04 January 2007

திரும்பிப் பார்க்கிறே II - 15

நான் அவர்களை பொருட்படுத்தாமல் பெட்டிக்குள் ஏறி என்னுடைய இருக்கையில் சென்றமர்ந்தேன்.

முதல் வகுப்பு பெட்டியில் ஒரு சவுகரியம். நம்முடைய கேபின் கதவுகளை மூடி உட்புறமிருந்து தாளிட முடியும். நல்ல வேளையாக  அந்த கேபினுக்குரிய மற்ற மூவரும் நான் ஏறிய நிலையத்திற்கு முந்தைய நிலையங்களிலேயே வந்துவிட்டிருந்ததால் நான் ஏறியதும் கதவை மூடி தாளிட்டேன். அவர்கள் மூவரும் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்தது விளக்கை அணைத்துவிடவும் உதவியது.

நான் விளக்குகளை அணைத்துவிட்டு அமரவும் நான்கைந்து பேர் என் கேபினுக்கு வெளியே நின்றுக்கொண்டு தெலுங்கில் என் பெயரை குறிப்பிட்டு யாருடனோ பேசுவதும் கேட்டது. பயணச்சீட்டு பரிசோதகராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனாலும் நான் இருந்த இடத்தைவிட்டு எழாமல் சற்று நேரம் காத்திருந்தேன்.

என்னுடைய வண்டி புறப்படுவதற்கான இறுதி மணி அடிக்கப்பட்டு விட்டதாலும் நான் என்னுடைய கேபினுக்குள் நுழைந்ததைப் பரிசோதகர் கவனியாததாலும் என்னைத் தேடி வந்த அவர்களை வற்புறுத்தி இறக்கிவிட்டுவிட்டார் போலிருந்தது. அடுத்த சில நொடிகளில் வண்டி புறப்பட்டுவிட நான் நிம்மதியுடன் என்னுடைய கேபினை திறந்துவைத்துவிட்டு அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் வந்த பரிசோதகரிடம் என்னைத் தேடிக்கொண்டு யாரேனும் வந்தார்களா என்று வினவ அவர், ‘ஆமாம் சார். பார்த்தா ரவுடிங்க மாதிரி இருந்ததால நான் நீங்க கேபினுக்குள்ள இருந்தது தெரிஞ்சும் அவங்கக்கிட்ட சொல்லாம கம்பெல் பண்ணி எறக்கி விட்டுட்டேன். எனி ப்ராப்ளம் சார்?’ என்றார்.

நான் ‘ஒன்றும் இல்லை சார். அவங்க யாருன்னே எனக்கு தெரியாது.’ என்று கூறிவிட்டு காபின் கதவுகளை தாளிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

அடுத்த நாள் காலை சென்னை வந்து இறங்கியபோது இரவில் நடந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்தேன். என்னை எதற்காக சந்திக்க என்னுடைய மேலாளர் விரும்பியிருப்பார்? எதற்காக தன்னுடன் கன்சல்டண்ட்டையும் அழைத்துவரவேண்டும்? என்றெல்லாம் என் சிந்தனை ஓடியது.

நடந்தவற்றையெல்லாம் என்னுடைய வட்டார மேலாளரிடம் தெரிவித்தால் என்ன என்றுக்கூட தோன்றியது. அதற்கு முன் சம்பத்தப்பட கிளை மேலாளரை அழைத்து பேசுவது நல்லதென நினைத்தேன். ஆனால் அலுவலகத்திலிருந்து அழைத்தால் சுதந்திரமாக அவரிடம் கேட்க இயலாதே என்று நினைத்து அலுவலகத்தை விட்டு வெளியே சென்று அடுத்திருந்த தபால் நிலையத்திலிருந்து அவருக்கு தொலைபேசி செய்தேன்.

அவர் என்னுடைய குரலைக் கேட்டதுமே அழமாட்டாக் குறையாக, ‘என்ன சார் நேத்து நீங்க அப்படி செஞ்சிட்டீங்க? நீங்க அவர்கூட ஒரு நிமிஷம் பேசியிருந்தாக் கூட பிரச்சினையில்லாம போயிருக்கும். நீங்க பாட்டுக்கு அவர் கூட இருந்த அடியாளுங்கள பார்த்து பயந்துட்டு அவர அவாய்ட் பண்ணிட்டு போய்ட்டீங்க. அவர் கோபத்துல என்னென்னவோ பேசிட்டார்.’ என்றார்.

‘அப்படியா? அப்படியென்ன பேசிட்டார் நீங்க இவ்வளவு டென்ஷனாகறதுக்கு?’

அவர் அடுத்த இரு நிமிடங்களில் என்னிடம் கூறியவற்றை கேட்டு பதறிப்போனேன்.

அவருடன் வந்திருந்த கன்சல்டண்ட் நான் அவரை சந்திக்க விரும்பாததைக் காரணம் காட்டி நான் அவர்களுடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய கையூட்டு கேட்டதாக என்னுடைய வட்டார அலுவலகத்திற்கும் தலைமையலுவலகத்திற்கும் புகார் செய்யப் போவதாக மிரட்டிவிட்டுச் சென்றாராம்!

நான் என்னை பயமுறுத்தி பணிய வைக்க எண்ணுகிறார்களோ என்று எண்ணி அவர்களை தவிர்க்க நினைத்தேன். அது அத்தனை உசிதமான செயல் அல்ல என்பது என்னுடைய மேலாளரின் பதிலைக் கேட்டதும்தான் விளங்கியது.

அவர்களை விடுதியிலேயே சந்தித்து பேசியிருக்கலாம். அவர்கள் தரப்பிலிருந்து என்னதான் சமாதானம் சொல்கிறார்கள் என்பதை அறிந்துக்கொண்டு பிறகு நாம் செய்ய நினைத்ததை செய்திருக்கலாமே என்று நினைத்தேன்.

இதைத்தான் அனுபவமின்மை என்போம். எதிராளியை நேருக்கு நேர் சந்திக்காமல் ஒளிந்து ஓடுவது எப்போதுமே தீர்வாகாது.

இன்றைய சூழலில் அப்படியொரு பிரச்சினையை சந்திக்க வேண்டி வந்திருந்தால் நிச்சயம் என்னுடைய அணுகுமுறையில் மாற்றம் இருந்திருக்கும்.

நடந்தது நடந்துவிட்டது. இனி இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற திசையில் சென்றது என் சிந்தனை.

‘நீங்க இந்த ப்ரொப்போசல அப்போஸ் பண்ணலன்னா அவர் இந்த மாதிரி புகார் அனுப்ப மாட்டார் சார். அதனால...’ என்று என்னுடைய மேலாளர் நண்பர் இழுத்ததும் எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இது ஒருவகை மிரட்டல் இல்லாமல் வேறென்ன என்று நினைத்தேன். ஏன் இது ஒரு பொய் மிரட்டலாக இருக்கக் கூடாது? ஒருவேளை என்னுடைய மேலாளரே தன்னுடைய தவறை மறைக்க இத்தகைய கற்பனையை உருவாக்கியிருப்பாரோ என்றும் தோன்றியது.

ஆகவே, ‘என்ன சார் மிரட்டறீங்களா? எனக்கு ஸ்டேஷன்ல நடந்தத வச்சி ஒரு ரிப்போர்ட் குடுத்தாலே போறும். நீங்க அதோகதிதான். நீங்களும் அவரோட அடியாட்களோட என்னெ ஸ்டேஷன்ல சந்திக்க வந்தீங்கன்னும் சேர்த்து ரிப்போர்ட் பண்ணா ஒருவேளை ஒங்க மேல டிசிப்ளனரி ஆக்ஷன் எடுக்கக் கூட வாய்ப்பிருக்கு. அதனால என்னெ மிரட்டறத விட்டுட்டு ஒங்க பார்ட்டிக் கிட்ட சொல்லுங்க.. என்ன நடந்தாலும் இந்த ப்ரொப்போசல ரெக்கமெண்ட் பண்ற உத்தேசம் எனக்கில்லை. என்னுடைய ரிப்போர்ட்டயும் மீறி நம்ம ஜோனல் ஆஃபீஸ்ல ரெக்கமெண்ட் பண்ணா அதுக்கு நான் தடையா நிக்கமாட்டேன்.’ என்று கோபத்துடன் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

அலுவலகம் திரும்பிச் செல்லும் வழியில் முந்தைய தினம் ரயில் நிலையத்தில் நடந்ததையும் இப்போது தொலைபேசியில் மேலாளர் கூறியதையும் நேரடியாக வட்டார மேலாளரிடம் கூறிவிடுவதென தீர்மானித்தேன்.

நல்லவேளையாக அன்றைய உணவு இடைவேளைக்குப் பிறகு என்னுடைய அதிகாரி விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றார். அவர் இல்லாத நேரத்தில் வட்டார மேலாளரை சந்தித்து பேசிவிடுவதென தீர்மானித்து இண்டர்காமில் அவரை அழைத்து உள்ள வரலாமா என்று கேட்டுவிட்டு அவரைச் சென்று சந்தித்தேன். நான் சொல்ல நினைத்திருந்ததை சுருக்கமாக மிகைப்படுத்தாமல் கூறி முடித்தேன்.

அவர் அமைதியுடன் கேட்டுவிட்டு, ‘டிபிஆர். நம்ம வேலையில இந்த மாதிரி நடக்கறதெல்லாம் சகஜம். நீங்க ஒன்னு பண்ணுங்க. ஒங்க அப்சர்வேஷன ஒரு ரஃப் டிராஃப்ட் எடுத்து நேரா எங்கிட்ட குடுத்துருங்க. நா அந்த பார்ட்டியவே நேரா கூப்ட்டு பேசறேன். அதுக்கு அவங்க குடுக்கற எக்ஸ்ப்ளனேஷன் திருப்திகரமா இருந்தா பாக்கறேன், இல்லன்னா அவங்கக்கிட்டயே முடியாதுன்னு சொல்லிட்டு ப்ரொப்போசல திருப்பியனுப்பிரலாம்.’

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘சார் ஒருவேளை அவங்க குடுக்கற எக்ஸ்ப்ளனேஷன் திருப்திகரமா இருந்தா?’

அவர் புன்னகையுடன், ‘ரெக்கமெண்ட் செஞ்சிருவேன்.’ என நான் அதிர்ந்துப்போனேன்.

‘அப்போ என்னுடைய ரிப்போர்ட்ட பாசிட்டிவா எழுதச் சொல்றீங்களா சார்?’

அவர் மீண்டும் புன்னகையுடன், ‘இல்ல டிபிஆர். நீங்க பார்த்தத அப்படியே எழுதிக் குடுங்க. But don’t add your opinion on the proposal.. Don’t say anything about rejecting the proposal.. In any case that’s not your job, is it not?’ பதிலளிக்க அவர் கூறியதில் தவறேதும் இல்லையே என்று நினைத்தேன். ‘நீங்க எழுதறத எழுதுங்க. அதுக்குமேல அத எடுத்துக்கறதும், எடுத்துக்காம இருக்கறதும் என் இஷ்டம்’ என அவர் நினைப்பது சரிதானே?

‘என்ன டிபிஆர். யோசிக்கறீங்க? Just do as I said. ஒங்க மேல அவங்க வைக்க நினைக்கற கம்ப்ளெய்ண்ட்டையும் நீங்க அவாய்ட் பண்ண முடியும். Please think about what I said.’ என்று அவர் விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் வேறு வழியில்லாமல் அவருடைய தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது.

அன்று மாலையே அலுவலக நேரம் முடிந்த பிறகும் அமர்ந்து அவர் விரும்பியபடியே என்னுடைய அறிக்கையை தயார் செய்து அவரிடம் நேரடியாக  கொடுத்தேன். மேற்கொண்டு என்ன செய்வதென இரண்டு நாட்களுக்குள் கூறுவதாக அவர் கூறவே நான் என்னுடைய மற்ற அலுவல்களைப் பார்க்கலானேன்.

ஆனால் ஒரு வாரம் கழித்தும் அவரிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போகவே என்னுடைய அறிக்கையை தட்டச்சு செய்வதா வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலைக்கு ஆளானேன்.

என்னுடைய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கோப்பை பரிசீலிக்கும் அதிகாரியிடம் இதைக்குறித்து கேட்டாலென்ன என்று நினைத்து அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் அவரை அணுகினேன்.

அவரோ கூலாக, ‘அந்த ப்ரொப்போசல ரெக்கமெண்ட் பண்ணிருங்கன்னு நம்ம சீஃப் மேனேஜர் சொல்லிட்டாரே சார்? நான் நேத்தே முடிச்சி அவர் குடுத்துட்டேன். நம்ம ஜோனல் மானேஜரோட ரெக்கமெண்டேஷந்தான் பாக்கி. நாளை இல்லன்னா மறுநாள் நம்ம எச்.ஓவுக்கு அனுப்பிரலாம்னு நினைக்கேன்.’ என்றார்.

அவருக்கும் நான் ஆய்வுக்கு சென்று வந்த விஷயம் நன்றாகத் தெரியும். நான் திரும்பி வந்தபிறகு முழுவதுமாக இல்லாவிட்டாலும் என்னுடைய ஆய்வில் நான் கண்டவற்றைப் பற்றி சுருக்கமாக அவரிடம் உணவு இடைவேளையில் கூறியிருந்தது நினைவிலிருந்தது.

‘என்ன சார், அப்போ என்னுடைய ரிப்போர்ட்ட கன்சிடர் பண்றதா இல்லையா?’ என்றேன்.

அவர் சிரித்தவாறு, ‘சார்கிட்ட  நீங்க குடுத்த மானுஸ்க்ரிப்ட்லருக்கற எல்லா க்வெரிக்கும் பாரோயர் க்ளியரா ரிப்ளை குடுத்துட்டாராமே. அதுல நம்ம சார் சாட்டிஸ்ஃபைடுன்னு நினைக்கேன். அதான் ரெக்கமெண்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார். ஒங்கக்கிட்ட சொல்லலையா?’ என்றார்.

என்னுடைய வட்டார மேலாளரின் நடவடிக்கை எனக்கு உள்ளுக்குள் எரிச்சலை மூட்டினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எழுந்து என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

என்னிடம் இரண்டு நாட்களுக்குள் பதிலளிக்கிறேன் என்ற வட்டார மேலாளர் என்னை தவிர்ப்பது ஏன் என்று நினைத்துப்பார்த்தேன். விடை கிடைக்கவில்லை.

அன்று மாலையே அதை தெரிந்துக்கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. இருந்தும் அலுவலக நேரம் முடிந்து என்னுடைய அதிகாரி சென்றபிறகு வட்டார மேலாளரை அணுகலாம் என்று தீர்மானித்தேன்.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் அன்று மாலையே என்னுடைய அறிக்கையை ஒரு உரையிலிட்டு எனக்கு திருப்பியனுப்பினார் அவர். என்னுடைய அறிக்கையின் முதல் பக்கத்தில், ‘You can finalise the report as it is.’ என்று சுருக்கமான ஒரு குறிப்பும் இருந்தது.

அதாவது நீ எழுதுவதை எழுதிக்கொள் நான் என்ன செய்ய வேண்டுமோ செய்துக்கொள்கிறேன் என்பதுபோலிருந்தது. அதைக் கண்டதுமே எனக்குள் ஆத்திரம் பெருக்கெடுத்து வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அவர் விரும்பியபடியே செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

ஆனால் அந்த கடன் விண்ணப்பம் இறுதியில் தலைமையலுவலகத்தில் மறுக்கப்பட்டது.  பரிந்துரைப்பதுபோல் பரிந்துரைத்து வங்கி சேர்மனையே நேரில் அழைத்து என்னுடைய அறிக்கையின் சாராம்சத்தை தெரிவிக்க அவர் இயக்குனர் குழுவைக் கொண்டே விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார் என்பது அடுத்த இருவாரங்களில் தெரியவந்தபோது என்னுடைய வட்டார மேலாளர் எத்தனைப் பெரிய கில்லாடி என்பதைப் புரிந்துக்கொண்டேன்.

இதைத்தான் அனுபவம் அளிக்கும் விவேகம் என்பது. எதிராளிக்குத் தெரியாமலே அவனை அடித்து வீழ்த்துவதும் ஒரு கலைதான். எனக்கு நல்லதொரு படிப்பினையை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவங்களில் இதுவும் ஒன்று.

தொடரும்..

4 comments:

sivagnanamji(#16342789) said...

"எறும்புத்தோலை உரிச்சுப் பார்த்தேன்
யானை வந்ததடா-என்
இதயத்தோலை உரிச்சிப் பார்த்தேன்
ஞானம் வந்ததடா........"

tbr.joseph said...

வாங்க ஜி!

எறும்புத்தோலை உரிச்சுப் பார்த்தேன்
யானை வந்ததடா-என்
இதயத்தோலை உரிச்சிப் பார்த்தேன்
ஞானம் வந்ததடா........" //

ஆஹா, ஆஹா.. அருமையான வரிகள்.. ஆயிரம் பொற்காசுகளும் உங்களுக்குத்தான்:)

Krishna said...

முதல்ல, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்றுதான், உங்கள் சமீபத்திய பதிவுகளைப் படிக்க முடிந்த்தது.

தலைப்பு....நன்றி...

வட்டாரள மேலாளர் மிக மிக முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளார். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

இங்கு, ஜப்பானியர்கள் இக்கலையில் தேர்ந்தவர்கள். முடியாது என்பதை, வேறு வழியே இல்லை, எல்லா வழியையும் முயன்று பார்த்தும் இயலவில்லை என்று மிக மிக வருத்தத்தோடும்(!), கனிவோடும்(!) சொல்வார்கள். பாதிக்கப்ப்ட்ட நாமே அவர்களுக்கு ஆறுதல்(!) சொல்லும்படி செய்துவிடுவார்கள்...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

முதல்ல, புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

நன்றி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.


வட்டாரள மேலாளர் மிக மிக முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளார். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. //

இந்த தொடரின் நோக்கமே அதுதானே.. நான் கற்றுக்கொண்ட பாடங்களை பகிர்ந்துக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.

இங்கு, ஜப்பானியர்கள் இக்கலையில் தேர்ந்தவர்கள். முடியாது என்பதை, வேறு வழியே இல்லை, எல்லா வழியையும் முயன்று பார்த்தும் இயலவில்லை என்று மிக மிக வருத்தத்தோடும்(!), கனிவோடும்(!) சொல்வார்கள். பாதிக்கப்ப்ட்ட நாமே அவர்களுக்கு ஆறுதல்(!) சொல்லும்படி செய்துவிடுவார்கள்... //

உண்மைதான். இத்தகைய அணுகுமுறையால்தான் ஜப்பானியர்கள் பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என உலகின் சகல நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்க முடிகிறது.