13 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 6

Anti Money Laundering அதாவது கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதைத் தவிர்க்கும் முகமாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நியதிகள் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த கிளையை ஆய்வு செய்தபோதும் அமுலில் இருந்தன.

அதாவது ஒரு கணக்கில், அது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், நடக்கும் வரவு, செலவுகளுக்கு வாடிக்கையாளர் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் அவருடைய கணக்கில் காசாகவோ, காசோலைகளாகவோ வரவு வைக்கப்படும் தொகைகளுக்கு மூலம் (Source) எதுவென எந்த அரசு இலாக்காவினர் எப்போது கேட்டாலும் சமர்ப்பிக்கக் கூடிய நிலையில் வாடிக்கையாளர் இருக்க வேண்டும்.

அதுபோலவே அவருடைய கணக்கிலிருந்து காசாகவோ, காசோலை வழியவோ வழங்கப்படும் தொகையைப் பெறுபவர்களுடைய விவரங்களும் அவர் கைவசம் எப்போதும் இருக்க வேண்டும்.

இந்நியதியை வாடிக்கையாளர் முழுமையாகக் கடைபிடிக்கவியலாத சூழலில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு இலாக்காவிற்கு முழு உரிமையுண்டு.

சரி.. ஆனால் அக்கணக்கிற்கு சொந்தக்காரரான வாடிக்கையாளரே கற்பனையான ஒருவர் (Fictitious person) என்றால்? அதாவது, அப்படியொரு வாடிக்கையாளரே இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டால்? அக்கணக்கில் வரவு வைக்கப்படும் முழு தொகையும் சம்பந்தப்பட்ட வங்கியின் வருமானமாக (Income) கருதப்பட்டு வருமான வரி விதிக்க சட்டத்தில் வழியிருக்கிறது.

ஆகவேதான் வங்கிகள் தங்களிடம் கணக்கு துவங்க வருபவர் உண்மையிலேயே அவர்தானா என்பதை எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமில்லாமல் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது டி.பி.ஆர்.ஜோசப் என்ற பெயருடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒருவர் அதற்குத் தேவையான அதிகாரபூர்வ வணங்களை வங்கிக்கு சமர்ப்பிப்பது அவசியமாகறது.

அதுவும் தில்லி, மும்பைப் போன்ற நகரங்களில் இது மிகவும் அவசியம் என்பதை அந்நகரங்களில் இயங்கிவரும் கிளைகளுக்கு மேலாளராக பொறுப்பேற்க செல்லும் அதிகாரிகளுக்கு அதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதில் வங்கிகள் முனைப்பாயிருக்கின்றன.

அத்தகைய நகரங்களில் மேலாளராக பணியாற்ற செல்பவர்கள் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது நாட்டின் மற்ற நகரங்களில் மேலாளராக பணியாற்றியிருக்க வேண்டியிருக்க வேண்டும் என்ற நியதியும் இருந்தது.

வணிகம் செய்வது அதன் மூலம் லாபம் ஈட்டுவது என்பதுதான் ஒரு வங்கியின் முக்கிய நோக்கம் என்றாலும் மற்ற வணிகர்களைப் போன்று லாபம் ஈட்டுவது மட்டுமே ஒரு வங்கியின் நோக்கமாக இருப்பதில்லை.

எத்தகைய வணிகத்தை, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் லாபம் கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் ஒரு வங்கிக் கிளையை நடத்திச் செல்ல நினைக்கும் மேலாளர்கள் காலப்போக்கில் வழிதவறிச் சென்று சம்பந்தப்பட்ட வங்கி மேலிடத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் கைது செய்யப்பட்டதும் உண்டு.

அப்படிப்பட்ட சூழலில்தான் நான் குறிப்பிட்ட கிளையின் மேலாளரும் இருந்தார். ஆனால் அதை அவர் தெரிந்தே செய்திருக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

Ignorance of Law is not an excuse என்பார்கள். ஒரு பாமரனுக்கே இது பொருந்துமென்றால் ஒரு வங்கியின் கிளை மேலாளரைப் பற்றி கேட்க வேண்டுமா?

சரி.. இது கிளையின் சேமிப்பு கணக்குகளில் நான் கண்டுணர்ந்த தவறுகள்.

கிளை வழங்கியிருந்த கடன்களிலும் இதே குழப்பங்கள் இருந்தன.

கிளை மேலாளருக்கு மேலிடத்திலிருந்த செல்வாக்கு அவரை தன்னுடயை அதிகாரத்திற்கு மீறிய செயலில் ஈடுபடவைத்திருந்தது.

அதாவது, நான் மேலே குறிப்பிட்டிருந்ததைப் போன்று வணிகத்தை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம், இலக்கையடைந்தால் போதும் என்பதுதான் அவருடைய நோக்கமாயிருந்ததை என்னால் உணர முடிந்தது.

நான் நடத்த வேண்டிய ஆய்வை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் என்னால் கிளையிலிருந்த கணக்குகள் முழுவதையும் ஆராய இயலவில்லை. இப்போதுள்ளதுபோல் கணினி வசதிகள் இல்லாத காலம் அது. கிளையிலிருந்த கணக்கு புத்தகங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழல்.

எதை, எப்படி பார்க்க வேண்டுமென்று தெரிந்திருந்தால் மட்டுமே நமக்குக் குறித்துள்ள நாட்களுக்குள் ஆய்வு செய்து முடிக்க முடியும். அதுவும் திரும்பிச் செல்ல வேண்டிய பயணத்திற்கான பயணச் சீட்டையும் முன்கூட்டியே பதிவு செய்துவிட்ட செல்வது வழக்கமென்பதால் ஆய்வு காலத்தை சட்டென்று நீட்டிப்பதும் இயலாத காரியம். அதுவும் பெருநகரங்களில் இதைப் பற்றி நினைப்பதே விவேகமற்ற செயல்.

இருந்தும், நான் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆய்வு செய்த கடன் கணக்குகள் பெரும்பான்மையானவற்றில் கிளையின் மொத்த வணிகத்தின் அளவை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்ற அபிரிதமான ஆர்வம் மட்டுமே தெரிந்தது.

விஷய ஞானம் உள்ளவர்களும் கூட இலக்கை எட்ட வேண்டுமே என்ற அபிரிதமான ஆர்வத்தால் (Over enthusiasm) சில சமயங்களில் தங்களிடம் கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களின் பூர்வீகம், அவர்கள் துவங்கவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் வணிகம்/தொழிலின் தன்மை, கடனைத் திருப்பிச் செலுத்த அவர்களுக்குள்ள திறன் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்யாமல் விட்டுவிட்டு பிறகு திணறுவதைக் கண்டிருக்கிறேன்.

நான் குறிப்பிட்ட மேலாளருக்கு விஷய ஞானமும் குறைவு என்பதை அவர் சேமிப்புக் கணக்குகளை துவக்க அனுமதித்ததிலிருந்தே உணர்ந்திருந்த நான் அவர் வழங்கியிருந்த கடன்களை ஆய்வு செய்வதில் என்னுடைய முழுக் கவனத்தையும் திருப்பினேன்.

சாதாரணமாக கடன் தேவைப்படுவோர் கோரும் கடனை முழுமையாக வழங்காமலிருப்பது எல்லா வங்கி மேலாளர்களின் பிறவிக் குணம். வாடிக்கையாளர் ஒரு லட்சம் கேட்டால் ‘எழுபத்தையாயிரம் தரேன்.. இத வச்சி சமாளிங்க.. ஒரு ஆறு மாசம் போட்டும்.. ஒங்க பிசினச பார்த்துட்டு மேக்கொண்டு தரேன்’ என்பார்கள். நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன்.

அதிலுள்ள பிரச்சினையை பல மேலாளர்களும் உணர்வதில்லை. வாடிக்கையாளர் இந்த அளவு கடனாவது கிடைத்ததே என்று ஒப்புக்கொண்டு தன்னுடைய வணிகத்தை/தொழிலைத் துவக்குவார். ஆனால் நாளடைவில் வங்கியளித்த கடன் போறாமல் வெளியிலிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.

அவர் நடத்தும் வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில் பெரும் பங்கு இத்தகைய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிக்கே போய்விடும். வங்கியிலிருந்து பெற்ற கடன் வட்டியும் அசலும் அப்படியே நின்றுவிடும். அது சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் வழங்கிய கடனாக இருக்கும் பட்சத்தில் தான் ஏற்கனவே வழங்கியிருந்த கடனை வசூலிக்க மேலும் கூடுதல் கடன் வழங்க முன்வருவார். மாறாக, இடைபட்ட நேரத்தில் அவர் மாற்றலாகிச் சென்றிருக்கும் பட்சத்தில் அவரையடுத்து வருகின்ற மேலாளர்களில் பலரும் தனக்கு முன்னாலிருந்த மேலாளர் அளித்த கடனை வசூலிப்பதற்காக மேலும் கடனளிக்க முன்வருவதில்லை.

என்னால் மட்டுமே ஒரு வாடிக்கையாளரைச் சரியாக கணிக்க முயலும் என்பதுபோன்ற எண்ணம் பல மேலாளர்களுக்கும் இருப்பதும் தன்னுடைய சக மேலாளர்கள் மீது இருந்த நம்பிக்கையற்ற தனமுமே இத்தகைய போக்கிற்குக் காரணம் என்றால் மிகையாகாது.

இது ஒருபுறமிருக்க, ஒரு வாடிக்கையாளருக்கு அவருடைய அத்தியாவசிய தேவைக்கும் அதிகமாக கடன் வழங்குவது முந்தைய முறையை விடவும் அதிக ஆபத்தானது.

ஏன்?

தேவைக்குக் குறைவாக கடன் பெறும் வாடிக்கையாளர் தன்னுடைய தேவையை ஈடுகட்ட தன்னுடைய முதலைக் கூட்டுவதும் உண்டு. அது இயலாத பட்சத்தில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடமிருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெறுவதும் உண்டு. இதனால் வங்கிக்கு பெரிதாக நஷ்டம் ஏற்படுவதில்லை. ஒருவேளை அவர்களுடைய கடனை திருப்பிச் செலுத்த வாடிக்கையாளருக்கு கூடுதல் காலம் அளிக்கவேண்டிவரலாம்.

ஆனால் தேவைக்கு மீறிய கடன் பெறும் வாடிக்கையாளர்களில் பலரும் அந்த உபரித் தொகையைத் தங்களுடைய வர்த்தகம்/தொழிலேயே முதலீடு செய்யாமல் அதற்கு முற்றிலும் பந்தமில்லாத தொழில்/வர்த்தகங்களில் மூதலீடு செய்வதைப் பார்த்திருக்கிறேன். அத்தகைய diversion பெரும்பாலும் நஷ்டத்திலேயே முடிவதையும் பார்த்திருக்கிறேன்.

இழந்த தொகையை திருப்பியெடுக்க தங்களுடைய முதன்மை வர்த்தகத்திலிருந்து (Primary business) மேலும், மேலும் முதலீட்டை divert செய்து அந்த வர்த்தகத்தையும் இழந்து நிற்கும் வாடிக்கையாளர்கள்தான் அதிகம்.

ஒரு வாடிக்கையாளருடைய பொருளாதார, நிர்வாக திறமை, அவர் நடத்தவிருக்கும் வணிகம் அல்லது தொழிலின் எதிர்காலம் ஆகியவற்றை சரிவர கணித்து அவருக்கு தேவையான கடனை குறித்த நேரத்தில் வழங்குவதற்கு ஒரு கிளை மேலாளருக்கு நல்ல எண்ணம்கொண்ட மனது மட்டுமே போதாது.

அதற்கு விஷய ஞானமும் நீண்ட கால அனுபவமும் தேவை. நான் குறிப்பிட்ட மேலாளருடைய குறைந்த விஷய ஞானமும், அரைகுறை அனுபவமும் இத்தகைய கடன்களை சற்று அளவுக்கு மீறியே வழங்க வைத்திருந்தது.

இதே நிலையில் அவர் தொடர்ந்து வணிகத்தைச் செய்து வருவாரேயானால் வங்கியின் நிதிநிலமை சீர்கெடுவதுடன் வங்கியின் நற்பெயரும் கெட வாய்ப்புள்ளதெனவும் ஆகவே நிலைமையை சீர்செய்ய அவரை உடனே அக்கிளையிலிருந்து மாற்றி வேறொரு விஷய ஞானமும், அனுபவமுமுள்ள ஒரு மேலாளரை நியமிக்க வேண்டும் என்று என்னுடைய ஆய்வறிக்கையில் பரிந்துரைத்தேன்..

அது எத்தகைய பாதிப்புகளை எனக்கு ஏற்படுத்தப் போகிறதென்பதை உணராமல்..

தொடரும்..

7 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆய்வு செய்யப் போகும் அலுவலர், இருப்பு நிலையைப் பற்றி கூறி, தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டும். அந்த தவறுகளை எங்ஙனம் சரி செய்ய வேண்டும் என ஆலோசனை தர வேண்டுமா? மேலும் வேறு மேலாளரைக் கொண்டு வர வேண்டும் போன்ற பரிந்துரைகளைச் செய்ய வேண்டுமா?

tbr.joseph said...

வாங்க கொத்தனார்,

உங்களுடைய கேள்விகள் உண்மையிலேயே மிகவும் பொருத்தமான கேள்விகள்.

அவற்றிற்கு பதில்களை என்னுடைய அடுத்த பதிவில் எழுதி வைத்திருக்கிறேன்.

இதில் என்னுடைய பங்கு (roll) என்பதை நான் அப்போது அறிந்திராததால்தான் சில எதிர் விளைவுகளை நான் சந்திக்க வேண்டியிருந்தது.

அடுத்த பதிவில் விரிவாகக் கூறுகிறேன்.

G.Ragavan said...

என்னங்க இது...நீங்க எது செஞ்சாலும் வில்லங்கமா முடியுது. என்னதான் நடந்துச்சு?

கருப்பசாமியை வெள்ளையப்பனா மாத்த பலவழிகள் இருக்குதாம். சென்னையில அடையாறுல ஒரு ஓட்டல் இருக்குது. அங்க எனக்குத் தெரிஞ்சி யாரும் உள்ள நொழஞ்சு கூடப் பாத்ததில்லை. ஆனா ரொம்ப வருசமா ஓடிக்கிட்டிருக்குது. அது எப்படி ஓடுதுன்னு பேசிக்கிட்டிருக்கிறப்போதான் கருப்பசாமியை வெள்ளையப்பனா மாத்துற பாக்டரி அதுன்னு சொன்னாங்க.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

என்னங்க இது...நீங்க எது செஞ்சாலும் வில்லங்கமா முடியுது//

நம்ம எடம் எது, பவர் எதுன்னு தெரியாம மோதுன்னா நம்ம தலை தான ஒடையும்? இதுக்கு முக்காவாசி காரணம் வயசும், அனுபவமின்மையுந்தான்.. நாம யாருன்னு முழுசா தெரிஞ்சப்போ வயசு 45 ஆச்சி. அதுக்கப்புறம் பெரிசா எந்த சிக்கல்லயும் மாட்டிக்கல.

அது எப்படி ஓடுதுன்னு பேசிக்கிட்டிருக்கிறப்போதான் கருப்பசாமியை வெள்ளையப்பனா மாத்துற பாக்டரி அதுன்னு சொன்னாங்க.//

அப்படியா அது என்ன ஓட்டல்ங்க? ஒரு சின்ன க்ளூ குடுங்க:)

Krishna said...

//Ignorance of Law is not an excuse என்பார்கள்.//

மிக முக்கியமாய் உணர வேண்டிய வாக்கியம் இது.

எண்பதுகளில் ஒரு முறை, மின்சார ரயிலில் ஏறி, கையிலிருந்த புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன். பரிசோதகர் பயணச்சீட்டைக் கேட்டபோதும், அலட்சியமாக கையிலிருந்த சீட்டைக் கொடுத்து விட்டு, வாசிப்பை தொடரலானேன். அவர் என்னைத் தன்னுடன் வரச் சொன்னார். என்னவென்று பார்த்தால், நான் அமர்ந்திருந்த்தது முதல் வகுப்பாம். அப்போழுதெல்லாம், பெரிதாய் எந்த வித்தியாசமிருக்காது, சிறு வண்ண மாற்றத்தைத் தவிர. அது முதல் வகுப்பென்று தெரியாதென்றபோது, அவர் உதிர்த்த வாக்கியமும் அதுதான்...அபராதம் வசூலித்துவிட்டார்..

எனக்கும் அந்த ஓட்டல் தெரியுமே...இல்ல, இது வேற ஓட்டலா..ராகவன் என்ன க்ளூ தர்றார் பார்ப்போம்

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அது முதல் வகுப்பென்று தெரியாதென்றபோது, அவர் உதிர்த்த வாக்கியமும் அதுதான்...அபராதம் வசூலித்துவிட்டார்..//

அதான பார்த்தேன். இதுலல்லாம் நம்ம அதிகாரிங்க ஜரூரா இருப்பாங்க:)


எனக்கும் அந்த ஓட்டல் தெரியுமே...இல்ல, இது வேற ஓட்டலா.//

இதுலயே குழப்பமா?

dondu(#4800161) said...

"அது எத்தகைய பாதிப்புகளை எனக்கு ஏற்படுத்தப் போகிறதென்பதை உணராமல்.."

ஒருவேளை உங்களையே அந்த வங்கிக்கு அடுத்த மேலாளரா போட்டு நிலையை சரி செய்ய சொன்னாங்களா, மதுரையில் நடந்தது போல?

அன்புடன்,
டோண்டு ராகவன்