26 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 10

நான் குமாஸ்தா பதவியிலிருந்த காலத்தில் என்னுடைய கிளை மேலாளருக்கிருந்த சலுகைகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.

அவர்களுக்கென அலுவலக நேரம் என்று எதுவும் இருந்ததில்லை. நினைத்த நேரத்தில் வரலாம், போகலாம் என்ற உரிமையைப் பார்த்தபோது 'ஹ¥ம் கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைப்பேன்.

நான் பணிக்கு சேர்ந்த முதல் கிளையில் இருந்த மேலாளர் மாலை நேரங்களில் சரியாக நான்கு மணிக்கு எழுந்து சென்றுவிடுவார். கேட்டால் வர்த்தகத்தை விரிவாக்க செல்கிறேன் என்பார்.

தினமுமா? என்று நினைப்போம் நானும் என்னுடைய சக குமாஸ்தாக்களும்.

நான்கு மணிக்கு வெளியில் செல்பவர் சுமார் ஏழரை, எட்டு மணிக்கு மீண்டும் வருவார். வந்து இரண்டு, மூன்று தொலைப்பேசிகள் செய்துவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவார்.

‘நாம இருக்கறமா, இல்ல போய்ட்டமான்னு பாக்கறதுக்கே இந்த மனுசன் இந்த நேரத்துல வறார் பார்’ என்போம் எங்களுக்குள்.

அந்த பதவி அவர்களுக்கு அளித்திருந்த சலுகைகள் மட்டுமே குமாஸ்த்தா பதவியிலிருந்த எங்களுக்கு தெரிந்ததே தவிர அப்பதவி அவர்களுக்கு அளித்திருந்த பொறுப்பு, கடமைகள் எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனல் அதே பதவிக்கு நான் உயர்த்தப்பட்டபோதுதான் அதிலிருந்த பொறுப்புகள் மற்றும் கடமைகளின் பளு மற்றும் தீவிரம் எனக்கு தெரிந்தது.

குமாஸ்தா பதவியிலிருந்த காலத்தில் அதிக பட்சம் இரவு ஒன்பது மணி வரை வேலை. அன்றைய வேலையை முடித்துவிட்டால் நிம்மதியாக வீடு திரும்பலாம். பொறுப்புகள் அதிகம் இல்லாததால் படுத்தவுடன் உறங்கிப்போகும் நிம்மதி.

ஆனால் ஒரு கிளை மேலாளருக்கு அப்படியல்ல. இது அலுவலக நேரம், இது ஓய்வு நேரம் என்பதே இல்லாத பதவி அது. அதுவும் இந்த செல் ஃபோன் யுகத்தில் உண்ணும் நேரம், உறங்கும் நேரம் என்று கூட பாகுபாடு இல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் அலுவலக நேரம்தான் என்ற சூழல். படுக்கச் செல்லும் நேரத்திலும் செல் ஃபோனை அணைத்து வைத்துவிட்டு உறங்க முடியாத நிலைதான்.

நாம் எந்த பதவி வகித்தாலும் நமக்கு மேலுள்ளவர்களுக்கு இருக்கும் சலுகைகள்தான் நம் கண்களுக்கு தெரிகின்றன. அந்த சலுகைகளுடன் அவர்களுக்கிருக்கும் பொறுப்புகள், கடமைகள் நம்முடைய கண்களுக்கு புலப்படுவதில்லை.

நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோதும் என்னுடைய மனநிலை அப்படித்தான் இருந்தது.

மேசை அதிகாரிகளான நாங்கள் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை முயன்றும் அன்றைய பணி முடியவில்லையே என்ற நிராசையுடன் வீடு திரும்புகிறோம,  நம்முடைய வட்டார மேலாளரோ அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லையே என்று நினைப்பேன்.

கிளைகளை மேற்பார்வை செய்ய செல்கிறேன் என்று எங்களுடைய வட்டாரத்திலிருந்த எல்லா கிளைகளுக்கும் சென்றுவருவதே அவருடைய முக்கிய அலுவலாக இருந்தது. எங்களைப் போன்று ரயிலில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு.

எங்கெல்லாம் விமான சேவை இருந்ததோ அங்கெல்லாம் விமானப் பயணம்தான். எங்களைப் போன்று முன்னறிவிப்பில்லாமல் செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவரை விமான நிலையத்தில் வரவேற்று ஐந்து நட்சத்திர விடுதிகளின் வாசல்வரைக் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட கிளை மேலாளரே காத்துக்கொண்டு இருப்பார்.

ஆனால் அதே பதவி அவர் மீது திணித்திருந்த கட்டுப்பாடுகளை நான் முழுவதுமாக அறிந்திருக்கவில்லையென்பது அவருடைய இல்லத்தில் அவரை சந்தித்தபோதுதான் எனக்கு விளங்கியது.

‘டிபீஆர். நீங்க ரிப்போர்ட்ல எழுதுனது தப்புன்னு நான் நினைக்கல. இப்படியெல்லாம் அங்க நடக்குதுன்னு எனக்கு தெரியாம இல்ல. ஆனா ஒங்கள மாதிரி தைரியமா என்னால ரிப்போர்ட் பண்ண முடியல. ஏன் தெரியுமா? அந்த மேனேஜரோட கனெக்ஷன்ஸ். ஒங்க பதவி ஒங்களுக்கு குடுத்துருக்கற ஃப்ரீடம் என்னுடைய பதவியில இல்ல. நானும் நாலையும் பாத்துத்தான் ஆக்ஷன் எடுக்க முடியும். அந்த மேனேஜர மாத்தணும்னு ஏற்கனவே நான் நம்ம எச். ஆர். ஹெட்டுக்கிட்ட பேசினதுதான். ஆனா அவருக்கே அதுல ஃப்ரீடம் இல்ல. சேர்மன் கிட்ட போய் சொல்லலாம்தான். ஆனா அது அந்த டைரக்டருக்கு தெரியவந்தா அது ஒருவேளை என்னுடைய பொசிஷனுக்கே ஆபத்தா முடியும்கற சூழ்நிலை. அவர ரெண்டு வருசத்துக்குத்தான் போட்டிருந்தாங்க.. அடுத்த ப்ரொமோஷனுக்கு மெட்ரோ பிராஞ்ச் எக்ஸ்ப்ரீயன்ஸ் வேணுங்கறது நம்ம சர்வீஸ் கண்டிஷன்ல இருக்குல்ல. அதுக்காக அந்த டைரக்டரோட இனிஷியேட்டிவ்ல அவர அங்க போட்டது. ஆனா பசங்கள ஸ்கூல்ல சேர்த்துட்டேன்.. இன்னும் ஒரு வருசமாவது இங்க இருக்கணும்னு அவர் கேட்டதால அவர அங்கயே கண்டினியூ பண்ண அனுமதிச்சோம். அது முடிய இன்னும் ரெண்டு, மூனு மாசந்தான்.. இந்த வருசம் நடக்கப்போற இண்டர்வ்யூவில அவருக்கு நிச்சயமா அடுத்த ப்ரொமோஷன் குடுக்கணும்னுதான் ப்ளான். இந்த சமயத்துல நீங்க எழுதுன கமெண்ட்ஸ் அதுக்கு பாதகமாயிரும்போலருக்கு. ஒங்களுக்கு தெரியுமோ இல்லையோ ஒங்க இமிடீயட் பாஸ் இருக்காரே அவர், அந்த மேனேஜர், அந்த டைரக்டர் எல்லாருமே ஒரே ஃபேமிலியிலருந்து வந்தவங்க. நீங்க எழுதுன கமெண்ட்ஸ் அடுத்த நொடியே அந்த மேனேஜர் கிட்ட போயி அவர் அந்த டைரக்டர கூப்ட்டு சொல்ல.. நான் சரியா தூங்கியே ஒரு வாரமாச்சி டிபிஆர்.’ என்று அவர் பரிதாபமாக கூறியபோதுதான் என்னுடைய செய்கையின் தீவிரம் எனக்கு புரிந்தது. ‘I am really sorry Sir.. I didn’t realise that my action would put you in trouble.’ என்று மன்னிப்பு கோருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

பெருவாரியான நிறுவனங்களில் இத்தகைய சூழ்நிலை இப்போது இல்லையென்றாலும் அதிகாரிகளுக்குள் இருந்த போட்டி, பொறாமை, அடுத்துக் கெடுப்பது என்பதெல்லாம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய வங்கி நண்பர் ஒருவரை  சந்தித்தேன். அவர் மேலைநாட்டு வங்கிகளில் ஒன்றில் பணிபுரிகிறார். வைஸ் பிரசிடெண்ட் பதவி வகிப்பவர். அதாவது என்னுடைய டி.ஜி.எம் பதவிக்கு நிகரானது என்று கூறலாம்.

‘போன வாரம் எங்க கண்ட்ரி ஹெட் வந்தப்போ நடத்த கூத்த பாக்கணுமே.’ என்று துவங்கினார். ‘அவர் ஏர்போர்ட்ல வந்து இறங்கினப்போ நீ, நானுன்னு போட்டிப் போட்டுக்கிட்டு பொக்கே கொடுக்கப்போய் அங்க ஒரு குட்டி stampede ஏ ஆயிருச்சின்னா பாத்துக்கயேன். அவருக்கே லேசா எரிச்சல் வந்துருச்சி. என்னோட சேர்ந்து நாலு வி.பீஸ். இருக்கோம் சென்னையில. யாருமே அவர ரிசீவ் போகணும்னு இல்லை.. ரீஜினல் ஹெட் மட்டும் போனா போறும்.. எனக்கும் போறதுக்கு அவ்வளவா இஷ்டமில்லை.. ஆனா மத்த மூனு பேரும் போயி நா மட்டும் போகலைன்னா? இஷ்டம் இருக்கோ இல்லையோ.. இதெல்லாம் ஒரு farceனு தெரிஞ்சும்.. போய்.. ஏதோ டிராமாவுல வேஷம் கட்டிக்கிட்டு நிக்கறா மாதிரி..’

இதுதான் உயர் மட்டத்தில் இன்றும் நடக்கும் நாடகம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பார்த்தால் உறவு என்பதே இல்லாமல் போய்விடும். அப்படி பேசத் தெரியாமல் இருப்பவனுக்கு இன்றைய உலகம் அளிக்கும் பட்டம்: ‘பிழைக்கத் தெரியாதவன்!’

என்னுடைய வட்டார மேலாளரை நான் இல்லத்தில் சென்று சந்தித்து மன்னிப்பு கேட்க எங்களிருவரிடையிலிருந்த விரிசல் சரியானது.

அவர் நினைத்திருந்தால் என்னுடைய அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த மேலாளரை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரைய விலக்கிக் கொள்ளவோ, மாற்றி எழுதவோ கூறியிருக்கமுடியும்.

அப்படி அவர் கூறியிருந்தாலும் நான் அதற்கு சம்மதித்திருக்க மாட்டேன் என்று இப்போது வேண்டுமானால் ஜம்பமடித்துக்கொள்ளலாம். ஆனால் அன்று நான் இருந்த மனநிலையில் ஒத்துக்கொள்ள வாய்ப்பிருந்தது.

ஆனால் அவர் அதை நிர்பந்திக்கவில்லையென்பதே அவர் மீது எனக்கிருந்த மதிப்பை பன்மடங்கு கூட்டியது. அத்துடன் அடுத்த நாளே என்னை தன்னுடைய அறைக்கு அழைத்து என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவைகளுக்கு வங்கிக்கு எந்த பாதகமும் ஏற்படாமலிருக்க சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு துணை செய்ய என்னால் ஒரு மாத காலத்திற்கு அங்கு செல்ல முடியுமா என்றும் கேட்டார்.

நானும் உடனே சரியென்று சம்மதித்தேன்.

முந்தைய தினம் எனக்கு அவருடைய அறையில் கிடைத்த அவமதிப்பை அறிந்ததுமே ‘டிபீஆர் ஒழிந்தான்’ என்று எனக்கு தீர்ப்பிட்டிருந்த என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்த  சில அதிகாரிகள் அடுத்த நாள் நடவடிக்கையின் பின்புலம் விளங்காமல் குழம்பிப் போயினர். அதில் என்னுடைய உடனடி அதிகாரியும் அடக்கம்.

என்னுடைய வட்டார மேலாளர் என்னை சம்பந்தப்பட்ட கிளைக்கு ஒரு மாத காலத்திற்கு 'ஆல் பேய்ட் டெபுட்டேஷன்' அனுப்புவதாக ஒரு அலுவலக உத்தரவை டைப் செய்து தன்னுடைய கையொப்பத்திற்கு அனுப்பச் சொல்லி என்னுடைய உடனடி அதிகாரியைப் பணித்ததும் அவர் வெகுண்டெழுந்ததும் அதை என்னுடைய வட்டார மேலாளர் வெகு சாதுரியமாக கையாண்ட விதமும் இன்றும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.

அந்த உத்தரவு தட்டச்சு செய்யப்பட சென்றதும் அலுவலகம் முழுவதும் பரவ என்னுடன் நட்பாயிருந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியும் எதிரணிக்கு நிராசையுமாக..

அடுத்த வாரமே நான் சம்பந்தப்பட்ட கிளைக்கு செல்ல ஆயத்தமானேன். என்னுடைய மகள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கவியலாத சூழ்நிலையில் இருப்பதையுணர்ந்த என்னுடைய மனைவி தன்னுடைய தாயாரை தூத்துக்குடியிலிருந்து வருவிக்க நான் மனநிம்மதியுடன் செல்ல முடிந்தது.

நான் நினைத்தது போன்று அந்த கிளை மேலாளர் பொறுப்பற்றவர் அல்ல என்பதை அவருடன் இணைந்து பணியாற்றிய அந்த ஒரு மாத காலம் எனக்கு உணர்த்தியது. அத்துடன் மேலிடத்து உறவு இருந்ததால் சாதாரணமாக வரும் தலைக்கனமும் அவருக்கு இருக்கவில்லையென்பதும் எனக்கு விளங்கியது.

நேற்று நட்ட செடி இன்றே காய்க்க வேண்டும் என்ற அவசர புத்தியே அவருடைய பல செயல்களுக்கும் காரணம் என்பது தெளிவானது.

இன்றும் இத்தகைய இளம் அதிகாரிகளை நான் காண்கிறேன். வங்கி போன்ற பெரிய நிறுவனங்களில் ஒரு பதவியிலிருந்து அதனையடுத்த பதவிக்கு உயர குறைந்த பட்சம் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடனேயே தகுதியுள்ள அனைவருக்குமே உயர்வு கிடைக்க வேண்டும் என்பதில்லை.

உதாரணத்திற்கு பதவி உயர்வுக்குத் தேவையான எல்லா தகுதிகளும் பத்து பேருக்கு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட பதவியில் இரு காலியிடங்களே உள்ளன என்ற சூழலில் இருவருக்கே பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கும்.

ஆகவே ஒரே வயது, ஒரே அனுபவம் மற்றும் கல்வித்தகுதியுள்ள அதிகாரிகள் அனைவருமே இந்த இடங்களுக்கு தங்களைத் தயார் செய்துக்கொள்ள முயல்வது இயற்கை. அதில் சிலர் தாங்கள் மற்றவர்களை விடவும் வணிகம் செய்வதில் திறமையுள்ளவர்கள் என்று எடுத்துக்காட்ட சற்று அதிகமாக முயல்கையில் ஏற்படும் சிக்கலில் சிக்குவதுண்டு.. அதனால் பதவி உயர்வு கிடைக்காது என்பது மட்டுமல்லாமல் தண்டனையும் கிடைப்பதுண்டு.

இத்தகைய நோக்கத்திற்கு அடிமையாகிப் போனவர்தான் அந்த மேலாளர். அன்று ஏற்பட்டிருந்த சிக்கலிலிருந்து அவர் தப்பித்து அந்த ஆண்டே பதவி உயர்வு பெற்றதென்னவோ உண்மைதான். அவருடன் நேர்காணலுக்குச் சென்ற எனக்கு கிடைக்கவில்லை.

சாதாரணமாக பதவி உயர்வு கிடைத்ததும் அதுவரை பணியாற்றி வந்த ஊரிலிருந்து மாற்றம் ஆவதுண்டு. ஆனால் அம்மேலாளருக்கு மேலிடத்திலிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, இதுபோன்ற பெரிய நகரங்களில் தொடர்ந்து பணிபுரிந்தால் அடுத்த பதவி உயர்வு விரைவில் கிடைக்குமே என்ற நப்பாசையில் அதே ஊரிலிருந்த பெரிய கிளைக்கு ஒன்று மேலாளராக சென்றார்.

அங்கு மீண்டும் நிதானமில்லாமல் சில காரியங்களில் ஈடுபட்டு விசாரனைக்குள்ளாகி பதவி இறக்கப்பட்டு, அவருடைய குடும்பத்திலிருந்தவர்கள் 'போதும் நீ வேலை செய்த லட்சணம்' என்று நிர்பந்தித்து அவரை ராஜிநாமா செய்ய வைத்து காலங்காலமாய் அவர்கள் ஈடுபட்டிருந்த வணிகத்தில் (அப்காரி என்பார்கள்: கள்ளுக்கடை, சாராயக்கடை ஏலம் எடுப்பது) ஈடுபட வைத்து இப்போது அவர் சொந்த ஊரில் விரல் விட்டு எண்ணக் கூடிய செல்வந்தர்களில் ஒருவராக...

தொடரும்..

4 comments:

Krishna said...

இது நல்லாயிருக்கே, அப்ப நடக்கறத எழுதும்போதே, இப்போதைய நிலவரத்தையும் ஒப்பீடு செய்து எழுதுவது...

அது சரி, கிறிஸ்த்துமஸ் எப்படி....

G.Ragavan said...

ஜோசப் சார். மென்பொருள் துறையில் மிகவும் தேவையானது விரைவான செயலாற்றல். அதாவது நேற்று விதையூற்றி நாளை அறுவடை செய்வது. ஆகையால் ஒருவரால் அவ்வளவு விரைவில் செயலாற்ற முடிகிறதா இல்லையா என்பதையும் நாங்கள் கணக்கில் கொள்வோம். இங்கும் அரசியல்கள் உண்டு. ஆனாலும் மற்ற அலுவலகங்களை விட மென்பொருளில் முடிந்தவரையில் திறந்த புத்தகம்தான்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ஒங்க பின்னூட்டத்துக்கு எத்தனை முயன்றும் காலையில் பதில் போட விடாமல் ப்ளாகர் தொல்லைக் கொடுத்தது. சரி தொலைந்து போ என்று விட்டுவிட்டேன். இப்போது பரவாயில்லை..

அது சரி, கிறிஸ்த்துமஸ் எப்படி....//

கடந்த வருடம் கே.எல்லிலிருந்து என் மூத்த மகளும் மருமகனும் வந்திருந்தனர். இந்த முறை வரவில்லை. ஆகவே என்னுடைய இளைய மகள் சோகமாகிவிட்டாள். அந்த சோகம் எங்களையும் தொற்றிக்கொள்ள இந்த வருட கிறிஸ்துமஸ் சோ, சோ தான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

மென்பொருள் துறையில் மிகவும் தேவையானது விரைவான செயலாற்றல். அதாவது நேற்று விதையூற்றி நாளை அறுவடை செய்வது. //

உங்களுக்காவது அறுவடைக்கு ஒரு நாள் இருக்கிறது. ஆனால் வங்கி கிளைகளில் அன்றைய வேலையை முடித்தால்தான் வீடு திரும்ப முடியும். டே எண்ட் ஃபங்ஷன் முடியாமல் மென்பொருள் யாரையும் விடாது.

மென்பொருள் துறையிலும் நேற்று பணிக்கு சேர்ந்து நாளை பதவி உயர்வு பெற முடியாதல்லவா? அதைத்தான் நான் சொல்ல வந்தேன். மற்றபடி அன்றாட அலுவல்களில் வங்கிகளில்தான் அதிகம் கெடுபிடி. எத்தனை வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த வேண்டியிருக்கிறது?