27 October 2006

கடந்து வந்த பாதை - 9

பரிமளா அவர்களை நான் முதியோர் இல்லத்தில் சந்தித்தபோது அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும்.

மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக் கசிவால் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துபோயிருந்த நிலையில் பேச்சில் தெளிவில்லாமல் பார்க்கவே பரிதாபகரமான நிலையில் நான் அவரை சந்தித்தேன்...

அவருக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி அளிக்க வந்து சென்ற ஒரு மருத்துவருடைய ஆலோசனைப்படி அவருக்கு பயிற்சிகளை செய்ய உதவுவது, அவருடைய பேச்சுத் திறனை மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டுவருவது.. இதுதான் என்னுடைய அலுவல்..

அத்தனை சிறிய வயதில் இனியும் நான் வாழ்ந்தென்ன பயன் என்ற மனநிலையில் இருந்த பரிமளாவை உற்சாகப்படுத்தி என்னுடைய முயற்சிகளில் வெற்றியடைய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

பரிமளா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு உயர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். படித்த பட்டதாரி. பெற்றோருக்கு ஒரே மகள். தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. தாய் ஒரு துவக்கப் பள்ளி ஆசிரியர்.

பரிமளா பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவரை துரத்தி, துரத்தி காதலித்த வாலிபனை தன்னுடைய பெற்றோருடைய சம்மதமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டார்.

தன்னுடைய குடும்ப அந்தஸ்த்துக்கு முற்றிலும் ஏற்ற குடும்பத்திலிருந்து வந்தவர்தான் தன்னுடைய கணவர் என்று தெரிந்தும் அவரை தன்னுடைய பெற்றோர் வெறும் சாதி வித்தியாசத்தைக் காட்டி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனரே என்ற ஏக்கம் மனதில் இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னை அன்புடன் ஏற்றுக்கொண்ட கணவர் குடும்பத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் பரிமளா.

ஆனால் திருமணம் முடிந்த முதல் வருட முடிவிலேயே ஒரு அழகான பெண் குழந்தைக்குத் தாயான அவருடைய வாழ்க்கையில் விதி விளையாடியது.

அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்த கணவர் உயிரற்ற சடலமாக திரும்பி வந்தபோது அதுவரை அவர்மேல் அன்பாய் இருந்த கணவர் குடும்பம் ராசியற்றவள் என வெறுத்து ஒதுக்கியது. எல்லாம் வேலையற்ற ஒரு ஜோஸ்யர் பரிமளாவின் ஜாதகத்தைப் பார்த்து ‘இந்த ஜாதகப்படிதாம்மா நடந்திருக்கு.’ என்று கூறியதுதான் காரணம்!

கணவர் வீட்டுக் கொடுமைகளை மேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் கைக்குழந்தையுடன் வெளியேறிய பரிமளாவுக்கு அவருடைய பெற்றோரும் அடைக்கலம் தர முன்வராததுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆனாலும் மனந்தளராத பரிமளா தன்னுடைய கணவர் பணியாற்றிய நிறுவனத்தினர் பெருந்தன்மையுடன் நஷ்ட ஈட்டுடன், அவருடைய படிப்புக்கு தகுந்த வேலையையும் அளிக்க தனியாய் தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்கிறார்.

பரிமளாவின் புத்திக்கூர்மையும், அயராத உழைப்பும் துணைக்கு வர அடுத்த சில வருடங்களில் பதவியும், வசதிகளும் உயர அவருடைய வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷம்..

பரிமளாவை அப்படியே உரித்துவைத்தவள் போலிருந்தாள் அவருடயை மகள் சியாமளா..

ஆனால் பரிமளா மிகவும் ஜாக்கிரதையாய் தன் மகளைக் கண்கானித்தாள். தான் பட்ட அவஸ்தையை தன் மகளும் படக்கூடாது என்பதில் ஆரம்ப முதலே கவனமாயிருந்தார்.

சியாமளாவின் கல்லூரி படிப்பு முடிந்ததுமே அவளுக்கு தகுந்த ஜோடியை தேர்ந்தெடுப்பதில் முனைந்தார்..

நல்ல வரனும் அமைந்தது. நிச்சயம் முடிந்து திருமணத்திற்கு நாள் குறித்தபோதுதான் வந்தது குழப்பம்.

‘நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் ஒங்கம்மா வந்து நம்ம கூட இருக்கக் கூடாது.’ என்ற நிபந்தனையை மாப்பிள்ளை தன்னுடைய பெற்றோருடைய தூண்டுதலில் அவள் முன் வைத்தபோது சீறியெழுந்தாள் சியாமளா..

ஒரே வார்த்தையில் நிச்சயத்தையே முறித்துவிடுவதாகக் கூறிவிட்டு வந்து தன்னுடைய தாயிடம் தெரிவிக்கிறாள்..

பதறிப் போகிறார் பரிமளா..

சியாமளாவுக்குத் தெரியாமல் சம்பந்திகளுடைய வீட்டிற்குச் சென்று அவள் சார்பில் மன்னிப்பு கேட்டு, மாப்பிள்ளையை சம்மதிக்க வைக்கிறார்.

சியாமளா எத்தனை தடுத்தும் கேளாமல் அவரை நிர்பந்தம் செய்து திருமணத்தை முடித்து வைக்கிறார்.

ஆனால் திருமணம் முடிந்த கையுடன் சியாமளா தன் சுயரூபத்தை காட்டுகிறார்.

‘நான் ஒங்களுக்கு வேணும்னா நீங்க எங்கம்மா இருக்கற வீட்டுல வந்து இருங்க. இல்லன்னா நீங்களும் வேணாம், நீங்க கட்டுன தாலியும் வேணாம்..’ என்று கூறிவிட்டு தன் தாய் வீட்டுக்கு திரும்புகிறார்.

பரிமளா எத்தனை தடுத்தும் கேட்க மறுக்கிறாள் சியாமளா. அடுத்த சில மாதங்களிலேயே தனக்கென ஒரு வேலையையும் தேடிக்கொள்கிறாள்..

பரிமளா தினமும் கண்ணீருடன் தன் மகளுடன் போராடுகிறார்.

சம்பந்தி வீட்டார் தன் மகனுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கப் போவதாக மிரட்ட ஏற்பட்ட மன அதிர்ச்சியில் அவருக்கு Brain Stroke ஏற்படுகிறது.

அவருடைய இடப்பக்கம் முழுவதும், பேச்சும் செயலிழந்துபோகிறது. இரு வார மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புகிறாள்.

தன் தாய்க்கு நேர்ந்ததை காணச் சகியாமல் தன் தாய்க்கு துணையாய் நிற்க வேண்டிய நேரத்தில் தன்னால் தானே தன் தாய்க்கு இந்நிலை என்ற சுய பச்சாதாபத்துக்கு ப்லியாகி தற்கொலை செய்துக் கொள்கிறாள் அந்த முட்டாள் பெண் சியாமளா..

கதைகளில் நடப்பதுபோன்று நடைபெற்ற இச்சம்பவங்களால் நிலைகுலைந்து கவனிப்பார் யாருமின்றி அவருடைய மருத்துவருடைய பரிந்துரையால் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் பரிமளா..

***

‘இத்தனை நடந்தும் என்ன ஏதுன்னு கேட்காத பரிமளாவின் பெற்றோரை என்னன்னு சொல்றது மிஸ்டர் ஜோசப். அவங்க சென்னையிலேயாதான் இப்பவும் இருக்காங்கன்னு பரிமளா சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்.. அவங்க எழுதிக்கொடுத்த விலாசத்துக்கு ஆளனுப்பியும் வரவேயில்லை.. என்னன்னு சொல்றது?’ என்று இல்லத்தில் இருந்த கன்னியர்களுள் ஒருவர் என்னிடம் கூறியபோது..

என்ன உலகமடா இது.. என்று தோன்றியது..

7 comments:

G.Ragavan said...

ஐயோ! கொடுமையே! இப்படியெல்லாமா இவருக்கு ஆக வேண்டும். இவர்கள் எல்லாரும் பெற்றவர்களா! சீச்சீ! தானாடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்களுக்கு வைக்க மறந்தானே ஆண்டவன்!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்களுக்கு வைக்க மறந்தானே ஆண்டவன்! //

அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது..

மணியன் said...

இவரின் பெற்றோர்கள் தான் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்றால் இவரும் தன் மகளிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. பெற்றோர்கள் பெண்ணிற்கு திருமணம் செய்வது தங்கள் கடமையாகவும் பென்ணிற்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் எண்ணுவதே இதற்கெல்லாம் காரணம். இருமனம் சேர்ந்தாலே திருமணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

பெற்றோர்கள் பெண்ணிற்கு திருமணம் செய்வது தங்கள் கடமையாகவும் பென்ணிற்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் எண்ணுவதே இதற்கெல்லாம் காரணம்.//

உண்மைதான். இந்த தவறை பல பெற்றோர்களும் செய்கின்றனர்.

puddhuvai said...

Enna Sir,

Long Break?

srishiv said...

வணக்கம் ஐயா
நெடுநாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கின்றேன், தினம் துளசி அம்மாவிடம் சேட்டில் கேட்பேன், ஜோசப் சார் என்ன ஆச்சின்னு, பாருங்க, இப்படியும் சில தாய் தகப்பன் குழந்தை?? காதல் அவ்வளவு கொடுமையா இந்தியாவைப்பொறுத்தமட்டில்?

tbr.joseph said...

வாங்க புதுவை,

கடந்த சனிக்கிழமைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் வந்துள்ளேன்.

கேரளாவிலும் சென்னையிலும் மாறி, மாறி கமிட்டிக் கூட்டங்களும், நடக்கவவே வேறு எதற்குமே நேரமில்லாமல் போய்விட்டது.

மன்னியுங்கள்..