09 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 17

‘எதுக்கு இங்க வந்து கேக்கீங்க? அதான் ஒங்க ஆஃபீஸ்லயே இருந்திருக்குமே?’ என்றார் கேலியாக.

அவருடைய கேள்வி எரிச்சலை மூட்டினாலும் கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில், ‘நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா நான் குறிச்சி வச்சிருந்த நோட்பேடை எடுத்துக்கிட்டு வர மறந்துட்டேன். I need to refer to your Final Rectification Certificate also..’ என்றேன் ஒரு போலி பணிவுடன்.

இவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளே இவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறவர் எதை வேண்டுமானாலும் செய்வார் என்று நினைத்தேன். என்னுடைய ஆய்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பும் என் மனதில் எழுந்தது.

அவர் வேண்டா வெறுப்பாக அவருடைய பிரத்தியேக கோத்ரெஜ் அலமாரியில் இருந்த கோப்பை எடுத்து என்னிடம் நீட்ட அதை பெற்றுக்கொண்டு அறையிலிருந்து வெளியேற முயற்சிக்க அவர், ‘ இங்கயே ஒக்காந்து படிச்சி பார்த்துட்டு குடுத்துருங்க. That’s a confidential file’ என்றார் ஏதோ அதற்கு முன் அத்தகைய கோப்பை நான் கண்டிராதவன் போல.

ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் ‘Sorry Sir. I need that file for a detailed scrutiny. என்னுடைய தேவை முடிந்தவுடன் நானே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன்.’ என்றவாறு கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறினேன் முடிந்தால் தடுத்து நிறுத்தேன் என்று மனதில் நினைத்தவாறு.

அவர் என்ன நினைத்தாரோ என்னைத் தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த நிமிடத்திலிருந்து அவருடைய அறைக்குள் நுழைந்த் ஒவ்வொரு அதிகாரிக்கும், சிப்பந்திக்கும் ஏச்சு விழுந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. நாந்தான் அவருடைய மூடைக் கெடுத்துவிட்டேன் போலிருக்கிறது என நினைப்பது அவர்கள் என்னைப் பார்த்த பார்வையிலிருந்தே தெரிந்தது.

ஆனால் அதை நான் பெரிதுபடுத்தாமல்  முந்தைய ஆய்வறிக்கையின் சிகப்பு நிற பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தவறுகளை கிளை மேலாளர் சரிசெய்திருக்கிறாரா என்பதை ஆய்வு செய்வதில் முனைந்தேன்.

நான் நினைத்திருந்ததுபோலவே அதில் சில சரிசெய்ய முடியாத தவறுகளும் இருந்தன. ஆனால் கிளை மேலாளர் அவற்றை சரிசெய்துவிட்டதாக சான்றிதழில் குறிப்பிட்டிருந்தார். அதை கிளை துணை மேலாளரை அழைத்து சுட்டிக்காட்டி இப்படி தவறாக சான்றிதழில் குறிப்பிட்டிருக்க என்ன காரணம் என வினவினேன்.

அவர் எனக்கு பதிலளிப்பதற்கு முன் ஓரக்கண்ணால் தன்னுடைய மேலாளரைப் பார்த்தார். அவர் எங்கள் இருவரையுமே கவனித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. நான் அதைக் கவனியாதவன்போல் இருந்தாலும் துணை மேலாளர் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்க தயங்கினார். சற்று நேரத்திற்குப் பிறகு, ‘சார் அத நீங்க மேனேஜர்கிட்டத்தான் கேக்கணும்.. இந்த விஷயமெல்லாம் எங்ககிட்ட கேட்டு எந்த பலனும் இல்ல சார்.’ என்றார் தயக்கத்துடன்.

நான் எரிச்சலுடன் அவரையும் வலதுகோடியில் அறைக்குள் அமர்ந்தவாறு எங்களையே பார்த்துக்கொண்டிருந்த மேலாளரையும் பார்த்தேன். அதைப் பொருட்படுத்தாமல் துணை மேலாளர் தன்னுடைய இருக்கைக்குத் திரும்ப அடுத்த நொடியே மேலாளரின் அழைப்பு மணி பலத்த ஒலியுடன் அலறியது. தன்னையுமறியாமல் துணை மேலாளர் அவருடைய அறை இருந்த திசையில் பார்க்க மேலாளர் கோபத்துடன் அவரை உள்ளே வருமாறு சைகை செய்வதையும் கவனித்தேன்.

அவர் அலறியடித்துக்கொண்டு இருக்கையை பின்னுக்கு தள்ளிய வேகத்தில் அது தலைகுப்புற கவிழ அவர் அதைத் தாண்டிக்கொண்டு மேலாளர் அறையை நோக்கி விரைந்தார். அலுவலகத்திலிருந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் காத்திருந்த வாடிக்கையாளர்களுடைய பார்வையும் மேலாளர் அறையை நோக்கி திரும்பின.

மேலாளர் பேசுவது வெளியே கேட்காவிட்டாலும் அவருடைய முகமும் சைகைகளும் துணை மேலாளருக்கு செமத்தியான டோஸ் விழுகிறது என்பது மட்டும் அனைவருக்கும் விளங்கியது.

என்னால்தானே இதெல்லாம் என்று நினைத்த நான் இந்த மேலாளரை எப்படி சமாளித்து ஆய்வை செய்து முடிப்பது என கவலைப்படலானேன். கிளையின் வணிகமோ நான் இதுவரை ஆய்வு செய்த கிளைகளிலேயே பெரிதானதாக இருந்தது. கிளை மேலாளரும் என்னைவிட பதவியிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர். நிச்சயம் அவருக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கும் என்றும் தோன்றியது.

ஆகவே இவரை கையாள்வது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்த நான் அதிகம் பேசாமல் என்னுடைய ஆய்வை முடித்துக்கொண்டு செல்வதுதான் உசிதம் என்ற முடிவுக்கு வந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் துணை மேலாளர் வாடிய முகத்துடன் தன்னுடைய இருக்கைக்கு திரும்பி தன்னுடைய அலுவலைக் கவனிக்க நான் முந்தைய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு சரிசெய்யப்படாமலிருந்த தவறுகளை நான் கொண்டுவந்திருந்த குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு அதன் பின் கிளையில் நடந்திருந்த வணிகத்தை ஆய்வு செய்வதில் முனைந்தேன்.

சாதாரணமாக ஒரு கிளையில் ஆய்வு செய்ய இரண்டு அல்லது மூன்று தினங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் இக்கிளை சற்று வணிக அளவில் பெரியது என்பதால் நான்கு நாட்கள் வழங்கப்பட்டிருந்தன. இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது என்று என்னுடைய இலாக்காவில் இருந்த ஒரு அதிகாரி என்னிடம் ‘நம்ம சி.எம் முக்கு அந்த மேனஜர அவ்வளவா பிடிக்காது சார். அதான் வேணும்னே ஒங்கள அந்த பிராஞ்சுக்கு அனுப்பறது மட்டுமில்லாம ஒரு நாள் எக்ஸ்ட்ராவா குடுக்கவும் செஞ்சிருக்கார்.’ என்று கேலியுடன் கூறியது நினைவுக்கு வந்தது.

ஆனால் நான் என்னுடைய ஆய்வைத் தொடர்ந்தபோது அக்கிளை மேலாளர் செய்து வைத்திருந்த விதி மீறல்களை முழுமையாக ஆய்வு செய்ய ஒரு வாரம் அளித்திருந்தாலும் என் ஒருவனால் முடிக்கவியலாது என்பதை உணர்ந்தேன். அத்துடன் எல்லாக் கிளைகளிலும் வருடம் ஒருமுறை ஆய்வை நடத்தும் எங்களுடைய மத்திய ஆய்வு இலாக்காவிலிருந்து கடந்த பதினெட்டு மாதங்களாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் தெரிந்தது. அப்படியிருக்க என்னை எதற்காக இந்த நேரத்தில் ஆய்வு செய்ய அனுப்பினார்கள் என்று யோசித்தேன்.

இதன் பின்னால் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்றும் என் சிந்தனை ஓடியது. ஆகவே எனக்கு ஆய்வைத் தொடர்ந்து செய்வதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. நாம் என்ன எழுதினாலும் பிரச்சினைதான் போலிருக்கிறது என்ற நினைத்தேன். நிலவரத்தை என்னுடைய உடனடி அதிகாரிக்கு தெரிவித்தால் என்ன என்ற நினைப்புடன் எழுந்தேன்.

ஆனால் அவ்வலுகலத்திலிருந்து தொலைப்பேசி செய்வது உசிதமல்ல என்ற நினைப்பும் வரவே துணை மேலாளரை அணுகி ‘நான் ஒரு காப்பி குடிச்சிட்டு வரேன் சார்.’ என கூறிவிட்டு அவர் பதிலளிக்கும் முன் வாசலை நோக்கி நடந்தேன். நான் வெளியேறவும் மேலாளரின் அழைப்பு மணி அலறவும் சரியாக இருந்தது. நான் அதை பொருட்படுத்தாமல் வெளியேறி கிளைக்கு நேரெதிரிலிருந்த இருந்த கடையில் கல்லாப் பெட்டியிலிருந்தவரை அணுகி, ‘சார் ஒரு ஃபோன் செஞ்சிக்கட்டுமா?’ என்றேன். அப்போது பொதுதொலைபேசி boothகள் பிரபலமாயிருக்கவில்லை.

கடை முதலாளி ஒருவேளை மேலாளருக்கு பரிச்சயமானவராக இருப்பாரோ என்ற நினைப்பில் என்னுடைய அதிகாரியை அழைத்து மலையாளத்தில் மேலாளரின் முழு ஒத்துழைப்பும் இல்லாததால் ஆய்வைத் தொடர்ந்து செய்ய எனக்கு விருப்பமில்லை என்று கூறினேன். அவர் ‘ அப்படியா செய்றான்? நீங்க ஆஃபீசுக்கு போங்க. நான் அவர்கிட்ட பேசறேன்.’ என்றார்.

‘சார், நான் இன்ஸ்பெக்ஷன கண்டினியூ பண்ணாலும் என்னால நாலு நாளைக்குள்ள முடிக்க முடியாதுன்னு நினைக்கறேன் சார். அந்த அளவு irregularities இருக்கு. நம்ம ஆன்யுவல் இன்ஸ்பெக்ஷனும் ட்யூவா  இருக்கறதுனால அவங்களையே அனுப்பச் சொல்றதுதான் நல்லதுன்னு ஃபீல் பண்றேன் சார்.’ என்றேன்.

அவர் அதை ஒத்துக்கொள்வதாயில்லை. ‘டிபிஆர். நீங்க இன்ஸ்பெக்ஷ்ன கமென்ஸ் பண்ணிட்டு கம்ப்ளீட் பண்ணாம வந்தீங்கன்னா விஷயம் நம்ம எச்.ஓவுக்கு போயிரும். அப்புறம் ஒங்களுக்கும் பிரச்சினையாக வாய்ப்பிருக்கு. அதனால நீங்க ஒங்களால என்ன முடியுமோ அதமட்டும் பார்த்துட்டு வந்துருங்க.’ என்று கூறிவிட்டு எனக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டிக்க எனக்கு அலுவலகத்திற்கு திரும்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

நான் மீண்டும் அலுவலகத்தினுள் நுழையவும் மேலாளர் பேசிமுடித்துவிட்டு ஒலிவாங்கியை வைக்கவும் சரியாக இருந்தது. அவரே எழுந்து அறைக்கதவைத் திறந்துக்கொண்டு என்னை எதிர்கொண்டார்.

அவருடைய முகம் கோபத்தில் சிவந்துபோயிருந்ததைக் கவனித்தேன். ‘என்ன சார் ஒங்களுக்கு ஏதாச்சும் தேவைன்னா என்னெ கேட்டிருக்கலாம்லே.. நீங்க பாட்டுக்கு கம்ப்ளெய்ண்ட் பண்ண போய்ட்டீங்க?’ என்றார்.

மொத்த அலுவலகமும் எங்களிருவரையும் கவனிப்பது தெரிந்தது. நான் பதற்றப்படாமல், ‘சார் எல்லாத்துக்கும் ஒங்கள வந்து கேட்டுக்கிட்டிருக்க முடியாது. நீங்க ஒங்க அசிஸ்டெண்ட் மேனேஜர  நான் கேக்கறதையெல்லாம் குடுக்கச் சொல்லுங்க, அதுபோதும்.’ என்றேன்.

அவருக்கு என்னுடைய பதிலிலிருந்த தொனி எரிச்சலை மூட்டியது என்பது அவருடைய முகம் மேலும் சிவந்ததிலிருந்து தெரிந்தது. ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

என்னுடைய அதிகாரி அவரிடம் என்ன பேசினாரோ அப்போது முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்னுடைய ஆய்வுக்கு தேவையான எல்லா கோப்பு மற்றும் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்தன.

வங்கியின் நியதிப்படி இத்தகைய குறு ஆய்வின் இறுதித் தினத்தன்று வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்த முக்கிய வாடிக்கையாளர்களின் வணிகதளங்களைப் பார்வையிட வேண்டும். ஆகவே கடந்த ஆய்வில் விடுபட்டிருந்த சில வாடிக்கையாளர்களைச் சென்று சந்திப்பதென முடிவு செய்து நான் தயாரித்திருந்த பட்டியலை துணை மேலாளரிடம் கொடுத்தேன்.

அவர் தயக்கத்துடன் என்னைப் பார்த்தார். ‘சார் இந்த லிஸ்ட்டை நீங்களே சார்கிட்ட குடுத்துருங்களேன். இங்கல்லாம் எங்கள அனுப்புனதே இல்ல சார். Pledge இருந்தாலும் Release இருந்தாலும் அவரேதான் போவார்.’

நான் புன்னகையுடன், ‘அதுவே பெரிய தப்பு. நான் நோட் பண்ணித்தான் வச்சிருக்கேன். இன்ஸ்பெக்ஷனுக்கு மேனேஜர் என்னோட வரக்கூடாதுங்கறதும் நம்ம ரூல்சுல ஒன்னு. அதனால என் கூட நீங்கதான் வரணும். அவர் ஏதாச்சும் சொன்னார்னா நா பாத்துக்கறேன். இந்த லிஸ்ட்ல ரெண்டு Key Loan partiesங்கறதால நீங்களே கொடவுன் கீய்சையும் எடுத்துக்கிட்டு வந்துருங்க நா கீழ நிக்கறேன்.’ என்றவாறு என்னுடைய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தேன்.

நான் கீழே சாலையை அடைந்து கால் மணிநேரமாகியும் துணை மேலாளர் வருவதாயில்லை. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. யினும் நான் அவராக வந்து என்னிடம் முறையிடாதவரை  தலையிட வேண்டாம் என்ற முடிவுடன் காத்திருந்தேன்.

சுமார் அரை மணி நேரம் கழித்து நான் தேவைப்பட்ட கிடங்கு சாவிகளுடன் அவர் வந்து சேர கிளைக்கு எதிரேயிருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்த ட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

‘என்ன சார் இவ்வளவு லேட்? ஒங்க மேனேஜர் மறுபடியும் ஏதாச்சும் பிரச்சினை பண்ணாறா?’ என்றேன்.

அவர் பதிலளிக்காமல் சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘நாம விசிட் பண்ணப்போற பார்ட்டீசையெல்லாம் கூப்ட்டு சொல்லிருப்பார் ஒங்க மேனேஜர். சரிதானே?’ என்றேன் கேலியுடன்.

‘எப்படி சார் அவ்வளவு கரெக்டா சொல்றீங்க?’ என்றார் அவர் என்னை வியப்புடன் பார்த்தவாறு. ‘நா என்ன பண்ண முடியும் சார்? ஆன்யுவல் இன்ஸ்பெக்ஷன் ட்யூ ஆகியும் இதுவரைக்கும் நம்ம எச்.ஓவே ரெகுலர் இன்ஸ்பெக்ஷன் டீம அனுப்பாம இருக்காங்கன்னா பாருங்களேன் அவருக்கு மேல எந்த அளவுக்கு ஹோல்ட் இருக்குன்னு..’

எனக்கும் அவரைப் பார்க்க பாவமாகத்தானிருந்தது. இவர் எப்படித்தான் அந்த மேலாளரிடம் பணிபுரிகிறாரோ என்று நின¨த்தேன்.

‘இப்படிப்பட்ட மேலாளருக்கு எதிராக நான் என்ன எழுதி வைத்தாலும் பெரிதாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை’ என்ற நினைப்புடன் செல்கிற இடத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் என்னுடைய அறிக்கையில் நான் கண்டதை அப்படியே எழுதிவிடுவதென தீர்மானித்தேன்.

தொடரும்..12 comments:

நாடோடி said...

இத்தனை கோல்மால் நடக்குதா நாட்டுல?

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி க்ளெரிக்கல் ஸ்டாப், ஆபீஸர்கள் எல்லாரையும் கத்தினா அவங்க சார்ந்திருக்கும் சங்கள் சும்மா இருக்குமா?

tbr.joseph said...

வாங்க நாடோடி,

இத்தனை கோல்மால் நடக்குதா நாட்டுல? //

கோல்மால்னு சொல்ல முடியாது. ஆனாலும் தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்ததும் இல்லை.

tbr.joseph said...

வாங்க கொத்தனார்,

அவங்க சார்ந்திருக்கும் சங்கள் சும்மா இருக்குமா? //

இதற்கு சங்கங்கள் என்ன செய்ய முடியும்? ஒருவரை பணி நீக்கம் செய்தாலோ அல்லது தேவையில்லாமல் தண்டித்தாலோ மட்டுமே ச்ங்கங்கள் தலையிட முடியும். இதுபோன்ற தினசரி அலுவல்களில் நடப்பவற்றிற்கெல்லாம் சங்கங்கள் தலையிட்டு ஒன்றும் செய்ய முடியாது.

srishiv said...

பாவம் ஐயா அந்த உதவி மேலாளர்
இப்படியும் சில மேலாளர்கள் இருக்கின்றார்கள் தான், கேட்க ஆள் இல்லை, அப்புறம் என்னதான் செய்தீர்கள் இறுதியாக?

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

இத்தகைய மேலாளர்களைக் கையாள்வது எப்படி என்பதை குமாஸ்தாக்களுக்கும், ஜூனியர் அதிகாரிகளுக்கும் பயில்விக்கவே எங்களுடைய பயிற்சிக் கல்லூரியில் ஒரு பிரத்தியேக வகுப்பு நடத்தப்படுவதுண்டு.

அத்தகைய வகுப்புகளை கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் நானும் நடத்தியிருக்கிறேன், How to manage your superiors என்ற தலைப்பில்.

இது எல்லா நிறுவனங்களிலும் உள்ள பிரச்சினைதான். இத்தகைய அதிகாரிகளால மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் உண்டு.

மும்பையிலுள்ள BARC ல் அடிக்கடி இளம் விஞ்ஞானிகள் அவர்களுடைய விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்வதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்கு அவர்கள் அன்றாட அலுவல்களில் படும் மன உளைச்சல்தான் காரணம் என்பதையும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்.

Krishna said...

சார், இந்த மாதிரி, பாஸ்ங்க தொல்லய எப்படி சமாளிக்கறதுன்னு கொஞ்சம் விலாவரியா சொல்லுங்களேன்...உங்களுக்கு புண்ணியமா போகும்!

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

இந்த மாதிரி, பாஸ்ங்க தொல்லய எப்படி சமாளிக்கறதுன்னு கொஞ்சம் விலாவரியா சொல்லுங்களேன்//

அடடடா.. இது யூனிவர்சல் பிரச்சினையா இருக்கும் போல:)

சொல்றேன்.. கல்லூரியில வகுப்பு எடுக்க ஒரு PP presentation செய்திருந்தேன்.. தேடிப் பிடிக்க வேண்டும்.

sivagnanamji(#16342789) said...

அந்த pp ய இங்கேயும் present செய்யுங்க; பலருக்கு உபயோகமாகும்

tbr.joseph said...

வாங்க ஜி!

அந்த pp ய இங்கேயும் present செய்யுங்க; பலருக்கு உபயோகமாகும்//

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தயாரித்த ஸ்லைடுகள்.. தேடிக் கண்டுபிடிக்கணும். அப்புறம் இப்பருக்கற சூழலுக்கு ரிலெவண்டா இருக்கணுமான்னு பாக்கணும்.. தேவைப்பட்டா அப்டேட் பண்ணிட்டு போடறேன்.

G.Ragavan said...

தில்லாலங்கடி தில்லாலங்கடின்னு சொல்வாங்க. இவரு தில்லாலங்கடிகளுக்கெல்லாம் தில்லாலங்கடி போல. வேலைல பிரச்சனைன்னு கேள்விப்பட்டிருக்கேன். பிரச்சனையே வேலைன்னு இப்பத்தான் கேள்விப்படுறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

பிரச்சனையே வேலைன்னு இப்பத்தான் கேள்விப்படுறேன். //

என்ன பண்றது. சில சமயங்கள்ல இப்படித்தான்.. நானும் இம்மாதிரியான தில்லாலங்கடிகளிடம் பணியாற்றியிருக்கிறேன்.. அவர்களால் பிரச்சினை என்பதைவிட பிரச்சினையே அவர்கள்தான் என்கிற அளவுக்கு சலிப்பை ஏற்படுத்துவார்கள்.