05 December 2006

தி.பா.தொடர் பாகம் II - 2

பிறகென்ன.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கைகலப்புதான்.. சாரி.. வாய்கலப்பு என்று சொல்ல வேண்டும்..

மனிதர் தன்னுடைய சர்வீசில் ஒரேயொரு கிளையில்தான் மேலாளராக இருந்தார் என்பதும் அங்கு செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டு தண்டிக்கப்பட்டார் என்பதும் பணிக்கு சேர்ந்த முதல் நாளே என்னுடைய சக பணியாளர் வழியாக எனக்கு தெரிந்துவிட்டது.

சாதாரணமாகவே வங்கிக் கிளைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றி ஏதாவது சிக்கலில் சிக்கிக்கொண்டவர்களையும், மேலாளராக திறமையுடன் பணியாற்ற முடியாதவர்களையுமே இத்தகைய நிர்வாக அலுவலகங்களுக்கு மாற்றுவார்கள். இந்நியதி என்னுடைய வங்கியில் மட்டுமல்ல ஏறத்தாழ எல்லா வங்கியிலும் நடைமுறையில் இருந்த ஒரு நியதி என்றால் மிகையாகாது. இல்லாவிடில் உடல்நலம் குன்றியவராகவோ, ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே உள்ளவராகவோ இருக்க வேண்டும்.

பொதுவாக, நிர்வாகத் தத்துவத்தின்படி (Management Philosophy) ஒரு நல்ல நிர்வாகத் திறமையுள்ளவரால் மட்டுமே தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை திறமையுடன் நிர்வகிக்க முடியும்.

அப்படிப் பார்க்கப் போனால் சுமார் ஐம்பது கிளைகளின் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்க வேண்டிய வட்டார அலுவலகத்தில் பணியற்றுபவர்கள் கிளை மேலாளர்களைவிட பன்மடங்கு திறமையானவர்களாக இருப்பதுடன் ஒரு கிளையை நடத்திச் செல்லத் தேவையான சகல விஷயங்களையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமல்லவா?

ஆனால் ஒரு சிறியக் கிளையில் கூட மேலாளராக குப்பைக் கொட்ட முடியாதவர்களையெல்லாம் இது போன்ற வட்டார அலுவலகங்களில் நியமிப்பது எந்தவகையில் நியாயம் என்று அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த சுமார் இரண்டு வருட காலத்தில் பலமுறை என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நிர்வாகத் திறமையிலும், விஷய ஞானத்திலும் அந்த அளவுக்கு  சூன்யமாக இருந்தவர்கள்தான் கிளை மேலாளர் பதவிக்கு மேலுள்ள பதவிகளில் வட்டார அலுவலகங்களில் அமர்ந்திருந்தனர்.

பணிக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே இப்படிப்பட்ட அதிகாரிகளிடத்தில் எப்படி நான் திறம்பட பணிபுரியப் போகிறேன் என்று நினைத்து நினைத்து மாய்ந்து போனேன்.

என்னுடைய பலமும் பலஹீனமுமே எதையும் குறித்த நேரத்தில், முடிந்தவரை சரிவர செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பதுதான். அத்துடன் மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் குணமும் அந்த வயதில் சற்று அதிகமாகவே இருந்தது. கோபம்? கேட்க வேண்டாம்.

நான் மேலாளராக இருந்த சமயத்தில் எனக்கு பலமாக இருந்த இந்த குணம் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பலவீனமாக மாறியது.

சுமார் ஏழாண்டுகள் அதிகாரம் செய்தே பழகிப் போன எனக்கு மற்றவர்களுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதும் சற்று சிரமமாகத்தானிருந்தது.

‘இங்க பாருங்க டிபிஆர், உங்க போறாத காலம் இந்த மாதிரி ஆஃபீஸ்ல வந்து மாட்டிக்கிட்டீங்க. ஒங்கள இங்க போடப் போறேன்னு சேர்மன் எங்கிட்ட சொன்னப்பவே ஒங்களால இங்க ரொம்ப காலத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாதுன்னு நினைச்சேன்.’ என்றார் என்னுடைய வட்டார மேலாளர்.

அவரை அதற்கு முன்னர் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றாலும் அவரும் கேரளத்திற்கு வெளியே பல வருடங்களாக  பணியாற்றியிருந்ததால் அவருக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது.

வங்கி அலுவல்களில் நல்ல அனுபவமும், நல்ல விஷய ஞானமும் அவருக்கு இருந்தது. ஆகவே எனக்கும் என்னுடைய உடனடி அதிகாரிக்கும் இடையில் கருத்து பரிமாற்றத்தில் பிரச்சினை ஏற்பட்ட போதெல்லாம் தலையிட்டு சுமுகமாக தீர்த்து வைத்ததுடன் அந்த விஷயம் என்னுடைய தலைமையலுவலகத்துக்கு தெரியாமலும் பார்த்துக்கொண்டார்.

அவருக்கும் எனக்கும் இடையிலிருந்த இந்த பிரத்தியேக உறவு நான் அந்த அலுவலகத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் அதுவே சில சமயங்களில் என்னுடைய சக அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பொதுவாகவே வட்டார அலுவலகம் என்பது ஒரு குட்டி தலைமையகம் என்று கருதப்படும். வங்கியின் தலைமையகம் வங்கி முழுவதுக்கும் தலைமை என்றால் வட்டார அலுவலகம் அதன் கீழ் இயங்கும் அனைத்து கிளைகளுக்கும் தலைமையலுவலகமாக இயங்க வேண்டும்.

நான் சென்னை வட்டார அலுவலகத்தில் பணியாற்றியபோது எங்களுடைய வங்கியின் மும்பை வட்டார அலுவலகம் துவக்கப்படவில்லை. அது துவக்கப்பட்ட சமயத்தில் நான்தான் அங்கு செல்ல வேண்டியிருந்தது. அதாவது சென்னையிலிருந்த பணியாற்றிய வருடத்திலிருந்து சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு. அதைப் பற்றி இத்தொடரின் மூன்றாம் பாகத்தில்தான் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

ஆகவே சென்னை வட்டார அலுவலகத்தின் கீழ் கேரள மாநிலத்தில் இயங்கி வந்த கிளைகளையும் தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இயங்கி வந்த கிளைகளையும்  தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இயங்கி வந்த மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த சுமார் 75 கிளைகள் இயங்கி வந்தன.

அதாவது அப்போது எங்களுடைய வங்கியின் மொத்த கிளைகளில் 40 விழுக்காடு எங்களுடைய வட்டார அலுவலகத்தின் கீழ் இருந்தது.

என்னுடைய அலுவலகத்தில் இத்தனை கிளைகளுடைய இயக்கத்தை மேற்பார்வையிட ஒவ்வொரு கிளைக்கும் சுமார் மூன்று அதிகாரிகள் என இருபத்தைந்து அதிகாரிகளும் எங்களுக்கு உதவி புரிய பத்து குமாஸ்தாக்கள் மற்றும் தட்டச்சு செய்பவர்களும் இருந்தனர்.

இத்தனை பேரும் டெவலப்மெண்ட், ஆப்பரேஷன்ஸ் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சீஃப் மேலாளர் அதிகாரியாக இருந்தார். இவ்விரு அதிகாரிகள்தான் என்னைப் போன்றவர்களுக்கு உடனடி அதிகாரிகள் (Immediate Superior). அவர்களுக்கு மேல் வட்டார அலுவலர் எனப்படும் Zonal Manager.

டெவலப்மெண்ட் பிரிவில் ஆய்வு இலாக்கா, கிளைகள் திறப்பது, இடம் மாற்றம் செய்வது, கிளைகளுக்குத் தேவையான பொருட்களை விநியோகிப்பது, விளம்பரங்கள் செய்வது, வர்த்தகத்தை மேம்படுத்த ஆவன செய்வது என்ற இலாக்காக்களும் ஆப்பரேஷன் பிரிவில் கடன் வழங்குவது, அதை வசூலிப்பது, வாராக் கடன்களை வசூலிக்க வழக்கு தொடுப்பது போன்ற இலாக்காக்களும் இருந்தன.

நான் பணிக்கு சேர்ந்தவுடன் டெவலப்மெண்ட் பிரிவில் இயங்கி வந்த ஆய்வு இலாக்காவிலிருந்த (Inspection Department) இரண்டு அதிகாரிகள், இரண்டு குமாஸ்தாக்கள், ஒரு தட்டச்சு குமாஸ்தாவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டேன்.

நானும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய இரண்டு அதிகாரிகளும் மொத்தமிருந்த எழுபத்தைந்து கிளைகளை தலைக்கு இருபத்தைந்து கிளைகள் வீதம் பிரித்துக்கொண்டு எங்களுடைய தலைமையலுவலகத்திலிருந்த மத்திய ஆய்வு இலாக்கா எங்களுடைய அதிகாரத்திற்கு கீழ் இயங்கி வந்த கிளைகளை ஆய்வு செய்து சமர்ப்பித்திருந்த வருடாந்தர ஆய்வு அறிக்கைகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு யார் பொருப்பு என்பதைக் கண்டுபிடிப்பதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட கிளைகள் சரிசெய்யும்வரை கண்கானிக்கவும் வேண்டும்.

அத்துடன் வருடத்திற்கு ஒருமுறை அனைத்துக் கிளைகளுக்கும் ஆய்வுக்கு செல்ல வேண்டும். சென்னை வட்டாரத்தில் இருந்த கிளைகளுள் பெரும்பாலானவை சென்னையிலிருந்து தொலைவில் இருந்ததால் வருடத்திற்கு ஒருமுறை எல்லா கிளைகளுக்கும் சென்றுவருவதே பெரிய பிரச்சினை.

எங்களுடைய பொருப்பிலிருந்த எழுபத்தைந்து கிளைகளில் மாதம் குறைந்த பட்சம் ஆறு கிளைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். போய் வரும் பயண நேரம் கிளையில் ஆய்வ நடத்த ஒதுக்கப்படும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் என்னுடைய இலாக்காவிலிருந்த மூன்று அதிகாரிகளும் மாறி, மாறி ஏறத்தாழ வருடம் முழுவதுமே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

எனக்கோ அப்போதெல்லாம் பயணம் செய்வதென்றாலே பயங்கர அலர்ஜி. இப்போது போல கம்ப்யூட்டர் முன்பதிவு வசதிகள் இல்லாததால் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் என்ற வசதிகள் இருக்கவில்லை. இப்போது உள்ளதுபோல் முன்பதிவு செய்துகொடுக்கும் தனியார் நிறுவனங்களும் இருக்கவில்லையென்பதால் ஒவ்வொரு முறையும் நாமோ அல்லது அலுவலகத்திலிருந்த சிப்பந்தி மூலமோ செய்யவேண்டியிருக்கும். படாத பாடுபட்டு நீண்ட வரிசைகளில் நின்று முன்பதிவு செய்து போய்வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.

அதுமட்டுமா? இத்தகைய ஆய்விற்கு செல்வது நாம் செல்லவிருக்கும் கிளைக்கு தெரியக்கூடாது. ஆகவே தங்க வேண்டிய இடத்தில் விடுதி அறையையும் முன்பதிவு செய்ய முடியாது. இப்போதுள்ளதுபோல வலைத்தளத்தில் நாம் செல்லவிருக்கும் இடத்தில் எத்தகைய விடுதிகள் உள்ளன, இடம் கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க முடியாது..

ஊர் போய்ச் சேர்ந்ததும் கையில் பெட்டியுடன் விடுதி, விடுதியாக அலைந்ததை இப்போது நினைத்தாலும்.. ச்சை.. அப்படியொரு அவஸ்தை.. குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உட்கோடியில் இருந்த ராஜாமுந்திரி, பீமாவரம், குல்பர்கா, பெல்காம் போன்ற நகரங்களுக்குச் சென்றுவருவது என்பது ஏதோ நரகத்திற்கு சென்று வருவது போலத்தான்.

சரி.. அடித்துப் பிடித்துப் போய் ஆய்வைத் துவக்கினால் ஏன்டா வந்தோம் என்பதுபோலிருக்கும். ஆங்கிலத்தில் thankless job என்பார்களே அதுபோல்தான்.

எந்த ஒரு கிளையிலும் மேலாளராக இருந்தும் வர்த்தகம் செய்துவிடலாம்.. ஆனால் ய்வு செய்ய முடியாது. அதுவும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் நம்முடைய கடந்த ஆய்வு தியதியிலிருந்து கிளையில் நடந்திருக்கும் வர்த்தக விவரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக (Random) ஆய்வு செய்து அவற்றில் வங்கியின் நியதிகளுக்கு புறம்பாக ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை சல்லடைப் போட்டு சலித்து கண்டுபிடிப்பதென்றால்..

சரி.. கண்டுபிடித்தோம்.. அதை அப்படியே அறிக்கையில் எழுதி விடலாம் என்று நினைத்தால் அதுவும் அத்தனை எளிதல்ல..

தொடரும்..

8 comments:

sivagnanamji(#16342789) said...

ஒருவிதத்தில்...jobless job ஆ?

tbr.joseph said...

அப்ப்ப்ப்ப்ப்பா ஒரு பின்னூட்டமாவது வந்துதே..

வாங்க ஜி!

jobless jobனா வேலையில்லாத வேலைன்னு மொழிபெயர்க்கலாமா:)

ஆனா அதுவும் ஒருவகையில உண்மைதான்..

வேலையத்தவன் செய்யற வேலைதான்..

நான் ஆய்வு செய்யற வேலைய சொல்றேன்.. ப்ளாக் எழுதறத இல்ல:)

Krishna said...

மனவாடு தேசத்துக்கெல்லாம் போயிருக்கீங்களா? ஆய்வுக்கு வர்றவருக்கு மணக்க மணக்க அவங்க சாப்பாட்டப் போட்டு, துண்டக் காணோம், துணியக்காணோம்னு ஓட வச்சிடுவாங்களாமே, நிஜமா...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

மனவாடு தேசத்துக்கெல்லாம் போயிருக்கீங்களா? ஆய்வுக்கு வர்றவருக்கு மணக்க மணக்க அவங்க சாப்பாட்டப் போட்டு, துண்டக் காணோம், துணியக்காணோம்னு ஓட வச்சிடுவாங்களாமே?//

உண்மைதான்.. வீட்டுகள்ல இல்ல.. ஓட்டல்கள்ல.. நேரம் வரும்போது விரிவாவே சொல்றேன்..

G.Ragavan said...

ம்ம்ம்ம்...படாதபாடு பட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க. கொடுமைதான். ஆனா இதுலயிருந்து கண்டிப்பா தப்பிச்சிருப்பீங்க. அதையும் கேக்கக் காத்திருக்கிறோம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கொடுமைதான்.//

ஆனா அதுலருந்து நான் நிறைய பாடங்களையும் கத்துக்கிட்டேன்..

இப்படிப்பட்ட அதிகாரிகளை மேனேஜ் பண்றதும் ஒரு பெரிய கலைதானே..

arunagiri said...

ஆஹா, இரண்டாவது பாகம் தொடங்கிவிட்டீர்களா, இப்போதுதான் கவனித்தேன், இனி தொடர்ந்து இதையும் படிக்கிறேன்.

tbr.joseph said...

நன்றி அருனகிரி.