08 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 16

என்னுடைய வங்கியின் வட்டார அலுவலகத்தில் நான் பணியாற்றிய காலகட்டத்தில் கணினியின் உதவி இருக்கவில்லை.

ஒரு கிளைக்கு ஆய்வுக்குச் செல்லும் சமயத்தில் அக்கிளையில் கடந்த ஆண்டில் நடந்திருந்த ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த தவறுகளை கிளை சரிசெய்திருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது நியதி.

ஆகவே குறிப்பிட்ட கிளைக்கு பயணமாவதற்கு முன்பே எங்களுடைய அலுவலகத்திலிருந்த சம்பந்தப்பட்ட கிளையின் முந்தைய ஆய்வு அறிக்கைகளை எடுத்து முழுவதுமாக படித்துப் பார்த்து சரி செய்யப்படாதிருந்த தவறுகளின் பட்டியலைத் தயாரித்து முடிப்பதெற்குள் போதும், போதும் என்றாகிவிடும். ஒவ்வொரு அறிக்கையும் சுமார் நூறு பக்கங்களுக்கு குறையாமல் இருப்பதுடன் அவை பெரும்பாலும் ஆய்வாளரின் கையெழுத்தில் இருக்கும். சிலருடைய (என்னுடையதையும் சேர்த்துத்தான்) கையெழுத்தைப் படிந்து புரிந்துக்கொள்வதே ஒரு பெரும் சாதனை! தட்டச்சு தேர்வுகளில் கொடுக்கப்படும் கைப்பிரதிகளை விடவும் சவால்விடுவதாக இருக்கும்.

கணினி உள்ள இக்காலத்தில் மென்நகல் (softcopy) உள்ள ஃப்ளாப்பியையோ அல்லது அலுவலக வழங்கியையோ (Server) உபயோகித்து சரிசெய்யப்படாத தவறுகளை அதற்கென உள்ள ‘தேடு’ கருவியின் உதவியுடன் நிமட நேரத்தில் பட்டியலிட்டு விடமுடியும்.  

சாதாரணமாக ஆய்வறிக்கைகளில் குறிப்பிடப்படும் தவறுகளை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொடுக்கப்படுவதுண்டு. அக்கால வரம்புக்குள் தவறுகளை சரிசெய்து எல்லாத் தவறுகளும் சரி செய்துவிட்டன என்று வட்டார அலுவலகத்துக்கு சம்பத்தப்பட்ட கிளை மேலாளர் தன் கைப்பட ஒரு சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும் என்பதும் நியதி.

அத்தகைய சான்றிதழ் கிடைக்கப்பெறும் வரை வட்டார அலுவலகம் கிளை மேலாளரை நினைவுறுத்திக்கொண்டே இருக்கும். மூன்று நினைவுறுத்தலுக்கு மேல் பதிலளிக்காத கிளை மேலாளர்கள் எச்சரிக்கப்பட்டு ‘இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு சான்றிதழ் கிடைக்கப் பெறாமலிருக்கும் பட்சத்தில் தங்களுடைய கடன் வழங்கும் அதிகாரம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்’ என்று வட்டார மேலாளர் கையொப்பமிட்ட தாக்கீதும் அனுப்பப்படுவதுண்டு.

ஆகவே இத்தகைய எச்சரிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் சரிசெய்யப்படாத தவறுகளையும் சரிசெய்துவிட்டோம் என்று ஒரு ஒட்டுமொத்த சான்றிதழை சமர்ப்பிப்பது கிளை மேலாளர்களின் வாடிக்கை. நானும் சில சமயங்களில் அவ்வாறு செய்திருக்கிறேன்.

இதற்குக் காரணம் உள்ளது. சில ஆய்வாளர்கள் எதையாவது எழுத வேண்டுமே என்ற நோக்கத்தில் தங்களுக்கு தவறு என்று தோன்றுவதையெல்லாம் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்களுடன் ஆலோசிக்காமாலே எழுதிவிடுவார்கள்.

கிளை மேலாளரின் கோணத்தில் அது தவறாகவே தோன்றாது. ஒரு ஆய்வாளர் தவறு என்று எழுதியதை அது உண்மையிலேயே தவறுதானா என்பதை ஆய்வு செய்ய வட்டார அலுவலகம் அல்லது மைய ஆய்வு இலாக்காவில் பணியாற்றும் எந்த அதிகாரியும் முன் வரமாட்டார். நமக்கேன் வம்பு வேண்டுமானால் கிளை மேலாளர் இது தவறு இல்லையென வாதாடட்டுமே என்று வாளாவிருந்துவிடுவார்கள்.

சில அனுபவமிக்க கிளை மேலாளர்கள் தைரியமாக இவற்றில் எந்த தவறும் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை ஆகவே அவை சரிசெய்யப்படத் தேவையில்லையென தங்களுடைய சான்றிதழில் குறிப்பிட்டுவிட்டு மேலதிகாரிகளின் பதிலுக்கு விட்டுவிடுவார்கள். அவர்களுடைய வாதத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மேலதிகாரிகளின் பொறுப்பு.

சில சமயங்களில் மேலாளர்களின் இத்தகைய வாதம் பரிசீலிக்கப்படாமலே பல ஆண்டுகள் நிலுவையில் நிற்பதுண்டு. அத்தகைய தவறுகளையும் எதிர்வரும் காலங்களில் ஆய்வுக்குச் செல்லும் ஆய்வாளர்கள் மீண்டும் பரிசீலித்து தங்களுடைய முடிவை அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டியிருக்கும்.

நான் ஆய்வுக்குச் செல்வதாயிருந்த ஒரு கிளையின் முந்தைய ஆய்வறிக்கைகளைப் படித்துப் பார்த்து நான் தயாரித்த பட்டியிலில் இத்தகைய தீர்க்கப்படாத தவறுகள் சில இருந்தன.

ஆய்வறிக்கையில் பட்டியலிடப்படும் தவறுகள் சாதாரணமானவை, தீவிரமானவை என பிரிக்கப்பட்டு தீவிரமானவை எனக் கருதப்படும் தவறுகள் அதற்கென பிரத்தியேகமாக சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பக்கங்களில் குறிக்கப்படும். ஆய்வறிக்கை வட்டார அலுவலகத்தில் வந்து சேர்ந்தவுடன் இச்சிவப்பு நிற பகுதி உடனே வட்டார மேலாளரின் தனிப்பட்ட பார்வைக்கு அனுப்பப்படும்.

இப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து தவறுகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் சரிவர செய்யப்பட்டே ஆகவேண்டும். எக்காரணம் கொண்டும் இவை சரிசெய்யப்படாமலிருக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

ஆனால் என்ன காரணத்தினாலோ இத்தகைய தவறுகளில் சிலவும் நான் ஆய்வுக்குச் செல்லவிருந்த கிளையில் காணப்பட்டன. கடந்த ஆய்வு நடந்து முடிந்து ஆறுமாத காலத்திற்கும் மேலாகியிருந்ததைக் கவனித்த நான் என்னுடைய பட்டியலில் இருந்த ‘சிகப்பு நிற வகை’ தவறுகளை என்னுடைய அதிகாரியின் பார்வைக்குக் கொண்டுசென்று ‘இது எப்படி சார் இன்னமும் சரி செய்யப்படாமலிருக்கிறது?’ என கேட்டேன்.

அவரும் அதை அப்போதுதான் கவனித்தார். ‘என்ன பண்றது டிபிஆர். இத ஃபாலோ பண்ணி சரி செய்ய வைக்கிறது ஒங்கள மாதிரி டெஸ்க் ஆஃபீசரோட பொறுப்பு. ஆனா இதுக்கு முன்னால ஒங்க சீட்ல இருந்தவருக்கு அவ்வளவா விவரம் போறாது. ஆஃபீசுக்கே ஒழுங்கா வரமாட்டார். வந்தா வேலையும் பாக்க மாட்டார். இத மாதிரி இன்னும் எத்தன பிராஞ்சுகள்ல இருக்கோ தெரியல.’ என்றார்.

அவருடைய விளக்கத்தில் எனக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் ஏற்கனவே அவருடன் இருந்த கருத்து வேறுபாடு முழுவதுமாக தீர்க்கபடாதிருந்த நிலையில் மேற்கொண்டு அவரிடம் கேட்டால் ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமே என்ற அச்சத்தில் சில நிமிடங்கள் பதிலேதும் கூறாமல் அமர்ந்திருந்தேன்.

ஆய்வறிக்கைகளில் காணப்படும் சிவப்பு நிற பகுதியில் குறிப்பிடப்படும் தவறுகள் நேரடியாக வட்டார மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமையதிகாரியான என்னுடைய உடனடி அதிகாரியின் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் அவற்றை சரி செய்து முடிக்கும்வரை தொடர்ந்து கண்கானிப்பதும் அவர்களுடைய தனிப்பட்ட பொறுப்பாகும். இதில் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் இறுதிப் பொறுப்பு அவர்களுடையதுதான் என்பது எனக்கு தெரிந்துதானிருந்தது.

ஆனால் அதை எடுத்துக்காட்ட முயன்று மீண்டும் ஒரு பிரச்சினையை விலைக்கு வாங்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய மவுனத்தின் பின்புலத்தை ஒருவாறு உணர்ந்த அதிகாரி, ‘நீங்க ஒன்னு செய்ங்க டிபிஆர். நீங்க இன்ஸ்பெக்ஷன் போறப்போ நம்ம மேனேஜருக்கு தெரியாம இத ரெக்ட்டிஃபை செஞ்சிருக்காறான்னு ரகசியமா பாருங்க. சரி பண்ணைலைன்னா அங்கிருந்தே எனக்கு ஃபோன் பண்ணுங்க. நானே நேரடியா அவர்கிட்ட பேசிக்கறேன்.’ என்றார்.

இதிலும் எனக்கு உடன்பாடில்லை. இது உளவு வேலை பார்ப்பது போலாயிற்றே. ஆய்வு என்பது சம்பந்தப்பட்ட மேலாளர் மற்றும் அக்கிளையிலுள்ள சகல அதிகாரிகளின் துணையுடன் செய்யப்படுவது. இதில் ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் என்னைப் போன்ற ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பது என்னுடைய அதிகாரிக்கும் நன்றாகத் தெரியும்.

இருப்பினும் அவருடைய வேண்டுகோளை மறுத்துப் பேசி ஒன்றும் பயனில்லை என்பதை உணர்ந்த நான் சரி சார் என்று சம்மதித்து என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

அடுத்த நாளே புறப்பட்டு சம்பந்தப்பட்ட கிளைக்கு சென்று என்னுடைய ஆய்வைத் துவக்கினேன்.

அக்கிளை மேலாளர் என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். நான் மூன்று கிளைகளில்தான் மேலாளராக பணியாற்றியிருந்தேன். நான் பணிக்குச் சேர்ந்தே பதினைந்து ஆண்டுகள் முடிந்திருந்த நிலையில் அவர் மேலாளர் பதவியிலிருந்த காலம் அதைவிட கூடுதலாக இருந்ததை ஆய்வு துவங்கிய முதல் நாளே தெரிய வர அவரிடம் என்னுடைய அனுபவமின்மையை அவரிடம் காட்டலாகாது என எச்சரிக்கையுடன் கோப்புகளை ஆராயத் துவங்கினேன்.

என்னுடைய உடனடி அதிகாரி என்னிடம் வைத்திருந்த கோரிக்கையை எனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிராகரிக்க இயலாது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவதென யோசித்தேன்.

சிறிது நேரத்தில் எனக்கு ஒரு உத்தி தோன்றவே எனக்கருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர் அதிகாரியிடம் முந்தைய ஆய்வறிக்கைகள் அடங்கிய கோப்பைக் கொண்டு வாருங்களென கேட்டேன். அவரோ, ‘சார் அந்த ஃபைலெல்லாம் நம்ம மேனேஜரோட பெர்சனல் கஸ்டடியிலதான் இருக்கும். நாங்க போய் கேட்ட தரமாட்டார் சார். அதனால..’ என்று கழன்றுக்கொண்டார்.

முன்பெல்லாம் அப்படித்தான். கிளை மேலாளருக்கும் அங்கு பணியாற்றும் மற்ற அதிகாரிகளுக்கும் இடையில் வயது வித்தியாசம் சுமார் பதினைந்திலிருந்து இருபது வருடங்கள் இருக்கும். ஆகவே அவர்களிடையில் இப்போதிருப்பதுபோல் உறவுகள் அத்தனை சுமுகமாக இருக்காது. மேலும் இத்தகைய நீண்ட அனுபவம் உள்ள மேலாளர்கள் பெரும்பாலும் வெட்டி பந்தா செய்வதில் மன்னர்களாக இருப்பார்கள்.

என் வயதொத்த மேலாளர்கள் என்னைப் போன்ற ஆய்வாளர்களை தங்களுடைய அறையிலேயே தங்களுக்கெதிரில் அமர்த்தி சம்பந்தப்பட்ட கோப்புகளை தருவித்து நமக்கு ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் அவர்களாகவோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறைக்குள் அழைத்தோ தீர்த்து வைப்பது வழக்கம்.

ஆனால் இவரோ என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டவுடனே அழைப்பு மணியை அடித்து அவருடைய உதவி மேலாளரை அழைத்து, ‘இவருக்கு அங்க ஹால்ல ஒரு சீட் போட்டு குடுங்க.’ என்று சுருக்கமாக கூறிவிட்டு அவருடைய அலுவலைக் கவனிக்கலானார்.

இதை எதிர்பாராத நான் அதிர்ந்துபோய் நிற்க அவருடைய உதவி மேலாளர் என்னைப் பார்த்து ஆறுதலாக புன்னகை செய்துவிட்டு வெளியேற நானும் வேறு வழியில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தேன்.

என்னுடைய இருக்கை வங்கி அலுவலகத்தின் ஒரு மூலையில் இருந்ததால் என்னுடைய ஆய்வுக்கு தேவைப்பட்ட ஒவ்வொரு கோப்பையும் எனக்கு அருகில் இருந்த ஒரு ஜூனியர் அதிகாரியிடம்தான் கேட்க வேண்டியிருந்தது.

சாதாரணமாக கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்களின் கோப்புகள்தான் மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் இருப்பது வழக்கம். அவரைத் தவிர வேறெந்த அதிகாரிக்கும் அது தேவைப்படும் பட்சத்தில் ஏன், எதற்கு என்று கேட்டுவிட்டுத்தான் வழங்குவார்கள். ஏனெனில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய தனிப்பட்ட சொத்து மற்றும் வங்கி இருப்புகளைப் பற்றிய முழு விவரங்களும் அக்கோப்புகளில் இருப்பதுண்டு.

ஆனால் முந்தைய ஆய்வறிக்கைகள் அடங்கிய கோப்புகளும் மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் இருப்பது நான் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆகவே கிளை துணை மேலாளரை அழைத்து அவரிடம் என்னுடைய தேவையைக் கூற அவரும் தயங்கினார். ‘சார் அந்த ஃபைல்ச பாக்காம எனக்கு இன்ஸ்பெக்ஷன் துவங்க முடியாது.’ என்றேன் பிடிவாதமாக.

‘அதுக்கில்ல சார். நம்ம மேனேஜர் ரொம்ப சென்சிட்டிவானவர். அதனால நான் கேக்கறத விட நீங்களே கேக்கறதுதான் நல்லது.’என்று பின்வாங்க இதென்னடா வில்லங்கம் என நினைத்தேன்.

அப்படியென்ன ரகசியம் இருக்குன்னு இவர் கைல வச்சிக்கிட்டிருக்கார் என்று நினைத்த நான் மேலாளரின் அறைக்குள் நுழைந்து என் விருப்பத்தை கூறினேன். அவரோ என்னை மேலும் கீழும் பார்த்தார். ‘எதுக்கு இங்க வந்து கேக்கீங்க? அதான் ஒங்க ஆஃபீஸ்லயே இருந்திருக்குமே?’ என்றார் கேலியாக.

தொடரும்..

8 comments:

Anonymous said...

அது எப்படீங்க ஒரே பிரட்சனையிலே போய் மாட்டறீங்க , இவ்வளவு பிரசனயிலும் எப்ப்டி டென்சனாகாம இருந்தீங்க ?

tbr.joseph said...

வாங்க மூர்த்தி,

இவ்வளவு பிரசனயிலும் எப்ப்டி டென்சனாகாம இருந்தீங்க ? //

நீங்க வேற.. B.P. ப்ராப்ளம் வந்து இருபது வருசமாகுது. இன்னமும் மாத்திரைகள்தான் இதை சம நிலையில் வைத்திருக்க்குன்னா பாருங்களேன்.

sivagnanamji(#16342789) said...

தி.பா II-13,14,15 எப்படி பார்ப்பது?

ஹி....ஹி கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்து படிக்ற கணினி கைநாட்டு நான்.
முன்பதிவுகளத் தேடத் தெரியல்லே!

கிளைமேலாளரிடம் ஆய்வறிக்கை கேட்பது போல இருக்கில்லே......

'உங்க கணினியிலேயே இருக்கு'னு
சொல்லிடாதீங்க;எப்படித் தேடுறதுன்னு
சொல்லுங்க

tbr.joseph said...

வாங்க ஜி!

தி.பா II-13,14,15 எப்படி பார்ப்பது?//

இதுக்கு ரெண்டு வழி இருக்கு.

முதலாவது
http://ennulagam.blogspot.com இந்த லிங்க்ல போனா ரைட் சைடுல இருக்கும்.

இல்லன்னா என்னோட ப்ளாக்ல browse archives னு ஒரு பாக்ஸ் இருக்குல்லே அத க்ளிக் பண்ணி 2007 செலக்ட் பண்ணா இந்த வருசத்துல போட்ட எல்லாமே இருக்கும்..

கைநாட்டாருந்தாலும் இத செய்ய முடியும்.. ட்ரை பண்ணி பாருங்க:)

sivagnanamji(#16342789) said...

நன்றி!

என்னுலகம்.ப்ளாக்ஸ்பாட்.காம் உதவியது!

ப்ரவுஸர் ஆர்க்கைவ்ஸ்லெ இன்னும்
2007 பிறக்கல்லே.......
கொஞ்சநாள் ஆகும்னு நினைக்கிறேன்

tbr.joseph said...

ப்ரவுஸர் ஆர்க்கைவ்ஸ்லெ இன்னும்
2007 பிறக்கல்லே.......
கொஞ்சநாள் ஆகும்னு நினைக்கிறேன்//

அப்படியா ஜி! நான் கவனிக்கலை..

எப்படியோ காரியம் நடந்துதுல்லே:)

srishiv said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
திரும்பிப்பார்த்த நாயகனே, எப்படி ஒரு பிரச்சனையை எடுத்து அதை அற்புதமா முடிக்கின்றீர்கள் ஐயா? நான் கேட்டிருந்தேனே என்னவாயிற்று? தங்களின் திரும்பிப்பார்த்தல்களின் தொகுப்பு கோப்பு? அனுப்பி வையுங்கள் ஐயா, மிக்க நன்றி
ஸ்ரீஷிவ்...
அகில உலக டி.பி.ஆர்.ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர் நற்பணிமன்றம்,
அசாம் கிளை, இந்தியா :)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தங்களின் திரும்பிப்பார்த்தல்களின் தொகுப்பு கோப்பு? அனுப்பி வையுங்கள் //

என்னுடைய ப்ளாக்ல்ருக்கற brower archivesல எல்லாமே இருக்கே. அங்க பாருங்களேன்.

உங்களுடைய ஆர்வத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீஷிவ்:)