29 December 2006

வேண்டாம் இந்த போக்கு!!

இவ்வருடத்திய இறுதிப் பதிவு இது என்ற நிலையில் இத்தகைய பதிவை எழுதுவதா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்துப் பார்த்துவிட்டு பிறகு எழுதுவது என தீர்மானித்து எழுதிய பதிவு இது.

சமீப காலமாகவே நம்முடைய இளம் வலைப்பதிவாளர்கள் பலரும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவுகளின் மையக்கருத்தையும் அதற்கு கிடைத்துவரும் பெருவாரியான ஆமோதிப்புகளையும் பார்த்து என்னுள் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவே இப்பதிவு.

பதிவாளார் எழுதும் கருத்தை விடவும் தீவிரமான கருத்துக்கள் இப்பதிவை ஆதரித்து வரும் பதில்களில் காண நேருகையில் மனதில் ஒரு இனந்தெரியாத கலக்கம் ஏற்படுகிறது.

என்னுடைய தலைமுறையில் இருந்த இளைஞர்களுடைய எண்ணங்களில், அதாவது சுமார் முப்பதாண்டு காலங்களுக்கு முன்பு, இத்தகைய இன, மத துவேஷங்கள் இருந்தனவா என எண்ணிப் பார்க்கிறேன்.

அன்றைய தலைமுறையினரின் முழு எண்ணமும் எப்படியாவது நம்மைக் கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஆளாக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தங்களுடைய உழைப்பையெல்லாம் அர்ப்பணித்த தங்களுடைய பெற்றோர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவதிலேயே இருந்தது.

தங்களுடைய ஒருவேளை உணவையும் தியாகம் செய்து பணத்தை சேமித்து வைத்து தங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்தை சீருடனும் சிறப்புடனும் உருவாக்கவேண்டும் என்ற தங்களுடைய பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி நின்ற காலம் அது.

நான் பிறந்து வளர்ந்த இடம் சென்னை. பெரும்பாலும் வேப்பேரி, சூளை, பெருமாள் பேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம், போன்ற கிறிஸ்துவ, இந்து, முஸ்லீம், வடக்கத்தி இந்துக்கள் பெருமளவில் குடியிருந்த பகுதிகளில் வசித்திருக்கிறேன்.

பல இன, சாதிகளைச் சார்ந்த பலரும், பல மதங்களைச் சார்ந்தவர்களும் ஒரே வீட்டில் பல குடியிருப்புகளில் (அப்போது குடித்தனக்காரர்கள் என்பார்கள்) ஒற்றுமையுடன் எவ்வித பேதமும் இல்லாமல் வசித்து வந்த காலம் அது.

நான் குடியிருந்த பகுதிகள் எல்லாமே பொருளாதாரத்தில் நடுத்தர அல்லது அதற்கு சற்று கீழே உள்ளவர்கள் வசித்து வந்த பகுதிகள். மாடி வீடுகளும், மச்சு வீடுகளும் அதிகம் இருந்ததில்லை. ஒரே வீட்டில் பல குடியிருப்புகள் இருக்கும். எதிரெதிர் வாசல். ஐந்து வீடுகளுக்கு ஒரு கழிப்பிடம்.

என்னுடைய பள்ளிப் பருவத்திலே சுமார் ஐந்தாண்டுகள் இத்தகைய சூழலில் வளர்ந்தவன் நான். என்னுடைய குடியிருப்பிலே தமிழ், மலையாளம், தெலுங்கு, சவுராட்டிரர் ஏன் ஒரு ஹிந்தி மொழிப் பேசும் குடும்பமும் இருந்திருக்கிறது. இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவ குடும்பங்கள்...

தீபாவளி, ஓனம், ரம்ஜான், கிறிஸ்துமஸ் இவை எல்லாமே பொதுவான பண்டிகைகளாக கருதப்பட்டு வந்த காலம் அது. என்னுடைய வீட்டிலே நான், என் சகோதரர்கள், குடியிருப்பிலிருந்த அனைத்து மத நண்பர்களும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் குடிலும், கூண்டு நட்சத்திரமும் செய்து மகிழ்ந்த காலம் அது.. தீபாவளி, போகி பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடித்தும், மோளம் கொட்டியும் மகிழ்ந்திருந்த காலம் அது.

இந்துக்கள் வீட்டில் சுவாமிக்கு படைத்தது.  உண்டால் பூதம் பிடிக்கும் என்ற மடத்தனமான கொள்கைகளெல்லாம் என் வீட்டில் கண்டிராத ஒன்று. எனக்கு தெரிந்தவரை என் குடும்பத்தில் இருந்த எந்த பிள்ளைகளுக்கும் இத்தகைய வழிநடத்துதல் இருந்ததில்லை.
என் குடும்பம் என்றால் என் தாயார் வழியில் ஏழு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் உள்ள பெரிய குடும்பம். என்னையும் என் சகோதரர்களையும், என் சித்தப்பா, சித்தி, குடும்பங்களிருந்த பிள்ளைகளையும் சேர்த்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகளைக் கொண்ட குடும்பம்.

ஆகவேதான் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் தஞ்சை, மதுரை, தூத்துக்குடி போன்ற ஊர்களில் பணியாற்ற நேர்ந்தபோது சாதி அடிப்படையில் மனித உறவுகளை எடைபோட்டு பார்த்த நிலையைக் கண்டு அதிர்ந்துபோனேன்.

என்னுடைய மதத்தைக் காட்டி நான் இன்ன சாதியைச் சார்ந்தவனாகத்தான் இருப்பேன் என்று அவர்களாகவே கற்பித்துக்கொண்டு எனக்கு குடியிருக்க வீடு மறுக்கப்பட்டபோதுதான் இந்த அவல நிலையை கண்கூடாகக் காண நேர்ந்தது.

எனக்கு ஏற்பட்ட இத்தகைய அவலங்கள்தான் என் பிள்ளைகள் இருவருக்கும் அவர்கள் இன்ன சாதி என்பதே தெரியக்கூடாது என்று அவர்களுடைய பள்ளி சான்றிதழ்களில் என்ன சாதி என்பதைக் கூட குறிப்பிடலாகாது என்பதில் பிடிவாதமாக நின்றேன் நான்.

அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு!

ஆனால் இன்றும் இதையே பெரிய விஷயமாகக் கருதி இன்ன சாதிக்காரன் இப்படி, இந்த மதத்தைச் சார்ந்தவன் தஞ்சையில் பெருகி வருகிறான், சென்னையில் பெருகி வருகிறான், மதுரையில் இன்ன சாதியினர் நலிந்து வருகின்றனர் என ஏதோ இதனால் உலகமே முடிந்துவிடப்போகிறது என்கின்ற பாணியில் வேலை மெனக்கெட்டு பதிவுகள் எழுதுவதும்.. ஐயோ, அப்படியா? என்ன அக்கிரமம் இது என்பது பலரும் அங்கலாய்ப்பதும்..

ஒன்றை மறந்துவிடாதீர்கள்!

நாம் எல்லோரும் முதலில் இந்தியர்கள்..

நான் என்ன இனத்தை, எந்த மதத்தை சார்ந்தவனாகிலும் நான் எந்த மொழியைப் பேசுபவனானாலும் நான் முதலில் இந்தியன்..

இந்தியக் குடியுரிமை பெற்றவன் எவனும் அவனும் இந்துவானாலும், முஸ்லீமானாலும், கிறிஸ்துவனானாலும் அவன் இந்தியனே.

அவன் நாட்டின் எந்த மூலை முடுக்கானாலும் அங்கு குடியிருக்கவும், வணிகம் செய்யவும் அவனுக்கு முழு உரிமையுண்டு..

கிறிஸ்துவன் என்பதால் அவன் இத்தாலியனும் அல்ல, முஸ்லீம் என்பதால் அவன் பாகிஸ்தானியும் அல்ல.

அரசியல்வாதிகள் அரசியல் நடத்த என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும். அது அவர்களுடைய பிழைப்பு.

ஆனால் நண்பர்களே, வேண்டாம் நமக்கு அந்த போக்கு..

சமத்துவபுரங்களை அமைத்து பொருளாதாரத்தில் நலிவடைந்த, சமுதாயத்தின் அடிமட்டத்தில் அமிழ்ந்துக்கிடக்கும் அனைத்து இனத்தவரையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்கும் முயற்சி நடந்துக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் படித்த இளைஞர்கள் இத்தகைய பாதையில் செல்வது அழகல்ல.

இன்றுடன் இப்போக்கை கைவிடுவோம்..

நல்ல எண்ணங்களை எழுதுவோம், ஆதரிப்போம் என்ற முடிவெடுங்கள்..

புலரும் புத்தாண்டில் நல்ல கருத்துகளை மட்டும் எழுதுவோம், ஆதரிப்போம்..

அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

*****

36 comments:

சல்மான் said...

புத்தாண்டு துவங்க இருக்கையில்,மத மற்றும் மனித நல்லிணக்கத்துக்காக நல்ல செய்தியை ந்திருக்கிறீர்கள் அய்யா. நன்றி

சல்மான்

செந்தில் குமரன் said...

நல்ல செய்தி ஜோசப் ஐயா. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

dondu(#4800161) said...

மிக மிகத் தேவையான பதிவு ஜோசஃப் அவர்களே. நட்புக்கு மிஞ்சி உறவுகள் கூட இல்லை. ஏனெனில் உறவு நாம் வேண்டி அமைவதல்ல, ஆனால் நட்போ நாம் தேடித் தெரிவு செய்து கொள்வது.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், வலைப்பதிவுலகில் சராசரியாக அப்பர் மிடில் கிளாசில் இருப்பவர்களே அதிகம். அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாதவர்கள். கையில் நேரமும் மிகுதியாக உள்ளது, ஆகவே சோம்பேறியின் உள்ளம் சாத்தானின் தொழிலகம் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுகின்றனர் போலும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நல்ல வார்த்தைகள். மதமுண்டிருக்கும் கூட்டங்களிடை தங்களின் வெள்ளைப்புறாவினழகு மாந்தருக்கு புரியுமா? எல்லாயினமும் தன் வாழ்க்கைத்தரத்தையுயர்த்த எல்லாரிடமும் இணக்கமும் தேவை. இங்கிருக்கும் பல்லாயிரம் இனக்குழுமங்கள் ஒவ்வொன்றும் இங்கு நிரந்தரம்.

உங்கள் நண்பன் said...

ஜாதிகள் வேண்டாமென்றும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ஒரு நல்லபதிவுட்டமைக்கு நன்றி!!!
திரு. ஜோசப் ஐயா!அவர்களுக்கும் இதப் படிக்கும் ஏனைய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.

ramachandranusha said...

ஜோசப் சார், புது புது தமிழ் பதிவாளர்களின் ஆரோக்கிய சிந்தனைகள் என்று வருட கடைசியில் ஒரு பதிவு போடலாம் என்று
நினைத்துக் கொண்டு இருக்கும்போது, இப்படி குண்டு தூக்கிப் போடுவது நியாயமா? இல்லை ஐயா, நாட்டு நாட்டு நடப்பிலும் சரி, சாதி, மதம், இனம் என்பது மனிதனின் தனிப்பட்ட விவகாரம் அதை பார்க்கும் மனிதன் (மனுஷி)யுடன் பேசக்கூடாது
என்பதில் பெரும்பான்மையான படித்த, படிக்காத மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இது இந்தியாவிலும் சரி, நான் இருக்கும் அமீரகத்திலும் சரி. நீங்களே கணக்கு எடுங்களேன் இங்கு பதிபவர்களில் எத்தனை பேர்கள் ஆபாச, துவேஷ,காழ்புணர்ச்சியை பட்டவர்த்தமாய் காட்டி எழுதுகிறார்கள், அவர்களுக்கு எத்தனை பேர்கள் வெளிப்படையாய் ஆதரவு தருகிறார்கள் என்று? வெகு சிலரே இருப்பார்கள். ஒரு சமூகமாய் செயல்படும் இடத்தில் இவை சகஜமே. இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு புதுசு புதுசாய்
எழுதவரும் இளைஞர் பட்டாளத்தை ஊக்குவிப்பது நம்மைப் போன்ற மூத்த வலைஞர்களின் கடமை.( இப்படி எல்லாம் எழுதினா ஒரு வயசானா பீலிங் வருது :-)

கானா பிரபா said...

ஜோசப் சார்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் 2007 நிறைவான ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.

SK said...

ஊதற சங்கை ஊதி வைப்போம்!
விடியற போது விடியட்டும்!

உங்கள் பதிவின் ஒவ்வொரு எழுத்துடனும் முழுதும் உடன்படுகிறேன் ஐயா!

புத்தாண்டு வாழ்த்துகள்!

விடாதுகருப்பு said...

ஆமென்.

வினையூக்கி said...

//எனக்கு ஏற்பட்ட இத்தகைய அவலங்கள்தான் என் பிள்ளைகள் இருவருக்கும் அவர்கள் இன்ன சாதி என்பதே தெரியக்கூடாது என்று அவர்களுடைய பள்ளி சான்றிதழ்களில் என்ன சாதி என்பதைக் கூட குறிப்பிடலாகாது என்பதில் பிடிவாதமாக நின்றேன் நான்.
//
பாராட்டுக்கள் சார், படித்தவர்கள் ஜாதி அடையாளாங்களை விட்டு ஒழித்து விட்டு வந்த்தால் நிச்சயம் சமூகம் மாற்றம் அடையும்.

ஆனால் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீட்டுக்காக ஜாதி நிச்சயம் வேண்டும், அவர்கள் தன்னிறைவு அடையும் வரை.
அந்த ஜாதியும் ஏட்டளாவில் மட்டும் இருக்க வேண்டும்,

மாச்சர்யங்களை உண்டு பண்ணுவதற்காக மார்க்கங்கள் இல்லை.

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

tbr.joseph said...

நன்றி சல்மான்
நன்றி செந்தில் குமரன்

tbr.joseph said...

வாங்க ஏமாறதவன்,

மதமுண்டிருக்கும் கூட்டங்களிடை தங்களின் வெள்ளைப்புறாவினழகு மாந்தருக்கு புரியுமா? //

நிச்சயம் புரியும்.

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

ஏனெனில் உறவு நாம் வேண்டி அமைவதல்ல, ஆனால் நட்போ நாம் தேடித் தெரிவு செய்து கொள்வது.//

சரியாகச் சொன்னீர்கள் சார்.

tbr.joseph said...

வாருங்கள் நண்பன்,

ஜாதிகள் வேண்டாமென்றும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும்..//

இதுதான் இன்றைய தேவை.. நம் தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல.. நாட்டிற்கும்..

வினையூக்கி said...

//சமீப காலமாகவே நம்முடைய இளம் வலைப்பதிவாளர்கள் பலரும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவுகளின் மையக்கருத்தையும் அதற்கு கிடைத்துவரும் பெருவாரியான ஆமோதிப்புகளையும் பார்த்து என்னுள் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவே இப்பதிவு.
//
பலர் என்பதில் இருந்து நான் மாறுபடுகிறேன் சார். பெரும்பாலான இளம் வலைஞர்கள் கருத்து சுரங்கங்களாகவே உள்ளனர்.
புதுவித சிந்தனைஓட்டங்களுடன் எதிர்வரும் சமுதாயத்திற்கு பயன் படும் வகையிலும் எழுதி வருகிறார்கள்.

Anonymous said...

உங்களின் சமவயதினன் என்ற முறையில் உங்கள் பதிவு எனது மன இறுக்கத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. நமக்கு நல்ல வழிகாட்டுதலை கொடுக்க அமைந்த மதத்தலைவர்களும் அரசியல்தலைவர்களும் நம் தலைமுறையில் அமையாது போனதும் ஒரு காரணமாகும்.

tbr.joseph said...

வாங்க உஷா,

நாட்டு நாட்டு நடப்பிலும் சரி, சாதி, மதம், இனம் என்பது மனிதனின் தனிப்பட்ட விவகாரம் அதை பார்க்கும் மனிதன் (மனுஷி)யுடன் பேசக்கூடாது
என்பதில் பெரும்பான்மையான படித்த, படிக்காத மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். //

அப்படியா, நல்லது.

நீங்களே கணக்கு எடுங்களேன் இங்கு பதிபவர்களில் எத்தனை பேர்கள் ஆபாச, துவேஷ,காழ்புணர்ச்சியை பட்டவர்த்தமாய் காட்டி எழுதுகிறார்கள், அவர்களுக்கு எத்தனை பேர்கள் வெளிப்படையாய் ஆதரவு தருகிறார்கள் என்று? வெகு சிலரே இருப்பார்கள்.//

அந்த வெகு சிலர் எழுதும் பதிவுகளுக்குத்தான் அதிகபட்ச ஆதரவு இருக்கிறது என்பதும் தெளிவு.

tbr.joseph said...

நன்றி கானாபிரபா, எஸ்கே, விடாது கருப்பு

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீட்டுக்காக ஜாதி நிச்சயம் வேண்டும், அவர்கள் தன்னிறைவு அடையும் வரை.
அந்த ஜாதியும் ஏட்டளாவில் மட்டும் இருக்க வேண்டும்//

ஒத்துக்கொள்கிறேன்.

Anonymous said...

புதிய வருடம் பிறக்கும் நேரம் கனவுகளின் காலம். வரும் வருடம் மனக்கசப்புகளை வளர்க்காத விவாதங்களை வளர்க்கும் வருடமாக மலரட்டும் !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

tbr.joseph said...

வாங்க மணியன்,

நமக்கு நல்ல வழிகாட்டுதலை கொடுக்க அமைந்த மதத்தலைவர்களும் அரசியல்தலைவர்களும் நம் தலைமுறையில் அமையாது போனதும் ஒரு காரணமாகும். //

உண்மைதான்.

tbr.joseph said...

பலர் என்பதில் இருந்து நான் மாறுபடுகிறேன் சார். //

இந்த பலர் எழுத்தும் கருத்துக்களுக்கு எத்தகைய வரவேற்பு இருந்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

வழிமொழியப்படும் எண்ணிக்கைகளை வைத்துத்தானே பதிவுகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

நல்ல கருத்துக்களைக் கொண்ட பதிவுகள் கண் சிமிட்டும் நேரத்தில் முகப்பிலிருந்தே மறைந்து போய்விடுகின்றனவே..

tbr.joseph said...

வினையூக்கி இன்று வெளியாயிருக்கும் பதிவுகளில் எந்த பதிவுக்கு ஆதரவு இருக்கின்றன என்பதையும் கணக்கிட்டு பாருங்கள் வினையூக்கி.

கடந்த சில வாரங்களாக ஒரு குறிப்பிட்ட இனத்தினரை எழுதத்தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் பதிவுகளின் பின்னூட்ட எண்ணிக்கையை பாருங்கள்.. நான் சொல்ல வந்தது புரியும்.

பொன்வண்டு said...

மிகவும் சரி அய்யா.. சில பதிவுகள் படிக்கும் போதே எரிச்சலைத் தருகின்றன. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

இனிய அனானி நண்பருக்கு,

உங்களுடைய பின்னூட்டத்தை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறேன்.

என்னுடைய பதிவில் அனானிகளுக்கு இடமில்லை என்பது தெரிந்தும் அனானி என்ற பெயரிலேயே பதிந்துக்கொண்டு பின்னூட்டம் இட முயல்வது சரியல்லவே.

மேலும் நீங்கள் என்ன எழுத நினைத்தாலும் அதை நாகரீகமாக எழுதுவதுதான் நல்லது.

இத்தகைய போக்கு வேண்டாம் என்று கூறுவதுதான் இப்பதிவின் நோக்கம்? அதே பாணியில் இந்த பதிவிலேயே வந்து பின்னூட்டம் இட்டால் அதை நான் எப்படி வெளியிடுவேன். மாற முயற்சி செய்யுங்கள் நண்பரே. நாம் வாழ்வது கொஞ்ச காலம்தான். அதில் எதற்கு இந்த துவேஷம்?

tbr.joseph said...

நன்றி யோகேஸ்வரன்

srishiv said...

அருமையான பதிவு ஐயா,
நற்செய்தி கொடுத்தமைக்கு நன்றி, நானும் பலமுறை இது குறித்து யோசித்தது உண்டு, சிவனே என்று சென்றுகொண்டிருந்த என்னிடமும் சிலர்வந்து நீ ஏன் இவருக்கு சப்போர்ட் செய்தாய், அவருக்கு செய்தாய் என்றால் நான் என்ன சொல்ல? என் தோழர்கள் இன, மத, மொழி, நாடு வேறுபாடற்றவர்கள், தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்திய மொழிகளே சுத்தமாகத்தெரியாத பல அயல்நாட்டு நண்பர்கள் கூட என் நட்பில், எனக்காக உயிரையும் கொடுக்கும் அளவு இருக்கையில், என் மொழி, என் நாட்டு என் நண்பன் என்னை இப்படி தாக்கியது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருந்தது, இந்த போக்கு வரும் ஆண்டிலாவது மாறுமா என்று பார்ப்போம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...
இவண்,
ஸ்ரீஷிவ்...அகில உலக டிபிஆர் ஜோசப் ஐயா ரசிகர் நற்பணி மன்றம்,
அசாம் மானில செயலர்,
இந்தியா...:)

Anonymous said...

அன்பு ஜோசப் சார் , நலமா ? புத்தாண்டு மற்றும் மிக லேட்டான கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள் ,

கிராமங்களின் டீக்கடை பெஞ்ச் மனோபாவம் தான் இங்கு அரசியல் மற்றும் சாதி பதிவுகளாக வெளிப்படுகிறது , அடையாளம் தேவையற்ற வலையத்தில் ஆங்காரமான மன வக்கிற பதிவுகள் அதிகமே .

1 வருட காலமாகிறது நான் இங்கு வந்து . உங்கள் பதிவுகள் , டோண்டு மற்றும் நல்ல பதிவர்களின் பதிவுகளை படித்துக்கொண்டு ரசித்துக்கொண்டுதான் இருந்தேன் .

சும்மாவே இருந்திருக்கலாம் உங்கள் பதிவுகளை படித்து எந்த பின்னூட்டமுமிடாதிருப்பது போல .( தி.பா , ஒரு சுயமுன்னேற்ற நூலுக்கான அத்தை அம்சங்களும் கொண்டது , சுயதொழிலாளனாகிய நான் ஒரு வங்கியை எப்படி அணுக வேண்டுமெண்பதை உங்கள் பதிவுகளிலேயே கற்றுக் கொண்டேன் )

டோண்டு சாரின் ஒரு பதிவில் அவரை பாராட்டி பின்னூட்டியதால் வந்தது வினை . நானும் சாக்கடையில் குதிக்க வேண்டியதாகி விட்டது . வெளியே வர முயலுகிறேன் , ஆமென்கள் என்னை தடுக்கின்றன . என்ன செய்ய .

tbr.joseph said...

வாங்க கரு.மூர்த்தி,

நலமா ? புத்தாண்டு மற்றும் மிக லேட்டான கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள் //

நலம். உங்களுடைய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். புலரும் புத்தாண்டில் உங்களுடைய தொழிலில் மேலும் முன்னேறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நானும் சாக்கடையில் குதிக்க வேண்டியதாகி விட்டது . வெளியே வர முயலுகிறேன் , ஆமென்கள் என்னை தடுக்கின்றன //

இயன்றவரை அந்த குழிக்குள் விழாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் நமக்கும் இதுபோன்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல்போய்விடும்.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லையே..

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

என் தோழர்கள் இன, மத, மொழி, நாடு வேறுபாடற்றவர்கள், தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்திய மொழிகளே சுத்தமாகத்தெரியாத பல அயல்நாட்டு நண்பர்கள் கூட என் நட்பில், எனக்காக உயிரையும் கொடுக்கும் அளவு இருக்கையில், என் மொழி, என் நாட்டு என் நண்பன் என்னை இப்படி தாக்கியது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருந்தது, //

கவலைப்படாதீர்கள். இதெல்லாம் மிகவும் சகஜமாகிவிட்டது. எனக்கும் இத்தகைய மயில்கள் வருவதுண்டு..


இந்த போக்கு வரும் ஆண்டிலாவது மாறுமா என்று பார்ப்போம்//

நிச்சயம் மாறும்.. நம்பிக்கை வைப்போம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...//

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீஷிவ்..

உங்களுடைய பணியில் நீங்கள் மென்மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன்.

ENNAR said...

ஜோசப் சார் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

tbr.joseph said...

மிக்க நன்றி ENNAR,

உங்களுக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

ஜோசப் சார்,
ரெம்ப தேவையான பதிவொன்றை தந்திருக்கீங்க.

விவாதங்கள் ஆரோக்கியமான முறையில் இருக்கும் வரை பிரச்சனைகளேயில்லை. பல சூடான விவாதங்கள் இணையத்தில் மட்டுமே நடந்தேற முடியும்.

கீஅத்தரமாயில்லாமல் இருந்தாலே போதுமானது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

:).

tbr.joseph said...

வாங்க சிறில்,

விவாதங்கள் ஆரோக்கியமான முறையில் இருக்கும் வரை பிரச்சனைகளேயில்லை. பல சூடான விவாதங்கள் இணையத்தில் மட்டுமே நடந்தேற முடியும்.//

புத்தாண்டு தினத்தன்று துவங்கவிருக்கும் தமிழ்மண விவாதக்களம் இதற்கு வழிவகுக்கும் என்று நம்புவோம்.

உங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி சிறில்..

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

மிகவும் தேவையான பதிவு, நன்றிகள்!

tbr.joseph said...

நன்றி ஜீவா.