18 December 2006

தி.பா. தொடர் - பாகம் II - 7

ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணி புரிவதற்கும் ஒரு கிளையில் பணி புரிவதற்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

நிர்வாக அலுவலகங்களில் உள்ள அதிகாரப் படிகள் (hierarchy) ஒரு கிளையிலுள்ளதைப் போலல்லாமல் எண்ணிக்கையில் சற்று அதிகம்.

ஒவ்வொரு படியிலும் இருந்த அதிகாரிகள் அவரவருடைய நிலை (level) என்ன, அவர் ஆற்றவேண்டிய கடமைகள் (responsibility) என்ன, அவருக்கு இருக்கும் உரிமைகள் அல்லது அதிகாரம் (rights or powers) என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது முழுவதும் உணர்ந்திருக்கவில்லை.

ஆகவேதான் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த துவக்கத்தில் என்னுடைய ஆய்வறிக்கைகளில் நான் எதை எழுத வேண்டும், எதை என்னுடைய மேலதிகாரிகளுக்கு விட்டுவிட வேண்டும் என்ற விவரமில்லாமல் எனக்கு சரியென்று தோன்றியவைகளை எல்லாம் எழுதலாம் என்று நினைத்தேன்.  

மேலும் எல்லா நிறுவனங்களிலுமே பணியாற்றுபவர்களுக்கிடையில் போட்டி, பொறாமை, மேலிடத்து செல்வாக்கு இவை எல்லாம் இருப்பது சகஜம்.

நடந்திருந்த ஒரு தவற்றின் தீவிரம் அதை செய்தவர் யார் என்பதை வைத்தே கணிக்கப்படுகிறது என்பதையும் நான் துவக்கத்தில் அறியாதிருந்தது என்னுடைய அனுபவமின்மை என்றுதான் கூறவேண்டும்.

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற நியதி ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல ஒரு நிறுவனத்திலும்தான் என்பதை உணர்ந்திருப்பது மிக, மிக அவசியம்.

அத்துடன் ஆழம் தெரியாமல் காலை விடாதே என்ற பழமொழியையும் நான் மறந்ததன் விளைவுதான் எங்களுடைய வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்த சொற்ப காலத்தில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு மூல காரணம்.

அப்படித்தான் முடிந்தது நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட மெட்ரோ கிளையின் ஆய்வறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த பரிந்துரையும்.

என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து நான் ஆய்வு நடத்தச் சென்ற இரண்டாவது, அல்லது மூன்றாவது ஆய்வுதான் அது.  அதாவது என்னுடைய உடனடி அதிகாரியுடன் சமரசம் செய்துக்கொள்வதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு.

நான் சாதாரணமாக என்னுடைய அறிக்கையின் கைப்பிரதியை தட்டச்சு செய்வதற்கு முன்பு என்னுடைய இலாக்காவில் எனக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருந்த ஒரு ஜூனியர் அதிகாரியிடம் - அதாவது அதிகார வரிசையில் -  கொடுத்து சரி பார்க்க கூறுவது வழக்கம். என்னுடைய கையெழுத்தை அவர்  சிரமப்பட்டு படித்து, புரிந்துக்கொண்டு தேவைப்பட்டால் தட்டச்சு செய்பவருக்கு விளக்குவதும் அவருடைய பொறுப்பு.

என்னுடைய ய்வறிக்கையில் சம்பந்தப்பட்ட மேலாளரை உடனே மாற்ற வேண்டும் என்று நான் பரிந்துரைத்ததை வாசித்த அவர், ‘சார் இது தேவையா? அவர் யாருன்னு தெரியுமில்லே?’ என்றார். என்னைவிடவும் சுமார் மூன்று, நான்கு வயது முதியவர். ஆனால் பதவி உயர்வு வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர். நான் குறிப்பிட்டிருந்த மேலாளரைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர். நிர்வாக அலுவலக பதவியே போதும் என்ற முடிவுடன் அவ்வட்டாரா அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்கிருந்தது.

ஆனால் அவருக்கிருந்த அனுபவம் எனக்கு இல்லையென்பதுடன் அவரை விடவும் விஷய ஞானம் எனக்கு அதிகம் என்ற எண்ணமும் எனக்கிருந்தது!

‘அதப் பத்தி எனக்கென்ன சார் கவலை? எனக்கு சரின்னு தோனுனத நா எழுதியிருக்கேன்.. அத ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் நம்ம ஜோனல் மேனேஜரோட இஷ்டம்.. அது அப்படியே இருக்கட்டும்.’ என்றேன் பிடிவாதமாக.

பதிலுக்கு என்னை அவர் பார்த்த பார்வையிலேயே, ‘ஒன் தலையெழுத்து அப்படியிருந்தா என்னால என்ன செய்யமுடியும்?’ என்ற கேலி தெரிந்தும் அதை நான் கண்டுக்கொள்ளவில்லை. என்னை என்ன செய்துவிடமுடியும் இவர்களால் என்ற எண்ணம் எனக்கு!

அவர் என்னுடைய அறிக்கையை சரிபார்த்து தட்டச்சு செய்பவரிடம் கொடுக்க அவர் ‘தேமே’ என்று தட்டச்சு செய்து கொடுத்துவிட்டார். இந்த தட்டச்சு செய்பவர்களின் போக்கே இப்படித்தான். கண்கள் கைப்பிரதியிலிருந்த வார்த்தைகளை மேயும்.. விரல்கள் தட்டச்சு இயந்திர பொத்தான்களில் பாயும்.. வார்த்தையின் பொருள் தலைக்குள் ஏறினால்தானே அதிலுள்ள பிழைகளோ அல்லது வீரியமோ உறைப்பதற்கு!

தட்டச்சு செய்து திரும்பி வந்ததும் கைப்பிரதியுடன் ஒப்பிடுவது எனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளின் பொறுப்பு. அதற்குப் பிறகு நான் மீண்டும் ஒருமுறை வாசித்து சரிபார்த்துவிட்டு கையொப்பமிட்டு என்னுடைய அதிகாரியின் பார்வைக்கு அனுப்புவது வழக்கம்.

தட்டச்சு செய்து வந்த அறிக்கையை சரிபார்க்க உதவி புரிந்த மற்றொரு அதிகாரியும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அப்போதும் அதை நான் பொருட்படுத்தவில்லை.

என்னுடைய மேசைக்கு வந்த இறுதி அறிக்கையில் கையொப்பமிட்டு என்னுடைய உடனடி அதிகாரியின் பார்வைக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னுடைய மற்ற அலுவல்களில் மூழ்கிப்போனேன்.

ஏற்கனவே என்னை பெரிய நகரங்களில் இயங்கிவந்த கிளைகளுக்கு என்னை ஆய்வு செய்ய அனுப்பலாகாது என்று தர்க்கித்தவர் என்னுடயை அதிகாரி. அவர் எப்போதுமே என்னுடைய ஆய்வறிக்கையை படிப்பதற்கு முன் அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஆய்வாளருடைய பரிந்துரை என்ற தலைப்பின் கீழ் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைத்தான் முதலில் படிப்பது வழக்கம். என்னுடைய அறிக்கைகளை மட்டுமல்ல என்னுடன் ஆய்வாளர்களாக பணியாற்றியவர்களுடைய அறிக்கையையும் அப்படித்தான் என்பதை பிறகுதான் புரிந்துக்கொண்டேன்.  

என்னுடைய பரிந்துரை ஒரு ஆய்வாளருடைய அதிகார வரம்பை மீறிய செயல் என்ற முடிவுக்கு வர ஒரு நிமிடம் கூட தேவையிருக்கவில்லை அவருக்கு.

என்னுடைய பரிந்தரையை தன்னுடைய சிவப்பு மசியால் உருத்தெரியாமல் அழித்து அதற்குக் கீழே, ‘ஆய்வாளரின் அதிகாரத்திற்கு மீறிய செயல். அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்’ என்று எழுதி அடுத்த நொடியே என்னுடைய அறிக்கையை வட்டார மேலாளருடைய பார்வைக்கு அனுப்பி வைத்ததைக் கவனித்தேன்.

அறிக்கையின் மற்ற பகுதிகளில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று படித்து பார்த்துவிட்டு என்னுடைய பரிந்துரை தேவையற்றது என்று அவர் தீர்மானித்திருந்தால் கூட நான் ஒருவேளை அவருடைய செயலை ஏற்றுக்கொண்டிருப்பேன். சரி.. அப்படியே என்னுடைய பரிந்துரை தேவையற்றது என்று அவர் கருதியிருந்தாலும் அதை மாற்றி எழுதுங்கள் என்று பணித்திருந்தாலும் நாம் சம்மதித்திருப்பேன்.

ஆனால் நான் ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்று விளக்குவதற்குக் கூட எனக்கு வாய்ப்பளிக்காததுடன், அத்தகைய பரிந்துரையை செய்ய எனக்கு அதிகாரமில்லை என்ற தொனியில் அவர் எழுதியதைத்தான் என்னால் ஏற்க இயலவில்லை.

சரி.. வட்டார மேலாளர் என்னை அழைத்து விசாரிக்கட்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று வாளாவிருந்தேன். அன்றும் அதற்கடுத்த நாளும் என்னுடைய அறிக்கை அவருடைய அறையை விட்டு வெளிவரவில்லை. என்னைப் போலவே என்னுடைய அதிகாரியும் பதற்றமடைந்தார் என்பது அவருடைய நடத்தையிலிருந்தே தெர்ந்தது.

‘ஆய்வாளரின் பரிந்துரையை உருத்தெரியாமல் அழித்துவிட்டு அதற்கு அவரிடம் விளக்கம் கேட்க பரிந்துரைத்தால் என்ன அர்த்தம்?’ என்ற தொனியில் இருந்த வட்டார மேலாளருடைய  குறிப்புடன் என்னுடைய அறிக்கை அவருடைய அறையிலிருந்து மூன்றாம் நாள் வெளியில் வந்தது.

என்னுடைய அதிகாரிக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே. அதை எடுத்துக்கொண்டு வட்டார மேலாளருடைய அறைக்குள் நுழைந்தவர் அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரை வறுத்தெடுத்ததுடன் என்னையும் அறைக்குள் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று அவர் உரக்கக் கூறியதை என்னுடன் பணியாற்றிய அனைவருமே கேட்க முடிந்தது.

அடுத்த நொடியே அவருடைய அறையிலிருந்த அழைப்பு மணி வீறிட்டு அலற ஹாலில் இருந்த அனைவருமே என்னை அச்சத்துடன் பார்த்தனர். ஆனால் அவர் அழைத்தது என்னையல்ல ஆப்பரேஷன்ஸ் பிரிவுக்கு தலைவராயிருந்த மற்றொரு சீஃப் மேலாளரை!

அவரும் என்னை ஓரக்கண்ணால் பார்த்தவாறு அறைக்குள் சென்றார். அடுத்த பதினைந்து நிமிடங்கள் காரசாரமான விவாதம் நடப்பதாக அவருடைய அறைக்குள் சென்று வந்த சிப்பந்தி தெரிவிக்க அலுவலகத்தில் நடந்துக்கொண்டிருந்த சகல பணிகளும் ஸ்தம்பித்துப் போய் அனைவருடைய கண்களும் வட்டார மேலாளர் அறை வாசலையே பார்த்தன.

நான் என்னுடைய அறிக்கையில் எழுதியிருந்தவற்றில் பெரும்பாலானவை ஆப்பரேஷன்ஸ் பிரிவின் கீழ் வரும் கடன் வழங்குவதைப் பற்றியது என்பதால் அதன் தலைவரை அழைத்து கலந்தாலோசிக்கிறார் போலிருக்கிறது என்பதை உணர்ந்த நான் என்னுடைய அலுவலைக் கவனிப்பதை தொடர்ந்தேன்.

அறையிலிருந்த வெளியேறிய இரு அதிகாரிகளும் நேரே அவரவர் இருக்கைக்குச் சென்று அமர்ந்து தங்களுடைய அலுவலைத் தொடர ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மற்ற அலுவலகர்களுக்கு சப்பென்று போனது. ஸ்தம்பித்துப் போயிருந்த அலுவலகம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.

என்னுடைய அறிக்கையின் நகல் ஒன்றை ஆப்பரேஷன்ஸ் பிரிவின் அதிகாரி உன்னிப்புடன் வாசிப்பதையும் காண முடிந்தது. அவர் படித்து முடித்ததும் அவருக்குக் கீழ் பணிபுரிந்த ஒரு அதிகாரியை அழைத்து ஏதோ உத்தரவுகளைப் பிறப்பித்ததையும் கண்டேன்.

ஆக, நான் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவற்றை என்னுடைய வட்டார மேலாளர் ஏற்றுக்கொண்டார், அதனால்தான் அதன் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆப்பரேஷன்ஸ் பிரிவிற்கு ஆணையிட்டிருக்கிறர் என்று நினைத்தேன்.

நான் ஒரு லேசான புன்னகையுடன் என் அதிகாரியை ஓரக்கண்ணால் பார்த்தேன். எள்ளும் கொள்ளும் வெடித்ததை உணர முடிந்தது. ஆனாலும் அமைதியாயிருந்தார்.

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் இருக்கும் அமைதி என்பது அப்போது எனக்கு விளங்காமல் போனது.

தொடரும்..

6 comments:

sivagnanamji(#16342789) said...

'சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்
கொள்வது' என்பது இதுதானோ?

Krishna said...

ரன்வேல, மெல்ல போய்கிட்டுருந்த விமானம், டேக் ஆப் ஆயிடுச்சிப்பா...

tbr.joseph said...

வாங்க ஜி!

'சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்
கொள்வது' என்பது இதுதானோ? //

எல்லாத்துக்கும் பொருத்தமா ஒரு சொல் வச்சிருக்கீங்க!

ஏறக்குறைய அப்படித்தான்:)

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ரன்வேல, மெல்ல போய்கிட்டுருந்த விமானம், டேக் ஆப் ஆயிடுச்சிப்பா... //

க்ராஷ் லேண்ட் ஆகாம இருந்தா சரி:)

G.Ragavan said...

முருகா! என்னத்தச் சொல்றது...என்னைக்கும் நம்ம வரம்புக்குள்ள இருக்கனும். அதே நேரத்துல வரம்ப மீறுனமும்னு நெனைக்கும் பொழுது நாலும் பாத்துத்தான் செய்யனும். அதையும் மீறிச் செய்யும் போது...என்ன நடந்தாலும் ஏத்துக்கனும். வேற என்னதான் செய்றது?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

பட்டாத்தான், கைசுட்டாத்தான்னு கேள்விப்பட்டதில்லை?

அதுபோல இதையெல்லாம் அனுபவித்து தெரிந்தவன் நான்..