18 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 20

என்னுடைய வட்டார அலுவலகத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே நான் பணியாற்றியிருந்தாலும் அங்கு எனக்குக் கிடைத்த பல அனுபவங்கள் என்னை எதிர் காலத்தில் நல்லதொரு வங்கி அதிகாரியாக மாற்றியது மட்டுமல்லாமல் எந்த சூழலையும் சந்திக்கக் கூடிய ஒரு முழு மனிதனாகவும் மாற்றியதென்றால் மிகையாகாது.

நான் முன்பே கூறியுள்ளபடி ஒரு மேலாளர் அவருடைய பதவிக்காலத்தில் அதிகபட்சம் பத்திலிருந்து பதினைந்து கிளைகளில் மட்டுமே பணியாற்ற முடியும். சுமார் ஐந்தாறு கிளைகளில் மேலாளராக திறம்பட பணியாற்றினாலே அடுத்த பதவிக்கான உயர்வு கிடைத்துவிடும். மேற்கொண்டு எந்த பதவி உயர்வும் வேண்டாம் என்று இருந்துவிடும் மேலாளர்கள் அதற்கு மேலும் தொடர்ந்து மேலாளர்களாக பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் அமைவதுண்டு.

இவர்களுள் பெரும்பாலோனோர் நல்ல வசதி படைத்த குடும்பங்களிலிருந்து வருபவர்களாகவோ அல்லது பணிக்கு செல்லும் மனைவியரைக் கொண்டவராகவோ இருப்பார்கள். ஆகவே அவர்களுடைய சொந்த ஊரை விட்டு அதிக தூரம் செல்ல விருப்பமில்லாமல் அடுத்து இருந்த பத்து பதினைந்து கிளைகளுக்குள்ளேயே மாற்றங்கள் கிடைக்கும் வண்ணம் மேலிடத்திலிருந்த அதிகாரிகளை வசியப்படுத்தி வைத்திருப்பார்கள்.

சொந்த ஊரிலிருந்து எத்தனை தூரம் அதுவும் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று பணியாற்ற விருப்பம் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. இதை மனதில் வைத்துத்தான் என்னுடைய சகோதரர்கள் பணிக்குச் செல்லும் மனைவியைத் தேடிப்பிடித்து திருமணம் செய்தபோதும் நான் மட்டும் பணிக்குச் செல்லாத பெண்ணைத் தேடிப்பிடித்து திருமணம் செய்துக்கொண்டேன்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண்களை விரும்பி மணந்த என்னுடைய சகோதரர்களுக்கு நேர் மாறாக நான் சென்னைப் பெண்கள் எனக்கு சரிபட்டு வராது என்று நினைத்தேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு. சென்னையைப் போன்ற பெருநகரங்களில் பிறந்து வளரும் பெண்கள் பெரும்பாலும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு தன்னிச்சையாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. அது ஒருவகையில் உண்மைதான் என்பதை என்னுடைய மற்றும் என் நண்பர்கள் பலருடயை குடும்பத்தில் நடந்திருந்த சில திருமணங்களே நிரூபித்திருந்தன. அவர்கள் என்னுடைய வங்கி கிளைகள் அமைந்திருந்த சிற்றூர்களில் வசிக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள் என்று கருதியே தூத்துக்குடி போன்ற சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்த பெண்ணை என்னுடைய மனைவியாகத் தேர்ந்தெடுத்தேன்.

நான் எடுத்த அந்த முடிவு எத்தனை சரி என்பதற்கு என்னுடைய மனைவியே சான்று. நான் எந்த ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலும் சற்றும் தயங்காமல் - ஒரேயொரு மாற்றத்தைத் தவிர. அதற்கும் நாந்தான் காரணம் - என்னுடன் வர தயாராக இருந்தவர் என்பதுடன் நான் மும்பையிலிருந்த காலத்தில் என்னுடைய இரு மகள்களுடன் சென்னையிலும் தூத்துக்குடியிலும் தனித்திருந்து திறம்பட குடும்பத்தை நடத்தி குடும்பத்தைப் பற்றிய கவலையே எனக்கு இல்லாமல் செய்தவர் என் மனைவி.

இன்றும் என்னுடைய  விருப்பமே தன்னுடைய விருப்பம் என்பதுபோல் இருக்கும் அவரைப்போல் சென்னை பெண்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. என்னுடைய இரு மகள்களும் அவரைப்போன்றே அமைந்திருப்பதும் - நல்லவேளைடா ஒன்னெப்போல முரண்டுபிடிக்காம இருக்குதுகளே ஒம் பொண்ணுங்க என்பார் என்னுடைய தாயார் அடிக்கடி - என்னுடயை அதிர்ஷ்டம்தான்!

சரி.. விஷயத்துக்கு வருவோம்..

ஒரு மேலாளர் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றலாகி எந்த ஊருக்கும் சென்று பணியாற்ற தயாராக இருந்தாலும் அவரால் அதிகப்ட்சம் பத்து கிளைகளுக்கு மேல் பணியாற்ற முடியாது.

ஆனால் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய சுமார் ஒரு வருட காலத்தில் நான் இருபதுக்கும் மேற்பட்ட கிளைகளை விசிட் செய்திருந்தேன். அங்கு நடைபெற்ற வணிகத்தின் அளவு, தரம், அதுபோன்ற இடங்களில் மேலாளர்கள் சந்தித்திருந்த நபர்கள், வாடிக்கையாளர்களிடம் சிக்கிக்கொண்டு அனுபவித்திருந்த இன்னல்கள், அவர்கள் சாதித்திருந்த சாதனைகள் இவற்றையெல்லாம் கண்டுணர்ந்து அதிலிருந்து பல நல்ல பாடங்களை என்னால் படித்துக்கொள்ள முடிந்தது.

அப்படியொரு கிளைதான் நான் அடுத்து ஆய்வுக்கு சென்றிருந்த கிளை.

எங்களுடைய தலைமையகத்தைச் சார்ந்த Irregular ஆccounts Review Committee தன்னுடைய கூட்டத்தை வங்கியின் எல்லா வட்டார அலுவலகங்களிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்துவதுண்டு. இதில் அங்கத்தினர்களான மூத்த இயக்குனர்களுடன் எங்களுடைய தலமையகத்தின் மூத்த அதிகாரிகளூம் கலந்துக்கொள்வார்கள்.

அக்கூட்டத்தில் எங்களுடைய அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த கிளைகளில் காணப்படும் இத்தகைய கணக்குகளின் முழு விவரத்தையும் அறிக்கையாகத் தயாரித்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது நியதி.

அத்தகைய கூட்டம் நடக்கவிருக்கும் தியதி நிச்சயிக்கப்பட்டவுடனேயே எங்களுடைய அலுவலகத்திற்கே காய்ச்சல் வந்ததுபோல் அனைவரும் இயங்க ஆரம்பித்துவிடுவோம். எஸ்.டி.டி தொலைப்பேசி அழைப்புகள் பிரபலமாகாதிருந்த அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு கிளையையும் டிரங்க் காலில் அழைத்து குறிக்கப்பட்ட மூன்று நிமிடத்திற்குள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த கணக்குகளின் அப்போதைய நிலையைக் கேட்டறிந்து  குறிப்பெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கணினியும் இல்லாதிருந்த அக்காலத்தில் கிளகைளிலிருந்து திரட்டப்பட்ட அனைத்து தகவல்களையும் தட்டச்சு இயந்திரத்தில் பட்டியலிட்டு முடிக்க வேண்டியிருந்தது. நம்முடைய அறிக்கையில் சிறு தவறு ஏற்பட்டுவிட்டாலும் மீண்டும் முழு அறிக்கையையும் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஒரு கிளை சம்பந்தப்பட்ட அறிக்கை கூட்டத்தில் பங்குபெற்ற கமிட்டி அங்கத்தினர்களான இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளிடையில் பெரும் அதிருப்தியைக் கிளப்பியது.

அங்கத்தினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்க முடியாமல் என்னுடைய வட்டார மேலாளரும் அவருக்கடுத்தபடியாக இருந்த இரண்டு முதன்மை மேலாளர்களும் தவித்த தவிப்பைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

'நீங்கள் ஜோனல் மேனேஜர் என்ற முறையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிளைகளுக்கு செல்கிறீர்களா இல்லையா? அப்படியென்றால் இக்கிளை எப்போது சென்றீர்கள்? ஏன் இந்த நிலமையை முன்னரே எங்களுடைய பார்வைக்கு கொண்டு வரவில்லை? சரி அது போகட்டும்.. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்களுடைய அலுவலகத்திலிருந்து மூன்றுநாள் ஆய்வுக்கு செல்ல வேண்டுமே. கடந்த முறை ஆய்வுக்கு சென்றவர் யார்? அவருடைய அறிக்கையில் கிளையின் இந்த கணக்குகளைப் பற்றி எந்த குறிப்பும் இல்லையா? அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

எந்தவொரு கேள்விக்கும் திருப்தியான பதில் எங்களிடமிருந்து வராமல்போகவே கூட்டத்தின் இறுதியில் 'இன்னும் இரு வாரங்களுக்குள் உங்களுடைய அலுவலகத்திலிருந்து ஆய்வு நடத்தி தெளிவான, முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என்று குழு உத்தரவிட என்னுடைய அதிகாரி என்ன நினைத்தாரோ அக்கிளைக்கு ஆய்வுக்குச் செல்ல தகுந்த ஆள் நாந்தான் என்று என்னை அந்த கூட்டத்திலேயே பரிந்துரைத்தார்!

அங்கத்தினர்களாயிருந்த இயக்குனர்களோ என்னை அப்போதுதான் முதன்முதலாக பார்க்கின்றனர். நான் கேரளத்தில் பணிபுரிந்திராததால் அவர்கள் ஒருவேளை என்னுடைய பெயரை வேண்டுமானால் கேட்டிருப்பார்கள் போலிருந்தது அவர்கள் என்னை மேலும் கீழும் பார்த்த விதம். ‘ஓ! நீதானா அது?’

ஆக, வங்கி நியதிகளை சகட்டு மேனிக்கு மீறியிருந்த இன்னுமொரு மேலாளருடைய கிளையை ஆய்வு செய்யும் பணி - சுமை என்றாலும் மிகப் பொருத்தமாகத்தான் இருக்கும் - என் தலையின் மீது விழுந்தது.

கூட்டம் முடிந்த கையோடு சம்பந்தப்பட்ட கிளையின் அறிக்கை நகலை நான் ஆய்வுக்கு செல்ல வேண்டிய உத்தரவுடன் சேர்த்து என் கையில் கொடுத்தார் என்னுடைய அதிகாரி. முந்தைய சில கிளைகளில் ஆய்வு நடத்தி நான் அளித்திருந்த வெளிப்படையான அறிக்கையில் சற்றே அதிருப்தியடைந்திருந்த வட்டார மேலாளருக்கு என்னை மீண்டும் அத்தகைய கிளையொன்றிற்கு அனுப்ப அவ்வளவாக விருப்பமில்லையென்பதை நான் கிளைக்கு புறப்படவிருந்த அன்று நேரிடையாக என்னிடமே நாசூக்காக தெரிவித்தார்.

‘Please don’t try to sensationalise your observations tbr. You can note down whatever you notice there.. But when you prepare the report please think for a while about the circumstances under which the BMs would have been forced to take those decisions. You should know that it is easy to criticise..’ என்று துவங்கி ஒரு லெக்சர் அடித்தார்.

என்னுடைய வட்டார மேலாளர் மிகவும் திறமையானவர், அனுபவசாலி, விஷய ஞானமுள்ளவர் என ஏற்கனவே எழுதியிருந்தேன்.

ஆனால் மிகவும் இளகிய மனசுள்ளவர் என்பதை நான் கூறவில்லையென்று நினைக்கிறேன். அதுவே அவருடைய பலஹீனம் என்றாலும் மிகையாகாது. அவரும் பல கிளைகளில் மேலாளராக இருந்ததால் அவருடைய பார்வை எப்போதுமே ஒரு கிளை மேலாளருடைய கோணத்திலேயே இருந்தது.

மேலும் அவர் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில் இத்தகைய வட்டார அலுவலகங்கள் இருந்திருக்கவில்லை. ஆகவே ஒரு சிறிய அளவு கடன் வழங்க வேண்டியிருந்தாலும் விண்ணப்பங்கள் நேரடியாக தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது அவருக்கு மேலிருந்த அதிகாரிகள் மிகவும் கண்டிப்புடன் அவரைப் போன்ற மேலாளர்கள் பரிந்துரைத்த விண்ணப்பங்கள் பெரும்பான்மையானவற்றை நிராகரித்து விடுவார்களாம்!

அப்போதிருந்த மனநிலையில் நாம் எப்போதாவது இப்பதவியில் அமர நேரும்போது நாம் இவர்களைப் போலல்லாமல் மேலாளர்களுக்கு பரிவு காட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்!

ஆகவேதான் வட்டார அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அவரும் ஒரு வட்டார அலுவலகத்தின் தலைவராக அமர்த்தப்பட்டபோது தான் முன்பொருநாள் எடுத்திருந்த முடிவை நினைவில் வைத்திருந்து அதன்படியே நடக்க ஆரம்பித்தார் என்று அவர் வாயிலாகவே நான் கேட்டறிந்தேன்.

அவருடைய முடிவில் தவறேதும் இல்லைதான். நானே மேலாளராக இருந்த சமயத்திலும் அவர் குறிப்பிட்டதுபோல சில வட்டார மேலாளர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் பரிந்துரைத்த பல விண்ணப்பங்களை நிராகரித்ததை நினைத்துப்பார்த்தேன். இப்படியொரு வட்டார மேலாளர் எனக்கு கிட¨த்திருந்தால் இன்னும் நன்றாக வணிகம் செய்திருக்கலாமே என்று நினைத்தேன்.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளர் அநியாயத்திற்கு நல்லவராயிருந்தார். அனைவரையும் தன்னுடைய கண்ணோட்டத்திலிருந்தே காண்பதில் தவறேதும் இல்லையென்ற எண்ணத்துடன் உண்மைக்கு மாறானவற்றை தங்களுடைய பரிந்துரைகளில் எழுதும் நேர்மையற்ற மேலாளர்களை இனங்கண்டுக்கொள்ளத் தெரியாத அளவுக்கு நல்லவர் அவர்.

அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளால் இது உண்மையல்ல அல்லது மடுவை மலையாக்கிக் காட்டும் மிகைப்படுத்தப்பட்ட பரிந்துரை என கண்டுப்பிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களையும் எதையாவது காரணம் காட்டி அனுமதி வழங்கி உத்தரவிடுவார்.

அத்தகைய கடன்கள் வழங்கப்பட்டு ஆறு மாத காலத்திற்குள்ளாகவே வாராக் கடனாகிவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் கண்டு தங்களுடைய அறிக்கைகளில் கோடியிட்டு காட்டுவார்கள். ஆனால் இன்னும் இரண்டு மாத காலத்தில் நிலமை சரியாகிவிடும் என்று உண்மைக்கு புறம்பாக பதிலளிக்கும் மேலாளர்களின் கூற்றை நம்பி நடவடிக்கை எடுப்பதை தள்ளிப்போடுவார். கணக்குகளில் காணப்படும் விதி மீறல்களையும் ‘சரி பார்க்கலாம். வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார். சரிசெய்துவிடுவார்.’ என்று ஆய்வுக்கு சென்ற ஆய்வாளரைக் கொண்டே அவற்றை அறிக்கையிலிருந்து நீக்கிவிடும்படி கட்டளையிடுவார். 'சரி.. நாம் எழுதியாயிற்று. நம்முடைய கைப்பிரதியை அப்படியே அழித்துவிடாமல் நம் கையில் வைத்திருப்போம். நாளையொருநாள் நாம் எழுதவில்லையென யாரும் நம்மை குறை சொல்லக் கூடாதல்லவா?' என்று அவர் கேட்டுக்கொண்டபடியே அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கும் அறிக்கையிலிருந்து அவற்றை நீக்கிவிடுவார்கள்.

விளைவு? இத்தகைய கமிட்டி கூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவராலேயே பதிலளிக்க முடியாமல் இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சங்கடத்திற்குள்ளாவார்.

தொடரும்..

1 comment:

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நல்லவனா இருக்கறதும் தப்புத்தான் போல. இங்க ஒரு வட்டார மேலாளர் ஒரு கிளை மேலாளரைப் போல் சிந்திப்பதனால் வரும் வினை இது. One has to grow into one's position.