03 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 14

ஆய்வுக்குச் செல்லும் கிளைகளில் கண்ட நிறை, குறைகளை ய்வின் இறுதி தினத்தன்று கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமர்ந்து விவாதிக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் நான் சென்றிருந்த ஆய்வு கிளை சம்பந்தமட்டதல்ல. கிளை மேலாளருடைய பரிந்துரையைப் பற்றிய ஆய்வு.

இருப்பினும் நான் நேரில் கண்டவற்றை அறிக்கையில் இடுவதுடன் அதைக் குறித்து மேலாளர் அளித்த விளக்கங்களையும் சேர்த்துவிட்டால் வட்டார அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உதவுமே என்ற நோக்கத்தில் என்னுடைய அறிக்கையில் இடுவதற்கென நான் வரும் வழியில் குறித்து வைத்திருந்த அனைத்து குறைபாடுகளையும் என்னுடைய கிளை மேலாளரிடம் விவாதிப்பதென முடிவு செய்தேன். நான் சென்னைக்கு புறப்பட வேண்டிய புகைவண்டி அன்று இரவு பத்துமணிக்குதான் என்பதால் அதற்கு விவாதத்திற்குத் தேவையான நேரமும் இருந்தது.

ஆகவே வங்கி அலுவலகத்தையடைந்ததும் நான் செய்ய உத்தேசித்திருப்பதை மேலாளரிடம் தெரிவித்து என்னுடைய குறிப்பேட்டில் குறித்திருந்தவற்றை தட்டச்சு செய்துதர கோரினேன்.

தட்டச்சு செய்யப்பட்டதும் அதனுடைய நகலை அவரிடம் கொடுத்து அவர் வாசித்து முடித்ததும் அவர் அதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் என்று கேட்டேன்.

ஆனால் பாவம் என்னுடைய குறிப்புகளை வாசித்து முடித்ததுமே அவருடைய முகம் களையிழந்துப் போனது.

‘சார் நீங்க எழுதியிருக்கற அப்படியே ரிப்போர்ட்ல எழுதுனீங்கன்னா என் மேல நம்ம ஜோனல் மேனேஜர் ஆக்ஷன் எடுக்க சான்ஸ் இருக்கு சார். அதனால.. ’ என்று இழுத்தார்.

அவரைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் சமர்ப்பித்திருந்த கடன் தொகை அத்தனைக் கனிசமானதாக இருந்ததால் நான் கண்டவற்றை எழுதாமல் இருப்பது பிறகு எனக்கே பாதகமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது என்று நினைத்தேன்.

ஆகவே நான் எழுதியிருந்தவற்றில் ஏதேனும் தவறோ அல்லது உண்மைக்குப் புறம்பாக இருப்பது போல் தோன்றினால் கூறுமாறு கேட்டேன். அவர் ‘நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா இத ரைட்டிங்க்ல எழுதணுமான்னுதான் கேக்கறேன். நீங்க போய் நம்ம ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லி ப்ரொப்போசல திருப்பியனுப்பிட்டாலும் பரவாயில்லை சார். ஆனா நான் சொன்னதெல்லாம் உண்மையில்லைங்கறாமாதிரி ஒரு ரிப்போர்ட் ரைட்டிங்ல குடுத்தா அது ஒரு பெர்மனெண்ட் ரெக்கார்டாயி என்னோட கேரியரையே பாதிச்சிரும்சார். அதனாலத்தான் சொல்றேன்.’ என்றார் அழமாட்டாக் குறையாக.

நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய அறிக்கையை வாசித்துப் பார்த்தேன். எந்த ஒரு இடத்திலும் அவர் உண்மைக்குப் புறம்பாக எழுதியிருந்ததாக எழுதியிருக்கவில்லை. ஆனால் அதைப் படித்துவிட்டு மேலாளரின் பரிந்துரையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் புலப்படும் என்பது உண்மை.

ஆயினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. ‘எனக்கு நீங்க செஞ்சது தப்புன்னு ப்ரூஃப் பண்றது முக்கியமில்லை சார். ஆனா அதே சமயம் நான் நேர்ல கண்டத அறிக்கையில போடாம இருந்தா இந்த ப்ரொப்போசல நம்ம எச்.ஓவுக்கு ரெக்கமெண்ட் பண்ணாம இருக்கறதுக்கு வேற காரணம் இருக்காதே? Prima facie இந்த ப்ரொப்போசல் பேங்கபிள் ப்ரொப்போசல் மாதிரிதான இருக்கு? How will the Zonal Manager refuse to recommend this proposal to HO? நீங்களே சொல்லுங்க.’ என்றேன்.

அவர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். அதிக அனுபவமில்லாத மேலாளர்கள் பலரும் இப்படித்தான். குறைந்த காலத்தில் கிளை வணிகத்தை பன்மடங்கு கூட்ட வேண்டும், தங்களுடைய திறமையை மேலதிகாரிகளுக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவையில்லாத நட்புகளை ஏற்படுத்திக்கொண்டு பிறகு அவதிப்படுவார்கள். கன்சல்டண்ட்டுடன் அவர் ஏற்படுத்தியிருந்த நட்பு இத்தகையதுதான் என்பது தெளிவாகவே தெரிந்தது.

சற்று நேர ஆலோசனைக்குப் பிறகு, ‘சரி சார். நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்புறம் ஒங்க இஷ்டம். ஆனா அந்த பார்ட்டிய நிச்சயமா நம்பலாம். நாம குடுக்கப்போற கடன் முழுசுமா திரும்பி வந்துரும்.. எங்க கிளைக்கும் இதனால கனிசமான லாபம் கிடைக்கும்னுதான் நான் ரெக்கமெண்ட் பண்ணேன்.’ என்றார்.

அவர் கூறியது நியாயமான காரணம்தான் என்றாலும் அவர் உண்மையைப் பேசவில்லையென்பதை அவரிடம் விளக்கவேண்டும் என்று நினைத்தேன். தான் தவறேதும் செய்யவில்லை என்பதுபோல் அவர் பேசியது சரியில்லை என்பதையும் அவருக்கு உணர்த்தவேண்டும் என்றும் நினைத்தேன்.

‘நீங்க ஃபைல ரெக்கமெண்ட் பண்ணதுல தப்பில்லை சார். ஆனா ரெக்கமெண்ட் பண்ண விதம்தான் சரியில்லை.  நீங்க கன்சல்டண்ட் பேச்சை அப்படியே நம்புனது முதல் தப்பு. ப்ராஜக்ட் சைட்டுக்கு ஒருதடவ கூட விசிட் பண்ணாதது ரெண்டாவது தப்பு. அத என்கிட்ட கூட மறைச்சதும் ஒரு மேலாளர் செய்யக்கூடிய காரணமா எனக்கு படலை. பார்ட்டி நல்ல வசதியுள்ள ஆளா இருக்கணும், உண்மைதான். ஆனா நேர்மையுள்ள ஆளாவும் இருக்கணும். தனக்கு என்ன தேவைக்கு கடன் வேணுமோ அத சொல்லாம ஏற்கனவே ரன் யிட்டிருக்கற ஒரு பண்ணைய எதுக்கு புதுசா அமைக்கப் போற பண்ணைன்னு சொல்லணும்? அதுவுமில்லாம இந்த பண்ணைய துவக்கறதுக்கே எந்த பேங்க்லயாவது கடன் வாங்கியிருக்கணும் இல்லையா? அது எந்த பேங்க்? அதப்பத்தி பாரோயரோட பாலன்ஸ் ஷீட்ல எதுவுமே இல்லையே ஏன்? அதனால அவங்க சப்மிட் பண்ணியிருக்கற ஃபைனான்ஷியல் ஸ்டேட்மெண்ட்ஸ் கூட உண்மையிலயே ஆடிட்டட் ஸ்டேட்மெண்ட்ஸ் இல்லேன்னு நினைக்கிறேன்.’ என்றேன் சற்று கோபத்துடன்.

அவர் இதையெல்லாம் எண்ணிப் பார்த்திருக்கவில்லையென்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. கன்சல்டெண்ட் சமர்ப்பித்திருந்த நிதியறிக்கைகளை அவர் வங்கியின் நியதிகளின்படி பரீசிலிக்கவில்லையென்பதும் தெளிவானது. உண்மையில் பார்க்கப்போனால் அவருக்கு அத்தகைய பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லையென்பதை அவர் சமர்பித்திருந்த பரிந்துரையிலிருந்தே வட்டார அலுவலக அதிகாரிகளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

ஆகவே அவரிடம், ‘நான் போய் இந்த ரிப்போர்ட்ட ஃபைனலைஸ் பண்றதுக்கு மூனு, நாலு நாள் ஆகும். அதுக்குள்ள நீங்க  நான் இப்ப கேட்ட கேள்விகளுக்கு  நியாயமான பதில குடுத்தீங்கன்னா அதயும் என் ரிப்போர்ட்லயே சேர்த்துடறேன். இல்லன்னா நா இப்ப ஒங்கக்கிட்ட டிஸ்கஸ் பண்ண விஷயங்கள மட்டும் ரிப்போர்ட்ல எழுத வேண்டி வரும். நிச்சயமா ஒங்க ரெக்கமெண்டேஷன் ரிஜெக்ட் ஆகறதுக்கு எல்லா சான்சும் இருக்கு.’ என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

என்னுடைய கிளை இருந்த அதே சாலையில் என்னுடைய விடுதியும் இருந்ததால் நான் என்னுடைய அறைக்குச் சென்று உடை மாற்றி குளித்து நகரை ஒரு வலம் வரலாம் என்று வெளியில் இறங்கினேன்.

ஆந்திர மாநிலத்திலிருந்த கிளைகள் சிலவற்றிற்கு பலமுறை சென்றிருக்கிறேன் என்றாலும் இந்த கிளைக்கு நான் வருவது முதல் முறை. ஆனால் அந்நகரம் ஒரு நடுத்தர நகரம் என்பதால் இரண்டு, மூன்று ராஜ வீதிகளைத் தவிர காண்பதற்கு பெரிதாக ஒன்றுமிருக்காது என்று ஏற்கனவே என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் கூறியிருந்தார். ‘நீங்க போனீங்கன்னா ---------- பஜார்லருக்கற நாட்டு ஓட்டல்ங்க ஒன்னுல போயி சாப்பிட்டுப் பாருங்க..’என்று அவர் பரிந்துரைத்தது நினைவுக்கு வர சரி பரீட்சித்து பார்ப்போம் என்று நினைத்து வெளியிலிருந்து பார்ப்பதற்கு சுமாராக இருந்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்தேன்.

அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. சென்னைக்கு திரும்பி வந்து ஒரு வாரம் வரை சாப்பாட்டை வாயில் வைக்க முடியாத அளவுக்கு நாக்கு புண்ணாகிப் போனது!

ஆந்திர மிளகாய் நிறத்தில் மட்டுமல்ல எரிப்பிலும் அதற்கு நிகர் அதுவேதான்.

மிளகாய் இல்லாத பதார்த்தங்களே இல்லையெனலாம். அந்தப் பகுதியில் ‘பண்ணையில் வளர்த்த மீன் கறி சுவையாயிருக்கும். மறக்காமல் கேட்டு வாங்குங்கள்’ என்ற நண்பரின் பரிந்துரை என்னைப் பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கூறப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. செக்கச் செவேல் என்ற நிறத்தில் மிதக்கும் முழு மிளகாய்களுடன் என் முன்னே வைத்ததைப் பார்த்ததுமே கண்ணில் நீர் வராத குறைதான்.

என்னுடைய பரிதாபப் பார்வையைத் தவறாகப் புரிந்துக்கொண்ட சிப்பந்தி, ‘சாப்பிட்டு பாருங்க..சூப்பரா இருக்கும்’ என்ற பரிந்துரையுடன் நகர சப்பாத்தியைப் பிட்டு கறியில் அமிழ்த்தி வாயில் வைத்ததுதான் மிச்சம் உச்சந்தலையில் இடித்தது எரிப்பு!

ஆனாலும் அந்த எரிப்பும் நாவிற்கு இதமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். வருவது வரட்டும் என்ற தீர்மானத்துடன் சாப்பிட்டு முடித்துவிட்டு இரவு ரயிலேறியதும் பட்டபாடு.. இப்போது நினைத்தாலும்..

உணவை முடித்துக்கொண்டு நாக்கிலிருந்த காந்தலை சற்று மட்டுப்படுத்த  ஒரு பீடாவை வாயிலிட்டுக்கொண்டு காலாற நடந்து என்னுடைய விடுதியை அடைந்தேன். வாசலிலிருந்து சற்று தொலைவிலேயே என்னுடைய விடுதி வாசலில் என்னுடைய கிளை மேலாளர் நிற்பது தெரிந்தது. அருகில் வேறொரு நபர். சற்று அருகில் சென்றதும்தான் விளங்கியது அவர் அந்த கன்சல்டண்ட் என்பது. அவர்கள் என்னைப் பார்க்கும் முன்பே அப்படியே திரும்பி வந்த வழியே சென்றேன்.

அந்த நேரத்தில் அவரை என்னுடைய விடுதி அறையில் வைத்து சந்திக்க விருப்பமில்லை. மேலாளர் தனியாக வந்திருந்தால் ஒருவேளை அவரையும் அறைக்குள் அழைத்துச் சென்றிருப்பேன்.

அவர்கள் என்னைப் பார்த்துவிடுவதற்கு முன் அவர்களை நான் பார்த்தது நல்லதாகப் போனது என்ற நிம்மதியுடன் அடுத்த முனையில் திரும்பி மீண்டும் பஜாருக்கே சென்றுவிட்டேன். அந்த காலத்தில் இப்போதிருப்பதுபோல் செல்ஃபோன் வசதியில்லையே. அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்களா என்பதை அறிய வழியில்லாமல் சுமார் அரைமணி நேரம் கால்போன போக்கில் செல்ல வேண்டியதாயிற்று. என்னுடைய வண்டி புறப்பட ஒரு மணி நேரம் இருக்கும்போது என்னுடைய விடுதிக்கு திரும்பினேன்.

நல்லவேளையாக அவர்கள் அங்கிருக்கவில்லை. என்னுடைய அறையை அடைந்து என்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு உடனே புறப்பட்டு ரயில் நிலையத்தை அடைந்தேன். என்னுடைய வண்டி நிலையத்தை வந்தடைய இன்னும் அரைமணிக்கும் கூடுதலாக இருந்தது. பிளாட்பாரத்தில் நின்றால் பிரச்சினை என்று நினைத்து மேல் வகுப்பு பயணிகள் ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்று அமர்ந்துக்கொண்டேன். அங்கிருந்தே ரயில் வந்து செல்வதை தெளிவாகப் பார்க்க முடிந்ததால் ரயில் பிளாட்பாரத்தை வந்தடையும் வரை அமர்ந்திருந்து வண்டி புறப்பட இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்த சமயத்தில் அறையிலிருந்து புறப்பட்டு என்னுடைய முதல் வகுப்பு பெட்டியை நோக்கி விரைந்தேன். நான் என்னுடைய பெட்டியில் ஏற முயற்சிக்கவும் எனக்காக விடுதியின் வாசலில் காத்திருந்த இருவரும் ஒரு அடியாட்கள் படை பின்தொடர வந்து சேரவும் சரியாக இருந்தது!

தொடரும்..

4 comments:

நாடோடி said...

அய்யய்யோ.. ஒரே திகில் படம் மாதிரி இருக்குதே...

tbr.joseph said...

வாங்க நாடோடி,

ஒரே திகில் படம் மாதிரி இருக்குதே... //

இதற்கே இப்படியா? என்னுடைய நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் நூற்பாலைகளுக்கு பெயர்போன நகரில் பணியாற்றியபோது அவருக்கும் ஒரு மில் அதிபருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒரு டாங்கர் லாரியில் துரத்துவதுபோல் பயமறுத்த மனிதருக்கு புத்தியே பேதலித்துப் போனது. அவரை உடனே அங்கிருந்த மாற்றம் செய்தும் பலனில்லாமல் சுமார் ஒரு ஆண்டுகாலம் விடுப்பில் இருந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

இதுபோன்ற கதைகள் நிறைய இருக்கின்றன.

sivagnanamji(#16342789) said...

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..னு
அப்ப பாடினீங்களாமே...நிஜமா?

tbr.joseph said...

வாங்க ஜி!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..னு
அப்ப பாடினீங்களாமே...நிஜமா? //

இருக்கும்.. இருட்டுல தனியா நடக்கறப்ப பயமா இருக்கறப்போ பாடிக்கிட்டே நடந்தா பயம் தெரியாதுன்னு சொல்வாங்களே கேட்டதில்லே? அதுமாதிரிதான் இதுவும்.. என்ன ரயில்வே ஷ்டேஷனாப் போயிருச்சி..