17 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 19

உள்ளே இரண்டு கரன்சிக் கற்றைகள்!

யாராயிருக்கும்?

அன்றைய தினம் நான் பல வாடிக்கையாளர்களின் வர்த்தக இடத்திற்கு சென்றிருந்ததாலும் ஏறத்தாழ எல்லா இடங்களிலுமே விதி மீறல்களை நான் கண்டிருந்ததாலும் எனக்கு கையூட்டு அளித்து இவர்களுள் யார் என்னை மடக்க நினைத்திருப்பார்கள் என்பது விளங்காமல் சில நிமிடங்கள் தடுமாறிப் போனேன்.

என்னுடைய கிளை மேலாளரைப் பற்றி நான் அதற்கு முன்பு அவ்வளவாகக் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவருடைய கிளையில் நான் கண்டிருந்த குறைபாடுகளைக் குறித்து அவரிடமோ அல்லது அவருடைய அதிகாரிகளிடமோ நான் விவாதித்திருக்காத நிலையில் அவர்  எனக்கு கையூட்டு அளிக்க முனைந்திருப்பார் என்று என்னால் சிந்திக்க இயலவில்லை.

யாராயிருந்தாலும் எனக்கு கையூட்டு அளிக்க முயல்வதை விட என்னை எதிலோ சிக்க வைக்க நினைத்திருந்தது எனக்கு விளங்காமல் இல்லை.

ஆகவே இதிலிருந்து எப்படி தப்புவது என்பதில்தான் என் சிந்தனை முழுவதும் சென்றது.

என்னுடைய ரயில் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரத்துக்கும் கூடுதல் இருந்தது. என்னுடைய விடுதியிலிருந்து சுமார் பத்து, பதினைந்து நிமிட தூரத்தில்தான் நான் செல்ல வேண்டிய புகைவண்டி நிலையம் இருந்தது. ஆகவே இன்னும் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் கூடுதல் நான் அந்த அறையில்தான் இருக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? என்னுடைய மேலாளரை அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்று தோன்றியது.

சாதாரணமாக நான் ஒரு கிளைக்கு ஆய்வுக்கு செல்வதற்கு முன்பே சம்பந்தப்பட்ட கிளையின் தொலைப்பேசி எண்களுடன் மேலாளருடைய அலுவலக மற்றும் வீட்டு தொலைப்பேசி எண்களையும் குறித்து வைத்துக்கொள்வேன். இது எனக்கு பல சமயங்களிலும் உதவியாயிருந்திருக்கிறது.

ஆகவே என்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த அவருடைய இல்ல தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு என்னுடைய அறையிலிருந்த தொலைப்பேசியை நெருங்கினேன்.

ஆனால் அவரை அழைத்து என்னவென்று சொல்வதென்ற குழப்பம் என்னை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது. அவர் என்னை அலுவலகத்தில் நடத்திய விதம் அப்போதும் நினைவில் நின்றது. சாதாரணமாக இத்தகைய ஆய்வு நடக்கும் கிளை மேலாளர்களுடன் ஆய்வு நடந்த இரண்டு, மூன்று தினங்களில் நெருங்கிய நட்பு ஏற்பட்டுவிடும். பல மேலாளர்கள் என்னுடைய ஆய்வில் கண்டவற்றைப் பற்றி நான் கூறும் ஆலோசனைகளை விரும்பிக் கேட்பார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதில் சிலவற்றையாவது செயல்படுத்துவார்கள். ஆய்வின் இறுதி நாளன்று ‘சார் நீங்க தப்பா நினைச்சிகலனா சாயந்தரம் கொஞ்சம்..’ என்று இழுப்பார்கள்.
எனக்கு தெரிந்த அல்லது என்னுடன் பதவி உயர்வு பெற்ற மேலாளர்களென்றால் நானும் சரி என்று அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வேன். இல்லையென்றால் அவர்களுடைய மனதை நோகடிக்காமல் டிபளமட்டிக்காக மறுத்துவிடுவேன்.

இவரோ நான் கிளையிலிருந்த மூன்று நாட்களும் என்னைக் கண்டுக்கொள்ளவே இல்லையென்பதுடன் என்னை ஒரு விரோதியைப் போன்று நடத்தியிருந்தார்.

அப்படியிருக்க இப்போது என்னுடைய விடுதியில் யாரோ ஒருவர் வந்து பணக்கற்றைகள் அடங்கிய உறையைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர் அவர்கள் யாரென உங்களுக்கு தெரியுமா என்று கேட்டால் எப்படி ரியாக்ட் செய்வார் என்ற ரீதியில் சென்றது என்னுடைய சிந்தனை.

அந்த காலத்தில் மொபைல் ஃபோன் வசதி இருக்கவில்லையே. இருந்திருந்தால் என்னுடன் அன்று மாலையில் வந்திருந்த துணை மேலாளருடைய உதவியை நாடியிருப்பேன். அந்த கிளையில் பணியாற்றிய ஜூனியர் அதிகாரிகள் எல்லோருமே என்னிடம் நட்புடன் பழகியிருந்தனர். அதே சமயம் என்னை அந்த சங்கடமான சூழலிலிருந்து விடுவிக்க அல்லது துணைக்கு வர அவர்களில் எவராவது தயாராயிருப்பார்களா என்ற சந்தேகமும் என் மனதிலிருந்தது என்னவோ உண்மைதான்.

ஆக மேலாளருடைய உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை எனக்கு.

எதிர் முனையில் மணி அடித்துக்கொண்டே இருந்தது. நான் சலிப்புடன் துண்டிக்கப்போன இறுதி நொடியில் 'ஹலோ யாரான?' என்ற மலையாள பெண் குரல் கேட்கவே நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மேலாளர் இருக்கிறாரா என்று வினவினேன். அவர் சிநேகத்துடன் என்னைப் பார்க்கத்தான் மேலாளர் கிளம்பிச் சென்றிருக்கிறார் என்றார். நான் வியப்புடன் அவர் கிளம்பிச் சென்று எத்தனை நேரம் ஆகிறது என்று கேட்டேன். அவர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து என்னை வழியனுப்பிவிட்டுத்தான் வருவேன். ஆகவே வருவதற்கு நேரமாகும் என்று கூறியிருந்தாராம்!

நான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இனைப்பைத் துண்டித்தேன்.

கட்டிலில் கிடந்த அந்த உறைக்கு அந்த மேலாளர்தான் காரணம் என்ற என்னுடைய ஊகம் சரிதான் என்று தோன்றியது. அவர்தான் என்னுடைய விடுதிக்கு நேராகவோ அல்லது யார் மூலமோ இந்த உறையை கொடுத்தனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால் அதை உறுதி செய்துக்கொள்ள முடியாத நிலையில் இதிலிருந்து எப்படி தப்புவதென சிந்திப்பதே நல்லதென முடிவு செய்தேன்.

இதை அப்படியே மீண்டும் வரவேற்பறையில் திருப்பிக் கொடுத்துவிட்டாலென்ன என்று தோன்றியது. ஆனால் அதை வைக்க ஒரு காகித உறை வேண்டும். வரவேற்பறையிலிருந்து பெற்ற உறையைப் பிரிக்க முயன்றபோதே அது மீண்டும் பயன்படுத்த லாயக்கில்லாததாகப் போயிருந்தது. ஆகவே கரன்சி நோட்டுகளை அதில் வைக்க முடியாது.

காலையில் அறைக்கு சப்ளை செய்த செய்தித்தாளை விட்டால் அறையிலோ வேறு உறையுமிருக்கவில்லை. என்னடா இது சோதனை என்று சோர்ந்துபோனேன்.

கரன்சி நோட்டுகளை எனக்கு சொந்தமான எதிலும், என்னுடைய பெட்டி, பை, என எதிலும் வைக்கத் தயாராயில்லை. அதை அப்படியே அறையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாலென்ன என்று ஒரு நொடி லோசித்து சீ, அது முட்டாள்தனம் என்று ஒதுக்கினேன்.

பிறகென்ன செய்யலாம் என்று சிந்தித்து, சிந்தித்து ஒரு வழியும் கிடைக்காமல் சலித்துப் போய் அமர்ந்திருந்த நேரத்தில் என்னுடைய அறை தொலைப்பேசி வேறு அடித்து இம்சை செய்தது. இந்த நேரத்தில் யாராயிருக்கும்? நான் இருந்த விடுதியுனுடைய விவரத்தை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லையே என்பதும் அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் அடுத்த நொடியே படுக்கையில் கிடந்த கரன்சி நோட்டுகள் விடுதியைத் தேடிவந்து இதைக் கொடுக்க முடிந்தவர்களுக்கு என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதா சிரமம் என்பதை எனக்கு நினைவுட்டியது.

எடுப்பதா வேண்டாமா என்று சிந்திக்கவிடாமல் தொடர்ந்து ஒலித்த தொலைப்பேசியை வேறு வழியில்லாமல் எடுத்தேன். எதிர்முனையில் எனக்கு அறிமுகமில்லாத குரல், ‘என்ன சார் கவர் கிடைச்சிதா?’ என்றது. ‘ஒங்க மேனேசர் சொல்லித்தான் குடுத்தனுப்பிச்சேன். காணாதுன்னா.. சொல்லுங்க சார்..’

இதற்குத்தானே காத்திருந்தேன். ஆனால் இது மட்டும் போதாது. என்னுடைய மேலாளர்தான் இதற்குபின்னால் என்பதை நிரூபிக்க அவரையோ அல்லது அவர் அனுப்பும் நபரையோ கையும் களவுமாய் பிடித்தால்தான் ஆயிற்று என்று நினைத்தேன்.  ஆகவே எனக்கு கொடுத்தது போதாது எனவும் மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அடுத்த அரை மணிக்குள் கொடுத்தனுப்பினால்தான் ஆயிற்று என்றும் கூறி எதிர் முனையிலிருந்தவருக்கு பதிலளிக்க வாய்ப்பில்லாமல் துண்டித்துவிட்டு உடனே என்னுடைய விடுதி வரவேற்பறையை அழைத்தேன்.

அடுத்த அரை மணியில் எனக்கு கடிதம் ஒன்றைக் கொண்டு வருபவரை நேரே என்னுடைய அறைக்கு அனுப்ப வேண்டுமென்றும் அவரிடமிருந்த எந்த பொருளையும் வாங்கி வைக்கலாகாது என்றும் கேட்டுக்கொண்டேன்.

பணத்தைக் கொண்டு வருபவர் வாயிலிருந்தே அவரை அனுப்பியவர் என்னுடைய மேலாளர்தான் என்ற உண்மையை வரவழைக்க வேண்டும் என்பது என்னுடைய முடிவு. ஆனால் அது எனக்கு மட்டும் தெரிந்தால் போதாதே. என்னுடைய வட்டார மேலாளருக்கும் தெரிய வேண்டுமே.

ஆகவே அவர் வருவதற்குள் என்னுடைய வட்டார மேலாளருக்கு விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற நினைப்புடன் அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைப்பதென முடிவு செய்தேன்.

நல்லவேளையாக அவர் வீட்டிலிருந்தார். நான் கூறியதை பொறுமையுடன் கேட்ட அவர் இறுதியில் நான், 'சார் அவர் அனுப்பிய ஆள் வந்ததும் நா ஒங்கள மறுபடியும் கூப்பிடறேன்' என்றதும், ‘அதெல்லாம் வேண்டாம் டிபிஆர். இத என்கிட்ட விட்டுருங்க. I will handle it, don’t worry.’ என்றார் ஆறுதலாக.

அவர் என்ன செய்தாரோ அடுத்த அரை மணியில் என்னுடைய அறையைத் தேடி என்னுடைய கிளை மேலாளரே வந்தார். நான் அறையைத் திறந்ததும் என்னைத் தள்ளிக்கொண்டு நுழைந்தவர் தன்னுடன் வந்திருந்த பணியாள் ஒருவரை  படுக்கையில் அப்போதும் கேட்பாரற்று கிடந்த உறையை எடுத்துக்கொள்ளுமாறு பணித்தார்.

பிறகு என்னைப் பார்த்து, ‘you are going to feel sorry for what you’ve done today.’ என்று எச்சரித்தார்.

பதிலுக்கு நான் ஏதும் சொல்லப்போய் பிரச்சினை வலுக்குமே என்ற அச்சத்தில் பதிலேதும் பேசாமல் அவர் அறையிலிருந்து வெளியேறும் வரை என்னுடைய உடைகளை பெட்டியில் அடுக்குவதில் கவனத்தை செலுத்தினேன்.

அன்று மேற்கொண்டு எந்த வில்லங்கமும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்ற நினைப்புடன் இரவு உணவை விரைவிலேயே முடித்துக்கொண்டு ரயில் நிலையத்தை அடைந்தேன். நல்லவேளையாக ரயிலேறும் வரை எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

அன்று நடந்த சம்பவம் நான் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தவற்றையும் என்னுடைய அறிக்கையில் எழுத வைத்தது. அதற்கு அப்போது என்னுடைய மனதில் ஆழமாய் பதிந்திருந்த பழிவாங்கும் எண்ணம்தான் காரணமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஏற்கனவே அவருடன் மனத்தாங்கல் இருந்த என்னுடைய அதிகாரியும் என்னுடைய கைப்பிரதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அங்கீகரிக்க வட்டார மேலாளரும் வேறு வழியில்லாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். ஆனால் என்னுடைய அறிக்கை அவரைச் சற்று வருத்தமடையச் செய்தது என்பதை சில மாதங்களுக்குப் பிறகு அவர் வாயிலிருந்தே அறிந்துக்கொண்டேன். 'ஒங்கள ப்ரைப் பண்ண ட்ரை பண்ணதுதான் ஒங்கள அப்படி எழுத வச்சிதுன்னு நான் நினைக்கறேன். இல்லையா டிபிஆர்?' என்று அவர் கேட்டபோது என்னால் மறுத்துப் பேச முடியாமல் போனது.

என்னுடைய அறிக்கைக் கிடைக்கப் பெற்றதும் என்னுடைய தலைமையகத்திலிருந்த மத்திய ஆய்வு இலாக்கா ஒரு முழு ஆய்வுக்கு உத்தரவிட்டது. அவர்களையும் அந்த மேலாளர் பணிய வைக்க முயன்றாலும் என்னுடைய அறிக்கையில் எழுதியிருந்தவற்றை முழுவதுமாக மறுக்க அவர்களால் முடியாமற் போனது. அவர்களுடைய அறிக்கையைத் தொடர்ந்து மேலாளர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பிறகு ஒரு முழு அளவிலான விசாரனை நடத்தப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

நல்லவேளையாக எங்களுடைய வங்கியில் எந்த கடன் வழங்கினாலும் சொத்து ஜாமீன் எடுக்கும் வழக்கமிருப்பதால் வங்கிக்கு ஏற்படவிருந்த இழப்பை அது வெகுவாக குறைக்க உதவியது.

மீதமிருந்த தொகைக்கு அவருக்கு அளிக்கப்படவிருந்த தொகையிலிருந்து பி.எஃப் நீங்கலாக கிராச்சுவிட்டி, விடுப்புத் தொகை கியவை அனைத்தும் வங்கி பிடித்துக்கொண்டது என கேள்விப்பட்டேன்.

ஆரம்பத்தில் இதற்கு நாந்தானே காரணம் என்ற வருத்தம் இருந்தாலும் நாளடைவில் அதற்கு அவருடைய செயல்பாடும்தானே காரணம் என்று ஆறுதலடைந்தேன்.

தொடரும்.

7 comments:

இலவசக்கொத்தனார் said...

சரியாப் போச்சு. என்னவெல்லாம் சந்தித்திருக்கிறீர்கள். இது போன்ற சில அனுபவங்கள் உண்டு என்றாலும் நீங்கள் சொல்வது எல்லாம் கேட்க பிரமிப்பாக இருக்கிறது.

G.Ragavan said...

ஆகா....சினிமாவுலன்னா சரியா கட்ட எடுத்துப் பாக்குறப்போ போலீஸ் வரும். நெஜத்துல அப்படி நடக்காததே நல்லது. நம்மால ஒருத்தருக்கு வேலை போகுதுன்னா வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா...இதச் சரீன்னு சொல்றதா...தப்புன்னு சொல்றதா? தெரியலையே.

Krishna said...

யார் அந்த பணம் தந்தார்களோ, அவர்களுக்கு நேரம் சரியாயிருந்திருக்கப் போவதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் இப்படி பதவி நீக்கம், மற்றும் மற்ற பண நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கவில்லை....

"அவருடைய செயல்பாடும் காரணம்" என்று எழுதியிருக்கக்கூடாது சார், அவருடைய செயல்பாடுதானே காரணம் என்பதுதான் சரி.

சரி, இந்த மாதிரி நேர்மையா வாழ்ந்துகிட்டுருக்கறதுக்கான பரிசுதானே, படுத்த உடன் தூங்கறதும், பண்பான மனைவி, மகள்களும், அவர்களின் நிம்மதியும்....

tbr.joseph said...

வாங்க கொத்தனார்,

எனக்கே இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது சில நேரங்களில் பிரமிப்பாகத்தான் இருக்கின்றன. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் இருந்த வயது அது. இதே சூழ்நிலையில் இப்போது எப்படி ரியாக்ட் செய்திருப்பேனோ தெரியவில்லை.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நம்மால ஒருத்தருக்கு வேலை போகுதுன்னா வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா...இதச் சரீன்னு சொல்றதா...தப்புன்னு சொல்றதா? தெரியலையே. //

இப்படியொரு மன உளைச்சலுக்கு நானும் பலமுறை ஆளாயிருக்கிறேன். Too much of sincerity is not good for health tbr என்பார் என்னுடைய மேலாளர் ஒருவர். கடந்த சுமார் இருபதாண்டுகாலமாக ரத்த அழுத்த நோயால் அவதிப்பட வேண்டியதை நினைத்துப்பார்க்கும்போது சில சமயங்களில் அது உண்மைதானோ என்று நானும் சிந்தித்திருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

"அவருடைய செயல்பாடும் காரணம்" என்று எழுதியிருக்கக்கூடாது சார், அவருடைய செயல்பாடுதானே காரணம் என்பதுதான் சரி.//

உண்மைதான்.. நானா என்ன வேணும்னாலும் செய்வேன் ஆனா நீ அதப்பத்தியெல்லாம் எழுதக் கூடாது என்பதுதான் சில மேலாளர்களின் வாதம். ஆய்வு வேலை ஒரு thankless job என்பது முற்றிலும் உண்மை.

சரி, இந்த மாதிரி நேர்மையா வாழ்ந்துகிட்டுருக்கறதுக்கான பரிசுதானே, படுத்த உடன் தூங்கறதும், பண்பான மனைவி, மகள்களும், அவர்களின் நிம்மதியும்.... //

இதுவும் உண்மைதான். என்னதான் சொத்தும், செல்வமும் இருந்தாலும் படுத்தால் உறங்குவதும் நம்முடைய குடும்பத்தினர் குறிப்பாக பிள்ளைகள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதும் அதைவிடப் பெரிய செல்வம்தான்..

அது எனக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.

srishiv said...

உண்மை என்றும் வெல்லும் ஐயா
வாழ்க வளமுடன், பொங்கல் வாழ்த்துக்கள்
சிவா @ ஸ்ரீஷிவ்...:)