14 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - ராமு 2

ராமுவின் திருமணத்தன்று எனக்கு தஞ்சையில் முக்கியமான அலுவல் இருந்ததால் என்னால் அவருடைய திருமணத்திற்கு செல்ல இயலவில்லை. வாழ்த்துத் தந்தியும் ஒரு சிறு அன்பளிப்பும் மட்டுமே அனுப்ப முடிந்தது.

அதன் பிறகு அவரை மறந்தே போனேன்.

தஞ்சையில் சுமார் இரண்டாண்டுகள் இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு மாற்றலாகிப் போனேன்.

தூத்துக்குடியில் பணிக்கு சேர்ந்து ஒரு வாரம் இருக்கும். என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த சுற்றறிக்கை என்னை அதிர்ச்சியுறச் செய்தது.

சாதாரணமாக ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுகையில் அவர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் அல்லது பிடித்தம் ஏதாவது வசூலாகாமல் எந்த கிளையிலாவது நிலுவையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுவது வழக்கம். இத்தகைய சுற்றறிக்கை ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டாலு, மரித்தாலும் வருவதுண்டு.

அன்று வந்திருந்த சுற்றறிக்கையில் எங்களுடைய பாலக்காடு கிளையில் சிப்பந்தியாகவிருந்த ராமு என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கெதிராக நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்களை உடனே தெரிவிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தது.

நான் அதிர்ந்துபோய் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து நாந்தான் ராமுவை பணிக்கு அமர்த்திய மேலாளர் என்பதைக் கூறி மாய்ந்து போனேன்.

உடனே அவர், ‘சார் நம்ம ஹென்றி பாலக்காடு ப்ராஞ்சிலருந்து டிரான்ஸ்ஃபர் ஆயி போன மாசந்தான் வந்தார். அவர கேட்டா இவரபத்தி ஏதாச்சும் தெரியும் சார். நான் போயி அவர அனுப்பட்டுமா?’ என்றார்.

‘அப்படியா.. சரி இப்ப வேணாம் சாயந்திரமா கூப்ட்டு கேக்கேன். இப்ப கஸ்டமர்ஸ் வர்ற நேரம்.’ என்று அவரை அனுப்பிவிட்டு அன்றைய அலுவலில் மூழ்கிப்போனேன்.

அன்று மாலை அன்றைய பணிகள் யாவையும் தீர்த்தபின் என்னுடைய குமாஸ்தாக்களில் ஒருவரான ஹென்றியை அழைத்து விசாரித்தேன்.

அவர் கூறிய விவரங்களை நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் நெடுநேரம் என் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன்..

****

ராமுவின் வாழ்க்கையின் லட்சியமே தன்னுடைய சித்தி மகளை நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுப்பதுதான்.

சித்தி மகள் பார்ப்பதற்கு சிவப்பாக, லட்சணமாக இருந்தும் இந்த சமூகத்தினரிடையில் பரவலாக பரவி நின்ற வரதட்சணை என்னும் சாத்தான் இதற்கு தடையாயிருந்தது.

கடைசியாக பார்த்த இடத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடைய குடும்பத்து பெண்ணுக்கு வரதட்சணை கேட்காத பட்சத்தில் நம் வீட்டு பெண்ணையும் வரதட்சணை இல்லாமல் எடுத்துக்கொள்வதாகவும் கூறுவதாக கடிதம் வந்தவுடனே ராமு மகிழ்ச்சியுடன் ஊருக்கு கிளம்பிச் சென்று அந்த பெண்ணைப் பார்க்காமலே ஒத்துக்கொண்டு தங்கைக்கு நிச்சயதார்த்தத்தை முடித்து இரு ஜோடிகளுக்கும் திருமணத்திற்கு நாள் குறித்த கையுடன் சென்னைக்கு திரும்பி பெரும்பாடுபடு திருமணத்திற்குத் தேவையான பணத்தைப் புரட்டியிருக்கிறார்.

அவருடைய பழைய முதலாளி, என்னுடைய வங்கி ஊழியர்கள், சில வாடிக்கையாளர்கள் என்பவர்களுடன் நிறுத்திக்கொள்ளாமல் அசுர வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமும் கடன் பெற்று தங்கையின் திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கையின் திருமணத்தன்றும்  தனக்கு முடிக்கப் போகும் பெண்ணைக் காணாமல் போகவே தன்னுடைய சித்தி, சித்தப்பாவிடம் சாடை மாடையாக கேட்டிருக்கிறார். ‘இல்லடா ராமு அவளுக்கு ஏதோ காய்ச்சலாம்.. அதான் ஆத்துலயே விட்டுட்டு வந்திருக்கா.. இன்னும் ஒரு வாரத்துல நோக்கும் அவளுக்கும் கல்யாணமோன்னா.. அதான் ரெஸ்ட் எடுத்துக்க  ஆத்துலயே இருக்கா போலருக்கு. நீ வேணுன்னா போய் பார்த்துட்டு வாயேன்.’ என்று பதிலளிக்க, ‘சேச்சே.. அதெல்லாம் வேணாம்.. கல்யாணத்தன்னிக்கே பார்த்துண்டா போறது..’ என்று இருந்திருக்கிறார் ராமு..

பாவம் அவர்.. கள்ளங்கபடமில்லா மனிதர். தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தியும் சித்தப்பாவும் தனக்கு கேடு நினைக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் திருமண தேதி வரை பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றவே இல்லை.

மணவறைக்கு பெண்ணை இரண்டு மூன்று பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்த்ததும் லேசான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதற்கும் ஒரு சாக்கு வைத்திருந்தார் சித்தி, ‘இல்லடா ராமு அவோ ரெண்டு வாரமா ஜுரத்துல வீக்காயிருப்பாளோன்னோ.. அதான் தோளைப் பிடிச்சி கூட்டியாறா..’

தாலி கட்டி முடித்து முதல் ராத்திரி..

‘இன்னைக்கி நாள் நல்லால்லையாண்டா ராமு.. ஒரு வாரம் பத்து நாள் போட்டும்னு சொல்றாராம் ஜோஸ்யர்.. வா நாம நம்மாத்துக்கு போலாம்.. பொண்ணும் வீக்காருக்காளாம்.. அப்புறம் பாத்துக்கலாம்.. எங்க போய்ட போறது..’ என்ற சித்தியின் வாதத்தை நம்பி அவர்களுடன் தன் வீட்டுக்கு திரும்புகிறார்.

ஒரு வாரம் போனது.. பெண்ணைக் காட்டுவதாக தெரியவில்லை. லேசான சந்தேகம் மனதில் துளிர்க்க எதையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தறியாத ராமு தன்னுடைய கிளையிலிருந்த சக நண்பர்களிடம் தெரிவிக்கிறார்.

அதில் ஒருவர் அடுத்த சில தினங்களில் ரகசிய விவசாரனையில் இறங்குகிறார். விஷயம் தெரியவருகிறது. ஆனால் ராமுவிடம் எப்படி இதைத் தெரிவிப்பதென தெரியாமல் தயங்கி நேரே அவருடைய சித்தி, சித்தப்பாவை எதிர்கொள்கிறார்.

‘எப்படி சார் இப்படி ஒரு அநியாய காரியத்த செஞ்சீங்க? ஒங்க மக நல்லாருக்கணுங்கறதுக்காக ஒங்கள தெய்வமா நினைச்சிக்கிட்டிருக்கற ஒரு அப்பாவி பையனோட வாழ்க்கைய இப்படி நாசமாக்கிட்டீங்களே.. இதுக்கு ஒங்களுக்கு எப்படி சார் மனசு வந்தது?’ என்று வாதிட்டிருக்கிறார்.

‘எல்லாம் அந்த பகவானோட விளையாட்டுப்பா.. எங்கக்கிட்டருந்தும் மறைச்சிட்டா பொண்ணு வீட்டுக்காரா.. ராமுவோட தங்¨கைக்கு நிச்சயம் பண்ணதுக்கப்புறந்தான் எங்களுக்கே தெரிய வந்துது.. அப்பவும் சொல்லியிருக்கலாம்..நிச்சயம் பண்ண கல்யாணத்த நிறுத்து வேண்டி வந்தா அப்புறம் எங்க பொண்ணுக்கு இந்த ஜன்மத்துல கல்யாணம் நடக்காதேப்பா.. நீ சொன்னா மாதிரி சுயநலந்தான்.. ராமு நல்லவன்.. புத்தி பெசகுன பொண்ணுன்னு அவள தள்ளி வச்சிரமாட்டான்னு நினைச்சித்தான் வாய மூடிண்டோம்.. அவளுக்கு அமாவாசை, பெளர்ணமி வந்தாத்தான் இப்படி ஆவும்னு சொன்னா..ஆனா இப்ப பார்த்தா..’

ஆனால் ராமு இதைக் கேள்விப்பட்டபோது எந்தவித அதிர்ச்சியையும் காட்டாமல் இருந்ததுதான் நண்பர்களுக்கு பெருத்த வியப்பாயிருந்திருக்கிறது.

‘இதுக்குத்தான் ஜோஸ்யர் சொல்லிருக்கார்.. கல்யாணம் ப்ராப்தம் இல்லேன்னுட்டு.. நாந்தான் அத எதுத்துக்கிட்டு செஞ்சேன்.. இதுல நல்ல காரியம்னு ஒன்னு நடந்துருக்கே அதுவே போறும். சித்தப்பா, சித்தி என்ன பண்ணுவா பாவம்..’

அத்துடன் நிற்கவில்லை அந்த சதிகார குடும்பம். ராமுவின் தங்கைய¨ மேலும் சீர் கொண்டு வா, பணம் கொண்டு வா என்று துன்புறுத்தியிருக்கிறது.

ராமு ஏற்கனவே திருமணத்திற்கென வாங்கியிருந்த அசுர வட்டிக்கு கடன் கொடுத்தவர்களின் கடித மற்றும் தொலைப்பேசி மிரட்டலுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்துப்போயிருக்க ஒரு நாள் அவருடைய தங்கையை நாத்தனாருடைய வைத்திய செலவுக்கு ரூ.50000/-த்தை உடனே கொண்டு வா என்று விரட்டியடிக்க செய்வதெறியாத ராமு அன்று மாலை வங்கியிலிருந்த பணத்தை இரும்பு அறைக்குக் (Safe Room) கொண்டு செல்லும் நேரத்தில் சில கரன்சி கற்றைகளை எடுத்து வேட்டியில் சொருக.. கையுள் களவுமாய் பிடிபடுகிறார்.

ஆயினும் அவருடைய நிலைமையை கருத்தில்கொண்டு அவரை மன்னித்து விட்டுவிட மேலாளர் தயாராயிருந்தும் காசாளராயிருந்த தொழ்ற்சங்க தலைவர் சம்மதிக்கவில்லை. ‘சார்.. ஏற்கனவே போன ரெண்டு மாசமா ஆயிரம், ரெண்டாயிரம்னு கேஷ்ல குறையறப்பவே ஒங்கக்கிட்ட கம்ப்ளெய்ன் செஞ்சிருக்கேன்.. நீங்க என்னோட கவனக்குறைவுக்கு பேங்க் பொறுப்பேக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க.. இப்ப இவன கையும் களவுமா பிடிச்சி குடுத்துருக்கேன்.. எனக்கென்னவோ இவந்தான் அந்த திருட்டுக்கும் காரணம்னு நினைக்கேன். இவனெ இப்பவே போலீஸ்ல பிடிச்சி குடுக்கணும்.. நீங்களா செஞ்சா நல்லது இல்லன்னா..’ என்ரு மிரட்ட வேறு வழிதெரியாமல் ராமுவை போலீசில் பிடித்துக்கொடுத்திருக்கிறார்.

‘கல்யாணம் செஞ்சதுலருந்தே ராமு பழைய ராமுவா இல்ல சார்.. எப்பவும் எதையோ பறிகொடுத்தா மாதிரி.. கொஞ்ச, கொஞ்சமா குடிக்கவும் ஆரம்பிச்சிட்டார்.. குடி போதையில் ரோட்டோரத்துல படுத்து கிடந்தத நாங்களே பார்த்துட்டு நிறைய நாள் வீட்ல கொண்டு சேர்த்திருக்கோம்.. அப்பல்லாம் இவனால எங்காத்து மானமே போய்ட்டுதுன்னு அவங்க சித்தி குத்தம் சொல்வாங்களே தவிர இதுக்கெல்லாம் காரணம் அவங்கதான்னு உணரவே மாட்டாங்க.. பாவம் ராமு பெய்ல்ல கூட வழியில்லாம ஜெயில்லதான் இப்பவும் இருக்கார்னு கேள்வி சார்..’  என்றார் ஹென்றி..

என்ன கொடுமை?

யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத அந்த நல்ல ஆத்மாவுக்கு இப்படியொரு சோதனையா என்று மாய்ந்துபோனோம் நானும் என் மனைவியும்..

அத்துடன் முடியவில்லை அவருடைய கதை..

இரண்டு வாரங்கள் கழித்து  அவருடைய தங்கையின் மாமனார் வீட்டார் திருடனுக்கு தங்கை என்ற பட்டப்பெயரை சூட்டி வீட்டிலிருந்து விரட்டி விட கண்ணீரும் கம்பலையுமாக அவரை சிறையில் பார்க்க சென்ற நேரத்தில் அடக்க மாட்டாமல், ‘எனக்கு வாழ்க்கைய உண்டாக்கி குடுத்துட்டு நீயே அத பறிக்கவும் செஞ்சிட்டியேண்ணா..’ என்று கதற வெறுத்துப்போன ராமு தன் வாழ்வை முடித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அடுத்த நாள் காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடன் சென்ற காவலர் அசந்திருந்த நேரத்தில் வாகனத்திலிருந்து குதித்து.. பின்னால் வந்துக்கொண்டிருந்த லாரியொன்றில் அடிபட்டு..

தற்கொலைதான்.. என்று கேசை முடித்தார்கள் என்று கேள்விப்பட்டபோது....

தனக்காக வாழத் தெரியாத ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்வில் இறைவன் இத்தனை விளையாட வேண்டுமா என்ன?

விடை கிடைக்காத கேள்விதான் இது..

நிறைவு..

13 கருத்துகள்:

  1. ஜோசப் சார், படிச்சதும் கொஞ்ச நேரம் எதுவுமே பண்ணத் தோணலைங்க! அப்படியே யோசனையில் மூழ்கிப் போயிட்டேன்.

    என் நண்பன் வாழ்விலும் கிட்டத்தட்ட இதே போல்; 32 வயது தான்; அடிக்கடி நினைவுக்கு வந்து மனம் கனக்கும். இதுல கொடுமை என்னன்னா...வெளியில் சொல்லவும் மாட்டான். கேட்டா...நம்ம நல்ல மூட் கெட்டு விடும்ன்னு வேற ஏதோ மகாத்மா போல் பேசுவான்! உங்கள் வரிகள்
    //தனக்காக வாழத் தெரியாத ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்வில்//
    என்னைச் சில கணங்கள் திகைக்க வைத்தன!!!

    நம் வட்டத்துக்குள் நடக்கும் இது போன்ற சில சம்பவங்கள் நம்மையே இப்படி பாதிக்கிறதே! ஏன் சில உறவுகளைப் பாதிப்பதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும்! இன்றும் சில முக்கியமான பிரார்த்தனைகளில் அவன் பெயர் சொல்லாமல் முடிப்பதில்லை. அவன் கதை எழுத நினைத்து பாதியிலேயே நின்று விட்டது! நீங்கள் எழுதி விட்டீர்கள்!!

    //
    இறைவன் இத்தனை விளையாட வேண்டுமா என்ன?
    விடை கிடைக்காத கேள்விதான் இது..//

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்

    தீயோர் வாழ்வது OK; ஆனால் நல்லவர் நலிவது எதனால் என்று கேட்க வந்த வள்ளுவர்...இறுதியில் பதில் தெரியாது..."நினைக்கப்படும்" என்று சொல்லி முடித்து விட்டார்!!

    "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா..." பாடல் நிழலாடுகிறது!

    பதிலளிநீக்கு
  2. வாங்க KRS,

    நம் வட்டத்துக்குள் நடக்கும் இது போன்ற சில சம்பவங்கள் நம்மையே இப்படி பாதிக்கிறதே! ஏன் சில உறவுகளைப் பாதிப்பதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும்! இன்றும் சில முக்கியமான பிரார்த்தனைகளில் அவன் பெயர் சொல்லாமல் முடிப்பதில்லை.//

    இந்த மாதிரி நண்பர்களால் மட்டுமே சிந்திக்க முடியும். உறவினர்களால் முடியாது.

    உறவு லாப நஷ்டத்தைக் கணக்கிடும். நண்பர்கள் மட்டுமே நட்புக்காகவே உயிரை விடவும் தயாராயிருப்பார்கள் என்பது என் கருத்து.

    அதை ராமுவின் வாழ்க்கையில் மட்டுமல்ல பலருடைய வாழ்விலும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பெண் கொடுத்து பெண் எடுக்கும் இடங்களில் செலவும் சரிபாதியாகத்தானே பங்கிட்டிருக்க வேண்டும். தேவை இல்லாமல் ஏன் கடனை வாங்க வேண்டும்? இருக்கும் பணத்துக்குள் திருமணத்தை முடிப்பதுதானே சாதுர்யம்?

    அதே போல மனநிலை சரியான பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வித்திருந்தால் திருமணத்தை annul செய்திருக்க முடியுமே. (Annulling is different from divorce, in that while divorcing one terminates an existing marriage, whereas in the case of annulment, the marriage itself is considered as not having taken place).

    சித்தப்பா சித்தி சுயநலத்தால் அவர்கள் பெண்ணும் சுகப்படவில்லையே.

    "தனக்காக வாழத் தெரியாத ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்வில் இறைவன் இத்தனை விளையாட வேண்டுமா என்ன?"
    God will help only those who help themselves.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராகவன் சார்,

    பெண் கொடுத்து பெண் எடுக்கும் இடங்களில் செலவும் சரிபாதியாகத்தானே பங்கிட்டிருக்க வேண்டும். தேவை இல்லாமல் ஏன் கடனை வாங்க வேண்டும்? இருக்கும் பணத்துக்குள் திருமணத்தை முடிப்பதுதானே சாதுர்யம்?//

    நம்மள மாதிரி திட்டமிட்டு செயல்படக்கூடிய நிலமையில் ராமுவைப் போன்றவர்கள் இல்லையே. இருப்பதற்குள்... என்ன இருந்தது பாவம் அவருக்கு.. மாதா மாதம் ரூ.1000 சேமித்து என்ன செய்துவிட முடியும்?

    அதே போல மனநிலை சரியான பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வித்திருந்தால் திருமணத்தை annul செய்திருக்க முடியுமே.//

    இது சட்டபூர்வமான வாதம். ஆனால் ராமுவைப் போன்ற அதிகம் படிக்காத, அப்பாவிகளுக்கு இது எங்கே தெரிந்திருக்கப்போகிறது? சரி.. அப்படியே திருமணத்தை ரத்து செய்தாலும் அவருடைய தங்கையின் கதி? பெண் கொடுத்து பெண் எடுப்பவர்களுடைய சங்கடம் நமக்கு புரியாது..

    சித்தப்பா சித்தி சுயநலத்தால் அவர்கள் பெண்ணும் சுகப்படவில்லையே.//

    உண்மைதான்.. ஆனாலும் இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழி தெரிந்திருக்காது. இதற்கெல்லாம் காரணம் அந்த வரதட்சிணை என்ற பிசாசுதான்.. படித்தவர்களிடையேயே பழக்கத்திலிருக்கும் அந்த பழக்கம் ராமுவைப் போன்ற ஏழைக்குடும்பங்களின் மத்தியில் இருப்பதில் அதிசயமென்ன?

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கேசில் வரதட்சணை சைபராகத்தானே இருக்க முடியும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  6. நல்லவனாக இருப்பதற்கும் இளிச்சவாயனாக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உங்கள் நண்பரை...மன்னித்துக்கொள்ளுங்கள் ஜோசப் சார்.......முதல் வகையில் சேர்க்க மனமில்லை. அவருடைய ஆன்மா அமைதியுற்றிருக்கும் என்று நம்புகிறேன். அதற்காக இறைவனை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கேசில் வரதட்சணை சைபராகத்தானே இருக்க முடியும்?//

    என்னுடைய நண்பர் ஒருவர் கடந்த வாரம் தன்னுடைய அவருக்கு தெரிந்த குடும்பத்தில் சமீபத்தில் நடந்த திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். 'வரதட்சிணையெல்லாம் ஒன்னும் வேணாங்க. மேரேஜ் சிம்பிளா கோயில்ல வச்சிருங்க. ஆனா ரிசெப்ஷன் ஒரு ஹோட்டல்ல வவக்கணும். பொண்ணுக்கு ஒரு இருபது பவுன்ல நகை, மாப்பிள்ளைக்கு ஒரு அஞ்சு பவுன்ல் செயின், ரெண்டு பவுன்ல ப்ரேஸ்லெட், வீட்டுக்கு வேண்டிய தட்டு முட்டு சாமான், பர்னிச்சர், மாப்பிள்ளைக்கு ஒரு மோட்டார் பைக்னு சிம்பிளா செஞ்சா போறும்.. என்றார்களாம் எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் திருமண செலவு மூன்று, நான்கு லகரத்தை தாண்டியிருக்கும்..

    ராமுவின் குடும்பத்தில் இப்படி நடந்திருக்காவிட்டாலும்.. இரண்டு திருமணங்கள் நடத்தி முடிக்க குறைந்த பட்சம் ஒரு லட்சமாவது ஆகியிருக்காது? அந்த பணத்தை அவரால் கடனாய் அல்லாமல் எப்படி புரட்டியிருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  8. வாங்க ராகவன்,

    நல்லவனாக இருப்பதற்கும் இளிச்சவாயனாக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு//

    தன்னலம் பாராமல் பிறர் நலம் மட்டுமே பார்ப்பவர்களுக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் சமுதாயம் சூட்டுவதுண்டு ராகவன்.

    தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தி, சித்தப்பாவின் மனம் மகிழ்ச்சியடைய வேண்டுமென்று இத்திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது இளிச்சவாயத்தனம் என்றால் இருந்துவிட்டு போகட்டுமே. எனக்கு தெரிந்த எத்தனையோ இளம் வாலிபர்கள் தங்கள் தாய் தந்தையர், மற்றும் சகோதரிகளுக்காக தங்கள் வருமானம் முழுவதுமே செலவழிக்கிறார்களே இதையும் இளிச்சவாயத்தனம் என்றுதான் கூறுவீர்களோ.. அப்படியே இருந்தாலும் அதையும் செய்ய ஒருவர் அடிப்படையில் நல்லவராய் இருக்க வேண்டும் ராகவன். நல்ல மனதிலிருந்துதான் இத்தகைய சிந்தனையும், செயல்களும் வரமுடியும்..
    அந்த வகையில் பார்த்தால் ராமுவை இளிச்சவாயன் என்று சொல்ல முடியாது..

    பதிலளிநீக்கு
  9. என்ன சொல்ல? வருத்தம் மட்டுமே மேலோங்கி நின்றது ஐயா :(

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவுகளை சுவாரஸ்யமய் படிப்பவன், இதைப்படித்ததும் மனது கனத்தது

    பதிலளிநீக்கு
  11. நன்றி சிவப்பிரகாசம், ஸ்ரீஷிவ்.

    பதிலளிநீக்கு
  12. ராமு நல்லவர், ஆனால் சமூக வாழ்விற்கு வெறும் நல்லவர்களாயிருந்தால் மட்டும் பத்தாது; நாலும் அறிந்த ஓரளவு விவரஸ்தர்களாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது. வேறு வகையில் சொல்லப்போனால், சுயநலம் அறவே மறுத்த நல்லதனம் அப்படிப்பட்ட ஆட்களைச் சார்ந்திருக்கும் ஜீவன்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.

    மற்றொன்றையும் சொல்லி விடுகிறேன். சில சமூகங்களில் இருப்பதுபோல் ஒரு சமூக அளவிலான கட்டமைப்பும் சப்போர்ட் ஸ்ட்ரக்சரும் பார்ப்பன சமூகங்களில் மறையத்தொடங்கி பலகாலம் ஆகிறது. கிராமங்கள், சிற்றூர்களிலிருந்து பெயர்ந்து டவுனிலும், நகரங்களிலும் செட்டில் ஆகிவிட்ட பார்ப்பனர்களுக்கு அவர்களது சமூக அளவில் ஒரு சரியான சப்போர்ட் ஸ்ட்ரக்சர் இல்லை. இது இருக்கும் மற்ற சமூகங்களில் இது போல ஒன்று நடந்திருந்தால் ஏதோ ஒரு நிலையிலாவது சமூகப்பெரியோர்கள் இண்டர்வீன் செய்து இதனைச் சரிசெய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    இந்த வகையில், தற்கொலை செய்துகொண்ட நல்லவர் ராமு எனக்கு ஒரு குறியீடாகவே தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க அருனகிரி,

    ஆனால் சமூக வாழ்விற்கு வெறும் நல்லவர்களாயிருந்தால் மட்டும் பத்தாது; //

    இன்றைய சமுதாயத்தின் நிதர்சனம் இதுதான். நல்லனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்றொரு பட்டத்தையும் சமுதாயம் சூட்டிவிடுகிறது..

    பதிலளிநீக்கு