11 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 4

ஆகவே அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை எனவும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து அவர் குறிப்பிட்டிருந்ததுபோல் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும் நான் ஒரு தனி அறிக்கையைத் தயார் செய்து வட்டார மேலாளருக்கு நேரடியாக சமர்ப்பித்தேன்.

இது நான் செய்த பெரிய தவறு.

வயது கோளாறும் ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவமின்மையும்தான் இதற்குக் காரணம் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு கிளையில் ஒரேயொரு தலைவர்தான் இருப்பார். ஆகவே அக்கிளையைப் பொறுத்தவரை அவர் வைத்ததுதான் சட்டம். இதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

சாதாரணமாகவே ஒரு கிளையின் மேலாளருக்கும் அவருக்கு கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகளுக்கும் இடையில் சற்று அதிக வயது வித்தியாசம் இருந்ததுண்டு. ஆகவே கிளை மேலாளரை எதிர்த்து பேசுவதோ நடப்பதோ அப்போது குறைவாகவே இருந்தது.

இப்போது அதுவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் வயதும் அனுபவமும் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை.

ஆனால் ஒரு நிர்வாக அலுவலகத்தில் தலைவராக இருக்கும் வட்டார மேலாளருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றும் துணை வட்டார மேலாளர்களுக்கும் (சீஃப் மேலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு) மிகக் குறைந்த வயது வேறுபாடே இருந்தது.

அத்துடன் துணை வட்டார மேலாளர்களுடைய உதவியில்லாமல் அலுவலகத்தை நடத்திச் செல்வதென்பது ஒரு வட்டார மேலாளராக்கு, எத்தனை திறமையும், அறிவும் இருந்தாலும், சாத்தியமில்லை. இந்த கணினி யுகத்திலும் அதே நிலைதான். சொல்லப்போனால் இப்போதெல்லாம் கணினியை இயக்குபவர் துணையில்லாமல் கூட இத்தகைய அலுவலகங்களை திறம்பட நிர்வகிக்க இயலாது என்ற சூழல்.

என்னதான் என் தரப்பில் நியாயம் இருந்தாலும் அதே அலுவலகத்தில் எனக்கு உடனடி அதிகாரியாக இருந்தவருடைய கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை எழுத்து மூலமாக என்னுடைய வட்டார மேலாளருக்கு தெரிவித்தது தவறு என்று அவரே உணர்ந்து என்னுடைய அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று அதிலேயே எழுதி எனக்கு திருப்பியனுப்பி விட்டார்.

சாதாரணமாக இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன் என்போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அறிவிக்கும் அவர் இந்த விஷயத்தில் எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல் என்னுடைய அறிக்கையை திருப்பியனுப்பியது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் அவருடைய அத்தகைய முடிவுக்குப் பின்னால் என்னுடைய அதிகாரியிருந்தார் என்பதைப் பிறகுதான் தெரிந்துக்கொண்டேன்.

என்னுடைய அறிக்கை திரும்பி வந்ததும் மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்த நேரத்தில் என்னை வட்டார மேலாளர் அழைப்பதாக சிப்பந்தியொருவர் தெரிவிக்க நான் அந்த அறிக்கையைக் கையில் எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்கு விரைந்தேன்.

‘வாங்க டிபிஆர்.’ என்று என்னை அழைத்து அமரச் செய்து அடுத்த பத்து நிமிடங்கள் அவ்வலுவலகத்தில் என்னுடைய அங்கம் என்ன, அதற்கு பங்கம் வராமல் நான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை அளித்துவிட்டு இறுதியில், ‘எனக்கு இந்த ஆஃபீச சுமுகமா, பிரச்சினையில்லாம நடத்திக்கிட்டு போகணும்னு ஆசை. அதுமட்டுமில்லாம நம்ம பிரச்சினைய விட நமக்குக் கீழ ஃபங்க்ஷன் செஞ்சிட்டிருக்கிற பிராஞ்ச்சுகளுடைய பிரச்சினைதான் முக்கியம். நாமளே நமக்குள்ள இப்படி பிரச்சினைய ஏற்படுத்திக்கிட்டிருந்தா நம்மால அவங்க பிரச்சினைய தீர்த்துவைக்க முடியாது. அதுமட்டுமில்லாம ஒங்களுக்கு அவரெ விட நாலெட்ஜ் அதிகமா, இல்ல, அவருக்கு ஒங்களவிட அதிகமான்னு எல்லாம் எடை போடறதுக்கு இது நேரமில்ல . அதுக்கு எனக்கு நேரமுமில்ல டிபிஆர். If you feel that you can’t adjust with him anymore.. I will change your department.. என்ன சொல்றீங்க?’ என்றார்.

நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்து முழுதாக மூன்று மாதங்கள் கூட நிறைவுற்றிருக்கவில்லை. அதற்குள், காரணம் எதுவாக இருந்தாலும், இலாக்கா மாற்றம் என்றால் நிச்சயம் இந்த விஷயம் என்னுடைய தலைமையகத்துக்கு எட்ட வாய்ப்பிருக்கிறது. ஆகவே இவர் கூறுவதுபோல் விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் அடங்கிப் போவதுதான் புத்திசாலித்தனம் என்று நினைத்தேன் நான்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஒருவரையே மதிக்காமல் தண்டிக்கப்பட்டவன் என்ற முத்திரை வேறு இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக என்னுடைய உயர் அதிகாரிகளுள் ஒருவரையும் மதிக்கவில்லை என்ற அவப்பெயரும் எனக்கு ஏற்பட்டால் அது என்னுடைய எதிர்கால அலுவலக வாழ்க்கையை பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்.

‘தாங்ஸ் சார்.. I’ll think about what you said.. But I don’t think I should opt for this change..’ என்று கூறிவிட்டு என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

நான் வட்டார மேலாளர் அறைக்குச் சென்றதையும் நான் எடுத்துச் சென்ற அறிக்கையுடன் என்னுடைய இருக்கைக்கு திரும்பியதையும் நக்கலுடன் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய அதிகாரியின் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவர் விரும்பியபடியே நான் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் மாற்றங்கள் செய்தேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் முற்றிலும் எதிர்பாராத வார்த்தைகளைப் பிரயோகித்து நான் ஆய்வு நடத்திய மேலாளருடைய விளக்கத்தைக் கேட்டு ஒரு கடிதத்தையும் தயாரித்து திருத்தப்பட்ட ஆய்வறிக்கையுடன் அவருடைய பார்வைக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னுடைய மற்ற அலுவல்களைக் கவனிக்க துவங்கினேன்.

அவர் என்ன நினைத்தாரோ என்னுடன் மீண்டும் கலந்தாலோசிக்காமல் அவரே என்னுடைய கடிதத்தில் நான் பிரயோகித்திருந்த கடினமான வார்த்தைகளை மாற்றி அதன் வீரியத்தைச் சற்றே குறைத்து ‘please prepare a fresh draft’ என்று எழுதி திருப்பியனுப்ப நான் மறுபேச்சு பேசாமல் தட்டச்சு செய்தவரிடம் கொடுத்துவிட்டு அதை அத்துடன் மறந்துபோனேன்.

ஆனால் நான் அந்த கசப்பான அனுபவத்தை அத்துடன் விட நினைத்தாலும் என்னுடன் பணியாற்றிய சக அதிகாரிகள் என்னை விடுவதாய் இல்லை. ‘என்ன டிபிஆர் இவ்வளவு சீக்கிரமா சரண்டராயிட்டீங்க? ஒங்க பேர்ல எந்த தப்பும் இல்லாம எதுக்கு பணிஞ்சி போறீங்க?’ என்று நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இத்தகையோரை எல்லா அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். தங்களால் இயலாதவற்றை மற்றவர்களைத் தூண்டிவிட்டு நிறைவேற்றிக்கொள்ள பார்ப்பவர்கள் இவர்கள். உன்னுடைய எதிரிக்கு எதிரி என் நண்பன் என்பதுபோல்தான்.

என்னுடைய அதிகாரியை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். அவர்களுக்கு அவரை எதிர்த்து நிற்க துணிவில்லை. ஆனால் நான் நிற்க வேண்டும். ஒருவேளை அந்த போராட்டத்தில் நான் வெற்றிபெற்று அவருக்கு அங்கிருந்து மாற்றம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுடைய பிரச்சினையும் தீர்ந்துவிடுமே என்ற நப்பாசைதான்.

ஆனால் என்னுடைய அலுவலகத்தில் ஆப்பரேஷன்ஸ் பிரிவின் தலவைராக இருந்தவர் அந்நேரத்தில் எனக்கு தகுந்த ஆலோசனைய¨ அளித்தார்.

‘டிபிஆர். ஒங்க பிரச்சினை என்னன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. நடுநிலையில்லாத, வெறும் வீம்புக்கு பிடிவாதம் பிடிக்கற ஒரு அதிகாரிகிட்ட ஒர்க் பண்ண வேண்டி வந்துருச்சேங்கற ஒங்க ஆதங்கம் நியாயமானதா இருக்கலாம். ஆனா அவர் ஒங்களவிட பத்து, பதினஞ்சு வருசம் சீனியர். அனுபவமும் ஒங்களவிட ஜாஸ்தி. அவர் மேல நம்ம ஜோனல் மேனேஜருக்கு மதிப்பு இருக்கா, இல்லையாங்கறது வேற விஷயம். ஆனா எந்த ஒரு சந்தர்ப்பத்துலயும் அவரெ விரோதிச்சிக்கிட்டு ஒங்கள சப்போர்ட் பண்ண மாட்டார். அத நீங்க எதிர்பாக்கறதும் சரியில்லை. சார் சொன்னா மாதிரியே நீங்க வேணும்னா டிப்பார்ட்மெண்ட்ட மாத்திக்கலாம்.. ஆனா அது மட்டுமே ஒங்க ப்ராப்ளத்த சால்வ் பண்ணிறாது. எப்படியும் நாம எல்லாம் ஒரே ஆஃபீஸ்லதான் இருக்கப் போறோம். அதனால நீங்க அவர முடிஞ்ச வரைக்கும் அட்ஜஸ்ட பண்ணிக்கறதுதான் நல்லது. அவர் நல்ல மூட்லருக்கறப்ப நானும் ஒங்களப்பத்தி சொல்றேன். கவலைப்படாதீங்க.’ என்று ஆறுதலாகப் அறிவுறுத்தி அவர் கூறியதுபோலவே என்னுடைய அதிகாரியிடம் பரிந்துரைக்க எங்கள் இருவர் மத்தியிலும் இருந்த கருத்து வேறுபாடு குறைந்து அடுத்த சில மாதங்களில் இல்லாமலே போனது என்றுதான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் நான் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் நாளடைவில் அது சற்றுக் குறைத்துக்கொண்டதை என்னால் உணர முடிந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் எந்த கிளைக்கு ஆய்வுக்குச் சென்றாலும் என்னுடைய அறிக்கையை தட்டச்சு செய்வதற்கு முன்னதாகவே அதனுடைய கைப்பிரதியை அவருடைய பார்வைக்கு அனுப்புவதை வழக்கமாக்கிக்கொள்ள அதை முற்றிலும் எதிர்பாராத அவர் நான் எழுதியதில் எந்தவித மாற்றமும் செய்யாமல் திருப்பியனுப்ப ஆரம்பித்தார்.

நான் அந்த அலுவலகத்தில் இருந்தது மொத்தம் பதினோரு மாதங்கள்தான். அதில் ஆறுமாத காலம் டெவலெப்மெண்ட் பிரிவில் பணியாற்றிவிட்டு நான் குறிப்பிட்ட என்னுடைய அதிகாரி மாற்றலாகிச் சென்றதும் மீதி மாதங்கள் ஆப்பரேஷன்ஸ் பிரிவில் பணியாற்றினேன்.

நான் ஆய்வு இலாக்காவில் இருந்த ஆறு மாதகாலத்தில் குறைந்தது இருபது, இருபத்தைந்து கிளைகளுக்கு ஆய்வு நடத்த சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நான் கிளை மேலாளராக இருந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைவிடவும் சுவாரஸ்யமாக இருந்ததுடன் அதற்குப் பிறகு மீண்டும் கிளை மேலாளராக அமர்த்தப்பட்டபோது மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

தொடரும்..

10 comments:

sivagnanamji(#16342789) said...

//எல்லா அலுவலகங்கிலும்....உசுப்பி
விடுவார்கள்....அவர்கள் பிரச்சினை
தீர்ந்தது...//

ஒருவேளை நாம் தோல்வியுற்றால் இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
எனக்கு அந்த அனுபவம் இருக்கு!

Krishna said...

//இத்தகையோரை எல்லா அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். தங்களால் இயலாதவற்றை மற்றவர்களைத் தூண்டிவிட்டு நிறைவேற்றிக்கொள்ள பார்ப்பவர்கள் இவர்கள்.//

மிக முக்கியமானவர்களைப் பற்றி சொல்லியுள்ள நல்ல பதிவு இது. இம்மாதிரி ஆட்களை முழுதும் புறக்கணிக்காவிட்டால்,நம் மன அமைதியையே கெடுத்து, தூண்டுதலால், ஆத்திரப்பட்டு நடக்க வைத்து, நாசம் செய்துவிடுவார்கள், இல்லையா சார்?

இவர்களை உதாசீனப்படுத்தி மேலே ஆக வேண்டியதைப் பார்த்தது, உங்கள் பக்குவத்தை எடுத்துக்காட்டியது.

dondu(#4800161) said...

"இத்தகையோரை எல்லா அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். தங்களால் இயலாதவற்றை மற்றவர்களைத் தூண்டிவிட்டு நிறைவேற்றிக்கொள்ள பார்ப்பவர்கள் இவர்கள்."

அவர்களுக்கென்ன, கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பிறகு அவர்களே மேலதிகாரியுடன் சேர்ந்து கொண்டு உங்களுக்கு மாலை போட்டு, மஞ்சள் தண்ணீர் தெளித்து வெட்டுப் பாறைக்கு அனுப்பிவைப்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ஜி!

ஒருவேளை நாம் தோல்வியுற்றால் இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
எனக்கு அந்த அனுபவம் இருக்கு! /

எனக்கும் இருக்கு:)

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

இம்மாதிரி ஆட்களை முழுதும் புறக்கணிக்காவிட்டால்,நம் மன அமைதியையே கெடுத்து, தூண்டுதலால், ஆத்திரப்பட்டு நடக்க வைத்து, நாசம் செய்துவிடுவார்கள், இல்லையா சார்?//

உண்மைதான். இத்தகையோர் கைகளில் விழுந்துவிடாமல் இருப்பது நம்முடைய புத்திசாலித்தனம்.

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

அவர்களுக்கென்ன, கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பிறகு அவர்களே மேலதிகாரியுடன் சேர்ந்து கொண்டு உங்களுக்கு மாலை போட்டு, மஞ்சள் தண்ணீர் தெளித்து வெட்டுப் பாறைக்கு அனுப்பிவைப்பார்கள்.//

அனுபவித்திருப்பீர்கள் போலிருக்கிறது. நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் இதை குறிப்பிட்டு எழுதவேண்டுமென்று நினைத்தேன். நாம் அனுபவித்த வேதனைகளிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்ற உதவும் அல்லவா?

மணியன் said...

இந்த சூழல் அரசு அலுவகங்களில் உண்டு. நானும் அனுபவித்திருக்கிறேன்:)
இப்போது தனியார்துறையில் flattened hierarchyஇல் இல்லை. இங்கு வேண்டாத ratraceதான் பிரச்சினை.

G.Ragavan said...

நம்முடைய பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்வதுதான் சரி என்று தோன்றுகிறது. சாட்சிக்காரன் காலில் விழுறத விட சண்டைக்காரன் காலில் விழுறது மேல்ங்குறது இதுதான்னு நெனைக்கிறேன். எப்படியோ...ஒங்க பிரச்சனை ஓஞ்சது நல்லதுதான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நம்முடைய பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்வதுதான் சரி என்று தோன்றுகிறது//

உண்மைதான். மிக அதிக அளவிலான நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியில் நிலவும் சங்கடமான உறவின் பின்புலத்தை ஆராய்ந்தால் இது புலப்படும். ஆகவே எனக்கு துவக்க முதலே இந்த தொழிற்சங்கங்களில் எந்தவித ஈடுபாடும் இருந்ததில்லை. அவர்கள் தீர்த்துவைக்கும் பிரச்சினைகளை விட உண்டாக்கும் பிரச்சினைகளே அதிகம்!

tbr.joseph said...

வாங்க மணியன்,

இப்போது தனியார்துறையில் flattened hierarchyஇல் இல்லை. இங்கு வேண்டாத ratraceதான் பிரச்சினை.//

இதை Peer Pressure என்போம். மேலதிகாரிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை விட இது அதிகமாகவே இருக்கும். இன்றையை I.T. உலகத்தில் நாம் காணும் பல பிரச்சினைகளுக்கு இதுவே காரணம் என்றாலும் மிகையாகாது.