26 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 198

அவருடைய குரலில் அளவுக்கு அதிகாமாக தெரிந்த கரிசனம் என் கவனத்தைக் கவர்ந்தது. நான் வியப்புடன் அவரை நோக்கி திரும்பிய அதே நேரத்தில் தொழிலாளர் ஒருவரின் கையிலிருந்த மூட¨ கைத்தவறி கீழே விழுந்து வாய் பிளக்க வெளியில் வந்து விழுந்தவற்றைப் பார்த்து மலைத்துப் போய் நின்றேன்..

கிடங்கில் என்னுடன் நின்றிருந்த என்னுடைய உதவியாளரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்.

மூட்டையிலிருந்தவை நூற்பாலை உபயோகப்படுத்தக் கூடிய பஞ்சு அல்ல என்பது அதைக் கண்டவுடனே தெரிந்தது. மெக்கானிக்குகள் வேலை முடிந்ததும் கை துடைக்க உபயோகப்படுத்தும் வேஸ்ட் காட்டன் எனப்படும் ஒருவகை தரம் குறைந்த பஞ்சு.

நூற்பாலையில் உபயோகிக்கக் கூடிய தரம் வாய்ந்த பஞ்சின் விலையில் பத்தில் ஒரு மடங்கு இருக்கக் கூடிய பஞ்சு.

நான் அதிர்ந்து போய் மேலாளரைப் பார்த்தேன். அவருடைய முகத்தில் கையும் களவுமாய் பிடிபட்டுவிட்டோமே என்ற ஆத்திரம்தான் மேலோங்கியிருந்தது.

அதற்குக் காரணமாயிருந்த தொழிலாளரை கை நீட்டி அடிக்க போக இதை எதிர்பாராத தொழிலாளரும் அவருடன் நின்றிருந்த சக தொழிலாளர்களும் கோபத்துடன் மேலாளரை எதிர்கொள்ள அங்கு சற்று நேரத்தில் ஒரு கைகலப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவானது.

அந்த சூழ்நிலையில் மேற்கொண்டு ஆய்வைத் தொடர விரும்பாததாலும் பருத்தி பஞ்சின் வாசம் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாலும் நான் கிடங்கை விட்டு உடனே வெளியேறி என்னை பிந்தொடர்ந்து வந்த என்னுடைய உதவியாளரிடம், ‘கிடங்க பூட்டி சீல் வச்சிட்டு வாங்க போகலாம். அப்புறமா ஓனர வரச்சொல்லி மேற்கொண்டு இன்ஸ்பெக்ஷன வச்சிக்கலாம்.’ என்றேன்.

அதற்கு மேலாளர் ஒத்துக்கொள்வாரோ மாட்டாரோ என்ற குழப்பத்தில் என்னுடைய உதவியாளர் அவரைப் பார்க்க அவரோ எதிர்பார்த்ததுபோலவே, ‘எதுக்கு சார் சீல் வைக்கச் சொல்றீங்க? இதுல இருக்கற சரக்கோட மதிப்புல பாதியத்தான நீங்க லோனா குடுத்துருக்கீங்க? அதெப்படி முழு கொடவுனுக்கும் நீங்க சொந்தம் கொண்டாட முடியும்?’ என்றார் பிரச்சினை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்.

அவருடைய நோக்கம் எனக்கு தெளிவாகப் புரிந்தது. பிரச்சினையை திசை திருப்ப அவர் முயல்கிறார் என்று தெரிந்தது. இருப்பினும், ‘இங்க பாருங்க மேனேஜர் சார், இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் பார்த்தது ரொம்பவும் சீரியசான விஷயம். நாங்க கடன் குடுத்தது தரம் வாய்ந்த முதல் க்ரேட் பஞ்சுக்கு.. என்னோட அசிஸ்டெண்ட் மூட்டைகள கணக்கிட்டபோது மூட்டைகளின் எண்ணிக்கை நீங்க குடுத்திருந்த அறிக்கையிலிருந்த எண்ணிக்கைக்கு குறைவா இருந்தத சுட்டிக் காட்டியிருக்கார். அத்தோட இப்போ கீழ விழுத்த மூடையிலிருந்த வேஸ்ட் காட்டனையும் பார்த்தப்புறமும் இந்த கொடவுன வெறுமனே பூட்டிட்டு போக என்னால முடியாது. மில்லும் ஒடாம மூடிக் கிடக்கு. அதனால பாதுகாப்பு காரணம் கருதி இதை பூட்டி எங்க பேங்கோட சீல் வச்சிட்டு போறத தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் போனதுக்கப்புறம் இந்த பூட்ட திறந்து நீங்க அந்த மூடைகளை அப்புறப்படுத்திரலாம் இல்லையா? அதுக்காகத்தான் இந்த சீல். இதுக்கும் மீறி நீங்க என்ன தடுத்தீங்கன்னா நா உடனே போலீசுக்கு போறதத் தவிர வேறு வழியில்லை. ஒங்க ஓனர நான் ரொம்பவும் மதிக்கறதுனால அத செய்ய வேணாமேன்னு பாக்கேன். ஆனா நீங்க பிடிவாதமா நின்னா அதையும் நான் செய்ய தயங்க மாட்டேன். என்ன சொல்றீங்க?’ என்றேன் சற்றே கோபத்துடன்.

மேலாளர் தன்னுடைய உதவியாளர்களைப் பார்த்தார். நான் போலீஸ் என்றதுமே அடியாட்களைப் போன்ற தோற்றத்துடன் இருந்த அவருடைய உதவியாளர்கள் வெகுண்டு என்னைக் கோபத்துடன் பார்ப்பதைப் பார்த்தேன். விட்டால் என்னையும் என் உதவியாளரையும் அடித்துப் போடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் போலிருந்தது.

ஆனால் better sense prevailed என்பார்களே அதுபோல மேலாளர் வேண்டாம் என்று கண்களாலேயே அவர்களை நிறுத்தினார். நான் என் உதவியாளரைப் பார்த்து, ‘எதுக்கும் இருக்கட்டும்னு நான் நம்ம சீலிங் பாக்ஸ கொண்டு வந்தேன். நீங்க கார்லருக்கறத எடுத்து கிடங்க பூட்டி சீல் வைங்க. நாம போகலாம்.’ என்றேன்.

என்னுடைய உதவி மேலாளர் அப்போதும் அச்சத்துடன் நான் சொன்னதை செய்யாமல் ஆலை மேலாளரைப் பார்த்தார். அவர் தினந்தோறும் அந்த மில்லைக் கடந்துதான் வீடு திரும்ப வேண்டும். அதை நினைத்து பயப்படுகிறார் என்று நினைத்தேன். நியாயம்தானே.. வங்கிக்காக செய்யப்போய் வழியில் இவர்கள் கையில் அடிபடவேண்டுமா என்று நினைத்திருப்பார்.

மேலாளர் ‘சரி, செய்யுங்கள்’ என்பதுபோல் சைகைக் காட்ட என்னுடைய உதவி மேலாளர் அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய வேலையை செவ்வனே செய்து முடித்தார்.

நான் மேலாளரைப் பார்த்து, ‘நீங்க உங்க முதலாளிக்கு விவரம் சொல்லிருங்க. நான் நாளைக்கு இல்ல அடுத்த நாள் மறுபடியும் வருவேன். அந்த நேரத்துல ஒங்க முதலாளி இங்க இருந்தா நல்லது.’ என்றேன்.

அவர் பதிலேதும் பேசாமல் ஏதோ யோசனையில் இருக்க நானும் என்னுடைய உதவி மேலாளரும் நாங்கள் வந்த வாகனத்தில் ஏறாமல் வாசலை நோக்கி நடந்தோம்.

வாகன ஓட்டுனரோ எங்கள் பின்னாலேயே ஓடி வந்தார். ‘சார் நீங்க கார்ல ஏறாம திரும்பி போனீங்கன்னு தெரிஞ்சா முதலாளி என்னெ வேலைய விட்டே தூக்கிருவாருய்யா. நீங்க இந்த மேனேசர பத்தியெல்லாம் கவலப் படாதீங்க. இப்ப இங்க நடந்தது எதுக்கும் ஐயா பொருப்பாருக்க மாட்டாருய்யா. நீங்க வண்டில ஏறுங்கய்யா நா கொண்டு விட்டுடறேன்.’ என்று வழிமறிக்க நானும் அதற்கு மேலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துவது சரியல்ல என்று தீர்மானித்து வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்.

என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பும் வழியில் என்னுடைய உதவி மேலாளர் புலம்பிக்கொண்டே வந்தார். ‘சார் அந்த மேனேஜர் பொல்லாத ஆள் சார். நீங்க பேசாம இந்த விஷயத்த ஓனர் கிட்ட சொல்லி அவங்க கணக்க திருப்பி அடைக்க சொல்றது தான் சரி. அவர் தங்கமானவர்தான் சார். ஆனா அவரால இனியும் இந்த மேனேஜர மாத்தாம இந்த மில்ல நடத்த முடியும்னு எனக்கு தோனல சார். ஏற்கனவே அவர் ஹார்ட் பேஷண்ட். வயசு வேற எழுபதாவப் போகுது. ஒரேயொரு பொண்ணு. அதுவும் வெளி நாட்டில செட்டிலாயிருச்சி. ஒய்ஃபும் இல்ல. இவர் என்ன ட்ரை பண்ணாலும் இந்த மேனேசர் வேலைய விட்டுட்டு போக மாட்டார் சார். ஏற்கனவே அந்த வயசானவருக்கப்புறம் நாந்தான் இந்த மில்லுக்கு வாரிசுன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டிருக்கார்னு கேள்வி.’

அவர் சொன்னதெல்லாம் நான் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான் என்றாலும் அவருடைய மகிழ்ச்சிக்காக, ‘அப்படியா எனக்கு தெரியாதே.. ஒங்களுக்கு இப்படி இதெல்லாம்..’ என்று சொல்ல அவர் சந்தோஷத்துடன் மேலும் சில விவரங்களை அள்ளி வீசினார்.

அவருடைய மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாத நான் அவர் தொடர்ந்து கூறியவற்றை வேறு வழியில்லாமல் கேட்டும் கேட்காமலும் அமர்ந்திருந்தேன்.

அந்த மில் முதலாளியை முதன் முறை சந்தித்தபோதே இப்போது என்னுடைய உதவியாளர் கூறிய எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் என்னிடம் கூறியிருந்தார். ‘எனக்கு ஆண் வாரிசுன்னு ஒருத்தனும் இல்லய்யா. அதான் எங்க ஊர், என் சாதிய சேர்ந்த பயன்னு கேள்விப்பட்டதும் சேத்துக்கிட்டேன். படிச்சி வேற இருக்கான். ஒரு மில்லுல வேல பாத்த அனுபவமும் இருக்கு. இப்ப என்னடான்னா மில்லுல நா அவன் சித்தப்பான்னு சொல்லிக்கிட்டு அலையறான். என்னைய என்ன செய்ய சொல்றீங்க? எனக்கும் இவனெ விட்டா வேற ஆளும் இல்ல.. மருமகனுக்கு இதுலெல்லாம் எந்த பிடிப்பும் இல்ல. மாச சம்பளத்துக்கு வேலை செஞ்சா போறும் நினைக்கார். பெரிய எடத்து பிள்ளை.. என்னாலயும் வற்புறுத்த முடியலய்யா.. அதான் போற வரைக்கும் போகட்டும்னு இருக்கேன். ஒங்க பாங்க்ல வாங்குன லோனுக்கு ரெண்டு மூனு மடங்கு மேல அந்த மில் எடமே போகும்யா. அப்படியே எனக்கு ஏதாச்சும் ய்ட்டாலும் ஒங்க லோன் பணத்த ஒங்களால எடுத்துறமுடியும்.. கவலப்படாதீங்க.’ என்றதை நினைத்துப் பார்த்தேன்.

அவர் நம்பி வைத்த ஆள் இப்படியொரு மோசடி வேலையில் ஈடுபட்டிருப்பது அவருக்கு தெரிந்திருக்குமா என்றும் நினைத்தேன். எனக்கு ஒருவரை பார்த்ததுமே எடை போட்டுவிடமுடியும் என்று நான் நினைத்திருந்தது உண்மையானால் இது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இல்லையென்றால் முதல் முறையாக என்னுடைய கணிப்பில் நான் தோற்றுப் போனேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அலுவலகத்திற்கு திரும்பியதும் என்னுடைய உதவியாளரும் நானும் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த பஞ்சு மாதிரிகளை ஆராய்ந்தோம். பஞ்சு வகைகளை தரம் பார்க்கும் தகுதி எங்களைப் போன்ற வங்கி அதிகாரிகளுக்கு இல்லையென்பதால் சாதாரணமாக இதற்கென தகுதி வாய்ந்த சிலரை அணுகுவதுண்டு. அத்தகைய ஒருவர் மதுரையிலும் இருந்தார்.

என்னுடைய உதவியாளரை அவரிடம் நாளை இவற்றுடன் அனுப்புவதெனவும் அவருடைய கருத்தைக் கேட்ட பிறகு மேற்கொண்டு என்ன செய்யலாம் என தீர்மானிப்பதெனவும் முடிவு செய்துவிட்டு ஆலையின் கிடங்கில் இருந்த மூடைகளுக்கும் அவர்களுடைய முந்தைய அறிக்கையில் குறிக்கப் பட்டிருந்த மூடைகளுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை வைத்து அவற்றின் மதிப்பையும் கணக்கிட்டோம். குறைவாக இருந்த சரக்கிற்கு ஈடான தொகையை ஒரு வாரத்திற்குள் அடைக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை தயார் செய்துக்கொண்டு வர என்னுடைய உதவியாளரை பணித்தேன்.

ஆனால் அதை விட முக்கியமாக அவிழ்ந்து விழுந்த மூடையிலிருந்த தரம் குறைந்த பஞ்சு இன்னும் எத்தனை மூடைகளில் இருக்குமோ என்ற கவலை என்னை ஆட்கொண்டது. இத்தகைய தில்லுமுல்லுக்கு ஆலையின் உரிமையாளர் நிச்சயம் பொறுப்பாயிருக்க மாட்டார் நினைத்தேன்.

அது உண்மையாயிருக்கும் பட்சத்தில் இவ்விஷயத்தை அவரிடம் உடனே தெரிவிக்க வேண்டாமா என்றும் நினைத்தேன். இது நிச்சயம் மேலாளருடைய வேலையாய்த்தான் இருக்கும். ஏனெனில் கடந்த ஆறுமாதங்களாக மூடிக்கிடந்த ஆலைக்கு உரிமையாளர் வாரம் இருமுறை மட்டுமே சென்றுவந்ததாக அவரே என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார்.

அலுவலகம் திரும்பியதுமே இவ்விஷயத்தை உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நான் பிறகு, வேண்டாம் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று அடுத்த நாளைக்கு தள்ளிப்போட்டேன், அந்த முடிவு எத்தனை மன நிம்மதியை எனக்கு பின்வரும் நாட்களில் கொடுக்கப் போகிறது என்பதை அறியாதவனாய்..

தொடரும்

12 comments:

துளசி கோபால் said...

பயங்கரமாப் போகுது உங்க அனுபவம்.

பாவம் அந்த ஓனர்.

இப்படித்தாங்க கஷ்டப்பட்டு செஞ்ச வேலை/ஆலை/ தொழில் இதை எல்லாம் தொடர்ந்து கவனிக்க ஆள் இல்லேன்னா அம்புட்டும் அழிஞ்சு போறது மட்டுமில்லை,ஏமாத்துக்காரன் கையில் அகப்பட்டுக்கிடுது(-:

tbr.joseph said...

வாங்க துளசி,

பாவம் அந்த ஓனர்.

இப்படித்தாங்க கஷ்டப்பட்டு செஞ்ச வேலை/ஆலை/ தொழில் இதை எல்லாம் தொடர்ந்து கவனிக்க ஆள் இல்லேன்னா அம்புட்டும் அழிஞ்சு போறது மட்டுமில்லை,ஏமாத்துக்காரன் கையில் அகப்பட்டுக்கிடுது//

உண்மைதான். இப்படி பல பாதிக்கப்பட்ட அப்பாவி உரிமையாளர்களை என்னுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறேன். என்ன செய்வது? இதுதான் நிதர்சனம்.

ஜயராமன் said...

அழகாகத்தான் கதை சொல்கிறீர்கள்.

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவில் ஒரு கொக்கி போடவும் மறப்பதில்லை. மேலும் வரட்டும். பார்க்கலாம். இன்னும் என்ன நடக்குது என்று!

நன்றி

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

மேலும் வரட்டும். பார்க்கலாம். இன்னும் என்ன நடக்குது என்று!//

இன்னும் ரெண்டு எப்பிசோட்தான்:)

அருண்மொழி said...

//இன்னும் ரெண்டு எப்பிசோட்தான்:) //

:-(

இரண்டாம் பாகம் எப்போது ஆரம்பிக்கும்? சூரியனாவது தொடர்ந்து வருமா?

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

இரண்டாம் பாகம் எப்போது ஆரம்பிக்கும்?//

1.11.2006 அன்று..

ஆனால் வாரம் ஒன்றோ இரண்டோ பதிவுகள் கடந்து வந்த பாதை தொடரில் வரும்..

சூரியனாவது தொடர்ந்து வருமா?//

திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து உதிக்கும்..

Sivaprakasam said...

<== கை துடைக்க உபயோகப்படுத்தும் வேஸ்ட் காட்டன் எனப்படும் ஒருவகை தரம் குறைந்த பஞ்சு. ==>
இது எதிர்பார்த்ததுதான்.

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

இது எதிர்பார்த்ததுதான்.//

அப்படியா? நீங்க விவரமான ஆள்தான்:)

sivagnanamji(#16342789) said...

//இன்னும் ரெண்டு எபிசோட்தான்//

கொக்கி திலகம்!

நல்லா ரெஸ்ட் எடுத்து உடல் நலத்தை
தேத்திக்குங்க

G.Ragavan said...

நல்ல வாயன் சம்பாதிச்சத நார வாயன் உக்காந்து திங்குறதுன்னு சொல்றாங்களே! அது இதுதான் போல. என்னவோ...அடுத்து என்ன நடந்ததோ!

போன பதிவப் படிச்சிட்டு கஞ்சா கிஞ்சா கடத்துறானோன்னு நெனச்சேன். அந்த அளவுக்கு அந்தாளு போகாததும் ஒரு விதத்துல நல்லதுதான்.

tbr.joseph said...

வாங்க ஜி!

கொக்கி திலகம்!//

பட்டம் நல்லாதான் இருக்கு:))

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கஞ்சா கிஞ்சா கடத்துறானோன்னு நெனச்சேன்.//

எல்லா மூடைகளையும் நாங்க பாக்கலையே.. அதையும் வச்சிருந்தாரோ என்னவோ..

அந்த மனுஷன் அவ்வளவு மோசமானவரா இருக்கமாட்டார்னு நினைக்கேன்.