21 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 9

அப்போதெல்லாம் பேருந்துப் பயணம் இப்போதுள்ளது போன்று அத்தனை சிரமமாக இருக்கவில்லை. அதுவும் அலுவலக நேரமில்லாத சமயங்களில் இருக்கையில் இருந்து பயணம் செய்யவும் முடிந்தது.

என்னுடைய அலுவலகத்திலிருந்து வீட்டையடைய சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.

அப்போது நான் இருந்த மனநிலையில் ஜன்னலோரமாக ஒரு இருக்கை கிடைத்தது வீட்டையடைந்ததும் எப்படி என்னுடைய மனைவியிடம் இதைப் பக்குவமாக எடுத்து கூறுவது என ஒத்திகைப் பார்க்க உதவியது.

என் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் என்னுடைய கடந்த கால அலுவலக வாழ்க்கையையே ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.

என்னுடைய அவசர புத்தியினாலும், கோபத்தினாலும் என்னுடைய மனைவி எத்தகைய இடைஞ்சல்களுக்கெல்லாம் ஆளாக நேர்ந்திருந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்.

சென்னையில் முதன் முதலாக அத்தனை இளம் வயதில் மேலாளர் பதவி கிடைத்தும் என்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தால் அப்போதைய சேர்மனையே எதிர்த்துக்கொண்டு இரண்டு வருடங்களுக்குள் முன் பின் தெரியாத தஞ்சை போன்ற ஒரு சிறு நகரத்திற்கு மாற்றப்பட்டு, பிறந்த பத்து நாட்களுக்குள் குழந்தையை இழந்த துக்கத்தை மறக்க சொந்த ஊருக்கு மாறிச் சென்று.. அங்காவது நிம்மதியாக இருந்தேனா.. அங்கிருந்து மதுரைக்கு மாற்றலாகி.. ஒரு மத்திய அமைச்சருடனேயே தகராறு செய்து, பதவியை இழந்து..

ச்சே.. எனக்கு மட்டும் இந்த சோதனை என்று தோன்றியது.. அடுத்த கணமே இதற்கு உன்னுடைய அவசரபுத்தியும், தான் என்ற கர்வமும்தானே இதற்குக் காரணம் என்று என்னுடைய மனசாட்சியே என்னை இடித்துரைக்க என்னை நானே சபித்துக்கொண்டேன்..

இதற்கு முன்பு என்னுடைய சோதனை நேரங்களில் மனமுடைந்து வீடு திரும்பிய சமயங்களிலெல்லாம் என்னை தேற்றிய மனைவியும் இம்முறை எரிச்சலடைந்தார். ‘என்னங்க நீங்க? எடுத்தோம் கவுத்தோம்னு சொல்றதும், செய்யறதுமே ஒங்க பொழப்பா போச்சி.. வந்து முழுசா மூனு மாசம் ஆகறதுக்குள்ள மறுபடியும் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடுன்னா.. அதுவும் பாஷை தெரியாத ஊருக்கு?’

இதை நான் எதிர்பார்க்கவில்லையென்றாலும் இதற்கு நான்தானே காரணம் என்பது என் உள்ளத்தை தைக்க, ‘சாரிம்மா.. என்னைய என்ன பண்ண சொல்ற? என் மனசுல நினைக்கறத அப்படியே பேசாமலும் எழுதாமலும் இருக்க முடியலையே? நா இருந்ததத்தான எழுதி வச்சேன்.’ என்றேன் அவரை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.

அன்றிரவு நானும் என் மனைவியும் உறங்கமுடியாமல் நள்ளிரவு வரை மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். ஒரு வழியும் தென்படவில்லை.

இறுதியில் என்னுடைய தலைமையலுவலகத்தில் பணியாற்றிய எனக்கு மிகவும் நெருக்கமான உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு அவருடைய உதவியை நாடுவதென்ற  தீர்மானத்திற்கு வந்தோம்.

ஆனால் என்னுடைய அலுவலகத்திலிருந்து அவரை அழைப்பது உசிதமல்ல என்று கருதியதால் அடுத்த நாள் விடுப்பு எடுத்தேன். சுமார் பதினோரு மணியளவில் என்னுடைய வீட்டிலிருந்து தொலைப்பேசியில் அவரை அழைத்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் அவர் நல்ல மூடில் இருந்தார். என்னுடைய குரல் கேட்டதுமே, ‘என்ன டீபிஆர் வழக்கம் போலவே மறுபடியும் பிரச்சினையில மாட்டிக்கிட்டீங்க போலருக்கு?’ என்றார் சிரித்தவாறு. ‘நீங்க மாறவேயில்லை டிபிஆர்.’ என்றார் தொடர்ந்து.

நான் என்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு, ‘ஒங்களுக்கு விஷயம் முழுசும் தெரியுமா சார்?’ என்றேன்.

அவர் சிரித்தவாறு, ‘நீங்க எப்ப அந்த ரிப்போர்ட்ட எழுதி டைப் பண்ண குடுத்தீங்களோ அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள இங்க வந்திருச்சி. ஒங்க ஜோனல் மேனேஜருக்குத்தான் தெரியல போலருக்கு. சரி அது இருக்கட்டும்.. எதுக்கு கூப்ட்டீங்க அதச் சொல்லுங்க.’ என்றார்.

நான் உடனே கடகடவென்று என்னுடைய வட்டார மேலாளர் என்னிடம் முந்தைய தினம் கூறியவற்றை கூறிவிட்டு, ‘சார் நீங்கதான் இந்த டிரான்ஸ்ஃபர்லருந்து காப்பாத்தணும். எனக்கு அந்த பிராஞ்சுக்கு போறதுக்கு ஒன்னும் பயமில்ல. ஆனா இப்ப என்னால முடியாது சார், ப்ளீஸ்’ என்றேன்.

அவர் பதிலளிக்காமல் உரக்க சிரித்தது எனக்கு எரிச்சலையளித்தாலும் பொறுமையுடன் காத்திருந்தேன்.

‘I think your Zonal Manager has enacted a beautiful drama to scare you off. ஒங்கள டிரான்ஸ்ஃபர் பண்ணற ஐடியா எல்லாம் இங்க யாருக்கும் இல்ல. அதுவுமில்லாம நீங்க எழுதுனதுல ஒரு தப்பும் இல்லன்னுதான் நம்ம சேர்மனே ஃபீல் பண்றார்.’ என்றதும் நான் அதிர்ச்சியடைந்தேன்.

பிறகெதற்கு நம்முடைய வட்டார மேலாளர் அவ்வாறு கூறவேண்டும்? அதுவும் சம்பந்தப்பட்ட மேலாளர் மற்றும் என்னுடைய அதிகாரியின் முன் வைத்து?

‘சார் நீங்க சொல்றது உண்மையா?’ என்றேன் வேறு வழி தெரியாமல்.

அவர் மேலும் சிரித்தார். பிறகு சீரியசாக, ‘டிபிஆர். அவர் அப்படி சொன்னார்னா அதுக்கு பின்னால ஏதாவது காரணம் இருக்கும். இந்த விஷயம் நம்ம சேர்மன் பார்வைக்கு ஏற்கனவே வந்தாச்சி.  சேர்மன் சார் ஒங்க ஜோனல் மேனேஜர ரெண்டு நாளைக்கு முன்னால ஃபோன்ல கூப்ட்டு  கொஞ்சம் காட்டமாவே பேசிட்டார்னு கேள்விப்பட்டேன். அதான் ஒங்க மேல அவர் இவ்வளவு கோபப்பட்டிருக்கார். அதுவுமில்லாம நீங்க அந்த மாதிரியான கமெண்ட்ஸ் எழுதறதுக்கு முன்னால அவர்கிட்ட டிஸ்கஸ் செஞ்சிருக்கலாமே டிபிஆர். இதென்ன அவ்வளவு லேசான கமெண்டா? You should have been little more careful. ஒங்க இமிடீயட் பாஸ் வேற ஒங்க மேல கடுப்பாயிருக்கார். அவர விடுங்க. ஆனா ஒங்க ஜட்ஜ்மெண்ட் மேல நிறைய மதிப்பு வச்சிருந்த ஒங்க ஜோனல் மேனேஜருக்கு நீங்க இப்படி செஞ்சதுல ரொம்ப வருத்தம்தான். அதான் அவராவே இப்படியொரு குண்ட தூக்கி ஒங்க மேல போட்டிருக்கார்.’ என்றவர் சட்டென்று, ‘நீங்க இன்னைக்கி ஆஃபீஸ் போகலையா டிபிஆர்?’ என்று கேட்க நான் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் ‘ராத்திரியெல்லாம் ரொம்ப டென்ஷனாயிருந்ததுல சரியா தூங்கக்கூட இல்ல சார்.. அதான் இன்னைக்கி ஒரு நாள் லீவ் போடலாம்னு..’ என்று இழுத்தேன்.

‘It’s OK.. நீங்க ஒன்னு பண்ணுங்க. இன்னைக்கி சாயந்தரம் ஒங்க ஜோனல் மேனேஜர அவரோட வீட்ல போயி பாருங்க. ஒங்களுக்கு அவர கூப்ட்டு சொல்றதுக்கு தயக்கமா இருந்தா நா கூப்ட்டு நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு சொல்றேன். நீங்க புறப்படறதுக்கு முன்னாடி அவர ஃபோன்ல கூப்ட்டு சொல்லிட்டு போங்க.’ என்று அறிவுறுத்திவிட்டு இணைப்பைத் துண்டிக்க ஆவலுடன் என்னையே பார்த்தவாறு  என்னருகில் நின்றிருந்த என் மனைவியைப் பார்த்தேன்.

‘என்னங்க, என்னவாம்? போய்த்தான் ஆகணுமா?’

நான் இல்லையென்று தலையை அசைத்துவிட்டு, ‘அந்த ஜோனல் மேனேஜர் டிராமா போட்டிருக்கார்மா.. அப்படியொரு ஆர்டரே போடலையாம். இருக்கட்டும் வச்சிக்கறேன்.’ என்றேன் கடுப்புடன்.

என்னுடைய மனைவி என்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். ‘ஏங்க.. நீங்க திருந்தவே மாட்டீங்களா? நீங்க அவர எவ்வளவு கடுப்படிச்சிருந்தா இப்படி டிராமா போட்டுருப்பார்? மறுபடியும் போய் பிரச்சினை பண்ண போறீங்களாக்கும்? என்னையெ கேட்டா நீங்க அவர்கிட்ட போயி மன்னிப்பு கேட்டு சமரசமாயிருங்கன்னுதான் சொல்வேன். இங்கயாவது நிம்மதியா ஒரு மூனு வருசம் இருப்போம். பிள்ளைங்கள நினைச்சிப் பாருங்க. மூத்தது இப்பத்தான் மூனாவது படிக்குது. அதுக்குள்ள மூனு ஸ்கூல்ல சேர்த்தாச்சு. இந்த லட்சணத்துல இதுவரைக்கும் படிக்காத லாங்வேஜ் படிக்கற ஸ்கூல்ல கொண்டு போய் சேக்க போறீங்கறீங்க. சின்னதுக்கு ரெண்டு வயசு கூட இன்னும் முழுசா முடியல.. இதுங்கள வச்சிக்கிட்டு மெட்றாஸ்ல மேனேஜ் பண்றதே சிரமமா இருக்கு. ஆத்திர அவசரத்துக்கு ஒங்க அம்மா இருக்காங்க. அங்க போயி யார் அவஸ்த்தைப் படறது? நல்லா யோசிச்சி பாருங்க. இல்ல ஒங்க கவுரவந்தான் முக்கியம்னா என்னமும் செய்யிங்க. நீங்க பாட்டுக்கு எங்க போகணுமோ போங்க. ஆனா எங்கள கொண்டு தூத்துக்குடியில விட்டுருங்க.’

இது நான் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பம்.

அதுவரை நான் என்ன முடிவெடுத்தாலும் அதை ஆமோதித்து வந்திருந்த என்னுடைய மனைவியே என்னுடைய இந்த முடிவை ஏற்க தயாராயில்லை என்பது என்னை சிந்திக்க வைத்தது.

எந்த ஒரு சூழலிலும் என் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு தனியாக இருக்கலாகாது என்பதாலேயே பணிக்கு செல்லாத ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் நான். ‘ரெண்டு பேர் சம்பாத்தியமில்லாம இந்த காலத்துல குடும்பம் நடத்த முடியாதுடா. ஒங்க அண்ணன்கள மாதிரியே நீயும் ஒரு வேலை செய்யற பொண்ணா பார்த்து கட்டிக்கோ.’ என்று என் தாயார் கூறிய ஆலோசனையையும் நிராகரித்தவன் நான்.

அப்படியிருக்க அவரையும் குழந்தைகளையும் அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டுச் செல்வது என்பது சாத்தியமில்லை என்று நினைத்தேன்.

‘இல்ல ஒங்க கவுரவந்தான் முக்கியம்னா என்னமும் செய்யிங்க.’ என் மனைவியின் இவ்வார்த்தைகள் என்னுடைய உள்ளத்தை உண்மையிலேயே தைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

இதுதான் என்னுடைய சிந்தனையாய் இருந்ததா? என்னுடைய குடும்பத்தினருக்கு முன் என் சுய கவுரவம் அத்தனை முக்கியமா? அதே சமயம் தவறு செய்யவில்லை என்று தெரிந்தும் என்னுடைய மேலதிகாரியிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம்தானா? சரி மன்னிப்பு கேட்கிறேன். அவரும் அதை ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேமில்லை என்பதும் எனக்கு தெரிந்திருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு என்னுடைய கருத்துக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கும்? என்னுடைய வட்டார மேலாளரின் மதிப்பும், ஆதரவும் எனக்கு தொடர்ந்து இருக்குமா?

இத்தகைய கேள்விகள் என்னுடைய உள்ளத்தில் கிடந்து உழன்றாலும் என்னுடைய மனைவியின் வேண்டுகோளை கருத்தில்கொண்டு என்னுடைய வட்டார மேலாளரை அவருடைய இல்லத்தில் சென்று சந்திப்பதென முடிவு செய்தேன்.

தொடரும்..

8 comments:

sivagnanamji(#16342789) said...

// மனைவி: நீங்க அவரை எவ்வளவு
கடுப்படிச்சிருந்தா....//

'கடுப்பாக்கியிருந்தா'அல்லது 'கடுப்பேத்தியிருந்தா' னு இருந்தா நல்லா இருக்குமோ?

படைப்பாளி சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.....
அவரை நீங்க எப்போ கடுப்படிச்சீங்க?
'அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன்' மாதிரி எழுதி கடுப்பேத்தினீங்க என்பதுதானே உண்மை?

tbr.joseph said...

வாங்க ஜி!

'கடுப்பாக்கியிருந்தா'அல்லது 'கடுப்பேத்தியிருந்தா' //

இது தூத்துக்குடி பாஷைன்னு நினைக்கிறேன். இப்பவும் இடைஇடையில கடுப்படிக்காதீங்க என்பார் என் மனைவி.

அவரை நீங்க எப்போ கடுப்படிச்சீங்க?//

எங்களுடைய வட்டார அலுவலகத்தின் கீழ் இயங்கிய கிளைகளுக்கு முழுபொறுப்பு என்னுடைய வட்டார மேலாளர்தான். அவருக்குக் கீழே பணியாற்றும் நான் அவருடைய அதிகாரத்திற்கு கீழ் இயங்கும் ஒரு கிளை மேலாளரின் செயல்பாடுகள் சரியில்லையென்றும் ஆகவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கும் செயல் அவருடைய அதிகாரத்தையே கேள்வி கேட்கும் செயல் என்பது அவருடைய எண்ணம். அதுதான் அவரை எரிச்சல் (கடுப்பு) மூட்டியிருக்கிறது என்பது என்னுடைய மனைவியின் வாதம். அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது.

ilankai pen said...

ஐயாவே...
உங்களின் ஒவ்வொரு ஆக்கத்தையும் சிறுமி நான்....படித்தேன் பயனடைந்தேன்...இந்த நிகழ்வு எனது கவிதை கண்டும் நீங்கள் என்னை பார்க்க சொல்லி அனுப்பிய லிங்....உண்மையிலே இப்போது இந்தக்கணமே என்னில் 50 வீதமாக இருந்த நம்பிக்கை சரி பாதி கூடியுள்ளது...நன்றி ஐயா....எழுதுங்கள் பயனடைய காத்திருக்கும் உங்கள் வயிற்றில் பிறவா மகள்....இலங்கைபெண்

tbr.joseph said...

....உண்மையிலே இப்போது இந்தக்கணமே என்னில் 50 வீதமாக இருந்த நம்பிக்கை சரி பாதி கூடியுள்ளது...//

அன்பு மகளே இதைப் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும் நமக்கும் பாடம் புகட்டும் புத்தகங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடலாகாது என்பதை வலியுறுத்தவே என்னுடைய தோல்விகளை பகிரங்கமாக எழுதுகிறேன்.

ilankai pen said...

ஐயாவே உங்கள் வாழ்க்கை பாடங்கள்....எங்களுக்கு...பயனுள்ளதாவே இருக்கிறது...நீங்க தோல்விகளால் அடைந்தவற்றை எழுதினாலும் அந்த எழுத்துக்கள் உங்களை வெற்றிபெற செய்கின்றனவே...ஆகையால் உங்களுக்கு என்றுமே வெற்றிகள் தான் தோல்விகள் என்றுமில்லை ஐயா...சிறியவள் நான் கூறுகின்றேன்....இது தான் ஐயா நிஜமும்...உங்களின் மனைவி...ம்ம்ம் அம்மா என்று சொல்லுகிறேன்...நிச்சயமாக ஒரு நல்ல இல்லத்தரிசாயகவே இருந்து உங்களை நடைபயில செய்திருக்கின்றார்....வாழ்த்துக்களை கூறிவிடுங்கள்....அவாவின் வயிற்றில் பிறக்காவிட்டாலும்...அன்னையாகவே நினைக்கின்றேன்...நன்றி ஐயா

tbr.joseph said...

மிக்க நன்றி மகளே:))

G.Ragavan said...

ம்ம்ம்..ரொம்பவும் அறத்துன்பந்தான். தவறு நம்ம மேலதான்னா...அத ஒத்துக்கனும். வீண் வம்பு பிடிக்கிறத விட சமாதனம் செஞ்சிக்கிறதுதான் அப்ப நீங்க இருந்த நிலமைல சரீன்னு தோணுது. என்ன செஞ்சீங்களோ? அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

தவறு நம்ம மேலதான்னா...அத ஒத்துக்கனும்..//

உண்மைதான்.