22 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 197

ஆலையின் மேலாளரும் அவருடைய அலுவலக பணியாட்களும் மட்டுமே இருந்தனர்.

மேலாளரைப் பார்த்த முதற் பார்வையிலேயே அவரை எனக்கு பிடிக்காமற் போனது.

ஆலை உரிமையாளர் இவரை தன்னுடைய உறவினர்களுள் ஒருவர் என்று குறிப்பிட்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். அவருடைய உருவத்திற்கோ அல்லது குணத்திற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருந்தார்.

உரிமையாளரைப் பார்த்ததுமே ஒருவித அலாதியான மரியாதை தோன்றியது என்றால் மேலாளரைப் பார்த்ததுமே ஒருவித அச்சமே என்னுள் தோன்றியது.

இவரால் நிச்சயம் உரிமையாளருக்கு பிரச்சினையே வர வாய்ப்பிருக்கிறது என்றும் என் உள் மனது எச்சரித்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காரிலிருந்து இறங்கும் நேரத்தில், ‘சார் இவர் ஒரு மாதிரியான ஆளு.. சாக்கிரதையா பேசுங்க சார்.’ என்று என் காதில் கிசுகிசுத்த என்னுடைய கடை நிலை அதிகாரியைப் பார்த்தேன்.

‘ஏன் அப்படி சொல்றீங்க?’ என்றேன்.

‘சார் நானும் நம்ம கணேசனும் (என்னுடைய கிளை குமாஸ்தாக்களுள் ஒருவர். உள்ளூர்வாசி) ஆறு மாசத்துக்கு முன்னால கொடவுன் ரிலீசுக்கு வந்திருந்தப்போ இந்த மனுசன் ரொம்பவும் இல் ட்ரீட் பண்ணார் சார். அதான் சொல்றேன்.’ என்றவாறு ஓரக்கண்ணால் ஆலையின் முகப்பு வாசலில் நின்றிருந்த மேலாளரையும் அவருக்கருகில் நின்றிருந்த அவருடைய உதவியாளர்களையும் பார்த்தார்.

என்னுடைய அதிகாரி அவரைப் பார்த்த பார்வையிலேயே ஒருவித அச்சம் கலந்திருப்பதைக் கவனித்த நான் ‘நாமளும் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்’ என்று முடிவு செய்தேன்.

நாங்கள் இருவரும் வாகனத்திலிருந்து இறங்கியும் எங்களை வரவேற்க எவ்வித முனைப்பும் காட்டாத மேலாளர் நாங்கள் அவரை நெருங்கி என்னை அறிமுகப்படுத்தியதும் போனால் போகிறதென்று லேசாக புன்னகை செய்தார். ‘இப்பத்தான் சித்தப்பா ஃபோன் செஞ்சாங்க.’ அதாவது நான் வெறும் மேலாளர் அல்ல உரிமையாளரின் உறவினரும் கூட என்பதை சொல்லாமல் சொன்னார்.

‘கொஞ்சம் மில்ல சுத்தி பாக்கணுமே’ என்றேன்.

மேலாளர் தன்னுடைய உதவியாளர்களைப் பார்த்தார். கண்ணால் ஏதோ சைகை செய்ததுபோல் தெரிந்தது. கண்டுக்கொள்ளாமல் அவருடைய பதிலுக்கு காத்திருந்தேன்.

‘அதுக்கென்ன சார் பாக்கலாமே. அஞ்சாறு மாசமா லேபர் ஸ்டிரைக்.. மெஷின் மெய்ட்டனன்ஸ் ஸ்டாஃப் மட்டும்தான் மில்லுல இருப்பாங்க. வாங்க காமிக்கேன்.’ என்றவாறு தன்னுடைய உதவியாளர்கள் புடை சூழ என்னையும் என்னுடைய அதிகாரியையும் அழைத்துக்கொண்டு பேருக்கு ஆலையின் சில பகுதிகளை மட்டும் காண்பித்தார்.

மேலாளர் குணத்தில் எப்படியோ வேலையில் திறமைசாலி என்பது ஆலையை அவர் காட்டிய விதமே கூறியது. எந்த இடத்திலும் தூசு, தும்பு ஏதும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது. ஆலையின் உட்புறமும் வெளிப்புறமும் ஆறுமாதம் செயல்படாமல் இருந்த ஆலை என்றால் நம்ப முடியாத அளவுக்கு மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வந்ததை கண்கூடாகப் பார்த்தேன்.

‘எனக்கு சுத்தம்ங்கறது ஒரு மாதிரி அப்செஷன் சார். அதுல எந்தவித காம்ப்ரமைசும் செஞ்சிக்க மாட்டேன். சித்தப்பாவும் அப்படித்தான். நா மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடிச்சி எம்.பி.ஏவும் பண்ணிருக்கேன். பம்பாய்ல ஒரு ஃபேமஸ் மில்லுல இருந்த அனுபவமும் இருக்கு. சித்தப்பா கூப்டதும் அத விட்டுட்டு இங்க வந்துட்டேன். அங்க நான் பார்த்த அதே மாதிரி இங்கயும் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா வேலை செய்யாமயே சம்பளம் வாங்கணும்னு நினைக்கற ஒர்க்கர்ஸ் அத ஏத்துக்கல. அத்தோட அவங்களுக்கு சித்தப்பா மேல ஏதோ மனவருத்தம் இருக்கும் போல. நான் ஸ்ட்ரிக்டா இருக்கறத சாக்கா வச்சி ஸ்டிரைக் பண்றாங்க. பாப்போம்.. எவ்வளவு நாளைக்கு வெளியில நிப்பாங்கன்னு..’

அவருடைய குரலில் தொனித்தது ஆலையின் தற்போதைய நிலைக்கு வருத்தமாக தெரியவில்லை. இந்த வேலை நிறுத்தத்திற்கும் எனக்கும் எவ்வித காரணமும் இல்லை என்கின்ற அலட்சியமாகத்தான் தெரிந்தது.

ஆலையின் சில பகுதிகளை மட்டும் எனக்கு காண்பித்துவிட்டு, ‘என்னுடைய காபினுக்கு போலாமா சார்?’ என்றவரை வியப்புடன் பார்த்தேன்.

‘ஒங்க ஸ்டாக் வச்சிருக்கற கொடவுன பாக்கணுமே?’

மேலாளரின் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த கலக்கத்தை நான் மட்டுமல்ல என்னுடைய அதிகாரியும் கவனித்தோம். அவர் சமாளித்துக் கொண்டு தன்னுடைய உதவியாளரைப் பார்த்தார். ‘சார் நீங்க போய் என் காபின்லருக்கற ஸ்டாக் ரெஜிஸ்டரைக் கொண்டாங்க..’ என்றார்.

பிறகு திரும்பி, ‘ஒங்களுக்கு கொடவுன காட்டக் கூடாதுன்னு இல்ல சார். அங்க எப்படி இருக்கோ தெரியல. நான் அங்க போயி ரெண்டு வாரத்துக்கு மேல ஆகுது. நீங்க முன் கூட்டியே சொல்லியிருந்தா க்ளீன் பண்ணி வச்சிருப்பேன். அதான் யோசிக்கேன்..’ என்றார் தயக்கத்துடன்.

சற்று முன் வரை அவர் முகத்தில் தெரிந்த ஒருவித ஆணவம் முற்றிலும் மறைந்து போய் முகத்தில் ஒருவித கலக்கம் தெரிந்தது.

நான் சிரித்தவாறு, ‘கொடவுன் சுத்தமாருக்காங்கறதா சார் எனக்கு முக்கியம்.. ஆறு மாசத்துக்கும் மேல எந்த வித மூவ்மெண்ட்டும் இல்லாம இருக்கற கொடவுன்ல எங்க பேங்க் லோனுக்கு ஈடா ப்ளெட்ஜ் செஞ்சிருக்கற ஸ்டாக் எப்படியிருக்குங்கறதுதான சார் முக்கியம்.. ஒங்க அசிஸ்டெண்ட் ஸ்டாக் ரெஜிஸ்டர் கூட எடுக்க வேணாம்.. எங்கட்டருக்கற ஸ்டேட்மெண்ட் காப்பியிலருக்கற ஸ்டாக் இருக்குதான்னு செக் பண்ணாலே போறும்.. ஸ்டாக் முழுசையும் செக் பண்ணணும்கூட இல்ல.. ஒரு ரேண்டெம் (Random) செக்தான் பண்ணப் போறேன்.. நீங்க வாங்க..’ என்றவாறு என்னுடைய அதிகாரியை அழைத்துக்கொண்டு முன்னே செல்ல அவர் வேறு வழியில்லாமல் என்னை பின்தொடர்ந்தார்.

நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு நிமிட நடை தொலைவில்தான் இருந்தது அந்த பிரம்மாண்டமான கிடங்கு. சுமார் பத்தாயிரம் சதுர அடி பரப்பில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பருத்தி பஞ்சு மூட்டைகளிலிருந்து வந்த ஒருவித மணம் என்னை ஒரு நொடி திக்குமுக்காட வைத்தது. ஏற்கனவே எனக்கு Dust Allergy இருந்ததால் மூச்சு திணறி சட்டென்று கிடங்கிற்கு வெளியே வந்து நின்றேன்.

‘என்ன சார் என்ன ஆச்சி?’ என்றார் என்னுடன் வந்த அதிகாரி. ‘Are you allergic to dust Sir?’ என்றார்.

ஆமாம் என்று தலையை அசைத்தேன்.

‘அப்படீன்னா நீங்க இங்கயே நில்லுங்க சார். காட்டன் ஸ்மெல் கூட ஒங்களுக்கு அலர்ஜியாத்தான் இருக்கும். நீங்க எந்த போர்ஷன் ஸ்டாக்க வெரிஃபை பண்ணணும்னு சொல்லுங்க, நான் வெரிஃபை பண்றேன்.’ என்றார்.

நான் கிடங்கை விட்டு வெளியேறி என்னுடைய அதிகாரியிடம் உரையாடியதை சற்று தொலைவிலிருந்து கவனித்த மேலாளரின் முகம் இருண்டுப் போவதைக் கவனித்தேன். எங்கள் இருவருடைய உரையாடலின் காரணத்தை ஏதோ தவறாக புரிந்துக்கொண்டு கலக்கமடைகிறார் என்பதை உணர்ந்த நான் அங்கிருந்த சரக்கில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன். ஆகவே என்னுடைய மூச்சுத் திணறல் சற்று கட்டுக்குள் வந்ததும் ஒரு நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியே விட்டேன்.. நெஞ்சு லேசானதுபோல் இருந்தது..
‘நீங்க வாங்க.. நான் காட்டற மூட்டைய மட்டும் திறந்து கொஞ்சம் காட்டன் ரோல்ஸ் சாம்பிள் கொண்டு வாங்க. நான் பார்த்துட்டு சொல்றேன்..’ என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு மேலாளரை நெருங்கினேன்.

என்னுடைய அதிகாரி கொண்டு வந்திருந்த, மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுவனம் அளித்திருந்த சரக்கு அறிக்கையிலிருந்த சிலவற்றைக் காண்பித்து அவற்றை என்னுடைய உதவியாளருக்கு காட்டுமாறு கூறினேன்.

அவருடைய முகத்தில் கலக்கம் தெரிந்தாலும் நான் சுட்டிக் காட்டிய சரக்குகள் இருந்த பகுதிக்கு என்னுடைய உதவியாளரை அழைத்துச் சென்றார். கிடங்கில் மூட்டைகளுக்கு மேலிருந்த ஒரு பிரம்புக் கூடையைக் கையில் எடுத்துக்கொண்ட என்னுடைய உதவியாளர் நான் குறிப்பிட்டிருந்த மூட்டைகளில் இருந்த பருத்தி பஞ்சு உருண்டைகளில் சிலவற்றை அவற்றில் வைத்துக் கொண்டு செல்வதை நான் கிடங்கின் வாசலில் கிடந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு கவனித்தேன்.

சுமார் கால் மணி நேரத்துக்குப் பிறகு நான் அமர்ந்திருந்த இடத்தை வந்த என்னுடைய உதவியாளர் கையிலிருந்த கூடையைப் பார்த்ததுமே எனக்கு விவரம் லேசாகப் புரிந்தது. இருப்பினும் மேலாளரைப் பார்த்து, ‘சார் இந்த சாம்பிள எல்லாம் தனித்தனியா அதனதன் க்ரேட் பிரகாரம் லேபிள் பண்ணி ஒரு ப்ளாஸ்டிக் பேக்ல போட்டு குடுங்க. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்.’ என்றேன்.

பிறகு என் உதவியாளரிடம், ‘சார்.. சாம்பிள்ஸ் இது போறும். நீங்க பேக்ஸ மட்டும் கடகடன்னு எண்ணி இதோட கம்பேர் பண்ணிருங்க. நாம போலாம்.’ என்றேன்.

கிடங்கிலிருந்த சுமார் ஐயாயிரம் மூட்டைகளையும் எண்ணி முடிக்க அவருக்கு அரை மணி நேரத்துக்கும் கூடுதலாகவே எடுத்தது. அவர் எண்ணி முடிக்க அவருடன் சென்ற ஆலை மேலாளரும் அவருடைய உதவியாளரும் நான் கையோடு கொண்டு வந்திருந்த அறிக்கையை சரிபார்த்தனர்.

என்னுடைய உதவியாளர் அவரிடம் ஏதோ சொல்வதையும் அதை ஆலை மேலாளர் கோபத்துடன் மறுப்பதையும் நான் இருந்த இடத்திலிருந்தே கவனித்தேன். சற்று நேரத்தில் என்னுடைய உதவியாளர் மேலாளருடைய கரங்களிலிருந்த அறிக்கையை பிடுங்கி தன்னுடைய பேனாவால் ஏதோ எழுதுவதையும் மேலாளர் அவரை கெஞ்சுவதையும் காண முடிந்தது. ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த நான் வருவது வரட்டும் என்ற நினைப்பில் அவர்களை நெருங்கினேன்.

‘என்ன சார் எனி ப்ராப்ளம்?’ என்ற என்னுடைய குரலைக் கேட்டு அவர் திரும்பி என்னைப் பார்த்தார்.

‘ஆமா சார். எல்லா க்ரேட்லயும் இவங்க ஸ்டேட்மெண்ட்ல மென்ஷன் செஞ்சிருக்கற பேக் நம்பர்ஸ் இல்ல.. டென் டு ஃபிஃப்டீன் பர்சண்ட் கம்மியா இருக்கு.’ என்றார் என்னுடைய உதவியாளர்.

‘சரி.. நீங்க எல்லாத்தையும் கவுண்ட் பண்ணி முடிங்க. அப்புறமா பேசிக்கலாம்.. இல்லன்னா வேலை முடியாது..’ என்றவாறு என்னிடம் பேச முயன்ற மேலாளரைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மூச்சு திணறல் ஏற்படுவதற்கு முன் வெளியே சென்றுவிடலாம் என்ற நோக்கத்துடன் வாசலை நோக்கி விரைய அவசரத்தில் எனக்கு முன்னே தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகளில் கால் இடறி விழப் போய் விழாமல் இருக்க என் இடப்புறத்தில் ஆளுயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகள் அப்படியே சரிந்து விழுந்து என்னை சிறைப்படுத்தின.

அவற்றிலிருந்து கிளம்பிய பருத்தி தூசு என்னை பாதிக்காமல் இருக்க கைக்குட்டையால் என்னுடைய மூக்கை கெட்டியாக மூடிக்கொண்டேன்.

வாசலில் நின்றுக்கொண்டிருந்த மேலாளரின் உதவியாளர்கள் பதற்றத்துடன் ஓடி வந்து எனக்கு முன்னால் கிடந்த சுமார் ஐம்பது மூட்டைகளை அகற்றுவதில் தீவிரமாயினர்.

‘டேய், டேய் பார்த்து மூட்டை பிஞ்சிரப்போவுது.. சாருக்கு ஏற்கனவே டஸ்ட் அலர்ஜி இருக்கு போலருக்கு.. மூட்டை பிஞ்சி காட்டன் வெளிய கொட்டுனா கேக்கவே வேணாம்..’ என்றார் மேலாளர்.

அவருடைய குரலில் அளவுக்கு அதிகாமாக தெரிந்த கரிசனம் என் கவனத்தைக் கவர்ந்தது. நான் வியப்புடன் அவரை நோக்கி திரும்பிய அதே நேரத்தில் தொழிலாளர் ஒருவரின் கையிலிருந்த மூட்டை கைத்தவறி கீழே விழுந்து வாய் பிளக்க வெளியில் வந்து விழுந்தவற்றைப் பார்த்து மலைத்துப் போய் நின்றேன்..

கிடங்கில் என்னுடன் நின்றிருந்த என்னுடைய உதவியாளரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்.

தொடரும்..

12 comments:

துளசி கோபால் said...

தங்கமா?

tbr.joseph said...

வாங்க துளசி,

தங்கமாருந்தாத்தான் பரவால்லையே..

sivagnanamji(#16342789) said...

வீடுகட்டும்பொழுது... வேலைக்காரர்களின் சாப்பாட்டு வாளியின்மேல் "எதேச்சையாக" உங்க
கால்பட்டு அது திறந்து கொண்டதே
அதுபோல இப்ப மூடையும் எதேச்சையாக திறந்து கொண்டதா?

அருண்மொழி said...

பாவம் சார் உங்க வாடிக்கையாளர்கள். என்ன மறைத்தாலும் பிச்சி பிராய்ந்து விடுகிறீர்கள்.

வடுவூர் குமார் said...

ஏங்க உங்க பக்கத்துல நான் நின்னாலும் எனக்கு தும்மல் வரவில்லையே??
உங்க எழுத்து நடை நாங்களும் உங்க பக்கத்தில் இருப்பது போல் உள்ளது.
இந்த மாதிரி எழுத ...இன்னும் எவ்வளவு மாதம்..இல்லை இல்லை எவ்வளவு எழுத வேண்டுமோ? என்று கவலையாக இருக்கு.

tbr.joseph said...

வாங்க ஜி!

இருந்தாலும் ஒங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தி கூடாது சார். முப்பது வருசமா வகுப்புகள் எடுத்த பழக்கமாச்சே. அதான் தூத்துக்குடி வாளியையும் மதுரை மூடையையும் சேர்த்து முடிச்சு போட்டுட்டீங்க.

நீங்க சொன்னா மாதிரி வாளி எதேச்சையா என் கால் பட்டு திறந்தது. மூடை வேறொரு ஆள் கால் பட்டு திறந்தது. ஆனால் வாளியும் சரி மூடையும் சரி திறந்து குற்றவாளியைக் காட்டிக் கொடுத்ததென்னவோ உண்மை!

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

என்ன மறைத்தாலும் பிச்சி பிராய்ந்து விடுகிறீர்கள். //

அப்படி இல்லீங்க. குத்தம் செய்றவங்க நாமதான் புத்திசாலி நினைக்கறாங்க. அதான் பிரச்சினையே..

tbr.joseph said...

வாங்க குமார்,

உங்க எழுத்து நடை நாங்களும் உங்க பக்கத்தில் இருப்பது போல் உள்ளது.//

அப்படியா? நன்றி:)

G.Ragavan said...

உள்ள என்ன போதைப் பொருள் இருந்துச்சா?

இல்ல சாமி செலகள எதுவும் வெச்சிருந்தாங்களா? போதைப் பொருளா இருக்கத்தான் வாய்ப்பு நெறைய!

sivagnanamji(#16342789) said...

எப்பேர்ப்பட்ட குற்றவாளியும் ஏதொ ஒரு தடையத்தை விட்டுச்செல்கின்றான்-என்னைப் பிடிக்க
முடிந்தால் பிடித்துப்பார் என்று சவால்
விடுவது போல!
இதுதானே RUSSIAN SYNDROME என்பது?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உள்ள என்ன போதைப் பொருள் இருந்துச்சா?

இல்ல சாமி செலகள எதுவும் வெச்சிருந்தாங்களா? போதைப் பொருளா இருக்கத்தான் வாய்ப்பு நெறைய! //

அடடடடா..

ஆனால் அந்த மேலாளர் அத்தனை மோசமானவர் அல்ல..

tbr.joseph said...

வாங்க ஜி!

எப்பேர்ப்பட்ட குற்றவாளியும் ஏதொ ஒரு தடையத்தை விட்டுச்செல்கின்றான்-என்னைப் பிடிக்க
முடிந்தால் பிடித்துப்பார் என்று சவால்
விடுவது போல!//

என்ன ஜி என்னென்னவோ சொல்றீங்க?

இது ஒரு சாதாரண பேங்கரோட அனுபவங்கள்.. ஒரு போலீஸ் அதிகாரியோடதில்ல:)