19 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 21

தமிழகத்தில் கோவை மாவட்டம் பருத்தி மில்களுக்கு எத்தனை பிரசித்தமோ அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இந்த மாவட்டம் இதற்கு மிகவும் பிரசித்தம்.

கோவை மாவட்டத்தின் பரப்பளவில் அரை பாகமேயுள்ள இந்த மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பருத்தி நூற்பாலைகள் இருந்தன. மாவட்டத்திலும் அதை சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி விளைவதே இதற்கு முக்கிய காரணம்.

ஆகவே இந்த மாவட்டத்தில் இயங்கி வந்த பல வங்கிகளிலிருந்து வழங்கப்பட்டிருந்த மொத்த கடன் தொகையில் ஐம்பது விழுக்காடுக்கும் கூடுதலாக இந்த தொழிலுக்கே வழங்கப்பட்டிருந்தது.

இந்த மாவட்டத்தில் சுமார் இருபது அண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்திருந்த எங்களுடைய வங்கியின் கிளையும் இதற்கு விதிவிலக்கல்ல. இவற்றுடன் மிளகாய், புகையிலை போன்ற விளை பொருட்களுக்கும் கடன்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருந்தன.

சாதாரணமாகவே விவசாயத்திற்கென வழங்கப்படும் கடன்களை வசூலிப்பது மிகவும் சிரமம். விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்கள் மற்றெந்த தொழிலுக்கும் வழங்கப்படும் கடன்களை விடவும் கூடுதல் விழுக்காடு வாராக் கடன்களாக மாறிவிடுவதற்கு பெரும்பாலான விவசாயிகள் பருவ மழையை நம்பியே இருப்பதே முக்கியமான காரணம்.

ஒரு வருடத்தில் நூறு கடன் கணக்குகள் வழங்கப்பட்டால் வருட இறுதியில் அவற்றில் சுமார் இருபதிலிருந்து முப்பது விழுக்காடு கடன்களில் வசூல் நிலுவையில் நிற்பதுண்டு. பருவ மழை பொய்த்துப்போய்விடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அளிக்கும் நஷ்ட அறிக்கையைப் பொருத்து கடன்கள் திருப்பி செலுத்துப்படும் கால அளவை நீட்டிப்பதுண்டு. தேவைப்பட்டால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மேற்கொண்டும் கடன் வழங்கப்படுவதுண்டு.

அனால் குறிப்பிட்ட கிளையில் முந்தைய இரண்டு வருடங்களில் வழங்கப்பட்டிருந்த் கடன்களில் எழுபது விழுக்காடுக்கும் கூடுதல் கடன்கள் வசூலிக்கப்படாமல் இருந்ததால்தான் அத்தகைய கடன்களை பரிசீலித்த எங்களுடைய மத்திய குழு இவற்றை வழங்கியதில் ஏதோ வில்லங்கம் இருக்கக்கூடும் என்று முடிவு செய்து உடனடியாக ஒரு ஆய்வுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டது.

இது மற்ற பொது ஆய்வுகளைப்போலல்லாமல் (General audit) முந்தைய இரண்டாண்டுகளில் கிளையிலிருந்து வழங்கப்பட்டிருந்த கடன் கணக்குகள், அதன் சம்பந்தப்பட்ட கோப்புகள் கியவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உத்தரவிடப்பட்ட ஆய்வு.

நான் ஆய்வு செய்யவிருந்த கடன் கணக்குகளின் எண்ணிக்கை சற்று அதிகமிருந்ததால் ஆய்வுக்கு செல்வதற்கு முன்பே எங்களுடைய அலுவலகத்திலிருந்த சம்பந்தப்பட்ட கோப்புகளை படித்து குறிப்பெடுத்துக்கொண்டு சென்றால் கிளையில் எளிதில் ஆய்வு நடத்தலாமே என்ற எண்ணத்துடன் கடன் வழங்கும் இலாக்கா தலைவரை அணுகினேன்.

அவருடைய அனுமதியுடன் என்னுடைய அலுவலகத்திலிருந்த கோப்புகளை வாசித்து குறிப்பெடுக்கவே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன.

அவற்றை முழுவதுமாக வாசித்து முடித்ததுமே இந்த கணக்குகளில் வசூல் தாமதமாவதில் வியப்பொன்றும் இல்லை என்று தோன்றியது.

ஒரு கிளையிலிருந்து வழங்கப்பட்டிருந்த கடன்களில் வசூல் நிலுவையில் நிற்பதற்கு தொழில், வணிகம் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை.

வணிகம் அல்லது தொழிலை வேண்டுமென்றே சரிவர நடத்தாமல் இருப்பது. அல்லது கடன் வழங்கப்பட்டிருந்தவருக்கு அதை சரிவர நடத்த தேவையான தகுதி இல்லாதிருப்பது.

தேவைப்பட்ட கடன் தொகையை முழுவதுமாக கிளை வழங்காமலிருப்பது அல்லது தேவைக்கும் கூடுதலாக வழங்குவது. இவை இரண்டுமே ஆபத்தானது.

எந்த வணிகத்திற்கு கடன் வழங்கப்பட்டதோ அந்த வணிகத்திலல்லாமல் அதற்கு வெளியே கடன் தொகையை முதலீடு செய்துவிட்டு நஷ்டப்படுவது.

வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன் இல்லாத வணிகத்திற்கு பொய்யான நிதியறிக்கைகளைத் தயார் செய்து சமர்ப்பித்து கடன் பெறுவது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏறத்தாழ இவை எல்லாமே அந்த கிளையில் நடந்திருக்க வாய்ப்புள்ளன என்பது சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து முடித்ததுமே எனக்கு விளங்கியது.

ஆனால் அதை என்னுடைய அலுவலகத்திலிருந்த எவரிடமும் விவாதிக்க முடியாத சூழ்நிலை. அப்படிச் செய்தால் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் வழங்க சிபாரிசு செய்த என்னைப் போன்ற மேசை அதிகாரிகள், அதை மேலும் பரிசீலித்து வட்டார மேலாளருக்கு பரிந்துரைத்த என்னுடைய அதிகாரியைப் போன்ற முதன்மை மேலாளர் என அனைவரையுமே குற்றஞ்சாட்ட வேண்டியிருக்கும்.

இத்தகைய குளறுபடிகள் என்னுடைய அலுவலகத்திலேயே நடந்திருக்க என்ன காரணம் என்று ஆராய முற்படுவதை விடுத்து கிளைக்குச் சென்று சம்பந்தப்பட்ட கடந்தாரர்களை நேரடியாக சந்தித்துவிட்டு வரலாம் என்ற முடிவுடன் கிளைக்கு புறப்பட்டுச் சென்றேன்.

நான் ஆய்வுக்கு சென்ற சமயத்தில் இருந்த மேலாளர் பதவியேற்று இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் அவர் அந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தவர். ஆகவே அவருக்கு நகரை முழுவதுமாக தெரிந்திருந்தது. என்னை விடவும் வயதில் இளையவராகவும் இருந்ததால் என்னுடைய ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நினைத்தேன்.

நான் என்னுடைய அலுவலக கோப்புகளிலிருந்து அறிந்தவற்றை அவரிடம் விவரிக்காமல் நான் ஆய்வு செய்ய வேண்டிய கணக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தியதிவாரியாக ஒவ்வொன்றாக எடுக்கச் சொன்னேன்.

அவருடைய அறையிலேயே அமர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த கோப்புகளிலிருந்த எல்லா நிதியறிக்கைகளையும் தனித்தனியே எடுத்து மேசையில் விரித்துவிட்டு அவரைப் பார்த்தேன். ‘ஒங்களுக்கு விளங்கியிருக்கும்னு நினைக்கேன். எனக்கு முதல்ல இந்த ஆடிட்டர பாக்கணும்.’ என்றேன்.

அவர் பதவியேற்று இரண்டு மாதங்களே ஆகியிருந்ததால் அவரும் இதை கவனித்திருக்க வாய்ப்பிருக்காது என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய ஊகம் சரியில்லையென்பது அவருடைய கண்களில் தெரிந்த அலட்சியத்திலிருந்தே என்னால் உணர முடிந்தது. ஒன்று இதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. அல்லது இதென்ன பெரிய அதிசயம் இது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தானே என்று நினைத்திருக்கவேண்டும்.

ஆம்! அந்த கோப்புகளிலிருந்த நிதியறிக்கைகள் எல்லாமே ஒரேயொரு தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்டிருந்தது.!

இதை ஏன் என்னுடைய அலுவலகத்திலிருந்து மேசை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை?

அதற்கும் காரணம் இருந்தது.

எங்களுடைய அலுவலகத்தின் கீழ் சுமார் நாற்பத்தைந்து கிளைகள் இயங்கி வந்திருந்தன. ஆனால் அவற்றிலிருந்து வரும் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குவதற்கென மொத்த மூன்று மேசை அதிகாரிகளே இருந்தனர். ஒவ்வொரு கிளையும் வாரம் ஒன்றிற்கு இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தாலே ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் எண்பது விண்ணப்பங்கள் வட்டார அலுவ்லகத்தை வந்தடையும். ஒவ்வொரு மேசை அதிகாரிக்கும் சுமார் முப்பது விண்ணப்பங்கள்.

இவற்றுள் ஒரே தணிக்கை அதிகாரி தயாரித்திருந்த நிதியறிக்கைகளைக் கொண்ட விண்ணப்பங்கள் ஒரே சமயத்தில் பரிசீலனைக்கு வர வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரே மேசை அதிகாரியிடம் வருவதற்கு வாய்ப்பேயில்லை. அத்துடன் கடன் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பரிசீலித்து முடிக்க வேண்டுமே என்ற நோக்கத்துடன் பணியில் இறங்கும் மேசை அதிகாரிகள் பெரும்பாலும் இயந்திரக்கதியில் அவற்றை பரிசீலிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் monotonous என்பார்களே அத்தகைய பணி என்பதால் மேசை அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பைசல் செய்யும் கோப்புகளின் எண்ணிக்கைதான் பெரும்பாலும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கும்.

மேசை அதிகாரிகளின் நிலையே இப்படியென்றால் சுமார் பத்து மேசை அதிகாரிகள் பைசல் செய்யும் கோப்புகளை மேல் பரிசீலனை செய்ய இருந்த ஒரேயொரு முதன்மை மேலாளரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அலுவலகத்திலிருந்து பைசல் செய்யவியலாத கோப்புகளைக் கட்டுக்கட்டாக வீட்டுக்குக் கொண்டு செல்பவரைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை பார்த்து பைசல் செய்ய முடியாத கோப்புகளை நள்ளிரவு வரை கண் விழித்து பரிசீலிக்க வேண்டிய சூழலில் அதில் என்ன தரத்தை எதிர்பார்க்க முடியும்?

சம்பந்தப்பட்ட கடன் தொகை அவர்களுடைய மதிப்பீட்டில் கணிசமானதாக இல்லாத பட்சத்தில் மேசை அதிகாரிகள் எழுதியுள்ளவற்றை கட்டுரை வாசிப்பதுபோல வாசித்து முடித்து அடியில் கையொப்பமிடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள்.

அதுவுமில்லாமல் ஒரு கடனை வழங்கும்போதே அது வாராக் கடனாகிவிடுமோ என்ற நோக்கத்தில் யாரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில்லை. அப்படி எதிர்மறையான நோக்கத்துடன் பரிசீலிக்க துவங்கினால் எந்த கடனையுமே வழங்க முடியாமல் போய்விடும்.

அதே சமயம் ஒரு கிளை மேலாளர் எத்தகைய நேர்மறையான கோணத்தில் (Positive angle) ஒரு கடன் விண்ணப்பத்தை பரிந்துரைக்கிறாரோ அதே கோணத்தில் வட்டார அலுவலகத்திலுள்ள மேசை அதிகாரியோ அதை பரிசீலிப்பதால் வரும் வினைதான் இது.

அத்துடன் வட்டார அலுவலகத்தில் இத்தகைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் மேசை அதிகாரிகள் ஏற்கனவே பல கிளைகளில் மேலாளராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டியது மிக, மிக அவசியம். ஆனால் நான் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய சமயத்தில் கிளை அனுபவமில்லாத சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி படித்து பட்டம் பெற்றிருந்த அதிகாரிகளே இவற்றை பரிசீலித்து வந்திருந்தனர். இதுவும் இந்த குழப்பத்திற்கு இன்னொரு காரணம்.

நான் சம்பந்தப்பட்ட தணிக்கையாளரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டதும் மேலாளர் யோசனையில் ஆழ்ந்தார். ‘சார் நா பொய் சொல்றேன்னு நினைக்காதீங்க.. அவர் நம்ம பிராஞ்ச்சுக்கு போன ரெண்டு வருசமா Statutory auditor இருந்திருக்கார். அந்த அசைன்மெண்டுக்கு அவர ரெக்கமெண்ட் பண்ணதும் நம்ம பழைய மேனேஜர்தான். அவருக்கு ஏதோ தூரத்து சொந்தம்னு கூட இங்க பேசிக்கறாங்க. அதனால...’

‘அதனாலென்ன.. அதுக்கும் நாம அவர போயி பாக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன் நான் வியப்புடன்.

அவர் ஏதோ கூற வந்து தயங்குவது போலிருந்தது.

‘என்ன சார்.. ஏதோ சொல்ல வந்தாப்பல இருந்துது? ஏதாருந்தாலும் சொல்லுங்க.’ என்றேன்.

‘அவர் இந்த அட்றஸ்ல இப்ப இல்ல சார். ஆஃபீசையே க்ளோஸ் பண்ணிட்டு போய்ட்டார்னு கேள்விப்பட்டேன்..’

கேள்விப்பட்டீங்களா? அந்த நகரத்தை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவதற்கு அரை மணி நேரம் கூட தேவைப்படாது. அப்படிப்பட்ட நகரில் ஒரு பிரபல தணிக்கையாளர் அலுவலகத்தை மூடிவிட்டு மறைந்துவிடுவது அத்தனை எளிதா என்ன? அப்படி அவர் சென்றிருந்தாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் 'கேள்விப்பட்டேன்' என்று கூறுபவரை என்னவென்று சொல்வது?

அவருடைய பொறுப்பில்லாத பேச்சு எனக்கு கோபத்தை மூட்டினாலும் பொறுமையுடன், ‘நீங்க எதுக்கு இவர பத்தி விசாரிச்சீங்க? ஒங்களுக்கு ஏற்கனவே இவர்தான் இவங்களையெல்லாம் நம்ம பேங்குக்கு ரெக்கமெண்ட் பண்ணியிருக்கார்னு தெரியுமா?’ என்றேன்.

அவர் சங்கடத்துன் மென்று விழுங்கியவாறு, ‘நா வந்து சார்ஜ் எடுத்தப்போ தெரியாது சார். ஆனா இங்கருக்கற அதர் ஆஃபீசர்ஸ்தான் சொன்னாங்க. அதத்தான் ஒங்கக்கிட்ட சொன்னேன்.’ என்றார்.

அப்போதும் அவருடைய குரலில் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது தென்படவே என்னால் கோபத்தை அடக்க முடியாமல் போனது. ‘சரிங்க.. உடனே நீங்க ஏன் நம்ம ஜோனல் ஆஃபீசுக்கு இன்ஃபார்ம் பண்ணலே?’ என்றேன் கோபத்துடன்.

அவர் பதிலளிக்காமல் நான் ஏன் சொல்லணும் என்பதுபோல் தோள்களை குலுக்கவே ‘ஒங்க ஃபோன எடுங்க.. I want to complain to our Zonal Manager about your attitude.’ என்றேன் கோபத்துடன். ‘நா வேலை மெனக்கெட்டு இந்த பாரோயர்ச பாத்து கடன வசூலிக்க வழியிருக்கான்னு பாக்க வந்துருக்கேன். நீங்க என்னடான்னா ஒங்களுக்கு சம்பந்தமில்லாதமாதிரி பிஹேவ் பண்றீங்க?’

அவரோ அதற்கும் கவலைப்படாமல் தொலைப்பேசியை எடுத்து என்னிடம் நீட்ட நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன் ஒரு சில நிமிடங்கள்..

தொடரும்..

4 comments:

G.Ragavan said...

ரொம்பச் சத்தம் போடுவீங்க போல இருக்கே? வீட்டுல சொல்ல உப்பு ஒறப்பு கொறைக்கச் சொல்லனும். அவரு வந்து ரெண்டு மாசத்துக்குள்ள என்ன செஞ்சிருக்க முடியும்!!!!

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப அனுபவம் இருந்தாலும் ஒத்துழைப்பு இல்லை, இள வயதினராக இருந்தாலும் அதே! பாவம்தான் சார் நீங்களும் உங்க சக ஆய்வாளர்களும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ரொம்பச் சத்தம் போடுவீங்க போல இருக்கே? //

உண்மைதான். அப்போ இருந்த டிபிஆருக்கும் இப்ப இருக்கற டிபிஆருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

வீட்டுல சொல்ல உப்பு ஒறப்பு கொறைக்கச் சொல்லனும். //

உப்பு சப்பில்லாத உணவுதான் கடந்த ஐந்தாண்டுகளாக.

அவரு வந்து ரெண்டு மாசத்துக்குள்ள என்ன செஞ்சிருக்க முடியும்!!!! //

இனி வரும் பதிவுகளில் எனக்கு வந்த கோபம் நியாயமானதுதான் என்பதை நீங்களே உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க இ.கொத்தனார்,

ரொம்ப அனுபவம் இருந்தாலும் ஒத்துழைப்பு இல்லை, இள வயதினராக இருந்தாலும் அதே! //

ஏறத்தாழ எல்லா மேலாளர்களுமே - என்னையும் சேர்த்து - ஆய்வாளர்களை ஒரு நியூசென்சாகவே பார்ப்பார்கள்.

ஆய்வாளர்கள் நமக்கு தெரிந்த நண்பர்களாக இருந்தால் மட்டுமே முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இல்லையென்றால் 'வேணும்னா நீயே கண்டுபிடி' என்கிற விதத்தில்தான் இருக்கும்.