29 December 2006

வேண்டாம் இந்த போக்கு!!

இவ்வருடத்திய இறுதிப் பதிவு இது என்ற நிலையில் இத்தகைய பதிவை எழுதுவதா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்துப் பார்த்துவிட்டு பிறகு எழுதுவது என தீர்மானித்து எழுதிய பதிவு இது.

சமீப காலமாகவே நம்முடைய இளம் வலைப்பதிவாளர்கள் பலரும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவுகளின் மையக்கருத்தையும் அதற்கு கிடைத்துவரும் பெருவாரியான ஆமோதிப்புகளையும் பார்த்து என்னுள் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவே இப்பதிவு.

பதிவாளார் எழுதும் கருத்தை விடவும் தீவிரமான கருத்துக்கள் இப்பதிவை ஆதரித்து வரும் பதில்களில் காண நேருகையில் மனதில் ஒரு இனந்தெரியாத கலக்கம் ஏற்படுகிறது.

என்னுடைய தலைமுறையில் இருந்த இளைஞர்களுடைய எண்ணங்களில், அதாவது சுமார் முப்பதாண்டு காலங்களுக்கு முன்பு, இத்தகைய இன, மத துவேஷங்கள் இருந்தனவா என எண்ணிப் பார்க்கிறேன்.

அன்றைய தலைமுறையினரின் முழு எண்ணமும் எப்படியாவது நம்மைக் கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஆளாக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தங்களுடைய உழைப்பையெல்லாம் அர்ப்பணித்த தங்களுடைய பெற்றோர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவதிலேயே இருந்தது.

தங்களுடைய ஒருவேளை உணவையும் தியாகம் செய்து பணத்தை சேமித்து வைத்து தங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்தை சீருடனும் சிறப்புடனும் உருவாக்கவேண்டும் என்ற தங்களுடைய பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி நின்ற காலம் அது.

நான் பிறந்து வளர்ந்த இடம் சென்னை. பெரும்பாலும் வேப்பேரி, சூளை, பெருமாள் பேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம், போன்ற கிறிஸ்துவ, இந்து, முஸ்லீம், வடக்கத்தி இந்துக்கள் பெருமளவில் குடியிருந்த பகுதிகளில் வசித்திருக்கிறேன்.

பல இன, சாதிகளைச் சார்ந்த பலரும், பல மதங்களைச் சார்ந்தவர்களும் ஒரே வீட்டில் பல குடியிருப்புகளில் (அப்போது குடித்தனக்காரர்கள் என்பார்கள்) ஒற்றுமையுடன் எவ்வித பேதமும் இல்லாமல் வசித்து வந்த காலம் அது.

நான் குடியிருந்த பகுதிகள் எல்லாமே பொருளாதாரத்தில் நடுத்தர அல்லது அதற்கு சற்று கீழே உள்ளவர்கள் வசித்து வந்த பகுதிகள். மாடி வீடுகளும், மச்சு வீடுகளும் அதிகம் இருந்ததில்லை. ஒரே வீட்டில் பல குடியிருப்புகள் இருக்கும். எதிரெதிர் வாசல். ஐந்து வீடுகளுக்கு ஒரு கழிப்பிடம்.

என்னுடைய பள்ளிப் பருவத்திலே சுமார் ஐந்தாண்டுகள் இத்தகைய சூழலில் வளர்ந்தவன் நான். என்னுடைய குடியிருப்பிலே தமிழ், மலையாளம், தெலுங்கு, சவுராட்டிரர் ஏன் ஒரு ஹிந்தி மொழிப் பேசும் குடும்பமும் இருந்திருக்கிறது. இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவ குடும்பங்கள்...

தீபாவளி, ஓனம், ரம்ஜான், கிறிஸ்துமஸ் இவை எல்லாமே பொதுவான பண்டிகைகளாக கருதப்பட்டு வந்த காலம் அது. என்னுடைய வீட்டிலே நான், என் சகோதரர்கள், குடியிருப்பிலிருந்த அனைத்து மத நண்பர்களும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் குடிலும், கூண்டு நட்சத்திரமும் செய்து மகிழ்ந்த காலம் அது.. தீபாவளி, போகி பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடித்தும், மோளம் கொட்டியும் மகிழ்ந்திருந்த காலம் அது.

இந்துக்கள் வீட்டில் சுவாமிக்கு படைத்தது.  உண்டால் பூதம் பிடிக்கும் என்ற மடத்தனமான கொள்கைகளெல்லாம் என் வீட்டில் கண்டிராத ஒன்று. எனக்கு தெரிந்தவரை என் குடும்பத்தில் இருந்த எந்த பிள்ளைகளுக்கும் இத்தகைய வழிநடத்துதல் இருந்ததில்லை.
என் குடும்பம் என்றால் என் தாயார் வழியில் ஏழு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் உள்ள பெரிய குடும்பம். என்னையும் என் சகோதரர்களையும், என் சித்தப்பா, சித்தி, குடும்பங்களிருந்த பிள்ளைகளையும் சேர்த்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகளைக் கொண்ட குடும்பம்.

ஆகவேதான் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் தஞ்சை, மதுரை, தூத்துக்குடி போன்ற ஊர்களில் பணியாற்ற நேர்ந்தபோது சாதி அடிப்படையில் மனித உறவுகளை எடைபோட்டு பார்த்த நிலையைக் கண்டு அதிர்ந்துபோனேன்.

என்னுடைய மதத்தைக் காட்டி நான் இன்ன சாதியைச் சார்ந்தவனாகத்தான் இருப்பேன் என்று அவர்களாகவே கற்பித்துக்கொண்டு எனக்கு குடியிருக்க வீடு மறுக்கப்பட்டபோதுதான் இந்த அவல நிலையை கண்கூடாகக் காண நேர்ந்தது.

எனக்கு ஏற்பட்ட இத்தகைய அவலங்கள்தான் என் பிள்ளைகள் இருவருக்கும் அவர்கள் இன்ன சாதி என்பதே தெரியக்கூடாது என்று அவர்களுடைய பள்ளி சான்றிதழ்களில் என்ன சாதி என்பதைக் கூட குறிப்பிடலாகாது என்பதில் பிடிவாதமாக நின்றேன் நான்.

அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு!

ஆனால் இன்றும் இதையே பெரிய விஷயமாகக் கருதி இன்ன சாதிக்காரன் இப்படி, இந்த மதத்தைச் சார்ந்தவன் தஞ்சையில் பெருகி வருகிறான், சென்னையில் பெருகி வருகிறான், மதுரையில் இன்ன சாதியினர் நலிந்து வருகின்றனர் என ஏதோ இதனால் உலகமே முடிந்துவிடப்போகிறது என்கின்ற பாணியில் வேலை மெனக்கெட்டு பதிவுகள் எழுதுவதும்.. ஐயோ, அப்படியா? என்ன அக்கிரமம் இது என்பது பலரும் அங்கலாய்ப்பதும்..

ஒன்றை மறந்துவிடாதீர்கள்!

நாம் எல்லோரும் முதலில் இந்தியர்கள்..

நான் என்ன இனத்தை, எந்த மதத்தை சார்ந்தவனாகிலும் நான் எந்த மொழியைப் பேசுபவனானாலும் நான் முதலில் இந்தியன்..

இந்தியக் குடியுரிமை பெற்றவன் எவனும் அவனும் இந்துவானாலும், முஸ்லீமானாலும், கிறிஸ்துவனானாலும் அவன் இந்தியனே.

அவன் நாட்டின் எந்த மூலை முடுக்கானாலும் அங்கு குடியிருக்கவும், வணிகம் செய்யவும் அவனுக்கு முழு உரிமையுண்டு..

கிறிஸ்துவன் என்பதால் அவன் இத்தாலியனும் அல்ல, முஸ்லீம் என்பதால் அவன் பாகிஸ்தானியும் அல்ல.

அரசியல்வாதிகள் அரசியல் நடத்த என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும். அது அவர்களுடைய பிழைப்பு.

ஆனால் நண்பர்களே, வேண்டாம் நமக்கு அந்த போக்கு..

சமத்துவபுரங்களை அமைத்து பொருளாதாரத்தில் நலிவடைந்த, சமுதாயத்தின் அடிமட்டத்தில் அமிழ்ந்துக்கிடக்கும் அனைத்து இனத்தவரையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்கும் முயற்சி நடந்துக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் படித்த இளைஞர்கள் இத்தகைய பாதையில் செல்வது அழகல்ல.

இன்றுடன் இப்போக்கை கைவிடுவோம்..

நல்ல எண்ணங்களை எழுதுவோம், ஆதரிப்போம் என்ற முடிவெடுங்கள்..

புலரும் புத்தாண்டில் நல்ல கருத்துகளை மட்டும் எழுதுவோம், ஆதரிப்போம்..

அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

*****

28 December 2006

திரும்பிப் பார்க்கிறேன் II - 12

ஆந்திர மாநிலத்தில் இயங்கி வந்த எல்லா வங்கி கிளைகளுமே மீன் வளர்ப்பு தொழிலுக்கு போட்டி போட்டுக்கொண்டு கடன்களை வழங்கியிருந்த காலம் அது.

நான் ஆய்வுக்குச் சென்றிருந்த கிளையிலிருந்தும் பல கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டிருந்தன. எங்களுடைய கிளை இயங்கிவந்த மாவட்டத்தில் அப்போது அரசியலில் மிகவும் பிரபலமாயிருந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மாவட்டத்திலிருந்த பெருவாரியான விளை நிலங்கள், உப்பளங்களை ஏக்கர், ஹெக்டேர் கணக்கில் குத்தகைக்கு வளைத்துப் போட்டு மீன்வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருந்த காலம் அது.

அம்மாவட்டத்தில் எங்களுடைய வங்கியையும் சேர்த்து சுமார் இருபது வங்கிகள் இயங்கி வந்தன. அங்கு வணிகம் மற்றும் தொழில்கள் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாதிருந்த சூழலில் விவசாயம், உப்பு தயாரித்தல் மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவையில் மட்டுமே அங்குள்ள பெருவாரியான வணிகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

விவசாயமும் , உப்பு தயாரிப்பு தொழிலும் நலிவடைந்திருந்ததால் அதில் ஈடுபட்டு நஷ்டமடைந்திருந்த விவசாயிகள் தங்களுக்கு அசுர விகிதத்தில் கடன் வழங்கியிருந்த செல்வந்தர்களிடத்திலேயே தங்களுடைய விளைநிலங்களை இழந்து அவர்களிடத்திலேயே மீன் பண்ணைகளில் கூலிக்கு உழைத்துகொண்டிருந்தனர்.

நான் என்னுடைய கிளைக்குச் சென்றடைந்ததும் முதல் வேலையாக கடனுக்கு விண்ணப்பித்திருந்த வாடிக்கையாளரையும் மீன் பண்ணை அமைக்கப்படவிருந்த இடத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலாளர் முன் வைத்தேன். அவரோ  என்னுடைய கோரிக்கையை எதிர்பார்த்திருந்ததுபோல், ‘சாரி சார். நீங்க வர்றதா முன்னாலயே சொல்லியிருந்தா நானே அதுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பேன். அந்த ஃபர்ம்மோட மெய்ன் பார்ட்னர் நேத்துத்தான் டெல்லி வரைக்கும் போயிருக்கார். வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகுமாம். அவர் இல்லாதப்போ பண்ணைக்கு போனாலும் நம்மள உள்ள விடமாட்டாங்க.’ என்றார்.

எனக்கென்னவோ அவர் அதை கூறிய விதமே சரியாகப்படவில்லை. இருப்பினும் என்னுடைய சந்தேகத்தை அவரிடம் கூறாமல், ‘பரவாயில்லை சார். நாம அந்த ஏரியாவில வேற சில பண்ணைகளுக்கு லோன் குடுத்திருக்கோமே. அதையாவது பார்த்துட்டு போயிடறேன். வந்த ட்ரிப்ப இதுக்காவது யூஸ் பண்ணிக்கலாம். இந்த பண்ணைய அடுத்த ட்ரிப்புல பாத்துக்கலாம். என்ன ஒன்னு நான் பார்த்து சர்ட்டிஃபை பண்ற வரைக்கும் அவங்க லோன் பேப்பர்ஸ் நம்ம எச்.ஓவுக்கு போகாது. இந்த விசிட்டுல பாக்க முடியாமப் போனா ஒரு மாசம் கழிச்சித்தான் மறுபடியும் வர முடியும். அவங்க ஃபேமிலியில வேற யாரும் இருந்தா கூப்பிட்டு சொல்லிருங்க.’ என்றேன்.

அவர் இதை எதிர்பார்க்கவில்லையென்பது என்பது அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.

‘சார் ஒரு நிமிஷம், அவங்கள கூப்ட்டு சொல்லிட்டு வரேன்.’ என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினார். இந்த அறையிலேயே தொலைப்பேசி இருக்கையில் அவர் எதற்காக அறையைவிட்டு வெளியே செல்கிறார் என்ற நினைப்பில் அவரையே பார்த்தேன். அவர் எங்களுடைய வர்த்தக ஹாலைக் கடந்து எதிர் கோடியில் இருந்து கதவுகளைத் திறந்துக்கொண்டு வெளியேறியதைப் பார்த்தேன்.

அவருடைய குடியிருப்பு வங்கி அலுவலகத்தின் பின்புறத்தில்தான் இருந்தது. ஆகவே அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி செய்ய விரும்பாமல் தன்னுடைய குடியிருப்பிற்கு செல்கிறார் என்பது எனக்கு விளங்கியது.

அவர் திரும்பி வரும்வரை வெறுமனே அமர்ந்திருக்க விரும்பாமல் வர்த்தக கூடத்தில் (Banking Hall) அமர்ந்திருந்த ஜுனியர் அதிகாரிகளிடம் உரையாடும் நோக்கத்தில் அறையை விட்டு வெளியே சென்றேன்.

அந்த கிளை துவக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்ததாலும் நான் சென்றிருந்த நேரம் வர்த்தக பாஷையில் peak hour என்பதாலும் கவுண்டரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமிருக்க எல்லா குமாஸ்தாக்களும், அதிகாரிகளும் அவர்களைக் கவனிப்பதில் மும்முரமாயிருந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் மேலாளர் தன்னுடைய குடியிருப்பிலிருந்து வெளியே வர நான் அவருடைய அறைக்கு திரும்பும் எண்ணத்தில் கூடத்திலிருந்து அவருடைய அறையை நோக்கி நடந்தேன். மேலாளர் அறைக்கு வெளியே இருந்த மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளுக்கு மேலே இருந்த கோப்பின் மீது எழுதி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளரின் பெயர் என்னுடைய கவனத்தை ஈர்க்க போகும் போக்கில் அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.

என்னுடைய கையிலிருந்த கோப்பைப் பார்த்ததும் சட்டென்று மேலாளர் முகத்தில் ஏதோ ஒரு பதற்றம் தோன்றி மறைந்ததுபோன்ற உணர்வு. ஆயினும் ஒருவேளை நாந்தான் தேவையில்லாமல் கற்பனை செய்கிறேனோ என்னவோ என்று நினைத்து அதைப் பொருட்படுத்தாமல் அவர் முன்னே அமர்ந்து கோப்பில் எழுதியிருந்த பெயரை மீண்டும் வாசித்தேன்.

‘இது நம்மக்கிட்ட லோன் அப்ளை பண்ணியிருக்கற பார்ட்டிதானே?’ என்றேன். அவர் தயக்கத்துடன் மாம் என்று தலையை அசைத்தார்.

‘ஆனால் இது நம்ம பேங்க் ஃபைல் இல்லையே? இது எப்படி இங்க?’ என்றேன்.

அவர் அப்போதுதான் அந்த கோப்பை முதன்முறையாகப் பார்ப்பதுபோல் என்னிடம் இருந்து வாங்கி புரட்டிப் பார்த்துவிட்டு தன்னுடைய இருக்கைக்குப் பின்னாலிருந்த ஒரு அலமாரியில் வைத்தார். ‘ஆமா சார். டஇது ----------------- பேங்குக்கு அவங்க க்ரூப் கம்பெனி ஒன்னு அனுப்பியிருக்கற ப்ரொப்போசலோட காப்பி. சும்மா ஒரு ரெஃபரன்சுக்காக வாங்கினேன்.’

அவருடைய பதிலில் நான் சமாதானமடையாவிட்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘என்ன சார் ஃபோன் செஞ்சீங்களா?’ என்றேன்.

அவர் உடனே, ‘ஆமா சார். நல்லவேளையா அவர் போக இருந்த ஃப்ளைட் நேத்து க்ளைமேட் மோசமா இருந்ததால கிளம்பறதுக்கே ரொம்ப டிலே ஆயிருச்சாம். அதனால சகுணம் நல்லால்லேன்னு திரும்பி வந்துட்டாராம். வீட்லதான் இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வராராம்.’ என்றார்.

‘அவர் எதுக்கு இங்க வரணும்? வேண்டாம்னு சொல்லிருங்க. அவர நேரா சைட்டுக்கு வந்துரச் சொல்லுங்க. ஒங்களுக்கு வழி தெரியும்தானே? வேணும்னா லோக்கல் பியூன துணைக்கு கூப்ட்டுக்குங்க.’

அவர் ஏற்கனவே பலமுறை அந்த பண்ணை அமைக்கப்படவிருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதாக அவருடைய பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு சொந்தத்தில் நாற்சக்கர வாகனம் இருந்ததும் எனக்கு தெரியும். ஆனால் அவரோ என்னுடைய கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தடுமாற நான் அதைக் கண்டுக்கொள்ளாதவன்போல் எழுந்து நின்றேன்.

அவரும் வேறு வழியில்லாமல் கிளம்பினார். தன்னுடைய மனைவியிடம் கூறிவிட்டு வருகிறேன் என்று அவர் தன்னுடைய குடியிருப்புக்கு மீண்டும் செல்ல நான் சென்னையிலிருந்து கையோடு கொண்டுவந்திருந்த கடன் விண்ணப்ப நகல் அடங்கியிருந்த கோப்பை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.

அவர் குடியிருப்புக்கு சென்றது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு விவரத்தை தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்தான் என்பதை நான் உணர்ந்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த சில நிமிடங்களில் கார் சாவியுடன் திரும்பிய மேலாளருடன் கிளம்பினேன். அவர் கிளை துவக்கப்பட்டதிலிருந்து பணியாற்றிய உள்ளூர் சிப்பந்தி ஒருவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

நகரத்தின் எல்லை வரை இலகுவாக வாகனத்தை செலுத்திய அவர் அதன் பிறகு வழிதெரியாமல் உள்ளூர் சிப்பந்தியின் உதவியை அவ்வப்போது நாடுவது நன்றாகவே தெரிந்தது. அவர் அந்த கிளைக்கு மேலாளராக வந்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் நிறைவேறியிருந்ததால் அரைகுறை தெலுங்கும் தெரிந்திருந்தது. இளம் பருவத்தில் சென்னையில் நான் வளர்ந்த இடத்தைச் சுற்றிலும் பல தெலுங்கு குடும்பங்கள் இருந்ததால் தெலுங்கில் பேசினால் புரிந்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு எனக்கு விவரம் இருந்தது.

ஆகவே என்னுடைய மேலாளரும் அவருடைய சிப்பந்தியும் பேசிக்கொண்டதிலிருந்து அவர் முதல் முறையாக அந்த ரூட்டில் செல்கிறார் என்பது மட்டும் விளங்கியது. என்னுடைய எண்ணத்தை அவரும் உணர்ந்திருக்க வேண்டும். ‘இதுவரைக்கும் நான் தனியா கார்ல வந்ததில்ல சார். பார்ட்டீசே வந்து கூட்டிக்கிட்டு போயிருவாங்க. அதனால நான் ரூட்டை பத்தி கவலைப் பட்டதில்ல.’ என்றார்.

நான் லேசான ஒரு புன்னகையுடன் பரவாயில்லை என்பதுபோல் வாளாவிருந்தேன். அவருடைய சிப்பந்திக்கும் வழி சரியாக தெரியாததால் வழியிலிருந்தவர்களை கேட்டு, கேட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரம் எடுத்திருந்தது.

பண்ணை வாயிலில் நின்றிருந்த ஒரு மேலைநாட்டு வாகனமும் ஜீப்பும் கடன் விண்ணப்பித்திருந்த வாடிக்கையாளர் ஏற்கனவே வந்திருந்தார் என்பதை எனக்கு உணர்த்தியது.

வரும் வழியில் என்னுடைய மேலாளர் வாடிக்கையாளரைப் பற்றி கூறியதில் அவருக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பற்றித்தான் அதிகம் இருந்ததை நான் உணர்ந்தேன். அத்துடன், ‘பார்ட்டி ரொம்ப பெரிய செல்வாக்குள்ள பார்ட்டி சார். அதனால நீங்க அவங்கள சந்தேகப்பட்டு இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருக்கறதா அவங்கக்கிட்ட சொல்ல தயக்கமா இருந்தது. நீங்களும் சொல்லாம இருந்தா நல்லாருக்கும்.’ என்றார்.

பண்ணை வாசலில் நின்றிருந்த வாகனங்களும் வாசலில் நின்றிருந்த அடியாட்கள் கூட்டமும் அவர் கூறியதை நிரூபித்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாத்திகள் கட்டப்பட்டு நீர் நிரம்பியிருந்ததை காண முடிந்தது. அவற்றுடன் ஆங்காங்கே நிலத்தடி நீரை இழுத்து பாய்ச்சும் சக்திவாய்ந்த ப்ரொப்பல்லர் பம்ப் செட்டுகள் நீரை மீதமிருந்த பாத்திகளில் பாய்ச்சிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

நான் கையோடு கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தில் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை துவக்கவிருப்பதாக குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வர நான் திரும்பி என்னுடைய மேலாளரைப் பார்த்தேன்.

அவரும் அப்போதுதான் முதல் முறையாக அந்த பண்ணைக்கு வந்துள்ளார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய அதிர்ச்சியிலிருந்தே தெரிந்தது.

தொடரும்..

27 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 11

என்னுடைய அலுவலகத்தின் கீழ் இயங்கிவந்த கிளைகளில் வணிக அளவில் நடுத்தரத்திற்கும் சற்று கூடுதலான வங்கிகளில் சில ஆந்திர மாநிலத்தில் இருந்தன.

தென்னிந்தியாவில் விவசாயத்துறையில் மிகப்பெரிய செல்வந்தர்களைக் கொண்ட மாநிலம் ஆந்திரா என்றால் மிகையாகாது. குறிப்பாக தலைநகரமான ஐதராபாத், நடுத்தர நகரங்கள் எனப்படும் குண்ட்டூர், விஜயவாடா, விசாகப்பட்டணம் போன்ற நகரங்களிலும் அதனையடுத்த நகரங்களிலும் இயங்கிவந்த கிளைகள் சில கேரள மாநிலத்தில் இயங்கி வந்த கிளைகளைக் காட்டிலும் பலமடங்கு அதிக வணிகத்தை கையாண்டன.

விவசாயத்தை இயந்திரமயமாக்கியதில் ஆந்திராவுக்கு நிறைய பங்குண்டு.. ஏன் இத்துறையில் அவர்கள் முன்னோடிகள் என்றாலும் மிகையாகாது. எங்களுடைய வங்கியிலிருந்து வழங்கிய விவசாயக் கடன்களில் சுமார் எழுபது விழுக்காடு ஆந்திராவில் இயங்கி வந்த கிளைகள் வழியாகவே வழங்கப்பட்டிருந்தன.

விவசாயத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகித்தது மீன் வளர்ப்புத் தொழில். குறிப்பாக மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இத்தொழில் அப்போது சூடுபிடித்திருந்தது. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் இத்தொழில் நடந்து வந்தது.

இத்தொழிலுக்கு தேவையான நிலங்களை வாங்க அல்லது  குத்தகைக்கு எடுக்க, மீன் குஞ்சுகள் அல்லது சினைகள் வாங்க, அதை வளர்ப்பதற்கு தேவையான சுத்தமான நிலத்தடி நீரை கொண்டு வர மோட்டார்கள், பைப்புகள், ப்ரொப்பலர்கள் பம்ப் செட்டுகள் வாங்க, நிர்மானிக்க, பராமரிக்க என லட்சக் கணக்கில், ஏன் சில சமயம் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்படுவதுண்டு.

அத்தகைய வாடிக்கையாளர்கள் எங்கள் வங்கியிலும் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட கடன் தொகைக்கு கூடுதலாக வழங்க நேருகையில் எங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்து கடன் வழங்குவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆய்வுகளுக்கு (pre sanction and post sanction inspection) என்னைப் போன்ற அதிகாரிகளை அனுப்புவதுண்டு. தேவைப்பட்டால், அதாவது கோரப்படும் தொகை கணிசமான அளவாக இருக்கும் பட்சத்தில், கடன் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதுமே எங்களுடைய மத்திய அலுவலகத்தின் உத்தரவின்பேரில் ஆய்வுக்கு செல்வதும் உண்டு.

வழக்கமாக நடைபெறும் ஆய்வுகள் (routine inspections) ஒரு கிளையின் செயல்பாடுகள் வங்கியின் நியதிப்படி உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நடத்தப்படும் ஆய்வுகள் என்றால் மேலே குறிப்பிட்ட ஆய்வுகள் கடன் கோரி விண்ணப்பத்திருக்கும் வாடிக்கையாளர் அந்த கடனைப் பெறுவதற்கு தகுதியானவர்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள செய்யப்படுகின்றன.

இதற்கு முழுப்பொறுப்பு கடனைப் பரிந்துரைத்த கிளை மேலாளர்தான் என்றாலும் அவருடைய கணிப்பு வங்கி நிர்ணயித்திருந்த நியதிகளுக்குட்பட்டு செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசீலனை செய்யவோ அல்லது அவருடைய கணிப்பில் ஏதேனும் குறை இருப்பின் அதை நிவர்த்தி செய்ய வழியுள்ளதா என்பதை ஆராயவுமே இத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இத்தகைய ஆய்வுகள் சிலவற்றிற்கு நானும் சென்றிருக்கிறேன்.

சாதாரணமாக இத்தகைய கடன்களுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டு என்னுடைய வட்டார மேலாளரின் பரிசீலனை மற்றும் பரிந்துரைக்காக அனுப்பப்படும்.

கிளைமேலாளாரின் கணிப்பில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால் மட்டுமே தலைமையகத்திற்கு பரிந்துரை செய்வதற்கு முன்பு ஆய்வுக்கு செல்வோம்.

நான் குறைபாடுகள் என்று இங்கே குறிப்பிடுவது மேலாளரின் கடன் தொகை அளவிற்கான கணிப்பில் அல்ல. அது சாதாரணமாகவே எல்லா பரிந்துரைகளிலும் காணப்படும். பத்து லட்சம் கடன் தேவைப்படும் வாடிக்கையாளர் குறைந்த பட்சம் பதினைந்து லட்சம் கோருவார். கிளை மேலாளர் அதை சற்று குறைத்து பதிமூன்று அல்லது பதிநான்கு லட்சத்திற்கு பரிந்துரைப்பார். அதில் சற்று குறைந்து பன்னிரண்டு லட்சத்திற்கு வட்டார மேலாளர் பரிந்துரைப்பார். தலைமையகத்தில் அதை வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பத்து லட்சத்திற்கு குறைத்து இறுதியில் அனுமதி வழங்குவார்கள். வாடிக்கையாளருக்கு உண்மையில் தேவைப்படும் கடன் கிடைத்த திருப்தி.

ஆகவே இத்தகைய குறைபாடுகளை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வதற்கு முன்பே ஆய்வு நடத்த வேண்டி வருவது கடன் விண்ணப்பித்திருந்த வாடிக்கையாளரைக் குறித்து கிளை மேலாளர் செய்திருந்த கணிப்பில் காணப்படும் குறைபாடுகள்தான்.

ஒரு வாடிக்கையாளரின் பூர்வீகம், குடும்பப் பின்னணி, அவருடைய சொத்து மதிப்பைப் பற்றிய கணிப்பு, சம்பந்தப்பட்ட தொழிலை நடத்தக்கூடிய வாடிக்கையாளருக்கு உள்ளதா, கடனைத் திருப்பிச் செலுத்த தேவையான வசதிகள் அவருக்கு உள்ளனவா என்பதை ஓரளவுக்கு முழுமையாக கணிக்க வங்கி பல நியதிகளை நிர்ணயித்திருந்தது.

அத்தகைய நியதிகளை ஒரு கிளை மேலாளர் சரிவர கடைப்பிடித்திருக்கிறாரா என்பதை பரிசீலனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களையும் எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரிக்கே அழைத்து வட்டார அலுவலகங்களில் பணியாற்றிய என்னைப் போன்ற அதிகாரிகளைப் பயிற்சிவிப்பதும் உண்டு.

குறிப்பிட்ட கிளையிலிருந்து வந்திருந்த ஒரு கடன் விண்ணப்பத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய என்னை பணித்ததற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று கடன் தொகை அதுவரை இல்லாத அளவு கணிசமானதாக இருந்தது.

அத்துடன் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க இயலாத அளவுக்கு மிக திறமையாக, முழுமையாக தயாரிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக கிளை மேலாளர்கள் பரிந்துரைக்கும் இத்தகைய விண்ணப்பங்களில் பெரிதாக ப்ரொஃபஷனலிசம் இருக்காது. ஒரு வங்கி அதிகாரிக்கு இருக்கும் விவரங்களின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய பரிந்துரைகளை மேற்பரிசீலனை செய்வதற்கு தேவைப்படும் விஷயங்களை வட்டார அலுவலகங்களில் இப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மேலாளரையோ அல்லது அவரால் திறம்பட பதிலளிக்க இயலாத சமயங்களில் நேரடியாக வாடிக்கையாளரையோ தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பெறுவதுண்டு.

ஆகவே நான் குறிப்பிட்ட விண்ணப்பம் மிகத் திறம்பட அதை பரிசீலனை செய்ய தேவைப்படும் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியிருந்ததால் என்னுடைய அலுவலகத்தில் கடன் வழங்கும் பிரிவிற்கு தலைவராயிருந்த சீஃப் மேலாளருக்கு வியப்பாயிருந்ததுடன் இதன் பின்புலத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டது. இது நிச்சயம் நம்முடைய கிளை மேலாளரால் தயாரிக்கப்பட்டதல்ல என்ற ஐயமும் இருந்தது அவருக்கு.

ஆகவே அவர் என்னுடைய உடனடி அதிகாரியைக் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட கிளைக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தில் சமர்ப்பித்திருப்பதெல்லாம் சரிதானா என்பதை ஆய்வு செய்ய எங்களுடைய ஆய்வு இலாக்காவிலிருந்து ஒரு அதிகாரியை அனுப்புவதென தீர்மானித்தார்.

என்னுடைய உடனடி அதிகாரிக்கு என்னை அனுப்ப அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட சீஃப் மேலாளருடைய பரிந்துரையின் பேரில் ஒத்துக்கொண்டார்.

சாதாரணமாக எங்களுடைய ஆய்வு இலாக்காவிலிருந்து செல்கையில் முன்னறிவிப்பில்லாமல் செல்வது வழக்கம். ஆனால் இது அத்தகைய ஆய்வு இல்லையென்பதாலும் நான் செல்லும் நேரத்தில் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்த வாடிக்கையாளரும் ஊரில் இருக்க வேண்டும் என்பதாலும் நான் புறப்படுவதற்கு ஒரு வாரம் முன்பே கிளை மேலாளரை அழைத்து நான் இன்ன தேதியில் வருவதாகவும் அந்த சமயத்தில் அவரும் வாடிக்கையாளரும் ஊரில் இருக்க வேண்டும் என்றும் அவரிடம் சொல்லிவிடலாமா என்று வினவினேன் என் அதிகாரியிடம்.

அவரோ என்னை என்ன நீ முட்டாளா என்பதுபோல் பார்த்தார். ‘என்ன டிபிஆர் சொல்றீங்க? இந்த ப்ரொப்போசல்லயே டவுட் இருக்கறதுனாலதான ஒரு ப்ரீ சாங்ஷன் இன்ஸ்பெக்ஷன் தேவைன்னு தீர்மானிச்சோம்? நீங்க பாட்டுக்கு ஆன் தி ஸ்பாட் வெரிஃபிகேஷனுக்கு நீங்க வரீங்கன்னு ஃபோன் போட்டு சொன்னா நம்ம  மேனேஜர் அந்த பார்ட்டிய கூப்ட்டு சொல்ல மாட்டாரா? அப்புறம் ஒங்க விசிட்டுக்கு என்ன அர்த்தம்?’

சாதாரணமாக தன்னுடைய நிழலையே சந்தேகத்துடன் பார்ப்பவர் அவர். இவரிடம் போய் கேட்டேன் பார் என்று என்னையே நொந்துக்கொண்டு அவர் இல்லாத நேரத்தில் சம்பந்தப்பட்ட கடன் பிரிவின் அதிகாரியை அணுகி 'முன்னறிவிப்பில்லாமல் நான் அங்கு சென்று நம்ம மேனேஜரோ அல்லது விண்ணப்பதாரரோ ஊரில் இல்லாமல் போனால் என்ன செய்வது சார்?’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டு, ‘ஒங்க பாஸ் சொன்ன மாதிரியே செஞ்சிரலாம் டிபீஆர். ஏன்னா நீங்க போற நேரத்துல நம்ம மேனேஜரும் அந்த பார்ட்டியும் இல்லாம போறது ஒரு வகையில நமக்கு நல்லதுன்னுதான் நினைக்கிறோம். நம்ம மேனேஜர் இல்லன்னா பிராஞ்சுலருக்கற ஒரு ஜூனியர் ஆஃபிசர கூட்டிக்கிட்டு நீங்க சைட்டுக்கு போலாம். அந்த பார்ட்டி ஊர்ல இல்லன்னாலும் ப்ராஜக்ட் சைட்ல யாராச்சும் நிச்சயம் இருப்பாங்க. ஏறக்குறைய நூறு ஏக்கர் சைட் அது.. அட்லீஸ்ட் வாட்ச் மேனாவது இருப்பாங்க. நீங்க நிம்மதியா எந்த இடைஞ்சலும் இல்லாம இன்ஸ்பெக்ட் பண்ணிட்டு வரலாம்.’ என்றார். பிறகு, ‘டிபிஆர். நீங்க ஒரு இன்ஸ்பெக்டரா போறீங்க. மறந்துராதீங்க. ஒங்க ஆப்ஜெக்ட் திங்கிங்கோட பாக்காதீங்க. ஒங்க கொனம் தெரிஞ்சிதான் ஒங்க பாஸ் ஒங்கள அனுப்ப வேண்டாம்னு நினைக்கிறார். So, act like an inspector when you are there.. You should report whatever you observe there.. Please remember, based on your report only I would decide whether or not to consider this proposal.’ என்றார் கண்டிப்புடன்.

சாதாரணமாக அவர் அப்படி பேசாதவர் என்பது எனக்கு தெரிந்திருந்ததால் அவர் பரிந்துரைத்தபடியே சம்பந்தப்பட்ட கிளைக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பயணித்தேன்.

Hindsight அதாவது உள்ளுணர்வு என்பார்களே அதுபோலத்தான் இருந்தது.

என்னுடைய இரு சீஃப் மேலாளர்களும் நினைத்திருந்தது எத்தனை சரி என்பது அங்கு சென்று சேர்ந்தபோதுதான் தெரிந்தது..

தொடரும்

26 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 10

நான் குமாஸ்தா பதவியிலிருந்த காலத்தில் என்னுடைய கிளை மேலாளருக்கிருந்த சலுகைகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.

அவர்களுக்கென அலுவலக நேரம் என்று எதுவும் இருந்ததில்லை. நினைத்த நேரத்தில் வரலாம், போகலாம் என்ற உரிமையைப் பார்த்தபோது 'ஹ¥ம் கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைப்பேன்.

நான் பணிக்கு சேர்ந்த முதல் கிளையில் இருந்த மேலாளர் மாலை நேரங்களில் சரியாக நான்கு மணிக்கு எழுந்து சென்றுவிடுவார். கேட்டால் வர்த்தகத்தை விரிவாக்க செல்கிறேன் என்பார்.

தினமுமா? என்று நினைப்போம் நானும் என்னுடைய சக குமாஸ்தாக்களும்.

நான்கு மணிக்கு வெளியில் செல்பவர் சுமார் ஏழரை, எட்டு மணிக்கு மீண்டும் வருவார். வந்து இரண்டு, மூன்று தொலைப்பேசிகள் செய்துவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவார்.

‘நாம இருக்கறமா, இல்ல போய்ட்டமான்னு பாக்கறதுக்கே இந்த மனுசன் இந்த நேரத்துல வறார் பார்’ என்போம் எங்களுக்குள்.

அந்த பதவி அவர்களுக்கு அளித்திருந்த சலுகைகள் மட்டுமே குமாஸ்த்தா பதவியிலிருந்த எங்களுக்கு தெரிந்ததே தவிர அப்பதவி அவர்களுக்கு அளித்திருந்த பொறுப்பு, கடமைகள் எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனல் அதே பதவிக்கு நான் உயர்த்தப்பட்டபோதுதான் அதிலிருந்த பொறுப்புகள் மற்றும் கடமைகளின் பளு மற்றும் தீவிரம் எனக்கு தெரிந்தது.

குமாஸ்தா பதவியிலிருந்த காலத்தில் அதிக பட்சம் இரவு ஒன்பது மணி வரை வேலை. அன்றைய வேலையை முடித்துவிட்டால் நிம்மதியாக வீடு திரும்பலாம். பொறுப்புகள் அதிகம் இல்லாததால் படுத்தவுடன் உறங்கிப்போகும் நிம்மதி.

ஆனால் ஒரு கிளை மேலாளருக்கு அப்படியல்ல. இது அலுவலக நேரம், இது ஓய்வு நேரம் என்பதே இல்லாத பதவி அது. அதுவும் இந்த செல் ஃபோன் யுகத்தில் உண்ணும் நேரம், உறங்கும் நேரம் என்று கூட பாகுபாடு இல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் அலுவலக நேரம்தான் என்ற சூழல். படுக்கச் செல்லும் நேரத்திலும் செல் ஃபோனை அணைத்து வைத்துவிட்டு உறங்க முடியாத நிலைதான்.

நாம் எந்த பதவி வகித்தாலும் நமக்கு மேலுள்ளவர்களுக்கு இருக்கும் சலுகைகள்தான் நம் கண்களுக்கு தெரிகின்றன. அந்த சலுகைகளுடன் அவர்களுக்கிருக்கும் பொறுப்புகள், கடமைகள் நம்முடைய கண்களுக்கு புலப்படுவதில்லை.

நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோதும் என்னுடைய மனநிலை அப்படித்தான் இருந்தது.

மேசை அதிகாரிகளான நாங்கள் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை முயன்றும் அன்றைய பணி முடியவில்லையே என்ற நிராசையுடன் வீடு திரும்புகிறோம,  நம்முடைய வட்டார மேலாளரோ அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லையே என்று நினைப்பேன்.

கிளைகளை மேற்பார்வை செய்ய செல்கிறேன் என்று எங்களுடைய வட்டாரத்திலிருந்த எல்லா கிளைகளுக்கும் சென்றுவருவதே அவருடைய முக்கிய அலுவலாக இருந்தது. எங்களைப் போன்று ரயிலில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு.

எங்கெல்லாம் விமான சேவை இருந்ததோ அங்கெல்லாம் விமானப் பயணம்தான். எங்களைப் போன்று முன்னறிவிப்பில்லாமல் செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவரை விமான நிலையத்தில் வரவேற்று ஐந்து நட்சத்திர விடுதிகளின் வாசல்வரைக் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட கிளை மேலாளரே காத்துக்கொண்டு இருப்பார்.

ஆனால் அதே பதவி அவர் மீது திணித்திருந்த கட்டுப்பாடுகளை நான் முழுவதுமாக அறிந்திருக்கவில்லையென்பது அவருடைய இல்லத்தில் அவரை சந்தித்தபோதுதான் எனக்கு விளங்கியது.

‘டிபீஆர். நீங்க ரிப்போர்ட்ல எழுதுனது தப்புன்னு நான் நினைக்கல. இப்படியெல்லாம் அங்க நடக்குதுன்னு எனக்கு தெரியாம இல்ல. ஆனா ஒங்கள மாதிரி தைரியமா என்னால ரிப்போர்ட் பண்ண முடியல. ஏன் தெரியுமா? அந்த மேனேஜரோட கனெக்ஷன்ஸ். ஒங்க பதவி ஒங்களுக்கு குடுத்துருக்கற ஃப்ரீடம் என்னுடைய பதவியில இல்ல. நானும் நாலையும் பாத்துத்தான் ஆக்ஷன் எடுக்க முடியும். அந்த மேனேஜர மாத்தணும்னு ஏற்கனவே நான் நம்ம எச். ஆர். ஹெட்டுக்கிட்ட பேசினதுதான். ஆனா அவருக்கே அதுல ஃப்ரீடம் இல்ல. சேர்மன் கிட்ட போய் சொல்லலாம்தான். ஆனா அது அந்த டைரக்டருக்கு தெரியவந்தா அது ஒருவேளை என்னுடைய பொசிஷனுக்கே ஆபத்தா முடியும்கற சூழ்நிலை. அவர ரெண்டு வருசத்துக்குத்தான் போட்டிருந்தாங்க.. அடுத்த ப்ரொமோஷனுக்கு மெட்ரோ பிராஞ்ச் எக்ஸ்ப்ரீயன்ஸ் வேணுங்கறது நம்ம சர்வீஸ் கண்டிஷன்ல இருக்குல்ல. அதுக்காக அந்த டைரக்டரோட இனிஷியேட்டிவ்ல அவர அங்க போட்டது. ஆனா பசங்கள ஸ்கூல்ல சேர்த்துட்டேன்.. இன்னும் ஒரு வருசமாவது இங்க இருக்கணும்னு அவர் கேட்டதால அவர அங்கயே கண்டினியூ பண்ண அனுமதிச்சோம். அது முடிய இன்னும் ரெண்டு, மூனு மாசந்தான்.. இந்த வருசம் நடக்கப்போற இண்டர்வ்யூவில அவருக்கு நிச்சயமா அடுத்த ப்ரொமோஷன் குடுக்கணும்னுதான் ப்ளான். இந்த சமயத்துல நீங்க எழுதுன கமெண்ட்ஸ் அதுக்கு பாதகமாயிரும்போலருக்கு. ஒங்களுக்கு தெரியுமோ இல்லையோ ஒங்க இமிடீயட் பாஸ் இருக்காரே அவர், அந்த மேனேஜர், அந்த டைரக்டர் எல்லாருமே ஒரே ஃபேமிலியிலருந்து வந்தவங்க. நீங்க எழுதுன கமெண்ட்ஸ் அடுத்த நொடியே அந்த மேனேஜர் கிட்ட போயி அவர் அந்த டைரக்டர கூப்ட்டு சொல்ல.. நான் சரியா தூங்கியே ஒரு வாரமாச்சி டிபிஆர்.’ என்று அவர் பரிதாபமாக கூறியபோதுதான் என்னுடைய செய்கையின் தீவிரம் எனக்கு புரிந்தது. ‘I am really sorry Sir.. I didn’t realise that my action would put you in trouble.’ என்று மன்னிப்பு கோருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

பெருவாரியான நிறுவனங்களில் இத்தகைய சூழ்நிலை இப்போது இல்லையென்றாலும் அதிகாரிகளுக்குள் இருந்த போட்டி, பொறாமை, அடுத்துக் கெடுப்பது என்பதெல்லாம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய வங்கி நண்பர் ஒருவரை  சந்தித்தேன். அவர் மேலைநாட்டு வங்கிகளில் ஒன்றில் பணிபுரிகிறார். வைஸ் பிரசிடெண்ட் பதவி வகிப்பவர். அதாவது என்னுடைய டி.ஜி.எம் பதவிக்கு நிகரானது என்று கூறலாம்.

‘போன வாரம் எங்க கண்ட்ரி ஹெட் வந்தப்போ நடத்த கூத்த பாக்கணுமே.’ என்று துவங்கினார். ‘அவர் ஏர்போர்ட்ல வந்து இறங்கினப்போ நீ, நானுன்னு போட்டிப் போட்டுக்கிட்டு பொக்கே கொடுக்கப்போய் அங்க ஒரு குட்டி stampede ஏ ஆயிருச்சின்னா பாத்துக்கயேன். அவருக்கே லேசா எரிச்சல் வந்துருச்சி. என்னோட சேர்ந்து நாலு வி.பீஸ். இருக்கோம் சென்னையில. யாருமே அவர ரிசீவ் போகணும்னு இல்லை.. ரீஜினல் ஹெட் மட்டும் போனா போறும்.. எனக்கும் போறதுக்கு அவ்வளவா இஷ்டமில்லை.. ஆனா மத்த மூனு பேரும் போயி நா மட்டும் போகலைன்னா? இஷ்டம் இருக்கோ இல்லையோ.. இதெல்லாம் ஒரு farceனு தெரிஞ்சும்.. போய்.. ஏதோ டிராமாவுல வேஷம் கட்டிக்கிட்டு நிக்கறா மாதிரி..’

இதுதான் உயர் மட்டத்தில் இன்றும் நடக்கும் நாடகம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பார்த்தால் உறவு என்பதே இல்லாமல் போய்விடும். அப்படி பேசத் தெரியாமல் இருப்பவனுக்கு இன்றைய உலகம் அளிக்கும் பட்டம்: ‘பிழைக்கத் தெரியாதவன்!’

என்னுடைய வட்டார மேலாளரை நான் இல்லத்தில் சென்று சந்தித்து மன்னிப்பு கேட்க எங்களிருவரிடையிலிருந்த விரிசல் சரியானது.

அவர் நினைத்திருந்தால் என்னுடைய அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த மேலாளரை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரைய விலக்கிக் கொள்ளவோ, மாற்றி எழுதவோ கூறியிருக்கமுடியும்.

அப்படி அவர் கூறியிருந்தாலும் நான் அதற்கு சம்மதித்திருக்க மாட்டேன் என்று இப்போது வேண்டுமானால் ஜம்பமடித்துக்கொள்ளலாம். ஆனால் அன்று நான் இருந்த மனநிலையில் ஒத்துக்கொள்ள வாய்ப்பிருந்தது.

ஆனால் அவர் அதை நிர்பந்திக்கவில்லையென்பதே அவர் மீது எனக்கிருந்த மதிப்பை பன்மடங்கு கூட்டியது. அத்துடன் அடுத்த நாளே என்னை தன்னுடைய அறைக்கு அழைத்து என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவைகளுக்கு வங்கிக்கு எந்த பாதகமும் ஏற்படாமலிருக்க சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு துணை செய்ய என்னால் ஒரு மாத காலத்திற்கு அங்கு செல்ல முடியுமா என்றும் கேட்டார்.

நானும் உடனே சரியென்று சம்மதித்தேன்.

முந்தைய தினம் எனக்கு அவருடைய அறையில் கிடைத்த அவமதிப்பை அறிந்ததுமே ‘டிபீஆர் ஒழிந்தான்’ என்று எனக்கு தீர்ப்பிட்டிருந்த என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்த  சில அதிகாரிகள் அடுத்த நாள் நடவடிக்கையின் பின்புலம் விளங்காமல் குழம்பிப் போயினர். அதில் என்னுடைய உடனடி அதிகாரியும் அடக்கம்.

என்னுடைய வட்டார மேலாளர் என்னை சம்பந்தப்பட்ட கிளைக்கு ஒரு மாத காலத்திற்கு 'ஆல் பேய்ட் டெபுட்டேஷன்' அனுப்புவதாக ஒரு அலுவலக உத்தரவை டைப் செய்து தன்னுடைய கையொப்பத்திற்கு அனுப்பச் சொல்லி என்னுடைய உடனடி அதிகாரியைப் பணித்ததும் அவர் வெகுண்டெழுந்ததும் அதை என்னுடைய வட்டார மேலாளர் வெகு சாதுரியமாக கையாண்ட விதமும் இன்றும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.

அந்த உத்தரவு தட்டச்சு செய்யப்பட சென்றதும் அலுவலகம் முழுவதும் பரவ என்னுடன் நட்பாயிருந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியும் எதிரணிக்கு நிராசையுமாக..

அடுத்த வாரமே நான் சம்பந்தப்பட்ட கிளைக்கு செல்ல ஆயத்தமானேன். என்னுடைய மகள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கவியலாத சூழ்நிலையில் இருப்பதையுணர்ந்த என்னுடைய மனைவி தன்னுடைய தாயாரை தூத்துக்குடியிலிருந்து வருவிக்க நான் மனநிம்மதியுடன் செல்ல முடிந்தது.

நான் நினைத்தது போன்று அந்த கிளை மேலாளர் பொறுப்பற்றவர் அல்ல என்பதை அவருடன் இணைந்து பணியாற்றிய அந்த ஒரு மாத காலம் எனக்கு உணர்த்தியது. அத்துடன் மேலிடத்து உறவு இருந்ததால் சாதாரணமாக வரும் தலைக்கனமும் அவருக்கு இருக்கவில்லையென்பதும் எனக்கு விளங்கியது.

நேற்று நட்ட செடி இன்றே காய்க்க வேண்டும் என்ற அவசர புத்தியே அவருடைய பல செயல்களுக்கும் காரணம் என்பது தெளிவானது.

இன்றும் இத்தகைய இளம் அதிகாரிகளை நான் காண்கிறேன். வங்கி போன்ற பெரிய நிறுவனங்களில் ஒரு பதவியிலிருந்து அதனையடுத்த பதவிக்கு உயர குறைந்த பட்சம் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடனேயே தகுதியுள்ள அனைவருக்குமே உயர்வு கிடைக்க வேண்டும் என்பதில்லை.

உதாரணத்திற்கு பதவி உயர்வுக்குத் தேவையான எல்லா தகுதிகளும் பத்து பேருக்கு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட பதவியில் இரு காலியிடங்களே உள்ளன என்ற சூழலில் இருவருக்கே பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கும்.

ஆகவே ஒரே வயது, ஒரே அனுபவம் மற்றும் கல்வித்தகுதியுள்ள அதிகாரிகள் அனைவருமே இந்த இடங்களுக்கு தங்களைத் தயார் செய்துக்கொள்ள முயல்வது இயற்கை. அதில் சிலர் தாங்கள் மற்றவர்களை விடவும் வணிகம் செய்வதில் திறமையுள்ளவர்கள் என்று எடுத்துக்காட்ட சற்று அதிகமாக முயல்கையில் ஏற்படும் சிக்கலில் சிக்குவதுண்டு.. அதனால் பதவி உயர்வு கிடைக்காது என்பது மட்டுமல்லாமல் தண்டனையும் கிடைப்பதுண்டு.

இத்தகைய நோக்கத்திற்கு அடிமையாகிப் போனவர்தான் அந்த மேலாளர். அன்று ஏற்பட்டிருந்த சிக்கலிலிருந்து அவர் தப்பித்து அந்த ஆண்டே பதவி உயர்வு பெற்றதென்னவோ உண்மைதான். அவருடன் நேர்காணலுக்குச் சென்ற எனக்கு கிடைக்கவில்லை.

சாதாரணமாக பதவி உயர்வு கிடைத்ததும் அதுவரை பணியாற்றி வந்த ஊரிலிருந்து மாற்றம் ஆவதுண்டு. ஆனால் அம்மேலாளருக்கு மேலிடத்திலிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, இதுபோன்ற பெரிய நகரங்களில் தொடர்ந்து பணிபுரிந்தால் அடுத்த பதவி உயர்வு விரைவில் கிடைக்குமே என்ற நப்பாசையில் அதே ஊரிலிருந்த பெரிய கிளைக்கு ஒன்று மேலாளராக சென்றார்.

அங்கு மீண்டும் நிதானமில்லாமல் சில காரியங்களில் ஈடுபட்டு விசாரனைக்குள்ளாகி பதவி இறக்கப்பட்டு, அவருடைய குடும்பத்திலிருந்தவர்கள் 'போதும் நீ வேலை செய்த லட்சணம்' என்று நிர்பந்தித்து அவரை ராஜிநாமா செய்ய வைத்து காலங்காலமாய் அவர்கள் ஈடுபட்டிருந்த வணிகத்தில் (அப்காரி என்பார்கள்: கள்ளுக்கடை, சாராயக்கடை ஏலம் எடுப்பது) ஈடுபட வைத்து இப்போது அவர் சொந்த ஊரில் விரல் விட்டு எண்ணக் கூடிய செல்வந்தர்களில் ஒருவராக...

தொடரும்..

21 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 9

அப்போதெல்லாம் பேருந்துப் பயணம் இப்போதுள்ளது போன்று அத்தனை சிரமமாக இருக்கவில்லை. அதுவும் அலுவலக நேரமில்லாத சமயங்களில் இருக்கையில் இருந்து பயணம் செய்யவும் முடிந்தது.

என்னுடைய அலுவலகத்திலிருந்து வீட்டையடைய சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.

அப்போது நான் இருந்த மனநிலையில் ஜன்னலோரமாக ஒரு இருக்கை கிடைத்தது வீட்டையடைந்ததும் எப்படி என்னுடைய மனைவியிடம் இதைப் பக்குவமாக எடுத்து கூறுவது என ஒத்திகைப் பார்க்க உதவியது.

என் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் என்னுடைய கடந்த கால அலுவலக வாழ்க்கையையே ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.

என்னுடைய அவசர புத்தியினாலும், கோபத்தினாலும் என்னுடைய மனைவி எத்தகைய இடைஞ்சல்களுக்கெல்லாம் ஆளாக நேர்ந்திருந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்.

சென்னையில் முதன் முதலாக அத்தனை இளம் வயதில் மேலாளர் பதவி கிடைத்தும் என்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தால் அப்போதைய சேர்மனையே எதிர்த்துக்கொண்டு இரண்டு வருடங்களுக்குள் முன் பின் தெரியாத தஞ்சை போன்ற ஒரு சிறு நகரத்திற்கு மாற்றப்பட்டு, பிறந்த பத்து நாட்களுக்குள் குழந்தையை இழந்த துக்கத்தை மறக்க சொந்த ஊருக்கு மாறிச் சென்று.. அங்காவது நிம்மதியாக இருந்தேனா.. அங்கிருந்து மதுரைக்கு மாற்றலாகி.. ஒரு மத்திய அமைச்சருடனேயே தகராறு செய்து, பதவியை இழந்து..

ச்சே.. எனக்கு மட்டும் இந்த சோதனை என்று தோன்றியது.. அடுத்த கணமே இதற்கு உன்னுடைய அவசரபுத்தியும், தான் என்ற கர்வமும்தானே இதற்குக் காரணம் என்று என்னுடைய மனசாட்சியே என்னை இடித்துரைக்க என்னை நானே சபித்துக்கொண்டேன்..

இதற்கு முன்பு என்னுடைய சோதனை நேரங்களில் மனமுடைந்து வீடு திரும்பிய சமயங்களிலெல்லாம் என்னை தேற்றிய மனைவியும் இம்முறை எரிச்சலடைந்தார். ‘என்னங்க நீங்க? எடுத்தோம் கவுத்தோம்னு சொல்றதும், செய்யறதுமே ஒங்க பொழப்பா போச்சி.. வந்து முழுசா மூனு மாசம் ஆகறதுக்குள்ள மறுபடியும் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடுன்னா.. அதுவும் பாஷை தெரியாத ஊருக்கு?’

இதை நான் எதிர்பார்க்கவில்லையென்றாலும் இதற்கு நான்தானே காரணம் என்பது என் உள்ளத்தை தைக்க, ‘சாரிம்மா.. என்னைய என்ன பண்ண சொல்ற? என் மனசுல நினைக்கறத அப்படியே பேசாமலும் எழுதாமலும் இருக்க முடியலையே? நா இருந்ததத்தான எழுதி வச்சேன்.’ என்றேன் அவரை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.

அன்றிரவு நானும் என் மனைவியும் உறங்கமுடியாமல் நள்ளிரவு வரை மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். ஒரு வழியும் தென்படவில்லை.

இறுதியில் என்னுடைய தலைமையலுவலகத்தில் பணியாற்றிய எனக்கு மிகவும் நெருக்கமான உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு அவருடைய உதவியை நாடுவதென்ற  தீர்மானத்திற்கு வந்தோம்.

ஆனால் என்னுடைய அலுவலகத்திலிருந்து அவரை அழைப்பது உசிதமல்ல என்று கருதியதால் அடுத்த நாள் விடுப்பு எடுத்தேன். சுமார் பதினோரு மணியளவில் என்னுடைய வீட்டிலிருந்து தொலைப்பேசியில் அவரை அழைத்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் அவர் நல்ல மூடில் இருந்தார். என்னுடைய குரல் கேட்டதுமே, ‘என்ன டீபிஆர் வழக்கம் போலவே மறுபடியும் பிரச்சினையில மாட்டிக்கிட்டீங்க போலருக்கு?’ என்றார் சிரித்தவாறு. ‘நீங்க மாறவேயில்லை டிபிஆர்.’ என்றார் தொடர்ந்து.

நான் என்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு, ‘ஒங்களுக்கு விஷயம் முழுசும் தெரியுமா சார்?’ என்றேன்.

அவர் சிரித்தவாறு, ‘நீங்க எப்ப அந்த ரிப்போர்ட்ட எழுதி டைப் பண்ண குடுத்தீங்களோ அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள இங்க வந்திருச்சி. ஒங்க ஜோனல் மேனேஜருக்குத்தான் தெரியல போலருக்கு. சரி அது இருக்கட்டும்.. எதுக்கு கூப்ட்டீங்க அதச் சொல்லுங்க.’ என்றார்.

நான் உடனே கடகடவென்று என்னுடைய வட்டார மேலாளர் என்னிடம் முந்தைய தினம் கூறியவற்றை கூறிவிட்டு, ‘சார் நீங்கதான் இந்த டிரான்ஸ்ஃபர்லருந்து காப்பாத்தணும். எனக்கு அந்த பிராஞ்சுக்கு போறதுக்கு ஒன்னும் பயமில்ல. ஆனா இப்ப என்னால முடியாது சார், ப்ளீஸ்’ என்றேன்.

அவர் பதிலளிக்காமல் உரக்க சிரித்தது எனக்கு எரிச்சலையளித்தாலும் பொறுமையுடன் காத்திருந்தேன்.

‘I think your Zonal Manager has enacted a beautiful drama to scare you off. ஒங்கள டிரான்ஸ்ஃபர் பண்ணற ஐடியா எல்லாம் இங்க யாருக்கும் இல்ல. அதுவுமில்லாம நீங்க எழுதுனதுல ஒரு தப்பும் இல்லன்னுதான் நம்ம சேர்மனே ஃபீல் பண்றார்.’ என்றதும் நான் அதிர்ச்சியடைந்தேன்.

பிறகெதற்கு நம்முடைய வட்டார மேலாளர் அவ்வாறு கூறவேண்டும்? அதுவும் சம்பந்தப்பட்ட மேலாளர் மற்றும் என்னுடைய அதிகாரியின் முன் வைத்து?

‘சார் நீங்க சொல்றது உண்மையா?’ என்றேன் வேறு வழி தெரியாமல்.

அவர் மேலும் சிரித்தார். பிறகு சீரியசாக, ‘டிபிஆர். அவர் அப்படி சொன்னார்னா அதுக்கு பின்னால ஏதாவது காரணம் இருக்கும். இந்த விஷயம் நம்ம சேர்மன் பார்வைக்கு ஏற்கனவே வந்தாச்சி.  சேர்மன் சார் ஒங்க ஜோனல் மேனேஜர ரெண்டு நாளைக்கு முன்னால ஃபோன்ல கூப்ட்டு  கொஞ்சம் காட்டமாவே பேசிட்டார்னு கேள்விப்பட்டேன். அதான் ஒங்க மேல அவர் இவ்வளவு கோபப்பட்டிருக்கார். அதுவுமில்லாம நீங்க அந்த மாதிரியான கமெண்ட்ஸ் எழுதறதுக்கு முன்னால அவர்கிட்ட டிஸ்கஸ் செஞ்சிருக்கலாமே டிபிஆர். இதென்ன அவ்வளவு லேசான கமெண்டா? You should have been little more careful. ஒங்க இமிடீயட் பாஸ் வேற ஒங்க மேல கடுப்பாயிருக்கார். அவர விடுங்க. ஆனா ஒங்க ஜட்ஜ்மெண்ட் மேல நிறைய மதிப்பு வச்சிருந்த ஒங்க ஜோனல் மேனேஜருக்கு நீங்க இப்படி செஞ்சதுல ரொம்ப வருத்தம்தான். அதான் அவராவே இப்படியொரு குண்ட தூக்கி ஒங்க மேல போட்டிருக்கார்.’ என்றவர் சட்டென்று, ‘நீங்க இன்னைக்கி ஆஃபீஸ் போகலையா டிபிஆர்?’ என்று கேட்க நான் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் ‘ராத்திரியெல்லாம் ரொம்ப டென்ஷனாயிருந்ததுல சரியா தூங்கக்கூட இல்ல சார்.. அதான் இன்னைக்கி ஒரு நாள் லீவ் போடலாம்னு..’ என்று இழுத்தேன்.

‘It’s OK.. நீங்க ஒன்னு பண்ணுங்க. இன்னைக்கி சாயந்தரம் ஒங்க ஜோனல் மேனேஜர அவரோட வீட்ல போயி பாருங்க. ஒங்களுக்கு அவர கூப்ட்டு சொல்றதுக்கு தயக்கமா இருந்தா நா கூப்ட்டு நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு சொல்றேன். நீங்க புறப்படறதுக்கு முன்னாடி அவர ஃபோன்ல கூப்ட்டு சொல்லிட்டு போங்க.’ என்று அறிவுறுத்திவிட்டு இணைப்பைத் துண்டிக்க ஆவலுடன் என்னையே பார்த்தவாறு  என்னருகில் நின்றிருந்த என் மனைவியைப் பார்த்தேன்.

‘என்னங்க, என்னவாம்? போய்த்தான் ஆகணுமா?’

நான் இல்லையென்று தலையை அசைத்துவிட்டு, ‘அந்த ஜோனல் மேனேஜர் டிராமா போட்டிருக்கார்மா.. அப்படியொரு ஆர்டரே போடலையாம். இருக்கட்டும் வச்சிக்கறேன்.’ என்றேன் கடுப்புடன்.

என்னுடைய மனைவி என்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். ‘ஏங்க.. நீங்க திருந்தவே மாட்டீங்களா? நீங்க அவர எவ்வளவு கடுப்படிச்சிருந்தா இப்படி டிராமா போட்டுருப்பார்? மறுபடியும் போய் பிரச்சினை பண்ண போறீங்களாக்கும்? என்னையெ கேட்டா நீங்க அவர்கிட்ட போயி மன்னிப்பு கேட்டு சமரசமாயிருங்கன்னுதான் சொல்வேன். இங்கயாவது நிம்மதியா ஒரு மூனு வருசம் இருப்போம். பிள்ளைங்கள நினைச்சிப் பாருங்க. மூத்தது இப்பத்தான் மூனாவது படிக்குது. அதுக்குள்ள மூனு ஸ்கூல்ல சேர்த்தாச்சு. இந்த லட்சணத்துல இதுவரைக்கும் படிக்காத லாங்வேஜ் படிக்கற ஸ்கூல்ல கொண்டு போய் சேக்க போறீங்கறீங்க. சின்னதுக்கு ரெண்டு வயசு கூட இன்னும் முழுசா முடியல.. இதுங்கள வச்சிக்கிட்டு மெட்றாஸ்ல மேனேஜ் பண்றதே சிரமமா இருக்கு. ஆத்திர அவசரத்துக்கு ஒங்க அம்மா இருக்காங்க. அங்க போயி யார் அவஸ்த்தைப் படறது? நல்லா யோசிச்சி பாருங்க. இல்ல ஒங்க கவுரவந்தான் முக்கியம்னா என்னமும் செய்யிங்க. நீங்க பாட்டுக்கு எங்க போகணுமோ போங்க. ஆனா எங்கள கொண்டு தூத்துக்குடியில விட்டுருங்க.’

இது நான் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பம்.

அதுவரை நான் என்ன முடிவெடுத்தாலும் அதை ஆமோதித்து வந்திருந்த என்னுடைய மனைவியே என்னுடைய இந்த முடிவை ஏற்க தயாராயில்லை என்பது என்னை சிந்திக்க வைத்தது.

எந்த ஒரு சூழலிலும் என் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு தனியாக இருக்கலாகாது என்பதாலேயே பணிக்கு செல்லாத ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் நான். ‘ரெண்டு பேர் சம்பாத்தியமில்லாம இந்த காலத்துல குடும்பம் நடத்த முடியாதுடா. ஒங்க அண்ணன்கள மாதிரியே நீயும் ஒரு வேலை செய்யற பொண்ணா பார்த்து கட்டிக்கோ.’ என்று என் தாயார் கூறிய ஆலோசனையையும் நிராகரித்தவன் நான்.

அப்படியிருக்க அவரையும் குழந்தைகளையும் அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டுச் செல்வது என்பது சாத்தியமில்லை என்று நினைத்தேன்.

‘இல்ல ஒங்க கவுரவந்தான் முக்கியம்னா என்னமும் செய்யிங்க.’ என் மனைவியின் இவ்வார்த்தைகள் என்னுடைய உள்ளத்தை உண்மையிலேயே தைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

இதுதான் என்னுடைய சிந்தனையாய் இருந்ததா? என்னுடைய குடும்பத்தினருக்கு முன் என் சுய கவுரவம் அத்தனை முக்கியமா? அதே சமயம் தவறு செய்யவில்லை என்று தெரிந்தும் என்னுடைய மேலதிகாரியிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம்தானா? சரி மன்னிப்பு கேட்கிறேன். அவரும் அதை ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேமில்லை என்பதும் எனக்கு தெரிந்திருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு என்னுடைய கருத்துக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கும்? என்னுடைய வட்டார மேலாளரின் மதிப்பும், ஆதரவும் எனக்கு தொடர்ந்து இருக்குமா?

இத்தகைய கேள்விகள் என்னுடைய உள்ளத்தில் கிடந்து உழன்றாலும் என்னுடைய மனைவியின் வேண்டுகோளை கருத்தில்கொண்டு என்னுடைய வட்டார மேலாளரை அவருடைய இல்லத்தில் சென்று சந்திப்பதென முடிவு செய்தேன்.

தொடரும்..

20 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 8

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் இருக்கும் அமைதி என்பது அப்போது எனக்கு விளங்காமல் போனது.

சளசளவென்று பேசுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது ‘என்னடா இது தலைவலி. நிறுத்தமாட்டாரா?’ என்று சலிப்பாக இருக்கும்.

ஆனால் இத்தகையோர் வெள்ளை மனதுள்ளவர்களாக இருப்பார்கள். உள்ளொன்று புறமொன்று வைத்து பேசத்தெரியாத குழந்தை மனம் கொண்டவர்கள்.

ஆனால் என்ன நேர்ந்தாலும் மவுனமாக இருப்பவர்கள் அப்படியல்ல. தங்களுடைய எண்ணங்களை தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்து தகுந்த சந்தர்ப்பத்தில் எடுத்து விடுபவர்கள் இவர்கள். சற்று ஆபத்தானவர்கள். இத்தகையோரிடம் கவனமுடன் பழக வேண்டும்.

என்னுடைய அதிகாரியின் மவுனமும் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்று நான் ஊகித்தேன்.

தன்னுடைய தோல்வியை அவர் அத்தனை எளிதாக ஜீரனித்துக்கொள்ளக் கூடியவர் அல்ல என்பதையும் நான் பணிக்கு சேர்ந்த முதல் மாதத்திலியே தெரிந்து வைத்திருந்தேன்.

ஆகவே அவர் எப்போது வேண்டுமானாலும் திருப்பியடிக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்த்தேன். அப்படியொரு சூழல் எழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வதெனவும் சிந்திக்கலானேன். ஆனால் ஒன்றும் புலப்படவில்லை.

அவருடைய மவுனம் அப்படியென்றால் என்னுடைய வட்டார மேலாளருடைய மவுனமும் என்னை சிந்திக்க வைத்தது. சாதாரணமாக என்னை அடிக்கடி தன்னுடைய அறைக்குள் அழைத்து பேசும் அவர் அடுத்த சில தினங்களில் என்னை அழைக்காதிருக்கவே அவரும் என்னை தவிர்க்கிறாரோ என்ற ஐயப்பாடும் என்னுள் எழுந்தது.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த அறிக்கையில் நான் பரிந்துரைத்ததை என்னுடைய வட்டார மேலாளர் முழுவதுமாக வாசிக்க இயலாமற் போனது என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரோ என்னுடைய அறிக்கையைத் சரிபார்த்த அதிகாரியையே நேரில் அழைத்து விசாரித்து அறிந்து வைத்திருந்த மர்மத்தை நான் அறிந்திருக்கவில்லை.

சாதாரணமாக இத்தகைய ஆய்வறிக்கைகள் என்னுடைய அதிகாரியாலும் வட்டார மேலாளராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வட்டார மேலாளரின் குறிப்புகளுடன் மீண்டும் என்னிடமே வந்து சேரும்.

பின்னர் அந்த அறிக்கையின் நகல்கள் தயாரிக்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற குறிப்புகளுடன் மூல அறிக்கை(original) சம்பந்தப்பட்ட கிளைக்கும் அதனுடைய நகல் எங்களுடைய தலைமையலுவலகத்திற்கும் அனுப்பப்படுவதுண்டு.

ஆனால் நான் குறிப்பிட்ட ஆய்வறிக்கையோ நான் சமர்ப்பித்து ஒரு வார காலத்திற்குப் பிறகும்  உறுதிப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட கிளைக்கோ அல்லது தலைமையலுவலகத்திற்கோ அனுப்பப்படாமல் இருந்தது வியப்பையளித்தது.

இருப்பினும் அதை நேரிடையாகச் சென்று விசாரிப்பது நல்லதல்ல என்று தோன்றவே நான் அதை என்னுடைய சிந்தனைகளிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடைய இலாக்கா அலுவல்களில் என் கவனத்தை செலுத்த முயன்றேன்.

மேலும் இரண்டு நாட்கள்..

அதற்கடுத்த நாள் நான் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் என்னுடைய அதிகாரியின் முன்னர் அமர்ந்திருந்தார் நான் ஆய்வு செய்த கிளையின் மேலாளர்!

என்னைக் கண்டதும் மரியாதை நிமித்தம் ஹலோ என்றவர் என்னுடைய அதிகாரியுடனான தன்னுடைய உரையாடலைத் தொடர நான் என்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்தேன்.

என்னுடைய வட்டார மேலாளர் அலுவலகம் வந்தததும் என்னுடைய அதிகாரி கிளை மேலாளரையும் அழைத்துக்கொண்டு அவருடைய அறைக்குச் செல்ல சில நிமிடங்கள் கழித்து ஆப்பரேஷன்ஸ் சீஃப் மேலாளரும் அழைக்கப்பட்டார்.

மீண்டும் மொத்த அலுவலகமும் தங்களுடைய அலுவல்களை மறந்துவிட்டு வட்டார மேலாளருடைய அறையையே கவனிக்கத் துவங்கின.

சுமார் அரை மணி நேரம்.

வட்டார அலுவலர் என்னை அழைப்பதாக சிப்பந்தியொருவர் கூற நான் விரைந்தேன் என்ன நேர்ந்தாலும் எதிர்கொள்வது என்ற முடிவுடன்.

வட்டார மேலாளர் மட்டுமல்ல அந்த அறையிலிருந்த  இரு அதிகாரிகளின் முகத்திலும் எவ்வித உணர்ச்சியும் தென்படவில்லை. கிளை மேலாளர் ஆடிப்போயிருந்தார்.

‘ஒக்காருங்க டிபிஆர்.’ என்றார் வட்டார மேலாளர் சுருக்கமாக.

அறையிலிருந்த மற்றவர்கள் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது தெரிந்தது.

நான் மவுனமாக வட்டார மேலாளரைப் பார்த்தேன்.

‘TBR, our HO has taken a very serious view on your report. They have, therefore, decided to post you there as the next BM.’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

நான் உண்மையிலேயே அதிர்ந்துப் போனேன். நான் சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் கூட முழுவதுமாக முடிந்திராத நிலையில் இப்படியொரு சோதனையா என்று நினைத்தேன்.

நான் ஆய்வு செய்த கிளைக்கு மேலாளராக பொறுப்பேற்பதில் எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய மனைவி மற்றும் இரு குழைந்தைகளையும் என்னுடன் அழைத்துச் செல்ல இயலாத நிலையில் இருந்ததுதான் என்ன தயக்கமடையச் செய்தது.

மூத்தவளை பள்ளியில் சேர்த்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. அத்துடன் என்னுடைய இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது. மதுரையிலிருந்து மாற்றலாகி வந்த மூன்றாவது மாதமே சென்னையிலிருந்து சுமார் ஆயிரம் கி.மீக்கும் கூடுதல் தொலைவிலிருந்த ஒரு கிளைக்கு திடீர் மாற்றம் என்றால் ஒருவேளை இது எனக்கு அளிக்கப்பட்ட மற்றுமொரு தண்டனையோ என்றுகூட என் மனைவியும் என்னுடைய பெற்றோரும் கருத வாய்ப்பிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்ததால்தான் மேலாளர் பதவி பறிபோனது  என்று நினைத்துக்கொண்டிருந்த என்னுடைய மாமனார் குடும்பத்திற்கு அவர்கள் நினைத்திருந்தது தவறு என்பதை நிரூபிக்க வேண்டுமானால் இம்மாற்றம் ஏதுவாயிருந்திருக்கும்.

நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையென்ற அதிர்ச்சி என்னுடைய முகத்திலேயே காட்டிவிட்டேன் போலிருக்கிறது. என்னுடைய அதிகாரி நக்கலுடன் என்னை ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.

‘குத்தம் கண்டுபிடிக்க தெரியுதில்லே.. போய் நீயே அத சரி பண்ணு’ என்பது போல் பார்த்தார் அவர்.

‘என்ன டிபிஆர், இத எதிர்பார்க்கல இல்லே?’ என்றார் வேண்டுமென்றே. ‘இதுக்குத்தான் ஒங்க்கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன். ஒங்க ரோல் எதுன்னு தெரியாம நடந்துக்காதீங்கன்னு.’

நான் பதில் பேசாமல் என்னுடைய வட்டார மேலாளரைப் பார்த்தேன். ‘I am sorry Sir.. But I am unable to accept this transfer’ என்றேன் பணிவாக.

அவர் என்னுடைய நிலமையைப் புரிந்துக்கொண்டு ஆறுதலாக பேசுவார் என எதிர்பார்த்தேன். அவரோ நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, ‘டிபிஆர். இத நீங்க முதல்லயே யோசிச்சிருக்கணும். ஒரு இன்ஸ்பெக்ட்டிங் ஆஃபீசர் என்னத்த எழுதலாம், எத எழுதக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும். அத விட்டுட்டு..’ என கோபத்தில் மேற்கொண்டு பேச முடியாமல் அவர் தடுமாற அவருடைய கோபத்தை எதிர்பாராத நான் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தேன்.

அங்கு பணிக்கு சேர்ந்த இந்த மூன்று மாத காலத்தில் அவர் இத்தனைக் கோபத்துடன் என்னிடம்,  ஏன், எவரிடமும் பேசி நான் கண்டதில்லை.

‘நீங்க எழுதியத டைப் பண்றதுக்கு முன்னாடி ஒங்க டிபார்ட்மெண்ட் ஹெட் கிட்ட டிஸ்கஸ் செஞ்சிருக்கலாமே டிபிஆர். இந்த மாதிரி ஆஃபீஸ்ல டைப்பிஸ்ட் கிட்ட ஒரு ரிப்போர்ட் போயிருச்சின்னா அது ஒடனே பப்ளிக் டொமெய்ன்ல வந்தமாதிரிதான்னு ஒங்களுக்கு தெரியாது? நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னு எனக்கு தெரியறதுக்கு முன்னாடி நம்ம எச்.ஓவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒங்க ஆஃபீஸ்ல ஒங்களுக்கு கீழ வேலை செய்யற ஒருவர் ஒங்களுக்கு கீழருக்கற ஒரு ப்ராஞ்ச் மேனேஜர மாத்தணும்னு ரெக்கமெண்ட் பண்றார்னா அது எப்படி ஒங்களுக்கு தெரியாம போயிருச்சின்னு நம்ம சென்ட்ரல் இன்ஸ்பெக்ஷன் ஹெட் கேக்கறப்போ எனக்கு என்ன பதில் சொல்ல முடியும்? நீங்க எழுதனுது என்னோட சூப்பரவசைரி பவரையே கேள்வி கேக்கறாமாதிரி இருக்கே. அத தெரிஞ்சிதான் எழுதனீங்களான்னே எனக்கு புரியல. அதான் ஒங்களையே அங்க போஸ்ட் பண்ணச் சொல்லி ரெக்கமெண்ட் பண்ணேன்.. I am sorry TBR. You go and rectify what you have reported..’

‘I’ll think about it Sir.. I am really sorry if I had offended you. But that was not my intention.’ என்று எழுந்து வெளியேறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய தோன்றவில்லை அப்போது.

அதற்கு மேலும் என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்திருக்க  மனமில்லாமல் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பினேன்.

என்னுடைய மனைவியிடம் இதை எப்படி அறிவிக்கப் போகிறேன் என்ற கலக்கம் என் மனதைப் போட்டு அலைக்கழித்தது. இந்த எண்ணம் என்னை வாகனத்தை சரிவர செலுத்த அனுமதிக்குமோ என்ற அச்சத்தில் அதை என்னுடைய அலுவலகத்திலேயே விட்டு விட்டு பேருந்தில் பயணம் செய்தேன்.

தொடரும்..


18 December 2006

தி.பா. தொடர் - பாகம் II - 7

ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணி புரிவதற்கும் ஒரு கிளையில் பணி புரிவதற்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

நிர்வாக அலுவலகங்களில் உள்ள அதிகாரப் படிகள் (hierarchy) ஒரு கிளையிலுள்ளதைப் போலல்லாமல் எண்ணிக்கையில் சற்று அதிகம்.

ஒவ்வொரு படியிலும் இருந்த அதிகாரிகள் அவரவருடைய நிலை (level) என்ன, அவர் ஆற்றவேண்டிய கடமைகள் (responsibility) என்ன, அவருக்கு இருக்கும் உரிமைகள் அல்லது அதிகாரம் (rights or powers) என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது முழுவதும் உணர்ந்திருக்கவில்லை.

ஆகவேதான் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த துவக்கத்தில் என்னுடைய ஆய்வறிக்கைகளில் நான் எதை எழுத வேண்டும், எதை என்னுடைய மேலதிகாரிகளுக்கு விட்டுவிட வேண்டும் என்ற விவரமில்லாமல் எனக்கு சரியென்று தோன்றியவைகளை எல்லாம் எழுதலாம் என்று நினைத்தேன்.  

மேலும் எல்லா நிறுவனங்களிலுமே பணியாற்றுபவர்களுக்கிடையில் போட்டி, பொறாமை, மேலிடத்து செல்வாக்கு இவை எல்லாம் இருப்பது சகஜம்.

நடந்திருந்த ஒரு தவற்றின் தீவிரம் அதை செய்தவர் யார் என்பதை வைத்தே கணிக்கப்படுகிறது என்பதையும் நான் துவக்கத்தில் அறியாதிருந்தது என்னுடைய அனுபவமின்மை என்றுதான் கூறவேண்டும்.

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற நியதி ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல ஒரு நிறுவனத்திலும்தான் என்பதை உணர்ந்திருப்பது மிக, மிக அவசியம்.

அத்துடன் ஆழம் தெரியாமல் காலை விடாதே என்ற பழமொழியையும் நான் மறந்ததன் விளைவுதான் எங்களுடைய வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்த சொற்ப காலத்தில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு மூல காரணம்.

அப்படித்தான் முடிந்தது நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட மெட்ரோ கிளையின் ஆய்வறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த பரிந்துரையும்.

என்னுடைய வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து நான் ஆய்வு நடத்தச் சென்ற இரண்டாவது, அல்லது மூன்றாவது ஆய்வுதான் அது.  அதாவது என்னுடைய உடனடி அதிகாரியுடன் சமரசம் செய்துக்கொள்வதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு.

நான் சாதாரணமாக என்னுடைய அறிக்கையின் கைப்பிரதியை தட்டச்சு செய்வதற்கு முன்பு என்னுடைய இலாக்காவில் எனக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருந்த ஒரு ஜூனியர் அதிகாரியிடம் - அதாவது அதிகார வரிசையில் -  கொடுத்து சரி பார்க்க கூறுவது வழக்கம். என்னுடைய கையெழுத்தை அவர்  சிரமப்பட்டு படித்து, புரிந்துக்கொண்டு தேவைப்பட்டால் தட்டச்சு செய்பவருக்கு விளக்குவதும் அவருடைய பொறுப்பு.

என்னுடைய ய்வறிக்கையில் சம்பந்தப்பட்ட மேலாளரை உடனே மாற்ற வேண்டும் என்று நான் பரிந்துரைத்ததை வாசித்த அவர், ‘சார் இது தேவையா? அவர் யாருன்னு தெரியுமில்லே?’ என்றார். என்னைவிடவும் சுமார் மூன்று, நான்கு வயது முதியவர். ஆனால் பதவி உயர்வு வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர். நான் குறிப்பிட்டிருந்த மேலாளரைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர். நிர்வாக அலுவலக பதவியே போதும் என்ற முடிவுடன் அவ்வட்டாரா அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்கிருந்தது.

ஆனால் அவருக்கிருந்த அனுபவம் எனக்கு இல்லையென்பதுடன் அவரை விடவும் விஷய ஞானம் எனக்கு அதிகம் என்ற எண்ணமும் எனக்கிருந்தது!

‘அதப் பத்தி எனக்கென்ன சார் கவலை? எனக்கு சரின்னு தோனுனத நா எழுதியிருக்கேன்.. அத ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் நம்ம ஜோனல் மேனேஜரோட இஷ்டம்.. அது அப்படியே இருக்கட்டும்.’ என்றேன் பிடிவாதமாக.

பதிலுக்கு என்னை அவர் பார்த்த பார்வையிலேயே, ‘ஒன் தலையெழுத்து அப்படியிருந்தா என்னால என்ன செய்யமுடியும்?’ என்ற கேலி தெரிந்தும் அதை நான் கண்டுக்கொள்ளவில்லை. என்னை என்ன செய்துவிடமுடியும் இவர்களால் என்ற எண்ணம் எனக்கு!

அவர் என்னுடைய அறிக்கையை சரிபார்த்து தட்டச்சு செய்பவரிடம் கொடுக்க அவர் ‘தேமே’ என்று தட்டச்சு செய்து கொடுத்துவிட்டார். இந்த தட்டச்சு செய்பவர்களின் போக்கே இப்படித்தான். கண்கள் கைப்பிரதியிலிருந்த வார்த்தைகளை மேயும்.. விரல்கள் தட்டச்சு இயந்திர பொத்தான்களில் பாயும்.. வார்த்தையின் பொருள் தலைக்குள் ஏறினால்தானே அதிலுள்ள பிழைகளோ அல்லது வீரியமோ உறைப்பதற்கு!

தட்டச்சு செய்து திரும்பி வந்ததும் கைப்பிரதியுடன் ஒப்பிடுவது எனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளின் பொறுப்பு. அதற்குப் பிறகு நான் மீண்டும் ஒருமுறை வாசித்து சரிபார்த்துவிட்டு கையொப்பமிட்டு என்னுடைய அதிகாரியின் பார்வைக்கு அனுப்புவது வழக்கம்.

தட்டச்சு செய்து வந்த அறிக்கையை சரிபார்க்க உதவி புரிந்த மற்றொரு அதிகாரியும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அப்போதும் அதை நான் பொருட்படுத்தவில்லை.

என்னுடைய மேசைக்கு வந்த இறுதி அறிக்கையில் கையொப்பமிட்டு என்னுடைய உடனடி அதிகாரியின் பார்வைக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னுடைய மற்ற அலுவல்களில் மூழ்கிப்போனேன்.

ஏற்கனவே என்னை பெரிய நகரங்களில் இயங்கிவந்த கிளைகளுக்கு என்னை ஆய்வு செய்ய அனுப்பலாகாது என்று தர்க்கித்தவர் என்னுடயை அதிகாரி. அவர் எப்போதுமே என்னுடைய ஆய்வறிக்கையை படிப்பதற்கு முன் அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஆய்வாளருடைய பரிந்துரை என்ற தலைப்பின் கீழ் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைத்தான் முதலில் படிப்பது வழக்கம். என்னுடைய அறிக்கைகளை மட்டுமல்ல என்னுடன் ஆய்வாளர்களாக பணியாற்றியவர்களுடைய அறிக்கையையும் அப்படித்தான் என்பதை பிறகுதான் புரிந்துக்கொண்டேன்.  

என்னுடைய பரிந்துரை ஒரு ஆய்வாளருடைய அதிகார வரம்பை மீறிய செயல் என்ற முடிவுக்கு வர ஒரு நிமிடம் கூட தேவையிருக்கவில்லை அவருக்கு.

என்னுடைய பரிந்தரையை தன்னுடைய சிவப்பு மசியால் உருத்தெரியாமல் அழித்து அதற்குக் கீழே, ‘ஆய்வாளரின் அதிகாரத்திற்கு மீறிய செயல். அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்’ என்று எழுதி அடுத்த நொடியே என்னுடைய அறிக்கையை வட்டார மேலாளருடைய பார்வைக்கு அனுப்பி வைத்ததைக் கவனித்தேன்.

அறிக்கையின் மற்ற பகுதிகளில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று படித்து பார்த்துவிட்டு என்னுடைய பரிந்துரை தேவையற்றது என்று அவர் தீர்மானித்திருந்தால் கூட நான் ஒருவேளை அவருடைய செயலை ஏற்றுக்கொண்டிருப்பேன். சரி.. அப்படியே என்னுடைய பரிந்துரை தேவையற்றது என்று அவர் கருதியிருந்தாலும் அதை மாற்றி எழுதுங்கள் என்று பணித்திருந்தாலும் நாம் சம்மதித்திருப்பேன்.

ஆனால் நான் ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்று விளக்குவதற்குக் கூட எனக்கு வாய்ப்பளிக்காததுடன், அத்தகைய பரிந்துரையை செய்ய எனக்கு அதிகாரமில்லை என்ற தொனியில் அவர் எழுதியதைத்தான் என்னால் ஏற்க இயலவில்லை.

சரி.. வட்டார மேலாளர் என்னை அழைத்து விசாரிக்கட்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று வாளாவிருந்தேன். அன்றும் அதற்கடுத்த நாளும் என்னுடைய அறிக்கை அவருடைய அறையை விட்டு வெளிவரவில்லை. என்னைப் போலவே என்னுடைய அதிகாரியும் பதற்றமடைந்தார் என்பது அவருடைய நடத்தையிலிருந்தே தெர்ந்தது.

‘ஆய்வாளரின் பரிந்துரையை உருத்தெரியாமல் அழித்துவிட்டு அதற்கு அவரிடம் விளக்கம் கேட்க பரிந்துரைத்தால் என்ன அர்த்தம்?’ என்ற தொனியில் இருந்த வட்டார மேலாளருடைய  குறிப்புடன் என்னுடைய அறிக்கை அவருடைய அறையிலிருந்து மூன்றாம் நாள் வெளியில் வந்தது.

என்னுடைய அதிகாரிக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே. அதை எடுத்துக்கொண்டு வட்டார மேலாளருடைய அறைக்குள் நுழைந்தவர் அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரை வறுத்தெடுத்ததுடன் என்னையும் அறைக்குள் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று அவர் உரக்கக் கூறியதை என்னுடன் பணியாற்றிய அனைவருமே கேட்க முடிந்தது.

அடுத்த நொடியே அவருடைய அறையிலிருந்த அழைப்பு மணி வீறிட்டு அலற ஹாலில் இருந்த அனைவருமே என்னை அச்சத்துடன் பார்த்தனர். ஆனால் அவர் அழைத்தது என்னையல்ல ஆப்பரேஷன்ஸ் பிரிவுக்கு தலைவராயிருந்த மற்றொரு சீஃப் மேலாளரை!

அவரும் என்னை ஓரக்கண்ணால் பார்த்தவாறு அறைக்குள் சென்றார். அடுத்த பதினைந்து நிமிடங்கள் காரசாரமான விவாதம் நடப்பதாக அவருடைய அறைக்குள் சென்று வந்த சிப்பந்தி தெரிவிக்க அலுவலகத்தில் நடந்துக்கொண்டிருந்த சகல பணிகளும் ஸ்தம்பித்துப் போய் அனைவருடைய கண்களும் வட்டார மேலாளர் அறை வாசலையே பார்த்தன.

நான் என்னுடைய அறிக்கையில் எழுதியிருந்தவற்றில் பெரும்பாலானவை ஆப்பரேஷன்ஸ் பிரிவின் கீழ் வரும் கடன் வழங்குவதைப் பற்றியது என்பதால் அதன் தலைவரை அழைத்து கலந்தாலோசிக்கிறார் போலிருக்கிறது என்பதை உணர்ந்த நான் என்னுடைய அலுவலைக் கவனிப்பதை தொடர்ந்தேன்.

அறையிலிருந்த வெளியேறிய இரு அதிகாரிகளும் நேரே அவரவர் இருக்கைக்குச் சென்று அமர்ந்து தங்களுடைய அலுவலைத் தொடர ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மற்ற அலுவலகர்களுக்கு சப்பென்று போனது. ஸ்தம்பித்துப் போயிருந்த அலுவலகம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.

என்னுடைய அறிக்கையின் நகல் ஒன்றை ஆப்பரேஷன்ஸ் பிரிவின் அதிகாரி உன்னிப்புடன் வாசிப்பதையும் காண முடிந்தது. அவர் படித்து முடித்ததும் அவருக்குக் கீழ் பணிபுரிந்த ஒரு அதிகாரியை அழைத்து ஏதோ உத்தரவுகளைப் பிறப்பித்ததையும் கண்டேன்.

ஆக, நான் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவற்றை என்னுடைய வட்டார மேலாளர் ஏற்றுக்கொண்டார், அதனால்தான் அதன் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆப்பரேஷன்ஸ் பிரிவிற்கு ஆணையிட்டிருக்கிறர் என்று நினைத்தேன்.

நான் ஒரு லேசான புன்னகையுடன் என் அதிகாரியை ஓரக்கண்ணால் பார்த்தேன். எள்ளும் கொள்ளும் வெடித்ததை உணர முடிந்தது. ஆனாலும் அமைதியாயிருந்தார்.

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் இருக்கும் அமைதி என்பது அப்போது எனக்கு விளங்காமல் போனது.

தொடரும்..

13 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 6

Anti Money Laundering அதாவது கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதைத் தவிர்க்கும் முகமாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நியதிகள் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த கிளையை ஆய்வு செய்தபோதும் அமுலில் இருந்தன.

அதாவது ஒரு கணக்கில், அது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், நடக்கும் வரவு, செலவுகளுக்கு வாடிக்கையாளர் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் அவருடைய கணக்கில் காசாகவோ, காசோலைகளாகவோ வரவு வைக்கப்படும் தொகைகளுக்கு மூலம் (Source) எதுவென எந்த அரசு இலாக்காவினர் எப்போது கேட்டாலும் சமர்ப்பிக்கக் கூடிய நிலையில் வாடிக்கையாளர் இருக்க வேண்டும்.

அதுபோலவே அவருடைய கணக்கிலிருந்து காசாகவோ, காசோலை வழியவோ வழங்கப்படும் தொகையைப் பெறுபவர்களுடைய விவரங்களும் அவர் கைவசம் எப்போதும் இருக்க வேண்டும்.

இந்நியதியை வாடிக்கையாளர் முழுமையாகக் கடைபிடிக்கவியலாத சூழலில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு இலாக்காவிற்கு முழு உரிமையுண்டு.

சரி.. ஆனால் அக்கணக்கிற்கு சொந்தக்காரரான வாடிக்கையாளரே கற்பனையான ஒருவர் (Fictitious person) என்றால்? அதாவது, அப்படியொரு வாடிக்கையாளரே இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டால்? அக்கணக்கில் வரவு வைக்கப்படும் முழு தொகையும் சம்பந்தப்பட்ட வங்கியின் வருமானமாக (Income) கருதப்பட்டு வருமான வரி விதிக்க சட்டத்தில் வழியிருக்கிறது.

ஆகவேதான் வங்கிகள் தங்களிடம் கணக்கு துவங்க வருபவர் உண்மையிலேயே அவர்தானா என்பதை எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமில்லாமல் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது டி.பி.ஆர்.ஜோசப் என்ற பெயருடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒருவர் அதற்குத் தேவையான அதிகாரபூர்வ வணங்களை வங்கிக்கு சமர்ப்பிப்பது அவசியமாகறது.

அதுவும் தில்லி, மும்பைப் போன்ற நகரங்களில் இது மிகவும் அவசியம் என்பதை அந்நகரங்களில் இயங்கிவரும் கிளைகளுக்கு மேலாளராக பொறுப்பேற்க செல்லும் அதிகாரிகளுக்கு அதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதில் வங்கிகள் முனைப்பாயிருக்கின்றன.

அத்தகைய நகரங்களில் மேலாளராக பணியாற்ற செல்பவர்கள் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது நாட்டின் மற்ற நகரங்களில் மேலாளராக பணியாற்றியிருக்க வேண்டியிருக்க வேண்டும் என்ற நியதியும் இருந்தது.

வணிகம் செய்வது அதன் மூலம் லாபம் ஈட்டுவது என்பதுதான் ஒரு வங்கியின் முக்கிய நோக்கம் என்றாலும் மற்ற வணிகர்களைப் போன்று லாபம் ஈட்டுவது மட்டுமே ஒரு வங்கியின் நோக்கமாக இருப்பதில்லை.

எத்தகைய வணிகத்தை, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் லாபம் கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் ஒரு வங்கிக் கிளையை நடத்திச் செல்ல நினைக்கும் மேலாளர்கள் காலப்போக்கில் வழிதவறிச் சென்று சம்பந்தப்பட்ட வங்கி மேலிடத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் கைது செய்யப்பட்டதும் உண்டு.

அப்படிப்பட்ட சூழலில்தான் நான் குறிப்பிட்ட கிளையின் மேலாளரும் இருந்தார். ஆனால் அதை அவர் தெரிந்தே செய்திருக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

Ignorance of Law is not an excuse என்பார்கள். ஒரு பாமரனுக்கே இது பொருந்துமென்றால் ஒரு வங்கியின் கிளை மேலாளரைப் பற்றி கேட்க வேண்டுமா?

சரி.. இது கிளையின் சேமிப்பு கணக்குகளில் நான் கண்டுணர்ந்த தவறுகள்.

கிளை வழங்கியிருந்த கடன்களிலும் இதே குழப்பங்கள் இருந்தன.

கிளை மேலாளருக்கு மேலிடத்திலிருந்த செல்வாக்கு அவரை தன்னுடயை அதிகாரத்திற்கு மீறிய செயலில் ஈடுபடவைத்திருந்தது.

அதாவது, நான் மேலே குறிப்பிட்டிருந்ததைப் போன்று வணிகத்தை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம், இலக்கையடைந்தால் போதும் என்பதுதான் அவருடைய நோக்கமாயிருந்ததை என்னால் உணர முடிந்தது.

நான் நடத்த வேண்டிய ஆய்வை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் என்னால் கிளையிலிருந்த கணக்குகள் முழுவதையும் ஆராய இயலவில்லை. இப்போதுள்ளதுபோல் கணினி வசதிகள் இல்லாத காலம் அது. கிளையிலிருந்த கணக்கு புத்தகங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழல்.

எதை, எப்படி பார்க்க வேண்டுமென்று தெரிந்திருந்தால் மட்டுமே நமக்குக் குறித்துள்ள நாட்களுக்குள் ஆய்வு செய்து முடிக்க முடியும். அதுவும் திரும்பிச் செல்ல வேண்டிய பயணத்திற்கான பயணச் சீட்டையும் முன்கூட்டியே பதிவு செய்துவிட்ட செல்வது வழக்கமென்பதால் ஆய்வு காலத்தை சட்டென்று நீட்டிப்பதும் இயலாத காரியம். அதுவும் பெருநகரங்களில் இதைப் பற்றி நினைப்பதே விவேகமற்ற செயல்.

இருந்தும், நான் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆய்வு செய்த கடன் கணக்குகள் பெரும்பான்மையானவற்றில் கிளையின் மொத்த வணிகத்தின் அளவை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்ற அபிரிதமான ஆர்வம் மட்டுமே தெரிந்தது.

விஷய ஞானம் உள்ளவர்களும் கூட இலக்கை எட்ட வேண்டுமே என்ற அபிரிதமான ஆர்வத்தால் (Over enthusiasm) சில சமயங்களில் தங்களிடம் கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களின் பூர்வீகம், அவர்கள் துவங்கவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் வணிகம்/தொழிலின் தன்மை, கடனைத் திருப்பிச் செலுத்த அவர்களுக்குள்ள திறன் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்யாமல் விட்டுவிட்டு பிறகு திணறுவதைக் கண்டிருக்கிறேன்.

நான் குறிப்பிட்ட மேலாளருக்கு விஷய ஞானமும் குறைவு என்பதை அவர் சேமிப்புக் கணக்குகளை துவக்க அனுமதித்ததிலிருந்தே உணர்ந்திருந்த நான் அவர் வழங்கியிருந்த கடன்களை ஆய்வு செய்வதில் என்னுடைய முழுக் கவனத்தையும் திருப்பினேன்.

சாதாரணமாக கடன் தேவைப்படுவோர் கோரும் கடனை முழுமையாக வழங்காமலிருப்பது எல்லா வங்கி மேலாளர்களின் பிறவிக் குணம். வாடிக்கையாளர் ஒரு லட்சம் கேட்டால் ‘எழுபத்தையாயிரம் தரேன்.. இத வச்சி சமாளிங்க.. ஒரு ஆறு மாசம் போட்டும்.. ஒங்க பிசினச பார்த்துட்டு மேக்கொண்டு தரேன்’ என்பார்கள். நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன்.

அதிலுள்ள பிரச்சினையை பல மேலாளர்களும் உணர்வதில்லை. வாடிக்கையாளர் இந்த அளவு கடனாவது கிடைத்ததே என்று ஒப்புக்கொண்டு தன்னுடைய வணிகத்தை/தொழிலைத் துவக்குவார். ஆனால் நாளடைவில் வங்கியளித்த கடன் போறாமல் வெளியிலிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.

அவர் நடத்தும் வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில் பெரும் பங்கு இத்தகைய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிக்கே போய்விடும். வங்கியிலிருந்து பெற்ற கடன் வட்டியும் அசலும் அப்படியே நின்றுவிடும். அது சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் வழங்கிய கடனாக இருக்கும் பட்சத்தில் தான் ஏற்கனவே வழங்கியிருந்த கடனை வசூலிக்க மேலும் கூடுதல் கடன் வழங்க முன்வருவார். மாறாக, இடைபட்ட நேரத்தில் அவர் மாற்றலாகிச் சென்றிருக்கும் பட்சத்தில் அவரையடுத்து வருகின்ற மேலாளர்களில் பலரும் தனக்கு முன்னாலிருந்த மேலாளர் அளித்த கடனை வசூலிப்பதற்காக மேலும் கடனளிக்க முன்வருவதில்லை.

என்னால் மட்டுமே ஒரு வாடிக்கையாளரைச் சரியாக கணிக்க முயலும் என்பதுபோன்ற எண்ணம் பல மேலாளர்களுக்கும் இருப்பதும் தன்னுடைய சக மேலாளர்கள் மீது இருந்த நம்பிக்கையற்ற தனமுமே இத்தகைய போக்கிற்குக் காரணம் என்றால் மிகையாகாது.

இது ஒருபுறமிருக்க, ஒரு வாடிக்கையாளருக்கு அவருடைய அத்தியாவசிய தேவைக்கும் அதிகமாக கடன் வழங்குவது முந்தைய முறையை விடவும் அதிக ஆபத்தானது.

ஏன்?

தேவைக்குக் குறைவாக கடன் பெறும் வாடிக்கையாளர் தன்னுடைய தேவையை ஈடுகட்ட தன்னுடைய முதலைக் கூட்டுவதும் உண்டு. அது இயலாத பட்சத்தில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடமிருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெறுவதும் உண்டு. இதனால் வங்கிக்கு பெரிதாக நஷ்டம் ஏற்படுவதில்லை. ஒருவேளை அவர்களுடைய கடனை திருப்பிச் செலுத்த வாடிக்கையாளருக்கு கூடுதல் காலம் அளிக்கவேண்டிவரலாம்.

ஆனால் தேவைக்கு மீறிய கடன் பெறும் வாடிக்கையாளர்களில் பலரும் அந்த உபரித் தொகையைத் தங்களுடைய வர்த்தகம்/தொழிலேயே முதலீடு செய்யாமல் அதற்கு முற்றிலும் பந்தமில்லாத தொழில்/வர்த்தகங்களில் மூதலீடு செய்வதைப் பார்த்திருக்கிறேன். அத்தகைய diversion பெரும்பாலும் நஷ்டத்திலேயே முடிவதையும் பார்த்திருக்கிறேன்.

இழந்த தொகையை திருப்பியெடுக்க தங்களுடைய முதன்மை வர்த்தகத்திலிருந்து (Primary business) மேலும், மேலும் முதலீட்டை divert செய்து அந்த வர்த்தகத்தையும் இழந்து நிற்கும் வாடிக்கையாளர்கள்தான் அதிகம்.

ஒரு வாடிக்கையாளருடைய பொருளாதார, நிர்வாக திறமை, அவர் நடத்தவிருக்கும் வணிகம் அல்லது தொழிலின் எதிர்காலம் ஆகியவற்றை சரிவர கணித்து அவருக்கு தேவையான கடனை குறித்த நேரத்தில் வழங்குவதற்கு ஒரு கிளை மேலாளருக்கு நல்ல எண்ணம்கொண்ட மனது மட்டுமே போதாது.

அதற்கு விஷய ஞானமும் நீண்ட கால அனுபவமும் தேவை. நான் குறிப்பிட்ட மேலாளருடைய குறைந்த விஷய ஞானமும், அரைகுறை அனுபவமும் இத்தகைய கடன்களை சற்று அளவுக்கு மீறியே வழங்க வைத்திருந்தது.

இதே நிலையில் அவர் தொடர்ந்து வணிகத்தைச் செய்து வருவாரேயானால் வங்கியின் நிதிநிலமை சீர்கெடுவதுடன் வங்கியின் நற்பெயரும் கெட வாய்ப்புள்ளதெனவும் ஆகவே நிலைமையை சீர்செய்ய அவரை உடனே அக்கிளையிலிருந்து மாற்றி வேறொரு விஷய ஞானமும், அனுபவமுமுள்ள ஒரு மேலாளரை நியமிக்க வேண்டும் என்று என்னுடைய ஆய்வறிக்கையில் பரிந்துரைத்தேன்..

அது எத்தகைய பாதிப்புகளை எனக்கு ஏற்படுத்தப் போகிறதென்பதை உணராமல்..

தொடரும்..

12 December 2006

தி.பா.தொடர்-பாகம் II - 5

எந்த ஒரு அலுவலிலும் கிடைக்காத அரிய அனுபவங்கள் வங்கி அலுவலில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது.

என்னுடைய முன்னாள் வங்கி முதல்வர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ‘நா என்னோட அனுபவங்கள எல்லாம் எழுதணும்னு ஆரம்பிச்சா ஆயிரம் பக்க புத்தகம் கூட போறாது. அத்தன இருக்கு..’

உண்மைதான்..

என்னுடைய இந்த முப்பாதாண்டு வங்கி வாழ்க்கையில் நான் சந்தித்த நபர்களைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இராது.

சமீபத்தில் நான் எங்களுடைய சென்னை வட்டார அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அது ஒரு எட்டு மாடிக் கட்டிடம்.

எங்களுடைய அலுவலகம் அமைந்திருந்த தளத்தைத் தவிர்த்து மற்ற ஏழு மாடிகளிலும் அக்கட்டிட உரிமையாளர்களான ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்த நிறுவனங்களே அமைத்நிருந்தன.

எங்களுடைய அலுவலகம் அக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட சமயத்தில் நான் அங்கு சீஃப் மேலாளராக இருந்தேன்.

ஆகவே அந்த கட்டடத்தின் மற்ற தளங்களில் பணியாற்றிய பலரையும் எனக்கு பரிச்சயமிருந்தது.

அதில் ஒருவர் என்னை லிஃப்ட்டில் (இதுக்கு என்னங்க தமிழ்? மின்தூக்கி!) பார்த்துவிட்டு ‘எப்படி சார் இருக்கீங்க? இப்ப இங்கயே வந்துட்டீங்களா?’ என்றார். நாங்கள் இருவரும் சந்தித்து சுமார் பதினைந்து வருடங்கள் ஓடியிருந்தன!

இந்த பதினைந்து வருடங்களில் நான் சுமார் ஐந்தாறு இடங்களில் பணியாற்றிவிட்டேன். அவரோ அதே கட்டடத்தில்! அவர் முன்பு இருந்த அதே தளத்தில்.. இருக்கை மட்டும் மாறியிருந்தது!

இந்த பதினைந்தாண்டு காலத்தில் நான் சுமார் பலதரப்பட்ட நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சந்தித்திருப்பேன். அவர்களுடன் பழகியிருப்பேன். ஆனால் அவர்? ‘எங்க சார்.. பொழுது போனா, பொழுது விடிஞ்சா.. இதோ இந்த காப்பிக்காரன் முகத்துலதான்..(அவரும் கையில் ஒரு டிரெயில் பத்து காப்பி கோப்பைகளுடன் எங்களுடன் அன்று லிஃப்ட்டில்.. என்ன ஆச்சரியம் என்றால் அவரும் அதே கட்டிடத்தில் எங்களுடைய அலுவலக துவக்க நாளன்று வந்திருந்தவர்களுக்கு தேனீர் சப்ளை செய்தவர்!) நீங்க குடுத்து வச்சவர் சார். எத்தன ஊர பாத்துருப்பீங்க?’ என்று சலித்துக்கொண்டார்.

‘ஹ¥ம்.. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதுபோல்தான்’ என்று நினைத்துக்கொண்டேன். ஊர் மாற்றத்திற்கு ஆளாகும்போதெல்லாம் நானும் என் குடும்பத்தாரும் பட்ட அவஸ்தைகள் அவருக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது?

ஆனாலும் இது சுவார்ஸ்யமான பதவிதான். எத்தனைக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தாலும் இறுதியில் நம்மால் பிறருடைய முன்னேற்றத்திற்கு உதவ முடிகிறதே என்ற மனதிருப்தி வேறெந்த அலுவலிலும் கிடைக்க வாய்ப்பில்லை.

அதுவும் ஒவ்வொரு கிளையாக ஆய்வுக்குச் செல்லும் வாய்ப்பு ஒரு கிளை மேலாளருக்குக் கிடைக்கக் கூடிய அனுபவங்களை விடவும் மிக அதிக அளவிலான அனுபவங்களை எனக்கு அளித்தது என்றே நினைக்கிறேன்.

அவற்றில் சில..

ஒரு முறை நாட்டின் பெரு நகரங்களிலிருந்த (Metros) எங்களுடைய கிளை ஒன்றிக்கு ஆய்வுக்கு சென்றிருந்தேன்.

அப்போது கிளை மேலாளர் பதவியிலிருந்தவர் என்னுடைய பேட்ச் மேட் என்பார்களே அதுபோல நான் மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்ட அதே நாளில் மேலாளரானவர். என்னுடைய வயதுதான் அவருக்கும்.

ஆயினும் இத்தனை பெரிய கிளைக்கு இவ்வளவு விரைவில் எப்படி மேலாளராக முடிந்தது என்று தோன்றியது எனக்கு. ஆனால் அவருடயை குடும்பப் பெயரில் (அம்மாநிலத்தில் ஒருவரின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை அவர்களுடைய குடும்பப் பெயரை (வீட்டுப் பெயர் என்பார்கள்) வைத்தே கணித்துவிடலாம்.) அப்போதிருந்த எங்களுடைய இயக்குனர்களில் ஒருவருடைய பெயரும் ஒன்று என்பது பிறகுதான் நினைவுக்கு வந்தது.

சரி.. அது நமக்கு வேண்டாம்.. மேலிடத்து செல்வாக்கில் உயர்வது எல்லா நிறுவனங்களிலும் உள்ளதுதானே.

ஆனால் செல்வாக்கு மட்டும் போதாது.. அனுபவமும் திறமையும் மிக, மிக அவசியம் என்பது அவருடைய கிளையை ஆய்வு செய்து முடித்தபோது எனக்கு விளங்கியது.

There is no substitute for hard work என்பார்கள்.. உன்மைதான். ஆனால் கடின உழைப்பு மட்டுமே போதாது.. புத்திசாலித்தனமும் வேண்டும். அத்துடன் விஷய ஞானமும் வேண்டும்.

விஷய ஞானமும், புத்திசாலித்தனமும் இல்லாத கடின உழைப்பு வீண் என்பதை அவருடைய கிளையை ஆய்வு செய்தபோது என் கண் முன்னே காண முடிந்தது.

வங்கியின் இயக்குனர் குழுவில் மூத்த அங்கத்தினர் ஒருவருக்கு உறவினர் என்றாலும் அக்கிளை மேலாளார் உழைப்புக்கு அஞ்சாதவர். அவர் மேலாளராக பதவியேற்றதிலிருந்து வணிகத்தைப் பல மடங்கு உயர்த்தியிருந்தார். அதாவது மொத்த வணிகத்தின் அளவை.

ஒரு கிளையின் மொத்த வணிகத்தின் அளவு (Total turnover) என்பது கிளைக்கு கிடைத்த சேமிப்பு (Deposits) அளவையும் கிளை வழங்கியிருந்த கடன் (Advances) அளவையும் சேர்த்து கணக்கிடுவது. அவர் கிளைக்கு பொறுப்பேற்றிருந்த தியதியிலிருந்த அளவுடன் (Level) நான் ஆய்வு நடத்திய தியதியிலிருந்த அளவை ஒப்பிடுகையில் சுமார் முப்பதிலிருந்து ஐம்பது விழுக்காடுகள்வரை கூடியிருந்ததைக் காண முடிந்தது.

அவர் பதவியிலிருந்த சுமார் முப்பது மாத காலத்தில் அவர் சாதித்திருந்தது உண்மையிலேயே பெரிய சாதனைதான். மறுப்பதற்கில்லை. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் இப்போதுள்ளது போல Bullish ஆக இருந்திராத காலம் அது.

ராஜீவ் காந்தி பிரதமராக தட்டுத்தடுமாறி ஆட்சி செய்துக்கொண்டிருந்த காலம்.  

ஆனால் ஒரு மேலாளரின் வணிக மற்றும் நிர்வாகத் திறமை அவருடைய காலத்தில் கிளையில் நடந்த மொத்த வணிகத்தின் அளவையல்ல மாறாக அதன் தரத்தைப் பொறுத்தே கணிக்கப்படுகிறது.

சகட்டுமேனிக்கு வர்த்தகத்தை கூட்டிவிட்டு அதனால் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லையல்லவா?

அப்படித்தான் இருந்தது அந்த கிளையின் செயல்பாடு.

எதனால் அந்த நிலமை?

இதற்கு பல காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

ஒன்று சம்பந்தப்பட்ட மேலாளர் ஊழல் பேர்வழியாக இருக்கலாம்.

அல்லது விஷய ஞானம் இல்லாதவராகவோ அல்லது நிர்வாகத் திறமையில்லாதவராகவோ அல்லது over enthusiastic (மிதமிஞ்சிய ஆர்வம் என்று சொல்லலாமா?) ஆகவோ இருக்கலாம்.

ஒரு கிளை மேலாளர் ஊழல் பேர்வழியாக  இருக்கும் பட்சத்தில் அவர் வழங்கியிருந்த கடன்களில்தான் (Advances) பிரச்சினையாக இருக்கும். அதாவது கிளையனுடைய நிதியறிக்கையில் வலதுபுறம் (Right hand side of the Balance Sheet) எனப்படும் Asset sideல்தான் எல்லா பிரச்சினையும் இருக்க வாய்ப்புண்டு என்போம்.

ஆனால் இடப்புறத்திலுள்ள Liabilitiesலும் (Deposits) பிரச்சினைகள் இருந்தால் நிச்சயம் அவர் நான் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள விஷய ஞானம், நிர்வாகத் திறமை அல்லது மிதமிஞ்சிய ஆர்வம்.. அதாவது எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் தனக்கு நியமிக்கப்பட்டுள்ள இலக்கை கடக்க வேண்டும் என்பதுதான் குறி என்று செயல்படுபவராகத்தான் இருக்க முடியும்.

Asset பக்கத்தில் மட்டும் பிரச்சினையென்றால் வங்கிக்கு பண நஷ்டம் ஏற்படும். ஆனால் Liability பக்கத்திலும் பிரச்சினையென்றால் வங்கியின் பெயரும் நஷ்டப்பட வாய்ப்பிருக்கிறது.

ஒரு உதாரணத்திற்கு..

இப்போதெல்லாம் வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு (Deposit or Savings Accounts) ஒன்றைத் துவக்க விரும்பினால் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துக்கொள்ளுங்கள்’ என்ற கொள்கையில் (Know Your Customer Concept) நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து நியதிகளையும் (Norms) நிச்சயம் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

அப்போது இத்தகைய கொள்கை அமுலில் இருக்கவில்லையென்றாலும் இப்போது பிரத்தியேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நியதிகளுக்கு இணையான நியதிகள் இருக்கத்தான் செய்தன.

அதாவது வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள விரும்பும் நபர் வங்கிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாயுள்ள வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

அவர் அவர்தான் என்பதை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கணக்கில் ரொக்கமாக செலுத்த வேண்டுமெனில் அதற்குத் தேவையான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் (Proof of resources). அதாவது மாத வருமானம் மட்டுமே உள்ள ஒருவர் லட்சக்கணக்கில் ரொக்கமாக வங்கியில் செலுத்த அனுமதிக்கமாட்டார்.

இது சேவிங்ஸ் கணக்குக்கு மட்டுமல்ல. வைப்பு நிதி (Fixed Deposits) கணக்குகளுக்கும் பொருந்தும். கணக்கில் வராத பணம் வங்கிகள் மூலமாக புழக்கத்தில் விடப்படலாகாது என்பதற்காகவே இத்தகைய நியதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இதன் உட்பொருளை உணராமல் சகட்டு மேனிக்கு போவோர் வருவோரையெல்லாம் வங்கிக் கணக்குகளைத் துவக்க அனுமதித்துவிட்டு அது வருமான வரி இலாக்காவிற்கு தெரிய வந்தால் அதை அனுமதித்த வங்கி மேலாளர் மீது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர் மீதும் நேரடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

அப்படியொரு செயலைத்தான் செய்து வைத்திருந்தார் நான் ஆய்வு செய்த கிளையின் மேலாளர்.. அதாவது தான் செய்தது எத்தனை விபரீதமானது என்ற விவரமில்லாமல்..

தொடரும்..


11 December 2006

தி.பா.தொடர் - பாகம் II - 4

ஆகவே அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை எனவும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து அவர் குறிப்பிட்டிருந்ததுபோல் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும் நான் ஒரு தனி அறிக்கையைத் தயார் செய்து வட்டார மேலாளருக்கு நேரடியாக சமர்ப்பித்தேன்.

இது நான் செய்த பெரிய தவறு.

வயது கோளாறும் ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவமின்மையும்தான் இதற்குக் காரணம் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு கிளையில் ஒரேயொரு தலைவர்தான் இருப்பார். ஆகவே அக்கிளையைப் பொறுத்தவரை அவர் வைத்ததுதான் சட்டம். இதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

சாதாரணமாகவே ஒரு கிளையின் மேலாளருக்கும் அவருக்கு கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகளுக்கும் இடையில் சற்று அதிக வயது வித்தியாசம் இருந்ததுண்டு. ஆகவே கிளை மேலாளரை எதிர்த்து பேசுவதோ நடப்பதோ அப்போது குறைவாகவே இருந்தது.

இப்போது அதுவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் வயதும் அனுபவமும் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை.

ஆனால் ஒரு நிர்வாக அலுவலகத்தில் தலைவராக இருக்கும் வட்டார மேலாளருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றும் துணை வட்டார மேலாளர்களுக்கும் (சீஃப் மேலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு) மிகக் குறைந்த வயது வேறுபாடே இருந்தது.

அத்துடன் துணை வட்டார மேலாளர்களுடைய உதவியில்லாமல் அலுவலகத்தை நடத்திச் செல்வதென்பது ஒரு வட்டார மேலாளராக்கு, எத்தனை திறமையும், அறிவும் இருந்தாலும், சாத்தியமில்லை. இந்த கணினி யுகத்திலும் அதே நிலைதான். சொல்லப்போனால் இப்போதெல்லாம் கணினியை இயக்குபவர் துணையில்லாமல் கூட இத்தகைய அலுவலகங்களை திறம்பட நிர்வகிக்க இயலாது என்ற சூழல்.

என்னதான் என் தரப்பில் நியாயம் இருந்தாலும் அதே அலுவலகத்தில் எனக்கு உடனடி அதிகாரியாக இருந்தவருடைய கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை எழுத்து மூலமாக என்னுடைய வட்டார மேலாளருக்கு தெரிவித்தது தவறு என்று அவரே உணர்ந்து என்னுடைய அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று அதிலேயே எழுதி எனக்கு திருப்பியனுப்பி விட்டார்.

சாதாரணமாக இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன் என்போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அறிவிக்கும் அவர் இந்த விஷயத்தில் எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல் என்னுடைய அறிக்கையை திருப்பியனுப்பியது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் அவருடைய அத்தகைய முடிவுக்குப் பின்னால் என்னுடைய அதிகாரியிருந்தார் என்பதைப் பிறகுதான் தெரிந்துக்கொண்டேன்.

என்னுடைய அறிக்கை திரும்பி வந்ததும் மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்த நேரத்தில் என்னை வட்டார மேலாளர் அழைப்பதாக சிப்பந்தியொருவர் தெரிவிக்க நான் அந்த அறிக்கையைக் கையில் எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்கு விரைந்தேன்.

‘வாங்க டிபிஆர்.’ என்று என்னை அழைத்து அமரச் செய்து அடுத்த பத்து நிமிடங்கள் அவ்வலுவலகத்தில் என்னுடைய அங்கம் என்ன, அதற்கு பங்கம் வராமல் நான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை அளித்துவிட்டு இறுதியில், ‘எனக்கு இந்த ஆஃபீச சுமுகமா, பிரச்சினையில்லாம நடத்திக்கிட்டு போகணும்னு ஆசை. அதுமட்டுமில்லாம நம்ம பிரச்சினைய விட நமக்குக் கீழ ஃபங்க்ஷன் செஞ்சிட்டிருக்கிற பிராஞ்ச்சுகளுடைய பிரச்சினைதான் முக்கியம். நாமளே நமக்குள்ள இப்படி பிரச்சினைய ஏற்படுத்திக்கிட்டிருந்தா நம்மால அவங்க பிரச்சினைய தீர்த்துவைக்க முடியாது. அதுமட்டுமில்லாம ஒங்களுக்கு அவரெ விட நாலெட்ஜ் அதிகமா, இல்ல, அவருக்கு ஒங்களவிட அதிகமான்னு எல்லாம் எடை போடறதுக்கு இது நேரமில்ல . அதுக்கு எனக்கு நேரமுமில்ல டிபிஆர். If you feel that you can’t adjust with him anymore.. I will change your department.. என்ன சொல்றீங்க?’ என்றார்.

நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்து முழுதாக மூன்று மாதங்கள் கூட நிறைவுற்றிருக்கவில்லை. அதற்குள், காரணம் எதுவாக இருந்தாலும், இலாக்கா மாற்றம் என்றால் நிச்சயம் இந்த விஷயம் என்னுடைய தலைமையகத்துக்கு எட்ட வாய்ப்பிருக்கிறது. ஆகவே இவர் கூறுவதுபோல் விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் அடங்கிப் போவதுதான் புத்திசாலித்தனம் என்று நினைத்தேன் நான்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஒருவரையே மதிக்காமல் தண்டிக்கப்பட்டவன் என்ற முத்திரை வேறு இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக என்னுடைய உயர் அதிகாரிகளுள் ஒருவரையும் மதிக்கவில்லை என்ற அவப்பெயரும் எனக்கு ஏற்பட்டால் அது என்னுடைய எதிர்கால அலுவலக வாழ்க்கையை பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்.

‘தாங்ஸ் சார்.. I’ll think about what you said.. But I don’t think I should opt for this change..’ என்று கூறிவிட்டு என்னுடைய இருக்கைக்கு திரும்பினேன்.

நான் வட்டார மேலாளர் அறைக்குச் சென்றதையும் நான் எடுத்துச் சென்ற அறிக்கையுடன் என்னுடைய இருக்கைக்கு திரும்பியதையும் நக்கலுடன் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய அதிகாரியின் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவர் விரும்பியபடியே நான் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் மாற்றங்கள் செய்தேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் முற்றிலும் எதிர்பாராத வார்த்தைகளைப் பிரயோகித்து நான் ஆய்வு நடத்திய மேலாளருடைய விளக்கத்தைக் கேட்டு ஒரு கடிதத்தையும் தயாரித்து திருத்தப்பட்ட ஆய்வறிக்கையுடன் அவருடைய பார்வைக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னுடைய மற்ற அலுவல்களைக் கவனிக்க துவங்கினேன்.

அவர் என்ன நினைத்தாரோ என்னுடன் மீண்டும் கலந்தாலோசிக்காமல் அவரே என்னுடைய கடிதத்தில் நான் பிரயோகித்திருந்த கடினமான வார்த்தைகளை மாற்றி அதன் வீரியத்தைச் சற்றே குறைத்து ‘please prepare a fresh draft’ என்று எழுதி திருப்பியனுப்ப நான் மறுபேச்சு பேசாமல் தட்டச்சு செய்தவரிடம் கொடுத்துவிட்டு அதை அத்துடன் மறந்துபோனேன்.

ஆனால் நான் அந்த கசப்பான அனுபவத்தை அத்துடன் விட நினைத்தாலும் என்னுடன் பணியாற்றிய சக அதிகாரிகள் என்னை விடுவதாய் இல்லை. ‘என்ன டிபிஆர் இவ்வளவு சீக்கிரமா சரண்டராயிட்டீங்க? ஒங்க பேர்ல எந்த தப்பும் இல்லாம எதுக்கு பணிஞ்சி போறீங்க?’ என்று நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இத்தகையோரை எல்லா அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். தங்களால் இயலாதவற்றை மற்றவர்களைத் தூண்டிவிட்டு நிறைவேற்றிக்கொள்ள பார்ப்பவர்கள் இவர்கள். உன்னுடைய எதிரிக்கு எதிரி என் நண்பன் என்பதுபோல்தான்.

என்னுடைய அதிகாரியை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். அவர்களுக்கு அவரை எதிர்த்து நிற்க துணிவில்லை. ஆனால் நான் நிற்க வேண்டும். ஒருவேளை அந்த போராட்டத்தில் நான் வெற்றிபெற்று அவருக்கு அங்கிருந்து மாற்றம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுடைய பிரச்சினையும் தீர்ந்துவிடுமே என்ற நப்பாசைதான்.

ஆனால் என்னுடைய அலுவலகத்தில் ஆப்பரேஷன்ஸ் பிரிவின் தலவைராக இருந்தவர் அந்நேரத்தில் எனக்கு தகுந்த ஆலோசனைய¨ அளித்தார்.

‘டிபிஆர். ஒங்க பிரச்சினை என்னன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. நடுநிலையில்லாத, வெறும் வீம்புக்கு பிடிவாதம் பிடிக்கற ஒரு அதிகாரிகிட்ட ஒர்க் பண்ண வேண்டி வந்துருச்சேங்கற ஒங்க ஆதங்கம் நியாயமானதா இருக்கலாம். ஆனா அவர் ஒங்களவிட பத்து, பதினஞ்சு வருசம் சீனியர். அனுபவமும் ஒங்களவிட ஜாஸ்தி. அவர் மேல நம்ம ஜோனல் மேனேஜருக்கு மதிப்பு இருக்கா, இல்லையாங்கறது வேற விஷயம். ஆனா எந்த ஒரு சந்தர்ப்பத்துலயும் அவரெ விரோதிச்சிக்கிட்டு ஒங்கள சப்போர்ட் பண்ண மாட்டார். அத நீங்க எதிர்பாக்கறதும் சரியில்லை. சார் சொன்னா மாதிரியே நீங்க வேணும்னா டிப்பார்ட்மெண்ட்ட மாத்திக்கலாம்.. ஆனா அது மட்டுமே ஒங்க ப்ராப்ளத்த சால்வ் பண்ணிறாது. எப்படியும் நாம எல்லாம் ஒரே ஆஃபீஸ்லதான் இருக்கப் போறோம். அதனால நீங்க அவர முடிஞ்ச வரைக்கும் அட்ஜஸ்ட பண்ணிக்கறதுதான் நல்லது. அவர் நல்ல மூட்லருக்கறப்ப நானும் ஒங்களப்பத்தி சொல்றேன். கவலைப்படாதீங்க.’ என்று ஆறுதலாகப் அறிவுறுத்தி அவர் கூறியதுபோலவே என்னுடைய அதிகாரியிடம் பரிந்துரைக்க எங்கள் இருவர் மத்தியிலும் இருந்த கருத்து வேறுபாடு குறைந்து அடுத்த சில மாதங்களில் இல்லாமலே போனது என்றுதான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் நான் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் நாளடைவில் அது சற்றுக் குறைத்துக்கொண்டதை என்னால் உணர முடிந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் எந்த கிளைக்கு ஆய்வுக்குச் சென்றாலும் என்னுடைய அறிக்கையை தட்டச்சு செய்வதற்கு முன்னதாகவே அதனுடைய கைப்பிரதியை அவருடைய பார்வைக்கு அனுப்புவதை வழக்கமாக்கிக்கொள்ள அதை முற்றிலும் எதிர்பாராத அவர் நான் எழுதியதில் எந்தவித மாற்றமும் செய்யாமல் திருப்பியனுப்ப ஆரம்பித்தார்.

நான் அந்த அலுவலகத்தில் இருந்தது மொத்தம் பதினோரு மாதங்கள்தான். அதில் ஆறுமாத காலம் டெவலெப்மெண்ட் பிரிவில் பணியாற்றிவிட்டு நான் குறிப்பிட்ட என்னுடைய அதிகாரி மாற்றலாகிச் சென்றதும் மீதி மாதங்கள் ஆப்பரேஷன்ஸ் பிரிவில் பணியாற்றினேன்.

நான் ஆய்வு இலாக்காவில் இருந்த ஆறு மாதகாலத்தில் குறைந்தது இருபது, இருபத்தைந்து கிளைகளுக்கு ஆய்வு நடத்த சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நான் கிளை மேலாளராக இருந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைவிடவும் சுவாரஸ்யமாக இருந்ததுடன் அதற்குப் பிறகு மீண்டும் கிளை மேலாளராக அமர்த்தப்பட்டபோது மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

தொடரும்..

06 December 2006

தி.பா.தொடர்:பாகம் II - 3

ஏற்கனவே வங்கி மேலாளராக இருந்த அனுபவம் வங்கியின் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றுகையில் உபயோகமாக இருக்கலாம். ஆனால் ஒரு கிளையை ஆய்வு செய்யும் நேரத்தில் அத்தகைய அனுபவம் ஒரு இடைஞ்சல் (hindrance அல்லது  Liability) என்றுதான் கூறவேண்டும்.

ஒரு மேலாளராக கிளையின் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சில சமயங்களில் வங்கியின் நியதிகளை இங்குமங்கும் மீற வேண்டியிருக்கும். அது இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியாது என்பது என்னைப் போன்ற மேலாளர்களுக்கு தெரியும். ஏன், நானும் தேவைப்படும் சமயங்களில் பல நியதிகளை மீறியிருக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் அந்த மீறல்களால் வங்கிக்கு எந்த இழப்பும் ஏற்பட்டதில்லை.

ஆகவே நான் ஆய்வு செய்யும் கிளைகளில் நடந்துள்ள சில தவறுகள் அல்லது விதி மீறல்கள் என்னுடைய பார்வையில் அத்தனை தீவிரமானதாக தோன்றாது.  என்னுடைய கணிப்பில்  வங்கிக்கு எந்த இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றால் சம்பந்தப்பட்ட மேலாளர் மற்றும் கிளை அதிகாரிகளுடன் அமர்ந்து அவற்றைப் பற்றி விசாரித்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிக்கை செய்வதுடன் விட்டுவிடுவேன்.

ஆனால் சில நேரங்களில் அத்தகைய விதிமீறல்கள் தீவிரமானதல்ல, அவற்றால் வங்கிக்கு பாதிப்பு ஏற்படாது என்று நினைத்து அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டிருந்த சில குறைபாடுகள், விதி மீறல்களால் வழங்கப்பட்டிருந்த கடன்கள் வாராக் கடன்களாகிப்போன சூழலில் எனக்கு வினையாக முடிந்ததும் உண்டு.

நான் மும்பை மற்றும் சென்னை கிளைகளில் அதிகாரியாகவும், சென்னை மதுரை போன்ற நகரங்களில் சற்று வர்த்தகம் அதிகமிருந்த கிளைகளில் மேலாளராக பணியாற்றியிருந்ததால் என்னுடைய உடனடி அதிகாரிக்கு அவ்வளவாக விருப்பமில்லையென்றாலும் என்னுடைய வட்டார மேலாளர் மும்பை, தில்லி, கொல்கொத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னைக் கிளைகளில்ஆய்வும் நடத்தும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்.

ஆனால் நான் மேலாளராக இருந்த கிளைகளில் ஏதோ செய்யக் கூடாததையெல்லாம் செய்துவிட்டுத்தான் வட்டார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தேன் என்ற நினைப்பில் எனக்கு பெரிய கிளைகளை ஒப்படைத்தால் அவற்றில் நடக்கும் தில்லுமுல்லுகளை, ஒழுங்கீனங்களை நான் கண்டும் காணாதவாறு இருந்துவிடுவேன் என்பது என்னுடைய உடனடி அதிகாரியின் எண்ணம்.

ஆகவே நான் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கைகளை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது, ‘டிபிஆர். நீங்க ரொம்ப லிபரலா இருக்கீங்க. நீங்க மேலாளர் கோணத்துலருந்து பார்த்தா சரிவராது. எல்லா குறைபாடுகளுக்கும் யாராவது ஒருத்தர நிச்சயம் ரெஸ்பான்பிள் ஆக்கணும். அதுதான் நம்ம வேலை. இல்லன்னா நாம நம்ம டூட்டிய சரியா செய்யலேன்னு எச்.ஓவுல நினைப்பாங்க. அப்படி இப்படின்னு சந்தேகமா இருந்தாக்கூட பரவாயில்லை, எக்ஸ்பிளேஷன் கேட்டுரணும். நம்ம டூட்டி முடிஞ்சிரும். அப்புறம் நான் இதுக்கு பொருப்பில்லேன்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி அதுலருந்து தப்பிக்கறது அவங்க பொருப்பு.’ என்று லெக்சர் அடிப்பார்.

நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். உடனே வாக்குவாதம்தான். அவர் வாதத்தில் அவர் பிடிவாதமாக நிற்க நானும் என்னுடைய வாதத்தில் உறுதியாக நிற்பேன். ‘சார்.. என்னெ பொருத்தவரைக்கும் இது பெரிய தப்பில்லை. அதனால என்னால எக்ஸ்பிளேஷன் எல்லாம் கேட்க முடியாது. நீங்க வேணும்னா என்னெ ஓவர் ரூல் செஞ்சி நீங்களெ அவங்கக்கிட்ட என்ன கேக்கணுமே கேட்டுக்குங்க..’ என்பேன்.

முடிவில் வட்டார மேலாளர் பார்வைக்கு கோப்பு செல்லும். அவர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் அவராலேயே முடிவு எடுக்க முடியாதபடி என்னுடைய அதிகாரி இடையில் புகுந்து குட்டையைக் குழப்பிவிடுவார்.

வட்டார மேலாளர், ‘சரி சார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. படிச்சி பார்த்துட்டு சொல்றேன்.’ என்றாலும் விடமாட்டார். ‘சார் நான் டிபிஆர விட பதினஞ்சு வருசம் சீனியர். அவரவிட அனுபவமும் ஜாஸ்தி.. அதனால நான் சொல்றதத்தான் நீங்க கேக்கணும். இதுல படிச்சு பாக்கறதுக்கு என்ன இருக்கு சார்.’ என்பார்.

அவர் எங்கள் இருவர் இடையிலும் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஒரு பக்கம் சிரிப்பும், ஒரு பக்கம் வேதனையுமாக இருக்கிறது.

இப்படித்தான் ஒரு முறை..

ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு கிளையில் ஆய்வு நடத்திவிட்டு வந்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தேன்.

என்னுடைய ஆய்வு முடிந்து நான் திரும்பி வந்த நேரத்தில் என்னுடைய அதிகாரி இருவார விடுப்பில் இருந்தார்.

ஆகவே என்னுடைய அறிக்கையை நேரடியாக என்னுடைய வட்டார மேலாளரிடம் சமர்ப்பிக்க அவரும் மேலோட்டமாக அதைப் படித்துவிட்டு நான் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளுக்கு கிளையிலிருந்த அதிகாரிகள் யாரிடமேனும் விளக்கம் கேட்க வேண்டுமா என்று வினவினார்.

நான் ‘இல்லை சார்.. நான் குறிப்பிட்டுள்ள தவறுகள் எல்லாமே சாதாரணமாக எல்லா கிளைகளிலும் காணக் கூடியவைதான். ஆகவே இவற்றைச் சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மட்டும் பட்டியலிட்டு கிளைக்கு அனுப்பலாம்’ என்று பரிந்துரை செய்ய அவரும் அதை ஒப்புக்கொண்டு அறிக்கையில் தன்னுடைய குருக்கையொப்பத்தை இட்டு (initials) என்னிடமே திருப்பியளித்துவிட்டார்.

நானும் அவருடைய உத்தரவை நிறைவேற்றி கிளைக்கு அனுப்ப வேண்டிய அறிக்கை நகலுடன் நான் தயாரித்திருந்த பட்டியலையும் அனுப்பி வைத்துவிட்டு அறிக்கையையும் நான் கிளைக்கு அனுப்பிய பட்டியலையும் என்னுடைய அதிகாரியின் பார்வைக்கு வைத்தேன்.

அவர் திரும்பி வருவதற்குள் சென்னையை அடுத்திருந்த வேறொரு கிளைக்கு ஆய்வுக்கு சென்று வந்துவிடலாம் என்ற நினைப்பில் வட்டார மேலாளரிடம் அனுமதி பெற்று சென்றேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக நான் புறப்பட்டுச் சென்ற அடுத்த நாளே அவர் பணிக்கு திரும்பியிருந்தார். சாதாரணமாகவே ஊரில் மனைவி, மக்களைப் பார்த்துவிட்டு திரும்பினால் குறைந்தது ஒரு வாரத்திற்கு சிடுசிடுவென இருப்பார். தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். நாம் செய்கின்ற எல்லா வேலைகளிலும் குறை காண்பதிலேயே முனைப்பாயிருப்பார்.

அதுவும் என் மீது அத்தனை நல்ல அபிப்பிராயம் இல்லாததால் என்னுடைய ஆய்வறிக்கைகளை ஒரு வரிவிடாமல் பூதக்கண்ணாடி வழியாக பார்ப்பார். ஒரு பத்து, பதினைந்து பக்க அறிக்கையை சமர்ப்பித்திருந்தால் அதில் குறைந்த எட்டு, ஒன்பது பக்கங்களில் தன்னுடைய சிவப்பு மசி பேனாவால் தன்னுடைய எதிர்ப்பைக் குறித்து வைப்பார்.

அப்போது கணினியும் இல்லை என்பதால் நாம் கைப்பட எழுதி தட்டச்சு செய்ய வேண்டும். அத்தகைய அறிக்கையில் அவர் சிவப்பு மசியால் எழுதிய வைத்துள்ள குறிப்புகளுடன் கிளைக்கு அனுப்ப முடியாதென்பதால் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டி வரும்.

எனக்கே கடுப்பாக இருக்கும் என்றால் தட்டச்சு செய்பவருக்கோ கேட்கவே வேண்டாம். அவரும் கடுப்பாகிவிடுவார்.

அன்றும் அப்படித்தான். நான் என்னுடைய ஆய்வு முடிந்து திரும்பி வந்ததும் என்னுடைய அலுவல்களுக்கு துணையாயிருந்த குமாஸ்தாவும், என்னுடைய அறிக்கைகளைத் தட்டச்சு செய்பவரும், ‘சார் நீங்க பிரிப்பேர் பண்ண அந்த ---------------- பிராஞ்ச் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்ட கம்ப்ளீட்டா மாத்தணும் போலருக்கு சார்.. என்னோட அப்ரூவல் இல்லாம ஒங்கள யார் ஜோனல் மேனேஜருக்கு அனுப்பச் சொன்னதுன்னு வந்ததுலருந்து நம்ம இன்ஸ்பெக்டர் (அவருக்கு அலுவலகத்திலுள்ளவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர். அவர் சுமார் பதினைந்து வருடங்கள் எங்களுடைய மத்திய அலுவலகத்தின் ஆய்வு இலாக்காவில் பணிபுரிந்தவர் என்பதால்தால் அந்த பட்டப் பெயர்) எங்க ரெண்டு பேரையும் போட்டு வறுத்தெடுத்துட்டார் சார்.அத்தோட நிக்காம அந்த பிராஞ்ச் மேனேஜர கூப்ட்டு நீ செஞ்சிருக்கற வேலைக்கு ஒன்மேல டிசிப்ளனரி ஆக்ஷன் நிச்சயம உண்டுன்னு வேற மிரட்டி மரியாதையா டிபிஆர் ஒங்களுக்கு அனுப்புன ரிப்போர்ட் காப்பிய உடனே திருப்பி எனக்கு அனுப்பணும்னு சொல்லிட்டார் சார்.’ என்றபோது எனக்கு உடனே கோபம் வந்தாலும் பொறுமையுடன் என்னுடைய அறிக்கையில் அவர் எழுதியிருந்த குறிப்புகளை முழுவதுமாக படித்துவிட்டு பிறகு அவரை எதிர்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.

பொதுவாக இதுபோன்ற அலுவலகங்களில் பணியாற்றுகையில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் எந்த அதிகாரியுமே பணியாற்றுவது சாத்தியமில்லை. அதிகாரிகள் நிலையில் இருந்த அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கிளைக்கு மேலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவே இருந்தனர்.

அப்போது என்னுடன் பணிபுரிந்த அனைவருமே என்னுடைய அதிகாரியைக் காட்டிலும்  கூடுதல் காலம் மேலாளர்களாக பணிபுரிந்த அனுபவம் இருந்ததை நான் அறிந்திருந்தேன். ஆகவே என்னுடைய ய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்த குறிப்புகள் குழந்தைத்தனமாக இருந்ததுடன் ஏதோ என் மேலிருந்த காழ்ப்புணர்ச்சியால்தான் என்பதை நாங்கள் எல்லோருமே உணர்ந்தோம்.

இருப்பினும் அந்த அலுவலகத்தைப் பொருத்தவரை வட்டார மேலாளருக்கு அடுத்தபடியான பதவியில் அவர் இருந்ததால் அவருடைய கருத்துக்கு மதிப்பளிக்காமல் இருப்பதும் சாத்தியமில்லை.

அதே சமயத்தில் என்னுடைய ஆய்வறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளால் வங்கிக்கு பெருத்த இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதுபோல் அவர் தன்னுடைய கருத்தை எழுதி வைத்திருந்ததையும் என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஆகவே அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை எனவும் ஆகவே சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து அவர் குறிப்பிட்டிருந்ததுபோல் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும் நான் ஒரு தனி அறிக்கையைத் தயார் செய்து வட்டார மேலாளருக்கு நேரடியாக சமர்ப்பித்தேன்.

வந்தது வினை..

தொடரும்..  

05 December 2006

தி.பா.தொடர் பாகம் II - 2

பிறகென்ன.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கைகலப்புதான்.. சாரி.. வாய்கலப்பு என்று சொல்ல வேண்டும்..

மனிதர் தன்னுடைய சர்வீசில் ஒரேயொரு கிளையில்தான் மேலாளராக இருந்தார் என்பதும் அங்கு செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டு தண்டிக்கப்பட்டார் என்பதும் பணிக்கு சேர்ந்த முதல் நாளே என்னுடைய சக பணியாளர் வழியாக எனக்கு தெரிந்துவிட்டது.

சாதாரணமாகவே வங்கிக் கிளைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றி ஏதாவது சிக்கலில் சிக்கிக்கொண்டவர்களையும், மேலாளராக திறமையுடன் பணியாற்ற முடியாதவர்களையுமே இத்தகைய நிர்வாக அலுவலகங்களுக்கு மாற்றுவார்கள். இந்நியதி என்னுடைய வங்கியில் மட்டுமல்ல ஏறத்தாழ எல்லா வங்கியிலும் நடைமுறையில் இருந்த ஒரு நியதி என்றால் மிகையாகாது. இல்லாவிடில் உடல்நலம் குன்றியவராகவோ, ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே உள்ளவராகவோ இருக்க வேண்டும்.

பொதுவாக, நிர்வாகத் தத்துவத்தின்படி (Management Philosophy) ஒரு நல்ல நிர்வாகத் திறமையுள்ளவரால் மட்டுமே தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை திறமையுடன் நிர்வகிக்க முடியும்.

அப்படிப் பார்க்கப் போனால் சுமார் ஐம்பது கிளைகளின் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்க வேண்டிய வட்டார அலுவலகத்தில் பணியற்றுபவர்கள் கிளை மேலாளர்களைவிட பன்மடங்கு திறமையானவர்களாக இருப்பதுடன் ஒரு கிளையை நடத்திச் செல்லத் தேவையான சகல விஷயங்களையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமல்லவா?

ஆனால் ஒரு சிறியக் கிளையில் கூட மேலாளராக குப்பைக் கொட்ட முடியாதவர்களையெல்லாம் இது போன்ற வட்டார அலுவலகங்களில் நியமிப்பது எந்தவகையில் நியாயம் என்று அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த சுமார் இரண்டு வருட காலத்தில் பலமுறை என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நிர்வாகத் திறமையிலும், விஷய ஞானத்திலும் அந்த அளவுக்கு  சூன்யமாக இருந்தவர்கள்தான் கிளை மேலாளர் பதவிக்கு மேலுள்ள பதவிகளில் வட்டார அலுவலகங்களில் அமர்ந்திருந்தனர்.

பணிக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே இப்படிப்பட்ட அதிகாரிகளிடத்தில் எப்படி நான் திறம்பட பணிபுரியப் போகிறேன் என்று நினைத்து நினைத்து மாய்ந்து போனேன்.

என்னுடைய பலமும் பலஹீனமுமே எதையும் குறித்த நேரத்தில், முடிந்தவரை சரிவர செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பதுதான். அத்துடன் மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் குணமும் அந்த வயதில் சற்று அதிகமாகவே இருந்தது. கோபம்? கேட்க வேண்டாம்.

நான் மேலாளராக இருந்த சமயத்தில் எனக்கு பலமாக இருந்த இந்த குணம் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பலவீனமாக மாறியது.

சுமார் ஏழாண்டுகள் அதிகாரம் செய்தே பழகிப் போன எனக்கு மற்றவர்களுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதும் சற்று சிரமமாகத்தானிருந்தது.

‘இங்க பாருங்க டிபிஆர், உங்க போறாத காலம் இந்த மாதிரி ஆஃபீஸ்ல வந்து மாட்டிக்கிட்டீங்க. ஒங்கள இங்க போடப் போறேன்னு சேர்மன் எங்கிட்ட சொன்னப்பவே ஒங்களால இங்க ரொம்ப காலத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாதுன்னு நினைச்சேன்.’ என்றார் என்னுடைய வட்டார மேலாளர்.

அவரை அதற்கு முன்னர் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றாலும் அவரும் கேரளத்திற்கு வெளியே பல வருடங்களாக  பணியாற்றியிருந்ததால் அவருக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது.

வங்கி அலுவல்களில் நல்ல அனுபவமும், நல்ல விஷய ஞானமும் அவருக்கு இருந்தது. ஆகவே எனக்கும் என்னுடைய உடனடி அதிகாரிக்கும் இடையில் கருத்து பரிமாற்றத்தில் பிரச்சினை ஏற்பட்ட போதெல்லாம் தலையிட்டு சுமுகமாக தீர்த்து வைத்ததுடன் அந்த விஷயம் என்னுடைய தலைமையலுவலகத்துக்கு தெரியாமலும் பார்த்துக்கொண்டார்.

அவருக்கும் எனக்கும் இடையிலிருந்த இந்த பிரத்தியேக உறவு நான் அந்த அலுவலகத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் அதுவே சில சமயங்களில் என்னுடைய சக அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பொதுவாகவே வட்டார அலுவலகம் என்பது ஒரு குட்டி தலைமையகம் என்று கருதப்படும். வங்கியின் தலைமையகம் வங்கி முழுவதுக்கும் தலைமை என்றால் வட்டார அலுவலகம் அதன் கீழ் இயங்கும் அனைத்து கிளைகளுக்கும் தலைமையலுவலகமாக இயங்க வேண்டும்.

நான் சென்னை வட்டார அலுவலகத்தில் பணியாற்றியபோது எங்களுடைய வங்கியின் மும்பை வட்டார அலுவலகம் துவக்கப்படவில்லை. அது துவக்கப்பட்ட சமயத்தில் நான்தான் அங்கு செல்ல வேண்டியிருந்தது. அதாவது சென்னையிலிருந்த பணியாற்றிய வருடத்திலிருந்து சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு. அதைப் பற்றி இத்தொடரின் மூன்றாம் பாகத்தில்தான் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

ஆகவே சென்னை வட்டார அலுவலகத்தின் கீழ் கேரள மாநிலத்தில் இயங்கி வந்த கிளைகளையும் தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இயங்கி வந்த கிளைகளையும்  தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இயங்கி வந்த மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த சுமார் 75 கிளைகள் இயங்கி வந்தன.

அதாவது அப்போது எங்களுடைய வங்கியின் மொத்த கிளைகளில் 40 விழுக்காடு எங்களுடைய வட்டார அலுவலகத்தின் கீழ் இருந்தது.

என்னுடைய அலுவலகத்தில் இத்தனை கிளைகளுடைய இயக்கத்தை மேற்பார்வையிட ஒவ்வொரு கிளைக்கும் சுமார் மூன்று அதிகாரிகள் என இருபத்தைந்து அதிகாரிகளும் எங்களுக்கு உதவி புரிய பத்து குமாஸ்தாக்கள் மற்றும் தட்டச்சு செய்பவர்களும் இருந்தனர்.

இத்தனை பேரும் டெவலப்மெண்ட், ஆப்பரேஷன்ஸ் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சீஃப் மேலாளர் அதிகாரியாக இருந்தார். இவ்விரு அதிகாரிகள்தான் என்னைப் போன்றவர்களுக்கு உடனடி அதிகாரிகள் (Immediate Superior). அவர்களுக்கு மேல் வட்டார அலுவலர் எனப்படும் Zonal Manager.

டெவலப்மெண்ட் பிரிவில் ஆய்வு இலாக்கா, கிளைகள் திறப்பது, இடம் மாற்றம் செய்வது, கிளைகளுக்குத் தேவையான பொருட்களை விநியோகிப்பது, விளம்பரங்கள் செய்வது, வர்த்தகத்தை மேம்படுத்த ஆவன செய்வது என்ற இலாக்காக்களும் ஆப்பரேஷன் பிரிவில் கடன் வழங்குவது, அதை வசூலிப்பது, வாராக் கடன்களை வசூலிக்க வழக்கு தொடுப்பது போன்ற இலாக்காக்களும் இருந்தன.

நான் பணிக்கு சேர்ந்தவுடன் டெவலப்மெண்ட் பிரிவில் இயங்கி வந்த ஆய்வு இலாக்காவிலிருந்த (Inspection Department) இரண்டு அதிகாரிகள், இரண்டு குமாஸ்தாக்கள், ஒரு தட்டச்சு குமாஸ்தாவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டேன்.

நானும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய இரண்டு அதிகாரிகளும் மொத்தமிருந்த எழுபத்தைந்து கிளைகளை தலைக்கு இருபத்தைந்து கிளைகள் வீதம் பிரித்துக்கொண்டு எங்களுடைய தலைமையலுவலகத்திலிருந்த மத்திய ஆய்வு இலாக்கா எங்களுடைய அதிகாரத்திற்கு கீழ் இயங்கி வந்த கிளைகளை ஆய்வு செய்து சமர்ப்பித்திருந்த வருடாந்தர ஆய்வு அறிக்கைகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு யார் பொருப்பு என்பதைக் கண்டுபிடிப்பதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட கிளைகள் சரிசெய்யும்வரை கண்கானிக்கவும் வேண்டும்.

அத்துடன் வருடத்திற்கு ஒருமுறை அனைத்துக் கிளைகளுக்கும் ஆய்வுக்கு செல்ல வேண்டும். சென்னை வட்டாரத்தில் இருந்த கிளைகளுள் பெரும்பாலானவை சென்னையிலிருந்து தொலைவில் இருந்ததால் வருடத்திற்கு ஒருமுறை எல்லா கிளைகளுக்கும் சென்றுவருவதே பெரிய பிரச்சினை.

எங்களுடைய பொருப்பிலிருந்த எழுபத்தைந்து கிளைகளில் மாதம் குறைந்த பட்சம் ஆறு கிளைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். போய் வரும் பயண நேரம் கிளையில் ஆய்வ நடத்த ஒதுக்கப்படும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் என்னுடைய இலாக்காவிலிருந்த மூன்று அதிகாரிகளும் மாறி, மாறி ஏறத்தாழ வருடம் முழுவதுமே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

எனக்கோ அப்போதெல்லாம் பயணம் செய்வதென்றாலே பயங்கர அலர்ஜி. இப்போது போல கம்ப்யூட்டர் முன்பதிவு வசதிகள் இல்லாததால் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் என்ற வசதிகள் இருக்கவில்லை. இப்போது உள்ளதுபோல் முன்பதிவு செய்துகொடுக்கும் தனியார் நிறுவனங்களும் இருக்கவில்லையென்பதால் ஒவ்வொரு முறையும் நாமோ அல்லது அலுவலகத்திலிருந்த சிப்பந்தி மூலமோ செய்யவேண்டியிருக்கும். படாத பாடுபட்டு நீண்ட வரிசைகளில் நின்று முன்பதிவு செய்து போய்வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.

அதுமட்டுமா? இத்தகைய ஆய்விற்கு செல்வது நாம் செல்லவிருக்கும் கிளைக்கு தெரியக்கூடாது. ஆகவே தங்க வேண்டிய இடத்தில் விடுதி அறையையும் முன்பதிவு செய்ய முடியாது. இப்போதுள்ளதுபோல வலைத்தளத்தில் நாம் செல்லவிருக்கும் இடத்தில் எத்தகைய விடுதிகள் உள்ளன, இடம் கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க முடியாது..

ஊர் போய்ச் சேர்ந்ததும் கையில் பெட்டியுடன் விடுதி, விடுதியாக அலைந்ததை இப்போது நினைத்தாலும்.. ச்சை.. அப்படியொரு அவஸ்தை.. குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உட்கோடியில் இருந்த ராஜாமுந்திரி, பீமாவரம், குல்பர்கா, பெல்காம் போன்ற நகரங்களுக்குச் சென்றுவருவது என்பது ஏதோ நரகத்திற்கு சென்று வருவது போலத்தான்.

சரி.. அடித்துப் பிடித்துப் போய் ஆய்வைத் துவக்கினால் ஏன்டா வந்தோம் என்பதுபோலிருக்கும். ஆங்கிலத்தில் thankless job என்பார்களே அதுபோல்தான்.

எந்த ஒரு கிளையிலும் மேலாளராக இருந்தும் வர்த்தகம் செய்துவிடலாம்.. ஆனால் ய்வு செய்ய முடியாது. அதுவும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் நம்முடைய கடந்த ஆய்வு தியதியிலிருந்து கிளையில் நடந்திருக்கும் வர்த்தக விவரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக (Random) ஆய்வு செய்து அவற்றில் வங்கியின் நியதிகளுக்கு புறம்பாக ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை சல்லடைப் போட்டு சலித்து கண்டுபிடிப்பதென்றால்..

சரி.. கண்டுபிடித்தோம்.. அதை அப்படியே அறிக்கையில் எழுதி விடலாம் என்று நினைத்தால் அதுவும் அத்தனை எளிதல்ல..

தொடரும்..