04 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 193

சாதாரணமாகவே திருட்டுத்தனம் செய்கிறவர்கள் அதை மறைப்பதற்கு மேலும் மேலும் திருட்டுத்தனம் செய்வார்கள். அதாவது தாங்கள் செய்த திருட்டை மறைக்க உண்மைக்கு புறம்பாக எதையாவது சொல்லிக்கொண்டே போவார்கள்.

அதேபோல்தான் இந்த வாடிக்கையாளரும். அவருடைய கடையிலிருந்து கிடங்கு நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது. அங்கு சென்று சேரும் வரையில் என்னென்னவோ சொல்லி என்னுடைய ஆய்வைத் தள்ளிப்போட பலவாறு முயன்றார்.

ஆனால் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்த நான் அவர் கூறியவற்றை பொருட்படுத்தாமல் கிடங்கை அடைந்ததும் கடையில் பூட்டு இருக்கிறதா என்று பார்த்தேன். அப்படியே இருந்தது. சரி, பூட்டை உடைக்காமல் இவர்களால் எப்படி சரக்கை எடுத்திருக்க முடியும் என்று நினைத்தேன்.

நான் நினைத்தது எத்தனை முட்டாள்தனம் என்பது பூட்டை திறந்து உள்ளே இருந்த விளக்கை போட்டதும்தான் தெரிந்தது. அந்த கிடங்கிலிருந்து கடந்தமுறை சரக்கு எடுத்த நேரத்தில் நானே நேரில் சென்றிருந்ததால் விளக்கைப் போட்டதுமே கடந்தமுறை நான் பார்த்த சரக்கில் பாதிக்கும் மேல் குறைந்திருப்பதைக் காண முடிந்தது.

நான் அதிர்ச்சியில் கிடங்கிலிருந்த அனைத்து விளக்குகளையும் போட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை கிடங்கைச் சுற்றி வந்தேன். நான் கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தை பார்த்து சரிபார்க்க தேவையே இல்லாமல் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்த அந்த குறைபாட்டை ஏதோ அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தார் உரிமையாளர்.

தன்னுடன் வந்திருந்த பணியாட்களை முறைத்தார். ‘என்னடா இது சரக்கு குறைஞ்சா மாதிரி இருக்கு? மேனேஜர கூட்டிக்கிட்டு வா.. போ..’

நான் கேட்க வேண்டிய கேள்வி அது என்று நினைத்தேன். ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தாலும் எப்படி செய்தார்கள் என்றுதான் புரியாத புதிராக இருந்தது.

கிடங்கை மீண்டும் சுற்றி வந்தேன். முன் வாசற்கதவைத் தவிர வேறு வாசலோ கதவோ இருப்பதாக தெரியவில்லை. ஜன்னல்களும் உள்ளிருந்து மூடப்பட்டு குறுக்கே மரச்சட்டங்களைப் பொருத்தியிருந்தோம். அப்படியே அவற்றை திறந்தாலும் பழைய காலத்து மாடலில் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் நிச்சயம் சரக்குகளை வெளியேற்ற அனுமதித்திருக்க முடியாது.

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் விரைந்துச் சென்று வாசற்கதவில் தொங்கிக்கொண்டிருந்த என்னுடைய வங்கியின் பூட்டை மீண்டும் ஒருமு¨றை கையிலெடுத்து பார்த்தேன்.  ஊஹ¤ம்.. கள்ளப்பூட்டு இட்டு திறக்கப்பட்டிருந்ததற்கு எந்தவிதமான அடையாளமும் காணப்படவில்லை.

ஆனால் பூட்டு தொங்கிய தாழ்ப்பாள்!

அதை கதவோடு சேர்த்து பொருத்தியிருந்த ஸ்கூரு கழற்றப்பட்டிருந்த அடையாளம் தெரிய கோபத்துடன் எனக்கு பின்னால் நின்றுக்கொண்டிருந்த கடை உரிமையாளரைப் பார்த்தேன்.

மேற்கொண்டு ஏதும் பேசாமல் கிடங்குக்குள் இருந்த தொலைப்பேசியை எடுத்து என்னுடைய உதவி மேலாளர்களுள் ஒருவரை அழைத்து ஒரு குமாஸ்தாவையும் அழைத்துக்கொண்டு கிடங்கிற்கு உடனே புறப்பட்டு வரச்சொன்னேன்.

‘சார் நா சொல்றத கேளுங்க. இந்த பயலுவ மேனேசர் சொன்னத கேட்டு செஞ்ச வேலையிது. எனக்கே நேத்துத்தான் தெரியும். ரெண்டு நாளைக்குள்ள புது சரக்கு வந்ததும் திருப்பி வச்சிரலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க.’ என்ற உரிமையாளரை நிதானமாக பார்த்தேன்.

‘சரிங்க. நீங்க சொன்னா மாதிரியே ஒங்களுக்கு தெரியாம ஒங்க மேனேஜர் செஞ்சாருன்னே வச்சிக்குவம். ஒங்களுக்கு தெரிய வந்ததுமே என்ன செஞ்சிருக்கணும்? அதுக்குண்டான பணத்த ஒடனே வந்து கட்டியிருக்கணும்.. அதுவும் முடியலன்னா என்கிட்ட வந்து சொல்லியிருக்கணுமில்ல? எப்ப அத நீங்க செய்யலையோ அப்பவே இதுக்கு நீங்களும் உடந்தைன்னுதான் தெரியுது. சாரி எனக்கு தெரியாம நடந்திருச்சிங்கறத என்னால ஒத்துக்க முடியாது. நான் இன்ஸ்பெக்ஷனுக்குன்னு வந்தப்போக் கூட இந்த விஷயத்த நீங்க எக்ஸ்ப்ளெய்ன் பண்ணாம நேரம் சரியில்ல, நாள் சரியில்லன்னு.. சரி சார், எவ்வளவு சரக்கு நீங்க எடுத்திருக்கீங்கன்னா கணக்கு வச்சிருக்கீங்களா?’

அவர் தடுமாறினார். பிறகு தலையைக் குனிந்துக்கொண்டார்.

‘சோ.. ஒங்களுக்கு எப்பல்லாம் சரக்கு தேவைப்பட்டுதோ அப்பல்லாம் வந்து தாழ்ப்பாள அப்படியே தூக்க வேண்டியது. சரக்க எடுத்துக்கிட்டு மறுபடியும் பொருத்திர வேண்டியது. அதானே நடந்துக்கிட்டிருக்கு. நா போன தடவை குட்ஸ் ரிலீஸ் பண்ண வந்து ஏறக்குறைய ரெண்டு மாசம் ஆயிருக்கு. எனக்கும் பிராஞ்சில சில பிரச்சினைகள் இருந்ததால இந்த இடைப்பட்ட டைம்ல என்னால இன்ஸ்பெக்ஷனுக்கு வரக்கூட நேரமில்லாம போயிருச்சி... பிராஞ்சுக்கு பக்கத்துலருக்கற கடைதானேன்னு மெத்தனமா இருந்துட்டேன். அத்தோட ஒங்க கடையையும் அங்க நடக்கற பிசினசையும் பார்த்துட்டு ஒங்கள அளவுக்கதிகமா நம்பிட்டேன்னு நினைக்கேன்.’

நான் பேசிய தோரணை அவருக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது. ‘சார்.. நா ஏதோ திருடங்கறமாதிரி பேசாதீங்க. நான் இந்த பிசினஸ்ல இருபது வருசத்துக்கும் மேல இருந்தவன். ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிது. ரெண்டு வாரத்துக்குள்ள சரக்கு முழுசும் வேணும்னாங்க. டெலிவரி செய்ங்க. ஒடனே பேமேண்ட் குடுத்திடறோம்னு சொன்னதால இந்த முட்டாள்தனத்த முன்ன பின்ன யோசிக்காம செஞ்சிட்டேன். சரக்கு டெலிவரி செஞ்ச எடத்துலருந்து பேமெண்ட் வர டிலே ஆயிட்டதால பணத்த கட்ட முடியாம போயிருச்சி. அதப் போயி நீங்க பெரிசா எடுத்துக்கிட்டு.. இந்த பிசினஸ்ல இதெல்லாம் ரொம்ப சகஜம் சார்.. ஒங்களுக்கு வயசு பத்தாது சார். அதான் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டீங்க.’ என்றார்.

நான் அப்போதும் கோபப்படாமல், ‘சரி சார். நான் கொஞ்சம் ஜாஸ்திதான் பேசிட்டேன். நீங்க இப்ப சொன்ன கஸ்டமரோட டீட்டெய்ல்சும் அவருக்கு நீங்க டெலிவரி பண்ண குட்சோட டீட்டெய்ல்சும் குடுங்க. எங்க அசிஸ்டெண்ட் மானேஜர் வந்ததும் இங்க குறையற சரக்கும் நீங்க டெலிவரி பண்ண குட்சும் ஒத்துபோனா நா இத பெரிசு பண்ணாம விட்டுடறேன்.. ஒங்க மானேஜர கூப்ட்டு அந்த டீட்டெய்ல்செல்லாம் பத்து நிமிசத்துக்குள்ள கொண்டு வரச்சொல்லுங்க. நா இங்கயே வெய்ட் பண்றேன்.’ என்றேன்.

அவரால் இது சாத்தியமல்ல என்றும் அவர் சற்று முன் கூறிய காரணம் வெறும் சால்ஜாப்பு என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

அவரோ, ‘என்ன சார் நா சொல்றத நம்பாத மாதிரி தெரியுது. வேணாம் சார் விட்டுருங்க. எனக்கு ரெண்டு நா டைம் குடுங்க எடுத்த சரக்கோட தொகைய முழுசுமா கட்டிடறேன்.’ என்றார் வீம்புடன்.

நான், ‘போறாதுங்க. நான் முதல்ல அப்படி செஞ்சா போறும்னுதான் நினைச்சிக்கிட்டிருந்தேன். அதனாலதான் எங்க ஆஃபீஸ்லருந்து ரெண்டு பேர செக் பண்றதுக்கு வரச் சொன்னேன். ஆனா இப்ப மனச மாத்திக்கிட்டேன். நீங்க எங்க பேங்க்லருந்து எடுத்த ரெண்டு லோன் அக்கவுண்ட்சையும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள க்ளோஸ் செஞ்சிருங்க. இனிமேலும் ஒங்கள நம்பி கடன் குடுக்க நா தயாரா இல்லேங்க. இனி இந்த கொடவுன பூட்றதுல எந்த பிரயோசனமும் இல்ல. நீங்களே ஒங்க பூட்ட வச்சி பூட்டிக்குங்க. நான் வரேன்.’ என்று அவருடைய பதிலுக்கு காத்திராமல் கிளம்பினேன்.

ஆனால் அது அத்தனை எளிதாக முடியவில்லை. அவர் என்னுடைய முந்தைய மேலாளரை அழைத்து புகார் கூற அவர் என்னை அழைக்காமல் என்னுடைய வட்டார மேலாளரை அழைக்க அவர் என்னை அழைத்து, ‘என்ன டிபீஆர். ப்ராப்ளம்? அவர் நல்ல கஸ்டமர் ச்சே’ என்றார். நான் பொறுமையுடன் நடந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்தேன்.

சிறிது நேரம் எதிர்முனையிலிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, ‘சார். நான் செஞ்சதுல ஏதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க. அவர தொடர்ந்து Facilityஐ எஞ்சாய் பண்ண அலவ் பண்ண என்னால முடியாது சார்.’ என்றேன்.

‘நீங்க சொல்றது சரிதான் டிபிஆர். Ask him to repay the dues.’  என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

ஆனால் என்னுடைய வாடிக்கையாளரோ என்னுடைய நடவடிக்கைக்கு உள்நோக்கம் கற்பித்து என்னுடைய சேர்மனுடைய அலுவலகத்துக்கு நேரடியாக புகார் அனுப்பினார். என்னை மதுரை கிளைக்கு பரிந்துரைத்த சேர்மனோ அந்த புகாரை நிராகரித்து வாடிக்கையாளருக்கு அடுத்த ஒரு வாரத்தில் எழுதிய கடிதத்தில் நீங்கள் வங்கியிலிருந்து கடனாக பெற்ற தொகையை உடனே திருப்பி செலுத்திவிடுங்கள். இல்லையென்றால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டிப்புடன் எழுதி அக்கடிதத்தின் நகலை எனக்கும் அனுப்பி வைத்தார்.

ஆனால் வாடிக்கையாளர் அதற்கும் மசியாமல் தன்னுடைய வணிகத்தை சரிவர செய்யவிடாமல் நான் இடையூறாக இருந்ததாகவும் நடக்காத ஒரு காரியத்தை நான் நடந்ததாக கூறுவதாகவும் நான் அவ்வாறு கூறுவதற்கு உள்நோக்கம் இருப்பதாகவும் நான் எடுத்த நடவடிக்கையால் அவருடைய வணிகம் தடைபட்டு நிற்பதாகவும் அதனால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு வங்கியே பொறுப்பு என்றும் அவருடைய வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்ப விஷயம் விபரீதமானது.

அவர் ஒருவேளை வக்கீல் நோட்டீஸ் அனுப்பாமல் என்னுடைய சேர்மனுக்கு நேரடியாக தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு அனுப்பியிருந்தால் அவரும் தலையிட்டு கடன் கணக்குகளைத் தொடர்ந்து அனுபவிக்க சம்மதித்திருப்பார். ஆனால் என்னுடைய வாடிக்கையாளர் அனுப்பியிருந்த நோட்டீசில் சில தேவையில்லாத வார்த்தைகளை உபயோகித்திருந்ததால் என்னுடைய சேர்மன் வெகுண்டு வங்கியின் மிக மூத்த வழக்கறிஞரைக் கொண்டு சூடாக பதில் நோட்டீஸ் அனுப்ப என்னுடைய வாடிக்கையாளரின் வழக்கறிஞரே மிரண்டு போய் என்னை சந்திக்க வந்தார்.

‘சார், இந்த விஷயத்தோட முழு விவரமும் தெரியாம அவர் சொன்னத வச்சி மட்டுந்தான் நா நோட்டீஸ் அனுப்பினேன். இந்த விஷயத்த இனிமேலும் தொடர்றதுக்கு எனக்கும் சரி என் கஸ்டமருக்கும் சரி இஷ்டமில்ல சார். எனக்கு ஒரு மூனு மாசம் டைம் குடுங்க. வேற ஏதாச்சும் பேங்குல லோன் போட்டு ஒங்க லோன க்ளோஸ் பண்ணிடறோம்.’ என்றார்.

எனக்கும் இந்த விஷயம் முடிந்தால் போறும் என்றிருந்தது. அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டு அதை அப்படியே எழுத்து மூலம் அளிக்குமாறு கோரினேன்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் என்னுடைய வாடிக்கையாளர் கைப்பட எழுதிக்கொடுத்த கடிதத்தை புரிந்துரைத்து என்னுடை மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினேன்.

அவர்களும் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆறுமாத தவ¨ணையளித்தனர்.

குறிப்பிட்ட காலக்கெடு முடியும் முன்னரே அவரும் வேறொரு வங்கியிலிருந்த எடுத்த கடன் தொகையைக் கொண்டு எங்களுடைய கடனை முழுவதும் திருப்பியடைத்தார்.

தொடரும்

15 comments:

அருண்மொழி said...

என்ன சார் எப்போது பார்த்தாலும் "உங்க வயசு எனது அனுபவம்" என்றே சொல்லுகின்றனர். சின்ன வயதினர் சரியாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பு ஏன் அவர்களுக்கு வருகின்றது?

dondu(#4800161) said...

"இதைத்தான் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களைச் சொல்றது"ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

என்ன சார் எப்போது பார்த்தாலும் "உங்க வயசு எனது அனுபவம்" என்றே சொல்லுகின்றனர். சின்ன வயதினர் சரியாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பு ஏன் அவர்களுக்கு வருகின்றது? //

அதாவது இந்த மாதிரி தில்லுமுல்லு பண்றதுக்கும் ஒரு அனுபவம் வேணும் இல்லையா? அந்த அனுபவம் சின்ன வயசு ஆளுங்களுக்கு இருக்காதுன்னு அவங்க கணிப்பு. இந்த மாதிரி கேட்டு கேட்டு புளிச்சி போச்சிங்க. ஆரம்பத்துல கோபமா வரும்.. நாளடைவில பழக்கமா போயிருச்சி..

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

இதைத்தான் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களைச் சொல்றது"ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.//

சரியா சொன்னீங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கு கேக்கறவனெல்லாம் முட்டாள்னு நினைப்பு.

துளசி கோபால் said...

தோலிருக்க சுளை முழுங்கியா இருந்துருக்காரே !!!

கதவையேகூட கழட்டிப் பூட்டிருவார்.
இல்லையா?

tbr.joseph said...

வாங்க துளசி,

தோலிருக்க சுளை முழுங்கியா இருந்துருக்காரே !!!//

சாதாரண சுளையா? ஏறத்தாழ பத்து லட்ச ரூபா சரக்கையே இல்லே முழுங்கியிருந்தார்!

கதவையேகூட கழட்டிப் பூட்டிருவார்.
இல்லையா? //

ஆமா.. தாழ்ப்பாள கழற்ற வரலன்னா கதவையே கூட கழற்றியிருப்பார்!

srishiv said...

ஹா ஹாஹா
கதவையே கழற்றி இருப்பாரா? ;)
சார், இப்போ நீங்க யார்கிட்டயும் இந்த உங்க வயசு என் அனுபவம் டயலாக் சொல்றதில்ல தானே? ;)
ஸ்ரீஷிவ்...:)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

இப்போ நீங்க யார்கிட்டயும் இந்த உங்க வயசு என் அனுபவம் டயலாக் சொல்றதில்ல தானே?//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...! சொல்றதில்லைன்னுதான் நினைக்கேன்..

G.Ragavan said...

தட்டியில புகுந்தானாம் ஒருத்தன். இதென்னடான்னு கோலத்துல புகுந்தானாம் இன்னொருத்தன். அந்தக் கூத்தால இருக்குது.

(உங்களுக்குப் பின்னூட்டம் போடுறது இது மூனாவது வாட்டி. இதாவது வரனும்)

tbr.joseph said...

சோம்பேறி பையன் Said

கொஞ்ச நாட்களுக்கு பிறகு இப்பதான் உங்க பதிவிற்கு வர்ரேன், வீடு கட்டின தொடர்ல பாத்த அதே விறுவிறுப்பை கொஞ்சம் கூட குறையாம கொண்டு போயிக்கிட்டு இருக்கீங்க, நல்லா இருக்குங்க !

***

//‘நீங்க சொல்றது சரிதான் டிபிஆர். Ask him to repay the dues.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.//

உங்க மேலதிகாரியும் உங்க அலைவரிசையில இருந்தது நல்லதா போச்சு பாருங்க...

***

தில்லுமுல்லுல டாக்டர் பட்டமே கொடுக்கலாம் போலிருக்கே உங்க வாடிக்கையாளருக்கு :-)

tbr.joseph said...

வாங்க ராகவன்,

(உங்களுக்குப் பின்னூட்டம் போடுறது இது மூனாவது வாட்டி. இதாவது வரனும்) //

என்ன ராகவன் புதுசா இருக்கு? நீங்க பின்னூட்டம் போட்டு நா வெளியிடாம இருப்பேனா என்ன? என்னுடைய நண்பரின் மரணத்திற்குப் பிறகு என்னுடைய வேலைப்பளு மிகவும் கூடிவிட்டது. அத்துடன் இந்த சிக்கன்குனியாவால் உடலும் பலஹீனமாகிவிட்டது. தொடர்ந்து கணினியை உபயோகிக்க முடியவில்லை. அதனால்தான் த.ம பக்காம் வர இயலவில்லை. ஆனால் தினமும் இயன்றவரை பின்னூட்டங்களை வெளியிட்டு விடுகிறேன்.. எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை. மன்னியுங்கள்:(

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

தில்லுமுல்லுல டாக்டர் பட்டமே கொடுக்கலாம் போலிருக்கே உங்க வாடிக்கையாளருக்கு :-) //

நிச்சயமா. இந்த மாதிரி பல பேரை சந்தித்து பாடம் கற்றுக்கொண்ட அனுபவம் எனக்கிருக்கிறது..

tbr.joseph said...

Sivaprakasam Said

இந்த வாரம்தான் suspense இல்லாமலிருக்கிறது.
<--எங்களுடைய கடனை முழுவதும் திருப்பியடைத்தார் -->
<
எங்களுடைய கடனை முழுவதும் திருப்பியடைத்தார். ஆனால் ...... >
என்று இருக்க வேன்டும்

tbr.joseph said...

வாங்க சிவா,

எங்களுடைய கடனை முழுவதும் திருப்பியடைத்தார். ஆனால் ...... >
என்று இருக்க வேன்டும் //

சரி அப்படியே வச்சிக்கலாம்.. கற்பனைக் கதையாயிருந்தால் ஆனால் போட்டுவிட்டு கற்பனையாய் ஒரு சம்பவத்தை உருவாக்கியிருக்கலாம்:)

G.Ragavan said...

// tbr.joseph said...
வாங்க ராகவன்,

(உங்களுக்குப் பின்னூட்டம் போடுறது இது மூனாவது வாட்டி. இதாவது வரனும்) //

என்ன ராகவன் புதுசா இருக்கு? நீங்க பின்னூட்டம் போட்டு நா வெளியிடாம இருப்பேனா என்ன? என்னுடைய நண்பரின் மரணத்திற்குப் பிறகு என்னுடைய வேலைப்பளு மிகவும் கூடிவிட்டது. அத்துடன் இந்த சிக்கன்குனியாவால் உடலும் பலஹீனமாகிவிட்டது. தொடர்ந்து கணினியை உபயோகிக்க முடியவில்லை. அதனால்தான் த.ம பக்காம் வர இயலவில்லை. ஆனால் தினமும் இயன்றவரை பின்னூட்டங்களை வெளியிட்டு விடுகிறேன்.. எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை. மன்னியுங்கள்:( //

இல்லை ஜோசப் சார். தவறு உங்களுடையது இல்லை. பிளாகரிலேயே பிரச்சனை வந்தது. ஆகையால் பின்னூட்டம் உங்களுக்கு வந்திருக்காது என்று எனக்குத் தெரியும்.

சரி. உடம்பு எப்படி இருக்கிறது? ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்மணத்தில் திரும்பிப் பார்க்கிறேனைக் காணவில்லை என்பதால்...நாந்தான் சரியாகப் பார்க்கவில்லையோ என நினைத்து வந்தேன். நீங்களும் பதியவில்லை. உடல் சரியாகட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.