13 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 7

நான் சென்னை கிளைகளில் ஒன்றில் மேலாளராக பணியாற்றிய காலத்தில் ஒரு நாள் காலை குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் வாசலில் அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தேன்.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாசலில் கையில் ஒரு உறையை வைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன். அவர் என்னைக் கண்டதும் பணிவுடன் வணக்கம் செலுத்திவிட்டு தான் இன்னாரிடத்திலிருந்து வருவதாக கூறினார்.

அவர் குறிப்பிட்ட நபர் என்னுடைய கிளையின் வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர் என்பதால் நான் அவரை உடனே வரவேற்று இருக்கையளித்தேன்.

அவர் கொண்டு வந்திருந்த கடிதத்தில் இக்கடிதத்தைக் கொண்டுவருபவர் தனக்கு மிகவும் பரிச்சயமான நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் தாற்காலிக ஊழியராக பணிபுரிகிறார் என்றும் முடிந்தால் என்னுடைய வங்கியில் அவருக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அவருடைய தோற்றம் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வருவதை எனக்கு உணர்த்தியது. அவர் பார்ப்பதற்கு உற்சாகத்துடன் இருந்தாலும் அவருடைய கண்களில் நான் கண்ட ஒரு இனம் தெரியாத சோகம் ஏனோ என்னை அவர் மீது அனுதாபம் கொள்ள வைத்தது.

அன்றைய காலத்தில் என்னைப் போன்ற மேலாளர்களுக்கு யாரை வேண்டுமானாலும் தாற்காலிக சிப்பந்தி பணிக்கு நியமிக்கும் அதிகாரம் இருந்தது. தாற்காலிக பணியாளரின் வேலை திருப்தியளிக்கும் பட்சத்தில் அவரை நிரந்தர பணியாளராக ஆகவும் என்னுடைய தலைமையலுவலகத்திற்கு பரிந்துரை செய்தாலே போதும் என்ற நிலை.

அவரை பரிந்துரைத்திருந்த என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நம்பத்தகுந்தவராகவும் அவரால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அந்த வாலிபரும் நல்ல அடக்க ஒடுக்கமுள்ளவராயும், எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் போல் தோன்றியதாலும் நான் அவரை ஒரு தாற்காலிக சிப்பந்தியாக பணியில் அமர்த்த தீர்மானித்தேன்.

ஆகவே அன்றே அவரை என்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு பணித்துவிட்டு நான் உடை மாற்ற சென்றேன்.

அப்படி பணியில் அமர்ந்தவர்தான் ராமு.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சார்ந்தவர் என்பதால் தமிழும் மலையாளமும் சரளமாக வந்தது. அத்துடன் சென்னையில் சரக்குகளை கையாளும் ஒரு போக்குவரத்து அலுவலகத்தில் ஓராண்டுகாலம் புக்கிங் குமாஸ்தாவாக பணியாற்றிய அனுபவமும் இருந்தது. பத்தாவது வரை படித்திருந்தார். சுமாரான ஆங்கில அறிவும் இருந்தது.

ஆனால் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றியவரால் திடீரென்று அந்நிலையிலிருந்து இறங்கி வந்து மற்ற குமாஸ்தாக்களுக்கு ஏவல் பணிசெய்யும் ஒரு சிப்பந்தியாக அவரால் செயலாற்ற முடியுமா என்று ஆரம்பத்தில் எனக்கு ஒருவித தயக்கம் தோன்றியது.

‘அதெல்லாம் நான் பாக்க மாட்டேன் சார். எனக்கு அப்பா, அம்மா இல்ல சார். எனக்கு ஒரேயொரு சித்தப்பாவும், சித்தியும்தான். அவங்கதான் என்னெ வளர்த்து ஆளாக்கினாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம். இப்போ நொடிச்சி போயி என் சம்பளத்த நம்பி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. கல்யாணம் பண்ணணும்.. அதுக்கும் நாந்தான் பொறுப்பு. நா இப்ப வேலை செய்யற எடத்துல இப்போதைக்கு தேவையான அளவு சம்பளம் கெடச்சாலும் வேல நிரந்தரமில்ல சார்.. அதான் நம்ம முதலாளி ஐயாகிட்டவே வேற எங்கயாவது ரெக்கமெண்ட் பண்ணச் சொல்லி கேட்டேன். அவர்தான் இப்ப லெட்டர் குடுத்த ஐயா கிட்ட சொல்லி விட்டார். நீங்களோ இல்ல இந்த ப்ராஞ்ச்லருக்கற யார் என்ன சொன்னாலும் செய்வேன் சார். என் கையும் வாயும் சுத்தம் சார். நீங்க என்ன தைரியமா சேர்த்துக்கலாம் சார்.’ என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசியதில் திருப்தியடைந்து நான் அவரை அன்றே பணியில் சேர்த்துக்கொண்டேன்.

அடுத்த ஒரு மாதத்திலேயே அவருடைய சாமர்த்தியம், பணிவு என்னை மட்டுமல்லாமல் என் கிளையில் இருந்த அத்தனை பேரையும் கவர்ந்ததுடன் கிளைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் ‘எங்க சார் ராமுவ காணம்?’ என்று கேட்கும் வகையில் இருந்தது.

எனக்கு அவருடைய திறமையில் மிகவும் கவர்ந்தது வாய்ச் சாலகம்தான். பேசுவதில் பயங்கர சமர்த்து. எந்த வெளி காரியத்திற்கும் அவரை அனுப்பினால் வெட்டிக்கிட்டு வா என்றால் பறித்துக்கொண்டு வந்தார் என்பார்களே அந்த ரகம்.

வேலையிலும் படு சுறுசுறுப்பு. அத்துடன் ஒரு வங்கிக் கிளையில் சிப்பந்தியாக பணியாற்றுபவருடைய கையும் படு சுத்தமாக இருக்க வேண்டும். பணம் புரளும் இடமல்லாவா? ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் அன்று வாடிக்கையாளர்கள் செலுத்திய கரன்சி நோட்டுகளை கற்றையாக, கற்றையாக அடுக்கி அதற்குரிய ஸ்டேப்ளர் இயந்திரத்தில் நூறு நோட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு கற்றையையும் ஸ்டேப்பிள் செய்து கட்டு கட்டாக கட்டி ஆள் உயரத்திற்கு அடுக்கி வைத்திருப்பார் காசாளர்.

வங்கியில் பணி புரியும் பணியாளர்களைப் பொறுத்தவரை அவை வெறும் காகிதங்களே. அப்படியல்லாமல் இவ்வளவு பணம் இருக்கிறதே ஸ்டாப்ளர் செய்யும் நேரத்தில் ஒன்றிரண்டை உருவி எடுத்துக்கொண்டால் தெரியவா போகிறது என்று ஒரு சிப்பந்தி நினைத்துப் பார்க்க துவங்கிவிட்டால் வந்தது ஆபத்து. அதுவே ஒரு போதைபோலாகிவிடும். கையும் களவுமாக பிடிபட்டால் வேலை போவதுடன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

ஆகவேதான் ஒருவரை, அதுவும் சிப்பந்தி வேலைக்கு, பணிக்கு அமர்த்துமுன் அவருடைய பூர்வீகத்தையே தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ராமுவின் நேர்மையில் எனக்கு எந்தவித ஐயப்பாடும் இருந்ததில்லை.

ராமுவிடம் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம் அவருடைய எளிமை. அவர் முதல் நாள் யார் என்ன வேலை சொன்னாலும் செய்வேன் சார் என்றபோது பணிக்கு சேரும் புதிதில் எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் என்றே நினைத்தேன்.

ஆனால் ராமுவைப் பொருத்தவரை அது உண்மையாகவே இருந்தது. என்னுடைய வீட்டுக்கும் வந்து உரிமையுடன் சகல வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்.

நான் சென்னையிலிருந்த சமயத்தில் என் மைத்துனர் கப்பலிலிருந்து விடுமுறையில் இந்தியா வந்திருந்தார். துத்துக்குடி செல்லும் வழியில் சென்னை வந்து ஒருவார காலம் தங்கியிருப்பேன் என்று அவருடைய கடிதம் வந்ததுமே ராமு பரபரப்பாகிவிட்டார். அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய நேரம் நள்ளிரவு. அப்போதும் என்னுடனும் என் மனைவியுடனும் அவரும் வந்து சாமான்களையெல்லாம் காரில் ஏற்றி, வீடு வந்ததும் இறக்கி வைத்துவிட்டுத்தான் வீடு திரும்பினார். ‘எதுக்கு ராமு நீங்க..’ என்று என் மனைவி தடுத்தபோது ‘என்னெ ஒங்க வீட்டாள நினைச்சிக்குங்க மேடம்.’ என்றார்.

என் மைத்துனர் ஒரு சினிமா பிரியர். அதுவும் இரண்டாண்டுகள் தொடர்ந்து கப்பலில் பணியாற்றிவிட்டு எப்போதுடா தாயகம் வந்து சேர்வோம் என்று ஆவலுடன் சென்னை வந்திறங்கிய அவர் எங்களுடன் தங்கிய அந்த ஒரு வாரத்தில் சென்னையிலுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் அனுமதி சீட்டு வாங்கிக் கொடுத்து அவருடைய நட்பையும் சம்பாதித்துக் கொண்டார். 'என்ன மச்சான் ராமு ஒங்களுக்காக இப்படி உருகுறார்.' என்று என் மைத்துனர் வியப்புறும்படி நடந்துக்கொண்டார் ராமு.

எனக்கு மட்டுமல்ல என்னுடைய உதவி மேலாளர் துவங்கி என் கிளையிலிருந்த குமாஸ்தா, காசாளர் என எல்லாருக்குமே அவர்தான் பெர்சனல் சேவகர் என்றால் மிகையாகாது.

அப்போது என்னுடைய பணியாற்றிய அனைவருமே, அதாவது சிப்பந்திகளைத் தவிர, பெண்கள், உதவி மேலாளர் உட்பட. அவர்கள் அனைவருக்குமே ராமு உற்ற நண்பன் எனலாம். அந்த அளவுக்கு எல்லோருக்கும் அவரை பிடித்திருந்தது.

நான் சென்னையிலிருந்து மாற்றலாகி தஞ்சைக்கு செல்லும் நேரத்தில் என்னுடைய வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்து அவர் முன்பு பணியாற்றிய போக்குவரத்து நிறுவனத்தின் லாரிகளில் ஒன்றை அவரே மலிவாக அமர்த்தி கூடவே லாரியில் தஞ்சைவரை வந்து எல்லா பொருட்களையும் பொருப்புடன் இறக்கி கொடுத்த காட்சி இப்போதும் என் கண் முன்னே விரிகின்றது.

நான் மாற்றலாகும் முன்பே அவரை நிரந்தர பணியாளராக்கியிருந்தேன். சுமார் ரூ.3000/- வருமானத்தில் நிரந்தர நியமன உத்தரவு வந்த தினத்தன்று ஒரு தட்டு நிறைய பூ, பழங்களுடன் என் வீட்டுக்கு வந்து என்னையும் என்னுடைய மனைவியையும் சேர்த்து நிற்க வைத்து முப்பது வயது கூட நிறைந்திராத என்னுடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் நன்றி செலுத்திய நல்ல, விகல்பமில்லாத, குழந்தை மனதுடையவர் ராமு.

‘சார் நீங்க செஞ்ச இந்த உதவி எனக்கு மட்டுமில்ல சார். என்னையே நம்பி ஊர்லருக்கற என் சித்தி, சித்தப்பா, தங்கச்சி.. இவங்க எல்லாருக்குமே செஞ்ச உதவி சார்.’ என்றார்.

‘இந்த வருமானத்துல நாலு பேர் அடங்கிய குடும்பத்த எப்படி ராமு சமாளிப்பே. அதுவும் அவங்க ஊர்ல இருக்காங்க. இங்க ஒன் செலவுக்கு போக ஒன்னால அவங்களுக்கு அப்படி எவ்வளவு குடுக்க முடியும்?’

அவர் சிரித்தார். ‘என்ன சார் நீங்க. சுமார் பதினஞ்சி மணி நேரம் வேல செஞ்சி ஆயிரம் ரூபா வாங்கிக்கிட்டிருந்த எனக்கு இந்த சம்பளம் புதையல் மாதிரி சார். நா இப்பவும் ராத்திரியில லாரி ஷெட்லதான் சார் போய் படுத்துக்குவேன். ஒங்கள மாதிரியே என் பழைய முதலாளியும் சொக்கத் தங்கம் சார். நீங்க எனக்கு கூட பொறக்காத அண்ணா மாதிரினா அவர் எனக்கு அப்பா மாதிரி. இங்க வேல முடிஞ்சதும் நேரா அங்கதான போறேன். ராத்திரில எல்லா வண்டியும் பொறப்பட்டு போனதும் ஷெட்லருக்கற சில்லறை வேலைய பார்த்துட்டு படுக்கப் போவேன். காலையில டீ, பலகாரம் பக்கத்துலருக்கற டீ கடையில முடிச்சிக்குவேன். அதுக்கு பணம் குடுக்க வேணாம். முதலாளி கணக்கு. பகல்ல நம்ம ஸ்டாஃப் எல்லாருமா அவங்க கொண்டு வர சாப்பாட்டுல எனக்கு ஒரு ஷேர் குடுத்துருவாங்க. ராத்திரிக்கும் ஷெட்ல பக்கத்துலருக்கற டீக்கடைதான். அது யாராச்சும் ஒரு லாரி டிரைவர் பாத்துக்குவார். அப்புறம் என்ன சார். ஒரு நூறு ரூபா மாத்திரம் என் கைச் செலவுக்கு வச்சிக்குவேன். ரெண்டாயிரத்த ஊருக்கு அனுப்பிருவேன். மீதிய நம்ம பேங்க்லயே வச்சிருவேன். தங்கச்சிக்கு ரெண்டு வருசத்துல கல்யாணத்த முடிச்சிரணும்..’ என்றார் மூச்சு விடாமல்.

என் மனைவி கேலியுடன், ‘என்ன ராமு. ஒங்க கல்யாணம் எப்ப? இப்பவே கல்யாண வயசு தாண்டிட்டா மாதிரி தெரியுதே?’ என்பார். ராமுவின் உருவம் அப்படித்தான் இருந்தது. 25 வயதிலேயே தலை முடியில் பாதிக்கு மேல் கொட்டி, ஒட்டிய கன்னங்கள், உள் வாங்கிய கண்கள் என முப்பது வயதுக்கும் கூடுதல் உருவத்தில் சில சமயங்களில் பார்க்கவே பாவமாக இருக்கும்.

‘எனக்கா கல்யாணமா? என்ன மேடம் தமாஷ் பண்றீங்க. தங்கச்சிக்கு கல்யாணத்த முடிச்ச கையோட சார் தயவுல எனக்கு நம்ம பாலக்காட்டு பிராஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் குடுத்துட்டாங்கன்னா என்னையே மலையா நம்பியிருக்கற என் சித்தி, சித்தப்பாக்கூட அவங்க கடைசி காலம் வரைக்கும் இருந்து காப்பாத்தணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்.. எனக்கு கல்யாண ப்ராப்தம் இல்லன்னு ஜோசியரே சொல்லியிருக்கார் மேடம்.’ என்றார்.

அப்படி கூறியவரிடமிருந்து நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் ஒரு நாள் தொலைப்பேசி வந்தது.

‘சார் எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு சார். நீங்க எப்படியாச்சும் எனக்கு பாலக்காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் குடுத்தா நல்லாருக்கும் சார்.’ என்றதும் நான் ஆச்சரியத்துடன், ‘என்ன ராமு திடீர்னு. எனக்கு கல்யாண ப்ராப்தமே இல்லேன்னு சொன்னீங்க?’ என்றேன்.

அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் சந்தோஷம் இல்லையே என்று ஒரு நொடி தோன்றினாலும் அது வெறும் பிரம்மை என்று நினைத்து, ‘சரி ராமு நான் நம்ம எச். ஆர் ஹெட் கிட்ட பேசி ஏற்பாடு பண்றேன். ஒங்களுக்கு ஆர்டர் வர்ற வரைக்கும் ஒங்க மேனேஜருக்கு தெரிய வேணாம்.’ என்றேன். ஏனெனில் என்னைத் தொடர்ந்து மேலாளராக வந்திருந்தவருக்கும் எனக்கும் லேசான அபிப்பிராய பேதம் இருந்தது.

அப்போது எங்களுடைய வங்கியின் எச்.ஆர் ஹெட்டாக இருந்தவர் என்னுடைய முன்னாள் மேலாளர் என்பதால் என்னுடைய பரிந்துரையை ஏற்று அடுத்த ஒரு வாரத்தில் ராமுவுக்கு பாலக்காடு கிளைக்கு மாற்றம் கொடுத்தார்.

ஆனால் நான் செய்த மிகப்பெரிய தவறு அது என்று அடுத்த ஐந்தாறு மாதங்களிலேயே தெரிந்தது.

நாளை நிறைவு பெறும்..

2 கருத்துகள்:

  1. இவர்தான் சூரியனில் வரும் மாணிக்கவேலருக்கு மாடலா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன் சார்,

    இல்லை. அவர் வேறு.

    பதிலளிநீக்கு