24 செப்டம்பர் 2006

கடந்து வந்த பாதை - 4 ஆ

எதிர்பாராமல் என்னை சந்திக்க நேர்ந்ததை நினைத்து மகிழ்ந்துப் போய் என்னுடைய கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார். நான் அப்போது பெரம்பூரில் குடியிருந்தேன். அவரும் பெரம்பூரில்தானே இருப்பதாய் சொன்னார் என்பது நினைவுக்கு வர.. ‘என்ன ராஜ் இங்க நிக்கீங்க? பெரம்பூர் பஸ் அந்த ஸ்டாப்புலதான வரும்?’ என்றேன்.

அவர் அதே மென்மையான புன்னகையுடன், ‘நாங்க இப்ப வில்லிவாக்கத்துல இருக்கோம் ஜோசப். பெரம்பூர்ல நாங்க இருந்த வீடு போறல.. தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சி. மூத்த தங்கையும் டீச்சர் வேலைக்கு போறா.. அதான் கொஞ்ச பெரிய வீடா பாத்து போய்ட்டோம்.. தம்பி பெஞ்சாதிக்காக பெல் வேலைய விட்டுட்டு இங்க வந்துட்டான் IDPLல டிராஃப்ட்ஸ் மேனா சேர்ந்திருக்கான். பெல் சம்பளம் இல்லன்னாலும் அவன் பெஞ்சாதியும் வேலைக்கு போறனதுனால இது போறும்னு வந்துட்டான்... நீ எப்படி இருக்கே.. கல்யாணம் எப்போ?’ என்றார்.

மூத்தவர் இருக்க இளையவருக்கு கல்யாணமா என்று எனக்கு தோன்றினாலும் அவரை எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.

என்னுடைய பார்வையின் நோக்கம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘நல்ல எடமா வந்தது ஜோசப். அம்மாவுக்கும் பொண்ண ரொம்ப புடிச்சிருந்தது. நாந்தான் என்னெ என் போக்கிலேயே விட்டுருங்கம்மான்னு சொல்லி அவங்கள வற்புறுத்தி சம்மதிக்க வச்சேன்.’

‘அப்போ நீங்க அந்த பிராமின் பொண்ண மறக்கவே இல்லையா ராஜ்?’ என்றேன்.

அவரோ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாலைக்கு மறுபுறம் வீட்டுக்குச் செல்ல வேண்டுமே என்ற பரபரப்புடன் கடைகளை மூடிக்கொண்டிருந்த பணியாட்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மேற்கொண்டு ஏதும் கேட்க மனசில்லாமல், ‘ஒருநாள் ஒங்க ஆஃபீசுக்கு வரேன் ராஜ். நிறைய பேசணும்’ என்று விடைபெற்றுக்கொண்டு என்னுடைய நிறுத்தத்திலிருந்து புறப்படவிருந்த அன்றைய இறுதி பேருந்தை நோக்கி ஓடினேன்..

சுமார் இரு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை பகல் அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, ‘ராஜா சாருக்கு ப்ரோமோஷனாயிருச்சி சார். ராஜாமுந்திரி டெப்போவுக்கு இன் சார்ஜா டிரான்ஸ்ஃபர் ஆயி போய்ட்டாரு.’ என்றார் அவருடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏன் என்னிடம் கூட சொல்லாமலே போய்விட்டார் என்று நினைத்தேன்.

அதற்குப் பிறகு எனக்கும் மேலாளர் பதவி உயர்வு வர ஊர் ஊராக சுற்றிவிட்டு 1997ம் வருடம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.. எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த கோடம்பாக்கத்தில் இருந்தேன்.

ஒரு நாள் நானும் என் மனைவி மற்றும் குழந்தைகள் பெரம்பூரிலிருந்த என் பெற்றோருடைய வீட்டிற்குச் சென்று விட்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சென்னைக் கீழ்பாக்கம் மருத்துவமனை கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் வந்ததும் ஆட்டோ பழுதாகி நின்றுவிட அதிலிருந்து இறங்கி வேறொரு ஆட்டோ கிடைக்காதா என்று நின்றுக்கொண்டிருந்த நேரம் யாரோ என்னுடைய பெயரை கூப்பிடும் குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்த ராஜாவைக் கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய கோலத்தைப் பார்த்து ஒரு நொடி பதறிப்போனேன்.

அதே வெள்ளை உடுப்புதான். சுருட்டை முடி இருந்த இடம் தெரியாமல்போய் தலை முக்கால் வழுக்கையாகியிருந்தது. முகத்தில் இரண்டு நாள் தாடி, வெள்ளை வெளேன்ற உடைக்கு மேச்சாக. கண்ணில் பருத்த கண்ணாடி. முன்பே அணிந்திருந்ததுதான் என்றாலும் இப்போது மெலிந்து களைத்திருந்த முகத்தில் சற்றே பருமனாக தெரிந்தது.

‘உன் ஒய்ஃபும் பிள்ளைங்களுமா ஜோசப்? கல்யாணத்துக்குக் கூட கூப்பிட முடியாத அளவுக்கு என்னெ மறந்துட்டியா ஜோசப்?’ என்ற தழுதழுத்த அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘என்ன ராஜ் அப்படி கேட்டுட்டீங்க? ஒங்க விலாசம் தெரியாம நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.’ என்றேன்.

‘உண்மைதான் ஜோசப். என்னுடைய பிடிவாத குணம் என்னைய ரொம்பத்தான் கஷ்டப்படுத்திருச்சி. ராஜாமுந்திரியில ஒரு கலெக்டர முறைச்சிக்கிட்டு.. நார்த்ல அஞ்சு வருசமா படாத பாடு பட்டுட்டேன்.’

‘அப்போ ஒங்க அம்மா, தங்கைகள்லாம்? இங்க தனியாவா இருந்தாங்க?’

அவர் அதைப் பற்றி பேச விரும்பாதவர்போல்.. ‘அதிருக்கட்டும் ஜோசப்.. ஒன்னெ பத்தி பேசு.. இப்ப நீ என்னவா இருக்கே.. ஒன் ஒய்ஃப் எந்த ஊரு?’ என்று பேச்சை மாற்றினார்.

என்னுடைய மனைவிக்கு முன்னால் அவருடைய குடும்பத்தைப் பற்றி பேச விரும்பவில்லையென்பதை உணர்ந்த நான் எனக்கு திருமணம் நடந்ததைப் பற்றியும், நான் சுற்றி வந்த ஊர்களைப் பற்றியும் சுருக்கமாகக் கூறிவிட்டு கிளம்பினேன்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறும் நேரத்தில் என் கையில் அவருடைய விசிட்டிங் கார்டை திணித்து, ‘டைம் கிடைக்கும்போது கூப்பிடு ஜோசப்.. சந்திக்கலாம்..’ என்றார்.

ஆட்டோ புறப்பட்டதும் கையிலிருந்த அட்டையைப் பார்த்தேன். அவர் அதே அலுவலகத்தின் சென்னை டெப்போவில் துணை மேலாளராக பதவி உயர்வைப் பெற்றிருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் ஒரு சந்தோஷம் மனதை நிரப்பியது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைத்து நாளையே அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறினேன். ‘வீட்டுக்கே வந்திருங்க ஜோசப். தனியாத்தான் இருக்கேன். எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம்.’ என்றார்.

‘தனியாத்தான் இருக்கேன்..’ என்ற வாக்கியம் என்னை அன்று இரவு முழுவதும் சங்கடப்படுத்தியது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் என் மனைவியிடம் கூறிவிட்டு காலையிலேயே அவருடைய வீட்டுக்கு சென்றேன்.

வீடு நல்ல வசதியுடன் அம்சமாக இருந்தது. வீட்டு முகப்பில் துணை மேலாளர், இந்திய உணவுக் கழகம் என்ற பளபளப்பான பலகை.. அதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

ஆனால், அவருடன் சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்து பேசிவிட்டு திரும்பியபோது மனது கணத்துப் போயிருந்தது..

என்ன உலகமடா என்று தோன்றியது..

அவர் சென்னையை விட்டு மாறிப் போனவுடனேயே அவருடைய இளைய சகோதரர் தன்னுடயை மனைவியின் வற்புறுத்தலால் வயதான தாயையும் இரு தங்கைகளையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போயிருக்கிறார்.

வடநாட்டிலிருந்தவாறே அவர்களை வழிநடத்தியிருக்கிறார் என் நண்பர். தங்கையின் வருமானத்தை தொடாமல் மாதா மாதம் அவர் அனுப்பி வைத்த தொகையைக் கொண்டே அவருடைய தங்கைகளில் இளையவரும் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து பிறகு அவருக்கு தெரிந்த ஒரு தனியார் பள்ளியில் பி.டி அசிஸ்டெண்டாக பணியில் சேர்த்திருக்கிறார்.

இதற்கிடையில் ராஜாவின் தாயார் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவருடைய முகத்தைக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. வட இந்தியாவிலிருந்து வண்டி பிடித்து வருவதற்குள் உடம்பு தாங்காது என்று உறவினர்கள் பெண்கள் இருவரையும் வற்புறுத்தி இறுதிச் சடங்கை நடத்தி முடித்திருக்கின்றனர். இளைய சகோதரர் பேருக்கு இறுதி சடங்கிற்கு வந்து போயிருக்கிறார்.

ராஜா தன் தங்கைகளின் ஊதியத்திலிருந்து சேமித்து வைத்த தொகையுடன் தன்னுடைய பி.எஃப், எல்.ஐ.சி பாலிசிகள் மீது கடன் பெற்று இரு தங்கைகளைக்கும் ஒரே பந்தலில் வைத்து திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கைகளின் திருமணத்திற்கு நல்ல வசதியுடன் இருந்த ராஜாவின் தம்பி பண உதவி ஒன்றும் செய்யாமல் இருந்ததுடன் தன்னை கவுரவித்து அழைக்கவில்லையென்பதைக் காரணம் காட்டி திருமணத்திற்கே வராமல் இருந்திருக்கிறார்.

‘தங்கச்சிங்க ரெண்டு பேரும் அவங்கவங்க மாமியார் வீட்டோட இருக்காங்க ஜோசப். தம்பி தனியாத்தான் இருக்கான். பேச்சு வார்த்தை இல்லை. கல்யாணத்துக்கு வராட்டியும் அவன் கிட்ட சமாதானம் செஞ்சிக்க என்னென்னவோ செஞ்சி பாத்துட்டேன்.. அவன் பெஞ்சாதி எதுக்குமே ஒத்து வரமாட்டேங்குறா.. சரி போடான்னு விட்டுட்டேன்.. இன்னும் ரெண்டு வருசம்.. ரிட்டையர் ஆயிருவேன்.. இது நம்ம ஆஃபீஸ் லீஸ்ல எடுத்து குடுத்த வீடு. ரிட்டையர் ஆய்ட்டா காலி பண்ணணும்.. ரெண்டு தங்கைங்க கல்யாணத்துக்கு வாங்கன கடன ரிட்டையர் ஆறதுக்குள்ள அடைச்சிர முடியும்னு தோனல.. பென்ஷன் பணத்துலருந்துதான் அடைக்கணும்னு நினைக்கேன்.. அப்புறம்? கடவுள் விட்ட வழி..’

அன்றைய சந்திப்புக்குப் பிறகு அவரை மீண்டும் சந்திக்கவே எனக்கு மனம் வரவில்லை.

இரண்டு வருடங்கள் கழித்து சைதாப்பேட்டை மின் ரயில் நிலையத்தில் தற்செயலாக அவரை சந்தித்தேன்..

அவர் வேண்டாம் என்று தடுத்தும் அவருடைய வீட்டுக்கு சென்றேன்..

நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் பத்துக்கு பத்து என்ற அறையில்.. மிகவும் எளிமையான நிலையில்..

பார்க்கவே மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. என் கண்கள் கலங்கிப் போயின.

அப்போதும் மனம் தளராமல் புன்னகையுடன், ‘என்ன ஜோசப் இப்படி எமோஷனல் ஆவறே.. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.. என்னால முடியறப்பல்லாம் என் தங்கச்சிங்கள, என் மருமகப் பிள்ளைங்கள போய் பாக்கேன்.. என் தம்பிதான்.. பாவி.. அப்படியே விலகி நிக்கான்.. இப்ப ரிட்டையர் ஆய்ட்டான். கார், பங்களான்னு வசதியோட இருக்கான். நா இருக்கற நிலையில அவனெ போயி பாக்கறது அவ்வளவா நல்லா இருக்காதுன்னு ஒதுங்கியே நிக்கேன்.. இங்க சுத்தி இருக்கறவங்க எல்லாருமே ஏழைங்கதான் ஜோசப்.. ஆனா உண்மையான மனுஷங்க.. எனக்கு ஒன்னுன்னா பதறிப்போயி நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு உதவுறாங்க.. எனக்கு இத விட வேற என்ன வேணும் ஜோசப்..’

அவருடைய அந்த அமைதியான விளக்கம் என்னை கண் கலங்க வைக்கிறது. அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எங்கூட வந்து இருங்கன்னு சொன்னா ஒங்கள அவமதிக்கறதாயிரும்.. ஆனா சேத்துப்பட்டுல ஒரு ஆசிரமத்துல நான் வாலண்டியரா இருக்கேன் ராஜ். நான் சொன்னா அந்த மதர் சுப்பீரியர் கேப்பாங்க.. வர்றீங்களா ராஜ்?’ என்றேன்..

அதே புன்சிரிப்புடன் வேண்டாம் என்றார். ‘இல்ல ஜோசப்.. அது யாருமே இல்லாதவங்களுக்கு.. எனக்கு ஒன்னெ மாதிரி எத்தனெ பேர் இருக்காங்க. அத்தோட நா அங்க போய் இருக்கறது தெரிஞ்சா என் தங்கச்சிங்களோட மாமனார், மாமியார் வீட்ல என்ன நினைப்பாங்களோ.. என்னால என் தங்கைகளோட கவுரவம் போயிரக்கூடாது.. நா நல்லாத்தான் இருக்கேன் ஜோசப்.. நீ டைம் கிடைக்கறப்ப வந்து போயேன்.. உன் வீட்டுக்கு எப்பனாச்சும் கூப்பிடு.. வரேன்..’

கனத்த மனத்துடன் திரும்புகிறேன்..

திரும்பும் போது தற்செயலாக நிமிர்ந்து பார்க்கிறேன்.. ‘ராஜா..
துணை மேலாளர்.. இந்திய உணவுக் கழகம்.’ என்ற வர்ணம் உரிந்து நிற்கும் மரப் பலகை கண்களில் படுகிறது.. அந்த பலகையைப் போலத்தான் அவரும்..

அவரை என்னால் எப்படி மறக்க முடியும்?

**************

18 கருத்துகள்:

  1. தன் வாழ்வை உடன்பிறந்தோர்க்கு அர்பணித்து தன் கடமையை நிறைவுடன் செய்த உங்கள் நண்பரை மகனாய் பெற உன்மையில் அவர்களின் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ?பதிவை படித்ததும் என்னையும் அறியாமல் என் மடியில் விழுந்த கண்ணீர்துளிகளை தடுக்க ஏனோ முடியவில்லை

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஸ்ரீ!

    பதிவை படித்ததும் என்னையும் அறியாமல் என் மடியில் விழுந்த கண்ணீர்துளிகளை தடுக்க ஏனோ முடியவில்லை //

    உண்மைதான். எழுதி முடித்ததும் எனக்கும் அந்த பழைய நினைவுகள் வந்து நெடுநேரம் கஷ்டப்படுத்தின. உண்மையிலேயே அவர் மாமனிதர்தான்.

    பதிலளிநீக்கு
  3. //ஆனா உண்மையான மனுஷங்க.. எனக்கு ஒன்னுன்னா பதறிப்போயி நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு உதவுறாங்க.. எனக்கு இத விட வேற என்ன வேணும் ஜோசப்..’//

    ஜோசப்,உங்கள் நண்பரின் கதை மனதை தாக்கிவிட்டது.தன்னலம் கருதா அந்த மாமனிதன்
    நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாய் வாழ வேண்டுவோம்.
    மிக்க நன்றி,ஜோசப்.,இப் பெரிய பதிவை சிரமம்,நேரம் பாராமல் தந்தமைக்கு.,
    -முகு,கடலூர்-

    பதிலளிநீக்கு
  4. நெகிழ வைத்த பதிவு. உண்மை தகிக்கின்றது. சொல்வதற்கு நிறைய இருப்பினும் மௌனியாய்...

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் சார்,

    எல்லாம் இல்லாவிட்டாலும், உங்களின் நிறைய பதிவுகளை படித்து வருகிறேன். This one, as the rest, shows good men draw good men. எதிலும் நல்லதையே பார்க்கும் உங்கள் தன்மை ஆச்சர்யம் அளிக்கிறது. புத்தகமா போடுங்க என்று நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். அப்படியே போடாதீர்கள். நிறைய trim பண்ணி, Beginner's guide to the Real World, அந்த மாதிரி எதாவது கல்லூரி மாணவர்களை aim பண்ணி போடுங்க. நிறைய விற்காது என்று நினக்கிறேன், ஆனால் படிப்பவர்களுக்கு பயனையும் பக்குவத்தையும் நிச்சயம் கொடுக்கும். சிரமமெடுத்து எழுதுவதற்கு மிக நன்றி. It gives me hope!

    பதிலளிநீக்கு
  6. என்ன மனுஷர் பாருங்க. எங்கியோ மேலே போயிட்டார். படிச்சு முடிச்சதும் மனசு
    அப்படியே கனத்துப்போச்சு.

    பதிலளிநீக்கு
  7. வாங்க முகு,

    தன்னலம் கருதா அந்த மாமனிதன்
    நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாய் வாழ வேண்டுவோம்.//

    ஆமாங்க.. அவர் இன்னமும் உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும்தான் இருக்கிறார்.. அப்படியே இருக்கணும்னு பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க குசும்பன்,

    நெகிழ வைத்த பதிவு. உண்மை தகிக்கின்றது. சொல்வதற்கு நிறைய இருப்பினும் மௌனியாய்...//

    ஆமாங்க.. உண்மையில இந்த மாதிரி எத்தனையோ நடமாடும் தெய்வங்க இருக்காங்க.. அப்படியொருவரைப் பற்றி எழுதியதில் எனக்கு சந்தோஷமே..

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஸ்வாமி,

    நிறைய விற்காது என்று நினக்கிறேன்//

    நீங்க சொல்றது சத்தியமான உண்மைங்க. புத்தக கடைகள்ல தூசி படிஞ்சிதான் நிக்கும்.. இது மட்டுமல்ல.. நல்ல புத்தகங்கள் எல்லாமே..

    பதிலளிநீக்கு
  10. வாங்க துளசி,

    என்ன மனுஷர் பாருங்க. எங்கியோ மேலே போயிட்டார். //

    நான் நேத்தைக்கு அவரைப் போய் சந்தித்து இந்த பதிவுகளின் கோப்பைக் காட்டினேன். கண் கலங்கிப் போய்விட்டார் மனிதர்.

    என்ன ஜோசப் என்னெ போயி என்னமோ செய்ண்ட் மாதிரி காட்டிட்டே.. நான் என் கடமையாத்தாம்பா செஞ்சேன்னு சொன்னார்..

    அவருடைய அடக்கம் என்னை மிகவும் பாதித்தது..

    பதிலளிநீக்கு
  11. நான் உணர்வதை என்னல் முழுமையாக வெளிப்படுத்த இய்லாது. அதனால்தான் தாமதம்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா
    உண்மையிலேயே கண்கள் கலங்கித்தான் போனது, இதுபோன்றே வேறொருவர் பற்றி முன்பு எழுதி இருந்தீர்கள், ஒரு விஜயா அக்கா பற்றி, அவர்களும் ராஜா சாரும் என்றும் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ஐயா :(, தங்களுக்கு எழுத்து அந்த சரஸ்வதி கடாட்சத்தில் தங்கு தடையின்றி துணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் பாணியில் அற்புதமாக வருகின்றது ஐயா, அவற்றினை தொகுத்து ஒரு பதிப்பாக போட்டீர்களானால் குறைந்தபட்சம் தங்களின் வலைப்பதிவு ரசிகர் மன்றத்தினரே ஒரு 500 முதல் 1000 காப்பிகள் வரையாவது வாங்குவார்கள் ஐயா....அப்படி ஏதேனும் எண்ணம் இருப்பின் இப்போதே எனக்கும் ஒரு காப்பி அட்வாண்ஸ் புக்கிங் ஐயா ...:), சகோதரிகளுக்காகவும், சகோதரனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன் வாழ்வையே அற்பணித்துக்கொண்ட அந்த தெய்வத்திற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் அவர் பாதம் தொட்ட என் உணர்வினையும் தெரிவித்துவிடுங்கள்...நன்றி ஐயா...
    ஸ்ரீஷிவ்...அசாமிலிருந்து

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஸ்ரீஷிவ்,

    தங்களுக்கு எழுத்து அந்த சரஸ்வதி கடாட்சத்தில் தங்கு தடையின்றி துணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் பாணியில் அற்புதமாக வருகின்றது //

    புரியலையே.. கொஞ்சம் விளக்குங்களேன்..

    குறைந்தபட்சம் தங்களின் வலைப்பதிவு ரசிகர் மன்றத்தினரே ஒரு 500 முதல் 1000 காப்பிகள் வரையாவது வாங்குவார்கள் //

    அதென்னவோ உண்மைதான்.. நீங்க மட்டும்தான் வாங்குவீங்க.. ஆனா அது மட்டும் போறாதே.. குறைஞ்ச பட்சம் ஒரு பத்தாயிரம் காப்பியாவது விற்றால்தான் பிரசுரிப்பவருக்கும் நஷ்டம் வராமல் இருக்கும்:)

    சகோதரிகளுக்காகவும், சகோதரனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன் வாழ்வையே அற்பணித்துக்கொண்ட அந்த தெய்வத்திற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் அவர் பாதம் தொட்ட என் உணர்வினையும் தெரிவித்துவிடுங்கள்//

    நிச்சயம் தெரிவிக்கிறேன்.. உங்களுடைய உணர்ச்சிபூர்வமான வாழ்த்துக்களுக்கு அவர் ஏற்றவர்தான்.

    பதிலளிநீக்கு
  14. "வாங்க ஸ்ரீஷிவ்,

    தங்களுக்கு எழுத்து அந்த சரஸ்வதி கடாட்சத்தில் தங்கு தடையின்றி துணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் பாணியில் அற்புதமாக வருகின்றது //

    புரியலையே.. கொஞ்சம் விளக்குங்களேன்.."

    ஐயா, விகடனில், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ( அவர் ஒரு எழுத்தாளர்) துணையெழுத்து என்று ஒரு தொடர் எழுதி வந்தார், இப்போது அது முடிந்துவிட்டதா என்னவென்று தெரியவில்லை, மண்ணின் மணத்துடன், இதயம் தொடும் எழுத்து அது, எப்போதும் படிக்கலாம், நம் பக்கத்துவீட்டுக்காரரின் பேச்சு போல எதார்த்தமாக இருக்கும், அதுபோலவே தங்களின் எழுத்துக்களும் இருக்கின்றன என்று சொல்லவந்தேன் ஐயா...மிக்க நன்றி....:)
    ஸ்ரீஷிவ்...:)

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஸ்ரீஷிவ்,

    எப்போதும் படிக்கலாம், நம் பக்கத்துவீட்டுக்காரரின் பேச்சு போல எதார்த்தமாக இருக்கும், அதுபோலவே தங்களின் எழுத்துக்களும் இருக்கின்றன என்று சொல்லவந்தேன் //

    அப்போ நானும் கொஞ்சம் கொஞ்சமா எழுத்தாளர் ரேஞ்சுக்கு எழுதறேன்னு சொல்றீங்க.. ஹூம்.. காலர தூக்கி விட்டுக்க வேண்டியதுதான்:)

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா12:14 PM

    இது போல பலர் பிறருக்காக தம் வாழ்க்கையையே இன்றும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இது போன்ற (அருமையான) பதிவுகள் மட்டுமே மிச்சம். சிலருக்கு அதுகூட கிடையாது, பாவம்.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா10:33 PM

    Joseph sir,
    Rombha manasuku kashtama irundhadhu, kadavul atleast indha age-liyavadhu avangaluku oru nimmadhi kuduthareh.

    Indha first two parts yerkanaveh padichirundhalum, thirupi oru tharam fullah padichaen. It makes to think what we bring when we are born & take when we die. silar idha purinjukaradhuellai.
    Mudinjavaraikum nalladhu pannanum, ellaina thondaravadhu pannamairundha nalladhu.

    பதிலளிநீக்கு
  18. Embracing blog. Its really Nice to read your writ ups. Do well.

    Regards,
    Krishna Prabhu

    பதிலளிநீக்கு