29 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 24

வாடிக்கையாளர்களை சந்திப்பதென்று தீர்மானித்ததுமே தயங்கிய மேலாளர் அடுத்த நாள் காலையில் நான் கிளைக்குச் சென்றபோதும் என்னுடன் வருவதற்கு தயக்கம் காண்பித்தார்.

‘சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா என்னோட அசிஸ்டெண்ட் மானேஜர்ல ஒருத்தர ஒங்களோட அனுப்பறேனே. அவரும் இந்த ஊர்க்காரர்தான். போன மேனேஜர் இருந்தப்பவும் இங்க இருந்தவர்.’ என்றார் தயக்கத்துடன்.

எனக்கு அவருடைய போக்கில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும் முந்தைய தினம் அவருக்கும் நான் சந்திக்கச் சென்ற தணிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை நினைத்து அவருடைய ஆலோசனைக்கு சம்மதித்தேன்.

என்னுடைய சம்மதம் அவருடைய முகத்தில் ஒரு நிம்மதியை தெளிவாகக் காட்டியது. இவருடைய நடவடிக்கைகளைப் பற்றியும் இவருடைய உதவி மேலாளர் வழியாக தெரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதே என்பதுதான் அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மற்றுமொரு காரணம். நான் நினைத்ததுபோலவேதான் அன்றைய தினம் கழிந்தது.

எங்களுடைய கிளை இயங்கிவந்த நகரம் ஒரு நடுத்தர நகரம். நாற்சக்கர வாகனத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் நகரிலிருந்த வணிகசந்தையைச் சுற்றிப் பார்த்துவிட முடியும்.

நகரின் பிரதானத் தொழில் பருத்தி நூற்பாலைகள் மற்றும் ஜின்னிங் ஆலைகள். நகரைச் சுற்றிலுமிருந்த கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பருத்தி விவாசயத்தில் பெருமளவில் ஈடுபட்டிருந்ததே இதற்குக் காரணம்.

ஜின்னிங் ஆலைகள் பருத்தியைக் கொள்முதல் செய்து அதிலிருந்த பருத்திக்கொட்டைகளை தனியே பிரித்து பருத்தியை நூற்பாலைகள் பயன்படுத்த தயாரான நிலைக்குக் கொண்டுவந்து நூற்பாலைகளுக்கு விற்பது வழக்கம்.

இத்தகைய ஜின்னிங் ஆலைகள் தங்களுக்குத் தேவையான பருத்தியை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில்லை. இதற்கெனவே தரகர்கள் இருந்தனர். இத்தரகர்கள் ஒவ்வொருவருடைய கட்டுப்பாட்டிலும் பல ஏழை விவசாயிகள் இருந்தனர். விவசாயத்திற்கு தேவையான விதை, உரம், பராமரிப்பு மற்றும் இதர சிலவுகளுக்கு அசுர வட்டிக்கு கடன் வழங்கும் தரகர்கள் அவர்களுடைய விளைச்சல் முழுவதையும் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து ஜின்னிங் தொழிற்சாலைகளுக்கு விற்றுவந்தனர்.

நகரிலிருந்த பெரும்பாலான ஜின்னிங் ஆலைகள் தங்களுடைய தேவைக்கு மிகுதியான திறனை (Surplus capacity) ஒப்பந்த அடிப்படையில் (On contract) ஆலையை பிறருடைய பயன்பாட்டிற்கு வழங்குவதுண்டு.

இவ்வசதியையும் தரகர்களை ஆக்கிரமித்துக் கொள்வதைப் பார்த்தேன். இத்தகையோருக்குத்தான் பெரும்பாலான வங்கிககளும் விவசாயக் கடன் என்ற பெயரில் சலுகை வட்டியில் கடன் வழங்கியிருந்தன.

நான் அன்று சந்திக்கச் சென்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இத்தகைய தரகர்களாகவே இருந்தனர். என்னுடைய மேலாளர் கூறியதைப் போன்று அவர்கள் வங்கிக்கு அளித்திருந்த விலாசம் போலியானதல்ல. ஆனால் அவர்களில் எவருமே அந்த விலாசத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

இவர்களில் பெரும்பாலோனோர் நகரைச் சுற்றியிருந்த கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பதுடன் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்தியை நேரடியாக ஜின்னிங் ஆலைகளுக்கு விற்பதுடன் மீதமுள்ள பருத்தியை பதப்படுத்த இவர்களே ஜின்னிங் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்வதுண்டு.

இத்தகைய அலுவல்களுக்கு நகரில் ஒரு சிறு அறையை - பெரும்பாலான அறைகள் நூறிலிருந்து இருநூறு சதுர அடிக்கும் குறைவான அளவிலேயே இருந்தன – வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதை ஒரு அலுவலகம் போல் பயன்படுத்தத் தேவையான மேசை, நாற்காலிகள் தேவைப்பட்டால் சில இரவுகள் மட்டும் தங்குவதற்கு வசதியாக ஒரு சிறு படுக்கை ஆகியவற்றை அதில் இட்டு வைத்திருப்பார்கள். இந்த அலுவலக அறையின் விலாசம் மட்டுமே வங்கிகளுக்கு சமர்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களில் இருக்கும்.

இவர்களுக்கு தேவையான நிதியறிக்கைகளைத் தயாரித்து, வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிதியறிக்கைகளைப் பூர்த்தி செய்து தேவைப்பட்டால் அத்தகைய கடன்களுக்கு ஈடாக அளிக்கப்பட வேண்டிய கூடுதல் ஜாமீனுக்கு தேவையானவர்களைப் பிடித்துக்கொடுத்து, அத்துடன் நின்றுவிடாமல் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரைச் சந்தித்து அவரை ‘கவனிக்க’ வேண்டிய விதத்தில் கவனித்து கடனைப் பெற்றுத் தருவதற்கெனவே தரகர்கள் என்ற போர்வையில் இயங்கிவந்தவர்களுள் பெரும்பாலோனோர் தணிக்கையாளர்கள் என்றால் மிகையாகாது.

கடன் வழங்குவது வங்கி மேலாளர்களுடைய அன்றாட அலுவல்களில் முக்கியமானது. வங்கியின் தகுதிகளை சரிவர பூர்த்திசெய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் கிடைப்பது அரிதல்லவா? அதுவும் வங்கி இயங்கி வரும் நகருக்கு முற்றிலும் புதியவர்களான வங்கி மேலாளர்கள் கடன் வழங்க சார்ந்திருப்பது இத்தகைய தரகர்கள் என்ற புல்லுருவிகளைத்தான்.

அத்துடன் விவசாயத்தைப் பற்றி நகரிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் பெரும்பாலான வங்கி மேலாளர்களுக்கு ஒன்றும் தெரிய வாய்ப்பில்லையே. பெரும்பாலான வங்கி அதிகாரிகள் விளை நிலங்களைப் பார்ப்பதே அதுதான் முதல் முறையாக இருக்கும். நான் தஞ்சையில் மேலாளராக பணியாற்றிய காலத்தில்தான் முதல்முறையாக பச்சைப்பசேலென்றிருந்த விளைநிலங்களைப் பார்த்தேன் என்றால் நம்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும்.

என்னைப் போன்ற ‘விவரம்’ உள்ளவர்கள்தான் பெரும்பாலான வங்கி அதிகாரிகள்!

நாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலான க்ளப்புகளில் இவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். வாரந்தர கூட்டங்களில் எங்களைப் போன்றோர்களிடம் நட்பு பாராட்டுவதிலும் சூரர்கள் இவர்கள். நகருக்கு புதியவர்களை இனங்கண்டுக்கொள்வதிலும் சமர்த்தர்கள். ‘சார் ஊருக்கு புதுசு போலருக்கு? கவலைப்படாதீங்க சார், அதுக்குத்தான நாங்க இருக்கோம். ஒங்களுக்கு என்ன வேணும்னாலும் தாராளமாக எங்கக்கிட்ட சொல்லுங்க சார்.’ என்ற வார்த்தைகளுடன் நெருங்குவார்கள். எங்களுக்கு தங்குவதற்கு வீடு பிடித்துக்கொடுப்பது, குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது, காஸ் இணைப்பு பெற்றுத்தருவது என்று துவங்கும் இத்தகைய நட்பு நாளடைவில் வங்கி வணிகத்தைப் பெருக்குவதில் உதவி செய்வதில் நுழையும்.. பிறகென்ன? சுதாரிப்பில்லாத மேலாளர்கள் இவர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னாமவதைத் தவிர்க்கவியலாமல் போய்விடும்.

அப்படித்தான் நேர்ந்தது என்னுடைய முந்தைய மேலாளருக்கும். அவருடைய தந்தையும் நகரைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்து வந்தவர். விவசாயத்துடன் தையல் தொழிலையும் செய்து வந்தவர். தான் படும் அவஸ்தையை தன்னுடைய வாரிசுகளும் படலாகாது என்ற நோக்கத்தில் அவர்களை தன்னுடைய தகுதிக்கும் மீறி செலவழித்து படிக்க வைத்தவர். அதற்குத் தேவையான தொகையை கிராமத்திலிருந்த தரகர்களிடமிருந்து கடனாக பெற்ற பெற்றிருந்தவர்.

ஆகவே அவர்களுடைய நட்பைப் புறக்கணிக்கவியலாத சூழலில் இருந்தவர் அவருடைய மூத்த புதல்வரான என்னுடைய மேலாளர். போதாதற்கு தரகர்களின் தணிக்கையாளருடைய நட்பும் சேர அவர் பரிந்துரைத்திருந்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயிருக்கிறார். கிளைக்கு அடிக்கடி விஜயம் செய்த என்னுடைய வட்டார மேலாளர் அவர் சிக்கியிருந்த சூழ்ச்சி வலையிலிருந்து அவரை விடுவிக்கவே ஒரே வருடத்தில் அவரை அங்கிருந்து மாற்றி அதே நகரைச் சார்ந்த இப்போதைய மேலாளரை கிளை மேலாளராக நியமிக்க பரிந்துரைத்திருக்கிறார்.

அவருடைய கணிப்பில் இப்போதைய மேலாளர் நன்கு படித்தவர், திறமைசாலி, நகரில் நீண்டகாலமாக வசித்துவந்திருந்த ஒரு ஆசிரியர் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆகவே முந்தைய மேலாளர் வழங்கி நிலுவையிலிருந்த கடன்களை வசூலிப்பதில் அக்கறைக் காட்டுவார்.

ஆனால் அவருக்கு இவ்விரு மேலாளர்களுக்கும் இடையிலிருந்து அடிப்படைக் கருத்து வேறுபாடு தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவருடைய கணிப்பில் தவறேதும் இல்லையெனினும் அவர் நினைத்திருந்த நோக்கம் நிறைவேறாமல் போனது.

கிளைக்குப் பொறுப்பேற்ற நாள் முதலே இவர் செய்த ஒரே காரியம் முந்தைய மேலாளர் வழங்கியிருந்த கடன் வாடிக்கையாளர்களை எவருமே அவர்கள் அளித்திருந்த விலாசத்தில் இல்லையென்பதை வட்டார அலுவலகத்திற்கு தெரிவித்ததுதான். அத்துடன் அவர்களுக்கு நிதியறிக்கைகளைத் தயாரித்தளித்திருந்த தணிக்கையாளரைத் தேடிச் சென்று மல்லுக்கு நின்றது.

ஏற்கனவே முந்தைய மேலாளருடன் சிரமப்பட்டு வளர்த்திருந்த நட்பு முழுவதுமாக பயனளிக்கக் கூடிய நேரத்தில் அவர் மாற்றலாகிப் போனாரே என்ற கடுப்பில் இருந்த தணிக்கையாளர் புது மேலாளர் தனக்கு அடியோடு பிடிக்காத பால்ய ஆசிரியரின் மகன் என்ற எரிச்சலும் சேர்ந்துக்கொள்ள அவரை அவமதிப்பதிலேயே குறியாயிருந்திருக்கிறார்.

பிறகு கேட்க வேண்டுமா? அவர் வேண்டுமென்றே நாணயமற்ற இடைத் தரகர்களை வங்கிக்கு சிபாரிசு செய்திருக்கிறார் என்று வட்டார மேலாளருக்கு புகார் அனுப்பி தணிக்கையாளருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறார். அத்துடன் நில்லாமல் தன்னுடைய தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை தொழில் செய்துவந்திருந்த வளாகத்திலிருந்தே குடிபெயர வைத்திருக்கிறார்!

நம்மில் சிலருக்கு ஒரு காரியத்தை செயல்படுத்த முடியாததென வரித்துக்கொண்டுவிடும் பழக்கமிருப்பதால் அதை செயல்படுத்த முயல்வதையும் தவிர்த்து விடுகிறோம். அப்படித்தான் முந்தைய மேலாளரும். தணிக்கையாளர் பரிந்துரைத்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவருமே கள்வர்கள், நாணயமற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்திருந்ததால் அவர்களைத் தானாகச் சென்று சந்திக்க விரும்பாமல் தன்னுடைய சிப்பந்தியொருவரை விண்ணப்பங்களிலிருந்த விலாசத்திற்கு அனுப்பி அவர்கள் யாருமே அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்வதில் முனைந்திருக்கிறார்.

குறிப்பிட்ட விலாசத்தில் அவர்கள் இல்லையென்பது உண்மைதான் என்றாலும் அவர்களில் எவரும் கடனைத் திருப்பிச் செலுத்த மனமில்லாமல் இருந்தவர்களல்ல என்பது என்னுடன் துணைக்கு வந்த உதவி மேலாளர் கூறியபோதுதான் எனக்கு விளங்கியது. ‘சார்.. நம்ம மேனேஜருக்கு எங்க பழைய மேனேஜர ரொம்ப காலமாவே சுத்தமா புடிக்காது. அவர் இவர விட சாதியில குறைஞ்சவர்னு ஒரு எண்ணம். அவர் இங்க தலித் இனத்த சேர்ந்தவர்தான் சார். ஆனா குணத்துல இவரவிட தங்கம். பேங்க் வேலையில கூட இவர விட அவருக்குத்தான் சார் விஷயமும் தெரியும். ஆனா கொஞ்சம் வெகுளி. எல்லாரையும் நம்பிருவார். அந்த ஆடிட்டர் ஒரு சரியான ஃப்ராடுன்னு நாங்கல்லாம் சொல்லியும் கேக்காம அவர் ஏதோ கொஞ்சம் டெப்பாசிட் புடிச்சி குடுத்தத வச்சிக்கிட்டு அவர் அனுப்புன புரோக்கர்ஸ் எல்லாருக்கும் லோன் குடுத்துட்டார்.’ என்றவர் தொடர்ந்து, ‘ஆனா இவர் நினைச்சிருந்தா அத எல்லாத்தையும் ரிக்கவர் செஞ்சிருக்கலாம் சார். வேணுக்கும் எங்க ஆஃபீஸ் பியூன அந்த புரோக்கர்ஸ் இல்லாத நேரமா அனுப்பி அந்த அட்றஸ்ல யாருமே இல்லேன்னு ஜோனல் பீசுக்கு ரிப்போர்ட் பண்ணிட்டு சும்மா இருந்துட்டார். எங்களையும் அவங்கள பாக்க போகக்கூடாதுன்னு ஆர்டர் போட்டுட்டார். எங்க பியூன் போய்வந்த விஷயம் தெரிஞ்சி கடன அடைக்க வந்த சிலபேரையும் இவர் தாறுமாறா பேசி அவமானப்படுத்தி அனுப்பிட்டார் சார். அப்புறம் அவங்க எப்படி வருவாங்க?’ என்று வினா எழுப்பியபோது நான், ‘நீங்களும் ஒரு பொறுப்பான ஆஃபீசர்தானே நீங்க ஏன் நம்ம ஜோனல் மேனேஜருக்கு இன்ஃபார்ம் பண்ணலே?’ என்றேன்.

அவர் அதற்கு அளித்த பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

தொடரும்

நண்பர்களுக்கு: என்னுடைய 'என்னுலகம்' வலைப்பூவை புதிய பீட்டாவுக்கு மாற்ற பலமுறை முயன்றும் இயலாமற் போனதால் நான்
புதிதாக துவக்கியுள்ளேன். என்னுடைய இப்போதைய பதிவும் இதே பெயரில் உள்ளதால் ஒரே பெயரில் இரு பதிவுகள் குழப்பத்தை உண்டாக்கும் என்ற நோக்கத்துடன் இப்புதிய பதிவை தமிழ்மணம் இதுவரை பட்டியலில் சேர்க்க அனுமதியளிக்கவில்லை. ஆகவே வரும் 1.2.2007 முதல் இப்பதிவை தமிழ்மணத்திலிருந்து விலக்கிக்கொள்வதென முடிவு செய்துள்ளேன். அன்று முதல் என்னுடைய புதிய பதிவைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

25 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 23

அவர் என்னுடைய மேலாள நண்பரைக் கண்டதும் கோபத்துடன் தெலுங்கில் சரமாரியாக வசைபாடத் துவங்கிவிட்டார். எனக்கும் தெலுங்கு சுமாராக தெரியும் என்றாலும் அவர் கடகடவென பொரிந்து தள்ளியது முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவர்கள் இருவரிடையிலும் ஏதோ மனஸ்தாபம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

அடடா.. ஆரம்பமே சரியில்லையே என்று நினைத்தேன்.

இவரை சந்தித்து இவர் நிதியறிக்கை தயாரித்து அளித்திருந்த வாடிக்கையாளர்களெல்லாம் ஏன் வங்கியிலிருந்து பெற்றிருந்த கடனை அடைக்க மறுக்கிறார்கள் என்று கேட்பதுடன் கடன்க்ளை கால தாமதமில்லாமல் வசூலிக்க அவருடைய உதவியைக் கோரலாம் என்ற நினைப்பில் அங்கு சென்ற எனக்கு அது நிறைவேறாது போலிருக்கிறதே என்றிருந்தது.

அவர் பேசி முடித்ததும் எங்கே என்னுடைய மேலாளர் பதிலுக்கு பேசுவாரோ என்று நினைத்த நான் எனக்கருகில் நின்றிருந்த அவருடைய கரத்தைப் பற்றி அழுத்தி பதில் பேசாதீர்கள் என்று குறிப்பால் உணர்த்தினேன்.

நல்லவேளை. அவர் மவுனம் காத்ததுடன் என்னை அறிமுகப்படுத்தி இவர்தான் உங்களை சந்திக்க விரும்பினார் என்று கூறினார்.

தன்னுடைய அவசரபுத்தியை உணர்ந்த தணிக்கையாளர் என்னைப் பார்த்து அசடு வழிந்தார். ‘சாரி சார்.. நான் ஒங்கள அவமானப்படுத்தணுங்கற நோக்கத்துல அப்படி பேசல.’ என்றவாறு எங்களை வரவேற்று இருக்கையை அளித்தார்.

நாங்களிருவரும் வரும் வழியில் அவரைப் பற்றி மேலாளர் சற்று அதிகபட்சமோ என்று நினைக்கும் வகையில் இருந்தது அவருடைய பேச்சு. அதாவது குசலம் விசாரித்து முடிக்கும் வரை.

அவர் அறிமுகப்படுத்தியிருந்த வாடிக்கையாளர்களைப் பற்றி நான் கேட்கத் துவங்கியதுமே அவருடைய பேச்சில் நிறைய மாறுதல் தெரிந்தது.

‘இங்க பாருங்க சார். நான் ஒரு ப்ராக்டிசிங் ஆடிட்டர். என்கிட்ட நிறயை பேர் வருவாங்க. அவங்களுக்கு பால்ன்ஸ் ஷீட் போட்டுக் குடுக்கறது என் தொழில். அதோட என் ஜாப் முடிஞ்சிருது. எனக்கு இங்க நிறைய பேர தெரியும். அதுல ஒருத்தர்தான் ஒங்க மேனேஜர். அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்தி கேட்டுக்கிட்டதால நான் எங்கிட்ட வந்த சில பேரை ஒங்க பேங்குக்கு அறிமுகப்படுத்தினேன். அவங்க எதுக்கு லோன் வாங்குனாங்க, எவ்வளவு லோன் வாங்குனாங்க அப்படீன்னுல்லாம் எனக்கு தெரியாது.’ என்றார் கூலாக.

என்னுடைய மேலாளருக்கு கோபம் பயங்கரமாக வந்தது. அவரை சகட்டு மேனிக்கு தெலுங்கில் வசைபாடத் துவங்கினார். அவருக்கு வந்த கோபம் நியாயமானதாக எனக்கு தோன்றினாலும் கோபப்படுவதில் எந்த பயனும் விளையப்போவதில்லை என்பதை உணர்ந்த நான், ‘சார் நீங்க இப்படி சொல்லி முடிச்சிட முடியாது. ஒருத்தர் ரெண்டு பேருன்னா நீங்க சொல்றத ஒத்துக்கலாம். ஆனா நீங்க சுமார் இருபது பேருக்கும் மேல ரெக்கமெண்ட் பண்ணியிருக்கறதா எங்க பேங்க்லருக்கற ரெக்கார்ட்ஸலருந்து தெரியுது. அதுல ஒருத்தர், ரெண்டு பேர் லோன திருப்பிக் கட்டலைன்னாக் கூட பரவாயில்லை. இருபது பேர்ல நாலஞ்சி பேர் குட சரியா கட்டறதில்ல. அதுமட்டுமில்லாம எங்க மேனேஜர் சொல்றபடி பார்த்தா அதுல நிறைய பேர் லோன் அப்ளிகேஷன்ல குடுத்துருக்கற அட்றஸ்லையே இப்ப இல்லையாம். அதனால..’

நான் கூற வந்ததை முடிக்க விடாமல் கோபத்துடன் இடைமறித்தார் அவர். ‘அதனால? என்ன சார் மிரட்டறீங்களா? இவங்களுக்கு லோன் இவ்வளவு குடுங்கன்னு நான் யாருக்கும் ரெக்கமெண்ட் பண்ணலை. அது என்னோட வேலையும் இல்லை. லோன் குடுக்கறதும் அத ரிக்கவர் பண்றதும் ஒங்க வேலை. ஒங்க மேனேஜர் லோன் கேட்டு வந்தவங்களோட அட்றச சரியா விசாரிச்சிட்டு லோன் குடுத்துருக்கணும். இல்ல லோன சரிவர கட்டாம இருந்ததுமே அவங்கள போய் பாத்துருக்கணும். அதுக்கு அவர மட்டும் குத்தம் சொல்ல முடியாது சார். இதோ ஒக்காந்திருக்காரே இவருக்கு சொந்த ஊருக்கு வரணும். அதுக்காக யார் யாரையோ காக்கா புடிச்சி வந்து ஒரு வருசம் கூட் ஆகாத பழைய மேனேஜர டிரான்ஸ்ஃபர் பண்ண வச்சிட்டார். சரி சொந்த ஊருக்கு வந்துட்டமே பழைய மேனேஜர் நம்ம ஃப்ரெண்டுதானேன்னு நினைச்சி அவர் குடுத்த லோனையெல்லாம் ரிக்கவர் பண்ணிருக்கலாமில்ல? அதையும் செய்யாம சும்மா வர்றவங்க போறவங்கக் கிட்டயெல்லாம் என்னை பத்தி மட்டமா சொல்லி என் பேர கெடுத்ததுமில்லாம நான் இருபது வருஷமா பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்த இடத்துலருந்தே நா காலி பண்ற மாதிரி பண்ணவர் சார் இவர். அந்த பில்டிங் ஓனர் இவர் அப்பாக்கிட்ட படிச்சவராம். அத வச்சிக்கிட்டு அவர மிரட்டி என்னெ காலி பண்ண வச்சி என் பிராக்டிசையே கெடுத்தவர்.. இந்த லோனெல்லாம் திரும்பி வராம போனதுக்கு இவர்தான் காரணம்.’

என் செவிகளையே நம்பமுடியாமல் நான் அமர்ந்திருக்க என்னுடைய மேலாளர் என் முன்னரே அவரை சட்டையைப் பிடித்து அடிக்க போய்விட்டார். இதைக் கண்டு அவருடைய பணியாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னுடைய நண்பரை தாக்க முயல அவரை அதிலிருந்து விடுவித்து மீட்டு வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ‘பாத்தீங்களா சார் இந்த ஃப்ராடு பேசறத. இதிலருந்தே தெரியல இவனும் நம்ம மேனேசரும் சேர்ந்துதான் இத செஞ்சிருக்காங்கன்னு?’ என்ற என் மேலாளரை என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

தணிக்கையாளரின் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால் அவர் கூறியதில் பொறுப்பற்றத் தன்மை தெரிந்தாலும் அவரை முழுவதுமாக குறை கூறவும் முடியாத நிலை. அவர் வாதிட்டதுபோல சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை வங்கிக்கு அவர் அறிமுகப்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் இருக்கவில்லை, அவர்கள் எல்லோரும் சமர்ப்பித்திருந்த நிதியறிக்கைகளை இவர் தயாரித்தளித்திருந்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

அப்படிப்பட்ட சூழலில் அவரை விரோதித்துக்கொள்ளாமல் அவர் மூலமாக கடனை வசூலிப்பதை விட்டுவிட்டு அவரைப் பற்றி பிற வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக பேசுவதும் அவர் தன்னுடைய தொழிலை செய்யவிடாமல் அவருடைய இடத்திலிருந்து வெளியேற்ற முனைவதும் ஒரு வங்கி அதிகாரி செய்யக் கூடியக் காரியமல்லவே என்று நினைத்தேன்.

அதன் காரணமாக தன்னுடைய தொழிலே பாதிக்கப்பட்டுவிட்டதென தணிக்கையாளர் புகார் கூறுவதிலிருந்த நியாயமும் எனக்கு புலப்பட்டது.

மேலாளருக்கும் தணிக்கையாளருக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட விரோதம் இறுதியில் முந்தைய மேலாளர் வழங்கியிருந்த அனைத்து கடன்களுமே வசூலிக்கப்படாமல் நிலுவையில் நின்றுவிட வாய்ப்புள்ளதே என்றும் நினைத்தேன்.

என்னதான் என்னுடைய மேலாளர் அதே நகரத்தைச் சார்ந்தவர் என்றாலும் அவரை விடவும் செல்வாக்குள்ளவராகத்தான் தணிக்கையாளர் இருப்பார் என்பது உண்மையல்லவா? அதுவும் சுமார் இருபது வருடங்களுக்கும் கூடுதலாக தொழில் செய்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கும் வணிகம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கிடையில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டுமே.

அவர் நினைத்தால் வங்கியைப் பற்றியும் இப்போதுள்ள மேலாளரைப் பற்றியும் அவர்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிட முடியுமே. அதுவரை வழங்கியிருந்த கடன்களை வசூலிக்க முடியாமல் போவதுடன் மேற்கொண்டு புதிதாக கடன் வழங்குவதும் தடைப்பட்டுவிட வாய்ப்புள்ளதே.

இதுபோன்ற கவலைகள் என்னை வாட்டியெடுக்க என்னுடைய மேலாளரோ தன்னுடைய செயலின் தீவிரத்தை உணராதவர்போல் அலட்சியத்துடன் என்னருகில் அமர்ந்திருந்தார். இவரை உடனே மாற்றாவிட்டால் வங்கியின் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று என்னுடைய வட்டார மேலாளருக்கு பரிந்துரைத்தால், ‘என்ன இது எங்க போனாலும் டிபிஆருக்கு இதே பொழப்பாப் போச்சே’ என்று அவர் நினைத்தால்?

இவ்வாறெல்லாம் கவலைப் படுவதைத் தவிர்த்து இதற்கு என்னதான் மாற்று என்று ஆலோசிப்பதுதான் நல்லதென நினைத்தேன்.

நாம் வந்திருந்த நோக்கத்தை முதலில் நிறைவேற்றுவோம். அதுமட்டும்தான் நம்முடைய உடனடி நோக்கம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு கிளைக்குத் திரும்பியதும் மேலாளருடன் அன்று இரவு வெகு நேரம்வரை அமர்ந்து முந்தைய மேலாளர் வழங்கியிருந்த அனைத்து கடன்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளையும் முழுவதுமாக படித்து குறிப்பெடுத்தேன்.

இறுதியில் தணிக்கையாளரை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை என்பது தெளிவாக விளங்க முந்தைய மேலாளரின் அவசரபுத்தியும் அவரைத் தொடர்ந்து வந்த மேலாளரின் அலட்சியப் போக்குமே பெரும்பாலான கடன்கள் நிலுவையில் நிற்பதற்கு முக்கிய காரணம் என்பதை உணர்ந்தேன்.

ஆனால் இதை அவரிடம் எடுத்துரைத்தால் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த நான் அவருடைய வழியிலேயே சென்று என்னுடைய ஆய்வை முடித்துக்கொண்டு பிறகு என்ன நடவடிக்கையைப் பரிந்துரைப்பதென முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தேன்.

‘என்ன சார் இப்ப தெரியுதா அந்த ஆடிட்டர் என்ன ஃப்ராடுன்னு? நியாயமா பார்த்தா அந்தாள் மேல க்ரிமினல் கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும் சார். நா வந்து சார்ஜ் எடுத்த முதல் வாரத்திலேயே இதத்தான் நான் நம்ம ஜோனல் மேனேஜருக்கு ரெக்கமெண்ட் பண்ணேன். ஆனா அவர்தான் வேணாம்னுட்டார். அதுக்கப்புறம்தான் நானும் நமக்கென்னன்னு சும்மா இருந்துட்டேன். அந்த ஆத்திரத்துலதான் அந்த ஆடிட்டர் முன்னெ இருந்த இடத்துலருந்து வெக்கேட் பண்ண வச்சேன்.’ என்று எகத்தாளமாக பேசிய மேலாளரை என்ன செய்தாலும் தகும் என்று தோன்றினாலும் அதைப் பொருட்படுத்தாமல், ‘சரி சார். அதப்பத்தி பேசறத விட்டுட்டு இனி என்ன செய்யலாம்னு பார்ப்போம்.’ என்றேன்.

‘நீங்களே சொல்லுங்க சார்.' என்றார் அவர் ஏதோ தனக்கு இதில் சம்பந்தமில்லை என்பது போல..

அவரை என்ன செய்தால் தகும் என்ற யோசனையில் அவரையே பார்த்தேன்..

'நாளை காலையிலருந்து முதல் வேலையா இந்த லிஸ்ட்ல இருக்கற எல்லா வாடிக்கையாளர்களையும் சந்திக்கிறோம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.' என்றவாறு எழுந்து நின்றேன்.

'அவங்க யாருமே அந்த அட்றஸ்ல இருக்க மாட்டாங்களே சார்?' என்றார் அவர் பதற்றத்துடன்.

'பரவாயில்லை.. I just want to confirm that they are not there.' என்றவாறு வெளியேறினேன்..

தொடரும்.

24 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 22

அவரோ அதற்கும் கவலைப்படாமல் தொலைப்பேசியை எடுத்து என்னிடம் நீட்ட நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன் ஒரு சில நிமிடங்கள்..

அவர் அந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அதுமட்டுமல்லாமல் அதே கிளையில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்து கடைநிலை அதிகாரியாக (Grade I Officer) பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் சென்று மீண்டும் இரண்டாண்டுகள் கழித்து அதே கிளைக்கு மாற்றலாகி வந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்தவர்.

பிறகு மீண்டும் மாற்றலாகி சில வருடங்களுக்குப் பிறகு மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டதும் பிறந்து வளர்ந்த நகருக்கே அதாவது அவர் குமாஸ்தாவாகவும் துணை அதிகாரியாகவும் பணியாற்றிய கிளைக்கே மேலாளராக அமர்த்தப்பட்டவர்!

இது மிகவும் அபூர்வம். ஆனால் எங்களுடைய வங்கியில் அப்போது ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. இப்போதும் அப்படித்தான் என்பது வேறு விஷயம்!

மேலும் ஆந்திராவில் இயங்கிவரும் கிளைகளில் மேலாளராக பணியாற்றுவது மிகவும் சிரமம். என்னுடைய அனுபவத்தில் கற்பதற்கு தமிழ், மலையாளம், கன்னடம் போன்று அத்தனை எளிதான மொழியல்ல தெலுங்கு. தெலுங்கில் எழுத, படிக்க, பேச தெரிந்த அதிகாரிகளும் எங்களுடைய வங்கியில் மிகவும் குறைவாக இருந்ததால் அம்மாநிலத்தைச் சார்ந்தவர்கள் முகக் குறைந்த வயதிலேயே மேலாளர்களாக இன்றும் அமர்த்தப்படுகின்றனர்.

நான் குறிப்பிட்ட மேலாளரும் சரி அவருக்கு முன்னர் அக்கிளைக்கு மேலாளராக இருந்தவரும் சரி ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அத்துடன் முந்தைய மேலாளரும் இவரும் ஒரே நாளில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்து ஒரே நாளில் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள். அதுவரை நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தவர்கள்.

ஆனால் அந்த நட்பு முந்தைய மேலாளர் இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் மேலாளர் பதவி உயர்வு பெற்றதுடன் முறிந்துபோனது! பொறாமைதான் காரணம்!

போதாததற்கு முந்தைய மேலாளர் இவரைவிடவும் படிப்பில் சற்று குறைவாம்! இவர் முதுகலைப் பட்டதாரியாம். அவர் வெறும் பட்டதாரியாம்!

அதாவது அவருக்கு முன்பு இவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டுமாம்!

அதுமட்டுமல்ல. முந்தைய மேலாளர் மீது இன்னாள் மேலாளருக்கு இருந்த ஆதங்கம் அவரிடம் அப்போது அறிமுகமாகி பிரபலமாயிருந்த மாருதி 800 வாகனம் இருந்தது. அதுவும் ஏ.சி வசதியுடன். இவரிடம் வெறும் இரு சக்கர வாகனம் மட்டும்!

‘அவரோட அப்பா வெறும் டெய்லர் சார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த குடும்பம். அவருக்கு எங்கருந்து வந்தது சார் இந்த வசதி? எங்கப்பா ஹெட் மாஸ்டரா இருந்து ரிட்டையர் ஆனவர். இதுலருந்தே உங்களூக்கு தெரிஞ்சிருக்கும் ஏன் அவர் குடுத்த லோனெல்லாம் irregular ஆயிருக்குன்னு.'

இதுதான் மேலாளருடைய விட்டேத்தியான போக்குக்கு காரணம்!

இத்தகைய போக்கை எல்லா நிறுவனங்களிலும் காணலாம். சம வயதுள்ள, சம அந்தஸ்த்துள்ள அதிகாரிகளுக்கிடையில் போட்டி, பொறாமை என்பது மிகவும் சகஜம். இது ஒருவகையில் தேவையும்தான். போட்டி மனப்பான்மையில்லாவிட்டால் வாழ்வில் முன்னேறுவது கடினம்தான். ஆனால் அதுவே பொறாமையாகிவிட்டால் எத்தகைய பாதிப்புகளை விளைவிக்கும் என்பது நான் ஆய்வுக்குச் சென்ற கிளையின் அவல நிலை எனக்கு உணர்த்தியது.

முந்தைய மேலாளர் பரிந்துரைத்திருந்த வாடிக்கையாளர்கள் எல்லோருமே திருடர்கள் அல்லது நம்பத்தகாதவர்கள் என இவர் கருதக் காரணம் அவருடைய வாழ்க்கைத்தரம் இவரைவிடவும் மேலாக இருந்ததுதான். ‘அவர் இந்த லோனுங்கள சாங்ஷன் பண்ணார்னு சொல்றதவிட விலைக்கு வித்தார்னுதான் சார் சொல்லணும். அந்த ஆடிட்டரும் இவரும் சேர்ந்துக்கிட்டு காசு வாங்கிக்கிட்டு குடுத்த லோனுங்கள நான் ஏன் சார் ஓடி அலைஞ்சி ரிக்கவர் பண்ணணும்? அவரையே இங்க கொஞ்ச நாளைக்கு ரிக்கவரி ஆஃபீசரா போடுங்கன்னு சொன்னேன். நம்ம ஜோனல் மேனேஜர் கேக்கவேயில்லை. அதான் நானும் எப்படியோ போட்டும்னு விட்டுட்டேன்.’

எப்படியிருக்கு?

சாதாரணமாகவே ஒரு மேலாளர் வழங்கிய கடனை அவரையடுத்து வரும் மேலாளர் வசூலிப்பதில் அதிகம் அக்கறை காட்டமாட்டார் என்பது உண்மைதான். வசூலிப்பதைவிட வழங்குவது எளிதாயிற்றே. அத்துடன் தன்னால் மட்டுமே ஒரு வாடிக்கையாளரை சரிவர கணிக்க முடியும் என்ற எண்ணம் எல்லா மேலாளர்களிடத்திலும் உண்டு - என்னையும் சேர்த்து!

அத்துடன் முந்தைய மேலாளர் தன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும் குறைந்தவர் என்ற எண்ணம் ஒரு மேலாளர்கு ஏற்பட்டுவிட்டால் கேட்கவே வேண்டாம். அவர் வழங்கியிருந்த அனனத்து கடன்களுமே வசூல் செய்ய முடியாத கடன்கள் என தீர்மானித்துவிடுவார். அத்தகைய எண்ணத்துடன் வசூலில் இறங்கினாலும் வெற்றி கிட்டுவது அரிதுதான்.

இதையெல்லாம் மீறி நான் குறிப்பிட்ட கிளை மேலாளருக்கு முந்தைய மேலாளர் பிறப்பிலும் தன்னைவிட தாழ்ந்தவர் என்பதுடன் தன்னைவிடவும் பொருளாதார நிலையில் தாழ்ந்திருந்தவர் தன்னால் அடைய முடியாத நிலையை அடைந்துவிட்டாரே என்ற ஆதங்கமும் இருந்தது என்பதை நான் அறிந்தபோதுதான் எரிச்சலடைந்தேன்.

ஆகவே அவர் கிளைக்கு பொறுப்பேற்று இரு மாதங்களே ஆகியிருந்தது என்றாலும் அவர் நினைத்திருந்தால் முந்தைய மேலாளர் கொடுத்து நிலுவையில் நின்றிருந்த கடன்களை வசூலித்திருக்க முடியும் என்று எனக்கு தோன்றியது.

அதைச் செய்யாமல் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுள் பலருக்கும் நிதியறிக்கைகளைத் தயாரித்தளித்திருந்த தணிக்கையாளருடைய தற்போதைய விலாசத்தைக் கூட கண்டுப்பிடிக்காமல் இருந்ததை என்னால் சகித்துக்கொள்ள முடியாமற் போனது.

ஆனால் அடுத்த நொடியே கோபப்பட்டு அவரைப் பற்றி என்னுடைய வட்டார மேலாளரிடத்தில் முறையிடுவதை விட அவரை என்னுடைய வழிக்கு கொண்டு வருவதுதான் நல்லது என நினைத்தேன்.

ஆயினும் அவரை சற்று மிரட்டிப் பார்ப்பதில் தவறில்லை என்ற நினைப்புடன், ‘என்ன சார் வேணும்னா ஃபோன் செஞ்சிக்குங்கன்னு சொல்றாப்பல இருக்கு நீங்க பண்றது?’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் உடனே, ‘அப்படியெல்லாம் இல்ல சார். நீங்க கேட்டு நா தரலேன்னு நினைக்கக் கூடாதில்லையா அதனால்தான்.’ என்றார் சுருதியிறங்கி. ‘அதுமட்டுமில்ல சார். எனக்கு இங்க டிரான்ஸ்ஃபர் ஆயிருக்குன்னு தெரிஞ்சதுமே முன்னாலருந்த மேனேஜர் அத தடுக்கறதுக்கு என்னவெல்லாம் செஞ்சார் தெரியுமா? நா இங்க வந்து எங்க அவரோட வண்டவாளத்தையெல்லாம் கண்டுபிடிச்சிருவேனோங்கற பயத்துல என்னெ பத்தி என்னென்னமோ நம்ம ஜோனல் மேனேஜர் கிட்ட சொல்லி அவர் இப்பல்லாம் நா ஃபோன் பண்ணால எரிஞ்சி விழறார் சார். அவர்கிட்ட போயி இவர் பண்ணி வச்சிருக்கற வேலையையெல்லாம் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறார். நான் என்னோட ரிலீவிங் மேனேஜர் சர்ட்டிப்பிகேடுல எழுதன irregularities எல்லாத்தையும் எடுத்துரச் சொல்லி எங்கிட்டவே ஃபோன் செஞ்சார்னா பாத்துக்குங்களேன். அதான் நானும் எனக்கென்ன வந்ததுன்னு எதையும் சரி பண்ணாம இருக்கேன்.’

அவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்னுடைய ஜோனல் மேனேஜர் அப்படி செய்யக் கூடியவர்தான் என்பது எனக்கு தெரிந்திருந்தது. யாரையுமே குற்றம் சொல்ல விடமாட்டார் அவர். எல்லோருமே நல்லவர்கள் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆகவே ஒரு மேலாளர் தன்னுடைய முந்தைய மேலாளரைப் பற்றி குறை சொல்வதையும் விரும்ப மாட்டார்,

அத்துடன் இவ்விரு கிளை மேலாளர்களுக்குமிடையில் இருந்த கருத்து வேறுபாடு அவருக்கும் ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆகவே அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இவர் அவரைப் பற்றி தாறுமாறாக எழுதியிருக்கிறார் என்று நினைத்திருக்கலாம்.

ஆக, இவருடைய மனத்தாங்கலில் சிறிதளவேனும் நியாயம் இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றியது.

இருப்பினும் அதை வெளிப்படையாக அவரிடம் காட்டுவது சரியல்ல என்று நினைத்தேன். மேலும் எனக்கு மேலதிகாரியாக இருக்கும் வட்டார மேலாளரை ஒரு கிளை மேலாளர் குறை சொல்ல அனுமதிப்பதும் சரியல்லவே.

ஆகவே, ‘ இங்க பாருங்க. வட்டார மேலாளர் நம்ம எல்லாரையும் விட அனுபவசாலி. எனக்கு தெரிஞ்சவரைக்கும் ரொம்பவும் நேர்மையானவர். அவருக்கு நீங்க மட்டுமில்ல யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாதுன்னு நினைக்கறவர். அதனாலதான் ஒங்கக்கிட்ட மாத்தி எழுதச் சொல்லியிருப்பார். அந்த மாதிரி ஜோனல் ஆஃபீஸ்ல வேலை செய்யற எல்லார்கிட்டயும் சொல்றவர்தான் அவர். அதுல ஏதும் தப்பு இருக்கறதா எனக்கு தோனல. அதனால ஒங்களோட ஆதங்கத்துல அர்த்தமில்ல. நீங்க ஒங்க முந்தைய மேனேஜர குறை சொல்றத விட்டுட்டு அதுக்கு என்ன ரெமடி இருக்குன்னு யோசிக்கப் பாருங்க. அதுவுமில்லாம இதுதான் ஒங்களுக்கு முதல் ப்ராஞ்ச்.. நீங்க இங்கருக்கறப்ப குடுக்கப்போற எல்லா லோனையும் நீங்க இங்க இருக்கறப்பவே ரிக்கவர் செஞ்சிர முடியாது. நீங்க போனதுக்கப்புறம் ஒங்களுக்கு பின்னால வரப்போறவர் நீங்க குடுத்த லோன சரியா ரிக்கவர் பண்ணலேன்னா ஒங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும். அதனால ஒங்க லோன அவர் ரிக்கவர் பண்ணணும்னு நீங்க ஒங்க ப்ரீவியஸ் மேனேஜர் குடுத்துருக்கற லோன ரிக்கவர் பண்ண முயற்சி எடுங்க. அதான் நல்லது.’ என்று என்னால் இயன்றவரை அவருக்கு அறிவுரை செய்தேன்.

அவர் அதை ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ ஆனால் அப்போதிருந்து அவருடைய போக்கை சற்றே மாற்றிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..

அன்று மாலையே அவருக்கு தெரிந்த வாடிக்கையாளர்களையெல்லாம் அழைத்து நான் சந்திக்க விரும்பிய தணிக்கையாளரின் அப்போதைய விலாசத்தைக் கண்டுபிடித்தார். அவர் சாதாரணமாக இரவு எட்டு மணிக்கு மேல்தான் அந்த விலாசத்தில் இருப்பார் என்பதையும் கண்டுபிடித்து நானும் அவரும் அந்த விலாசத்திற்குச் சென்றோம்.

அவர் என்னுடைய மேலாள நண்பரைக் கண்டதும் கோபத்துடன் தெலுங்கில் சரமாரியாக வசைபாடத் துவங்கிவிட்டார். எனக்கும் தெலுங்கு சுமாராக தெரியும் என்றாலும் அவர் கடகடவென பொரிந்து தள்ளியது முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவர்கள் இருவரிடையிலும் ஏதோ மனஸ்தாபம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

தொடரும்..

19 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 21

தமிழகத்தில் கோவை மாவட்டம் பருத்தி மில்களுக்கு எத்தனை பிரசித்தமோ அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இந்த மாவட்டம் இதற்கு மிகவும் பிரசித்தம்.

கோவை மாவட்டத்தின் பரப்பளவில் அரை பாகமேயுள்ள இந்த மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பருத்தி நூற்பாலைகள் இருந்தன. மாவட்டத்திலும் அதை சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி விளைவதே இதற்கு முக்கிய காரணம்.

ஆகவே இந்த மாவட்டத்தில் இயங்கி வந்த பல வங்கிகளிலிருந்து வழங்கப்பட்டிருந்த மொத்த கடன் தொகையில் ஐம்பது விழுக்காடுக்கும் கூடுதலாக இந்த தொழிலுக்கே வழங்கப்பட்டிருந்தது.

இந்த மாவட்டத்தில் சுமார் இருபது அண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்திருந்த எங்களுடைய வங்கியின் கிளையும் இதற்கு விதிவிலக்கல்ல. இவற்றுடன் மிளகாய், புகையிலை போன்ற விளை பொருட்களுக்கும் கடன்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருந்தன.

சாதாரணமாகவே விவசாயத்திற்கென வழங்கப்படும் கடன்களை வசூலிப்பது மிகவும் சிரமம். விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்கள் மற்றெந்த தொழிலுக்கும் வழங்கப்படும் கடன்களை விடவும் கூடுதல் விழுக்காடு வாராக் கடன்களாக மாறிவிடுவதற்கு பெரும்பாலான விவசாயிகள் பருவ மழையை நம்பியே இருப்பதே முக்கியமான காரணம்.

ஒரு வருடத்தில் நூறு கடன் கணக்குகள் வழங்கப்பட்டால் வருட இறுதியில் அவற்றில் சுமார் இருபதிலிருந்து முப்பது விழுக்காடு கடன்களில் வசூல் நிலுவையில் நிற்பதுண்டு. பருவ மழை பொய்த்துப்போய்விடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அளிக்கும் நஷ்ட அறிக்கையைப் பொருத்து கடன்கள் திருப்பி செலுத்துப்படும் கால அளவை நீட்டிப்பதுண்டு. தேவைப்பட்டால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மேற்கொண்டும் கடன் வழங்கப்படுவதுண்டு.

அனால் குறிப்பிட்ட கிளையில் முந்தைய இரண்டு வருடங்களில் வழங்கப்பட்டிருந்த் கடன்களில் எழுபது விழுக்காடுக்கும் கூடுதல் கடன்கள் வசூலிக்கப்படாமல் இருந்ததால்தான் அத்தகைய கடன்களை பரிசீலித்த எங்களுடைய மத்திய குழு இவற்றை வழங்கியதில் ஏதோ வில்லங்கம் இருக்கக்கூடும் என்று முடிவு செய்து உடனடியாக ஒரு ஆய்வுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டது.

இது மற்ற பொது ஆய்வுகளைப்போலல்லாமல் (General audit) முந்தைய இரண்டாண்டுகளில் கிளையிலிருந்து வழங்கப்பட்டிருந்த கடன் கணக்குகள், அதன் சம்பந்தப்பட்ட கோப்புகள் கியவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உத்தரவிடப்பட்ட ஆய்வு.

நான் ஆய்வு செய்யவிருந்த கடன் கணக்குகளின் எண்ணிக்கை சற்று அதிகமிருந்ததால் ஆய்வுக்கு செல்வதற்கு முன்பே எங்களுடைய அலுவலகத்திலிருந்த சம்பந்தப்பட்ட கோப்புகளை படித்து குறிப்பெடுத்துக்கொண்டு சென்றால் கிளையில் எளிதில் ஆய்வு நடத்தலாமே என்ற எண்ணத்துடன் கடன் வழங்கும் இலாக்கா தலைவரை அணுகினேன்.

அவருடைய அனுமதியுடன் என்னுடைய அலுவலகத்திலிருந்த கோப்புகளை வாசித்து குறிப்பெடுக்கவே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன.

அவற்றை முழுவதுமாக வாசித்து முடித்ததுமே இந்த கணக்குகளில் வசூல் தாமதமாவதில் வியப்பொன்றும் இல்லை என்று தோன்றியது.

ஒரு கிளையிலிருந்து வழங்கப்பட்டிருந்த கடன்களில் வசூல் நிலுவையில் நிற்பதற்கு தொழில், வணிகம் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை.

வணிகம் அல்லது தொழிலை வேண்டுமென்றே சரிவர நடத்தாமல் இருப்பது. அல்லது கடன் வழங்கப்பட்டிருந்தவருக்கு அதை சரிவர நடத்த தேவையான தகுதி இல்லாதிருப்பது.

தேவைப்பட்ட கடன் தொகையை முழுவதுமாக கிளை வழங்காமலிருப்பது அல்லது தேவைக்கும் கூடுதலாக வழங்குவது. இவை இரண்டுமே ஆபத்தானது.

எந்த வணிகத்திற்கு கடன் வழங்கப்பட்டதோ அந்த வணிகத்திலல்லாமல் அதற்கு வெளியே கடன் தொகையை முதலீடு செய்துவிட்டு நஷ்டப்படுவது.

வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன் இல்லாத வணிகத்திற்கு பொய்யான நிதியறிக்கைகளைத் தயார் செய்து சமர்ப்பித்து கடன் பெறுவது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏறத்தாழ இவை எல்லாமே அந்த கிளையில் நடந்திருக்க வாய்ப்புள்ளன என்பது சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து முடித்ததுமே எனக்கு விளங்கியது.

ஆனால் அதை என்னுடைய அலுவலகத்திலிருந்த எவரிடமும் விவாதிக்க முடியாத சூழ்நிலை. அப்படிச் செய்தால் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் வழங்க சிபாரிசு செய்த என்னைப் போன்ற மேசை அதிகாரிகள், அதை மேலும் பரிசீலித்து வட்டார மேலாளருக்கு பரிந்துரைத்த என்னுடைய அதிகாரியைப் போன்ற முதன்மை மேலாளர் என அனைவரையுமே குற்றஞ்சாட்ட வேண்டியிருக்கும்.

இத்தகைய குளறுபடிகள் என்னுடைய அலுவலகத்திலேயே நடந்திருக்க என்ன காரணம் என்று ஆராய முற்படுவதை விடுத்து கிளைக்குச் சென்று சம்பந்தப்பட்ட கடந்தாரர்களை நேரடியாக சந்தித்துவிட்டு வரலாம் என்ற முடிவுடன் கிளைக்கு புறப்பட்டுச் சென்றேன்.

நான் ஆய்வுக்கு சென்ற சமயத்தில் இருந்த மேலாளர் பதவியேற்று இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் அவர் அந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தவர். ஆகவே அவருக்கு நகரை முழுவதுமாக தெரிந்திருந்தது. என்னை விடவும் வயதில் இளையவராகவும் இருந்ததால் என்னுடைய ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நினைத்தேன்.

நான் என்னுடைய அலுவலக கோப்புகளிலிருந்து அறிந்தவற்றை அவரிடம் விவரிக்காமல் நான் ஆய்வு செய்ய வேண்டிய கணக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தியதிவாரியாக ஒவ்வொன்றாக எடுக்கச் சொன்னேன்.

அவருடைய அறையிலேயே அமர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த கோப்புகளிலிருந்த எல்லா நிதியறிக்கைகளையும் தனித்தனியே எடுத்து மேசையில் விரித்துவிட்டு அவரைப் பார்த்தேன். ‘ஒங்களுக்கு விளங்கியிருக்கும்னு நினைக்கேன். எனக்கு முதல்ல இந்த ஆடிட்டர பாக்கணும்.’ என்றேன்.

அவர் பதவியேற்று இரண்டு மாதங்களே ஆகியிருந்ததால் அவரும் இதை கவனித்திருக்க வாய்ப்பிருக்காது என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய ஊகம் சரியில்லையென்பது அவருடைய கண்களில் தெரிந்த அலட்சியத்திலிருந்தே என்னால் உணர முடிந்தது. ஒன்று இதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. அல்லது இதென்ன பெரிய அதிசயம் இது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தானே என்று நினைத்திருக்கவேண்டும்.

ஆம்! அந்த கோப்புகளிலிருந்த நிதியறிக்கைகள் எல்லாமே ஒரேயொரு தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்டிருந்தது.!

இதை ஏன் என்னுடைய அலுவலகத்திலிருந்து மேசை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை?

அதற்கும் காரணம் இருந்தது.

எங்களுடைய அலுவலகத்தின் கீழ் சுமார் நாற்பத்தைந்து கிளைகள் இயங்கி வந்திருந்தன. ஆனால் அவற்றிலிருந்து வரும் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குவதற்கென மொத்த மூன்று மேசை அதிகாரிகளே இருந்தனர். ஒவ்வொரு கிளையும் வாரம் ஒன்றிற்கு இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தாலே ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் எண்பது விண்ணப்பங்கள் வட்டார அலுவ்லகத்தை வந்தடையும். ஒவ்வொரு மேசை அதிகாரிக்கும் சுமார் முப்பது விண்ணப்பங்கள்.

இவற்றுள் ஒரே தணிக்கை அதிகாரி தயாரித்திருந்த நிதியறிக்கைகளைக் கொண்ட விண்ணப்பங்கள் ஒரே சமயத்தில் பரிசீலனைக்கு வர வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரே மேசை அதிகாரியிடம் வருவதற்கு வாய்ப்பேயில்லை. அத்துடன் கடன் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பரிசீலித்து முடிக்க வேண்டுமே என்ற நோக்கத்துடன் பணியில் இறங்கும் மேசை அதிகாரிகள் பெரும்பாலும் இயந்திரக்கதியில் அவற்றை பரிசீலிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் monotonous என்பார்களே அத்தகைய பணி என்பதால் மேசை அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பைசல் செய்யும் கோப்புகளின் எண்ணிக்கைதான் பெரும்பாலும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கும்.

மேசை அதிகாரிகளின் நிலையே இப்படியென்றால் சுமார் பத்து மேசை அதிகாரிகள் பைசல் செய்யும் கோப்புகளை மேல் பரிசீலனை செய்ய இருந்த ஒரேயொரு முதன்மை மேலாளரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அலுவலகத்திலிருந்து பைசல் செய்யவியலாத கோப்புகளைக் கட்டுக்கட்டாக வீட்டுக்குக் கொண்டு செல்பவரைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை பார்த்து பைசல் செய்ய முடியாத கோப்புகளை நள்ளிரவு வரை கண் விழித்து பரிசீலிக்க வேண்டிய சூழலில் அதில் என்ன தரத்தை எதிர்பார்க்க முடியும்?

சம்பந்தப்பட்ட கடன் தொகை அவர்களுடைய மதிப்பீட்டில் கணிசமானதாக இல்லாத பட்சத்தில் மேசை அதிகாரிகள் எழுதியுள்ளவற்றை கட்டுரை வாசிப்பதுபோல வாசித்து முடித்து அடியில் கையொப்பமிடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள்.

அதுவுமில்லாமல் ஒரு கடனை வழங்கும்போதே அது வாராக் கடனாகிவிடுமோ என்ற நோக்கத்தில் யாரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில்லை. அப்படி எதிர்மறையான நோக்கத்துடன் பரிசீலிக்க துவங்கினால் எந்த கடனையுமே வழங்க முடியாமல் போய்விடும்.

அதே சமயம் ஒரு கிளை மேலாளர் எத்தகைய நேர்மறையான கோணத்தில் (Positive angle) ஒரு கடன் விண்ணப்பத்தை பரிந்துரைக்கிறாரோ அதே கோணத்தில் வட்டார அலுவலகத்திலுள்ள மேசை அதிகாரியோ அதை பரிசீலிப்பதால் வரும் வினைதான் இது.

அத்துடன் வட்டார அலுவலகத்தில் இத்தகைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் மேசை அதிகாரிகள் ஏற்கனவே பல கிளைகளில் மேலாளராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டியது மிக, மிக அவசியம். ஆனால் நான் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய சமயத்தில் கிளை அனுபவமில்லாத சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி படித்து பட்டம் பெற்றிருந்த அதிகாரிகளே இவற்றை பரிசீலித்து வந்திருந்தனர். இதுவும் இந்த குழப்பத்திற்கு இன்னொரு காரணம்.

நான் சம்பந்தப்பட்ட தணிக்கையாளரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டதும் மேலாளர் யோசனையில் ஆழ்ந்தார். ‘சார் நா பொய் சொல்றேன்னு நினைக்காதீங்க.. அவர் நம்ம பிராஞ்ச்சுக்கு போன ரெண்டு வருசமா Statutory auditor இருந்திருக்கார். அந்த அசைன்மெண்டுக்கு அவர ரெக்கமெண்ட் பண்ணதும் நம்ம பழைய மேனேஜர்தான். அவருக்கு ஏதோ தூரத்து சொந்தம்னு கூட இங்க பேசிக்கறாங்க. அதனால...’

‘அதனாலென்ன.. அதுக்கும் நாம அவர போயி பாக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன் நான் வியப்புடன்.

அவர் ஏதோ கூற வந்து தயங்குவது போலிருந்தது.

‘என்ன சார்.. ஏதோ சொல்ல வந்தாப்பல இருந்துது? ஏதாருந்தாலும் சொல்லுங்க.’ என்றேன்.

‘அவர் இந்த அட்றஸ்ல இப்ப இல்ல சார். ஆஃபீசையே க்ளோஸ் பண்ணிட்டு போய்ட்டார்னு கேள்விப்பட்டேன்..’

கேள்விப்பட்டீங்களா? அந்த நகரத்தை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவதற்கு அரை மணி நேரம் கூட தேவைப்படாது. அப்படிப்பட்ட நகரில் ஒரு பிரபல தணிக்கையாளர் அலுவலகத்தை மூடிவிட்டு மறைந்துவிடுவது அத்தனை எளிதா என்ன? அப்படி அவர் சென்றிருந்தாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் 'கேள்விப்பட்டேன்' என்று கூறுபவரை என்னவென்று சொல்வது?

அவருடைய பொறுப்பில்லாத பேச்சு எனக்கு கோபத்தை மூட்டினாலும் பொறுமையுடன், ‘நீங்க எதுக்கு இவர பத்தி விசாரிச்சீங்க? ஒங்களுக்கு ஏற்கனவே இவர்தான் இவங்களையெல்லாம் நம்ம பேங்குக்கு ரெக்கமெண்ட் பண்ணியிருக்கார்னு தெரியுமா?’ என்றேன்.

அவர் சங்கடத்துன் மென்று விழுங்கியவாறு, ‘நா வந்து சார்ஜ் எடுத்தப்போ தெரியாது சார். ஆனா இங்கருக்கற அதர் ஆஃபீசர்ஸ்தான் சொன்னாங்க. அதத்தான் ஒங்கக்கிட்ட சொன்னேன்.’ என்றார்.

அப்போதும் அவருடைய குரலில் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது தென்படவே என்னால் கோபத்தை அடக்க முடியாமல் போனது. ‘சரிங்க.. உடனே நீங்க ஏன் நம்ம ஜோனல் ஆஃபீசுக்கு இன்ஃபார்ம் பண்ணலே?’ என்றேன் கோபத்துடன்.

அவர் பதிலளிக்காமல் நான் ஏன் சொல்லணும் என்பதுபோல் தோள்களை குலுக்கவே ‘ஒங்க ஃபோன எடுங்க.. I want to complain to our Zonal Manager about your attitude.’ என்றேன் கோபத்துடன். ‘நா வேலை மெனக்கெட்டு இந்த பாரோயர்ச பாத்து கடன வசூலிக்க வழியிருக்கான்னு பாக்க வந்துருக்கேன். நீங்க என்னடான்னா ஒங்களுக்கு சம்பந்தமில்லாதமாதிரி பிஹேவ் பண்றீங்க?’

அவரோ அதற்கும் கவலைப்படாமல் தொலைப்பேசியை எடுத்து என்னிடம் நீட்ட நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன் ஒரு சில நிமிடங்கள்..

தொடரும்..

18 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 20

என்னுடைய வட்டார அலுவலகத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே நான் பணியாற்றியிருந்தாலும் அங்கு எனக்குக் கிடைத்த பல அனுபவங்கள் என்னை எதிர் காலத்தில் நல்லதொரு வங்கி அதிகாரியாக மாற்றியது மட்டுமல்லாமல் எந்த சூழலையும் சந்திக்கக் கூடிய ஒரு முழு மனிதனாகவும் மாற்றியதென்றால் மிகையாகாது.

நான் முன்பே கூறியுள்ளபடி ஒரு மேலாளர் அவருடைய பதவிக்காலத்தில் அதிகபட்சம் பத்திலிருந்து பதினைந்து கிளைகளில் மட்டுமே பணியாற்ற முடியும். சுமார் ஐந்தாறு கிளைகளில் மேலாளராக திறம்பட பணியாற்றினாலே அடுத்த பதவிக்கான உயர்வு கிடைத்துவிடும். மேற்கொண்டு எந்த பதவி உயர்வும் வேண்டாம் என்று இருந்துவிடும் மேலாளர்கள் அதற்கு மேலும் தொடர்ந்து மேலாளர்களாக பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் அமைவதுண்டு.

இவர்களுள் பெரும்பாலோனோர் நல்ல வசதி படைத்த குடும்பங்களிலிருந்து வருபவர்களாகவோ அல்லது பணிக்கு செல்லும் மனைவியரைக் கொண்டவராகவோ இருப்பார்கள். ஆகவே அவர்களுடைய சொந்த ஊரை விட்டு அதிக தூரம் செல்ல விருப்பமில்லாமல் அடுத்து இருந்த பத்து பதினைந்து கிளைகளுக்குள்ளேயே மாற்றங்கள் கிடைக்கும் வண்ணம் மேலிடத்திலிருந்த அதிகாரிகளை வசியப்படுத்தி வைத்திருப்பார்கள்.

சொந்த ஊரிலிருந்து எத்தனை தூரம் அதுவும் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று பணியாற்ற விருப்பம் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. இதை மனதில் வைத்துத்தான் என்னுடைய சகோதரர்கள் பணிக்குச் செல்லும் மனைவியைத் தேடிப்பிடித்து திருமணம் செய்தபோதும் நான் மட்டும் பணிக்குச் செல்லாத பெண்ணைத் தேடிப்பிடித்து திருமணம் செய்துக்கொண்டேன்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண்களை விரும்பி மணந்த என்னுடைய சகோதரர்களுக்கு நேர் மாறாக நான் சென்னைப் பெண்கள் எனக்கு சரிபட்டு வராது என்று நினைத்தேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு. சென்னையைப் போன்ற பெருநகரங்களில் பிறந்து வளரும் பெண்கள் பெரும்பாலும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு தன்னிச்சையாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. அது ஒருவகையில் உண்மைதான் என்பதை என்னுடைய மற்றும் என் நண்பர்கள் பலருடயை குடும்பத்தில் நடந்திருந்த சில திருமணங்களே நிரூபித்திருந்தன. அவர்கள் என்னுடைய வங்கி கிளைகள் அமைந்திருந்த சிற்றூர்களில் வசிக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள் என்று கருதியே தூத்துக்குடி போன்ற சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்த பெண்ணை என்னுடைய மனைவியாகத் தேர்ந்தெடுத்தேன்.

நான் எடுத்த அந்த முடிவு எத்தனை சரி என்பதற்கு என்னுடைய மனைவியே சான்று. நான் எந்த ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலும் சற்றும் தயங்காமல் - ஒரேயொரு மாற்றத்தைத் தவிர. அதற்கும் நாந்தான் காரணம் - என்னுடன் வர தயாராக இருந்தவர் என்பதுடன் நான் மும்பையிலிருந்த காலத்தில் என்னுடைய இரு மகள்களுடன் சென்னையிலும் தூத்துக்குடியிலும் தனித்திருந்து திறம்பட குடும்பத்தை நடத்தி குடும்பத்தைப் பற்றிய கவலையே எனக்கு இல்லாமல் செய்தவர் என் மனைவி.

இன்றும் என்னுடைய  விருப்பமே தன்னுடைய விருப்பம் என்பதுபோல் இருக்கும் அவரைப்போல் சென்னை பெண்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. என்னுடைய இரு மகள்களும் அவரைப்போன்றே அமைந்திருப்பதும் - நல்லவேளைடா ஒன்னெப்போல முரண்டுபிடிக்காம இருக்குதுகளே ஒம் பொண்ணுங்க என்பார் என்னுடைய தாயார் அடிக்கடி - என்னுடயை அதிர்ஷ்டம்தான்!

சரி.. விஷயத்துக்கு வருவோம்..

ஒரு மேலாளர் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றலாகி எந்த ஊருக்கும் சென்று பணியாற்ற தயாராக இருந்தாலும் அவரால் அதிகப்ட்சம் பத்து கிளைகளுக்கு மேல் பணியாற்ற முடியாது.

ஆனால் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய சுமார் ஒரு வருட காலத்தில் நான் இருபதுக்கும் மேற்பட்ட கிளைகளை விசிட் செய்திருந்தேன். அங்கு நடைபெற்ற வணிகத்தின் அளவு, தரம், அதுபோன்ற இடங்களில் மேலாளர்கள் சந்தித்திருந்த நபர்கள், வாடிக்கையாளர்களிடம் சிக்கிக்கொண்டு அனுபவித்திருந்த இன்னல்கள், அவர்கள் சாதித்திருந்த சாதனைகள் இவற்றையெல்லாம் கண்டுணர்ந்து அதிலிருந்து பல நல்ல பாடங்களை என்னால் படித்துக்கொள்ள முடிந்தது.

அப்படியொரு கிளைதான் நான் அடுத்து ஆய்வுக்கு சென்றிருந்த கிளை.

எங்களுடைய தலைமையகத்தைச் சார்ந்த Irregular ஆccounts Review Committee தன்னுடைய கூட்டத்தை வங்கியின் எல்லா வட்டார அலுவலகங்களிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்துவதுண்டு. இதில் அங்கத்தினர்களான மூத்த இயக்குனர்களுடன் எங்களுடைய தலமையகத்தின் மூத்த அதிகாரிகளூம் கலந்துக்கொள்வார்கள்.

அக்கூட்டத்தில் எங்களுடைய அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த கிளைகளில் காணப்படும் இத்தகைய கணக்குகளின் முழு விவரத்தையும் அறிக்கையாகத் தயாரித்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது நியதி.

அத்தகைய கூட்டம் நடக்கவிருக்கும் தியதி நிச்சயிக்கப்பட்டவுடனேயே எங்களுடைய அலுவலகத்திற்கே காய்ச்சல் வந்ததுபோல் அனைவரும் இயங்க ஆரம்பித்துவிடுவோம். எஸ்.டி.டி தொலைப்பேசி அழைப்புகள் பிரபலமாகாதிருந்த அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு கிளையையும் டிரங்க் காலில் அழைத்து குறிக்கப்பட்ட மூன்று நிமிடத்திற்குள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த கணக்குகளின் அப்போதைய நிலையைக் கேட்டறிந்து  குறிப்பெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கணினியும் இல்லாதிருந்த அக்காலத்தில் கிளகைளிலிருந்து திரட்டப்பட்ட அனைத்து தகவல்களையும் தட்டச்சு இயந்திரத்தில் பட்டியலிட்டு முடிக்க வேண்டியிருந்தது. நம்முடைய அறிக்கையில் சிறு தவறு ஏற்பட்டுவிட்டாலும் மீண்டும் முழு அறிக்கையையும் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஒரு கிளை சம்பந்தப்பட்ட அறிக்கை கூட்டத்தில் பங்குபெற்ற கமிட்டி அங்கத்தினர்களான இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளிடையில் பெரும் அதிருப்தியைக் கிளப்பியது.

அங்கத்தினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்க முடியாமல் என்னுடைய வட்டார மேலாளரும் அவருக்கடுத்தபடியாக இருந்த இரண்டு முதன்மை மேலாளர்களும் தவித்த தவிப்பைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

'நீங்கள் ஜோனல் மேனேஜர் என்ற முறையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிளைகளுக்கு செல்கிறீர்களா இல்லையா? அப்படியென்றால் இக்கிளை எப்போது சென்றீர்கள்? ஏன் இந்த நிலமையை முன்னரே எங்களுடைய பார்வைக்கு கொண்டு வரவில்லை? சரி அது போகட்டும்.. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்களுடைய அலுவலகத்திலிருந்து மூன்றுநாள் ஆய்வுக்கு செல்ல வேண்டுமே. கடந்த முறை ஆய்வுக்கு சென்றவர் யார்? அவருடைய அறிக்கையில் கிளையின் இந்த கணக்குகளைப் பற்றி எந்த குறிப்பும் இல்லையா? அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

எந்தவொரு கேள்விக்கும் திருப்தியான பதில் எங்களிடமிருந்து வராமல்போகவே கூட்டத்தின் இறுதியில் 'இன்னும் இரு வாரங்களுக்குள் உங்களுடைய அலுவலகத்திலிருந்து ஆய்வு நடத்தி தெளிவான, முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என்று குழு உத்தரவிட என்னுடைய அதிகாரி என்ன நினைத்தாரோ அக்கிளைக்கு ஆய்வுக்குச் செல்ல தகுந்த ஆள் நாந்தான் என்று என்னை அந்த கூட்டத்திலேயே பரிந்துரைத்தார்!

அங்கத்தினர்களாயிருந்த இயக்குனர்களோ என்னை அப்போதுதான் முதன்முதலாக பார்க்கின்றனர். நான் கேரளத்தில் பணிபுரிந்திராததால் அவர்கள் ஒருவேளை என்னுடைய பெயரை வேண்டுமானால் கேட்டிருப்பார்கள் போலிருந்தது அவர்கள் என்னை மேலும் கீழும் பார்த்த விதம். ‘ஓ! நீதானா அது?’

ஆக, வங்கி நியதிகளை சகட்டு மேனிக்கு மீறியிருந்த இன்னுமொரு மேலாளருடைய கிளையை ஆய்வு செய்யும் பணி - சுமை என்றாலும் மிகப் பொருத்தமாகத்தான் இருக்கும் - என் தலையின் மீது விழுந்தது.

கூட்டம் முடிந்த கையோடு சம்பந்தப்பட்ட கிளையின் அறிக்கை நகலை நான் ஆய்வுக்கு செல்ல வேண்டிய உத்தரவுடன் சேர்த்து என் கையில் கொடுத்தார் என்னுடைய அதிகாரி. முந்தைய சில கிளைகளில் ஆய்வு நடத்தி நான் அளித்திருந்த வெளிப்படையான அறிக்கையில் சற்றே அதிருப்தியடைந்திருந்த வட்டார மேலாளருக்கு என்னை மீண்டும் அத்தகைய கிளையொன்றிற்கு அனுப்ப அவ்வளவாக விருப்பமில்லையென்பதை நான் கிளைக்கு புறப்படவிருந்த அன்று நேரிடையாக என்னிடமே நாசூக்காக தெரிவித்தார்.

‘Please don’t try to sensationalise your observations tbr. You can note down whatever you notice there.. But when you prepare the report please think for a while about the circumstances under which the BMs would have been forced to take those decisions. You should know that it is easy to criticise..’ என்று துவங்கி ஒரு லெக்சர் அடித்தார்.

என்னுடைய வட்டார மேலாளர் மிகவும் திறமையானவர், அனுபவசாலி, விஷய ஞானமுள்ளவர் என ஏற்கனவே எழுதியிருந்தேன்.

ஆனால் மிகவும் இளகிய மனசுள்ளவர் என்பதை நான் கூறவில்லையென்று நினைக்கிறேன். அதுவே அவருடைய பலஹீனம் என்றாலும் மிகையாகாது. அவரும் பல கிளைகளில் மேலாளராக இருந்ததால் அவருடைய பார்வை எப்போதுமே ஒரு கிளை மேலாளருடைய கோணத்திலேயே இருந்தது.

மேலும் அவர் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில் இத்தகைய வட்டார அலுவலகங்கள் இருந்திருக்கவில்லை. ஆகவே ஒரு சிறிய அளவு கடன் வழங்க வேண்டியிருந்தாலும் விண்ணப்பங்கள் நேரடியாக தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது அவருக்கு மேலிருந்த அதிகாரிகள் மிகவும் கண்டிப்புடன் அவரைப் போன்ற மேலாளர்கள் பரிந்துரைத்த விண்ணப்பங்கள் பெரும்பான்மையானவற்றை நிராகரித்து விடுவார்களாம்!

அப்போதிருந்த மனநிலையில் நாம் எப்போதாவது இப்பதவியில் அமர நேரும்போது நாம் இவர்களைப் போலல்லாமல் மேலாளர்களுக்கு பரிவு காட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்!

ஆகவேதான் வட்டார அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அவரும் ஒரு வட்டார அலுவலகத்தின் தலைவராக அமர்த்தப்பட்டபோது தான் முன்பொருநாள் எடுத்திருந்த முடிவை நினைவில் வைத்திருந்து அதன்படியே நடக்க ஆரம்பித்தார் என்று அவர் வாயிலாகவே நான் கேட்டறிந்தேன்.

அவருடைய முடிவில் தவறேதும் இல்லைதான். நானே மேலாளராக இருந்த சமயத்திலும் அவர் குறிப்பிட்டதுபோல சில வட்டார மேலாளர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் பரிந்துரைத்த பல விண்ணப்பங்களை நிராகரித்ததை நினைத்துப்பார்த்தேன். இப்படியொரு வட்டார மேலாளர் எனக்கு கிட¨த்திருந்தால் இன்னும் நன்றாக வணிகம் செய்திருக்கலாமே என்று நினைத்தேன்.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளர் அநியாயத்திற்கு நல்லவராயிருந்தார். அனைவரையும் தன்னுடைய கண்ணோட்டத்திலிருந்தே காண்பதில் தவறேதும் இல்லையென்ற எண்ணத்துடன் உண்மைக்கு மாறானவற்றை தங்களுடைய பரிந்துரைகளில் எழுதும் நேர்மையற்ற மேலாளர்களை இனங்கண்டுக்கொள்ளத் தெரியாத அளவுக்கு நல்லவர் அவர்.

அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளால் இது உண்மையல்ல அல்லது மடுவை மலையாக்கிக் காட்டும் மிகைப்படுத்தப்பட்ட பரிந்துரை என கண்டுப்பிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களையும் எதையாவது காரணம் காட்டி அனுமதி வழங்கி உத்தரவிடுவார்.

அத்தகைய கடன்கள் வழங்கப்பட்டு ஆறு மாத காலத்திற்குள்ளாகவே வாராக் கடனாகிவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் கண்டு தங்களுடைய அறிக்கைகளில் கோடியிட்டு காட்டுவார்கள். ஆனால் இன்னும் இரண்டு மாத காலத்தில் நிலமை சரியாகிவிடும் என்று உண்மைக்கு புறம்பாக பதிலளிக்கும் மேலாளர்களின் கூற்றை நம்பி நடவடிக்கை எடுப்பதை தள்ளிப்போடுவார். கணக்குகளில் காணப்படும் விதி மீறல்களையும் ‘சரி பார்க்கலாம். வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார். சரிசெய்துவிடுவார்.’ என்று ஆய்வுக்கு சென்ற ஆய்வாளரைக் கொண்டே அவற்றை அறிக்கையிலிருந்து நீக்கிவிடும்படி கட்டளையிடுவார். 'சரி.. நாம் எழுதியாயிற்று. நம்முடைய கைப்பிரதியை அப்படியே அழித்துவிடாமல் நம் கையில் வைத்திருப்போம். நாளையொருநாள் நாம் எழுதவில்லையென யாரும் நம்மை குறை சொல்லக் கூடாதல்லவா?' என்று அவர் கேட்டுக்கொண்டபடியே அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கும் அறிக்கையிலிருந்து அவற்றை நீக்கிவிடுவார்கள்.

விளைவு? இத்தகைய கமிட்டி கூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவராலேயே பதிலளிக்க முடியாமல் இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சங்கடத்திற்குள்ளாவார்.

தொடரும்..

17 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 19

உள்ளே இரண்டு கரன்சிக் கற்றைகள்!

யாராயிருக்கும்?

அன்றைய தினம் நான் பல வாடிக்கையாளர்களின் வர்த்தக இடத்திற்கு சென்றிருந்ததாலும் ஏறத்தாழ எல்லா இடங்களிலுமே விதி மீறல்களை நான் கண்டிருந்ததாலும் எனக்கு கையூட்டு அளித்து இவர்களுள் யார் என்னை மடக்க நினைத்திருப்பார்கள் என்பது விளங்காமல் சில நிமிடங்கள் தடுமாறிப் போனேன்.

என்னுடைய கிளை மேலாளரைப் பற்றி நான் அதற்கு முன்பு அவ்வளவாகக் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவருடைய கிளையில் நான் கண்டிருந்த குறைபாடுகளைக் குறித்து அவரிடமோ அல்லது அவருடைய அதிகாரிகளிடமோ நான் விவாதித்திருக்காத நிலையில் அவர்  எனக்கு கையூட்டு அளிக்க முனைந்திருப்பார் என்று என்னால் சிந்திக்க இயலவில்லை.

யாராயிருந்தாலும் எனக்கு கையூட்டு அளிக்க முயல்வதை விட என்னை எதிலோ சிக்க வைக்க நினைத்திருந்தது எனக்கு விளங்காமல் இல்லை.

ஆகவே இதிலிருந்து எப்படி தப்புவது என்பதில்தான் என் சிந்தனை முழுவதும் சென்றது.

என்னுடைய ரயில் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரத்துக்கும் கூடுதல் இருந்தது. என்னுடைய விடுதியிலிருந்து சுமார் பத்து, பதினைந்து நிமிட தூரத்தில்தான் நான் செல்ல வேண்டிய புகைவண்டி நிலையம் இருந்தது. ஆகவே இன்னும் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் கூடுதல் நான் அந்த அறையில்தான் இருக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? என்னுடைய மேலாளரை அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்று தோன்றியது.

சாதாரணமாக நான் ஒரு கிளைக்கு ஆய்வுக்கு செல்வதற்கு முன்பே சம்பந்தப்பட்ட கிளையின் தொலைப்பேசி எண்களுடன் மேலாளருடைய அலுவலக மற்றும் வீட்டு தொலைப்பேசி எண்களையும் குறித்து வைத்துக்கொள்வேன். இது எனக்கு பல சமயங்களிலும் உதவியாயிருந்திருக்கிறது.

ஆகவே என்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த அவருடைய இல்ல தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு என்னுடைய அறையிலிருந்த தொலைப்பேசியை நெருங்கினேன்.

ஆனால் அவரை அழைத்து என்னவென்று சொல்வதென்ற குழப்பம் என்னை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது. அவர் என்னை அலுவலகத்தில் நடத்திய விதம் அப்போதும் நினைவில் நின்றது. சாதாரணமாக இத்தகைய ஆய்வு நடக்கும் கிளை மேலாளர்களுடன் ஆய்வு நடந்த இரண்டு, மூன்று தினங்களில் நெருங்கிய நட்பு ஏற்பட்டுவிடும். பல மேலாளர்கள் என்னுடைய ஆய்வில் கண்டவற்றைப் பற்றி நான் கூறும் ஆலோசனைகளை விரும்பிக் கேட்பார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதில் சிலவற்றையாவது செயல்படுத்துவார்கள். ஆய்வின் இறுதி நாளன்று ‘சார் நீங்க தப்பா நினைச்சிகலனா சாயந்தரம் கொஞ்சம்..’ என்று இழுப்பார்கள்.
எனக்கு தெரிந்த அல்லது என்னுடன் பதவி உயர்வு பெற்ற மேலாளர்களென்றால் நானும் சரி என்று அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வேன். இல்லையென்றால் அவர்களுடைய மனதை நோகடிக்காமல் டிபளமட்டிக்காக மறுத்துவிடுவேன்.

இவரோ நான் கிளையிலிருந்த மூன்று நாட்களும் என்னைக் கண்டுக்கொள்ளவே இல்லையென்பதுடன் என்னை ஒரு விரோதியைப் போன்று நடத்தியிருந்தார்.

அப்படியிருக்க இப்போது என்னுடைய விடுதியில் யாரோ ஒருவர் வந்து பணக்கற்றைகள் அடங்கிய உறையைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர் அவர்கள் யாரென உங்களுக்கு தெரியுமா என்று கேட்டால் எப்படி ரியாக்ட் செய்வார் என்ற ரீதியில் சென்றது என்னுடைய சிந்தனை.

அந்த காலத்தில் மொபைல் ஃபோன் வசதி இருக்கவில்லையே. இருந்திருந்தால் என்னுடன் அன்று மாலையில் வந்திருந்த துணை மேலாளருடைய உதவியை நாடியிருப்பேன். அந்த கிளையில் பணியாற்றிய ஜூனியர் அதிகாரிகள் எல்லோருமே என்னிடம் நட்புடன் பழகியிருந்தனர். அதே சமயம் என்னை அந்த சங்கடமான சூழலிலிருந்து விடுவிக்க அல்லது துணைக்கு வர அவர்களில் எவராவது தயாராயிருப்பார்களா என்ற சந்தேகமும் என் மனதிலிருந்தது என்னவோ உண்மைதான்.

ஆக மேலாளருடைய உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை எனக்கு.

எதிர் முனையில் மணி அடித்துக்கொண்டே இருந்தது. நான் சலிப்புடன் துண்டிக்கப்போன இறுதி நொடியில் 'ஹலோ யாரான?' என்ற மலையாள பெண் குரல் கேட்கவே நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மேலாளர் இருக்கிறாரா என்று வினவினேன். அவர் சிநேகத்துடன் என்னைப் பார்க்கத்தான் மேலாளர் கிளம்பிச் சென்றிருக்கிறார் என்றார். நான் வியப்புடன் அவர் கிளம்பிச் சென்று எத்தனை நேரம் ஆகிறது என்று கேட்டேன். அவர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து என்னை வழியனுப்பிவிட்டுத்தான் வருவேன். ஆகவே வருவதற்கு நேரமாகும் என்று கூறியிருந்தாராம்!

நான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இனைப்பைத் துண்டித்தேன்.

கட்டிலில் கிடந்த அந்த உறைக்கு அந்த மேலாளர்தான் காரணம் என்ற என்னுடைய ஊகம் சரிதான் என்று தோன்றியது. அவர்தான் என்னுடைய விடுதிக்கு நேராகவோ அல்லது யார் மூலமோ இந்த உறையை கொடுத்தனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால் அதை உறுதி செய்துக்கொள்ள முடியாத நிலையில் இதிலிருந்து எப்படி தப்புவதென சிந்திப்பதே நல்லதென முடிவு செய்தேன்.

இதை அப்படியே மீண்டும் வரவேற்பறையில் திருப்பிக் கொடுத்துவிட்டாலென்ன என்று தோன்றியது. ஆனால் அதை வைக்க ஒரு காகித உறை வேண்டும். வரவேற்பறையிலிருந்து பெற்ற உறையைப் பிரிக்க முயன்றபோதே அது மீண்டும் பயன்படுத்த லாயக்கில்லாததாகப் போயிருந்தது. ஆகவே கரன்சி நோட்டுகளை அதில் வைக்க முடியாது.

காலையில் அறைக்கு சப்ளை செய்த செய்தித்தாளை விட்டால் அறையிலோ வேறு உறையுமிருக்கவில்லை. என்னடா இது சோதனை என்று சோர்ந்துபோனேன்.

கரன்சி நோட்டுகளை எனக்கு சொந்தமான எதிலும், என்னுடைய பெட்டி, பை, என எதிலும் வைக்கத் தயாராயில்லை. அதை அப்படியே அறையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாலென்ன என்று ஒரு நொடி லோசித்து சீ, அது முட்டாள்தனம் என்று ஒதுக்கினேன்.

பிறகென்ன செய்யலாம் என்று சிந்தித்து, சிந்தித்து ஒரு வழியும் கிடைக்காமல் சலித்துப் போய் அமர்ந்திருந்த நேரத்தில் என்னுடைய அறை தொலைப்பேசி வேறு அடித்து இம்சை செய்தது. இந்த நேரத்தில் யாராயிருக்கும்? நான் இருந்த விடுதியுனுடைய விவரத்தை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லையே என்பதும் அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் அடுத்த நொடியே படுக்கையில் கிடந்த கரன்சி நோட்டுகள் விடுதியைத் தேடிவந்து இதைக் கொடுக்க முடிந்தவர்களுக்கு என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதா சிரமம் என்பதை எனக்கு நினைவுட்டியது.

எடுப்பதா வேண்டாமா என்று சிந்திக்கவிடாமல் தொடர்ந்து ஒலித்த தொலைப்பேசியை வேறு வழியில்லாமல் எடுத்தேன். எதிர்முனையில் எனக்கு அறிமுகமில்லாத குரல், ‘என்ன சார் கவர் கிடைச்சிதா?’ என்றது. ‘ஒங்க மேனேசர் சொல்லித்தான் குடுத்தனுப்பிச்சேன். காணாதுன்னா.. சொல்லுங்க சார்..’

இதற்குத்தானே காத்திருந்தேன். ஆனால் இது மட்டும் போதாது. என்னுடைய மேலாளர்தான் இதற்குபின்னால் என்பதை நிரூபிக்க அவரையோ அல்லது அவர் அனுப்பும் நபரையோ கையும் களவுமாய் பிடித்தால்தான் ஆயிற்று என்று நினைத்தேன்.  ஆகவே எனக்கு கொடுத்தது போதாது எனவும் மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அடுத்த அரை மணிக்குள் கொடுத்தனுப்பினால்தான் ஆயிற்று என்றும் கூறி எதிர் முனையிலிருந்தவருக்கு பதிலளிக்க வாய்ப்பில்லாமல் துண்டித்துவிட்டு உடனே என்னுடைய விடுதி வரவேற்பறையை அழைத்தேன்.

அடுத்த அரை மணியில் எனக்கு கடிதம் ஒன்றைக் கொண்டு வருபவரை நேரே என்னுடைய அறைக்கு அனுப்ப வேண்டுமென்றும் அவரிடமிருந்த எந்த பொருளையும் வாங்கி வைக்கலாகாது என்றும் கேட்டுக்கொண்டேன்.

பணத்தைக் கொண்டு வருபவர் வாயிலிருந்தே அவரை அனுப்பியவர் என்னுடைய மேலாளர்தான் என்ற உண்மையை வரவழைக்க வேண்டும் என்பது என்னுடைய முடிவு. ஆனால் அது எனக்கு மட்டும் தெரிந்தால் போதாதே. என்னுடைய வட்டார மேலாளருக்கும் தெரிய வேண்டுமே.

ஆகவே அவர் வருவதற்குள் என்னுடைய வட்டார மேலாளருக்கு விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற நினைப்புடன் அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைப்பதென முடிவு செய்தேன்.

நல்லவேளையாக அவர் வீட்டிலிருந்தார். நான் கூறியதை பொறுமையுடன் கேட்ட அவர் இறுதியில் நான், 'சார் அவர் அனுப்பிய ஆள் வந்ததும் நா ஒங்கள மறுபடியும் கூப்பிடறேன்' என்றதும், ‘அதெல்லாம் வேண்டாம் டிபிஆர். இத என்கிட்ட விட்டுருங்க. I will handle it, don’t worry.’ என்றார் ஆறுதலாக.

அவர் என்ன செய்தாரோ அடுத்த அரை மணியில் என்னுடைய அறையைத் தேடி என்னுடைய கிளை மேலாளரே வந்தார். நான் அறையைத் திறந்ததும் என்னைத் தள்ளிக்கொண்டு நுழைந்தவர் தன்னுடன் வந்திருந்த பணியாள் ஒருவரை  படுக்கையில் அப்போதும் கேட்பாரற்று கிடந்த உறையை எடுத்துக்கொள்ளுமாறு பணித்தார்.

பிறகு என்னைப் பார்த்து, ‘you are going to feel sorry for what you’ve done today.’ என்று எச்சரித்தார்.

பதிலுக்கு நான் ஏதும் சொல்லப்போய் பிரச்சினை வலுக்குமே என்ற அச்சத்தில் பதிலேதும் பேசாமல் அவர் அறையிலிருந்து வெளியேறும் வரை என்னுடைய உடைகளை பெட்டியில் அடுக்குவதில் கவனத்தை செலுத்தினேன்.

அன்று மேற்கொண்டு எந்த வில்லங்கமும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்ற நினைப்புடன் இரவு உணவை விரைவிலேயே முடித்துக்கொண்டு ரயில் நிலையத்தை அடைந்தேன். நல்லவேளையாக ரயிலேறும் வரை எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

அன்று நடந்த சம்பவம் நான் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தவற்றையும் என்னுடைய அறிக்கையில் எழுத வைத்தது. அதற்கு அப்போது என்னுடைய மனதில் ஆழமாய் பதிந்திருந்த பழிவாங்கும் எண்ணம்தான் காரணமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஏற்கனவே அவருடன் மனத்தாங்கல் இருந்த என்னுடைய அதிகாரியும் என்னுடைய கைப்பிரதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அங்கீகரிக்க வட்டார மேலாளரும் வேறு வழியில்லாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். ஆனால் என்னுடைய அறிக்கை அவரைச் சற்று வருத்தமடையச் செய்தது என்பதை சில மாதங்களுக்குப் பிறகு அவர் வாயிலிருந்தே அறிந்துக்கொண்டேன். 'ஒங்கள ப்ரைப் பண்ண ட்ரை பண்ணதுதான் ஒங்கள அப்படி எழுத வச்சிதுன்னு நான் நினைக்கறேன். இல்லையா டிபிஆர்?' என்று அவர் கேட்டபோது என்னால் மறுத்துப் பேச முடியாமல் போனது.

என்னுடைய அறிக்கைக் கிடைக்கப் பெற்றதும் என்னுடைய தலைமையகத்திலிருந்த மத்திய ஆய்வு இலாக்கா ஒரு முழு ஆய்வுக்கு உத்தரவிட்டது. அவர்களையும் அந்த மேலாளர் பணிய வைக்க முயன்றாலும் என்னுடைய அறிக்கையில் எழுதியிருந்தவற்றை முழுவதுமாக மறுக்க அவர்களால் முடியாமற் போனது. அவர்களுடைய அறிக்கையைத் தொடர்ந்து மேலாளர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பிறகு ஒரு முழு அளவிலான விசாரனை நடத்தப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

நல்லவேளையாக எங்களுடைய வங்கியில் எந்த கடன் வழங்கினாலும் சொத்து ஜாமீன் எடுக்கும் வழக்கமிருப்பதால் வங்கிக்கு ஏற்படவிருந்த இழப்பை அது வெகுவாக குறைக்க உதவியது.

மீதமிருந்த தொகைக்கு அவருக்கு அளிக்கப்படவிருந்த தொகையிலிருந்து பி.எஃப் நீங்கலாக கிராச்சுவிட்டி, விடுப்புத் தொகை கியவை அனைத்தும் வங்கி பிடித்துக்கொண்டது என கேள்விப்பட்டேன்.

ஆரம்பத்தில் இதற்கு நாந்தானே காரணம் என்ற வருத்தம் இருந்தாலும் நாளடைவில் அதற்கு அவருடைய செயல்பாடும்தானே காரணம் என்று ஆறுதலடைந்தேன்.

தொடரும்.

10 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 18

ஒரு கிளைக்கு ஆய்வு செல்வதை முடிந்த அளவு ரகசியமாக வைத்திருப்பது வழக்கம்.

ஆயினும் ஆய்வுக்குச் செல்லவிருக்கும் அதிகாரிக்கு வழங்க வேண்டிய உத்தரவைத் தட்டச்சு செய்வதிலிருந்து அதை டெஸ்பாட்ச் புத்தகத்தில் சேர்த்து அவரிடம் வழங்குவதுவரையுள்ள அலுவல்களை செய்யும் குமாஸ்தாக்கள் வாயிலாக அது அலுவலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்க இயலாதல்லவா?

நான் ஆய்வு செய்யச் சென்ற பல கிளைகளிலும் அதனுடைய மேலாளர் என்னுடைய வருகையை எதிர்பாராததுபோல் அபிநயித்தாலும் கிளையில் பணியாற்றும் ஒரு சிலர் வழியாக அதை நான் அறிந்துக்கொண்டதுண்டு.

அதுபோன்றே கிளையில் ஆய்வு துவங்கிய அன்றே சம்பந்தப்பட்ட மேலாளர் தன்னிடமிருந்து கடன் பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களியும் அழைத்து ஆய்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டுமென எச்சரிக்கையும் செய்வதுண்டு. அதில் தவறேதும் இல்லைதான்.

ஆகவே நான் நேற்றயை பதிவில் குறிப்பிட்டிருந்த கிளை மேலாளரும் நான் ஆய்வுக்குச் செல்லவிருந்த வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்ய வாய்ப்பிருக்கிறதென்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

ஆயினும் அவர் விடுத்த எச்சரிக்கை அவ்வளவாக பயனளிக்கவில்லை என்பதை என்னுடைய பட்டியலிலிருந்த வணிகர்களுடைய கிடங்குகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய, செய்ய உணரமுடிந்தது.

அவர்களுள் ஒருவர் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்திருந்த செராமிக் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்தவர். அவருடைய வணிகத்திற்கு கிளையிலிருந்து கனிசமான கடன் வழங்கப்பட்டிருந்தது.

அவருடைய கடையிலிருந்த (show room) சரக்குகளுடன் கிடங்கிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள சரக்கும் கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டிருந்தது.

முதலில் கடையிலிருந்த சரக்குகளை அங்கும் இங்குமாக ஆய்வு செய்ததில் எந்த குறையும் தென்படவில்லை. கடையிலிருந்த சரக்குகளின் மதிப்பும் உரிமையாளர் வைத்திருந்த கணக்கிலிருந்த மதிப்பிலும் மட்டும் லேசான வேறுபாடு இருந்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. இத்தகைய வேறுபாடுகள் சாதாரணமாக இத்தகைய வணிகத்தில் காண்பதுதான்.

சாதாரணமாக வங்கிகள் தங்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ள சரக்கை அவற்றின் கொள்முதல் விலையிலும் வணிகர்கள் தங்களுடைய கணக்கில் விற்பனை விலையிலும் மதிப்பிடுவது சகஜம்தான். ஆகவே அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

கடையிலிருந்த சரக்கை ஆய்வு செய்து முடித்த கையோடு கிடங்கிலிருந்தவற்றையும் ஆய்வு செய்துவிடலாம் என்ற நோக்கில் என்னுடன் வந்திருந்த துணை மேலாளரையும் வணிகரின் குமாஸ்தா ஒருவரையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

ஏற்கனவே நான் மேலாளராகவிருந்த ஒரு கிளையில் நடந்த அனுபவம் நினைவுக்கு வரவே கிடங்கைத் திறப்பதற்கு முன் அதன் கதவிலிருந்த பூட்டையும் அது பொருத்தப்பட்டிருந்த பேட்லாக்கையும் சரிபார்த்தேன். எந்த வில்லங்கமும் தென்படவில்லை.

கிடங்கைத் திறந்ததும் டைல்ஸ் அடங்கிய அட்டைப் பெட்டிகள் வங்கியின் நியதிகளின்படி எளிதில் எண்ணக் கூடிய வகையில் அடுக்கப்பட்டிருந்ததுடன் அவற்றை நாற்புறமும் சுற்றிவந்து பார்வையிடவும் வசதி இருந்ததைக் கவனித்தேன். நான் மேலாளராக இருந்த கிளைகளில் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் கூட இத்தனை அழகாக பொருட்களை வங்கியின் நியதிகளுக்கேற்றார்போல் அடுக்கி வைத்திருந்ததில்லையே என்று நினைத்தேன்.

ஆகவே கிடங்கில் வைத்திருந்த புத்தகத்தையும் வங்கி தங்களுடைய சார்பில் வைத்திருந்த பட்டியலையும் சரிபார்த்துவிட்டு புறப்படலாம் என்ற எண்ணத்தில் என்னுடைய துணை மேலாளரின் உதவியுடன் அதில் ஈடுபடலானேன்.

அதுவும் மிகச் சரியாக இருக்க மகிழ்ச்சியுடன் கிடங்கிலிருந்து ஏதாவது ஓரிரு பெட்டியை மட்டும் திறந்துபார்த்துவிட்டு கிளம்பலாம் என்று என்னுடன் வந்திருந்த துணை மேலாளரிடம் கூறினேன்.

‘எந்த பெட்டிய எடுக்கணும்னு நீங்களே சொல்லிருங்க சார்.’ என்றார் அவர். பிறகு நான் கூறிய ஐந்தாறு இடங்களிலிருந்து பெட்டியை எடுத்துக் கொடுக்குமாறு எங்களுடன் வந்திருந்த பணியாளரைக் கேட்டார்.

அவர் சற்று தயங்குவது தெரிந்தது. ‘நீங்க சொன்னா மாதிரி இடையிலருக்கற பெட்டியையெல்லாம் எடுக்கறது சிரமம் சார். நா அத எடுக்கறப்ப மேலருக்கற, இல்ல பக்கத்துலருக்கற பெட்டிங்கள எதையாச்சும் அசைச்சிட்டா எல்லா பெட்டியுமே சரிஞ்சிரும். பெட்டிங்க சரிஞ்சி அதுலருக்கற டைல்சுங்க ஏதாச்சும் ஒடஞ்சிருச்சின்னா அப்புறம் முதலாளிக்கு நாந்தான் பதில் சொல்லணும்.. என்னால முடியாது சார்.’ என்றார்.

அவர் கூறியதிலிருந்த நியாயம் தெரிந்தாலும் இதன் பின்னால் வேறேதும் இருக்குமோ என்ற ஒரு ஆய்வாளரின் உள்ளுணர்வு என்னை ஐயம்கொள்ளச் செய்தது.

‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அப்படி இன்ஸ்பெக்ட் பண்ணாம இருக்க முடியாதுங்க. நீங்க ஒரு ஸ்டெப் லேடர் வச்சிருக்கணுமே. அத கொண்டாங்க. அதுல ஏறி ஜாக்கிரதையா எடுங்க. நீங்க எடுக்கப் போற பெட்டிக்கு பின்னாலயும் பெட்டிங்க இருக்கத்தானங்க செய்யும்? அதெப்படி ஒரு பெட்டிய எடுத்தா மத்த பெட்டிங்க விழும்?’ என்றேன்.

அவர் அதற்குப் பிறகும் தயங்கவே என்னுடைய ஐயம் வலுப்படத் துவங்கியது. அவரை வற்புறுத்தி கிடங்கில் இருந்த அலுமினிய ஏணியைக் கொண்டுவரச் செய்து நான் முதலில் விரும்பிய உயரத்தில் அல்லாமல் சற்று இரு வரிசைகளுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை எடுக்கச் செய்தேன். அவர் தன்னுடைய கைகளை பெட்டிகளில் வைத்ததுமே அடுத்திருந்த பெட்டிகள் அசைவதைப் பார்த்தேன்.

ஐயத்துடன் என்னுடன் வந்திருந்த துணை மேலாளரைப் பார்த்தேன். எனக்குத் தோன்றிய அதே எண்ணம் அவருக்கும் தோன்றியதை அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. ‘சார் பெட்டிங்க கனமாயிருந்தா இப்படி ஆடாதில்லே?’ என்றார் குரலை இறக்கி. நான் ஆமாம் என்று தலையை அசைத்தவாறு ஏணியில் நின்றிருந்த பணியாளரைக் கவனித்தேன். அவருடைய கால்கள் தந்தியடித்துக்கொண்டிருந்தன!

அவர் தன் கையுடன் கொண்டு சென்றிருந்த ஒரு இரும்பாலான கொக்கியை பெட்டியின் மேல் குத்தி அசைத்து அதை எடுக்க அதனையடுத்து இருந்த பெட்டியும் அதனுடன் சேர்ந்து வெளியில் வந்தது. ஏணியில் நின்றிருந்தவர் இரண்டு பெட்டிகளையும் தன்னுடைய கைகளில் பற்ற முடியாமற்போகவே ஒரு பெட்டி அப்படியே சுமார் ஐந்தடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தது.

அங்கிருந்து விழுந்த வேகத்தில் பெட்டியிலிருந்த ஓடுகள் முழுவதும் உடையாவிட்டாலும் கீறலாவது விழுந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பெட்டி விழுந்த ஓசையைக் கவனித்தபோது அதில் ஒன்றுமே இல்லாததுபோல் தெரியவே நானே அதை எடுக்க முயன்றேன். ஆனால் அதற்குள் கடை பணியாளர் அவசர, அவசரமாக இறங்கி தன் கையிலிருந்த பெட்டியை என்னிடம் நீட்டினார். ‘சார் அத விடுங்க. விழுந்த வேகத்துல நிச்சயமா டைல்ஸ் க்ராக் யிருக்கும்.’ என்றவாறு என்னுடைய கவனத்தைத் திருப்பினார்.

நானும் அவரிடமிருந்த பெட்டியை வாங்கி என்னுடன் நின்றிருந்த கிளை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு பணியாளர் தரையிலிருந்து எடுத்த பெட்டியை, ‘இங்க கொண்டாங்க. ரெண்டுலயும் ஒரே மாதிரி டைப் டைல்ஸ் இருக்கான்னு செக் பண்ணிட்டு தரேன்.’ என்று அவருடைய மறுப்பைப் பொருட்படுத்தாமல் பிடுங்கினேன்.

உள்ளே ஓடுகளுக்குப் பதில் பழைய பத்திரிகைகள் உருட்டி சுருட்டி வைக்கப்பட்டிருந்தன!

என்னுடன் வந்திருந்த கிளை அதிகாரியின் முகம் வெளிறிப்போனது. என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். கடைப் பணியாளார் கண் சிமிட்டும் நேரத்தில் கிடங்கிலிருந்து வெளியேற நான் கிடங்கில் காவலுக்கு நின்றவரிடம், ‘எங்க போறார் அவர்?’ என்றேன்.

அவர் தயங்கியவாறு, ‘முதலாளிக்கு ஃபோன் போட போயிருப்பார் சார்.’ என்றார்.

நான் கேள்விக் குறியுடன் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைப் பார்த்தேன். ‘இது கொஞ்ச நாள வேல செய்யல சார்.’ என்றார் அவர். அதிலும் உண்மையிருக்காது என்று எனக்கு தோன்றியது. நான் என்னுடன் வந்திருந்தவரைப் பார்க்க அவர் என் எண்ணத்தை உணர்ந்து ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்துவிட்டு, ‘It’s working Sir.’ என்றார். பிறகு, ‘Sir, shall I inform our BM?’ என்றார் தயக்கத்துடன்.

நான் சரியென தலையை அசைத்தவாறு கிடங்கைச் சுற்றி வலம் வந்தேன். அதுபோன்ற நிகழ்வுகளை நான் ஏற்கனவே எதிர்கொண்டிருந்தாலும் அந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சரக்குகள் அடங்கிய பெட்டியின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு பார்த்தபோது இழப்பு கணிசமானதாக இருக்குமே என்று தோன்றியது.

கிடங்கிலிருந்து பதிவேட்டை எடுத்து கடந்த முறை கிடங்கை ஆய்வு செய்த வங்கியின் அதிகாரியின் பெயரைப் பார்த்தேன். கடந்த முறை மட்டுமல்ல வங்கியிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்த கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாகவே ஒரு சில நேரங்களைத் தவிர கிளை மேலாளர் மட்டுமே வந்து சென்றிருப்பது தெரிந்தது.

கிடங்குகளில் சரக்குகளை வைக்கும்போதும் எடுக்கும்போதும் கிளை மேலாளர் அல்லாத அதிகாரிகளே சென்று வரவேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது எப்போதாவதோ ஆய்வு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே கிளை மேலாளர் தன்னுடைய உதவியாளர்கள் ஒருவருடன் கிடங்குக்குச் சென்று வரலாம் என்பது வங்கியின் நியதிகளுள் ஒன்று.

கடன் வழங்கிய கிளை மேலாளரும் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளரும் கூட்டு சேர்ந்து வங்கியை மோசடிக்குள்ளாக்குவதைத் தவிர்க்கவே இந்த நியதி.

ஆனால் அந்தக் கிடங்கு அல்லாமல் அன்று நான் ஆய்வு செய்த மற்ற வாடிக்கையாளர்களின் கிடங்குகளிலும் இதே நிலைதான். எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாட்களில் அன்று இறுதி நாளாக இருந்ததால் அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய எனக்கு நேரமிருக்கவில்லை.

இத்தகைய ஆய்வு முடிவுறும் இறுதி நாளன்று கிளையில் ஆய்வின்போது கண்டிருந்த தவறுகளைக் குறித்து கிளை மேலாளரிடமும் அவருடைய துணை அதிகாரிகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நியதி இருந்தது.

ஆனால் அன்று கிடங்கு ஆய்வுகளை முடித்துக் கொண்டு கிளம்பவே இரவு வெகு நேரம் ஆகியிருந்தது. அத்துடன் நான் கிளையில் கண்டிருந்த தவறுகளில் சில தீவிரம் மிகுந்தவையாக இருந்ததாலும் கிளை மேலாளர் கடந்த நான்கு நாட்களில் என்னிடம் நடந்துக்கொண்ட விதத்தையும் மனதில்கொண்டு கிளைக்கு திரும்பும் எண்ணத்தை கைவிட்டு துணை மேலாளரிடம் விடைபெற்றுக்கொண்டு நான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பினேன்.

என்னுடைய அறையின் சாவியை என்னிடம் கொடுத்த விடுதி வரவேற்பாளர், ‘சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒருத்தர் வந்து இத குடுத்துட்டுப் போனார்.’ என்று ஒரு காகித உறையை அளித்தார்.

அதில் என்னுடைய பெயர் தெளிவாக எழுதியிருந்தது. ஊர் பேர் தெரியாத ஊரில் யாராயிருக்கும் என்ற எண்ணத்தில் அதைப் பெற்றுக்கொண்டு அறைக்கு திரும்பியதும் முதல் வேலையாக அதை திறந்துப் பார்த்தேன்.

உள்ளே இரண்டு கரன்சிக் கற்றைகள்!

பதறிப்போய் என்னையுமறியாமல் நெருப்பைத் தொட்டவன்போல் அவற்றை படுக்கையில் எறிந்தேன்.

தொடரும்..

09 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 17

‘எதுக்கு இங்க வந்து கேக்கீங்க? அதான் ஒங்க ஆஃபீஸ்லயே இருந்திருக்குமே?’ என்றார் கேலியாக.

அவருடைய கேள்வி எரிச்சலை மூட்டினாலும் கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில், ‘நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா நான் குறிச்சி வச்சிருந்த நோட்பேடை எடுத்துக்கிட்டு வர மறந்துட்டேன். I need to refer to your Final Rectification Certificate also..’ என்றேன் ஒரு போலி பணிவுடன்.

இவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளே இவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறவர் எதை வேண்டுமானாலும் செய்வார் என்று நினைத்தேன். என்னுடைய ஆய்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பும் என் மனதில் எழுந்தது.

அவர் வேண்டா வெறுப்பாக அவருடைய பிரத்தியேக கோத்ரெஜ் அலமாரியில் இருந்த கோப்பை எடுத்து என்னிடம் நீட்ட அதை பெற்றுக்கொண்டு அறையிலிருந்து வெளியேற முயற்சிக்க அவர், ‘ இங்கயே ஒக்காந்து படிச்சி பார்த்துட்டு குடுத்துருங்க. That’s a confidential file’ என்றார் ஏதோ அதற்கு முன் அத்தகைய கோப்பை நான் கண்டிராதவன் போல.

ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் ‘Sorry Sir. I need that file for a detailed scrutiny. என்னுடைய தேவை முடிந்தவுடன் நானே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன்.’ என்றவாறு கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறினேன் முடிந்தால் தடுத்து நிறுத்தேன் என்று மனதில் நினைத்தவாறு.

அவர் என்ன நினைத்தாரோ என்னைத் தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த நிமிடத்திலிருந்து அவருடைய அறைக்குள் நுழைந்த் ஒவ்வொரு அதிகாரிக்கும், சிப்பந்திக்கும் ஏச்சு விழுந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. நாந்தான் அவருடைய மூடைக் கெடுத்துவிட்டேன் போலிருக்கிறது என நினைப்பது அவர்கள் என்னைப் பார்த்த பார்வையிலிருந்தே தெரிந்தது.

ஆனால் அதை நான் பெரிதுபடுத்தாமல்  முந்தைய ஆய்வறிக்கையின் சிகப்பு நிற பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தவறுகளை கிளை மேலாளர் சரிசெய்திருக்கிறாரா என்பதை ஆய்வு செய்வதில் முனைந்தேன்.

நான் நினைத்திருந்ததுபோலவே அதில் சில சரிசெய்ய முடியாத தவறுகளும் இருந்தன. ஆனால் கிளை மேலாளர் அவற்றை சரிசெய்துவிட்டதாக சான்றிதழில் குறிப்பிட்டிருந்தார். அதை கிளை துணை மேலாளரை அழைத்து சுட்டிக்காட்டி இப்படி தவறாக சான்றிதழில் குறிப்பிட்டிருக்க என்ன காரணம் என வினவினேன்.

அவர் எனக்கு பதிலளிப்பதற்கு முன் ஓரக்கண்ணால் தன்னுடைய மேலாளரைப் பார்த்தார். அவர் எங்கள் இருவரையுமே கவனித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. நான் அதைக் கவனியாதவன்போல் இருந்தாலும் துணை மேலாளர் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்க தயங்கினார். சற்று நேரத்திற்குப் பிறகு, ‘சார் அத நீங்க மேனேஜர்கிட்டத்தான் கேக்கணும்.. இந்த விஷயமெல்லாம் எங்ககிட்ட கேட்டு எந்த பலனும் இல்ல சார்.’ என்றார் தயக்கத்துடன்.

நான் எரிச்சலுடன் அவரையும் வலதுகோடியில் அறைக்குள் அமர்ந்தவாறு எங்களையே பார்த்துக்கொண்டிருந்த மேலாளரையும் பார்த்தேன். அதைப் பொருட்படுத்தாமல் துணை மேலாளர் தன்னுடைய இருக்கைக்குத் திரும்ப அடுத்த நொடியே மேலாளரின் அழைப்பு மணி பலத்த ஒலியுடன் அலறியது. தன்னையுமறியாமல் துணை மேலாளர் அவருடைய அறை இருந்த திசையில் பார்க்க மேலாளர் கோபத்துடன் அவரை உள்ளே வருமாறு சைகை செய்வதையும் கவனித்தேன்.

அவர் அலறியடித்துக்கொண்டு இருக்கையை பின்னுக்கு தள்ளிய வேகத்தில் அது தலைகுப்புற கவிழ அவர் அதைத் தாண்டிக்கொண்டு மேலாளர் அறையை நோக்கி விரைந்தார். அலுவலகத்திலிருந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் காத்திருந்த வாடிக்கையாளர்களுடைய பார்வையும் மேலாளர் அறையை நோக்கி திரும்பின.

மேலாளர் பேசுவது வெளியே கேட்காவிட்டாலும் அவருடைய முகமும் சைகைகளும் துணை மேலாளருக்கு செமத்தியான டோஸ் விழுகிறது என்பது மட்டும் அனைவருக்கும் விளங்கியது.

என்னால்தானே இதெல்லாம் என்று நினைத்த நான் இந்த மேலாளரை எப்படி சமாளித்து ஆய்வை செய்து முடிப்பது என கவலைப்படலானேன். கிளையின் வணிகமோ நான் இதுவரை ஆய்வு செய்த கிளைகளிலேயே பெரிதானதாக இருந்தது. கிளை மேலாளரும் என்னைவிட பதவியிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர். நிச்சயம் அவருக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கும் என்றும் தோன்றியது.

ஆகவே இவரை கையாள்வது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்த நான் அதிகம் பேசாமல் என்னுடைய ஆய்வை முடித்துக்கொண்டு செல்வதுதான் உசிதம் என்ற முடிவுக்கு வந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் துணை மேலாளர் வாடிய முகத்துடன் தன்னுடைய இருக்கைக்கு திரும்பி தன்னுடைய அலுவலைக் கவனிக்க நான் முந்தைய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு சரிசெய்யப்படாமலிருந்த தவறுகளை நான் கொண்டுவந்திருந்த குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு அதன் பின் கிளையில் நடந்திருந்த வணிகத்தை ஆய்வு செய்வதில் முனைந்தேன்.

சாதாரணமாக ஒரு கிளையில் ஆய்வு செய்ய இரண்டு அல்லது மூன்று தினங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் இக்கிளை சற்று வணிக அளவில் பெரியது என்பதால் நான்கு நாட்கள் வழங்கப்பட்டிருந்தன. இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது என்று என்னுடைய இலாக்காவில் இருந்த ஒரு அதிகாரி என்னிடம் ‘நம்ம சி.எம் முக்கு அந்த மேனஜர அவ்வளவா பிடிக்காது சார். அதான் வேணும்னே ஒங்கள அந்த பிராஞ்சுக்கு அனுப்பறது மட்டுமில்லாம ஒரு நாள் எக்ஸ்ட்ராவா குடுக்கவும் செஞ்சிருக்கார்.’ என்று கேலியுடன் கூறியது நினைவுக்கு வந்தது.

ஆனால் நான் என்னுடைய ஆய்வைத் தொடர்ந்தபோது அக்கிளை மேலாளர் செய்து வைத்திருந்த விதி மீறல்களை முழுமையாக ஆய்வு செய்ய ஒரு வாரம் அளித்திருந்தாலும் என் ஒருவனால் முடிக்கவியலாது என்பதை உணர்ந்தேன். அத்துடன் எல்லாக் கிளைகளிலும் வருடம் ஒருமுறை ஆய்வை நடத்தும் எங்களுடைய மத்திய ஆய்வு இலாக்காவிலிருந்து கடந்த பதினெட்டு மாதங்களாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் தெரிந்தது. அப்படியிருக்க என்னை எதற்காக இந்த நேரத்தில் ஆய்வு செய்ய அனுப்பினார்கள் என்று யோசித்தேன்.

இதன் பின்னால் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்றும் என் சிந்தனை ஓடியது. ஆகவே எனக்கு ஆய்வைத் தொடர்ந்து செய்வதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. நாம் என்ன எழுதினாலும் பிரச்சினைதான் போலிருக்கிறது என்ற நினைத்தேன். நிலவரத்தை என்னுடைய உடனடி அதிகாரிக்கு தெரிவித்தால் என்ன என்ற நினைப்புடன் எழுந்தேன்.

ஆனால் அவ்வலுகலத்திலிருந்து தொலைப்பேசி செய்வது உசிதமல்ல என்ற நினைப்பும் வரவே துணை மேலாளரை அணுகி ‘நான் ஒரு காப்பி குடிச்சிட்டு வரேன் சார்.’ என கூறிவிட்டு அவர் பதிலளிக்கும் முன் வாசலை நோக்கி நடந்தேன். நான் வெளியேறவும் மேலாளரின் அழைப்பு மணி அலறவும் சரியாக இருந்தது. நான் அதை பொருட்படுத்தாமல் வெளியேறி கிளைக்கு நேரெதிரிலிருந்த இருந்த கடையில் கல்லாப் பெட்டியிலிருந்தவரை அணுகி, ‘சார் ஒரு ஃபோன் செஞ்சிக்கட்டுமா?’ என்றேன். அப்போது பொதுதொலைபேசி boothகள் பிரபலமாயிருக்கவில்லை.

கடை முதலாளி ஒருவேளை மேலாளருக்கு பரிச்சயமானவராக இருப்பாரோ என்ற நினைப்பில் என்னுடைய அதிகாரியை அழைத்து மலையாளத்தில் மேலாளரின் முழு ஒத்துழைப்பும் இல்லாததால் ஆய்வைத் தொடர்ந்து செய்ய எனக்கு விருப்பமில்லை என்று கூறினேன். அவர் ‘ அப்படியா செய்றான்? நீங்க ஆஃபீசுக்கு போங்க. நான் அவர்கிட்ட பேசறேன்.’ என்றார்.

‘சார், நான் இன்ஸ்பெக்ஷன கண்டினியூ பண்ணாலும் என்னால நாலு நாளைக்குள்ள முடிக்க முடியாதுன்னு நினைக்கறேன் சார். அந்த அளவு irregularities இருக்கு. நம்ம ஆன்யுவல் இன்ஸ்பெக்ஷனும் ட்யூவா  இருக்கறதுனால அவங்களையே அனுப்பச் சொல்றதுதான் நல்லதுன்னு ஃபீல் பண்றேன் சார்.’ என்றேன்.

அவர் அதை ஒத்துக்கொள்வதாயில்லை. ‘டிபிஆர். நீங்க இன்ஸ்பெக்ஷ்ன கமென்ஸ் பண்ணிட்டு கம்ப்ளீட் பண்ணாம வந்தீங்கன்னா விஷயம் நம்ம எச்.ஓவுக்கு போயிரும். அப்புறம் ஒங்களுக்கும் பிரச்சினையாக வாய்ப்பிருக்கு. அதனால நீங்க ஒங்களால என்ன முடியுமோ அதமட்டும் பார்த்துட்டு வந்துருங்க.’ என்று கூறிவிட்டு எனக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டிக்க எனக்கு அலுவலகத்திற்கு திரும்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

நான் மீண்டும் அலுவலகத்தினுள் நுழையவும் மேலாளர் பேசிமுடித்துவிட்டு ஒலிவாங்கியை வைக்கவும் சரியாக இருந்தது. அவரே எழுந்து அறைக்கதவைத் திறந்துக்கொண்டு என்னை எதிர்கொண்டார்.

அவருடைய முகம் கோபத்தில் சிவந்துபோயிருந்ததைக் கவனித்தேன். ‘என்ன சார் ஒங்களுக்கு ஏதாச்சும் தேவைன்னா என்னெ கேட்டிருக்கலாம்லே.. நீங்க பாட்டுக்கு கம்ப்ளெய்ண்ட் பண்ண போய்ட்டீங்க?’ என்றார்.

மொத்த அலுவலகமும் எங்களிருவரையும் கவனிப்பது தெரிந்தது. நான் பதற்றப்படாமல், ‘சார் எல்லாத்துக்கும் ஒங்கள வந்து கேட்டுக்கிட்டிருக்க முடியாது. நீங்க ஒங்க அசிஸ்டெண்ட் மேனேஜர  நான் கேக்கறதையெல்லாம் குடுக்கச் சொல்லுங்க, அதுபோதும்.’ என்றேன்.

அவருக்கு என்னுடைய பதிலிலிருந்த தொனி எரிச்சலை மூட்டியது என்பது அவருடைய முகம் மேலும் சிவந்ததிலிருந்து தெரிந்தது. ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

என்னுடைய அதிகாரி அவரிடம் என்ன பேசினாரோ அப்போது முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்னுடைய ஆய்வுக்கு தேவையான எல்லா கோப்பு மற்றும் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்தன.

வங்கியின் நியதிப்படி இத்தகைய குறு ஆய்வின் இறுதித் தினத்தன்று வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்த முக்கிய வாடிக்கையாளர்களின் வணிகதளங்களைப் பார்வையிட வேண்டும். ஆகவே கடந்த ஆய்வில் விடுபட்டிருந்த சில வாடிக்கையாளர்களைச் சென்று சந்திப்பதென முடிவு செய்து நான் தயாரித்திருந்த பட்டியலை துணை மேலாளரிடம் கொடுத்தேன்.

அவர் தயக்கத்துடன் என்னைப் பார்த்தார். ‘சார் இந்த லிஸ்ட்டை நீங்களே சார்கிட்ட குடுத்துருங்களேன். இங்கல்லாம் எங்கள அனுப்புனதே இல்ல சார். Pledge இருந்தாலும் Release இருந்தாலும் அவரேதான் போவார்.’

நான் புன்னகையுடன், ‘அதுவே பெரிய தப்பு. நான் நோட் பண்ணித்தான் வச்சிருக்கேன். இன்ஸ்பெக்ஷனுக்கு மேனேஜர் என்னோட வரக்கூடாதுங்கறதும் நம்ம ரூல்சுல ஒன்னு. அதனால என் கூட நீங்கதான் வரணும். அவர் ஏதாச்சும் சொன்னார்னா நா பாத்துக்கறேன். இந்த லிஸ்ட்ல ரெண்டு Key Loan partiesங்கறதால நீங்களே கொடவுன் கீய்சையும் எடுத்துக்கிட்டு வந்துருங்க நா கீழ நிக்கறேன்.’ என்றவாறு என்னுடைய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தேன்.

நான் கீழே சாலையை அடைந்து கால் மணிநேரமாகியும் துணை மேலாளர் வருவதாயில்லை. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. யினும் நான் அவராக வந்து என்னிடம் முறையிடாதவரை  தலையிட வேண்டாம் என்ற முடிவுடன் காத்திருந்தேன்.

சுமார் அரை மணி நேரம் கழித்து நான் தேவைப்பட்ட கிடங்கு சாவிகளுடன் அவர் வந்து சேர கிளைக்கு எதிரேயிருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்த ட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

‘என்ன சார் இவ்வளவு லேட்? ஒங்க மேனேஜர் மறுபடியும் ஏதாச்சும் பிரச்சினை பண்ணாறா?’ என்றேன்.

அவர் பதிலளிக்காமல் சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘நாம விசிட் பண்ணப்போற பார்ட்டீசையெல்லாம் கூப்ட்டு சொல்லிருப்பார் ஒங்க மேனேஜர். சரிதானே?’ என்றேன் கேலியுடன்.

‘எப்படி சார் அவ்வளவு கரெக்டா சொல்றீங்க?’ என்றார் அவர் என்னை வியப்புடன் பார்த்தவாறு. ‘நா என்ன பண்ண முடியும் சார்? ஆன்யுவல் இன்ஸ்பெக்ஷன் ட்யூ ஆகியும் இதுவரைக்கும் நம்ம எச்.ஓவே ரெகுலர் இன்ஸ்பெக்ஷன் டீம அனுப்பாம இருக்காங்கன்னா பாருங்களேன் அவருக்கு மேல எந்த அளவுக்கு ஹோல்ட் இருக்குன்னு..’

எனக்கும் அவரைப் பார்க்க பாவமாகத்தானிருந்தது. இவர் எப்படித்தான் அந்த மேலாளரிடம் பணிபுரிகிறாரோ என்று நின¨த்தேன்.

‘இப்படிப்பட்ட மேலாளருக்கு எதிராக நான் என்ன எழுதி வைத்தாலும் பெரிதாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை’ என்ற நினைப்புடன் செல்கிற இடத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் என்னுடைய அறிக்கையில் நான் கண்டதை அப்படியே எழுதிவிடுவதென தீர்மானித்தேன்.

தொடரும்..08 January 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 16

என்னுடைய வங்கியின் வட்டார அலுவலகத்தில் நான் பணியாற்றிய காலகட்டத்தில் கணினியின் உதவி இருக்கவில்லை.

ஒரு கிளைக்கு ஆய்வுக்குச் செல்லும் சமயத்தில் அக்கிளையில் கடந்த ஆண்டில் நடந்திருந்த ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த தவறுகளை கிளை சரிசெய்திருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது நியதி.

ஆகவே குறிப்பிட்ட கிளைக்கு பயணமாவதற்கு முன்பே எங்களுடைய அலுவலகத்திலிருந்த சம்பந்தப்பட்ட கிளையின் முந்தைய ஆய்வு அறிக்கைகளை எடுத்து முழுவதுமாக படித்துப் பார்த்து சரி செய்யப்படாதிருந்த தவறுகளின் பட்டியலைத் தயாரித்து முடிப்பதெற்குள் போதும், போதும் என்றாகிவிடும். ஒவ்வொரு அறிக்கையும் சுமார் நூறு பக்கங்களுக்கு குறையாமல் இருப்பதுடன் அவை பெரும்பாலும் ஆய்வாளரின் கையெழுத்தில் இருக்கும். சிலருடைய (என்னுடையதையும் சேர்த்துத்தான்) கையெழுத்தைப் படிந்து புரிந்துக்கொள்வதே ஒரு பெரும் சாதனை! தட்டச்சு தேர்வுகளில் கொடுக்கப்படும் கைப்பிரதிகளை விடவும் சவால்விடுவதாக இருக்கும்.

கணினி உள்ள இக்காலத்தில் மென்நகல் (softcopy) உள்ள ஃப்ளாப்பியையோ அல்லது அலுவலக வழங்கியையோ (Server) உபயோகித்து சரிசெய்யப்படாத தவறுகளை அதற்கென உள்ள ‘தேடு’ கருவியின் உதவியுடன் நிமட நேரத்தில் பட்டியலிட்டு விடமுடியும்.  

சாதாரணமாக ஆய்வறிக்கைகளில் குறிப்பிடப்படும் தவறுகளை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொடுக்கப்படுவதுண்டு. அக்கால வரம்புக்குள் தவறுகளை சரிசெய்து எல்லாத் தவறுகளும் சரி செய்துவிட்டன என்று வட்டார அலுவலகத்துக்கு சம்பத்தப்பட்ட கிளை மேலாளர் தன் கைப்பட ஒரு சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும் என்பதும் நியதி.

அத்தகைய சான்றிதழ் கிடைக்கப்பெறும் வரை வட்டார அலுவலகம் கிளை மேலாளரை நினைவுறுத்திக்கொண்டே இருக்கும். மூன்று நினைவுறுத்தலுக்கு மேல் பதிலளிக்காத கிளை மேலாளர்கள் எச்சரிக்கப்பட்டு ‘இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு சான்றிதழ் கிடைக்கப் பெறாமலிருக்கும் பட்சத்தில் தங்களுடைய கடன் வழங்கும் அதிகாரம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்’ என்று வட்டார மேலாளர் கையொப்பமிட்ட தாக்கீதும் அனுப்பப்படுவதுண்டு.

ஆகவே இத்தகைய எச்சரிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் சரிசெய்யப்படாத தவறுகளையும் சரிசெய்துவிட்டோம் என்று ஒரு ஒட்டுமொத்த சான்றிதழை சமர்ப்பிப்பது கிளை மேலாளர்களின் வாடிக்கை. நானும் சில சமயங்களில் அவ்வாறு செய்திருக்கிறேன்.

இதற்குக் காரணம் உள்ளது. சில ஆய்வாளர்கள் எதையாவது எழுத வேண்டுமே என்ற நோக்கத்தில் தங்களுக்கு தவறு என்று தோன்றுவதையெல்லாம் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்களுடன் ஆலோசிக்காமாலே எழுதிவிடுவார்கள்.

கிளை மேலாளரின் கோணத்தில் அது தவறாகவே தோன்றாது. ஒரு ஆய்வாளர் தவறு என்று எழுதியதை அது உண்மையிலேயே தவறுதானா என்பதை ஆய்வு செய்ய வட்டார அலுவலகம் அல்லது மைய ஆய்வு இலாக்காவில் பணியாற்றும் எந்த அதிகாரியும் முன் வரமாட்டார். நமக்கேன் வம்பு வேண்டுமானால் கிளை மேலாளர் இது தவறு இல்லையென வாதாடட்டுமே என்று வாளாவிருந்துவிடுவார்கள்.

சில அனுபவமிக்க கிளை மேலாளர்கள் தைரியமாக இவற்றில் எந்த தவறும் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை ஆகவே அவை சரிசெய்யப்படத் தேவையில்லையென தங்களுடைய சான்றிதழில் குறிப்பிட்டுவிட்டு மேலதிகாரிகளின் பதிலுக்கு விட்டுவிடுவார்கள். அவர்களுடைய வாதத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மேலதிகாரிகளின் பொறுப்பு.

சில சமயங்களில் மேலாளர்களின் இத்தகைய வாதம் பரிசீலிக்கப்படாமலே பல ஆண்டுகள் நிலுவையில் நிற்பதுண்டு. அத்தகைய தவறுகளையும் எதிர்வரும் காலங்களில் ஆய்வுக்குச் செல்லும் ஆய்வாளர்கள் மீண்டும் பரிசீலித்து தங்களுடைய முடிவை அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டியிருக்கும்.

நான் ஆய்வுக்குச் செல்வதாயிருந்த ஒரு கிளையின் முந்தைய ஆய்வறிக்கைகளைப் படித்துப் பார்த்து நான் தயாரித்த பட்டியிலில் இத்தகைய தீர்க்கப்படாத தவறுகள் சில இருந்தன.

ஆய்வறிக்கையில் பட்டியலிடப்படும் தவறுகள் சாதாரணமானவை, தீவிரமானவை என பிரிக்கப்பட்டு தீவிரமானவை எனக் கருதப்படும் தவறுகள் அதற்கென பிரத்தியேகமாக சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பக்கங்களில் குறிக்கப்படும். ஆய்வறிக்கை வட்டார அலுவலகத்தில் வந்து சேர்ந்தவுடன் இச்சிவப்பு நிற பகுதி உடனே வட்டார மேலாளரின் தனிப்பட்ட பார்வைக்கு அனுப்பப்படும்.

இப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து தவறுகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் சரிவர செய்யப்பட்டே ஆகவேண்டும். எக்காரணம் கொண்டும் இவை சரிசெய்யப்படாமலிருக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

ஆனால் என்ன காரணத்தினாலோ இத்தகைய தவறுகளில் சிலவும் நான் ஆய்வுக்குச் செல்லவிருந்த கிளையில் காணப்பட்டன. கடந்த ஆய்வு நடந்து முடிந்து ஆறுமாத காலத்திற்கும் மேலாகியிருந்ததைக் கவனித்த நான் என்னுடைய பட்டியலில் இருந்த ‘சிகப்பு நிற வகை’ தவறுகளை என்னுடைய அதிகாரியின் பார்வைக்குக் கொண்டுசென்று ‘இது எப்படி சார் இன்னமும் சரி செய்யப்படாமலிருக்கிறது?’ என கேட்டேன்.

அவரும் அதை அப்போதுதான் கவனித்தார். ‘என்ன பண்றது டிபிஆர். இத ஃபாலோ பண்ணி சரி செய்ய வைக்கிறது ஒங்கள மாதிரி டெஸ்க் ஆஃபீசரோட பொறுப்பு. ஆனா இதுக்கு முன்னால ஒங்க சீட்ல இருந்தவருக்கு அவ்வளவா விவரம் போறாது. ஆஃபீசுக்கே ஒழுங்கா வரமாட்டார். வந்தா வேலையும் பாக்க மாட்டார். இத மாதிரி இன்னும் எத்தன பிராஞ்சுகள்ல இருக்கோ தெரியல.’ என்றார்.

அவருடைய விளக்கத்தில் எனக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் ஏற்கனவே அவருடன் இருந்த கருத்து வேறுபாடு முழுவதுமாக தீர்க்கபடாதிருந்த நிலையில் மேற்கொண்டு அவரிடம் கேட்டால் ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமே என்ற அச்சத்தில் சில நிமிடங்கள் பதிலேதும் கூறாமல் அமர்ந்திருந்தேன்.

ஆய்வறிக்கைகளில் காணப்படும் சிவப்பு நிற பகுதியில் குறிப்பிடப்படும் தவறுகள் நேரடியாக வட்டார மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமையதிகாரியான என்னுடைய உடனடி அதிகாரியின் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் அவற்றை சரி செய்து முடிக்கும்வரை தொடர்ந்து கண்கானிப்பதும் அவர்களுடைய தனிப்பட்ட பொறுப்பாகும். இதில் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் இறுதிப் பொறுப்பு அவர்களுடையதுதான் என்பது எனக்கு தெரிந்துதானிருந்தது.

ஆனால் அதை எடுத்துக்காட்ட முயன்று மீண்டும் ஒரு பிரச்சினையை விலைக்கு வாங்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய மவுனத்தின் பின்புலத்தை ஒருவாறு உணர்ந்த அதிகாரி, ‘நீங்க ஒன்னு செய்ங்க டிபிஆர். நீங்க இன்ஸ்பெக்ஷன் போறப்போ நம்ம மேனேஜருக்கு தெரியாம இத ரெக்ட்டிஃபை செஞ்சிருக்காறான்னு ரகசியமா பாருங்க. சரி பண்ணைலைன்னா அங்கிருந்தே எனக்கு ஃபோன் பண்ணுங்க. நானே நேரடியா அவர்கிட்ட பேசிக்கறேன்.’ என்றார்.

இதிலும் எனக்கு உடன்பாடில்லை. இது உளவு வேலை பார்ப்பது போலாயிற்றே. ஆய்வு என்பது சம்பந்தப்பட்ட மேலாளர் மற்றும் அக்கிளையிலுள்ள சகல அதிகாரிகளின் துணையுடன் செய்யப்படுவது. இதில் ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் என்னைப் போன்ற ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பது என்னுடைய அதிகாரிக்கும் நன்றாகத் தெரியும்.

இருப்பினும் அவருடைய வேண்டுகோளை மறுத்துப் பேசி ஒன்றும் பயனில்லை என்பதை உணர்ந்த நான் சரி சார் என்று சம்மதித்து என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

அடுத்த நாளே புறப்பட்டு சம்பந்தப்பட்ட கிளைக்கு சென்று என்னுடைய ஆய்வைத் துவக்கினேன்.

அக்கிளை மேலாளர் என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். நான் மூன்று கிளைகளில்தான் மேலாளராக பணியாற்றியிருந்தேன். நான் பணிக்குச் சேர்ந்தே பதினைந்து ஆண்டுகள் முடிந்திருந்த நிலையில் அவர் மேலாளர் பதவியிலிருந்த காலம் அதைவிட கூடுதலாக இருந்ததை ஆய்வு துவங்கிய முதல் நாளே தெரிய வர அவரிடம் என்னுடைய அனுபவமின்மையை அவரிடம் காட்டலாகாது என எச்சரிக்கையுடன் கோப்புகளை ஆராயத் துவங்கினேன்.

என்னுடைய உடனடி அதிகாரி என்னிடம் வைத்திருந்த கோரிக்கையை எனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிராகரிக்க இயலாது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவதென யோசித்தேன்.

சிறிது நேரத்தில் எனக்கு ஒரு உத்தி தோன்றவே எனக்கருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர் அதிகாரியிடம் முந்தைய ஆய்வறிக்கைகள் அடங்கிய கோப்பைக் கொண்டு வாருங்களென கேட்டேன். அவரோ, ‘சார் அந்த ஃபைலெல்லாம் நம்ம மேனேஜரோட பெர்சனல் கஸ்டடியிலதான் இருக்கும். நாங்க போய் கேட்ட தரமாட்டார் சார். அதனால..’ என்று கழன்றுக்கொண்டார்.

முன்பெல்லாம் அப்படித்தான். கிளை மேலாளருக்கும் அங்கு பணியாற்றும் மற்ற அதிகாரிகளுக்கும் இடையில் வயது வித்தியாசம் சுமார் பதினைந்திலிருந்து இருபது வருடங்கள் இருக்கும். ஆகவே அவர்களிடையில் இப்போதிருப்பதுபோல் உறவுகள் அத்தனை சுமுகமாக இருக்காது. மேலும் இத்தகைய நீண்ட அனுபவம் உள்ள மேலாளர்கள் பெரும்பாலும் வெட்டி பந்தா செய்வதில் மன்னர்களாக இருப்பார்கள்.

என் வயதொத்த மேலாளர்கள் என்னைப் போன்ற ஆய்வாளர்களை தங்களுடைய அறையிலேயே தங்களுக்கெதிரில் அமர்த்தி சம்பந்தப்பட்ட கோப்புகளை தருவித்து நமக்கு ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் அவர்களாகவோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறைக்குள் அழைத்தோ தீர்த்து வைப்பது வழக்கம்.

ஆனால் இவரோ என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டவுடனே அழைப்பு மணியை அடித்து அவருடைய உதவி மேலாளரை அழைத்து, ‘இவருக்கு அங்க ஹால்ல ஒரு சீட் போட்டு குடுங்க.’ என்று சுருக்கமாக கூறிவிட்டு அவருடைய அலுவலைக் கவனிக்கலானார்.

இதை எதிர்பாராத நான் அதிர்ந்துபோய் நிற்க அவருடைய உதவி மேலாளர் என்னைப் பார்த்து ஆறுதலாக புன்னகை செய்துவிட்டு வெளியேற நானும் வேறு வழியில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தேன்.

என்னுடைய இருக்கை வங்கி அலுவலகத்தின் ஒரு மூலையில் இருந்ததால் என்னுடைய ஆய்வுக்கு தேவைப்பட்ட ஒவ்வொரு கோப்பையும் எனக்கு அருகில் இருந்த ஒரு ஜூனியர் அதிகாரியிடம்தான் கேட்க வேண்டியிருந்தது.

சாதாரணமாக கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்களின் கோப்புகள்தான் மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் இருப்பது வழக்கம். அவரைத் தவிர வேறெந்த அதிகாரிக்கும் அது தேவைப்படும் பட்சத்தில் ஏன், எதற்கு என்று கேட்டுவிட்டுத்தான் வழங்குவார்கள். ஏனெனில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய தனிப்பட்ட சொத்து மற்றும் வங்கி இருப்புகளைப் பற்றிய முழு விவரங்களும் அக்கோப்புகளில் இருப்பதுண்டு.

ஆனால் முந்தைய ஆய்வறிக்கைகள் அடங்கிய கோப்புகளும் மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் இருப்பது நான் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆகவே கிளை துணை மேலாளரை அழைத்து அவரிடம் என்னுடைய தேவையைக் கூற அவரும் தயங்கினார். ‘சார் அந்த ஃபைல்ச பாக்காம எனக்கு இன்ஸ்பெக்ஷன் துவங்க முடியாது.’ என்றேன் பிடிவாதமாக.

‘அதுக்கில்ல சார். நம்ம மேனேஜர் ரொம்ப சென்சிட்டிவானவர். அதனால நான் கேக்கறத விட நீங்களே கேக்கறதுதான் நல்லது.’என்று பின்வாங்க இதென்னடா வில்லங்கம் என நினைத்தேன்.

அப்படியென்ன ரகசியம் இருக்குன்னு இவர் கைல வச்சிக்கிட்டிருக்கார் என்று நினைத்த நான் மேலாளரின் அறைக்குள் நுழைந்து என் விருப்பத்தை கூறினேன். அவரோ என்னை மேலும் கீழும் பார்த்தார். ‘எதுக்கு இங்க வந்து கேக்கீங்க? அதான் ஒங்க ஆஃபீஸ்லயே இருந்திருக்குமே?’ என்றார் கேலியாக.

தொடரும்..

04 January 2007

திரும்பிப் பார்க்கிறே II - 15

நான் அவர்களை பொருட்படுத்தாமல் பெட்டிக்குள் ஏறி என்னுடைய இருக்கையில் சென்றமர்ந்தேன்.

முதல் வகுப்பு பெட்டியில் ஒரு சவுகரியம். நம்முடைய கேபின் கதவுகளை மூடி உட்புறமிருந்து தாளிட முடியும். நல்ல வேளையாக  அந்த கேபினுக்குரிய மற்ற மூவரும் நான் ஏறிய நிலையத்திற்கு முந்தைய நிலையங்களிலேயே வந்துவிட்டிருந்ததால் நான் ஏறியதும் கதவை மூடி தாளிட்டேன். அவர்கள் மூவரும் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்தது விளக்கை அணைத்துவிடவும் உதவியது.

நான் விளக்குகளை அணைத்துவிட்டு அமரவும் நான்கைந்து பேர் என் கேபினுக்கு வெளியே நின்றுக்கொண்டு தெலுங்கில் என் பெயரை குறிப்பிட்டு யாருடனோ பேசுவதும் கேட்டது. பயணச்சீட்டு பரிசோதகராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனாலும் நான் இருந்த இடத்தைவிட்டு எழாமல் சற்று நேரம் காத்திருந்தேன்.

என்னுடைய வண்டி புறப்படுவதற்கான இறுதி மணி அடிக்கப்பட்டு விட்டதாலும் நான் என்னுடைய கேபினுக்குள் நுழைந்ததைப் பரிசோதகர் கவனியாததாலும் என்னைத் தேடி வந்த அவர்களை வற்புறுத்தி இறக்கிவிட்டுவிட்டார் போலிருந்தது. அடுத்த சில நொடிகளில் வண்டி புறப்பட்டுவிட நான் நிம்மதியுடன் என்னுடைய கேபினை திறந்துவைத்துவிட்டு அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் வந்த பரிசோதகரிடம் என்னைத் தேடிக்கொண்டு யாரேனும் வந்தார்களா என்று வினவ அவர், ‘ஆமாம் சார். பார்த்தா ரவுடிங்க மாதிரி இருந்ததால நான் நீங்க கேபினுக்குள்ள இருந்தது தெரிஞ்சும் அவங்கக்கிட்ட சொல்லாம கம்பெல் பண்ணி எறக்கி விட்டுட்டேன். எனி ப்ராப்ளம் சார்?’ என்றார்.

நான் ‘ஒன்றும் இல்லை சார். அவங்க யாருன்னே எனக்கு தெரியாது.’ என்று கூறிவிட்டு காபின் கதவுகளை தாளிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

அடுத்த நாள் காலை சென்னை வந்து இறங்கியபோது இரவில் நடந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்தேன். என்னை எதற்காக சந்திக்க என்னுடைய மேலாளர் விரும்பியிருப்பார்? எதற்காக தன்னுடன் கன்சல்டண்ட்டையும் அழைத்துவரவேண்டும்? என்றெல்லாம் என் சிந்தனை ஓடியது.

நடந்தவற்றையெல்லாம் என்னுடைய வட்டார மேலாளரிடம் தெரிவித்தால் என்ன என்றுக்கூட தோன்றியது. அதற்கு முன் சம்பத்தப்பட கிளை மேலாளரை அழைத்து பேசுவது நல்லதென நினைத்தேன். ஆனால் அலுவலகத்திலிருந்து அழைத்தால் சுதந்திரமாக அவரிடம் கேட்க இயலாதே என்று நினைத்து அலுவலகத்தை விட்டு வெளியே சென்று அடுத்திருந்த தபால் நிலையத்திலிருந்து அவருக்கு தொலைபேசி செய்தேன்.

அவர் என்னுடைய குரலைக் கேட்டதுமே அழமாட்டாக் குறையாக, ‘என்ன சார் நேத்து நீங்க அப்படி செஞ்சிட்டீங்க? நீங்க அவர்கூட ஒரு நிமிஷம் பேசியிருந்தாக் கூட பிரச்சினையில்லாம போயிருக்கும். நீங்க பாட்டுக்கு அவர் கூட இருந்த அடியாளுங்கள பார்த்து பயந்துட்டு அவர அவாய்ட் பண்ணிட்டு போய்ட்டீங்க. அவர் கோபத்துல என்னென்னவோ பேசிட்டார்.’ என்றார்.

‘அப்படியா? அப்படியென்ன பேசிட்டார் நீங்க இவ்வளவு டென்ஷனாகறதுக்கு?’

அவர் அடுத்த இரு நிமிடங்களில் என்னிடம் கூறியவற்றை கேட்டு பதறிப்போனேன்.

அவருடன் வந்திருந்த கன்சல்டண்ட் நான் அவரை சந்திக்க விரும்பாததைக் காரணம் காட்டி நான் அவர்களுடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய கையூட்டு கேட்டதாக என்னுடைய வட்டார அலுவலகத்திற்கும் தலைமையலுவலகத்திற்கும் புகார் செய்யப் போவதாக மிரட்டிவிட்டுச் சென்றாராம்!

நான் என்னை பயமுறுத்தி பணிய வைக்க எண்ணுகிறார்களோ என்று எண்ணி அவர்களை தவிர்க்க நினைத்தேன். அது அத்தனை உசிதமான செயல் அல்ல என்பது என்னுடைய மேலாளரின் பதிலைக் கேட்டதும்தான் விளங்கியது.

அவர்களை விடுதியிலேயே சந்தித்து பேசியிருக்கலாம். அவர்கள் தரப்பிலிருந்து என்னதான் சமாதானம் சொல்கிறார்கள் என்பதை அறிந்துக்கொண்டு பிறகு நாம் செய்ய நினைத்ததை செய்திருக்கலாமே என்று நினைத்தேன்.

இதைத்தான் அனுபவமின்மை என்போம். எதிராளியை நேருக்கு நேர் சந்திக்காமல் ஒளிந்து ஓடுவது எப்போதுமே தீர்வாகாது.

இன்றைய சூழலில் அப்படியொரு பிரச்சினையை சந்திக்க வேண்டி வந்திருந்தால் நிச்சயம் என்னுடைய அணுகுமுறையில் மாற்றம் இருந்திருக்கும்.

நடந்தது நடந்துவிட்டது. இனி இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற திசையில் சென்றது என் சிந்தனை.

‘நீங்க இந்த ப்ரொப்போசல அப்போஸ் பண்ணலன்னா அவர் இந்த மாதிரி புகார் அனுப்ப மாட்டார் சார். அதனால...’ என்று என்னுடைய மேலாளர் நண்பர் இழுத்ததும் எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இது ஒருவகை மிரட்டல் இல்லாமல் வேறென்ன என்று நினைத்தேன். ஏன் இது ஒரு பொய் மிரட்டலாக இருக்கக் கூடாது? ஒருவேளை என்னுடைய மேலாளரே தன்னுடைய தவறை மறைக்க இத்தகைய கற்பனையை உருவாக்கியிருப்பாரோ என்றும் தோன்றியது.

ஆகவே, ‘என்ன சார் மிரட்டறீங்களா? எனக்கு ஸ்டேஷன்ல நடந்தத வச்சி ஒரு ரிப்போர்ட் குடுத்தாலே போறும். நீங்க அதோகதிதான். நீங்களும் அவரோட அடியாட்களோட என்னெ ஸ்டேஷன்ல சந்திக்க வந்தீங்கன்னும் சேர்த்து ரிப்போர்ட் பண்ணா ஒருவேளை ஒங்க மேல டிசிப்ளனரி ஆக்ஷன் எடுக்கக் கூட வாய்ப்பிருக்கு. அதனால என்னெ மிரட்டறத விட்டுட்டு ஒங்க பார்ட்டிக் கிட்ட சொல்லுங்க.. என்ன நடந்தாலும் இந்த ப்ரொப்போசல ரெக்கமெண்ட் பண்ற உத்தேசம் எனக்கில்லை. என்னுடைய ரிப்போர்ட்டயும் மீறி நம்ம ஜோனல் ஆஃபீஸ்ல ரெக்கமெண்ட் பண்ணா அதுக்கு நான் தடையா நிக்கமாட்டேன்.’ என்று கோபத்துடன் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

அலுவலகம் திரும்பிச் செல்லும் வழியில் முந்தைய தினம் ரயில் நிலையத்தில் நடந்ததையும் இப்போது தொலைபேசியில் மேலாளர் கூறியதையும் நேரடியாக வட்டார மேலாளரிடம் கூறிவிடுவதென தீர்மானித்தேன்.

நல்லவேளையாக அன்றைய உணவு இடைவேளைக்குப் பிறகு என்னுடைய அதிகாரி விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றார். அவர் இல்லாத நேரத்தில் வட்டார மேலாளரை சந்தித்து பேசிவிடுவதென தீர்மானித்து இண்டர்காமில் அவரை அழைத்து உள்ள வரலாமா என்று கேட்டுவிட்டு அவரைச் சென்று சந்தித்தேன். நான் சொல்ல நினைத்திருந்ததை சுருக்கமாக மிகைப்படுத்தாமல் கூறி முடித்தேன்.

அவர் அமைதியுடன் கேட்டுவிட்டு, ‘டிபிஆர். நம்ம வேலையில இந்த மாதிரி நடக்கறதெல்லாம் சகஜம். நீங்க ஒன்னு பண்ணுங்க. ஒங்க அப்சர்வேஷன ஒரு ரஃப் டிராஃப்ட் எடுத்து நேரா எங்கிட்ட குடுத்துருங்க. நா அந்த பார்ட்டியவே நேரா கூப்ட்டு பேசறேன். அதுக்கு அவங்க குடுக்கற எக்ஸ்ப்ளனேஷன் திருப்திகரமா இருந்தா பாக்கறேன், இல்லன்னா அவங்கக்கிட்டயே முடியாதுன்னு சொல்லிட்டு ப்ரொப்போசல திருப்பியனுப்பிரலாம்.’

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘சார் ஒருவேளை அவங்க குடுக்கற எக்ஸ்ப்ளனேஷன் திருப்திகரமா இருந்தா?’

அவர் புன்னகையுடன், ‘ரெக்கமெண்ட் செஞ்சிருவேன்.’ என நான் அதிர்ந்துப்போனேன்.

‘அப்போ என்னுடைய ரிப்போர்ட்ட பாசிட்டிவா எழுதச் சொல்றீங்களா சார்?’

அவர் மீண்டும் புன்னகையுடன், ‘இல்ல டிபிஆர். நீங்க பார்த்தத அப்படியே எழுதிக் குடுங்க. But don’t add your opinion on the proposal.. Don’t say anything about rejecting the proposal.. In any case that’s not your job, is it not?’ பதிலளிக்க அவர் கூறியதில் தவறேதும் இல்லையே என்று நினைத்தேன். ‘நீங்க எழுதறத எழுதுங்க. அதுக்குமேல அத எடுத்துக்கறதும், எடுத்துக்காம இருக்கறதும் என் இஷ்டம்’ என அவர் நினைப்பது சரிதானே?

‘என்ன டிபிஆர். யோசிக்கறீங்க? Just do as I said. ஒங்க மேல அவங்க வைக்க நினைக்கற கம்ப்ளெய்ண்ட்டையும் நீங்க அவாய்ட் பண்ண முடியும். Please think about what I said.’ என்று அவர் விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் வேறு வழியில்லாமல் அவருடைய தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது.

அன்று மாலையே அலுவலக நேரம் முடிந்த பிறகும் அமர்ந்து அவர் விரும்பியபடியே என்னுடைய அறிக்கையை தயார் செய்து அவரிடம் நேரடியாக  கொடுத்தேன். மேற்கொண்டு என்ன செய்வதென இரண்டு நாட்களுக்குள் கூறுவதாக அவர் கூறவே நான் என்னுடைய மற்ற அலுவல்களைப் பார்க்கலானேன்.

ஆனால் ஒரு வாரம் கழித்தும் அவரிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போகவே என்னுடைய அறிக்கையை தட்டச்சு செய்வதா வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலைக்கு ஆளானேன்.

என்னுடைய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கோப்பை பரிசீலிக்கும் அதிகாரியிடம் இதைக்குறித்து கேட்டாலென்ன என்று நினைத்து அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் அவரை அணுகினேன்.

அவரோ கூலாக, ‘அந்த ப்ரொப்போசல ரெக்கமெண்ட் பண்ணிருங்கன்னு நம்ம சீஃப் மேனேஜர் சொல்லிட்டாரே சார்? நான் நேத்தே முடிச்சி அவர் குடுத்துட்டேன். நம்ம ஜோனல் மானேஜரோட ரெக்கமெண்டேஷந்தான் பாக்கி. நாளை இல்லன்னா மறுநாள் நம்ம எச்.ஓவுக்கு அனுப்பிரலாம்னு நினைக்கேன்.’ என்றார்.

அவருக்கும் நான் ஆய்வுக்கு சென்று வந்த விஷயம் நன்றாகத் தெரியும். நான் திரும்பி வந்தபிறகு முழுவதுமாக இல்லாவிட்டாலும் என்னுடைய ஆய்வில் நான் கண்டவற்றைப் பற்றி சுருக்கமாக அவரிடம் உணவு இடைவேளையில் கூறியிருந்தது நினைவிலிருந்தது.

‘என்ன சார், அப்போ என்னுடைய ரிப்போர்ட்ட கன்சிடர் பண்றதா இல்லையா?’ என்றேன்.

அவர் சிரித்தவாறு, ‘சார்கிட்ட  நீங்க குடுத்த மானுஸ்க்ரிப்ட்லருக்கற எல்லா க்வெரிக்கும் பாரோயர் க்ளியரா ரிப்ளை குடுத்துட்டாராமே. அதுல நம்ம சார் சாட்டிஸ்ஃபைடுன்னு நினைக்கேன். அதான் ரெக்கமெண்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார். ஒங்கக்கிட்ட சொல்லலையா?’ என்றார்.

என்னுடைய வட்டார மேலாளரின் நடவடிக்கை எனக்கு உள்ளுக்குள் எரிச்சலை மூட்டினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எழுந்து என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

என்னிடம் இரண்டு நாட்களுக்குள் பதிலளிக்கிறேன் என்ற வட்டார மேலாளர் என்னை தவிர்ப்பது ஏன் என்று நினைத்துப்பார்த்தேன். விடை கிடைக்கவில்லை.

அன்று மாலையே அதை தெரிந்துக்கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. இருந்தும் அலுவலக நேரம் முடிந்து என்னுடைய அதிகாரி சென்றபிறகு வட்டார மேலாளரை அணுகலாம் என்று தீர்மானித்தேன்.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் அன்று மாலையே என்னுடைய அறிக்கையை ஒரு உரையிலிட்டு எனக்கு திருப்பியனுப்பினார் அவர். என்னுடைய அறிக்கையின் முதல் பக்கத்தில், ‘You can finalise the report as it is.’ என்று சுருக்கமான ஒரு குறிப்பும் இருந்தது.

அதாவது நீ எழுதுவதை எழுதிக்கொள் நான் என்ன செய்ய வேண்டுமோ செய்துக்கொள்கிறேன் என்பதுபோலிருந்தது. அதைக் கண்டதுமே எனக்குள் ஆத்திரம் பெருக்கெடுத்து வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அவர் விரும்பியபடியே செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

ஆனால் அந்த கடன் விண்ணப்பம் இறுதியில் தலைமையலுவலகத்தில் மறுக்கப்பட்டது.  பரிந்துரைப்பதுபோல் பரிந்துரைத்து வங்கி சேர்மனையே நேரில் அழைத்து என்னுடைய அறிக்கையின் சாராம்சத்தை தெரிவிக்க அவர் இயக்குனர் குழுவைக் கொண்டே விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார் என்பது அடுத்த இருவாரங்களில் தெரியவந்தபோது என்னுடைய வட்டார மேலாளர் எத்தனைப் பெரிய கில்லாடி என்பதைப் புரிந்துக்கொண்டேன்.

இதைத்தான் அனுபவம் அளிக்கும் விவேகம் என்பது. எதிராளிக்குத் தெரியாமலே அவனை அடித்து வீழ்த்துவதும் ஒரு கலைதான். எனக்கு நல்லதொரு படிப்பினையை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவங்களில் இதுவும் ஒன்று.

தொடரும்..