10 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 18

ஒரு கிளைக்கு ஆய்வு செல்வதை முடிந்த அளவு ரகசியமாக வைத்திருப்பது வழக்கம்.

ஆயினும் ஆய்வுக்குச் செல்லவிருக்கும் அதிகாரிக்கு வழங்க வேண்டிய உத்தரவைத் தட்டச்சு செய்வதிலிருந்து அதை டெஸ்பாட்ச் புத்தகத்தில் சேர்த்து அவரிடம் வழங்குவதுவரையுள்ள அலுவல்களை செய்யும் குமாஸ்தாக்கள் வாயிலாக அது அலுவலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்க இயலாதல்லவா?

நான் ஆய்வு செய்யச் சென்ற பல கிளைகளிலும் அதனுடைய மேலாளர் என்னுடைய வருகையை எதிர்பாராததுபோல் அபிநயித்தாலும் கிளையில் பணியாற்றும் ஒரு சிலர் வழியாக அதை நான் அறிந்துக்கொண்டதுண்டு.

அதுபோன்றே கிளையில் ஆய்வு துவங்கிய அன்றே சம்பந்தப்பட்ட மேலாளர் தன்னிடமிருந்து கடன் பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களியும் அழைத்து ஆய்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டுமென எச்சரிக்கையும் செய்வதுண்டு. அதில் தவறேதும் இல்லைதான்.

ஆகவே நான் நேற்றயை பதிவில் குறிப்பிட்டிருந்த கிளை மேலாளரும் நான் ஆய்வுக்குச் செல்லவிருந்த வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்ய வாய்ப்பிருக்கிறதென்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

ஆயினும் அவர் விடுத்த எச்சரிக்கை அவ்வளவாக பயனளிக்கவில்லை என்பதை என்னுடைய பட்டியலிலிருந்த வணிகர்களுடைய கிடங்குகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய, செய்ய உணரமுடிந்தது.

அவர்களுள் ஒருவர் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்திருந்த செராமிக் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்தவர். அவருடைய வணிகத்திற்கு கிளையிலிருந்து கனிசமான கடன் வழங்கப்பட்டிருந்தது.

அவருடைய கடையிலிருந்த (show room) சரக்குகளுடன் கிடங்கிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள சரக்கும் கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டிருந்தது.

முதலில் கடையிலிருந்த சரக்குகளை அங்கும் இங்குமாக ஆய்வு செய்ததில் எந்த குறையும் தென்படவில்லை. கடையிலிருந்த சரக்குகளின் மதிப்பும் உரிமையாளர் வைத்திருந்த கணக்கிலிருந்த மதிப்பிலும் மட்டும் லேசான வேறுபாடு இருந்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. இத்தகைய வேறுபாடுகள் சாதாரணமாக இத்தகைய வணிகத்தில் காண்பதுதான்.

சாதாரணமாக வங்கிகள் தங்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ள சரக்கை அவற்றின் கொள்முதல் விலையிலும் வணிகர்கள் தங்களுடைய கணக்கில் விற்பனை விலையிலும் மதிப்பிடுவது சகஜம்தான். ஆகவே அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

கடையிலிருந்த சரக்கை ஆய்வு செய்து முடித்த கையோடு கிடங்கிலிருந்தவற்றையும் ஆய்வு செய்துவிடலாம் என்ற நோக்கில் என்னுடன் வந்திருந்த துணை மேலாளரையும் வணிகரின் குமாஸ்தா ஒருவரையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

ஏற்கனவே நான் மேலாளராகவிருந்த ஒரு கிளையில் நடந்த அனுபவம் நினைவுக்கு வரவே கிடங்கைத் திறப்பதற்கு முன் அதன் கதவிலிருந்த பூட்டையும் அது பொருத்தப்பட்டிருந்த பேட்லாக்கையும் சரிபார்த்தேன். எந்த வில்லங்கமும் தென்படவில்லை.

கிடங்கைத் திறந்ததும் டைல்ஸ் அடங்கிய அட்டைப் பெட்டிகள் வங்கியின் நியதிகளின்படி எளிதில் எண்ணக் கூடிய வகையில் அடுக்கப்பட்டிருந்ததுடன் அவற்றை நாற்புறமும் சுற்றிவந்து பார்வையிடவும் வசதி இருந்ததைக் கவனித்தேன். நான் மேலாளராக இருந்த கிளைகளில் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் கூட இத்தனை அழகாக பொருட்களை வங்கியின் நியதிகளுக்கேற்றார்போல் அடுக்கி வைத்திருந்ததில்லையே என்று நினைத்தேன்.

ஆகவே கிடங்கில் வைத்திருந்த புத்தகத்தையும் வங்கி தங்களுடைய சார்பில் வைத்திருந்த பட்டியலையும் சரிபார்த்துவிட்டு புறப்படலாம் என்ற எண்ணத்தில் என்னுடைய துணை மேலாளரின் உதவியுடன் அதில் ஈடுபடலானேன்.

அதுவும் மிகச் சரியாக இருக்க மகிழ்ச்சியுடன் கிடங்கிலிருந்து ஏதாவது ஓரிரு பெட்டியை மட்டும் திறந்துபார்த்துவிட்டு கிளம்பலாம் என்று என்னுடன் வந்திருந்த துணை மேலாளரிடம் கூறினேன்.

‘எந்த பெட்டிய எடுக்கணும்னு நீங்களே சொல்லிருங்க சார்.’ என்றார் அவர். பிறகு நான் கூறிய ஐந்தாறு இடங்களிலிருந்து பெட்டியை எடுத்துக் கொடுக்குமாறு எங்களுடன் வந்திருந்த பணியாளரைக் கேட்டார்.

அவர் சற்று தயங்குவது தெரிந்தது. ‘நீங்க சொன்னா மாதிரி இடையிலருக்கற பெட்டியையெல்லாம் எடுக்கறது சிரமம் சார். நா அத எடுக்கறப்ப மேலருக்கற, இல்ல பக்கத்துலருக்கற பெட்டிங்கள எதையாச்சும் அசைச்சிட்டா எல்லா பெட்டியுமே சரிஞ்சிரும். பெட்டிங்க சரிஞ்சி அதுலருக்கற டைல்சுங்க ஏதாச்சும் ஒடஞ்சிருச்சின்னா அப்புறம் முதலாளிக்கு நாந்தான் பதில் சொல்லணும்.. என்னால முடியாது சார்.’ என்றார்.

அவர் கூறியதிலிருந்த நியாயம் தெரிந்தாலும் இதன் பின்னால் வேறேதும் இருக்குமோ என்ற ஒரு ஆய்வாளரின் உள்ளுணர்வு என்னை ஐயம்கொள்ளச் செய்தது.

‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அப்படி இன்ஸ்பெக்ட் பண்ணாம இருக்க முடியாதுங்க. நீங்க ஒரு ஸ்டெப் லேடர் வச்சிருக்கணுமே. அத கொண்டாங்க. அதுல ஏறி ஜாக்கிரதையா எடுங்க. நீங்க எடுக்கப் போற பெட்டிக்கு பின்னாலயும் பெட்டிங்க இருக்கத்தானங்க செய்யும்? அதெப்படி ஒரு பெட்டிய எடுத்தா மத்த பெட்டிங்க விழும்?’ என்றேன்.

அவர் அதற்குப் பிறகும் தயங்கவே என்னுடைய ஐயம் வலுப்படத் துவங்கியது. அவரை வற்புறுத்தி கிடங்கில் இருந்த அலுமினிய ஏணியைக் கொண்டுவரச் செய்து நான் முதலில் விரும்பிய உயரத்தில் அல்லாமல் சற்று இரு வரிசைகளுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை எடுக்கச் செய்தேன். அவர் தன்னுடைய கைகளை பெட்டிகளில் வைத்ததுமே அடுத்திருந்த பெட்டிகள் அசைவதைப் பார்த்தேன்.

ஐயத்துடன் என்னுடன் வந்திருந்த துணை மேலாளரைப் பார்த்தேன். எனக்குத் தோன்றிய அதே எண்ணம் அவருக்கும் தோன்றியதை அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. ‘சார் பெட்டிங்க கனமாயிருந்தா இப்படி ஆடாதில்லே?’ என்றார் குரலை இறக்கி. நான் ஆமாம் என்று தலையை அசைத்தவாறு ஏணியில் நின்றிருந்த பணியாளரைக் கவனித்தேன். அவருடைய கால்கள் தந்தியடித்துக்கொண்டிருந்தன!

அவர் தன் கையுடன் கொண்டு சென்றிருந்த ஒரு இரும்பாலான கொக்கியை பெட்டியின் மேல் குத்தி அசைத்து அதை எடுக்க அதனையடுத்து இருந்த பெட்டியும் அதனுடன் சேர்ந்து வெளியில் வந்தது. ஏணியில் நின்றிருந்தவர் இரண்டு பெட்டிகளையும் தன்னுடைய கைகளில் பற்ற முடியாமற்போகவே ஒரு பெட்டி அப்படியே சுமார் ஐந்தடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தது.

அங்கிருந்து விழுந்த வேகத்தில் பெட்டியிலிருந்த ஓடுகள் முழுவதும் உடையாவிட்டாலும் கீறலாவது விழுந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பெட்டி விழுந்த ஓசையைக் கவனித்தபோது அதில் ஒன்றுமே இல்லாததுபோல் தெரியவே நானே அதை எடுக்க முயன்றேன். ஆனால் அதற்குள் கடை பணியாளர் அவசர, அவசரமாக இறங்கி தன் கையிலிருந்த பெட்டியை என்னிடம் நீட்டினார். ‘சார் அத விடுங்க. விழுந்த வேகத்துல நிச்சயமா டைல்ஸ் க்ராக் யிருக்கும்.’ என்றவாறு என்னுடைய கவனத்தைத் திருப்பினார்.

நானும் அவரிடமிருந்த பெட்டியை வாங்கி என்னுடன் நின்றிருந்த கிளை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு பணியாளர் தரையிலிருந்து எடுத்த பெட்டியை, ‘இங்க கொண்டாங்க. ரெண்டுலயும் ஒரே மாதிரி டைப் டைல்ஸ் இருக்கான்னு செக் பண்ணிட்டு தரேன்.’ என்று அவருடைய மறுப்பைப் பொருட்படுத்தாமல் பிடுங்கினேன்.

உள்ளே ஓடுகளுக்குப் பதில் பழைய பத்திரிகைகள் உருட்டி சுருட்டி வைக்கப்பட்டிருந்தன!

என்னுடன் வந்திருந்த கிளை அதிகாரியின் முகம் வெளிறிப்போனது. என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். கடைப் பணியாளார் கண் சிமிட்டும் நேரத்தில் கிடங்கிலிருந்து வெளியேற நான் கிடங்கில் காவலுக்கு நின்றவரிடம், ‘எங்க போறார் அவர்?’ என்றேன்.

அவர் தயங்கியவாறு, ‘முதலாளிக்கு ஃபோன் போட போயிருப்பார் சார்.’ என்றார்.

நான் கேள்விக் குறியுடன் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைப் பார்த்தேன். ‘இது கொஞ்ச நாள வேல செய்யல சார்.’ என்றார் அவர். அதிலும் உண்மையிருக்காது என்று எனக்கு தோன்றியது. நான் என்னுடன் வந்திருந்தவரைப் பார்க்க அவர் என் எண்ணத்தை உணர்ந்து ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்துவிட்டு, ‘It’s working Sir.’ என்றார். பிறகு, ‘Sir, shall I inform our BM?’ என்றார் தயக்கத்துடன்.

நான் சரியென தலையை அசைத்தவாறு கிடங்கைச் சுற்றி வலம் வந்தேன். அதுபோன்ற நிகழ்வுகளை நான் ஏற்கனவே எதிர்கொண்டிருந்தாலும் அந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சரக்குகள் அடங்கிய பெட்டியின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு பார்த்தபோது இழப்பு கணிசமானதாக இருக்குமே என்று தோன்றியது.

கிடங்கிலிருந்து பதிவேட்டை எடுத்து கடந்த முறை கிடங்கை ஆய்வு செய்த வங்கியின் அதிகாரியின் பெயரைப் பார்த்தேன். கடந்த முறை மட்டுமல்ல வங்கியிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்த கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாகவே ஒரு சில நேரங்களைத் தவிர கிளை மேலாளர் மட்டுமே வந்து சென்றிருப்பது தெரிந்தது.

கிடங்குகளில் சரக்குகளை வைக்கும்போதும் எடுக்கும்போதும் கிளை மேலாளர் அல்லாத அதிகாரிகளே சென்று வரவேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது எப்போதாவதோ ஆய்வு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே கிளை மேலாளர் தன்னுடைய உதவியாளர்கள் ஒருவருடன் கிடங்குக்குச் சென்று வரலாம் என்பது வங்கியின் நியதிகளுள் ஒன்று.

கடன் வழங்கிய கிளை மேலாளரும் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளரும் கூட்டு சேர்ந்து வங்கியை மோசடிக்குள்ளாக்குவதைத் தவிர்க்கவே இந்த நியதி.

ஆனால் அந்தக் கிடங்கு அல்லாமல் அன்று நான் ஆய்வு செய்த மற்ற வாடிக்கையாளர்களின் கிடங்குகளிலும் இதே நிலைதான். எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாட்களில் அன்று இறுதி நாளாக இருந்ததால் அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய எனக்கு நேரமிருக்கவில்லை.

இத்தகைய ஆய்வு முடிவுறும் இறுதி நாளன்று கிளையில் ஆய்வின்போது கண்டிருந்த தவறுகளைக் குறித்து கிளை மேலாளரிடமும் அவருடைய துணை அதிகாரிகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நியதி இருந்தது.

ஆனால் அன்று கிடங்கு ஆய்வுகளை முடித்துக் கொண்டு கிளம்பவே இரவு வெகு நேரம் ஆகியிருந்தது. அத்துடன் நான் கிளையில் கண்டிருந்த தவறுகளில் சில தீவிரம் மிகுந்தவையாக இருந்ததாலும் கிளை மேலாளர் கடந்த நான்கு நாட்களில் என்னிடம் நடந்துக்கொண்ட விதத்தையும் மனதில்கொண்டு கிளைக்கு திரும்பும் எண்ணத்தை கைவிட்டு துணை மேலாளரிடம் விடைபெற்றுக்கொண்டு நான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பினேன்.

என்னுடைய அறையின் சாவியை என்னிடம் கொடுத்த விடுதி வரவேற்பாளர், ‘சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒருத்தர் வந்து இத குடுத்துட்டுப் போனார்.’ என்று ஒரு காகித உறையை அளித்தார்.

அதில் என்னுடைய பெயர் தெளிவாக எழுதியிருந்தது. ஊர் பேர் தெரியாத ஊரில் யாராயிருக்கும் என்ற எண்ணத்தில் அதைப் பெற்றுக்கொண்டு அறைக்கு திரும்பியதும் முதல் வேலையாக அதை திறந்துப் பார்த்தேன்.

உள்ளே இரண்டு கரன்சிக் கற்றைகள்!

பதறிப்போய் என்னையுமறியாமல் நெருப்பைத் தொட்டவன்போல் அவற்றை படுக்கையில் எறிந்தேன்.

தொடரும்..

14 comments:

நாடோடி said...

ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்களா..?
இதுக்குப் பேரு தான் 'கூட்டுக் கொள்ளையோ?'

G.Ragavan said...

ஆகா...கரண்சிக் கட்டுகள்....எனக்கு இது வரை யாரும் லஞ்சம் கொடுத்ததில்லையே கொடுத்ததில்லையே! கொடுத்திருந்தா...பேசாம வாங்கி உள்ள வெச்சிருப்பேன். ஆனா நேரடியா நானே வாங்க மாட்டேன். யாராவது சம்பந்தமில்லாத ஆள் வழியா வாங்குவேன். இதெப்படித் தெரியும்னு பாக்குறீங்களா? அப்பார்ட்டுமெண்ட்டு ரிஜிஸ்டர் பண்ணப் போன எடத்துல பெங்களூர்ல அப்படித்தான் செஞ்சாங்க.

tbr.joseph said...

வாங்க நாடோடி,

இதுக்குப் பேரு தான் 'கூட்டுக் கொள்ளையோ?'//

கூட்டுக்கொள்ளைன்னு சொல்ல முடியாது. சில Priority தெரியாத மேலாளர்கள் இத்தகைய தவறான வழிகளில் செல்வது சகஜம்தான். ஆனால் அவர்கள் நீண்ட நாட்கள் தண்டனையிலிருந்து தப்பியதில்லை.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அப்பார்ட்டுமெண்ட்டு ரிஜிஸ்டர் பண்ணப் போன எடத்துல பெங்களூர்ல அப்படித்தான் செஞ்சாங்க.//

ஐயோ.. அது அசுரக் கொள்ளையாருக்குமே.. இங்க அந்த மாதிரியெல்லாம் நடக்காது. அதுவுமில்லாம இங்க இந்த மாதிரி ஒரு சிலர்தான் இருப்பாங்க. அங்க அப்படியில்லாதவங்கதான் ஒரு சிலர் இருப்பாங்க:)

sivagnanamji(#16342789) said...

எதிர்பார்த்ததுதான்!

கவரை வாங்க மறுத்திருப்பீர்கள் அல்லது கவரை வாங்கியதற்கு உங்க
மறுப்பைத் தெரிவித்து விட்டு அவர் முன்பே (அவரை சாட்சியாக வைத்து)
கவரை உடைத்திருப்பீர்கள் என்றும்
எதிர்பார்த்தேன்

நன்மனம் said...

இத மாதிரி பல ஆய்வுகளில் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு அமிலம் தயாரிக்கும் கம்பெனிக்கு சரக்கு ஆய்வுக்கு செல்லும் போது எனது நண்பன் ஒரு விலையுயர்ந்த அமில கேனை திறக்க வலியுருத்த.... வந்திருந்த வேலையாள் அது திறந்தால் அபாயம் என்று சொல்ல.... என் நண்பன் விடாபிடியாக "எப்படி தயாரிப்பில் பயன் படுத்துவீர்கள்" என்று வினவ, வேறு வழி இன்றி திறந்தால்.... முழுவதும் தண்ணீர்.....

ஆனால் உங்கள் அனுபவம் மாதிரி கடுமையாக இருந்தது இல்லை.

tbr.joseph said...

வாங்க நன்மனம்,

இத மாதிரி பல ஆய்வுகளில் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.//

ஆய்வுன்னாலே இப்படிப்பட்ட அனுபவங்கள்தான் அதிகம் இருக்குங்கறது சரியாத்தான் இருக்கு.

அதனாலதான் எங்களுடைய வங்கியின் ஆய்வு இலாக்காவிற்கு மாற்றம் வந்தால் அதுவே ஒரு பெரிய தண்டனை என்று நினைப்போம்.

Krishna said...

அப்ப, கைய நீட்டி, அன்பளிப்ப வாங்கிட்டீங்கள்ல, சார் நீங்களுமா இப்படி...வாங்கியது மட்டுமில்லாம, இப்படி, அதப்பத்தி, தெனாவட்டா,எழுதவும் செய்யறீங்க....

சார், இப்படி வாங்கிய பணத்த வச்சித்தான், சென்னையில அடுக்கு மாடி கட்டிடம் கட்டனதா சொன்னாங்க...பொய்தானே...

tbr.joseph said...

வாங்க ஜி!

கவரை வாங்க மறுத்திருப்பீர்கள் அல்லது கவரை வாங்கியதற்கு உங்க
மறுப்பைத் தெரிவித்து விட்டு அவர் முன்பே (அவரை சாட்சியாக வைத்து)
கவரை உடைத்திருப்பீர்கள் என்றும்
எதிர்பார்த்தேன் //

நேர்ல குடுக்க தைரியமில்லாமத்தான திருட்டுத்தனமா ரிசெப்ஷன்ல குடுத்துட்டு போறது? திருட்டுத்தனமும் கோழைத்தனமும் எப்போதுமே சேர்ந்துதான் இருக்கும்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அப்ப, கைய நீட்டி, அன்பளிப்ப வாங்கிட்டீங்கள்ல, சார் நீங்களுமா இப்படி...வாங்கியது மட்டுமில்லாம, இப்படி, அதப்பத்தி, தெனாவட்டா,எழுதவும் செய்யறீங்க....//

அதானே.. இதுவரைக்கும் இப்படியொரு கேள்வி கேக்கற தைரியமும் இல்ல பாருங்க!

சார், இப்படி வாங்கிய பணத்த வச்சித்தான், சென்னையில அடுக்கு மாடி கட்டிடம் கட்டனதா சொன்னாங்க...பொய்தானே...//

இந்த கேள்வி 'உண்மைதானே'ன்னுல்ல முடிஞ்சிருக்கணும்?

உண்மையில்லை..

சென்னையிலேயே பிறந்து வளர்ந்து சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்பவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும். பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டப்பெயருக்கும் சொந்தமானவன்:)

ஆனால் இதுவல்ல பிழைப்பு என்று துவக்கமுதலே நினைத்தவனாயிற்றே..

முத்தமிழ் said...

அருமை ஐயா
அப்புறம் என்ன செய்தீர்கள் அந்த கவரை? அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்கள் ஐயா :) ஆவலாக உள்ளது :)
சிவா @ ஸ்ரீஷிவ்...:)

tbr.joseph said...

வாங்க சிவா,

அப்புறம் என்ன செய்தீர்கள் அந்த கவரை? //

என்ன செஞ்சிருப்பேன்னு நீங்க நினைக்கறீங்களோ அதைத்தான் செஞ்சேன்:)

அடுத்தப்பதிவு திங்களன்றுதான்:)

Krishna said...

//அடுத்தப்பதிவு திங்களன்றுதான்:) //

சிறு வயசில, டீச்சருங்க, திங்கக்கிழம டெஸ்டுன்னு சொல்லுவாங்க. டீச்சர் அன்னிக்கி லீவுன்னு கூட்டமா கத்துவோம். திங்கள்னா, திங்கள் இல்ல, என்னிக்கி, அடுத்த கிளாஸோ அன்னிக்கின்னு சொல்லுவாங்க...

திங்கள்னா, திங்கள் இல்ல, என்னிக்கி வேலை நாளோ அன்னிக்கி, என்ன சார் நான் சொல்றது சரிதானே?

tbr.joseph said...

திங்கள்னா, திங்கள் இல்ல, என்னிக்கி வேலை நாளோ அன்னிக்கி, என்ன சார் நான் சொல்றது சரிதானே? //

ரொம்பச் சரி:)

புதன் கிழமையிலிருந்து இரண்டும் மூன்று நாளைக்கு..