடைய கணிப்பில் இப்போதைய மேலாளர் நன்கு படித்தவர், திறமைசாலி, நகரில் நீண்டகாலமாக வசித்துவந்திருந்த ஒரு ஆசிரியர் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆகவே முந்தைய மேலாளர் வழங்கி நிலுவையிலிருந்த கடன்களை வசூலிப்பதில் அக்கறைக் காட்டுவார்.

ஆனால் அவருக்கு இவ்விரு மேலாளர்களுக்கும் இடையிலிருந்து அடிப்படைக் கருத்து வேறுபாடு தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவருடைய கணிப்பில் தவறேதும் இல்லையெனினும் அவர் நினைத்திருந்த நோக்கம் நிறைவேறாமல் போனது.

கிளைக்குப் பொறுப்பேற்ற நாள் முதலே இவர் செய்த ஒரே காரியம் முந்தைய மேலாளர் வழங்கியிருந்த கடன் வாடிக்கையாளர்களை எவருமே அவர்கள் அளித்திருந்த விலாசத்தில் இல்லையென்பதை வட்டார அலுவலகத்திற்கு தெரிவித்ததுதான். அத்துடன் அவர்களுக்கு நிதியறிக்கைகளைத் தயாரித்தளித்திருந்த தணிக்கையாளரைத் தேடிச் சென்று மல்லுக்கு நின்றது.

ஏற்கனவே முந்தைய மேலாளருடன் சிரமப்பட்டு வளர்த்திருந்த நட்பு முழுவதுமாக பயனளிக்கக் கூடிய நேரத்தில் அவர் மாற்றலாகிப் போனாரே என்ற கடுப்பில் இருந்த தணிக்கையாளர் புது மேலாளர் தனக்கு அடியோடு பிடிக்காத பால்ய ஆசிரியரின் மகன் என்ற எரிச்சலும் சேர்ந்துக்கொள்ள அவரை அவமதிப்பதிலேயே குறியாயிருந்திருக்கிறார்.

பிறகு கேட்க வேண்டுமா? அவர் வேண்டுமென்றே நாணயமற்ற இடைத் தரகர்களை வங்கிக்கு சிபாரிசு செய்திருக்கிறார் என்று வட்டார மேலாளருக்கு புகார் அனுப்பி தணிக்கையாளருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறார். அத்துடன் நில்லாமல் தன்னுடைய தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை தொழில் செய்துவந்திருந்த வளாகத்திலிருந்தே குடிபெயர வைத்திருக்கிறார்!

நம்மில் சிலருக்கு ஒரு காரியத்தை செயல்படுத்த முடியாததென வரித்துக்கொண்டுவிடும் பழக்கமிருப்பதால் அதை செயல்படுத்த முயல்வதையும் தவிர்த்து விடுகிறோம். அப்படித்தான் முந்தைய மேலாளரும். தணிக்கையாளர் பரிந்துரைத்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவருமே கள்வர்கள், நாணயமற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்திருந்ததால் அவர்களைத் தானாகச் சென்று சந்திக்க விரும்பாமல் தன்னுடைய சிப்பந்தியொருவரை விண்ணப்பங்களிலிருந்த விலாசத்திற்கு அனுப்பி அவர்கள் யாருமே அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்வதில் முனைந்திருக்கிறார்.

குறிப்பிட்ட விலாசத்தில் அவர்கள் இல்லையென்பது உண்மைதான் என்றாலும் அவர்களில் எவரும் கடனைத் திருப்பிச் செலுத்த மனமில்லாமல் இருந்தவர்களல்ல என்பது என்னுடன் துணைக்கு வந்த உதவி மேலாளர் கூறியபோதுதான் எனக்கு விளங்கியது. ‘சார்.. நம்ம மேனேஜருக்கு எங்க பழைய மேனேஜர ரொம்ப காலமாவே சுத்தமா புடிக்காது. அவர் இவர விட சாதியில குறைஞ்சவர்னு ஒரு எண்ணம். அவர் இங்க தலித் இனத்த சேர்ந்தவர்தான் சார். ஆனா குணத்துல இவரவிட தங்கம். பேங்க் வேலையில கூட இவர விட அவருக்குத்தான் சார் விஷயமும் தெரியும். ஆனா கொஞ்சம் வெகுளி. எல்லாரையும் நம்பிருவார். அந்த ஆடிட்டர் ஒரு சரியான ஃப்ராடுன்னு நாங்கல்லாம் சொல்லியும் கேக்காம அவர் ஏதோ கொஞ்சம் டெப்பாசிட் புடிச்சி குடுத்தத வச்சிக்கிட்டு அவர் அனுப்புன புரோக்கர்ஸ் எல்லாருக்கும் லோன் குடுத்துட்டார்.’ என்றவர் தொடர்ந்து, ‘ஆனா இவர் நினைச்சிருந்தா அத எல்லாத்தையும் ரிக்கவர் செஞ்சிருக்கலாம் சார். வேணுக்கும் எங்க ஆஃபீஸ் பியூன அந்த புரோக்கர்ஸ் இல்லாத நேரமா அனுப்பி அந்த அட்றஸ்ல யாருமே இல்லேன்னு ஜோனல் பீசுக்கு ரிப்போர்ட் பண்ணிட்டு சும்மா இருந்துட்டார். எங்களையும் அவங்கள பாக்க போகக்கூடாதுன்னு ஆர்டர் போட்டுட்டார். எங்க பியூன் போய்வந்த விஷயம் தெரிஞ்சி கடன அடைக்க வந்த சிலபேரையும் இவர் தாறுமாறா பேசி அவமானப்படுத்தி அனுப்பிட்டார் சார். அப்புறம் அவங்க எப்படி வருவாங்க?’ என்று வினா எழுப்பியபோது நான், ‘நீங்களும் ஒரு பொறுப்பான ஆஃபீசர்தானே நீங்க ஏன் நம்ம ஜோனல் மேனேஜருக்கு இன்ஃபார்ம் பண்ணலே?’ என்றேன்.

அவர் அதற்கு அளித்த பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

தொடரும்

நண்பர்களுக்கு: என்னுடைய 'என்னுலகம்' வலைப்பூவை புதிய பீட்டாவுக்கு மாற்ற பலமுறை முயன்றும் இயலாமற் போனதால் நான்
புதிதாக துவக்கியுள்ளேன். என்னுடைய இப்போதைய பதிவும் இதே பெயரில் உள்ளதால் ஒரே பெயரில் இரு பதிவுகள் குழப்பத்தை உண்டாக்கும் என்ற நோக்கத்துடன் இப்புதிய பதிவை தமிழ்மணம் இதுவரை பட்டியலில் சேர்க்க அனுமதியளிக்கவில்லை. ஆகவே வரும் 1.2.2007 முதல் இப்பதிவை தமிழ்மணத்திலிருந்து விலக்கிக்கொள்வதென முடிவு செய்துள்ளேன். அன்று முதல் என்னுடைய புதிய பதிவைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

8 comments:

sivagnanamji(#16342789) said...

presant sir

sivagnanamji(#16342789) said...

where can i read yr articles after 1 st feb?

Anonymous said...

ஜோசப் சார். நீங்க விலக வேண்டாம். உங்க என்னுலகமே தொடர்ந்து இருக்கலாம். அதுக்கு என்ன செய்யனும்னு வெட்டிப்பயலும் நாமக்கல் சிபியும் ஒரு பதிவு போட்டிருக்காங்க. அத ஒரு வாட்டி பாருங்க. இதையே நீங்க திரும்பவும் பயன்படுத்தலாம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அதுக்கு என்ன செய்யனும்னு வெட்டிப்பயலும் நாமக்கல் சிபியும் ஒரு பதிவு போட்டிருக்காங்க. அத ஒரு வாட்டி பாருங்க. //

அப்படியா.. படிச்சி பாக்கறேன். நன்றி.

tbr.joseph said...

வாங்க ஜி!

where can i read yr articles after 1 st feb? //

ஏற்கனவே இரு புது பதிவுகளை பீட்டாவில் பதிந்திருக்கிறேன்.

http://ennulagamnew.blogspot.com

http://enkathaiulagamnew.blogspot.com

தமிழ்மணத்தில் இன்னும் சேர்க்கவில்லை.

Anonymous said...

ஆனால் ஜோசஃப் அவர்களே,

அலுங்காமல் நான் புது பிளாக்கருக்கு மாறியாகி விட்டது. உண்மை கூறப்போனால், பிளாக்கர் என்னை கழுத்தை பிடித்து புது பிளாக்கருக்கு தள்ளி விட்டது.

அவ்வாறு மாறினால்தான் எனது இன்றையப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்த முடியும் என்ற நிலை.

ஆகவே தேவையான பட்டன்களை அழுத்தி ஐந்தே நிமிடத்தில் பிளாக்கரில் சேர்ந்தாயிற்று. தமிழ்மணம் தொடர்புகள், பின்னூட்டங்கள் வந்ததும் சம்பந்தப்பட்ட பதிவுகள் இற்றைப்படுதல் எல்லாமே நன்றாக நடக்கின்றன. ஆனால் டிஸ்ப்ளே பெயர் தமிழில் இருந்தால் ஜிலேபிகளாக உரு மாற்றம் அடைகின்றன.

எனது பழைய எண் 4800161 விடை பெற்று இப்போது புதிய எண் 11168674346665545885 எனது டிஸ்ப்ளே பெயரில் வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

அலுங்காமல் நான் புது பிளாக்கருக்கு மாறியாகி விட்டது. உண்மை கூறப்போனால், பிளாக்கர் என்னை கழுத்தை பிடித்து புது பிளாக்கருக்கு தள்ளி விட்டது. //

ஆனால் என்னை வேண்டாம் என்கிறதே:)

என்னுடைய கணக்கில் மூன்று பிளாகுகள் உள்ளன. எல்லாம் சேர்த்து 720 பதிவுகள்! அதுதான் காரணமாம்!

பதிவுகளை தூக்கியெறியலாம் என்றால் ஒட்டுமொத்தமாக அப்படி செய்யவும் வழியில்லை.. அதனால்தான் அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு புதியதை துவக்கினேன்.

ப்ளாகர் பீட்டாவிலிருந்து மாறும்போது இரண்டையும் இணைத்துக்கொள்ள வழியிருக்கிறது என்றது ப்ளாகர் நிர்வாகம். புதியதைத் துவக்க இதுவும் ஒரு காரணம்.

srishiv said...

ஐயா அருமை:) இப்படி சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்தாத மூளை எப்படி வீணாகின்றது என்பதற்கு அந்த மேலாளரும் ஒரு சாட்சி தானே? நான் இந்த பீட்டா வெர்சன் எல்லாம் மாறலை ஐயா, அப்படியே பழசுலேயே இருந்துக்க்கறேன், தொல்லை இல்லை :)
ஸ்ரீஷிவ்...:)
அகில உலக டிபிஆர் ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன்ற அசாம் தலைமை செயலாளர் :)