04 December 2006

திரும்பிப் பார்க்கிறேன் பாகம் II - 1

என்னுடைய வங்கியின் சென்னை வட்டார அலுவலகத்தில் சூப்பர்வைசராக (கிளை மேலாளர் பதவிக்கு இணையான பதவிதான்) பணிக்கு சேர்ந்தபோது ஒரு கிளைக்கு மேலாளராக சுமார் ஏழு வருடங்கள் ஒரு பரபரப்பான சூழலில் பணியாற்றிவிட்டு அதற்கு முற்றிலும் நேர்மாறான சாவகாசமான சூழலில் !Relaxed atmosphere) பணியாற்ற நேர்ந்தது என்னுடைய துரதிர்ஷ்டம் என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால் சிலருக்கு அது நிம்மதியாக, எந்தவித பொருப்பும் இல்லாமல் இருக்க முடிகிறதே  என்றும் நினைத்ததைப் பார்த்திருக்கிறேன்.

கிளை மேலாளர் பதவி என்பது வங்கியின் வர்த்தகத்தை வழி நடத்தும் பதவி என்பதுடன் வங்கிக்கு லாபத்தை ஈட்டித் தரும் பதவி என்பதால் அதற்கென்று ஒரு தனி மதிப்பு இருந்தது.

அத்துடன் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்துக்கொடுக்க முடியும் என்பதால் அப்பதவிக்கு ஒரு தனி கவர்ச்சியும்  இருந்ததை மறுக்க முடியாது.

வங்கியில் பணிக்கு சேர்ந்த எந்த ஒரு குமாஸ்தாவும் இறுதியில் அடைய நினைப்பது மேலாளர் பதவியைத்தான் என்றாலும் மிகையாகாது.

நகரத்தில் எத்தனைப் பெரிய செல்வந்தரானாலும் அவருக்கு கடன் தேவை ஏற்பட்டால் வங்கி மேலாளருடைய தயவு தேவைதானே.

அப்படியொரு பதவியில் இருந்துவிட்டு வாடிக்கையாளர் வருகையே இல்லாத ஒரு நிர்வாக அலுவலகத்தில் (Administrative office) பணிபுரிவதை நான் மட்டுமல்ல எந்தவொரு அதிகாரியுமே விரும்ப மாட்டார்.

என்னுடைய பணியை சரிவரச் செய்தும் எனக்கு இப்படியொரு நிலமையா என்று ஆரம்பத்தில் நொந்துப் போனேன்.

சென்னைக்கு மாற்றல் என்ற உத்தரவு வந்ததுமே என்னுடைய பெற்றோர்க்கு தொலைப்பேசி செய்து எனக்கு கோடம்பாக்கம் பகுதியில் ஒரு நல்ல வீட்டைப் பார்த்து ஏற்பாடு செய்யக் கூறினேன். அப்பகுதி எனக்கு மிகவும் பரிச்சயமானது என்பதுடன் என்னுடைய மூத்த மகள் தன்னுடைய படிப்பைத் தொடர நல்ல மகளிர் பள்ளிகள் அங்கு இருந்ததான் காரணம்.

ஆனால் கிடைக்கவில்லை. சற்று தள்ளி அசோக் நகரில் கிடைத்தது. தரைதளத்தில் இரண்டு குடியிருப்புகளும் மேல்மாடியில் அதே அளவிலான இரண்டு படுக்கையறைகள் கொண்ட இரு குடியிருப்புகளுமாக மொத்தம் நான்கு குடியிருப்புகள்.

என்னுடைய குடியிருப்பு தரைதளத்தில் இருந்ததால் பின்புறத்தில் சுமார் முன்னூறு சதுரடி அளவில் ஒரு தோட்டமும் இருந்தது. என்னுடைய மூத்த சகோதரர் குடியிருப்பைப் பார்த்துவிட்டு வீடு வசதியான வீடுதான் என்று எனக்கு தொலைபேசியில் விவரத்தைத் தெரிவிக்க என்னுடைய அலுவலகத்திலிருந்து சற்று தொலைவுதான் என்றாலும் சரி என்று சம்மதித்தேன்.

நான் நினைத்ததுபோலவே சென்னைக்கு வந்து சேர்ந்த அடுத்த சில தினங்களிலேயே என்னுடைய மூத்த மகள் மதுரையில் நல்லதொரு பள்ளியில் படித்திருந்ததால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அளித்த பரிந்துரையை ஏற்று கோடம்பாக்கம் பகுதியில் சிறந்த பள்ளி எனக் கருதப்பட்ட மகளிர் பள்ளியில் எளிதாக இடம் கிடைத்தது.

ஆனால் குடியிருப்புதான் நானோ அல்லது என்னுடைய மூத்த சகோதரரோ நினைத்தபடி இருக்கவில்லை. இரண்டு படுக்கையறைகளுடன் வீடு வசதியாய் இருந்தும் குடுபுகுந்த அடுத்த நாளே நான் தீர விசாரிக்காமல் வந்தது எத்தனை பெரிய தவறு என்பது புரிந்தது.

என்னுடைய மூத்த சகோதரருக்கு  குடியிருப்பைக் காண்பித்தது ஒரு தரகர் என்பது பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. தரகர்களுக்கு தனக்கே உரிய பாஷையில், ‘சார் பைப்ப திறந்தா இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணி பிச்சிக்கிட்டு வரும்’ என்றதை என்னுடைய மூத்த சகோதரர் விசுவசித்ததுபோலவே நான் குடிபுகுந்த முதல் நாள் இருக்கத்தான் செய்தது.

அதாவது மேல் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருந்தவரை. அடுத்த இரண்டு நாட்களில் நான்கு குடியிருப்பிலும் இருந்தவர்கள் தொட்டியிலிருந்த தண்ணீர் முழுவதையும் தீர்த்துவிட மூன்றாம் நாள் பைப்பைத் திறந்ததும் காற்றுதான் வந்தது.

பதறிப்போய் அடுத்த வீட்டுக்காரரைக் கேட்டபோது வந்த பதிலில் நொந்துப் போனேன். ‘இங்க இந்த நிலமைதான் சார். உங்க பிரதர் வீடு பாக்க வரப்போறார்னு முன்கூட்டியே அந்த புரோக்கர் வந்து ஒரு லாரி தண்ணி அடிச்சி ஊத்திட்டு போனார். என்னடா அதிசயமாருக்கேன்னு நினைச்சோம். அப்புறந்தான் தெரிஞ்சது ஒங்க பிரதர்  வீட்ட பார்க்க வந்த விஷயம். நீங்களோ இல்ல ஒங்க பிரதரோ எங்க யார்கிட்டயாவது வந்து கேட்டிருந்தீங்கன்னா சொல்லியிருப்போம்..’

‘சரி சார்.. இதுக்கு என்னதான் வழி?’ என்றேன்.

அவர் கூலாக முதல் மாடியைக் காட்டினார். ‘சார்.. அவர்தான் இந்த பில்டிங்கு இன் சார்ஜ். அவர் ஒருத்தர் மட்டுந்தான் இங்க ஓனர். நாங்கல்லாம் டெனண்ட்ஸ்தான்.. நானும் இன்னும் ஒரு மாசத்துல காலி பண்ணிட்டு போப்போறேன்.. நீங்க அவரையே கேட்டுக்குங்க.’

மாடிவிட்டு அய்யரோ, ‘சார்.. நம்மக்கிட்ட பழைய காலத்து கிணறுதான் இருக்கு. அதுல தண்ணிய பாத்து ரெண்டு வருசமாகுது. ஒரு நா விட்டு ஒரு கார்ப்பரேஷன் தண்ணி பம்புல வரும். அடிச்சி எடுத்துக்க வேண்டியதுதான். இந்த வருசம் மழை வந்தா கிணற தூர்வார்த்துரலாம்னு பாக்கோம்..’ என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.

என்னடா இது சோதனை என்று நினைத்தேன். முந்தைய தினம்தான் வங்கியின் பெயரில் லீஸ் பத்திரத்தில் என்னுடைய வட்டார மேலாளரைக் கொண்டு கையொப்பமிட வைத்து ஆறு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்திருந்தேன். எனவே அதை வசூலிப்பதற்காகவாவது குறைந்தது ஆறு மாதம் குடியிருந்தே ஆகவேண்டும் என்ற நிலை.

என் மனைவிக்கோ என்னுடைய மூத்த சகோதரர் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘அதுக்குத்தான் நாமளே வந்து பாக்கணுங்கறது. சொன்னா கேட்டாத்தானே.. அண்ணன் பாத்துக்குவார், தம்பி பாத்துக்குவார்னு சொன்னீங்க. இப்ப பார்த்தீங்களா உங்க அண்ணன் பாத்த லட்சணம்?’

வாயை மூடிக்கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழி தெரியாமல், ‘சரி.. இப்ப அதப்பத்தி பேசி என்ன பண்றது? ஒரு வேலை பண்ணலாம். பம்புலருந்து ஒரு பத்து குடம் தண்ணி எடுத்து குடுக்கறதுக்கு ஒரு ஆள ஏற்பாடு பண்றேன்.. ஆறு மாசம் முடிஞ்சதும் காலி செஞ்சிரலாம்.’ என்று சமாதானப் படுத்தினேன்.

என் மனைவி மசிவதாய் இல்லை. ‘எதுக்குங்க? பேசாம வண்டிய எடுங்க. அந்த வீட்டுக்காரரை போய் பார்ப்போம். அதெப்படி ஊருக்கு புதுசுன்னு தெரிஞ்சும் நம்மள ஏமாத்துவார்? வாங்க.. போய் கேப்போம். ஒங்களுக்கு கேக்க கூச்சமாருந்தா நீங்க வெளியிலயே நின்னுக்குங்க. நா போய் கேக்கேன். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.’

திருமணம் முடிந்து வந்த புதிதில் ‘இப்படி வாயில்லா பூச்சியாருக்காளே இவ எப்படிறா இந்த மெட்றாஸ்ல சமாளிக்கப் போறா?’ என்று என் தாயார் கேட்ட அதே மனைவிதான். ஏழு வருடங்களில் நான்கு ஊர் சுற்றியதில் வந்த பொது அறிவு!

‘சரி.. பார்ப்போம். வந்தவுடனே பிரச்சினை பண்ண வேணாம். மிஞ்சிப் போனா நீங்க வேணும்னா காலி பண்ணிக்குங்க சார்னு சொல்வார். இப்பத்தான் சாமான எறக்கி பிரிச்சி வச்சிருக்கோம். மறுபடியும் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடறதுதானா லேசா..?’ என்று அப்போதைக்கு என் மனைவியின் வாயை அடைத்தாலும் அவர் கூறியதுபோலவே என்னுடைய வீட்டு உரிமையாளரை கேட்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

ஆனால் அதற்கு முன் அலுவலகம் சென்று முறைப்படி பணிக்கு சேர வேண்டிய அலுவல்கள் இருந்ததால் அன்று மாலையே அக்கம்பக்கத்தில் விசாரித்து ஒரு வேலையாளை அமர்த்தினேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல். நான் குடியிருந்த பகுதியில் தினமும் நள்ளிரவு நேரத்தில்தான் குடிநீர் சப்ளை இருந்தது.

ஆக, வேலையாள் இருந்தாலும் நாமும் அந்நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்து அவர் பிடித்த நீரை குளியலறையில் வைத்திருந்த அண்டாக்களில் ஊற்ற வேண்டும்.

அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் நானும் மனைவியும் பட்டபாட்டை இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது. சென்னையிலேயே நிரந்தரமாகக் குடியிருந்தவர்களுக்கு இது பழகிப்போயிருந்தது.

‘ஊட்டுக்காரனுக்கு ஒரு ஊடுன்னா குடித்தனக்காரனுக்கு ஊர் பூராவும் ஊடு சார். நீ என்னாண்ட வுட்டுரு. நான் சோக்கான வூட்ட பாத்து குடுக்கறேன்.. நீ கமிஷன், கிமிஷன் ஒன்னும் குடுக்க வாணாம்..’ என்றார் நான் அமர்த்தியிருந்த வேலையாள்.

ஆரம்பத்தில் அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லையானாலும் சரியாக நான்கு மாதங்கள் கழித்து உண்மையிலேயே நல்ல வசதியான, உண்மையிலேயே இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணீர் வரக்கூடிய ஒரு தனி வீட்டைப் பார்த்துக் கொடுத்தார் என்பது உண்மை.. அதைப் பற்றி நேரம் வரும்போது சொல்கிறேன்..

நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த போது என்னுடைய பணியாற்றியவர்களுள் பெரும்பாலோனோர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சென்னையைச் சார்ந்தவர்களும்  இருந்தார்கள்.

அம்மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எப்போதுமே தங்களைச் சாராதவர்களை தங்களுள் ஒருவராக அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன்.. ஏறக்குறைய எல்லா மாநிலத்தவரும் அப்படித்தான் என்றாலும் நான் குறிப்பிட்டவர்கள் சற்று அதிகமாகவே எச்சரிக்கையுடன் பழகுவார்கள்.

அத்துடன் நான் எங்கள் வங்கியின் அப்போதைய முதல்வரின் ஆள் என்ற முத்திரையும் இருந்தது.

எனக்கு உடனடி மேலதிகாரியாக இருந்தவர் சுமார் முப்பதாண்டுகளுக்கும் கூடுதலாக அம்மாநிலத்திலேயே பணியாற்றியவர் என்றாலும் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்  என்பதால் தமிழ் நன்றாக  பேசத் தெரிந்திருந்தது.

ஆயினும் அவருடைய புதல்வர்/புதல்விகள் அவர் முன்பு பணியாற்றிய இடத்திலேயே உயர் வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்ததால் மனைவி, மக்கள் இல்லாமல் தனியாக சென்னையில் குடியிருந்தார். ஆகவே அவருக்கு சென்னையில் இருப்பது பெரிய பாரமாகத் தெரிந்தது. எப்படியாவது மாற்றலாகி மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கே போக வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்.

அவருடைய நோக்கம் அத்தனை எளிதில் நிறைவேறாது என்பது அவருக்கே தெரிந்திருந்ததால் எப்போதும் சிடுசிடுவென இருப்பார். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுவார்.

நான் குமாஸ்தாவாக இருந்த காலத்தில் இப்படியொரு அதிகாரியிடம் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்தாலும் நானும் ஒரு அதிகாரியாகி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்த நிலையில் என்னால் அவருடைய வெட்டி அதிகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமற்போனது.

பிறகென்ன.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கைகலப்புதான்.. சாரி.. வாய்கலப்பு என்று சொல்ல வேண்டும்..

தொடரும்..

22 comments:

Anonymous said...

வருக வருக...
பதிவுகள் தருக...

tbr.joseph said...

வரேன், வரேன் ராயுடு..

வாரத்தின் முதல் மூன்று நாட்கள்..

இலவசக்கொத்தனார் said...

ஆரம்பிச்சாச்சா? வாழ்த்துக்கள் என்பதை விட நன்றி என்றுதான் சொல்ல வேண்டும். நாங்க கத்துக்க அதிகம் விஷயம் கிடைக்குதே.

tbr.joseph said...

வாங்க கொத்ஸ்(துளசி வார்த்தையில்,

கத்துக்க அதிகம் விஷயம் கிடைக்குதே.//

உண்மைதாங்க.. மத்தவங்க வெற்றிகள்லருந்து நம்மால எவ்வளவு கத்துக்க முடியுதோ அதேபோல அவங்க தோல்விகள்லருந்தும் நமக்கு நிறைய பாடங்க கிடைக்கறதுண்டு..

அந்த வகையில நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.. ஆகவே நான் எதிலெல்லாம் தோற்று அதன் மூலம் பாடம் படித்தேன் என்பதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்..

தொடர்ந்து படியுங்கள்..

துளசி கோபால் said...

வாங்க வாங்க வாங்க.
நல் வரவு.

( தனி மடல் பார்த்தீங்களா?)

tbr.joseph said...

வாங்க துளசி,

உங்க வரவேற்புக்கு, ஒரு தரம், ரெண்டு தரம், மூனு தரம் நன்றி..

தனி மடலா? இல்லையே.. நியூஜிலருந்து வரவேணாமா..

சரி.. எந்த மயில் விலாசத்துல அனுப்புனீங்க.. மூனுத்தையும் பார்த்துட்டேன்.. வரலை..

dondu(#4800161) said...

"வரேன், வரேன் ராயுடு..

வாரத்தின் முதல் மூன்று நாட்கள்.."

அப்போ சூரியன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

சூரியன் பிரதி வாரம் புதன் துவங்கி மூன்று நாட்கள்..

செந்தழல் ரவி said...

தனிமடல்...

டிபிஆர் அவர்களே...மீண்டும் ஒரு முறை அந்த படங்களில் முதல் படத்தை ஒருமுறை பாருங்கள்...அய்யோ என்னை அடிக்க வராதீங்க...:)))))))))))

நட்சத்திர வாரத்தில் என் படைப்புகளை கண்டு நீங்கள் விமர்சனம் செய்தால் குறை நிறைகளை திருத்திக்கொள்வேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி

tbr.joseph said...

வாங்க ரவி,

என் தனி மயிலைப் படித்தீர்களா?

sivagnanamji(#16342789) said...

வாங்க சார் வாங்க!
நல்வரவு!
இனி வாரம் முழுவதும் வருவதாக
அறிவித்துள்ளீர்கள்..
நன்றி!

tbr.joseph said...

வாங்க ஜி!

நான் வாரம் முழுசும் வரணும்னா நீங்களும் வாரம் முழுசும் ப்ரெசண்ட் சார்னு சொல்லணும்..

கரெக்ஷன் இருந்தா பதவிசா, திட்டாம சொல்லணும்.. சரியா?

மணியன் said...

மீண்டும் வருகைக்கு நன்றி!

Krishna said...

வாங்க சார் வாங்க, பதிவு போடற நேரத்தையும் சொன்னா, தோராயமாத்தான், நல்லாயிருக்கும்...

அப்ப, புதன்கிழமை இரண்டு உலகமும் உண்டு, அப்படித்தான?

tbr.joseph said...

நன்றி மணியன்..

tbr.joseph said...

அப்ப, புதன்கிழமை இரண்டு உலகமும் உண்டு, அப்படித்தான?
//

அப்படியே தான்..

சரீஈஈஈ.. நீங்க விஞ்ஞானியா, வழக்கறிஞரா?

தேவ் | Dev said...

இரண்டாவது இன்னிங்க்ஸும் அடிச்சு ஆடுங்க.. வாழ்த்துக்கள்

tbr.joseph said...

நன்றி தேவ்.

ஆனா ரெண்டு மாசமா ஆடாததுனால நம்ம இந்திய அணியினரைப் போல ஃபார்மில் வருவதற்கு கொஞ்சம் நாளாகும்னு நினைக்கேன்.

G.Ragavan said...

வாங்க சார் வாங்க...நீங்க திரும்பவும் திரும்பிப் பாக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி. இனிமே ஒரே கொண்டாட்டந்தான்.

சென்னையில தண்ணிப் பிரச்சனை உண்டுதாங்க. ஆனா கடந்த ரெண்டு வருசமா ஒழுங்கா தண்ணி வருது. நல்லபடி மழ பேஞ்சு நல்லாயிருக்கனும்னு ஆண்டவன நான் வேண்டிக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சென்னையில தண்ணிப் பிரச்சனை உண்டுதாங்க. //

நானும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவனாயிற்றே. ஆனால் அங்கிருந்து குடிநீர் பிரச்சினையையே அறிந்திராத தஞ்சை, தூ..டி போன்ற இடங்களில் ஒரு ஐந்தாறு ஆண்டுகாலம் வசித்துவிட்டு சென்னைக்கு திரும்பியபோது அதுவும் 1987-89 வருடங்களில் நிலவிய குடிநீர் பிரச்சினை மிகவும் மலைப்பாக இருந்தது. தனிவீடுகள் இருந்த இடங்களில் பல மாடி குடியிருப்புகள் சென்னையில் தோன்ற ஆரம்பித்த காலம் அது.

சுதர்சன்.கோபால் said...

திரும்பிப் பார்க்கிறேன் - Reloadedக்கு வாழ்த்துகள் சார்.

புத்தாண்டுப் பரிசினை இப்போதே தந்தமைக்கு நன்றிகள்...

tbr.joseph said...

நன்றி சு.கோபால்