02 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 13

அவரும் அப்போதுதான் முதல் முறையாக அந்த பண்ணைக்கு வந்துள்ளார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய அதிர்ச்சியிலிருந்தே தெரிந்தது.

சில மேலாளர்கள் இப்படித்தான்.

வங்கியின் நியதிகளின்படி ஒரு சாதாரண சேமிப்பு கணக்கு (Savings Account) துவங்க வேண்டுமென்றாலே வாடிக்கையாளரை வங்கிக்கு மிகவும் தெரிந்த அல்லது வங்கியில் ஏற்கனவே திருப்திகரமான வரவு செலவு வைத்திருக்கும் வேறொரு வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த நியதியைக் காரணம் காட்டி வங்கியில் சேமிப்பு கணக்கு திறக்க வரும் நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்களை, பென்ஷந்தாரர்களை கிளையில் கணக்கு திறக்கவிடாமல் தொல்லைக் கொடுப்பார்கள்.

ஆனால் வங்கியிலிருந்து லட்சக் கணக்கில் ஏன் சில சமயங்களில் கோடிக் கணக்கில் கடன் பெற வரும் நிறுவனங்களை முன்பின் பரிச்சயமில்லாத ஒரு கன்சல்டண்ட் அல்லது தணிக்கையாளர் அறிமுகப்படுத்தியாலே போதும். அவர்கள் வணிகம் அல்லது தொழில் நடத்தும் இடத்தைக் கூட சென்று பார்வையிடாமலே கடன் வழங்க பரிந்துரை செய்வார்கள்.

குறிப்பிட்ட தணிக்கையாளர் தயாரித்தளித்திருக்கும் நிதியறிக்கைகளின் அடிப்படையில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு வாடிக்கையாளரின் நம்பகத்தன்மைக்கு நற்சான்றிதழ் வழங்குவதுடன் கடன் வழங்கவும் பரிந்துரை செய்துவிடுவார்கள்.

இத்தகைய நிதியறிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலுக்கான அறிக்கைகளை (Project Report and Financial Statements) தயாரித்து, வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துபவர்கள் Financial Consultants என்ற பெயர்ப் பலகையை இட்டுக்கொண்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் கடனில் ஒரு விழுக்காடிலிருந்து ஐந்து விழுக்காடு வரை ஊதியம் பெற்றுக்கொண்டு ‘சேவை’ செய்பவர்கள்.

இவர்கள் நிதியறிக்கைகளைத் தயாரிப்பதில் மட்டும் வித்தகர்கள் அல்ல. வாய்ச் சாலகத்துடன் பேசுபவர்களிலும் வல்லவர்கள். இத்தகைய வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் நீண்ட கால அனுபவம் இல்லாத மேலாளர்களை சாமர்த்தியமாக பேசி தங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவார்கள்.

முதலில் உண்மையிலேயே நல்ல நிதி வலுவுள்ள வாடிக்கையாளர்களை கிளைக்கு அறிமுகப்படுத்துவார்கள். பிறகு கிளையின் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறையுள்ளவர்களைப் போல கிளை மேலாளர்களுக்கு தங்களுடைய கைவசமுள்ள 'மற்ற' வாடிக்கையாளர்களை அவருக்கு அறிமுகம் செய்துவைப்பார்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்திலுள்ளவர்களாக இருப்பார்கள். அல்லது சக்திவாய்ந்த அரசியல் கட்சி தலைவர்களை அறிந்தவர்களாயிருப்பார்கள். நகரின் பெரிய தலைகள் அங்கத்தினர்களாக இருக்கும் Clubல் அங்கத்தினர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உண்மையில் வெறும் போலியாக இருப்பார்கள். அதாவது பகட்டும், பாசாங்கும் மட்டுமே இருக்கும்.

இத்தகைய consultantகளை நம்பி மோசம் போன மேலாளர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். முக்கியமாக மும்பை, தில்லி போன்ற நகரங்களில் இது மிகவும் அதிகம். சமீப காலமாக இந்த விரும்பத்தகாத கலாச்சாரம் சென்னையிலும் பரவ துவங்கியுள்ளது.

அப்படித்தான் நான் ஆய்வுக்கு சென்ற கிளை மேலாளரும் சிக்கியிருப்பார் என்று நினைத்தேன்.

என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு அவர் சமர்பித்திருந்த Project Reportஐ ஒரு முறை வாசித்தாலே போதும் அது நிச்சயம் ஒரு கைதேர்ந்த தணிக்கையாளரால்தான் தயாரிக்கப்பட்டிருக்கறதென்று முடிவு செய்துவிடலாம். ஆகவேதான் கடன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதெற்கு முன்பே நேரடியாக ஒருவரை அனுப்பி ஆய்வு செய்யவேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

குறிப்பிட்ட Consultant கூறியதை நம்பி என்னுடைய மேலாளர் சம்பந்தப்பட்ட மீன் பண்ணையை ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லையென்பது அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெளிவாக தெரிந்தது எனக்கு.

இருப்பினும் அதை நான் பொருட்படுத்தாமல் என்னுடைய வருகையை கேள்விப்பட்டதுமே வாயில் வரை வந்து வாயெல்லாம் பல்லாக வரவேற்றவருக்கு நானும் மரியாதை நிமித்தம் வணக்கம் செலுத்தினேன்.

அவரைப் பார்த்தால் அசப்பில் முன்னாள் திரைப்பட நடிகர் எஸ்.வி.ரங்காராவ் சாயலில் இருந்தார். அச்சாக அப்படியே என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆறடிக்கு மேலிருந்த ஆஜானுபாகுவான உயரம், உருண்டு திரண்ட மீசை, பெரிய, பெரிய கண்கள். உள்ளுக்குள் அணிந்திருந்த முண்டா பனியன் வெளியில் தெரியும் வகையில் அணிந்திருந்த வெள்ளை வெளேர் மல் ஜிப்பா, வேட்டி. வலது கையில் மிக விலையுயர்ந்த வாட்ச், கட்டைவிரல் தவிர்த்து எல்லா விரல்களிலும் மோதிரங்கள் என மனிதரின் பணக்காரத்தனம் அவருடைய அந்தஸ்த்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

தெலுங்கு கலந்த ஆங்கிலத்தில் எங்களை வரவேற்று பண்ணையைச் சுற்றிவருவதெற்கனவே உபயோகத்திலிருந்த மூன்று சக்கர வாகனம் ஒன்றில் எங்களை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். பண்ணை ஏற்கனவே ஒரு முறை அறுவடை முடிந்த பண்ணையைப் போலிருந்ததைக் கவனித்தேன். நிர்மானிக்கப்பட்டிருந்த பம்ப் செட்டுகள், பாத்திகளுக்கு நீர் பாய்ச்ச அமைக்கப்பட்டிருந்த குழாய்கள், அறுவடைக்கு தயாராயிருக்கும் மீன்களை வாரி அள்ள உபயோகப்படுத்தும் நீண்ட கைப்பிடிகளைக் கொண்ட கூடை வலைகள் எல்லாமே நிர்மானிக்கப்பட்டு இரண்டு, மூன்றாண்டுகள் கழிந்திருந்த தோற்றத்துடன் இருந்ததையும் பார்த்தேன்.

நான் பார்ப்பதை கவனித்துக்கொண்டே அமைதியாக என்னுடன் வந்துக்கொண்டிருந்த கிளை மேலாளரை ஓரக்கண்ணால் கவனித்தேன். மனிதரின் முகம் சுத்தமாக களையிழந்துப்போயிருந்ததைக் பார்க்க முடிந்தது.

வாடிக்கையாளருடன் எங்களை வரவேற்று பண்ணையைச் சுற்றிக் காண்பித்தவர்தான் அவரை அறிமுகப்படுத்தியவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் மிகவும் உரிமையுடன் என்னுடைய மேலாளர் நண்பரை பெயர் சொல்லி அழைத்ததையும் கவனித்தேன். ஆனால் அவரை எனக்கு அறிமுகப்படுத்தாததால் நான் அவரைக் கண்டுக்கொள்ளவில்லை.

நூறு ஏக்கர் பண்ணை என கடன் விண்ணப்பத்தில் அறிவித்திருந்தாலும் அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே மீன் வளர்ப்புக்கென ஒதுக்கியிருப்பதாகவும் மீதமுள்ள இடத்தில் தென்னை மற்றும் மாந்தோப்புகளை நிர்மானிக்கவிருப்பதாகவும் வாடிக்கையாளர் சர்வ சாதாரணமாக பேச்சுவாக்கில் தெரிவிக்க அவரை அறிமுகப்படுத்திய மற்றும் என்னுடைய மேலாளர் முகங்கள் இருண்டுபோயின. ஆயினும் அவர் கூறியதை பதிலேதும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கையோடு கொண்டுவந்திருந்த Project Reportஐ எடுத்து அவர்களிடம் கேள்வி கேட்பதில் பயனேதும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஏற்கனவே இயக்கத்தில் இருந்த பண்ணையை எதற்காக புதிதாக துவக்கவிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்? பத்து ஏக்கரில் தற்போது இயங்கிவரும் பண்ணையை விரிவுபடுத்த கடனுதவி தேவை என்று கூறியிருக்கலாமே என்று நினைத்தேன்.

அத்துடன் மீதமுள்ள இடத்தில் தென்னை மற்றும் மா மரங்களை பெருமளவில் வளர்க்கப்பதற்கெனவும் கடன் வழங்க என்னுடைய வங்கியில் பிரத்தியேக திட்டங்கள் இருந்தன என்பதும் என்னுடைய மேலாளருக்கு தெரிந்திருக்கவேண்டும். அப்படியிருக்க எதற்காக உண்மைக்கு புறம்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்து கடன் பெற முயற்சி செய்வது எனவும் என் சிந்தனை ஓடியது.

இதற்கு வாடிக்கையாளரைக் குறை சொல்வதைவிட அவரை பரிந்துரைத்த தணிக்கையாளரையும் அவருடைய பரிந்துரையை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்ட என்னுடைய மேலாளரையும்தான் குற்றஞ்சாட்டவேண்டும் போலிருந்தது.

இந்த காரணத்தைக் காட்டியே கடனை மறுதலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என மனதில் முடிவெடுத்தேன். அதன் பிறகு அங்கு கூடுதல் நேரம் இருக்க விரும்பாமல் என்னுடைய மேலாளரிடம் மலையாளத்தில் ‘போதும், போகலாம்’ என்றேன்.

என்னுடைய வாடிக்கையாளருக்கு மலையாளமும் தெரிந்திருந்தது. அவர் புன்னகையுடன், ‘பக்கத்திலேயே என்னுடைய Farm House இருக்கிறது. அங்கு சென்று பகலுணவு அருந்திவிட்டு செல்லலாம்.’ என்றார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் என்னுடைய மேலாளர் தயங்கினார். அவருக்கு வாடிக்கையாளரையும் அவருடைய Consultantஐயும் மறுத்துப் பேச விருப்பமில்லையென்பதை என்னால் உணர முடிந்தது.

அவர்களிருவரும் சற்று தூரத்திலிருந்தபோது ‘சார் தயவு செய்து மறுத்துப் பேசிராதீங்க. போய்ட்டு வந்துரலாம்.’ என்று என்னிடம் ரகசியமாக கூறினார்.

அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஏதோ வகையில் இவர்களுடைய பிடியில் அவர் சிக்கியிருந்தார் என்பது தெளிவாகவே தெரிந்தது. அவரை மேலும் சிக்கலில் விடாமல் இருக்க தீர்மானித்தேன். அவர்களுடைய அழைப்பை ஏற்பதென முடிவு செய்தேன்.

அங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அவருடைய பண்ணை வீடு. அதை வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்பதுதான் சரி. அத்தனை பிரம்மாண்டமாக இருந்தது. ‘நம்ம ஃபேமிலி ஜாய்ண்ட் ஃபேமிலிசார். ஏறக்குறையை ஐம்பது பேர் இருக்கோம். பரம்பரை, பரம்பரையாக இங்கதான்..’

அவருடைய குடும்பம் ஆந்திர அரசியிலில் மிகவும் பிரபலமாயிருந்ததென ஏற்கனவே என்னுடைய மேலாள நண்பர் கூறியிருந்ததால் வரவேற்பறை முழுவதும் மாட்டப்பட்டிருந்த இந்தியாவின் பல பிரதமர், முதலமைச்சர்களுடன் வாடிக்கையாளர் இருந்த புகைப்படங்களைப் பார்த்தபோது வியப்பாயிருக்கவில்லை.

தன்னுடைய அரசியல் செல்வாக்கை எனக்கு காண்பிக்கவே அவர் இங்கு வரவழைத்திருப்பாரோ என்றும் எனக்கு தோன்றியது. அவரை எங்களுடைய வங்கிக்கு அறிமுகப்படுத்தியிருந்தவருடைய முகம் பெருமையில் விகசித்துப்போயிருந்ததை கவனித்தேன். என்னுடைய மேலாளரோ படு டென்ஷனுடன் இருந்தார். நான் சென்னை திரும்பிச் சென்று தன்னைக் குறித்து மோசமாக கூறிவிட்டால் தன்னுடைய நிலை என்னாகுமோ என்ற கவலையாயிருக்கலாம் என்று நினைத்தேன்.

அந்த பதற்றத்தில் அறுசுவையுடன் கணக்கில்லா அயிட்டங்களுடன் பரிமாறப்பட்ட பகலுணவில் மனிதர் சரியாக பங்குகொள்ளவில்லை.

அறுசுவை என்றேன். ஆனால் அதில் மேலோங்கியிருந்தது ஆந்திராவின் புகழ் பெற்ற எரிப்பு!

பகலுணவை முடித்துக்கொண்டு புறப்படும் நேரத்தில் தோப்பில் விளைந்தது என அவர் அளித்த பழங்கள் அடங்கிய பெட்டியை பணிவுடன் மறுத்துவிட்டு புறப்பட்டோம். எங்களுடன் வந்திருந்த எங்களுடைய சிப்பந்தி மட்டும் வாய் எல்லாம் பல்லாக ஒரு பெட்டியைப் பெற்றுக்கொண்டார். அதைப் பார்த்தும் பார்க்காதவன்போல் நான் வாகனத்தில் சென்று அமர்ந்தேன்.

வரும் வழியில் வாடிக்கையாளரைப் பற்றி விடாமல் பேசிக்கொண்டு வந்த மேலாளர் திரும்பி சென்ற வழியில் ஒன்றுமே பேசாமல் வாகனத்தை செலுத்துவதிலேயே குறியாயிருந்தார்.

அத்துடன் வாகனத்திலிருந்த சிப்பந்திக்கு மலையாளமும் தெரிந்திருந்ததால் நான் வாடிக்கையாளரைப் பற்றி எதிர்மறையாக ஏதேனும் கூறிவிடுவேனோ என்ற அச்சமும் என்னுடைய மேலாளருடைய மவுனத்திற்கு காரணமாயிருக்கலாம் என்று நினைத்து நானும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
தொடரும்..

1 comment:

sivagnanamji(#16342789) said...

வங்கி மேலாளர் உங்களிடம் என்ன கூறி எப்படி சமாளிக்க முற்பட்டார் என்பதையும் விளக்குவீர்களா?
உப்புகண்டம் திருடி பிடிபட்ட யாரோ
போல் இருந்திருக்கும் இல்லையா?