19 October 2006

கடந்து வந்த பாதை - 8 மாதவன்

நான் சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பகுதி நேர விருப்ப ஊழியராக (Volunteer) பணியாற்றினேன்.

வார இறுதி நாட்களில் இல்லத்து அலுவலகத்திலும் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களுள் இயலாதவருக்கு சிறு, சிறு உதவி செய்வதும் எங்களைப் போன்றவர்களுடைய அலுவல்.

நான் பணிக்கு சேர்வதற்கு முந்தைய தினம் எனக்கு தெரிந்த ஒரு கன்னியர் மடத்தலைவி கொடுத்திருந்த அறிமுகக் கடிதத்துடன் இல்லத் தலைவியை சந்திக்கும் நோக்குடன் இல்ல அலுவலகத்தில் காத்திருந்தேன்.

அப்போது அலுவலகத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே ஏனோ தெரியவில்லை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

எங்களுடைய இருவருடைய பார்வையும் சந்தித்துக்கொண்டபோது எதற்காக காத்திருக்கிறீர்கள் என்று புருவங்களை உயர்த்தினார். நான் ஒரு புன்னகையுடன் எழுந்து இல்லத் தலைவியைக் காண காத்திருக்கிறேன் என்றேன்.

அவர் உடனே என்ன விஷயம் என்றார். நானும் கூறினேன்.

அவர் வியப்புடன், ‘தப்பா நினைக்கலேன்னா ஒங்களுக்கு என்ன வயசு இருக்கும் தம்பி?’ என்றார்.

நான் என் வயதைக் கூறினேன்.

அவர் சற்று தயங்கி, ‘நீங்க சின்ன வயசாருக்கீங்களே தம்பி. ஒங்களால தாங்க முடியுமா?’ என்றார்.

நான் விவரம் புரியாமல், ‘என்ன சொல்றீங்க?’ என்றேன்.

அவர் பதில் கூறுவதற்கு முன் இல்லத் தலைவி வந்துவிடவே எங்களுடைய உரையாடல் தடைபட்டுப் போனது.

ஆனால் அவர் கேட்ட கேள்வியின் பொருள் அடுத்த சில நாட்களிலேயே எனக்கு புரிந்தது.

ஆம் நண்பர்களே..

அங்கு தங்கியிருந்தவர்களின் கதையைக் கேட்டபோது கலங்கித்தான் போனேன். அதை கேட்டு, மனம் பதறாமல் இருப்பது மிகவும் கடினம்.

நான் முதல் நாள் சந்தித்த ஓய்வு பெற்ற தாசில்தார் இல்லத்தில் தன் மனைவியுடன் இருந்தார்.

நான் இல்லத்தில் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்குள் அவரும் நானும் ஒரு நல்ல நண்பர்களாகிப் போனோம். எங்கள் இருவரிடையே இருந்த சுமார் முப்பது வருட வயது வித்தியாசம் அதற்கு தடையாய் இருக்கவில்லை.

எனக்கென்னவோ என்னை விடவும் வயதில் மூத்தவர்களிடத்தில் சகஜமாய் பழகி நட்பு பாராட்டுவது எளிதாக இருந்தது.

மாலை நேரங்களில் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களுடன் அமர்ந்து உரையாடுவதும் அவர்கள் மனதில் தேங்கியிருந்த ஆசாபாசங்களையும், ஆதங்கங்களையும் கேட்டு முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்வதும் எங்களுடைய அலுவலில் ஒரு பாகம்.

நான் இல்லத்தில் பணியாற்றிய அந்த இரண்டாண்டு காலத்தில் பல மாலைப் பொழுதுகளில் என்னுடைய தாசில்தார் நண்பர் மாதவன் சாருடனும் அவருடைய மனைவியுடனும் உரையாடிக்கொண்டிருந்ததன் சாராம்சம்தான் இன்றைய பதிவு.

***

மாதவன் தென் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்ததென்னவோ சென்னையில்.

தமிழக அரசில் குமாஸ்தாவாக நுழைந்து தன்னுடைய சுய முயற்சியால் தாசில்தார் பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெற்றவர்.

அவர் பிறந்து வளர்ந்த அதே கிராமத்தில் இருந்த ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து பெண் கொண்டவர்.

அவருக்கு மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகள்.

குமாஸ்தா பதவியிலிருந்து அதிகாரியாக பதவி உயர்ந்ததிலிருந்தே தன் மனைவி, மக்களை சென்னையிலேயே விட்டு விட்டு தன்னுடைய வேலையே கண்ணாக ஊர் ஊராக சுற்றியவர்.

‘என் பெஞ்சாதி சின்ன ஊர்லருந்து வந்தவள்னாலும் குடும்பத்த நடத்தறத பயங்கர புத்திசாலி ஜோசப். அவளுக்கு நான் இருக்கணும்னே இல்ல.. நான் மெட்றாஸ்ல இருந்தாலும் கடை, கண்ணிக்கெல்லாம் போற அளவுக்கு எனக்கு பொறுமை இருந்ததில்ல.. வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் அவதான் பார்த்துப்பா.. அதே மாதிரிதான் பிள்ளைங்க விஷயத்திலும்.. எனக்கு எந்த பையன் எந்த வகுப்புல படிக்கான், என்னைக்கு என்ன பரீட்சைன்னு கூட சில சமயத்துல தெரியாதுன்னா பாத்துக்கயேன்..’ என்றார்.

அத்தனை பொறுப்பு மிகுந்த மனைவி அமைந்ததாலோ என்னவோ அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையில் அன்னியோன்யம் ஏற்பட வாய்ப்பில்லாமலே போயிருந்தது.

‘அவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம் இல்ல தம்பி. அவங்க வேல அப்படி. கலெக்டர் ஆஃபீஸ்ல சோலின்னா அப்பல்லாம் ரொம்ப பெரிய விஷயமாச்சே.. நாங்கல்லாம் ஒன்னா இருந்த கொஞ்ச காலத்துலயும் இருட்டறதுக்கு முன்னால அவங்க வீட்டுக்கு வந்து நான் பார்த்ததே இல்ல.. பிள்ளைங்க அவங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாலயே தூங்கிரும்.. பல நாட்கள்ல அதுங்க எழுந்திருக்கறதுக்கு முன்னாலயே இவர் கிளம்பி போயிருவாரு...’ என்றார் அவருடைய மனைவி..

அப்படித்தான் இருந்தது மாதவனுடன் வாழ்க்கை. அலுவலக காரியங்களில் மூழ்கிப்போயிருந்தவருக்கு தனக்கென்று ஒரு குடும்பம், குழந்தைகள் என்ற நினைவு தோன்ற ஆரம்பித்தபோது பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து ஆளாகியிருந்தனர்.

‘அவங்களுக்கு என்ன தேவையிருந்தாலும், அது என்னுடைய சக்திக்குள்ள இருந்தா நா செஞ்சி குடுக்காம இருந்ததே இல்ல ஜோசப். ஆனா அது போறலைன்னு பிள்ளைங்க நினைச்சிருந்தா அது என்னோட தப்பில்லன்னுதான் நா இன்னைக்கும் நினைக்கேன்.. அது அவங்க எதிர்ப்பார்ப்புலருக்கற தப்பு.. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டாம்பாங்களே அது மாதிரி..’ என்றார் ஒரு நாள்.

‘ஐயா நீங்க சொல்றது சரியாருக்கலாம்.. ஆனா என்னைக்காவது நீங்க பிள்ளைங்கள கூட்டி வச்சி.. ஐய்யா.. என்னால இதுதான் முடியும்.. அப்படீன்னு பேசி புரிய வச்சிருக்கீங்களா?’ என்றேன் ஆதங்கத்துடன்.

‘அதான்யா இவங்க செஞ்ச தப்பு. நான் எத்தனையோ தடவ இவங்கக் கிட்ட சொல்லியிருக்கேன். கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல வேல செய்யறவங்களுக்கு சம்பளத்துக்கு மேலயும் கிடைக்குதாமே ஏம்மா அப்பா மட்டும் எப்ப பார்த்தாலும் இல்லே, இல்லேன்னே கைய விரிக்கிறாங்கன்னு கேக்கற பிள்ளைங்கள.. ஐய்யா.. அப்படி சம்பாதிக்கற அப்பன் நான் இல்லேன்னு பிள்ளைங்கக் கிட்ட சொல்லி புரிய வைக்கணுமில்லையாய்யா.. அத இவங்க செய்யல.. அம்மா, நான் என்னத்த சொல்லி என்ன பலன் சொல்லுங்க.. அதுக்கப்புறம் கடனெ, ஒடனெ வாங்கி மூனு பையன்களையும் காலேஜுக்கெல்லாம் அனுப்பத்தான் செஞ்சார்.. படிச்சி முடிச்சிட்டு அதுங்க வேலைன்னு வந்து நின்னதுங்க.. இவங்களால ஒன்னும் செய்ய முடியல.. அதுங்களாவே என்ன வேல கிடைச்சிதோ அதுல போய் சேர்ந்து, கைய ஊனி கரணம் போட்டு.. ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருச்சிங்க.. ஆனா அப்பா மேல இருந்த கோபம் மட்டும் இன்னும் தீரல.. நீங்க வேணும்னா எங்க கூட வந்து இருங்கம்மா.. ஆனா அப்பாவ வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டானுங்க.. வயசான காலத்துல இவங்கள தனியா விட்டுட்டு எப்படிப்பா போறது?’

மாதவன் தன்னுடைய 58 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோதுதான் தான் தனிமரமாகிப் போனதை உணர்ந்தார். கடைசியில் பிறந்த பெண் பிள்ளைகள் இருவருமே தங்களுடைய பெற்றோர்கள் மீது பாசம் வைத்திருந்தாலும் அவர்களுடன் போய் வசிக்க அவருக்கு விருப்பமில்லை.

‘எதுக்குப்பா.. அவங்க கணவன், பிள்ளைங்க, மாமனார், மாமியார்னு இருக்கறப்போ நாங்க ரெண்டு பேரும் போயி அவங்களுக்கு கூடுதல் பாரமா.. ஒங்களுக்குன்னு மூனு ஆம்பிள பசங்க இருக்கறப்போ இப்படி பொண்ணுங்க கூட போயி இருக்கறது நல்லாவா இருக்குன்னு யாராச்சும் கேட்டுறக்கூடாதில்லே?’

நியாயம்தானே?

‘ரெண்டு வருசமா இந்த பார்க்கின்சன் வியாதி.. கை நடுக்கம் இருக்கு. ஜோசப் எப்ப அட்டாக் வரும்னு சொல்ல முடியாது.. அது வர்ற நேரத்துல இவளால ஒன்னும் செய்ய முடியாது. சுகர், ப்ரஷர் எல்லாமே இருக்கு. இந்த மடத்துலருக்கற க்ளினிக்லதான் நானும் மாசா மாசம் ப்ளட் டெஸ்ட் எடுத்துக்க வருவேன்.. அப்படி வந்துக்கிட்டிருக்கறப்ப ஒரு நாள் சுகர் லெவல் ரொம்பவும் லோவாயிருச்சின்னு நினைக்கேன். மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அப்ப சிஸ்டர்தான் என்னெ க்ளினிக்லருந்த பெட்ல அட்மிட் பண்ணிட்டு ஒரு பியூன பிடிச்சி வீட்டுக்கு என் பெஞ்சாதிக்கு சொல்லியனுப்புனாங்க.. அவ ஒடனே பதறிப்போயி ஓடி வந்தா.. பிள்ளைங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்னா.. ஆனா ஒரு பயலும் வரல.. தனியா நாங்க ரெண்டு பேரும் புலம்பிக்கிட்டிருந்தோம். அத சிஸ்டர் கேட்டுருப்பாங்க போலருக்கு.. இங்கயே ரெண்டு பேரும் தங்கிக்கிறீங்களான்னாங்க.. ஒங்க பிள்ளைங்களுக்கு விரோதம் இருந்தா நா வற்புறுத்தலைன்னும் சொன்னாங்க.. யோசிச்சோம்.. நா வேணும்னா இங்க இருந்துக்கறேன் நீ ஒன் பிள்ளைங்க கூட போய் இரேன்னு இவ கிட்ட சொன்னேன்.. வேணாம்னுட்டா... ரெண்டு பேரும் அடுத்த வாரமே இங்க வந்து சேர்ந்துட்டோம்.. அந்த மாசத்து பென்ஷன் வந்ததும் சிஸ்டர்கிட்ட கொண்டு போய் கொடுத்தேன். அவங்க சிரிச்சிக்கிட்டே.. நீங்களே வச்சிக்குங்க.. ஒங்களுக்கு மடத்துக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோனிச்சின்னா சும்மா இருக்கற நேரத்துல எங்க ஆஃபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன கொஞ்சம் பாத்துக்குங்கன்னு சொன்னாங்க.. வந்து ரெண்டு வருசமாச்சு. எந்த டென்ஷனும் இல்லாம சந்தோஷமாருக்கோம். இப்பல்லாம் ப்ரஷரும் இல்ல.. ஷ¤கரும் கண்ட்ரோல்ல இருக்கு... அடிக்கடி வந்துக்கிட்டிந்த நடுக்கமும் இப்ப எப்பவாச்சுந்தான்.. கூட நிறைய சிஸ்டர்ஸ் இருக்கறதுனால பயமில்ல. பேரப் பிள்ளைங்கள் பாக்க முடியறதில்லேங்கறத தவிர.. ஒரு குறையுமில்ல ஜோசப்..’

ஆனால் அவருடைய மனைவியின் முகத்தில் அந்த சந்தோஷமும், திருப்தியும் இல்லாததுபோல் ஒரு தோற்றம்..

‘ஒங்க பிள்ளைங்க ஒன்னும் சொல்லலையா சார்?’ என்கிறேன்..

அவர் முகத்தில் சட்டென்று ஒரு சோகம் தோன்றி மறைகிறது.

‘யாரோ சொல்லி தெரிஞ்சப்போ இங்க வந்து நின்னு மானத்த வாங்கிட்டீங்களேன்னு சத்தம் போட்டாங்க. என்னெ மட்டுமில்லாம சிஸ்டரயும் பார்த்து எங்கப்பா பென்ஷன் பணத்துக்கு ஆசைப்பட்டுத்தானேன்னு பெரியவன் சத்தம் போட்டான். சிஸ்டர் ஒன்னுமே சொல்லாம சிரிச்சிக்கிட்டு நின்னாங்க. நம்ம ஆஃபீஸ் ப்யூந்தான் அடிக்க போய்ட்டான். என்னெ வற்புறுத்தி பேங்க் பாஸ்புக்க பிடுங்கி அவன் கிட்ட காட்டினான்.. அதுக்கு மேல ஒன்னும் பேச முடியல.. எங்க ரெண்டு பேரையும் எரிச்சிடறாப்பல பார்த்துட்டு போய்ட்டான்.. பொம்பள பிள்ளைங்க ரெண்டும்.. ஒரு தடவ வந்து அழுதுட்டு போச்சிங்க.. அவங்க மாமனார், மாமியார் வீட்ல பேசறாங்களாம்.. என்னெ பிள்ளைங்கள வளர்த்தார் ஒங்கப்பான்னு கேக்கறாங்களாம்..’

நான் பேச்சற்று அமர்ந்திருந்தேன்..

அவருடைய முகத்திலும் பேச்சிலும் தெரிந்த சோகமும், ஆற்றாமையும் எந்த ஒரு கைதேர்ந்த எழுத்தாளனாலும் எழுத்தில் வடித்தெடுக்க முடியாதது..

இதை மனதில் வைத்துத்தான் ‘நீங்க ரொம்ப சின்ன வயசாருக்கீங்களே தம்பி. ஒங்களால தாங்க முடியுமா?’ என்று அவர் என்னிடம் அன்று கேட்டார் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

8 comments:

G.Ragavan said...

முருகா! கேட்கவே வருத்தமாக இருக்கிறது. பிள்ளை வளர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறு எப்படிப்பட்ட விரிசலை உண்டாக்கியிருக்கிறது....ஆண்டவன் அருளால்...தப்பிப் பிழைத்து நிம்மதியாக இருக்க ஒரு இடம் கிடைத்திருக்கிறதே...

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இப்படிப்பட்ட இல்லங்கள் மட்டும் இல்லாதிருந்தால் மாதவனைப் போன்ற முதியோர்களுடைய கதி என்னவாயிருக்கும்?

மனித உறவுகளில் மிகவும் அடிப்படையான தகப்பன் - பிள்ளை பந்தத்தின் அவல நிலையை பார்த்தீர்களா? இத்தகைய பரிதாப நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்..

இதற்கு நம்மில் பலரும் காரணகர்த்தாவாயிருக்கிறோம் என்பதை பல நேரங்களில் மறந்துபோகிறோம்.

மணியன் said...

மைந்தர்களால் காப்பாற்ற முடியாவிடினும் இத்தைகைய இல்லங்களில் புகலிடம் தேடுவது மட்டும் இளக்காரமாக இருக்கிறது. முதியவர்களுக்கு இந்த இல்லங்கள் நடத்தும் இந்தப் பணி இறைவனின் பணியாகும். இரண்டு வருடங்கள் இத்தகைய பணி ஆற்றிய நீங்கள் நிச்சயம் ஆசிர்வதிக்கப் பட்டவர்தான். உங்கள் தொடர்பு எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

tbr.joseph said...

வாங்க மணியன்,

மைந்தர்களால் காப்பாற்ற முடியாவிடினும் இத்தைகைய இல்லங்களில் புகலிடம் தேடுவது மட்டும் இளக்காரமாக இருக்கிறது. //

ஆமாங்க.. அதுதான் வேதனை..

srishiv said...

இது பெரும்பாலும் வங்கி அலுவலர்களுக்கும் நடக்கும் நிகழ்ச்சி ஐயா :), இறைவன் கருணையால் என் தந்தை தப்பித்தார் :)) , மற்றவர்களின் கதி? இந்த பதிவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷமே ஐயா, பொன்போல் சேர்க்கத்துவங்கிவிட்டேன், என் வரும் தலைமுறையினருக்காக....:) மிக்க நன்றி , தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்...
ஸ்ரீஷிவ்...@சிவா..

arunagiri said...

அப்பா மேல் கோபம் கொள்ளவும் ஒதுக்கித்தள்ளவும், தாங்கள் நினைத்தபடியெல்லாம் அவர் தங்களை வசதியாக வைத்துக்கொள்ளவில்லை என்ற எண்ணம்தான் காரணம் என்றால் 70-80% அப்பாக்கள் நம்நாட்டில் இதுபோன்ற இல்லங்களில்தான் இருக்க வேண்டும். முதியோர் இல்லங்களுக்கு அவர்கள் செல்ல முக்கியக்காரணம் திருமணத்திற்குப்பின் குடும்பங்களில் நிகழும் பவர் பாலிடிக்ஸ் அதில் மகனின் செயல்பாடு இவை கண்டு அவர்கள் அடையும் அளவு கடந்த விரக்தி இவைதான் என நினைக்கிறேன். அப்பா லஞ்சம் வாங்கி தங்களை வசதியாய் வைக்கவில்லை; என்பதெல்லாம் எனக்கு உண்மையான காரணமாய்ப்படவில்லை. இதற்குக்கீழே மற்றொரு லேயர் இருப்பதாகப்படுகிறது. இல்லை லஞ்ச வசதி இல்லாததுதான் காரணம் எனில், இதனை ஒரு விதிவிலக்காகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

tbr.joseph said...

முதியோர் இல்லங்களுக்கு அவர்கள் செல்ல முக்கியக்காரணம் திருமணத்திற்குப்பின் குடும்பங்களில் நிகழும் பவர் பாலிடிக்ஸ் அதில் மகனின் செயல்பாடு இவை கண்டு அவர்கள் அடையும் அளவு கடந்த விரக்தி இவைதான் என நினைக்கிறேன்//

உண்மைதான் அருனகிரி. குடும்பத்தினரிடையிலும் இந்த ஈகோ வந்து நுழைந்துவிடுவதுதான் வேதனை.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனை இன்னும் தோளில் சுமக்கும் குழந்தையாகவே நினைக்கும் தந்தைக்கும், தோளில் சுமந்து வளர்த்த தந்தை தன்னை இன்னும் அதே நிலையில் பார்க்கிறாரே என்று நினைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்படும் விரிசலே இத்தகைய முடிவுகளுக்கு காரணிகளாகிப் போய்விடுகிறது.

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

இது பெரும்பாலும் வங்கி அலுவலர்களுக்கும் நடக்கும் நிகழ்ச்சி //

வங்கி அலுவலகர்கள் என்றல்ல உள்ளூரிலேயே இருந்து தன்னுடைய அலுவலே தன்னுடைய வாழ்க்கை என்று கருதும் பல தந்தைகளுக்கும் ஏற்படும் கதிதான் இது..

வீட்டையும் அலுவலகத்தையும் சரிசமமாய் பாவித்து அதனதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க மிக தேர்ந்த மனப்பக்குவம் அவசியம். அதை உணராதவரை இத்தகைய சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுவது மிகவும் சகஜம் என்பதைத்தான் மாதவனுடைய வாழ்க்கை உணர்த்துகிறது.