20 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 8

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் இருக்கும் அமைதி என்பது அப்போது எனக்கு விளங்காமல் போனது.

சளசளவென்று பேசுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது ‘என்னடா இது தலைவலி. நிறுத்தமாட்டாரா?’ என்று சலிப்பாக இருக்கும்.

ஆனால் இத்தகையோர் வெள்ளை மனதுள்ளவர்களாக இருப்பார்கள். உள்ளொன்று புறமொன்று வைத்து பேசத்தெரியாத குழந்தை மனம் கொண்டவர்கள்.

ஆனால் என்ன நேர்ந்தாலும் மவுனமாக இருப்பவர்கள் அப்படியல்ல. தங்களுடைய எண்ணங்களை தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்து தகுந்த சந்தர்ப்பத்தில் எடுத்து விடுபவர்கள் இவர்கள். சற்று ஆபத்தானவர்கள். இத்தகையோரிடம் கவனமுடன் பழக வேண்டும்.

என்னுடைய அதிகாரியின் மவுனமும் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்று நான் ஊகித்தேன்.

தன்னுடைய தோல்வியை அவர் அத்தனை எளிதாக ஜீரனித்துக்கொள்ளக் கூடியவர் அல்ல என்பதையும் நான் பணிக்கு சேர்ந்த முதல் மாதத்திலியே தெரிந்து வைத்திருந்தேன்.

ஆகவே அவர் எப்போது வேண்டுமானாலும் திருப்பியடிக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்த்தேன். அப்படியொரு சூழல் எழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வதெனவும் சிந்திக்கலானேன். ஆனால் ஒன்றும் புலப்படவில்லை.

அவருடைய மவுனம் அப்படியென்றால் என்னுடைய வட்டார மேலாளருடைய மவுனமும் என்னை சிந்திக்க வைத்தது. சாதாரணமாக என்னை அடிக்கடி தன்னுடைய அறைக்குள் அழைத்து பேசும் அவர் அடுத்த சில தினங்களில் என்னை அழைக்காதிருக்கவே அவரும் என்னை தவிர்க்கிறாரோ என்ற ஐயப்பாடும் என்னுள் எழுந்தது.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த அறிக்கையில் நான் பரிந்துரைத்ததை என்னுடைய வட்டார மேலாளர் முழுவதுமாக வாசிக்க இயலாமற் போனது என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரோ என்னுடைய அறிக்கையைத் சரிபார்த்த அதிகாரியையே நேரில் அழைத்து விசாரித்து அறிந்து வைத்திருந்த மர்மத்தை நான் அறிந்திருக்கவில்லை.

சாதாரணமாக இத்தகைய ஆய்வறிக்கைகள் என்னுடைய அதிகாரியாலும் வட்டார மேலாளராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வட்டார மேலாளரின் குறிப்புகளுடன் மீண்டும் என்னிடமே வந்து சேரும்.

பின்னர் அந்த அறிக்கையின் நகல்கள் தயாரிக்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற குறிப்புகளுடன் மூல அறிக்கை(original) சம்பந்தப்பட்ட கிளைக்கும் அதனுடைய நகல் எங்களுடைய தலைமையலுவலகத்திற்கும் அனுப்பப்படுவதுண்டு.

ஆனால் நான் குறிப்பிட்ட ஆய்வறிக்கையோ நான் சமர்ப்பித்து ஒரு வார காலத்திற்குப் பிறகும்  உறுதிப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட கிளைக்கோ அல்லது தலைமையலுவலகத்திற்கோ அனுப்பப்படாமல் இருந்தது வியப்பையளித்தது.

இருப்பினும் அதை நேரிடையாகச் சென்று விசாரிப்பது நல்லதல்ல என்று தோன்றவே நான் அதை என்னுடைய சிந்தனைகளிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடைய இலாக்கா அலுவல்களில் என் கவனத்தை செலுத்த முயன்றேன்.

மேலும் இரண்டு நாட்கள்..

அதற்கடுத்த நாள் நான் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் என்னுடைய அதிகாரியின் முன்னர் அமர்ந்திருந்தார் நான் ஆய்வு செய்த கிளையின் மேலாளர்!

என்னைக் கண்டதும் மரியாதை நிமித்தம் ஹலோ என்றவர் என்னுடைய அதிகாரியுடனான தன்னுடைய உரையாடலைத் தொடர நான் என்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்தேன்.

என்னுடைய வட்டார மேலாளர் அலுவலகம் வந்தததும் என்னுடைய அதிகாரி கிளை மேலாளரையும் அழைத்துக்கொண்டு அவருடைய அறைக்குச் செல்ல சில நிமிடங்கள் கழித்து ஆப்பரேஷன்ஸ் சீஃப் மேலாளரும் அழைக்கப்பட்டார்.

மீண்டும் மொத்த அலுவலகமும் தங்களுடைய அலுவல்களை மறந்துவிட்டு வட்டார மேலாளருடைய அறையையே கவனிக்கத் துவங்கின.

சுமார் அரை மணி நேரம்.

வட்டார அலுவலர் என்னை அழைப்பதாக சிப்பந்தியொருவர் கூற நான் விரைந்தேன் என்ன நேர்ந்தாலும் எதிர்கொள்வது என்ற முடிவுடன்.

வட்டார மேலாளர் மட்டுமல்ல அந்த அறையிலிருந்த  இரு அதிகாரிகளின் முகத்திலும் எவ்வித உணர்ச்சியும் தென்படவில்லை. கிளை மேலாளர் ஆடிப்போயிருந்தார்.

‘ஒக்காருங்க டிபிஆர்.’ என்றார் வட்டார மேலாளர் சுருக்கமாக.

அறையிலிருந்த மற்றவர்கள் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது தெரிந்தது.

நான் மவுனமாக வட்டார மேலாளரைப் பார்த்தேன்.

‘TBR, our HO has taken a very serious view on your report. They have, therefore, decided to post you there as the next BM.’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

நான் உண்மையிலேயே அதிர்ந்துப் போனேன். நான் சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் கூட முழுவதுமாக முடிந்திராத நிலையில் இப்படியொரு சோதனையா என்று நினைத்தேன்.

நான் ஆய்வு செய்த கிளைக்கு மேலாளராக பொறுப்பேற்பதில் எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய மனைவி மற்றும் இரு குழைந்தைகளையும் என்னுடன் அழைத்துச் செல்ல இயலாத நிலையில் இருந்ததுதான் என்ன தயக்கமடையச் செய்தது.

மூத்தவளை பள்ளியில் சேர்த்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. அத்துடன் என்னுடைய இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது. மதுரையிலிருந்து மாற்றலாகி வந்த மூன்றாவது மாதமே சென்னையிலிருந்து சுமார் ஆயிரம் கி.மீக்கும் கூடுதல் தொலைவிலிருந்த ஒரு கிளைக்கு திடீர் மாற்றம் என்றால் ஒருவேளை இது எனக்கு அளிக்கப்பட்ட மற்றுமொரு தண்டனையோ என்றுகூட என் மனைவியும் என்னுடைய பெற்றோரும் கருத வாய்ப்பிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்ததால்தான் மேலாளர் பதவி பறிபோனது  என்று நினைத்துக்கொண்டிருந்த என்னுடைய மாமனார் குடும்பத்திற்கு அவர்கள் நினைத்திருந்தது தவறு என்பதை நிரூபிக்க வேண்டுமானால் இம்மாற்றம் ஏதுவாயிருந்திருக்கும்.

நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையென்ற அதிர்ச்சி என்னுடைய முகத்திலேயே காட்டிவிட்டேன் போலிருக்கிறது. என்னுடைய அதிகாரி நக்கலுடன் என்னை ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.

‘குத்தம் கண்டுபிடிக்க தெரியுதில்லே.. போய் நீயே அத சரி பண்ணு’ என்பது போல் பார்த்தார் அவர்.

‘என்ன டிபிஆர், இத எதிர்பார்க்கல இல்லே?’ என்றார் வேண்டுமென்றே. ‘இதுக்குத்தான் ஒங்க்கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன். ஒங்க ரோல் எதுன்னு தெரியாம நடந்துக்காதீங்கன்னு.’

நான் பதில் பேசாமல் என்னுடைய வட்டார மேலாளரைப் பார்த்தேன். ‘I am sorry Sir.. But I am unable to accept this transfer’ என்றேன் பணிவாக.

அவர் என்னுடைய நிலமையைப் புரிந்துக்கொண்டு ஆறுதலாக பேசுவார் என எதிர்பார்த்தேன். அவரோ நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, ‘டிபிஆர். இத நீங்க முதல்லயே யோசிச்சிருக்கணும். ஒரு இன்ஸ்பெக்ட்டிங் ஆஃபீசர் என்னத்த எழுதலாம், எத எழுதக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும். அத விட்டுட்டு..’ என கோபத்தில் மேற்கொண்டு பேச முடியாமல் அவர் தடுமாற அவருடைய கோபத்தை எதிர்பாராத நான் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தேன்.

அங்கு பணிக்கு சேர்ந்த இந்த மூன்று மாத காலத்தில் அவர் இத்தனைக் கோபத்துடன் என்னிடம்,  ஏன், எவரிடமும் பேசி நான் கண்டதில்லை.

‘நீங்க எழுதியத டைப் பண்றதுக்கு முன்னாடி ஒங்க டிபார்ட்மெண்ட் ஹெட் கிட்ட டிஸ்கஸ் செஞ்சிருக்கலாமே டிபிஆர். இந்த மாதிரி ஆஃபீஸ்ல டைப்பிஸ்ட் கிட்ட ஒரு ரிப்போர்ட் போயிருச்சின்னா அது ஒடனே பப்ளிக் டொமெய்ன்ல வந்தமாதிரிதான்னு ஒங்களுக்கு தெரியாது? நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னு எனக்கு தெரியறதுக்கு முன்னாடி நம்ம எச்.ஓவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒங்க ஆஃபீஸ்ல ஒங்களுக்கு கீழ வேலை செய்யற ஒருவர் ஒங்களுக்கு கீழருக்கற ஒரு ப்ராஞ்ச் மேனேஜர மாத்தணும்னு ரெக்கமெண்ட் பண்றார்னா அது எப்படி ஒங்களுக்கு தெரியாம போயிருச்சின்னு நம்ம சென்ட்ரல் இன்ஸ்பெக்ஷன் ஹெட் கேக்கறப்போ எனக்கு என்ன பதில் சொல்ல முடியும்? நீங்க எழுதனுது என்னோட சூப்பரவசைரி பவரையே கேள்வி கேக்கறாமாதிரி இருக்கே. அத தெரிஞ்சிதான் எழுதனீங்களான்னே எனக்கு புரியல. அதான் ஒங்களையே அங்க போஸ்ட் பண்ணச் சொல்லி ரெக்கமெண்ட் பண்ணேன்.. I am sorry TBR. You go and rectify what you have reported..’

‘I’ll think about it Sir.. I am really sorry if I had offended you. But that was not my intention.’ என்று எழுந்து வெளியேறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய தோன்றவில்லை அப்போது.

அதற்கு மேலும் என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்திருக்க  மனமில்லாமல் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பினேன்.

என்னுடைய மனைவியிடம் இதை எப்படி அறிவிக்கப் போகிறேன் என்ற கலக்கம் என் மனதைப் போட்டு அலைக்கழித்தது. இந்த எண்ணம் என்னை வாகனத்தை சரிவர செலுத்த அனுமதிக்குமோ என்ற அச்சத்தில் அதை என்னுடைய அலுவலகத்திலேயே விட்டு விட்டு பேருந்தில் பயணம் செய்தேன்.

தொடரும்..


19 comments:

tbr.joseph said...

At 6:28 PM,on 13.12.2006 dondu(#4800161) சொல்றத கேளுங்க
"அது எத்தகைய பாதிப்புகளை எனக்கு ஏற்படுத்தப் போகிறதென்பதை உணராமல்.."

ஒருவேளை உங்களையே அந்த வங்கிக்கு அடுத்த மேலாளரா போட்டு நிலையை சரி செய்ய சொன்னாங்களா, மதுரையில் நடந்தது போல?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

சார்,

ஒங்க அன்றைய பின்னூட்டத்திற்கு பதிலளிக்காமல் இருந்தது ஏன் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

sivagnanamji(#16342789) said...

i feel sorry for you(though it is a past incident)

ஆமா, நேற்று ஏன் காணோம்?

tbr.joseph said...

வாங்க ஜி!

ஆமா, நேற்று ஏன் காணோம்? //

நேற்று சூரியன்ல வரா மாதிரியான ஒரு கமிட்டி கூட்டம்.. வறுத்தெடுத்துட்டாங்க.. வீடு திரும்பவே இரவு பத்து மணியாகிவிட்டது.

நாளையும் வரும்..

dondu(#4800161) said...

நான் அதை ஊகித்ததுக்கு காரணமே மத்தியப் பொதுப்பணித் துறையிலும் அம்மாதிரியே நடந்ததுதான். நான் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கட்டிடத்தில் எனக்கு முந்தைய பொறியாளர் பல குளறுபடிகளை விட்டு போயிருந்தார். நேரே பிளானிங்க்லேருந்து சைட்டுக்கு வந்த நான் அவற்றை சமாளிக்க சற்றே திணறியபோது, சக பொறியாளர் ஒருவர் என்னை கிண்டல் செய்த வண்ணம் இருந்தார். பல சொல்யூஷன்களை சகட்டுமேனிக்கு எடுத்து விட்டார். எங்கள் ஏ.இ. தலையயும் மீறி இ.இ. யிடமும் அது பற்றி பேசினார்.

ஆகவே பேசாமல் ஏ.இ. அந்த கட்டிடத்தின் பொறுப்பை அவரிடமே தள்ளி விட்டார். இந்த இடத்தில் இன்னொன்றையும் கூறுவேன்.

உங்கள் விஷயத்தில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. அதைத்தான் நீங்கள் செய்தீர்கள். ஆனால் என் சக இஞ்சினியர் பொழுது போகாமல் தலையிட்டார். துள்ளின மாடு பொதி சுமக்கும் என்று அவர் விஷயத்தில் ஆனது.

உங்கள் விஷயமே வேறு என்பதையும் ஒப்பு கொள்கிறேன். இருப்பினும் இம்மாதிரி நடக்க வாய்ப்பு அதிகம் இருந்ததால் என்னால் ஊகிக்க முடிந்தது.

அதனால் என்ன, நீங்க அதையும் ஊதித் தள்ளிவிட்டிருப்பீர்களே, மதுரையில் செய்தது போல.

உங்களைப் போன்ற பொறுப்புணர்ச்சி மிக்க அதிகாரிகளுக்கு இம்மாதிரி பலமுறை நடந்திருக்கும் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

துள்ளின மாடு பொதி சுமக்கும்..//

இதென்னவோ உண்மைதான். துள்ளாம நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்தா நிம்மதியா இருக்கலாம். இது தெரியாமத்தான் பல சிக்கல்கள்லயும் மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன்.

இம்மாதிரி பலமுறை நடந்திருக்கும் அல்லவா?//

பின்னே? பல முறையல்ல.. பல,பல முறை:)

வினையூக்கி said...

//வாங்க ஜி!

ஆமா, நேற்று ஏன் காணோம்? //

நேற்று சூரியன்ல வரா மாதிரியான ஒரு கமிட்டி கூட்டம்.. வறுத்தெடுத்துட்டாங்க.. //

ஹிஹிஹி . :):):):):)

வினையூக்கி said...

//ஆனால் என்ன நேர்ந்தாலும் மவுனமாக இருப்பவர்கள் அப்படியல்ல. தங்களுடைய எண்ணங்களை தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்து தகுந்த சந்தர்ப்பத்தில் எடுத்து விடுபவர்கள் இவர்கள். சற்று ஆபத்தானவர்கள். இத்தகையோரிடம் கவனமுடன் பழக வேண்டும்.
//ஆமாம் சார். அதிகம் பேசுபவர்களை நம்பிவிடலாம். இவர்களை நம்புவது கடினமே.

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

ஹிஹிஹி . :):):):):) //

இடுக்கண் வருங்கால் நகுகங்கறத நல்ல புரிஞ்சி வச்சிருக்கீங்க போலருக்கு:))

tbr.joseph said...

இவர்களை நம்புவது கடினமே. //

இப்படிபட்டவங்களும் இருக்கணும்.. இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிரும்.. எல்லாருமே நல்லவங்களா இருந்தா ஒரு த்ரில்லும் இருக்காதே:)

மணியன் said...

நிறுவனத்தின் நன்மையைவிட மேலாளர்தான் முக்கியமாகிப் போனாரா ? இப்போது படித்தாலே கோபம் வரும்போது உங்களுக்கு வந்தது அதிசயமில்லை. நீங்கள் போகும்போதே உங்களுக்கு brief செய்வதை விட்டு உங்கள் மேலதிகாரிகளும் காரியம் கெட்டபின் உங்களை கடிந்திருக்கிறார்கள். சிவஞானம்ஜி போல நானும் வருந்துகிறேன்.

Krishna said...

இதே மாதிரிதான் சார், எனக்கும் நேர்ந்தது....

இங்கு, ஒரு கம்பெனியில் வேலை செய்த போது, ஒரு மிக விலை உயர்ந்த மெஷின், அவங்க எதற்காக வாங்கினார்களோ, அந்த பயனைத்தரும்படி, அதனது உள்கட்டமைப்பு இல்லை என்பதை சொன்னேன். அது என்னுடைய வேலை இல்லைதான், ஆனால் என் அனுபவத்தினால் அதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதிலேயே 9 மாதம் பணிசெய்தும், அதை மற்ற நால்வர், என்னைவிட அனுபவம் அதிகமானோர், அதை கண்டுபிடிக்காமல் இருந்தனர். முதல் கலந்தாலோசனையிலேயே நான் சொன்னதும், மிகப் பெரிய எதிர்ப்பு. ஆனால், லட்சக்கணக்கான டாலர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒரு மிகப் பெரிய விஞ்ஞானியிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர், நான் சொன்னதையே ஆமோதித்தார். மறுநாள் வந்தது வினை. என்னையே அதன் சரியான கட்டமைப்பை உருவாக்கச் சொன்னார்கள். மெஷின் இருக்கும் மிக மிக குளிர் பிரதேசத்துக்கு மாற்றலாகச் சொன்னார்கள். மொத்தத்தில், என் பணியினையே மாற்றினார்கள். சூழ்நிலை அதற்கு சரிவர இல்லாததால், வேலையையே விட வேண்டியதாகிவிட்டது...

இன்னமும் மெஷின் சரியாகவில்லை எனக் கேள்வி (2 வருடமாகிவிட்டது...)

இதிலிருந்து என்ன பாடம் படிக்க வேண்டும்...!!

tbr.joseph said...

வாங்க மணியன்,

நிறுவனத்தின் நன்மையைவிட மேலாளர்தான் முக்கியமாகிப் போனாரா ? //

நாம் செய்யும் தவறுகளின் தீவிரம் நாம் யார் என்பதைப் பொறுத்து கணிக்கப்படுவது எல்லா நிறுவனங்களிலும் உள்ளதுதானே.

அம்மேலாளர் செய்திருந்த தவற்றை நான் செய்திருந்தால் அதாவது என்னைப் போன்று மேலிடத்தின் ஆதரவு இல்லாத ஒருவர் செய்திருந்தால் அவர் நிச்சயம் மாற்றப்படுவதுமட்டுமல்ல தண்டனைக்கும் உள்ளாயிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை..

அதற்காகவேதானோ என்னவோ மேலதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருந்தார்கள் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதை போட்டு உடைத்ததுதான் நான் செய்த குற்றம்.

G.Ragavan said...

ஆகா! குத்தம் கண்டுபிடிச்சவனையே குத்தத்தைச் சரி செய்ய வெச்சுட்டாங்களா!

முந்தி நீதின்னு சிவாஜி நடிச்ச படம் ஒன்னு வந்துச்சு. அதுல சிவாஜி லாரி டிரைவர். அவரு விபத்துல ஒருத்தர் இறந்துருவாரு. அவரு குடும்பத்தக் காப்பாத்துற பொருப்பு சிவாஜிக்கு வரும். மொதல்ல வெறுப்போட போறவரு..அப்புறம் அவங்க வெறுப்பையும் மாத்தி அந்தக் குடும்பத்தோடயே ஒன்னாயிருவாரு. அது மாதிரி ஆச்சோ உங்க நெலமை?

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

இதிலிருந்து என்ன பாடம் படிக்க வேண்டும்...!!//

நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாததுபோல் இருக்க வேண்டும்.

அது முடியுமா இல்லையா என்பது அவரவர் கொள்கையைப் பொறுத்தது.

என்னைப் பொறுத்தவரை இன்றும் அப்படி இருக்க முடிவதில்லை. ஆனால் அதன் தீவிரத்தைக் குறைத்திருக்கிறேன்.

சுட்டிக்காட்டும் முறையிலும் மாறியிருக்கிறேன்.

ஏதாவது ஒரு கட்டத்தில் காம்ப்ரமைஸ் செய்யத்தானே வேண்டும்?

நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய குடும்பத்தின் நன்மையையும் கருதி..

என்ன சொல்கிறீர்கள்?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அதுல சிவாஜி லாரி டிரைவர். அவரு விபத்துல ஒருத்தர் இறந்துருவாரு. அவரு குடும்பத்தக் காப்பாத்துற பொருப்பு சிவாஜிக்கு வரும். //

இது மாதிரி மலையாளத்துல ஒரு படம் இருக்கு. மம்மூட்டி லாடி டிரைவரா ரொம்ப அருமையா, யதார்த்தமா நடிச்சிருப்பார்.

அவர் டிரைவரா இருக்கற லாரியில ஒட்டத்துல ஏற முயற்சிக்கற அவரோட க்ளீனர் இறந்துருவார். அவர் ஏற முயற்சி பண்றப்போ நம்ம வண்டிய நிறுத்தியிருக்கலாமேங்கற குத்த உணர்ச்சியில கைம்பெண்ணா நின்ன சின்ன பொண்ணுக்கு பாதுகாப்பா தன் காதலையும் துறந்துருவார்.

ஆனா இது அவங்க செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா செஞ்சதா நினைப்பாங்க.. ஆனா என் விஷயத்துல தப்பு நடந்தத எழுதுனதுதான் தப்பா போயிருச்சி..

Krishna said...

//நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய குடும்பத்தின் நன்மையையும் கருதி..

என்ன சொல்கிறீர்கள்?//

மிக மிகச் சரி.. என்ன ஒன்று. செய்த பின்னர்தான், குடும்ப ஞாபகமே வருகிறது...

tbr.joseph said...

என்ன ஒன்று. செய்த பின்னர்தான், குடும்ப ஞாபகமே வருகிறது... //

இது உங்களுக்கு மட்டுமல்ல.. நம்மில் பலருக்கும்தான்..

Sivaprakasam said...

<----
----
ஏதாவது ஒரு கட்டத்தில் காம்ப்ரமைஸ் செய்யத்தானே வேண்டும்
-->
வயது ஆக ஆக(அடி வாங்க அடி வாங்க) எல்லோரும் மாறித்தானே ஆக வேன்டும்

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

(அடி வாங்க அடி வாங்க)//

இதைத்தான் அனுபவங்கள் கூட, கூட என்கிறோமோ என்னவோ..