06 December 2006

தி.பா.தொடர்:பாகம் II - 3

ஏற்கனவே வங்கி மேலாளராக இருந்த அனுபவம் வங்கியின் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றுகையில் உபயோகமாக இருக்கலாம். ஆனால் ஒரு கிளையை ஆய்வு செய்யும் நேரத்தில் அத்தகைய அனுபவம் ஒரு இடைஞ்சல் (hindrance அல்லது  Liability) என்றுதான் கூறவேண்டும்.

ஒரு மேலாளராக கிளையின் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சில சமயங்களில் வங்கியின் நியதிகளை இங்குமங்கும் மீற வேண்டியிருக்கும். அது இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியாது என்பது என்னைப் போன்ற மேலாளர்களுக்கு தெரியும். ஏன், நானும் தேவைப்படும் சமயங்களில் பல நியதிகளை மீறியிருக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் அந்த மீறல்களால் வங்கிக்கு எந்த இழப்பும் ஏற்பட்டதில்லை.

ஆகவே நான் ஆய்வு செய்யும் கிளைகளில் நடந்துள்ள சில தவறுகள் அல்லது விதி மீறல்கள் என்னுடைய பார்வையில் அத்தனை தீவிரமானதாக தோன்றாது.  என்னுடைய கணிப்பில்  வங்கிக்கு எந்த இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றால் சம்பந்தப்பட்ட மேலாளர் மற்றும் கிளை அதிகாரிகளுடன் அமர்ந்து அவற்றைப் பற்றி விசாரித்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிக்கை செய்வதுடன் விட்டுவிடுவேன்.

ஆனால் சில நேரங்களில் அத்தகைய விதிமீறல்கள் தீவிரமானதல்ல, அவற்றால் வங்கிக்கு பாதிப்பு ஏற்படாது என்று நினைத்து அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டிருந்த சில குறைபாடுகள், விதி மீறல்களால் வழங்கப்பட்டிருந்த கடன்கள் வாராக் கடன்களாகிப்போன சூழலில் எனக்கு வினையாக முடிந்ததும் உண்டு.

நான் மும்பை மற்றும் சென்னை கிளைகளில் அதிகாரியாகவும், சென்னை மதுரை போன்ற நகரங்களில் சற்று வர்த்தகம் அதிகமிருந்த கிளைகளில் மேலாளராக பணியாற்றியிருந்ததால் என்னுடைய உடனடி அதிகாரிக்கு அவ்வளவாக விருப்பமில்லையென்றாலும் என்னுடைய வட்டார மேலாளர் மும்பை, தில்லி, கொல்கொத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னைக் கிளைகளில்ஆய்வும் நடத்தும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்.

ஆனால் நான் மேலாளராக இருந்த கிளைகளில் ஏதோ செய்யக் கூடாததையெல்லாம் செய்துவிட்டுத்தான் வட்டார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தேன் என்ற நினைப்பில் எனக்கு பெரிய கிளைகளை ஒப்படைத்தால் அவற்றில் நடக்கும் தில்லுமுல்லுகளை, ஒழுங்கீனங்களை நான் கண்டும் காணாதவாறு இருந்துவிடுவேன் என்பது என்னுடைய உடனடி அதிகாரியின் எண்ணம்.

ஆகவே நான் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கைகளை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது, ‘டிபிஆர். நீங்க ரொம்ப லிபரலா இருக்கீங்க. நீங்க மேலாளர் கோணத்துலருந்து பார்த்தா சரிவராது. எல்லா குறைபாடுகளுக்கும் யாராவது ஒருத்தர நிச்சயம் ரெஸ்பான்பிள் ஆக்கணும். அதுதான் நம்ம வேலை. இல்லன்னா நாம நம்ம டூட்டிய சரியா செய்யலேன்னு எச்.ஓவுல நினைப்பாங்க. அப்படி இப்படின்னு சந்தேகமா இருந்தாக்கூட பரவாயில்லை, எக்ஸ்பிளேஷன் கேட்டுரணும். நம்ம டூட்டி முடிஞ்சிரும். அப்புறம் நான் இதுக்கு பொருப்பில்லேன்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி அதுலருந்து தப்பிக்கறது அவங்க பொருப்பு.’ என்று லெக்சர் அடிப்பார்.

நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். உடனே வாக்குவாதம்தான். அவர் வாதத்தில் அவர் பிடிவாதமாக நிற்க நானும் என்னுடைய வாதத்தில் உறுதியாக நிற்பேன். ‘சார்.. என்னெ பொருத்தவரைக்கும் இது பெரிய தப்பில்லை. அதனால என்னால எக்ஸ்பிளேஷன் எல்லாம் கேட்க முடியாது. நீங்க வேணும்னா என்னெ ஓவர் ரூல் செஞ்சி நீங்களெ அவங்கக்கிட்ட என்ன கேக்கணுமே கேட்டுக்குங்க..’ என்பேன்.

முடிவில் வட்டார மேலாளர் பார்வைக்கு கோப்பு செல்லும். அவர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் அவராலேயே முடிவு எடுக்க முடியாதபடி என்னுடைய அதிகாரி இடையில் புகுந்து குட்டையைக் குழப்பிவிடுவார்.

வட்டார மேலாளர், ‘சரி சார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. படிச்சி பார்த்துட்டு சொல்றேன்.’ என்றாலும் விடமாட்டார். ‘சார் நான் டிபிஆர விட பதினஞ்சு வருசம் சீனியர். அவரவிட அனுபவமும் ஜாஸ்தி.. அதனால நான் சொல்றதத்தான் நீங்க கேக்கணும். இதுல படிச்சு பாக்கறதுக்கு என்ன இருக்கு சார்.’ என்பார்.

அவர் எங்கள் இருவர் இடையிலும் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஒரு பக்கம் சிரிப்பும், ஒரு பக்கம் வேதனையுமாக இருக்கிறது.

இப்படித்தான் ஒரு முறை..

ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு கிளையில் ஆய்வு நடத்திவிட்டு வந்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தேன்.

என்னுடைய ஆய்வு முடிந்து நான் திரும்பி வந்த நேரத்தில் என்னுடைய அதிகாரி இருவார விடுப்பில் இருந்தார்.

ஆகவே என்னுடைய அறிக்கையை நேரடியாக என்னுடைய வட்டார மேலாளரிடம் சமர்ப்பிக்க அவரும் மேலோட்டமாக அதைப் படித்துவிட்டு நான் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளுக்கு கிளையிலிருந்த அதிகாரிகள் யாரிடமேனும் விளக்கம் கேட்க வேண்டுமா என்று வினவினார்.

நான் ‘இல்லை சார்.. நான் குறிப்பிட்டுள்ள தவறுகள் எல்லாமே சாதாரணமாக எல்லா கிளைகளிலும் காணக் கூடியவைதான். ஆகவே இவற்றைச் சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மட்டும் பட்டியலிட்டு கிளைக்கு அனுப்பலாம்’ என்று பரிந்துரை செய்ய அவரும் அதை ஒப்புக்கொண்டு அறிக்கையில் தன்னுடைய குருக்கையொப்பத்தை இட்டு (initials) என்னிடமே திருப்பியளித்துவிட்டார்.

நானும் அவருடைய உத்தரவை நிறைவேற்றி கிளைக்கு அனுப்ப வேண்டிய அறிக்கை நகலுடன் நான் தயாரித்திருந்த பட்டியலையும் அனுப்பி வைத்துவிட்டு அறிக்கையையும் நான் கிளைக்கு அனுப்பிய பட்டியலையும் என்னுடைய அதிகாரியின் பார்வைக்கு வைத்தேன்.

அவர் திரும்பி வருவதற்குள் சென்னையை அடுத்திருந்த வேறொரு கிளைக்கு ஆய்வுக்கு சென்று வந்துவிடலாம் என்ற நினைப்பில் வட்டார மேலாளரிடம் அனுமதி பெற்று சென்றேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக நான் புறப்பட்டுச் சென்ற அடுத்த நாளே அவர் பணிக்கு திரும்பியிருந்தார். சாதாரணமாகவே ஊரில் மனைவி, மக்களைப் பார்த்துவிட்டு திரும்பினால் குறைந்தது ஒரு வாரத்திற்கு சிடுசிடுவென இருப்பார். தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். நாம் செய்கின்ற எல்லா வேலைகளிலும் குறை காண்பதிலேயே முனைப்பாயிருப்பார்.

அதுவும் என் மீது அத்தனை நல்ல அபிப்பிராயம் இல்லாததால் என்னுடைய ஆய்வறிக்கைகளை ஒரு வரிவிடாமல் பூதக்கண்ணாடி வழியாக பார்ப்பார். ஒரு பத்து, பதினைந்து பக்க அறிக்கையை சமர்ப்பித்திருந்தால் அதில் குறைந்த எட்டு, ஒன்பது பக்கங்களில் தன்னுடைய சிவப்பு மசி பேனாவால் தன்னுடைய எதிர்ப்பைக் குறித்து வைப்பார்.

அப்போது கணினியும் இல்லை என்பதால் நாம் கைப்பட எழுதி தட்டச்சு செய்ய வேண்டும். அத்தகைய அறிக்கையில் அவர் சிவப்பு மசியால் எழுதிய வைத்துள்ள குறிப்புகளுடன் கிளைக்கு அனுப்ப முடியாதென்பதால் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டி வரும்.

எனக்கே கடுப்பாக இருக்கும் என்றால் தட்டச்சு செய்பவருக்கோ கேட்கவே வேண்டாம். அவரும் கடுப்பாகிவிடுவார்.

அன்றும் அப்படித்தான். நான் என்னுடைய ஆய்வு முடிந்து திரும்பி வந்ததும் என்னுடைய அலுவல்களுக்கு துணையாயிருந்த குமாஸ்தாவும், என்னுடைய அறிக்கைகளைத் தட்டச்சு செய்பவரும், ‘சார் நீங்க பிரிப்பேர் பண்ண அந்த ---------------- பிராஞ்ச் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்ட கம்ப்ளீட்டா மாத்தணும் போலருக்கு சார்.. என்னோட அப்ரூவல் இல்லாம ஒங்கள யார் ஜோனல் மேனேஜருக்கு அனுப்பச் சொன்னதுன்னு வந்ததுலருந்து நம்ம இன்ஸ்பெக்டர் (அவருக்கு அலுவலகத்திலுள்ளவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர். அவர் சுமார் பதினைந்து வருடங்கள் எங்களுடைய மத்திய அலுவலகத்தின் ஆய்வு இலாக்காவில் பணிபுரிந்தவர் என்பதால்தால் அந்த பட்டப் பெயர்) எங்க ரெண்டு பேரையும் போட்டு வறுத்தெடுத்துட்டார் சார்.அத்தோட நிக்காம அந்த பிராஞ்ச் மேனேஜர கூப்ட்டு நீ செஞ்சிருக்கற வேலைக்கு ஒன்மேல டிசிப்ளனரி ஆக்ஷன் நிச்சயம உண்டுன்னு வேற மிரட்டி மரியாதையா டிபிஆர் ஒங்களுக்கு அனுப்புன ரிப்போர்ட் காப்பிய உடனே திருப்பி எனக்கு அனுப்பணும்னு சொல்லிட்டார் சார்.’ என்றபோது எனக்கு உடனே கோபம் வந்தாலும் பொறுமையுடன் என்னுடைய அறிக்கையில் அவர் எழுதியிருந்த குறிப்புகளை முழுவதுமாக படித்துவிட்டு பிறகு அவரை எதிர்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.

பொதுவாக இதுபோன்ற அலுவலகங்களில் பணியாற்றுகையில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் எந்த அதிகாரியுமே பணியாற்றுவது சாத்தியமில்லை. அதிகாரிகள் நிலையில் இருந்த அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கிளைக்கு மேலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவே இருந்தனர்.

அப்போது என்னுடன் பணிபுரிந்த அனைவருமே என்னுடைய அதிகாரியைக் காட்டிலும்  கூடுதல் காலம் மேலாளர்களாக பணிபுரிந்த அனுபவம் இருந்ததை நான் அறிந்திருந்தேன். ஆகவே என்னுடைய ய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்த குறிப்புகள் குழந்தைத்தனமாக இருந்ததுடன் ஏதோ என் மேலிருந்த காழ்ப்புணர்ச்சியால்தான் என்பதை நாங்கள் எல்லோருமே உணர்ந்தோம்.

இருப்பினும் அந்த அலுவலகத்தைப் பொருத்தவரை வட்டார மேலாளருக்கு அடுத்தபடியான பதவியில் அவர் இருந்ததால் அவருடைய கருத்துக்கு மதிப்பளிக்காமல் இருப்பதும் சாத்தியமில்லை.

அதே சமயத்தில் என்னுடைய ஆய்வறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளால் வங்கிக்கு பெருத்த இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதுபோல் அவர் தன்னுடைய கருத்தை எழுதி வைத்திருந்ததையும் என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஆகவே அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை எனவும் ஆகவே சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து அவர் குறிப்பிட்டிருந்ததுபோல் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும் நான் ஒரு தனி அறிக்கையைத் தயார் செய்து வட்டார மேலாளருக்கு நேரடியாக சமர்ப்பித்தேன்.

வந்தது வினை..

தொடரும்..  

10 comments:

G.Ragavan said...

ம்ம்ம்ம்....இத்தனை வருடம் கூட அனுபவம் இருப்பதால் மட்டும் ஒருவர் அனைத்தும் அறிந்தவராக முடியாது. நீண்ட அனுபவம் மட்டுமே பெரிது என்றால் நாம் ஆமைகளிடமும் திமிங்கிலங்களிடமும்தான் கருத்து கேட்க வேண்டியிருக்கும்.

ம்ம்ம்...அடுத்து என்ன ஆச்சோ!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நீண்ட அனுபவம் மட்டுமே பெரிது என்றால் நாம் ஆமைகளிடமும் திமிங்கிலங்களிடமும்தான் கருத்து கேட்க வேண்டியிருக்கும்.//

சரியா சொன்னீங்க. பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கறாமாதிரி சொல்றதுக்கு ஒங்களவிட்டா ஆள் இல்ல ராகவன்..

sivagnanamji(#16342789) said...

.. ஆமைகளிடமும் திமிங்கிலங்களிடமும்..-
இன்றைய பாராட்டு பாகு[ஜீரா]வுக்குதான்!

tbr.joseph said...

வாங்க ஜி!

இன்றைய பாராட்டு பாகு[ஜீரா]வுக்குதான்! //

அதே.. அதே:)

Krishna said...

என்னடா, வந்தது வினையின்னு முடிச்சிருக்காரே, என்ன ஆச்சோ, அடுத்த திங்கள்தான் தெரியும், ஹும்..

ஜி சொன்ன மாதிரி, இன்னிக்கி, ஒரு அட்டகாசமான உவமையில, உங்க பதிவையே தூக்கி சாப்பிட்டுட்டார் ஜிரா..

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ஒரு அட்டகாசமான உவமையில, உங்க பதிவையே தூக்கி சாப்பிட்டுட்டார் ஜிரா.. //

உண்மைதான்.. ஒரு நூறு, நூத்தம்பது பின்னூட்டங்கள் வந்துக்கிட்டிருந்தா அவர நம்ம பதிவுல வந்து பின்னூட்டம் போடாதீங்கன்னு சொல்லிரலாம்.. ஆனா வர்றதே ஒன்னு ரெண்டு..

என்ன இருந்தாலும் நம்ம ஜிராதானே.. விட்டுருவோம்:)

srishiv said...

ஐயா
அப்படி சொல்லாதீங்க, உங்களுக்கு ரெகுலர் கஷ்டமர்ஸ் நெறையபேர் இருக்கோம், பின்னூட்டம்தான் அடிக்கடி போடறது இல்ல ;), கொஞ்சம் சோம்பேறித்தனம் ஹிஹிஹி, ஆனால், தினம் ஒருமுறையாச்சும் என்னுலகத்தினை பேவரைட்டிலிருந்து எடுத்து செக் செய்து பார்க்காமல் பிரவுசரை மூடுவதில்லை...:-) மீண்டும் நினைவு கூர்க :)
ஸ்ரீஷிவ்...
அகில உலக டிபிஆர் ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன்றம்,
அசாம் கிளைச்செயலாளர்...:)
இந்தியா...:)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ் (அசாம் கிளை செயலாளர்:),

பின்னூட்டம்தான் அடிக்கடி போடறது இல்ல //

கணிசமான நண்பர்கள் வாசிக்கிறார்கள் என்பதை என்னுடைய வலைப்பூ கவுண்டரே காட்டுகிறதே.. நான் ச்சும்மா தமாஷ் செஞ்சேன்..

பாலராஜன்கீதா said...

டிபிஆர் அய்யா,
நானும் தங்களின் எழுத்துகளை ஆவலுடன் படித்து வருகிறேன். தாங்கள் பின்னூட்டங்களுக்காக எழுதுபவர் அல்லர் என்பது(ம்) பலருக்குத் தெரியும்.

tbr.joseph said...

நன்றி பாலராஜன்கீதா,

அதுதான் கூறினேனே நான் வேடிக்கையாகத்தான் சொன்னேன் என்று.

வெறும் பின்னூட்டங்களுக்காகவே எழுதுவது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை..