27 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 199

சாதாரணமாக என்னுடைய அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை என்னுடைய மனைவியிடம் கூறுவதில்லை, முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்கிற விஷயங்களைத் தவிர.

என் மனைவியும் என்னுடைய அலுவலக விஷயங்களைத் தெரிந்துக்கொள்வதில் அக்கறை காட்டமாட்டார். இது ஒருவகையில் எனக்கும் பிடித்த விஷயமாயிருக்கவே நானும் அவரை வற்புறுத்தி சொல்வதில்லை. ஏனெனில் அலுவலக விஷயம் அலுவலகத்துடனே நின்றுபோய்விடும் பட்சத்தில் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

சிலருடைய வீடுகளில் நடப்பதுபோல் அலுவலக விஷயத்தை ‘இன்னைக்கி ஆஃபீஸ்ல என்ன நடந்தது தெரியுமா?’ என்று தன்னுடைய வீரபராக்கிரமத்தை ஒன்றும் அறியாத மனைவியிடம் கூறும் கணவன்மார்கள் சில நேரத்தில் மனைவியரிடம் சிக்கிக்கொண்டு விழிப்பதைப் பார்த்திருக்கிறேன். ‘ஏங்க நீங்க செஞ்சது அடி முட்டாள்தனம். இதுல பெருமையா வந்து சொல்லிக்கிறீங்களாக்கும்?’ என்பார் மனைவி.

சில வீடுகளில் கணவன் வந்து அமர்ந்ததுமே, ‘என்னங்க நேத்தைக்கி ஏதோ பிரச்சினைன்னு சொன்னீங்களே அது என்னாச்சி? சுமுகமா முடிஞ்சதா? நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு ஆஃபீசுக்கு போய்ட்டீங்க.. நா இங்க எப்படா நீங்க வருவீங்கன்னு டென்ஷனோட ஒக்காந்திருக்கேன்.’ என்பார் மனைவி.

மனிதர் எதையாவது செய்து அந்த பிரச்சினையை சமாளித்திருப்பார். ‘சரி என்னவோ செஞ்சேன் விடேன்..’ என்பார் மனைவியிடம். ‘அதெப்படீங்க. நீங்க என்ன செஞ்சீங்க, அத சொல்லுங்க. அது சரிதானான்னு எனக்கு தெரிய வேணாமா?’ என்று துருவித் துருவி கேட்டு பிறகு, ‘சரியான முட்டாளுங்க நீங்க. இப்படியொரு முடிவு எடுத்திருக்கீங்களே, என்னையாவது கேட்டுருக்கலாமில்ல?’ என்று முடிந்து போன விஷயத்தை மீண்டும் கிண்டி, கிளறி அர்ச்சனை செய்ய, மனிதர் ‘சை.. இவ கிட்ட ஏந்தான் இத சொன்னோமோ?’ என்று நொந்து போவார்.

அலுவலக பிரச்சினை வீட்டு பிரச்சினையாகி கணவன், மனைவிக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதை பார்த்திருந்ததால் அப்படியொரு நிலை என் குடும்பத்தில் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தேன். என்னுடைய மனைவிக்கும் இத்தகைய விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் எவ்வித விருப்பமும் இருந்ததில்லை.

அன்றும் அப்படித்தான். நான் அலுவலகத்திலிருந்த வந்ததும் என்னுடைய சற்றே பதற்றமான முகத்தைப் பார்த்து என்னுடைய மனைவி ஒரு நொடி கலக்கமடைந்தாலும் ஒன்றும் கேட்காமல் தன்னுடைய முக்கியமான அலுவல்களில் ஒன்றான மகளுக்கு வீட்டுப் பாடம் செய்ய உதவுவதில் முனைப்பாகிப் போனார்.

எனக்குள் மீண்டும் ஒரு சஞ்சலம். ஆலையின் உரிமையாளரை அழைத்து இன்று மாலை நடந்த விஷயத்தை அவரிடம் தெரிவித்தாலென்ன என்று ஆலோசித்தேன். ஆனால் அவர் எப்படி ரியாக்ட் செய்வாரோ என்றும் கவலையாயிருந்தது. எந்தவித ஒருவித முடிவுக்கும் வர முடியாமல் திணறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து என் வீட்டுத் தொலைப் பேசி அலறியது.

மதுரையில் வங்கி மேலாளர்களுக்கென ஒரு க்ளப் இருந்தது. அதை பேங்கர்ஸ் க்ளப் என்போம். நான் பணியாற்றிய எல்லா ஊர்களிலுமே இத்தகைய அமைப்பு இருந்ததென்றாலும் தஞ்சையிலும் மதுரையிலும் சற்று அதிக முனைப்புடன் இந்த அமைப்பு செயலாற்றி வந்தது.

அதனுடைய செயலாளர் தேசீய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதுநிலை (சீனியர்) மேலாளர் பதவியில் இருந்தவர். பழுத்த அனுபவசாலி. அவரிடமிருந்துதான் தொலைப்பேசி அழைப்பு. ‘சார் அடுத்த வாரம் நம்ம மத்திய அமைச்சர் வரார்னு தெரியுமில்லையா? அவர் வரும்போது எல்லா ஊர்லயும் வழக்கமா நடக்கற லோன் மேளா மதுரையிலும் நடத்தணுமாம். அரசாங்க அதிகாரிங்க கிட்டருந்து பெரிசா ஒரு அறிக்கையே வந்துருக்கு. அத டிஸ்கஸ் பண்ணி நாம என்ன செய்யணுங்கறத தீர்மானிக்க நாளைக்கு சாயந்திரம் ஒரு கூட்டம் போட்டிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும்’ என்றார்.

இருக்கற தொல்லை போறாதுன்னு இது வேறயா என்று மனதுக்குள் நினைத்த நான் ‘சரி சார். நிச்சயமா வந்துடறேன்.’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பைத் துண்டிக்க முயன்றவனை அவர் விடாமல் தங்களைப் போன்ற அரசு வங்கி அதிகாரிகளுக்கு அரசு அதிகாரிகள் என்னவெல்லாம் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை ஒன்றுவிடாமல் கூறி புலம்பி தள்ளிவிட்டார்.

உண்மைதான் அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த ஒரு அமைச்சர் அப்போதைய பிரதமரின் ஆணையை சாக்காக வைத்துக்கொண்டு அடித்த கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. வங்கி அதிகாரிகள் அரசு அதிகாரிகளின் கைப்பாவைப் போல நடத்தப்பட்டனர் என்றால் மிகையாகாது. ஊரெங்கும் லோன் மேளா மயம்.

நான் தஞ்சையிலும் தூத்துக்குடியிலும் இருந்த காலத்தில் இத்தகைய லோன் மேளா நடைபெற்றாலும் என்னுடைய வங்கி அதில் கலந்துக்கொண்டதே இல்லை. அரசு திட்டங்களில் எங்களைப் போன்ற தனியார் வங்கிகளும் பங்குக்கொண்டு சலுகைக் கடன் வழங்க வேண்டும் என்ற நியதி இருந்தாலும் என்னால் இயன்றவரை அதை பொருட்படுத்தாமல் இருந்தேன்.

அதற்காக எங்களுடைய வங்கியிலிருந்து சலுகைக் கடன் கொடுத்ததில்லை என்று பொருள் அல்ல. அரசு வங்கிகள் பத்து பேருக்கு கொடுத்திருந்தால் எங்களைப் போன்ற வங்கிகள் இரண்டு அல்லது மூன்று பேருக்கு வழங்குவதுண்டு. ஆனால் கடன் பெற தகுதியுள்ளவர்களை நாங்களே தேர்ந்தெடுப்போம். அதில் அரசு அதிகாரிகளின் பரிந்துரையை பெரிதாக பொருட்படுத்தியதில்லை. அதை அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளர்களும் பெரிதாய் பொருட்படுத்தியதில்லை. ஏனெனில் அதில் பலரும் வடக்கத்தியராய் இருந்தனர்.

ஆனால் மதுரையில் அப்போதிருந்த ஆட்சியாளர் தென்னிந்தியர் என்பது மட்டுமல்ல மிகவும் இளையவராயும் இருந்தார். ஆகவே எதையாவது சாதித்து மத்திய அமைச்சர்களின் பார்வையில் பட்டுவிட வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. நான் மதுரையில் இருந்த காலத்தில் அவருடைய கடுமையான விமர்சனத்திற்கு பலமுறை ஆளாயிருக்கிறேன். வங்கி மேலாளர்களின் கூட்டத்தில் எல்லா மேலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் மத்தியில் எங்களுடைய வங்கியின் பெயரை குறிப்பிட்டு சாடியிருக்கிறார்.

மதுரையிலிருந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த வங்கிகள் பலவும் அரசு அதிகாரிகளின் பரிந்துரைப்படி கடன் வழங்குகையில் உங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்பது மாதிரியான வசவுகளையெல்லாம் சில சமயங்களில் கேட்க நேர்ந்திருக்கிறது. நான் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் எனக்கு தகுதியானவர்கள் என்று தோன்றியவர்களுக்கு மட்டும் கடன் வழங்கி அரசு எங்களுடைய வங்கிக்கு கொடுத்திருந்த சலுகைக் கடன் எல்லையை (Loan Target) ஒவ்வொரு வருடமும் எட்டிவிடுவேன். வருட எல்லையில் என்னுடைய வங்கி அரசு நிர்ணயித்த தொகையை வழங்கியிருக்கிறோமா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும் என்பதால் ஆட்சியரின் விமர்சனங்கள் என்னைப் பாதித்ததே இல்லை.

ஆகவே மேலாளர் க்ளப்பின் செயலாளர் தன்னுடைய சிரமங்களை என்னிடம் எடுத்துக் கூறியபோது அவர்மீது எனக்கு கோபம் வந்ததே தவிர பச்சாதாபம் ஏதும் ஏற்படவில்லை. ‘நீங்க ஏன் சார் அவங்க சொல்றபடியெல்லாம் ஆடணும்.. முடியாது சார்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன செஞ்சிருவாங்க.. ஒன்னு ஊர விட்டு மாத்துவாங்க.. இல்லையா மேலாளர் பதவியிலருந்து இறக்கிருவாங்க. நா ரெண்டுக்கும் தயார்.’ என்றேன்.

‘நாய் வேஷம் போட்ட குரைச்சித்தான ஆகணும் சார்.. ஒங்களுக்கு சின்ன வயசு. பசங்களும் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கற வயசுலதான் இருப்பாங்க. எங்க கதை அப்படியில்லையே..?’ என்ற மேலும் புலம்ப ஆரம்பிப்பதற்குள் குறுக்கிட்டு, ‘சரி சார் நாளைக்கு மீட்டிங்ல பாக்கலாம்’ என்று துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். மணி ஒன்பதைக் கடந்திருந்தது. இனி ஆலை உரிமையாளருடன் பேசுவது நன்றாயிருக்காதென்று நினைத்து இரவு உணவிற்குப் பிறகு படுக்க சென்றேன்.

அடுத்த நாள் காலை காப்பிக் கோப்பையுடன் செய்தித்தாளைப் பார்த்தபோது அதிர்ந்துப் போனேன். முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி வெளியாகி இருந்த செய்தி என்னை சிலையாய் அமரச் செய்தது.

பிரபல மில் உரிமையாளர் மாரடைப்பால் நள்ளிரவில் மரணம்! என்றது செய்தித்தாள்.

பதறி எழுந்து அரைகுறையாய் குளித்து முடித்து என்னுடைய இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு நகரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்த அவருடைய வீட்டையடைந்தேன்..

ஏறத்தாழ ஒரு கோடிக்கும் கூடுதலான சொத்துக்கு உரிமையாளருடைய சடலம் வீட்டு முற்றத்தில்.. ஒரு கோரைப் பாயில்!

சற்று நேரத்தில் அவருடைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்வரை பாதுகாக்கப் படவேண்டிய நோக்கத்துடன் சடலத்தை மதுரை மத்திய மருத்துவமனையிலுள்ள குளிர்பதன மார்ச்சுவரி அறைக்கு கொண்டு செல்ல அவருடைய நெருங்கிய உறவினர்கள், என்னைப் போன்ற நண்பர்கள், சிலரைத் தவிர வீடு வெறிச்சோடிப் போனது.

வாசலில் தன்னுடைய சகாக்களுடன் நின்றிருந்த ஆலை மேலாளர் என்னுடைய கண்ணுக்கு அப்போது ஒரு அரக்கனைப் போல் தோன்றினார்.

என்ன செய்ய முடியும்?

அந்த நல்ல மனிதர் தன்னுடைய மேலாளர் செய்திருந்த தகிடுத்தத்தை யார் வாயாலேயோ (என்னை ஆலைக்குக் கொண்டு சென்ற வாகன ஓட்டுனராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்) கேள்விப்பட்டதும் அவமானம் தாங்க முடியாமல் பதற்றமடைந்து அதன் விளைவாக ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகியிருப்பார் என்று நினைத்தேன்.

நல்லவேளையாக அந்த நல்ல மனிதருடைய மரணம் என்னால் ஏற்படாமல் இருந்ததே என்று தோன்றியது. முந்தைய நாள் இரவு என்னை அவருக்கு தொலைப்பேசி செய்யவிடாமல் பேசி நேரத்தைக் கடத்திய அந்த அரசு வங்கியின் மேலாளரை மனதுக்குள் வாழ்த்தினேன். இல்லையென்றால் நான் ஆலையில் நடந்த விஷயத்தை அவரிடம் தெரிவிக்கப் போக அதனால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வுக்கு நான் ஆளாகியிருக்க நேர்ந்திருக்குமே?

நான் மதுரையிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை இந்த பிரச்சினை ஒரு தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்தது.

அவருடைய அந்த அகால மரணம் அடுத்த நாள் நடந்த வங்கி மேலாளர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமலே போனது.

அதனுடைய விளைவுதான் எனக்கு ஏற்பட்ட அவமானமும், மாற்றமும்..

தொடரும்..

8 comments:

sivagnanamji(#16342789) said...

இப்படி ஏற்படக்கூடுமென்று நான்
நினைத்தேன்
பாவம்
மன்சாட்சியின் விரட்டலில் இருந்து
தப்பித்துள்ளீர்கள்

துளசி கோபால் said...

நல்லவேளைங்க. அந்தக் கடவுள்தான் உங்களைக் காப்பாத்துனார்.
இல்லேன்னா ,'நம்மாலோ'ன்னு நினைப்பு மனசை அறுத்துருக்கும்.

வடுவூர் குமார் said...

திரு ஜோசப்
என்னைப்போன்றவர்களுக்காக ஒரு உதவி!!
197 படித்துவிட்டு 199 படிக்கும் போது 198க்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியுள்ளது.
அதனால் கொஞ்சம் உங்க பக்கத்தில் ஒரு "சுட்டி" போன பதிவுகள் என்று கொடுத்தால் சவுகரியமாக இருக்கும்.

G.Ragavan said...

ஜோசப் சார்....என்ன செய்வது! நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை....இறையடி சேரும் பொழுது அமைதியாகச் சேர வேண்டும். அந்த அமைதியை ஆண்டவன் அவருக்கு வழங்கியிருப்பான் என நம்புகிறேன்.

tbr.joseph said...

வாங்க குமார்,

197 படித்துவிட்டு 199 படிக்கும் போது 198க்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியுள்ளது.
அதனால் கொஞ்சம் உங்க பக்கத்தில் ஒரு "சுட்டி" போன பதிவுகள் என்று கொடுத்தால் சவுகரியமாக இருக்கும். //

நீங்க கேக்கறது நியாயந்தான்.. நிச்சயம் செய்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அந்த அமைதியை ஆண்டவன் அவருக்கு வழங்கியிருப்பான் என நம்புகிறேன். //

நிச்சயம் வழங்கியிருப்பான்.. அந்த மனிதர் ஒரு அப்பழுக்கில்லாதவராகத்தான் எனக்கு தெரிந்தார்.

tbr.joseph said...

வாங்க ஜி!

மனசாட்சியின் விரட்டலில் இருந்து
தப்பித்துள்ளீர்கள் //

ஆமாங்க.. அப்படித்தான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க துளசி,

'நம்மாலோ'ன்னு நினைப்பு மனசை அறுத்துருக்கும்.//

நிச்சயமா. அந்த சங்கடத்திலிருந்து மீண்டிருக்கவே முடியாது..