30 September 2006

கடந்து வந்த பாதை 5

சாம்பசிவம் ஐயாவுடைய குடும்பத்தை எனக்கு சுமார் முப்பது வருடங்களாகப் பழக்கம்.

நான் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர்களுடையது.

ஒரு சுவரைப் பொதுவாக வைத்து இரண்டு பங்கங்களிலும் அமைந்திருக்கும் ஓட்டு வீடுகளில் ஒன்று அவர்களுடையது மற்றொன்று எங்களுடையது.

அவர்களுடையது சொந்த வீடு.. எங்களுடையது வாடகை.. ஆனால் அப்பா நீண்ட கால லீசில் (ஒத்தி என்பார்கள் அப்போது) எடுத்திருந்தார்..

எங்களுடைய குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழு பேர்.. அவர்களுடையதோ பத்து!

இதெல்லாம் அந்த காலத்தில் மிகவும் சகஜம்.

ஐயாவுக்கு முதல் இரண்டு பெண்கள்.. 3,4,5,6 வரிசையாக ஆண்கள்.. கடைசியில்  இரண்டு பெண்கள் என எட்டு பிள்ளைகள்.

நாங்கள் அந்த வீட்டில் குடியேறியபோது முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் குடியிருந்தார்கள். மூன்றாவது மகனுக்கு புதிதாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர் சென்னையில் இருந்த ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். பட்டதாரி..

சாம்பசிவம் ஐயா ஒரு காலத்தில் முட்டை மொத்த வியாபாரியாக இருந்து நொடித்து போயிருந்தார். கேரளத்திலிருந்து ரயிலில் கூடை, கூடையாக வரவழைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்றுக்கொண்டிருந்தாராம். சில்லறை வியாபாரிகளின் சில்லறைத் தனத்தினால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்து குடியிருந்த ஒரு வீட்டைத் தவிர எல்லாவற்றையும் இழந்து பிள்ளைகளின் கையை எதிர்பார்க்கும் சூழலில் இருந்தார்.

முதல் இரு மகள்களுக்கு திருமணம் முடித்த போது செல்வாக்குடன் இருந்ததால் நல்ல செழிப்பு மிகுந்த இடத்தில் சம்பந்தம் செய்திருந்தார். ஆனால் இவர் நொடித்துபோனதுமே இரு சம்பந்திகளும் அவருடனான உறவையே துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகளில் மூத்தவருக்கும் (ஏகாம்பரம்) நல்ல வசதியான குடும்பத்திலிருந்துதான் பெண் எடுத்திருந்தார்கள்.

மருமகள் வீட்டிற்குள் நுழையவும் ஐயா நொடித்துப் போகவும் சரியாயிருந்திருக்கிறது.

ஐயாவின் மனைவியும் நல்லவர்தான். ஆனால் அக்கம்பக்கத்தினருடைய தூண்டுதல் அவரையும் பழியை புது மருமகள் மேல் போட வைத்தது.

மருமகள் தொட்டால் குற்றம்.. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்ற அவர் தொல்லைப்படுத்த வசதியான குடும்பம் என்று நினைத்து வந்திருந்த மருமகளுக்கு தனிக்குடித்தனம் போனால் என்ற தோன்ற ஆரம்பித்தது..

நாங்கள் புதிதாய் குடியேயிருந்த காலம் அது. பொழுது விடிந்தால் பொழுது போனால் தினமும் சிறிய, சிறிய காரியத்துக்கெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை, சச்சரவு என்று அடுத்த வீட்டில் இருக்கவே முடியாது என்கின்ற அளவுக்கு நடந்துக்கொண்டிருந்தது..

இரு பெண்களை அடுத்து பிறந்திருந்த நான்கு ஆண் மகன்களுக்கும் இடையில் ஒன்றிலிருந்து, ஒன்றரையாண்டு வித்தியாசம்தான், வயதில்..

வந்த மருமகளுக்கோ கணவனை விட எட்டு வயது குறைவு.. ஆக அவர் மூன்று கொழுந்தன்மார்களுக்கும் இளையவராக இருந்தார்.

ஆகவே மாமியார் மருமகள் சச்சரவில் கொழுந்தன்மார்களும் தலையிட்டு தங்களுடைய தாயார் பக்கம் சேர்ந்துக்கொள்வார்கள்.. கடைக்குட்டி தங்கைகள் இரண்டும் பள்ளிப் பருவம்.. பயந்துபோய் ஒதுங்கியிருப்பார்கள்.

இவர்களுடைய சச்சரவில் ஐயாதான் பாவம்.. நொந்துப்போவார். அந்நேரங்களில் எங்கள் வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்துக்கொள்வார்.. சப்தம் ஓய்ந்து அமைதியானதும் வீட்டுக்கு திரும்புவார்.

இந்த கவலையிலேயே ஐயா ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். அன்றும் அதையொட்டி வந்த இருவாரங்களில்தான் எங்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மலர்ந்து ஒருவிதத்தில் நெருங்கிய உறவுக்காரர்களைப் போலானோம்..

ஐயா உயிருடன் இருந்த சமயத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவும் என்று நடந்தாலும் சற்று நேரத்தில் அமைதியாகிப் போவார்கள்..

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் ஏற்படும் அமைதி என்பது பிறகுதான் புரிந்தது.

ஐயா எப்போது இறப்பார் என்று காத்திருந்ததுபோல முப்பதாம் நாள் சடங்கு கழியவும் ஏகாம்பரம் தன்னுடைய மனைவியின் வற்புறுத்தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தனிக்குடித்தனம் போவதென தீர்மானித்தார்.

வீட்டுக்கு தெரியாமலே மும்முரமாக வீடு தேடும் படலத்தில் இறங்கினார்.. அவருடைய வீட்டுக்கு தெரிந்ததோ இல்லையோ எனக்கு என் நண்பன் ஒருவனுடைய வழியாக தெரிந்துவிட்டது.
ஆனாலும் நமக்கேன் வம்பு என்று நான் இருந்துவிட்டேன். என் தாயாரிடம் கூட கூறவில்லை.

ஏகாம்பரம் வீட்டை ஏற்பாடு செய்தபோதும் தன் தாயிடம் அறிவிக்காமல் சாமான்களை ஏற்றியனுப்ப ஏற்பாடு செய்த வாகனத்துடன் வீட்டில் வந்து இறங்கியபோதுதான் குடும்பத்தினருக்கு தெரியவந்தது..

பிறகென்ன.. ஒரே களேபரம்தான்.

கடைக்குட்டி பெண்கள் இரண்டுக்கும் முன்னரே ஏகாம்பரத்தின் மூன்று தம்பிகளும் அவரை வசைமாரி பொழிய மனிதர் ஆடிப்போய்விட்டார்.

இருப்பினும் தன்னுடைய முடிவில் உறுதியாய் நிற்கவே, அவருக்கு அடுத்தவர், ‘டேய்.. போறேன்னு முடிவு பண்ணதுலகூட எனக்கு வருத்தமில்ல.. ஆனா மாசம் முழுசும் பேசாம இருந்துட்டு இப்ப சம்பள தேதி அன்னைக்கி இப்படி எங்கள அம்போன்னு விட்டுட்டு போறியே இத என்னால மன்னிக்கவே முடியாது. எனக்கு வேல கெடச்சி கன்ஃபர்ம் கூட ஆகல.. என் ஒருத்தன் சம்பளத்துல நான் இந்த குடும்பத்த மேனேஜ் பண்ணணும். தங்கச்சிங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சி கல்யாணம் பண்ணி குடுக்கணும்.. இவ்வளவு இருக்கறப்ப ஒனக்கு எப்படிறா அண்ணிய கூட்டிக்கிட்டு போக மனசு வந்தது?’ என்று சரமாரியாக கேட்டும் ஏகாம்பரம் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை..

ஏகாம்பரத்தின் அம்மாவிற்கோ மனசு ஆறவில்லை.. ‘டேய் வேண்டாம்.. என் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு போறே.. போ.. நீ என்ன ஆவப்போறேன்னு பாக்கத்தான போறேன்..’ என்று வாயில் வந்த வார்த்தைகளால் அர்ச்சித்தார். ஏகாம்பரம் அசரவில்லை.. தன்னுடைய மாமனார் சீதனமாக கொடுத்திருந்த சாமான்களை ஆட்களைக் கொண்டு அப்புறப்படுத்துவதிலேயே குறியாயிருந்தார்.

இறுதியில் அவருடைய தாய், ‘டேய்.. நாளை இல்லன்னா மராநாள் இங்க வந்து நின்னு என் பெஞ்சாதிக்கு பிரசவம்மா.. நீங்க வந்து பாக்கணும்னு வந்து நின்ன.. அப்புறம் தெரியும் சேதி..’ என்றார் ஆவேசத்துடன்..

ஏகாம்பரத்திற்கு என்ன தோன்றியதோ, ‘காச தூக்கிப் போட்டா நாலு களுத வந்து பிரசவம் பார்த்துட்டு போது.. இதுக்குன்னு போயி இங்க வந்து நிக்கப் போறனாக்கும்.. நீங்க வந்து அங்க நிக்காமருந்தா போறாது.. நீ வாடி...’ என்று தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போயே போய்விட்டார்..

அன்று ஏற்பட்ட விரிசல்தான்.. இரு குடும்பமும் ஒரே ஊரில் இருந்தும் பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக சமாதானமே இல்லாமல் இருந்தது..

இதற்கிடையில் நானும் என்னுடைய பதவி உயர்வு மற்றும் ஊர் மாற்றம் காரணமாக சென்னையை விட்டு செல்ல அக்குடும்பத்துடனான நட்பு என்னைப் பொறுத்தவரை நின்றுபோனது. ஆனால் என்னுடைய தாயார் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் எனக்கு எழுதும் எல்லா கடிதத்திலும் அந்த குடும்பத்தைப் பற்றி எழுதாமல் இருந்ததே இல்லை..

ஏகாம்பரத்தின் அடுத்த சகோதரர் குமார் குடும்பத்தின் முழு பொறுப்பையும் தன் தோள்மேல் சுமந்துக் கொண்டது, அவர்கள் இருந்த வீட்டிலேயே மேலும் இரு குடித்தனக்காரர்களை வைத்து அதில் வந்த வாடகைப் பணத்துடன் தன்னுடைய ஊதியத்தையும் சேர்த்து அதில் திறம்பட குடும்பத்தையும் நடத்தி தனக்கு அடுத்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களுக்கும் படிப்பு முடிந்தவுடன் வேலை வாங்கிக் கொடுத்தது.. என அக்குடும்பத்தில் நடந்த எல்லாவற்றையும் எனக்கு தவறாமல் எழுதுவார்கள்..

அடுத்த சில ஆண்டுகளில் எங்களுடைய குடும்பமும் அந்த வீட்டிலிருந்து குடிபெயர்ந்து பெரம்பூர் பகுதிக்கு சென்றுவிட அக்குடும்பத்துடனான தொடர்பு அறவே நின்றுப்போனது.

நான் தஞ்சையில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் ஏகாம்பரத்தின் தாயார் இறந்துவிட்டதாக என்னுடைய தாயார் மூலமாக செய்தி வந்தது. என்னால் செல்ல இயலவில்லை..

இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த என்னுடைய தாயார் வழியாக கடந்த பத்தாண்டுகளில் அக்குடும்பத்தில் நடந்தவைகளைப் பற்றிய செய்தி எனக்கு கிடைத்தது.

‘குமாரும் சரி அவனோட தம்பிகளும் சரி இன்னவரைக்கும் கல்யாணமே செஞ்சிக்கலடா.. தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் முடிச்சதுமே நல்ல எடத்துல கல்யாணம் செஞ்சி வச்சிட்டான் குமார்.. இப்ப மூனு பேர் மட்டும் தனியா பொங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்க.. வீட்ட இடிச்சி பெரிசா கட்டியிருக்கானுங்க.. ரெண்டு அக்காமார் இருந்தும் அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் தோனல பாரேன்.. என்ன பண்றது? எல்லாம் தலையெழுத்து.' என்று என் தாய் எழுதியிருந்தபோது மனசு லேசாக வலித்தது..

தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை என்று சுற்றிவிட்டு 1987ல் சென்னை வந்து சேர்ந்தபோது.. என் தந்தை எங்களுக்கு கோடம்பாக்கம் அசோக் நகரில் வீடு அமைத்துக் கொடுத்திருந்தார். அங்கு குடியேறி ஒரு வாரம் இருக்கும்.. நானும் என் மனைவியும் வடபழனி மார்க்கெட்டில் வைத்து ஏகாம்பரத்தையும் அவருடைய குடும்பத்தையும் சந்தித்தோம்..

அவர் சற்று தளர்ந்துபோயிருந்தார்.. ஆனால் அண்ணி (நானும் அவரை அண்ணி என்று அழைத்து பழகிப்போயிருந்தேன்) செழிப்பாக இருந்தார்கள்.. அவர்களைப் பார்த்தால் நல்ல செல்வ செழிப்புடன் இருப்பது தெரிந்தது.. இரண்டு மகன், இரண்டு மகள்கள்.. பிள்ளைகள் நால்வருமே அம்சமாக, அழகாக ஒரு வசதிபடைத்த குடும்பத்து பிள்ளைகள் போலிருந்தனர்...

இரண்டு ஆண்பிள்ளைகளில் மூத்தவன்  சென்னையில் சிறந்த பள்ளிகள் ஒன்றான எக்மோர் டான்போஸ்கோவில் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் சுமாராயிருந்த அடுத்தவன் மைலாப்பூர் செயிண்ட் பீட்ஸ்.. பெண் பிள்ளைகள் இருவரும் சர்ச் பார்க் கான்வெண்டில் என்று பெருமையுடன் அண்ணி கூறியபோது எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் பெண் பிள்ளைகள் இருவரும் 'கோடம்பாக்கம் பாத்திமாவில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்றேன்..

அலட்சியத்துடன் அது காதில் வாங்காமல் ஏகாம்பரம்  அண்ணா நின்றிருந்தார். அண்ணியோ ‘ஏன் சூசை.. அது அவ்வளவு நல்ல ஸ்கூல் இல்லையே.. சர்ச் பார்க்ல சேர்த்திருக்கக் கூடாது?’ என்றபோது எப்போதும் அமைதியுடன் இருக்கும் என் மனைவிக்கே கோபம் வந்தது.. நான் கண்சாடைக் காட்டி அவரை அமைதிப் படுத்திவிட்டு.. ஏகாம்பரம் அண்ணாவிடம், ‘அண்ணே.. அண்ணி என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு புரியுது.. இருந்தாலும் என் சக்திக்குட்பட்டுதான என்னால செய்ய முடியும்? என்னவோ நல்லாருக்கீங்கல்லே.. அதுபோறும்..’ என்றேன்.. அவரோ நான் கூறியதை சட்டை செய்யாமல் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.

அதற்குப்பிறகு அவரை மீண்டும் நான் சந்தித்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு..

மனிதர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்..

என்னைக் கண்டதும் அதுவரையில்லாத பாசத்துடன் உரையாடினார்..

அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது..

என்னுடைய மனதில் ‘இவருக்கு வேணும்’ என்ற சந்தோஷமும் இருந்தது..

இருந்தாலும் இப்படியொரு நிலை இவருக்கு வந்திருக்க வேண்டாம் என்ற வேதனையும் இருந்தது.

நாளை நிறைவுபெறும்..


29 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் நிறைவுப் பதிவு

அடுத்த ஒரு வாரத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை.

சரி.. அமைச்சர் அந்த விஷயத்தை மறந்திருப்பார் என்று நினைத்தேன்..

அதுதான் இல்லை.

சரியாக பத்து நாட்கள் கழித்து என்னுடைய வங்கி முதல்வருடைய காரியதரிசியிடமிருந்து தொலைப்பேசி வந்தது.

‘சேர்மன் ஒங்கள ஒடனே அவருடைய பெர்சனல் ஃபோன்ல கூப்பிட சொல்றார் சார், அவசரமாம்.’

சரி.. ஏதோ டோஸ் விழப்போகிறது என்ற படபடப்புடன் என்னுடைய வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடைய அறையில் அமர்ந்திருந்த ஒரு வாடிக்கையாளரை, ‘சார்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரு ரெண்டு நிமிஷம் வெளியில் வெய்ட் பண்ணுங்க.. சேர்மன்கிட்ட பேசணும்..’ என்று அனுப்பிவிட்டு அவருடைய பிரத்தியேக எண்ணை சுழற்றினேன்.

மறுமுனையில் எடுத்ததுமே அவர் உரக்க சிரிக்க என்ன ஏது என்று விளங்காமல் திகைத்துப்போனேன்.. ‘என்ன டிபிஆர். நீங்க மதுரையில சேர்ந்ததிலருந்து உங்களுக்கு எதிரா வர்ற மூனாவது கம்ப்ளெய்ண்ட் இது.. முதல் ரெண்டையும் சமாளிச்சேன்.. ஆனா இத என்னாலயே சமாளிக்க முடியல டிபிஆர். I may have to take action against you.’ என்றார் தொடர்ந்து..

நான் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்..

‘என்ன டிபிஆர் ஷாக்காயிட்டீங்களா? ஒங்கள அங்க போடச் சொன்னதே நாந்தான். ஒரு வருஷத்திலயே சரியாக்கிருவீங்கன்னு நான் எதிர்பாக்கல.. ஆனா செஞ்சிட்டீங்க.. குட்.. அதனால.. ஒங்க மேல சிவியரா ஆக்ஷன் எடுக்க மனசு வரல.. ஆனாலும்.. எடுக்காமயும் இருக்க முடியாது.. என்ன சொல்றீங்க.. என்ன செய்யலாம்.. நீங்களே சொல்லுங்க..’

என்னடா இது டார்ச்சர்.. என்னெ என்ன செய்யலாம்னு என்னையே கேட்டா..?

‘ஒங்கள ஊர விட்டு உடனே மாத்தியாகணும் டிபிஆர்.. Tell me where do you want to go?’

நான் உடனே ‘மெட்றாசுக்கு போறேன் சார்.’ என்றேன்.

அவர் மீண்டும் உரக்க சிரித்தார். ‘ஒக்கே க்ராண்டட்.. ஆனா மேனேஜரா போமுடியாதே..’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. ஊர் மாற்றம் நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் மேனேஜர் பதவி பறிபோகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி.. என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று காத்திருந்தேன்..

‘நான் ஒங்கள மெட்றாஸ் ஜோனல் ஆஃபீஸ்ல டெஸ்க் ஆஃபீசரா கொஞ்ச நாளைக்கு போடலாம்னு இருக்கேன் டிபிஆர். மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.. But you should have known whom you are talking to.. After all he is a Central Minister!’

நான் அதிர்ச்சியில் பதில் பேசாமல் அமர்ந்திருந்தேன்..

‘But don’t lose heart.. I will not deprive you of the perks you are enjoying now.. Be there for a year.. Let me see.. All the best.’

இணைப்பு துண்டிக்கப்பட்டு அமைதியாகிப் போக நான் ஒலிவாங்கியை அதன் இடத்தில் வைத்துவிட்டு சற்று நேரம் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

நான் வாடிக்கையாளரை வெளியே அனுப்பிவிட்டு தொலைபேசியில் பேசுவதைக் கவனித்த என்னுடைய உதவி மேலாளர் என்னுடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்த அதிர்ச்சியைக் கண்டதும் ஓடி வந்தார். ‘என்ன சார்.. ஏதும் பிரச்சினையா?’

நான் பதிலளிக்காமல் ஆமாம் என்று தலையை அசைத்துவிட்டு சற்று முன் வெளியே அனுப்பிய வாடிக்கையாளரை மீண்டும் உள்ளே அழைத்து அவருக்கு தேவையான தங்க நகைக் கடனை கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அதற்கு மேலும் அலுவலகத்தில் அமர்ந்திருக்க மனமில்லாமல் எழுந்து என்னுடைய உதவி மேலாளரிடம் கூறிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினேன்.

என்னை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத மனைவி, ‘என்னங்க இந்த நேரத்துல? எதையாச்சும் மறந்துட்டீங்களா?’ என அவரை அமரச் செய்து நடந்தை முழுவதும் கூறி இன்னும் ஒரு வாரத்திற்குள் பயணமாக வேண்டும் என்று கூறினேன்.

நான் எதிர்பார்த்ததற்கும் எளிதாகவே என்னுடைய மனைவி அந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொண்டார். ‘பரவால்லீங்க.. என்ன இப்போ? மேனேஜர் பதவிதான் வேணும்னு இருக்கா என்ன? பேசாம கொஞ்ச நாளைக்கு எந்த டென்ஷனும் இல்லாம இருப்போம். அப்புறம் பாத்துக்கலாம். நீங்க எதுக்கும் கவலப் படாதீங்க.’ என்றார் ஆறுதலாக..

நான் எதிர்பார்த்திருந்ததற்கும் விரைவாகவே உத்தரவு வர
என்னுடைய மேலாளர் பதவி Phase I ஆறாண்டுக் காலத்துடன் முடிவுக்கு வந்தது..

****

இந்த தொடரின் 201வது பதிவுடன் என்னுடைய தொடரின் முதல் பகுதி முடிவுக்கு வருகிறது.

நான் சென்னை வட்டார அலுவலகத்தில் சுமார் ஓராண்டுக் காலம் பணியாற்றினேன்..

வங்கிக் கிளைகளில் மேலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு வட்டார அலுவலகத்தில் சிறப்பாகப் பணியாற்ற துணையாயிருந்தது.

ஆனாலும் கிளைகளில் இருந்த பரபரப்பு, வித விதமான வாடிக்கையாளர்களை சந்தித்த சுவாரஸ்யம் ஏதும் இல்லாமல் வாழ்க்கையே டல்லடித்துப் போனது.

பதவி பறிபோனதன் காரணத்தை என்னுடைய பெற்றோர்களுக்கு புரிய வைக்க முடிந்தது.. ஆனால் என்னுடைய மாமனார் வீட்டினரையும் என்னுடைய நண்பர்களையும் என்னால் சமாளிக்க முடியவில்லை..

முக்கியமாக என்னுடைய மனைவியின் குடும்பத்தார் முன்னிலையின் என்னுடைய மதிப்பு குறைந்துப் போனதென்னவோ உண்மை..

ஆனால் என்னுடைய வங்கியின் அப்போதைய முதல்வர் என்னை மறந்துவிடவில்லை. அடுத்த பத்தே மாதத்தில் என்னை மீண்டும் சென்னைக் கிளைகளில் ஒன்றில் மேலாளராக ஆக்கினார்..

அதைப்பற்றி அடுத்த பகுதியில்..

*******

என்னுடைய தொடரை தினமும் படித்து, பின்னூட்டம் இட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..

சுமார் ஒரு மாத காலத்திற்கு இடைவெளி விட்டு மீண்டும் சென்னையில் மேலாளராக இருந்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன்..

நன்றி, வணக்கம்..

***28 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 200

என்னுடைய வங்கி அலுவலில் சுமார் எட்டு ஊர்களில் பணியாற்றியிருக்கிறேன்.

நான் மேலாளராக பணியாற்றிய சுமார் இருபது ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவும் அலாதியானது. வாடிக்கையாளர்கள் பலருடயை கோபத்திற்கும், நிந்தனைக்கும் உள்ளாகியிருக்கிறேன். சிலரால் அவமானத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். பலருடைய பாராட்டையும், சிலரிடமிருந்து அபிரிமிதமான அன்பையும் சம்பாத்தித்தும் இருக்கிறேன்.

பாராட்டப்படும்போதும் சரி அவமானப் படுத்தப்பட்டபோதும் சரி எல்லாவற்றையும் ஒரே மனநிலையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை எனக்கு அளித்தது என்னுடைய அசைக்க முடியாத இறைநம்பிக்கையென்றால் மிகையாகாது.

அதுவும் மதுரையில் நான் இருந்த ஒரு வருடத்தில் அந்த இறுதி மாதத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது.

முந்தைய பதிவில் நான் கூறியிருந்ததைப் போன்று மதுரையில் அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளர் தன்னுடைய செயல்பாட்டில் மிகவும் தீவிரமாக இருந்தார். அதில் தவறேதும் இல்லை. அவருடைய நோக்கம் நேர்மையானதுதான். இல்லையென்று சொல்லவில்லை.

ஆனால் அதை செயல்படுத்திய விதம்தான் சர்ச்சைக்குரியதாக இருந்தது. என்னைப் போன்ற வங்கி மேலாளர்களின் செயல்பாட்டில் அதாவது கடன் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையீடு செய்ததைத் தான் என்னாலும் வேறு சில மேலாளர் நண்பர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இது போதாதென்று அப்போது மத்தியில் ஸ்டேட் ராங்கில் அமைச்சராக இருந்த ஒருவரது தலையீட்டை சொல்லி மாளாது. அவர் அப்போதைய பிரதமரின் பிரத்தியேக பிரதிநிதியாக தன்னைத்தானே வரித்துக் கொண்டு செல்லும் இடமெல்லாம் லோன் மேளா என்ற பெயரில் அரசு வங்கிகளை நிர்பந்தம் செய்து தகுதியற்ற பலருக்கும் சலுகைக் கடன்களை அள்ளி வீசியது.. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால்.. அக்கிரமம்.

அவருடைய தயவை எந்த வங்கியின் மேலாளரும், அது அரசு வங்கியாக இருந்தாலும் சரி, தனியார் வங்கியாக இருந்தாலும் சரி, எதிர்நோக்கி இருக்கவில்லை. ஆனாலும் என்ன காரணத்தாலோ சகல அரசு வங்கிகளின் மேலாளர்களும், ஓரிருவரைத் தவிர, ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்து அவருக்கு பணிவிடை செய்ய தயாராக இருந்ததுதான் வேதனை.

அதுவும் அன்று வங்கி மேலாளர்களின் க்ளப் தலைவராக இருந்தவர் மாவட்ட ஆட்சியாளரை விடவும் முனைப்பானவராக இருந்தது அதைவிட துரதிர்ஷ்டம்.

மத்திய அமைச்சரின் மதுரை சுற்றுப்பயண விவரங்களை மாவட்ட ஆட்சியர் அவரிடம் கொடுத்து மதுரையில் செயலாற்றி வந்த அனைத்து வங்கிகளும் இன்னின்ன இடத்தில் லோன் மேளா நடைபெறும் என்று, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வங்கியும் இத்தனை பேருக்கு கடன் வழங்க வேண்டும் என்று பட்டியலிட்டு கொடுத்திருப்பார் போலிருந்தது.

அதற்கெனவே ஒரு பிரத்தியேகமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி எல்லா மேலாளர்களையும் மத்திய அமைச்சரின் பெயரைச் சொல்லியே பயமுறுத்தி சம்மதம் பெற்றிருந்தார். என்னுடைய நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ நான் அந்த கூட்டத்திற்கு செல்ல இயலவில்லை.

அடுத்த நாள் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஒரு வங்கியில் மேலாளராக இருந்த என் நண்பரை தொலைப்பேசியில் அழைத்து முந்தைய நாள் கூட்டத்தில் நடந்தது என்ன என்று விசாரித்தேன்.

என்னுடைய வங்கிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கடன் பட்டியலை தன்னிடம் கொடுத்திருப்பதாகவும் யாராவது ஒரு சிப்பந்தியை அனுப்பினால் கொடுத்தனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். நான் கூட்டத்தில் வேறு ஏதும் விவாதிக்கப்பட்டதான் என்று கேட்டேன்.

‘நீங்க வேற டிபிஆர். அந்த பிரசிடெண்ட் எங்க எங்கள பேச விட்டார். இதுல தந்திருக்கற டார்கெட்ட எந்த பேங்காவது மீட் பண்ணாம இருந்தா அவங்களப் பத்தி அவங்க எச்.ஓவுக்கு நானே கம்ப்ளெய்ன் செய்வேன்னு மிரட்டாத குறைதான். என்ன அக்கிரம் பாருங்க. கவர்ன்மெண்ட் ஃபண்ட்ஸ் எல்லாம் நேஷனலைஸ்ட் பேங்குக்காம் ஆனா லோன்னு வரும்போது மட்டும் எல்லா பேங்கும் குடுக்கணுமாம்.. எங்க போய் சொல்றது.’ என்று அங்கலாய்த்தார்.

நான் சட்டென்று, ‘சார் நா ஒன்னு சொன்னா நீங்க ஒத்துழைப்பீங்களா?’ என்றேன் அவருடைய பதில் என்னவாயிருக்கும் என்று தெரிந்திருந்தும்.

அவர் தயக்கத்துடன், ‘நீங்க முதல்ல ஒங்க ஐடியாவ சொல்லுங்க.’ என்றார்.

‘பேசாம நாம ஏற்கனவே பாரோயர்ஸ தேர்ந்தெடுத்துட்டோம். அவங்களுக்கு மினிஸ்டர் முன்னால வச்சி லோன் குடுத்தா போறும்னு சொல்வோம். அவங்களுக்கு இத்தன பேருக்கு லோன் குடுக்கணும்னுதான டார்கெட்.. யாருக்குன்னு இல்லையே..’

எதிர் முனையிலிருந்து பதிலே வரவில்லை. ‘வேணாம் டிபிஆர். ஏற்கனவே பலதடவை நீங்க கலெக்டர்கிட்ட டோஸ் வாங்கியிருக்கீங்க.. இப்ப வர்றது மினிஸ்டர்.. எதுக்குங்க வம்ப விலை குடுத்து வாங்கறீங்க? என்னெ விட்டுருங்க..’ என்று கழன்றுக்கொண்டார்..

அன்று மாலை என்னுடைய சிப்பந்தியை அனுப்பி என்னுடைய வங்கிக்கு கொடுக்கப்பட்டிருந்த டார்கெட்டை பார்த்ததும் எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்த டார்கெட்டை என்னுடைய வங்கி எட்டியிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அரசு இலாக்காவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டிருந்த நபர்களுக்கு கடன் வழங்கவில்லையென்ற ஒரே காரணத்திற்காக நான் நிராகரித்த அவர்களுடைய பெயர்களே மீண்டும் பட்டியலிலிருந்ததைக் கண்டு கொதித்துப் போனேன்.

உடனே என் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. அவர்கள் வழியிலேயே தற்சமயம் போவோம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அடுத்த நாள் முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இலாக்கா பரிந்துரைத்த நபர்களை நேர்காணல் செய்து கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கடன் வழங்குவதற்கான உத்தரவுகளைத் தயார் செய்தேன். ஆனால் எவருக்கும் வழங்கக்கூடாது என்ற தீர்மானத்துடன் மத்திய அமைச்சர் நடத்தும் லோன் மேளாவில் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.

மத்திய அமைச்சருடைய பொன்னான கரங்களால் சில கடன்களாவது பொருளாக (தையல் இயந்திரம், பால் பாத்திரங்கள், சக்கர நாற்காலிகள், என செல்லும் இவற்றின் பட்டியல்) கொடுக்கப்படவேண்டும் என்பது நியதியாயிருந்தது.

என்னுடைய மிக முக்கியமான வாடிக்கையாளர்களாயிருந்த மதுரை மல்ட்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டியின் மேற்பார்வையில் இயங்கி வந்த சுய வேலைப்பாடு மையத்தில் பயிற்சி பெற்றிருந்த சுமார் இருபது கைம்பெண்களுக்கு தையல் இயந்திரம் கொடுப்பதென தீர்மானித்து அவர்களை விழா தினத்தன்று வந்து அமைச்சர் கையால் அவற்றைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்து முடித்தேன். அவர்களுடன் நான் அங்கத்தினராயிருந்த லயன் க்ளப் பரிந்துரைத்த ஊனமுற்ற சிலருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தேன்.

அமைச்சருடைய தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் ஒரு திறந்த வெளி திடல். அதில் திடலின் ஓரத்தில் மதில் சுவரையொட்டி எல்லா வங்கிகளும் சிறு, சிறு ஸ்டால்களை அமைத்து தாங்கள் வழங்கவிருந்த பொருட்களை காட்சியாக வைக்க வேண்டும். இதுவும் நம்முடைய அமைச்சரின் நியதிகளுள் ஒன்று.. எல்லாம் ஒரு ஷோதான்..

அமைச்சரை வரவேற்று திடலின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் (அந்த தொகையைக் கொண்டே சுமார் ஆயிரம் ஏழைகளுக்கு கடன் வழங்கியிருக்கலாம் என்பது வேறு விஷயம்) அதிகாரிகளும், அவருடைய அடிபொடிகளும் புகழாரம் சூட்ட திடலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கடைகளின் எண்ணிக்கையைப் பார்த்து பெருமிதமடைந்திருந்த அமைச்சர் வங்கி அதிகாரிகளை எத்தனை போற்றினாலும் தகும் என்று தன்னுடைய உரையைத் துவக்கினார்.

ஆரம்பத்தில் மேலாளர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தாலும் நேரம் செல்லச் செல்ல அவர்களை வசை பாடத் துவங்கினார். இந்தியாவில் முதல் நூறு பணமுதலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடனை வசூலித்தாலே போதும் இந்தியாவில் உள்ள சகல ஏழைகளுடைய தேவைகளையும் பூர்த்தி செய்துவிடலாம். அதற்கு முயற்சி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இந்த ஏழைப் பாழைகளுக்கு கொடுக்கும் சில்லறைக் கடன்களை வசூலிப்பதில் உங்களுடைய திறமையைக் காட்டாதீர்கள் என்ற ரீதியில் இருந்தது அவருடைய உரை..

கடன் பெற வந்திருந்தவர்களுக்கு கேட்க வேண்டுமா? கடனைத் திருப்பி செலுத்த வற்புறுத்தாதீர்கள் என்றபோது கரகோஷம் வானைப் பிளந்தது. திடலில் குழுமியிருந்த எங்களைப் போன்ற மேலாளர்களைப் பார்த்து முஷ்ட்டியை உயர்த்திக் காட்டினார்கள். அதாவது, ‘மவனே லோன கட்டுன்னு கேட்டே.. அவ்வளவுதான்..’ என்பதுபோலிருந்தது அவர்களுடைய செய்கை..

பல்லைக் கடித்துக்கொண்டு நிற்க வேண்டிய தலையெழுத்து.. நின்றோம்..

அமைச்சர் உரையாடலை முடித்துக்கொண்டு கடன் வழங்கும் விழாவைத் துவங்கினார். திடலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வங்கியின் கடையின் வாயிலிலும் நின்றுக்கொண்டு அவர்கள் தயாராக வைத்திருந்த பொருட்களை சம்பிரதாயமாக ஒன்றிரண்டை கடன் பெற வந்திருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அடுத்த கடைக்கு நகர்ந்தார்.

முதலில் அமைக்கப்பட்டிருந்த அரசு வங்கிகளுடைய கடையை முடிப்பதற்குள் அமைச்சருடைய பொறுமை எல்லையை கடந்திருந்தது. அதற்கு முக்கிய காரணம் கூட்ட நெரிசல். வங்கிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு நூற்றுக் கணக்கில் பொருட்களை அடுக்கி வைத்து எல்லோருக்குமே அமைச்சரின் கரங்களால் கொடுக்க முனைந்தது..

எங்களைப் போன்ற தனியார் வங்கிகளின் கடைகள் இறுதியில் அமைக்கப்பட்டிருந்ததால் முதல் வங்கியினுடைய கடையில் துவங்கி என்னுடைய வங்கியின் கடைக்கு வந்தபோது சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.. அவர் சற்றும் எதிர்பாராத அளவுக்கு கூட்டம் நாலா புறத்திலும் அவரை நெருக்கவே மனிதர் பொறுமையிழந்திருந்தார்.

என்னுடைய கடையில் நான் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நபர்களில் இரு கைம்பெண்களுக்கு தையல் மிஷினும் கால்கள் இரண்டும் செயலிழந்திருந்த ஒரு நபருக்கு சக்கர நாற்காலியை அமைச்சர் கையால் வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தேன். அவரும் பேருக்கு தையல் இயந்திரத்தின் மேல் தன்னுடைய கரங்களை வைத்து ஒருவருக்கு கொடுத்து முடிக்க அவருக்கருகில் நின்றிருந்த ஒரு அரசு அதிகாரி அவருடைய காதில் ஏதோ ஓதினார். அமைச்சர் கோபத்துடன் என்னைப் பார்த்து, ‘என்ன மிஸ்டர் டிபார்ட்மெண்ட் ரெக்கமெண்ட் செஞ்ச யாருக்குமே நீங்க லோன் குடுக்காம நீங்களா யாரையோ கொண்டு வந்து குடுக்கறா மாதிரி ஒரு நாடகம் நடத்தறீங்களாமே? I don’t like this and I will not be a party to this farce.’ என்று விருட்டென்று விலகிச் செல்ல அங்கு குழுமியிருந்த கூட்டமே என்னை ஏதோ வில்லனைப் பார்ப்பதுபோல் பார்த்தது..

என்னுடைய மதுரை லயன் க்ளப் தலைவரும் உதவி தலைவரும் தாங்கள் பரிந்துரைத்த ஊணமுற்ற நபர்களுக்கு சக்கர நாற்காலி வழங்குகிறாரே என்ற எண்ணத்தில் விழாவுக்கு வந்திருந்து என்னுடைய கடை வாசலில் நின்றிருந்தனர். அவர்களுக்கும் அமைச்சரின் பேச்சு பெருத்த அவமானத்தை அளித்தது. இருப்பினும் அமைச்சருக்கு அஞ்சி உடனே எனக்கருகில் நின்றிருந்த அவர்கள் இருவருமே ஏதோ சம்பந்தம் இல்லாதவர்கள்போல் ஒதுங்கி நின்றுக்கொண்டனர்.

எனக்கு அவமானமாகப் போனது. ஆயினும் அதை பெரிதுபடுத்தாமல் என்னுடைய கடை வாசலிலேயே நின்றிருந்தேன். என்னுடைய மேலாளர் நண்பர் ஒருவர், ‘ஜோசப் மினிஸ்டர் போறதுக்குள்ள நீங்க போய் அவர்கிட்ட சாரி சொல்லிடறதுதான் நல்லது. ஏற்கனவே DRDA ஆஃபீசருக்கு ஒங்கள புடிக்கவே புடிக்காது. அவர்தான் அமைச்சர் காதுல ஓதியிருக்கார். அதனால..’

எனக்கு சட்டென்று கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு, ‘நீங்க வேற சார். நியாயமா பார்த்தா அவர்தான் எங்கிட்ட வந்து மன்னிப்பு கேக்கணும்.. என்ன நடக்குது, எங்க இருக்கோங்கற நினைப்பே இல்லாம பேசிட்டு போறாரு.. நான் போய் மன்னிப்பு கேக்க போய் மேற்கொண்டு ஏதாச்சும் பேசினாலும் பேசுவார். நடந்தது நடந்துருச்சி.. இனி என்ன ஆகப்போவுதோன்னு பயந்து என்ன ஆகப்போவுது.. என்ன நடந்தாலும் ஃபேஸ் பண்ணித்தான சார் ஆகணும்.. I will face it.’ என்றவாறு என்னுடன் வந்திருந்த என்னுடைய உதவி மேலாளரிடம், ‘நீங்க பேக் பண்ணிட்டு ஆஃபீசுக்கு போங்க சார்.. நான் வீட்டுக்கு போறேன்.. நாளைக்கு பாக்கலாம். நீங்க இங்கருந்தா மறுபடியும் பிரச்சினை வந்தாலும் வரும்..’ என்றேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று கடன் பெற வந்திருந்த அனைவரையும் அடுத்த நாள் வங்கிக்கு வருமாறு கேட்டுக்கொண்டு நான் உடனே அங்கிருந்து புறப்பட்டேன். அன்று மாலை வங்கி மேலாளர்கள் சார்பில் அமைச்சருக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் கலந்துக் கொள்ளவில்லை..

என்னதான் வீராப்பாகப் பேசிவிட்டு வீடு திரும்பினாலும் அன்று முழுவதும் மன நிம்மதியில்லாமல் படுக்கையில் கிடந்து உழன்றுக்கொண்டிருந்தேன்..

தொடரும்...

27 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 199

சாதாரணமாக என்னுடைய அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை என்னுடைய மனைவியிடம் கூறுவதில்லை, முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்கிற விஷயங்களைத் தவிர.

என் மனைவியும் என்னுடைய அலுவலக விஷயங்களைத் தெரிந்துக்கொள்வதில் அக்கறை காட்டமாட்டார். இது ஒருவகையில் எனக்கும் பிடித்த விஷயமாயிருக்கவே நானும் அவரை வற்புறுத்தி சொல்வதில்லை. ஏனெனில் அலுவலக விஷயம் அலுவலகத்துடனே நின்றுபோய்விடும் பட்சத்தில் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

சிலருடைய வீடுகளில் நடப்பதுபோல் அலுவலக விஷயத்தை ‘இன்னைக்கி ஆஃபீஸ்ல என்ன நடந்தது தெரியுமா?’ என்று தன்னுடைய வீரபராக்கிரமத்தை ஒன்றும் அறியாத மனைவியிடம் கூறும் கணவன்மார்கள் சில நேரத்தில் மனைவியரிடம் சிக்கிக்கொண்டு விழிப்பதைப் பார்த்திருக்கிறேன். ‘ஏங்க நீங்க செஞ்சது அடி முட்டாள்தனம். இதுல பெருமையா வந்து சொல்லிக்கிறீங்களாக்கும்?’ என்பார் மனைவி.

சில வீடுகளில் கணவன் வந்து அமர்ந்ததுமே, ‘என்னங்க நேத்தைக்கி ஏதோ பிரச்சினைன்னு சொன்னீங்களே அது என்னாச்சி? சுமுகமா முடிஞ்சதா? நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு ஆஃபீசுக்கு போய்ட்டீங்க.. நா இங்க எப்படா நீங்க வருவீங்கன்னு டென்ஷனோட ஒக்காந்திருக்கேன்.’ என்பார் மனைவி.

மனிதர் எதையாவது செய்து அந்த பிரச்சினையை சமாளித்திருப்பார். ‘சரி என்னவோ செஞ்சேன் விடேன்..’ என்பார் மனைவியிடம். ‘அதெப்படீங்க. நீங்க என்ன செஞ்சீங்க, அத சொல்லுங்க. அது சரிதானான்னு எனக்கு தெரிய வேணாமா?’ என்று துருவித் துருவி கேட்டு பிறகு, ‘சரியான முட்டாளுங்க நீங்க. இப்படியொரு முடிவு எடுத்திருக்கீங்களே, என்னையாவது கேட்டுருக்கலாமில்ல?’ என்று முடிந்து போன விஷயத்தை மீண்டும் கிண்டி, கிளறி அர்ச்சனை செய்ய, மனிதர் ‘சை.. இவ கிட்ட ஏந்தான் இத சொன்னோமோ?’ என்று நொந்து போவார்.

அலுவலக பிரச்சினை வீட்டு பிரச்சினையாகி கணவன், மனைவிக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதை பார்த்திருந்ததால் அப்படியொரு நிலை என் குடும்பத்தில் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தேன். என்னுடைய மனைவிக்கும் இத்தகைய விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் எவ்வித விருப்பமும் இருந்ததில்லை.

அன்றும் அப்படித்தான். நான் அலுவலகத்திலிருந்த வந்ததும் என்னுடைய சற்றே பதற்றமான முகத்தைப் பார்த்து என்னுடைய மனைவி ஒரு நொடி கலக்கமடைந்தாலும் ஒன்றும் கேட்காமல் தன்னுடைய முக்கியமான அலுவல்களில் ஒன்றான மகளுக்கு வீட்டுப் பாடம் செய்ய உதவுவதில் முனைப்பாகிப் போனார்.

எனக்குள் மீண்டும் ஒரு சஞ்சலம். ஆலையின் உரிமையாளரை அழைத்து இன்று மாலை நடந்த விஷயத்தை அவரிடம் தெரிவித்தாலென்ன என்று ஆலோசித்தேன். ஆனால் அவர் எப்படி ரியாக்ட் செய்வாரோ என்றும் கவலையாயிருந்தது. எந்தவித ஒருவித முடிவுக்கும் வர முடியாமல் திணறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து என் வீட்டுத் தொலைப் பேசி அலறியது.

மதுரையில் வங்கி மேலாளர்களுக்கென ஒரு க்ளப் இருந்தது. அதை பேங்கர்ஸ் க்ளப் என்போம். நான் பணியாற்றிய எல்லா ஊர்களிலுமே இத்தகைய அமைப்பு இருந்ததென்றாலும் தஞ்சையிலும் மதுரையிலும் சற்று அதிக முனைப்புடன் இந்த அமைப்பு செயலாற்றி வந்தது.

அதனுடைய செயலாளர் தேசீய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதுநிலை (சீனியர்) மேலாளர் பதவியில் இருந்தவர். பழுத்த அனுபவசாலி. அவரிடமிருந்துதான் தொலைப்பேசி அழைப்பு. ‘சார் அடுத்த வாரம் நம்ம மத்திய அமைச்சர் வரார்னு தெரியுமில்லையா? அவர் வரும்போது எல்லா ஊர்லயும் வழக்கமா நடக்கற லோன் மேளா மதுரையிலும் நடத்தணுமாம். அரசாங்க அதிகாரிங்க கிட்டருந்து பெரிசா ஒரு அறிக்கையே வந்துருக்கு. அத டிஸ்கஸ் பண்ணி நாம என்ன செய்யணுங்கறத தீர்மானிக்க நாளைக்கு சாயந்திரம் ஒரு கூட்டம் போட்டிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும்’ என்றார்.

இருக்கற தொல்லை போறாதுன்னு இது வேறயா என்று மனதுக்குள் நினைத்த நான் ‘சரி சார். நிச்சயமா வந்துடறேன்.’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பைத் துண்டிக்க முயன்றவனை அவர் விடாமல் தங்களைப் போன்ற அரசு வங்கி அதிகாரிகளுக்கு அரசு அதிகாரிகள் என்னவெல்லாம் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை ஒன்றுவிடாமல் கூறி புலம்பி தள்ளிவிட்டார்.

உண்மைதான் அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த ஒரு அமைச்சர் அப்போதைய பிரதமரின் ஆணையை சாக்காக வைத்துக்கொண்டு அடித்த கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. வங்கி அதிகாரிகள் அரசு அதிகாரிகளின் கைப்பாவைப் போல நடத்தப்பட்டனர் என்றால் மிகையாகாது. ஊரெங்கும் லோன் மேளா மயம்.

நான் தஞ்சையிலும் தூத்துக்குடியிலும் இருந்த காலத்தில் இத்தகைய லோன் மேளா நடைபெற்றாலும் என்னுடைய வங்கி அதில் கலந்துக்கொண்டதே இல்லை. அரசு திட்டங்களில் எங்களைப் போன்ற தனியார் வங்கிகளும் பங்குக்கொண்டு சலுகைக் கடன் வழங்க வேண்டும் என்ற நியதி இருந்தாலும் என்னால் இயன்றவரை அதை பொருட்படுத்தாமல் இருந்தேன்.

அதற்காக எங்களுடைய வங்கியிலிருந்து சலுகைக் கடன் கொடுத்ததில்லை என்று பொருள் அல்ல. அரசு வங்கிகள் பத்து பேருக்கு கொடுத்திருந்தால் எங்களைப் போன்ற வங்கிகள் இரண்டு அல்லது மூன்று பேருக்கு வழங்குவதுண்டு. ஆனால் கடன் பெற தகுதியுள்ளவர்களை நாங்களே தேர்ந்தெடுப்போம். அதில் அரசு அதிகாரிகளின் பரிந்துரையை பெரிதாக பொருட்படுத்தியதில்லை. அதை அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளர்களும் பெரிதாய் பொருட்படுத்தியதில்லை. ஏனெனில் அதில் பலரும் வடக்கத்தியராய் இருந்தனர்.

ஆனால் மதுரையில் அப்போதிருந்த ஆட்சியாளர் தென்னிந்தியர் என்பது மட்டுமல்ல மிகவும் இளையவராயும் இருந்தார். ஆகவே எதையாவது சாதித்து மத்திய அமைச்சர்களின் பார்வையில் பட்டுவிட வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. நான் மதுரையில் இருந்த காலத்தில் அவருடைய கடுமையான விமர்சனத்திற்கு பலமுறை ஆளாயிருக்கிறேன். வங்கி மேலாளர்களின் கூட்டத்தில் எல்லா மேலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் மத்தியில் எங்களுடைய வங்கியின் பெயரை குறிப்பிட்டு சாடியிருக்கிறார்.

மதுரையிலிருந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த வங்கிகள் பலவும் அரசு அதிகாரிகளின் பரிந்துரைப்படி கடன் வழங்குகையில் உங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்பது மாதிரியான வசவுகளையெல்லாம் சில சமயங்களில் கேட்க நேர்ந்திருக்கிறது. நான் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் எனக்கு தகுதியானவர்கள் என்று தோன்றியவர்களுக்கு மட்டும் கடன் வழங்கி அரசு எங்களுடைய வங்கிக்கு கொடுத்திருந்த சலுகைக் கடன் எல்லையை (Loan Target) ஒவ்வொரு வருடமும் எட்டிவிடுவேன். வருட எல்லையில் என்னுடைய வங்கி அரசு நிர்ணயித்த தொகையை வழங்கியிருக்கிறோமா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும் என்பதால் ஆட்சியரின் விமர்சனங்கள் என்னைப் பாதித்ததே இல்லை.

ஆகவே மேலாளர் க்ளப்பின் செயலாளர் தன்னுடைய சிரமங்களை என்னிடம் எடுத்துக் கூறியபோது அவர்மீது எனக்கு கோபம் வந்ததே தவிர பச்சாதாபம் ஏதும் ஏற்படவில்லை. ‘நீங்க ஏன் சார் அவங்க சொல்றபடியெல்லாம் ஆடணும்.. முடியாது சார்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன செஞ்சிருவாங்க.. ஒன்னு ஊர விட்டு மாத்துவாங்க.. இல்லையா மேலாளர் பதவியிலருந்து இறக்கிருவாங்க. நா ரெண்டுக்கும் தயார்.’ என்றேன்.

‘நாய் வேஷம் போட்ட குரைச்சித்தான ஆகணும் சார்.. ஒங்களுக்கு சின்ன வயசு. பசங்களும் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கற வயசுலதான் இருப்பாங்க. எங்க கதை அப்படியில்லையே..?’ என்ற மேலும் புலம்ப ஆரம்பிப்பதற்குள் குறுக்கிட்டு, ‘சரி சார் நாளைக்கு மீட்டிங்ல பாக்கலாம்’ என்று துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். மணி ஒன்பதைக் கடந்திருந்தது. இனி ஆலை உரிமையாளருடன் பேசுவது நன்றாயிருக்காதென்று நினைத்து இரவு உணவிற்குப் பிறகு படுக்க சென்றேன்.

அடுத்த நாள் காலை காப்பிக் கோப்பையுடன் செய்தித்தாளைப் பார்த்தபோது அதிர்ந்துப் போனேன். முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி வெளியாகி இருந்த செய்தி என்னை சிலையாய் அமரச் செய்தது.

பிரபல மில் உரிமையாளர் மாரடைப்பால் நள்ளிரவில் மரணம்! என்றது செய்தித்தாள்.

பதறி எழுந்து அரைகுறையாய் குளித்து முடித்து என்னுடைய இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு நகரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்த அவருடைய வீட்டையடைந்தேன்..

ஏறத்தாழ ஒரு கோடிக்கும் கூடுதலான சொத்துக்கு உரிமையாளருடைய சடலம் வீட்டு முற்றத்தில்.. ஒரு கோரைப் பாயில்!

சற்று நேரத்தில் அவருடைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்வரை பாதுகாக்கப் படவேண்டிய நோக்கத்துடன் சடலத்தை மதுரை மத்திய மருத்துவமனையிலுள்ள குளிர்பதன மார்ச்சுவரி அறைக்கு கொண்டு செல்ல அவருடைய நெருங்கிய உறவினர்கள், என்னைப் போன்ற நண்பர்கள், சிலரைத் தவிர வீடு வெறிச்சோடிப் போனது.

வாசலில் தன்னுடைய சகாக்களுடன் நின்றிருந்த ஆலை மேலாளர் என்னுடைய கண்ணுக்கு அப்போது ஒரு அரக்கனைப் போல் தோன்றினார்.

என்ன செய்ய முடியும்?

அந்த நல்ல மனிதர் தன்னுடைய மேலாளர் செய்திருந்த தகிடுத்தத்தை யார் வாயாலேயோ (என்னை ஆலைக்குக் கொண்டு சென்ற வாகன ஓட்டுனராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்) கேள்விப்பட்டதும் அவமானம் தாங்க முடியாமல் பதற்றமடைந்து அதன் விளைவாக ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகியிருப்பார் என்று நினைத்தேன்.

நல்லவேளையாக அந்த நல்ல மனிதருடைய மரணம் என்னால் ஏற்படாமல் இருந்ததே என்று தோன்றியது. முந்தைய நாள் இரவு என்னை அவருக்கு தொலைப்பேசி செய்யவிடாமல் பேசி நேரத்தைக் கடத்திய அந்த அரசு வங்கியின் மேலாளரை மனதுக்குள் வாழ்த்தினேன். இல்லையென்றால் நான் ஆலையில் நடந்த விஷயத்தை அவரிடம் தெரிவிக்கப் போக அதனால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வுக்கு நான் ஆளாகியிருக்க நேர்ந்திருக்குமே?

நான் மதுரையிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை இந்த பிரச்சினை ஒரு தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்தது.

அவருடைய அந்த அகால மரணம் அடுத்த நாள் நடந்த வங்கி மேலாளர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமலே போனது.

அதனுடைய விளைவுதான் எனக்கு ஏற்பட்ட அவமானமும், மாற்றமும்..

தொடரும்..

26 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 198

அவருடைய குரலில் அளவுக்கு அதிகாமாக தெரிந்த கரிசனம் என் கவனத்தைக் கவர்ந்தது. நான் வியப்புடன் அவரை நோக்கி திரும்பிய அதே நேரத்தில் தொழிலாளர் ஒருவரின் கையிலிருந்த மூட¨ கைத்தவறி கீழே விழுந்து வாய் பிளக்க வெளியில் வந்து விழுந்தவற்றைப் பார்த்து மலைத்துப் போய் நின்றேன்..

கிடங்கில் என்னுடன் நின்றிருந்த என்னுடைய உதவியாளரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்.

மூட்டையிலிருந்தவை நூற்பாலை உபயோகப்படுத்தக் கூடிய பஞ்சு அல்ல என்பது அதைக் கண்டவுடனே தெரிந்தது. மெக்கானிக்குகள் வேலை முடிந்ததும் கை துடைக்க உபயோகப்படுத்தும் வேஸ்ட் காட்டன் எனப்படும் ஒருவகை தரம் குறைந்த பஞ்சு.

நூற்பாலையில் உபயோகிக்கக் கூடிய தரம் வாய்ந்த பஞ்சின் விலையில் பத்தில் ஒரு மடங்கு இருக்கக் கூடிய பஞ்சு.

நான் அதிர்ந்து போய் மேலாளரைப் பார்த்தேன். அவருடைய முகத்தில் கையும் களவுமாய் பிடிபட்டுவிட்டோமே என்ற ஆத்திரம்தான் மேலோங்கியிருந்தது.

அதற்குக் காரணமாயிருந்த தொழிலாளரை கை நீட்டி அடிக்க போக இதை எதிர்பாராத தொழிலாளரும் அவருடன் நின்றிருந்த சக தொழிலாளர்களும் கோபத்துடன் மேலாளரை எதிர்கொள்ள அங்கு சற்று நேரத்தில் ஒரு கைகலப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவானது.

அந்த சூழ்நிலையில் மேற்கொண்டு ஆய்வைத் தொடர விரும்பாததாலும் பருத்தி பஞ்சின் வாசம் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாலும் நான் கிடங்கை விட்டு உடனே வெளியேறி என்னை பிந்தொடர்ந்து வந்த என்னுடைய உதவியாளரிடம், ‘கிடங்க பூட்டி சீல் வச்சிட்டு வாங்க போகலாம். அப்புறமா ஓனர வரச்சொல்லி மேற்கொண்டு இன்ஸ்பெக்ஷன வச்சிக்கலாம்.’ என்றேன்.

அதற்கு மேலாளர் ஒத்துக்கொள்வாரோ மாட்டாரோ என்ற குழப்பத்தில் என்னுடைய உதவியாளர் அவரைப் பார்க்க அவரோ எதிர்பார்த்ததுபோலவே, ‘எதுக்கு சார் சீல் வைக்கச் சொல்றீங்க? இதுல இருக்கற சரக்கோட மதிப்புல பாதியத்தான நீங்க லோனா குடுத்துருக்கீங்க? அதெப்படி முழு கொடவுனுக்கும் நீங்க சொந்தம் கொண்டாட முடியும்?’ என்றார் பிரச்சினை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்.

அவருடைய நோக்கம் எனக்கு தெளிவாகப் புரிந்தது. பிரச்சினையை திசை திருப்ப அவர் முயல்கிறார் என்று தெரிந்தது. இருப்பினும், ‘இங்க பாருங்க மேனேஜர் சார், இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் பார்த்தது ரொம்பவும் சீரியசான விஷயம். நாங்க கடன் குடுத்தது தரம் வாய்ந்த முதல் க்ரேட் பஞ்சுக்கு.. என்னோட அசிஸ்டெண்ட் மூட்டைகள கணக்கிட்டபோது மூட்டைகளின் எண்ணிக்கை நீங்க குடுத்திருந்த அறிக்கையிலிருந்த எண்ணிக்கைக்கு குறைவா இருந்தத சுட்டிக் காட்டியிருக்கார். அத்தோட இப்போ கீழ விழுத்த மூடையிலிருந்த வேஸ்ட் காட்டனையும் பார்த்தப்புறமும் இந்த கொடவுன வெறுமனே பூட்டிட்டு போக என்னால முடியாது. மில்லும் ஒடாம மூடிக் கிடக்கு. அதனால பாதுகாப்பு காரணம் கருதி இதை பூட்டி எங்க பேங்கோட சீல் வச்சிட்டு போறத தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் போனதுக்கப்புறம் இந்த பூட்ட திறந்து நீங்க அந்த மூடைகளை அப்புறப்படுத்திரலாம் இல்லையா? அதுக்காகத்தான் இந்த சீல். இதுக்கும் மீறி நீங்க என்ன தடுத்தீங்கன்னா நா உடனே போலீசுக்கு போறதத் தவிர வேறு வழியில்லை. ஒங்க ஓனர நான் ரொம்பவும் மதிக்கறதுனால அத செய்ய வேணாமேன்னு பாக்கேன். ஆனா நீங்க பிடிவாதமா நின்னா அதையும் நான் செய்ய தயங்க மாட்டேன். என்ன சொல்றீங்க?’ என்றேன் சற்றே கோபத்துடன்.

மேலாளர் தன்னுடைய உதவியாளர்களைப் பார்த்தார். நான் போலீஸ் என்றதுமே அடியாட்களைப் போன்ற தோற்றத்துடன் இருந்த அவருடைய உதவியாளர்கள் வெகுண்டு என்னைக் கோபத்துடன் பார்ப்பதைப் பார்த்தேன். விட்டால் என்னையும் என் உதவியாளரையும் அடித்துப் போடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் போலிருந்தது.

ஆனால் better sense prevailed என்பார்களே அதுபோல மேலாளர் வேண்டாம் என்று கண்களாலேயே அவர்களை நிறுத்தினார். நான் என் உதவியாளரைப் பார்த்து, ‘எதுக்கும் இருக்கட்டும்னு நான் நம்ம சீலிங் பாக்ஸ கொண்டு வந்தேன். நீங்க கார்லருக்கறத எடுத்து கிடங்க பூட்டி சீல் வைங்க. நாம போகலாம்.’ என்றேன்.

என்னுடைய உதவி மேலாளர் அப்போதும் அச்சத்துடன் நான் சொன்னதை செய்யாமல் ஆலை மேலாளரைப் பார்த்தார். அவர் தினந்தோறும் அந்த மில்லைக் கடந்துதான் வீடு திரும்ப வேண்டும். அதை நினைத்து பயப்படுகிறார் என்று நினைத்தேன். நியாயம்தானே.. வங்கிக்காக செய்யப்போய் வழியில் இவர்கள் கையில் அடிபடவேண்டுமா என்று நினைத்திருப்பார்.

மேலாளர் ‘சரி, செய்யுங்கள்’ என்பதுபோல் சைகைக் காட்ட என்னுடைய உதவி மேலாளர் அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய வேலையை செவ்வனே செய்து முடித்தார்.

நான் மேலாளரைப் பார்த்து, ‘நீங்க உங்க முதலாளிக்கு விவரம் சொல்லிருங்க. நான் நாளைக்கு இல்ல அடுத்த நாள் மறுபடியும் வருவேன். அந்த நேரத்துல ஒங்க முதலாளி இங்க இருந்தா நல்லது.’ என்றேன்.

அவர் பதிலேதும் பேசாமல் ஏதோ யோசனையில் இருக்க நானும் என்னுடைய உதவி மேலாளரும் நாங்கள் வந்த வாகனத்தில் ஏறாமல் வாசலை நோக்கி நடந்தோம்.

வாகன ஓட்டுனரோ எங்கள் பின்னாலேயே ஓடி வந்தார். ‘சார் நீங்க கார்ல ஏறாம திரும்பி போனீங்கன்னு தெரிஞ்சா முதலாளி என்னெ வேலைய விட்டே தூக்கிருவாருய்யா. நீங்க இந்த மேனேசர பத்தியெல்லாம் கவலப் படாதீங்க. இப்ப இங்க நடந்தது எதுக்கும் ஐயா பொருப்பாருக்க மாட்டாருய்யா. நீங்க வண்டில ஏறுங்கய்யா நா கொண்டு விட்டுடறேன்.’ என்று வழிமறிக்க நானும் அதற்கு மேலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துவது சரியல்ல என்று தீர்மானித்து வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்.

என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பும் வழியில் என்னுடைய உதவி மேலாளர் புலம்பிக்கொண்டே வந்தார். ‘சார் அந்த மேனேஜர் பொல்லாத ஆள் சார். நீங்க பேசாம இந்த விஷயத்த ஓனர் கிட்ட சொல்லி அவங்க கணக்க திருப்பி அடைக்க சொல்றது தான் சரி. அவர் தங்கமானவர்தான் சார். ஆனா அவரால இனியும் இந்த மேனேஜர மாத்தாம இந்த மில்ல நடத்த முடியும்னு எனக்கு தோனல சார். ஏற்கனவே அவர் ஹார்ட் பேஷண்ட். வயசு வேற எழுபதாவப் போகுது. ஒரேயொரு பொண்ணு. அதுவும் வெளி நாட்டில செட்டிலாயிருச்சி. ஒய்ஃபும் இல்ல. இவர் என்ன ட்ரை பண்ணாலும் இந்த மேனேசர் வேலைய விட்டுட்டு போக மாட்டார் சார். ஏற்கனவே அந்த வயசானவருக்கப்புறம் நாந்தான் இந்த மில்லுக்கு வாரிசுன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டிருக்கார்னு கேள்வி.’

அவர் சொன்னதெல்லாம் நான் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான் என்றாலும் அவருடைய மகிழ்ச்சிக்காக, ‘அப்படியா எனக்கு தெரியாதே.. ஒங்களுக்கு இப்படி இதெல்லாம்..’ என்று சொல்ல அவர் சந்தோஷத்துடன் மேலும் சில விவரங்களை அள்ளி வீசினார்.

அவருடைய மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாத நான் அவர் தொடர்ந்து கூறியவற்றை வேறு வழியில்லாமல் கேட்டும் கேட்காமலும் அமர்ந்திருந்தேன்.

அந்த மில் முதலாளியை முதன் முறை சந்தித்தபோதே இப்போது என்னுடைய உதவியாளர் கூறிய எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் என்னிடம் கூறியிருந்தார். ‘எனக்கு ஆண் வாரிசுன்னு ஒருத்தனும் இல்லய்யா. அதான் எங்க ஊர், என் சாதிய சேர்ந்த பயன்னு கேள்விப்பட்டதும் சேத்துக்கிட்டேன். படிச்சி வேற இருக்கான். ஒரு மில்லுல வேல பாத்த அனுபவமும் இருக்கு. இப்ப என்னடான்னா மில்லுல நா அவன் சித்தப்பான்னு சொல்லிக்கிட்டு அலையறான். என்னைய என்ன செய்ய சொல்றீங்க? எனக்கும் இவனெ விட்டா வேற ஆளும் இல்ல.. மருமகனுக்கு இதுலெல்லாம் எந்த பிடிப்பும் இல்ல. மாச சம்பளத்துக்கு வேலை செஞ்சா போறும் நினைக்கார். பெரிய எடத்து பிள்ளை.. என்னாலயும் வற்புறுத்த முடியலய்யா.. அதான் போற வரைக்கும் போகட்டும்னு இருக்கேன். ஒங்க பாங்க்ல வாங்குன லோனுக்கு ரெண்டு மூனு மடங்கு மேல அந்த மில் எடமே போகும்யா. அப்படியே எனக்கு ஏதாச்சும் ய்ட்டாலும் ஒங்க லோன் பணத்த ஒங்களால எடுத்துறமுடியும்.. கவலப்படாதீங்க.’ என்றதை நினைத்துப் பார்த்தேன்.

அவர் நம்பி வைத்த ஆள் இப்படியொரு மோசடி வேலையில் ஈடுபட்டிருப்பது அவருக்கு தெரிந்திருக்குமா என்றும் நினைத்தேன். எனக்கு ஒருவரை பார்த்ததுமே எடை போட்டுவிடமுடியும் என்று நான் நினைத்திருந்தது உண்மையானால் இது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இல்லையென்றால் முதல் முறையாக என்னுடைய கணிப்பில் நான் தோற்றுப் போனேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அலுவலகத்திற்கு திரும்பியதும் என்னுடைய உதவியாளரும் நானும் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த பஞ்சு மாதிரிகளை ஆராய்ந்தோம். பஞ்சு வகைகளை தரம் பார்க்கும் தகுதி எங்களைப் போன்ற வங்கி அதிகாரிகளுக்கு இல்லையென்பதால் சாதாரணமாக இதற்கென தகுதி வாய்ந்த சிலரை அணுகுவதுண்டு. அத்தகைய ஒருவர் மதுரையிலும் இருந்தார்.

என்னுடைய உதவியாளரை அவரிடம் நாளை இவற்றுடன் அனுப்புவதெனவும் அவருடைய கருத்தைக் கேட்ட பிறகு மேற்கொண்டு என்ன செய்யலாம் என தீர்மானிப்பதெனவும் முடிவு செய்துவிட்டு ஆலையின் கிடங்கில் இருந்த மூடைகளுக்கும் அவர்களுடைய முந்தைய அறிக்கையில் குறிக்கப் பட்டிருந்த மூடைகளுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை வைத்து அவற்றின் மதிப்பையும் கணக்கிட்டோம். குறைவாக இருந்த சரக்கிற்கு ஈடான தொகையை ஒரு வாரத்திற்குள் அடைக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை தயார் செய்துக்கொண்டு வர என்னுடைய உதவியாளரை பணித்தேன்.

ஆனால் அதை விட முக்கியமாக அவிழ்ந்து விழுந்த மூடையிலிருந்த தரம் குறைந்த பஞ்சு இன்னும் எத்தனை மூடைகளில் இருக்குமோ என்ற கவலை என்னை ஆட்கொண்டது. இத்தகைய தில்லுமுல்லுக்கு ஆலையின் உரிமையாளர் நிச்சயம் பொறுப்பாயிருக்க மாட்டார் நினைத்தேன்.

அது உண்மையாயிருக்கும் பட்சத்தில் இவ்விஷயத்தை அவரிடம் உடனே தெரிவிக்க வேண்டாமா என்றும் நினைத்தேன். இது நிச்சயம் மேலாளருடைய வேலையாய்த்தான் இருக்கும். ஏனெனில் கடந்த ஆறுமாதங்களாக மூடிக்கிடந்த ஆலைக்கு உரிமையாளர் வாரம் இருமுறை மட்டுமே சென்றுவந்ததாக அவரே என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார்.

அலுவலகம் திரும்பியதுமே இவ்விஷயத்தை உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நான் பிறகு, வேண்டாம் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று அடுத்த நாளைக்கு தள்ளிப்போட்டேன், அந்த முடிவு எத்தனை மன நிம்மதியை எனக்கு பின்வரும் நாட்களில் கொடுக்கப் போகிறது என்பதை அறியாதவனாய்..

தொடரும்

24 September 2006

கடந்து வந்த பாதை - 4 ஆ

எதிர்பாராமல் என்னை சந்திக்க நேர்ந்ததை நினைத்து மகிழ்ந்துப் போய் என்னுடைய கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார். நான் அப்போது பெரம்பூரில் குடியிருந்தேன். அவரும் பெரம்பூரில்தானே இருப்பதாய் சொன்னார் என்பது நினைவுக்கு வர.. ‘என்ன ராஜ் இங்க நிக்கீங்க? பெரம்பூர் பஸ் அந்த ஸ்டாப்புலதான வரும்?’ என்றேன்.

அவர் அதே மென்மையான புன்னகையுடன், ‘நாங்க இப்ப வில்லிவாக்கத்துல இருக்கோம் ஜோசப். பெரம்பூர்ல நாங்க இருந்த வீடு போறல.. தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சி. மூத்த தங்கையும் டீச்சர் வேலைக்கு போறா.. அதான் கொஞ்ச பெரிய வீடா பாத்து போய்ட்டோம்.. தம்பி பெஞ்சாதிக்காக பெல் வேலைய விட்டுட்டு இங்க வந்துட்டான் IDPLல டிராஃப்ட்ஸ் மேனா சேர்ந்திருக்கான். பெல் சம்பளம் இல்லன்னாலும் அவன் பெஞ்சாதியும் வேலைக்கு போறனதுனால இது போறும்னு வந்துட்டான்... நீ எப்படி இருக்கே.. கல்யாணம் எப்போ?’ என்றார்.

மூத்தவர் இருக்க இளையவருக்கு கல்யாணமா என்று எனக்கு தோன்றினாலும் அவரை எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.

என்னுடைய பார்வையின் நோக்கம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘நல்ல எடமா வந்தது ஜோசப். அம்மாவுக்கும் பொண்ண ரொம்ப புடிச்சிருந்தது. நாந்தான் என்னெ என் போக்கிலேயே விட்டுருங்கம்மான்னு சொல்லி அவங்கள வற்புறுத்தி சம்மதிக்க வச்சேன்.’

‘அப்போ நீங்க அந்த பிராமின் பொண்ண மறக்கவே இல்லையா ராஜ்?’ என்றேன்.

அவரோ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாலைக்கு மறுபுறம் வீட்டுக்குச் செல்ல வேண்டுமே என்ற பரபரப்புடன் கடைகளை மூடிக்கொண்டிருந்த பணியாட்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மேற்கொண்டு ஏதும் கேட்க மனசில்லாமல், ‘ஒருநாள் ஒங்க ஆஃபீசுக்கு வரேன் ராஜ். நிறைய பேசணும்’ என்று விடைபெற்றுக்கொண்டு என்னுடைய நிறுத்தத்திலிருந்து புறப்படவிருந்த அன்றைய இறுதி பேருந்தை நோக்கி ஓடினேன்..

சுமார் இரு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை பகல் அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, ‘ராஜா சாருக்கு ப்ரோமோஷனாயிருச்சி சார். ராஜாமுந்திரி டெப்போவுக்கு இன் சார்ஜா டிரான்ஸ்ஃபர் ஆயி போய்ட்டாரு.’ என்றார் அவருடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏன் என்னிடம் கூட சொல்லாமலே போய்விட்டார் என்று நினைத்தேன்.

அதற்குப் பிறகு எனக்கும் மேலாளர் பதவி உயர்வு வர ஊர் ஊராக சுற்றிவிட்டு 1997ம் வருடம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.. எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த கோடம்பாக்கத்தில் இருந்தேன்.

ஒரு நாள் நானும் என் மனைவி மற்றும் குழந்தைகள் பெரம்பூரிலிருந்த என் பெற்றோருடைய வீட்டிற்குச் சென்று விட்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சென்னைக் கீழ்பாக்கம் மருத்துவமனை கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் வந்ததும் ஆட்டோ பழுதாகி நின்றுவிட அதிலிருந்து இறங்கி வேறொரு ஆட்டோ கிடைக்காதா என்று நின்றுக்கொண்டிருந்த நேரம் யாரோ என்னுடைய பெயரை கூப்பிடும் குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்த ராஜாவைக் கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய கோலத்தைப் பார்த்து ஒரு நொடி பதறிப்போனேன்.

அதே வெள்ளை உடுப்புதான். சுருட்டை முடி இருந்த இடம் தெரியாமல்போய் தலை முக்கால் வழுக்கையாகியிருந்தது. முகத்தில் இரண்டு நாள் தாடி, வெள்ளை வெளேன்ற உடைக்கு மேச்சாக. கண்ணில் பருத்த கண்ணாடி. முன்பே அணிந்திருந்ததுதான் என்றாலும் இப்போது மெலிந்து களைத்திருந்த முகத்தில் சற்றே பருமனாக தெரிந்தது.

‘உன் ஒய்ஃபும் பிள்ளைங்களுமா ஜோசப்? கல்யாணத்துக்குக் கூட கூப்பிட முடியாத அளவுக்கு என்னெ மறந்துட்டியா ஜோசப்?’ என்ற தழுதழுத்த அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘என்ன ராஜ் அப்படி கேட்டுட்டீங்க? ஒங்க விலாசம் தெரியாம நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.’ என்றேன்.

‘உண்மைதான் ஜோசப். என்னுடைய பிடிவாத குணம் என்னைய ரொம்பத்தான் கஷ்டப்படுத்திருச்சி. ராஜாமுந்திரியில ஒரு கலெக்டர முறைச்சிக்கிட்டு.. நார்த்ல அஞ்சு வருசமா படாத பாடு பட்டுட்டேன்.’

‘அப்போ ஒங்க அம்மா, தங்கைகள்லாம்? இங்க தனியாவா இருந்தாங்க?’

அவர் அதைப் பற்றி பேச விரும்பாதவர்போல்.. ‘அதிருக்கட்டும் ஜோசப்.. ஒன்னெ பத்தி பேசு.. இப்ப நீ என்னவா இருக்கே.. ஒன் ஒய்ஃப் எந்த ஊரு?’ என்று பேச்சை மாற்றினார்.

என்னுடைய மனைவிக்கு முன்னால் அவருடைய குடும்பத்தைப் பற்றி பேச விரும்பவில்லையென்பதை உணர்ந்த நான் எனக்கு திருமணம் நடந்ததைப் பற்றியும், நான் சுற்றி வந்த ஊர்களைப் பற்றியும் சுருக்கமாகக் கூறிவிட்டு கிளம்பினேன்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறும் நேரத்தில் என் கையில் அவருடைய விசிட்டிங் கார்டை திணித்து, ‘டைம் கிடைக்கும்போது கூப்பிடு ஜோசப்.. சந்திக்கலாம்..’ என்றார்.

ஆட்டோ புறப்பட்டதும் கையிலிருந்த அட்டையைப் பார்த்தேன். அவர் அதே அலுவலகத்தின் சென்னை டெப்போவில் துணை மேலாளராக பதவி உயர்வைப் பெற்றிருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் ஒரு சந்தோஷம் மனதை நிரப்பியது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைத்து நாளையே அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறினேன். ‘வீட்டுக்கே வந்திருங்க ஜோசப். தனியாத்தான் இருக்கேன். எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம்.’ என்றார்.

‘தனியாத்தான் இருக்கேன்..’ என்ற வாக்கியம் என்னை அன்று இரவு முழுவதும் சங்கடப்படுத்தியது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் என் மனைவியிடம் கூறிவிட்டு காலையிலேயே அவருடைய வீட்டுக்கு சென்றேன்.

வீடு நல்ல வசதியுடன் அம்சமாக இருந்தது. வீட்டு முகப்பில் துணை மேலாளர், இந்திய உணவுக் கழகம் என்ற பளபளப்பான பலகை.. அதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

ஆனால், அவருடன் சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்து பேசிவிட்டு திரும்பியபோது மனது கணத்துப் போயிருந்தது..

என்ன உலகமடா என்று தோன்றியது..

அவர் சென்னையை விட்டு மாறிப் போனவுடனேயே அவருடைய இளைய சகோதரர் தன்னுடயை மனைவியின் வற்புறுத்தலால் வயதான தாயையும் இரு தங்கைகளையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போயிருக்கிறார்.

வடநாட்டிலிருந்தவாறே அவர்களை வழிநடத்தியிருக்கிறார் என் நண்பர். தங்கையின் வருமானத்தை தொடாமல் மாதா மாதம் அவர் அனுப்பி வைத்த தொகையைக் கொண்டே அவருடைய தங்கைகளில் இளையவரும் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து பிறகு அவருக்கு தெரிந்த ஒரு தனியார் பள்ளியில் பி.டி அசிஸ்டெண்டாக பணியில் சேர்த்திருக்கிறார்.

இதற்கிடையில் ராஜாவின் தாயார் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவருடைய முகத்தைக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. வட இந்தியாவிலிருந்து வண்டி பிடித்து வருவதற்குள் உடம்பு தாங்காது என்று உறவினர்கள் பெண்கள் இருவரையும் வற்புறுத்தி இறுதிச் சடங்கை நடத்தி முடித்திருக்கின்றனர். இளைய சகோதரர் பேருக்கு இறுதி சடங்கிற்கு வந்து போயிருக்கிறார்.

ராஜா தன் தங்கைகளின் ஊதியத்திலிருந்து சேமித்து வைத்த தொகையுடன் தன்னுடைய பி.எஃப், எல்.ஐ.சி பாலிசிகள் மீது கடன் பெற்று இரு தங்கைகளைக்கும் ஒரே பந்தலில் வைத்து திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கைகளின் திருமணத்திற்கு நல்ல வசதியுடன் இருந்த ராஜாவின் தம்பி பண உதவி ஒன்றும் செய்யாமல் இருந்ததுடன் தன்னை கவுரவித்து அழைக்கவில்லையென்பதைக் காரணம் காட்டி திருமணத்திற்கே வராமல் இருந்திருக்கிறார்.

‘தங்கச்சிங்க ரெண்டு பேரும் அவங்கவங்க மாமியார் வீட்டோட இருக்காங்க ஜோசப். தம்பி தனியாத்தான் இருக்கான். பேச்சு வார்த்தை இல்லை. கல்யாணத்துக்கு வராட்டியும் அவன் கிட்ட சமாதானம் செஞ்சிக்க என்னென்னவோ செஞ்சி பாத்துட்டேன்.. அவன் பெஞ்சாதி எதுக்குமே ஒத்து வரமாட்டேங்குறா.. சரி போடான்னு விட்டுட்டேன்.. இன்னும் ரெண்டு வருசம்.. ரிட்டையர் ஆயிருவேன்.. இது நம்ம ஆஃபீஸ் லீஸ்ல எடுத்து குடுத்த வீடு. ரிட்டையர் ஆய்ட்டா காலி பண்ணணும்.. ரெண்டு தங்கைங்க கல்யாணத்துக்கு வாங்கன கடன ரிட்டையர் ஆறதுக்குள்ள அடைச்சிர முடியும்னு தோனல.. பென்ஷன் பணத்துலருந்துதான் அடைக்கணும்னு நினைக்கேன்.. அப்புறம்? கடவுள் விட்ட வழி..’

அன்றைய சந்திப்புக்குப் பிறகு அவரை மீண்டும் சந்திக்கவே எனக்கு மனம் வரவில்லை.

இரண்டு வருடங்கள் கழித்து சைதாப்பேட்டை மின் ரயில் நிலையத்தில் தற்செயலாக அவரை சந்தித்தேன்..

அவர் வேண்டாம் என்று தடுத்தும் அவருடைய வீட்டுக்கு சென்றேன்..

நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் பத்துக்கு பத்து என்ற அறையில்.. மிகவும் எளிமையான நிலையில்..

பார்க்கவே மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. என் கண்கள் கலங்கிப் போயின.

அப்போதும் மனம் தளராமல் புன்னகையுடன், ‘என்ன ஜோசப் இப்படி எமோஷனல் ஆவறே.. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.. என்னால முடியறப்பல்லாம் என் தங்கச்சிங்கள, என் மருமகப் பிள்ளைங்கள போய் பாக்கேன்.. என் தம்பிதான்.. பாவி.. அப்படியே விலகி நிக்கான்.. இப்ப ரிட்டையர் ஆய்ட்டான். கார், பங்களான்னு வசதியோட இருக்கான். நா இருக்கற நிலையில அவனெ போயி பாக்கறது அவ்வளவா நல்லா இருக்காதுன்னு ஒதுங்கியே நிக்கேன்.. இங்க சுத்தி இருக்கறவங்க எல்லாருமே ஏழைங்கதான் ஜோசப்.. ஆனா உண்மையான மனுஷங்க.. எனக்கு ஒன்னுன்னா பதறிப்போயி நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு உதவுறாங்க.. எனக்கு இத விட வேற என்ன வேணும் ஜோசப்..’

அவருடைய அந்த அமைதியான விளக்கம் என்னை கண் கலங்க வைக்கிறது. அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எங்கூட வந்து இருங்கன்னு சொன்னா ஒங்கள அவமதிக்கறதாயிரும்.. ஆனா சேத்துப்பட்டுல ஒரு ஆசிரமத்துல நான் வாலண்டியரா இருக்கேன் ராஜ். நான் சொன்னா அந்த மதர் சுப்பீரியர் கேப்பாங்க.. வர்றீங்களா ராஜ்?’ என்றேன்..

அதே புன்சிரிப்புடன் வேண்டாம் என்றார். ‘இல்ல ஜோசப்.. அது யாருமே இல்லாதவங்களுக்கு.. எனக்கு ஒன்னெ மாதிரி எத்தனெ பேர் இருக்காங்க. அத்தோட நா அங்க போய் இருக்கறது தெரிஞ்சா என் தங்கச்சிங்களோட மாமனார், மாமியார் வீட்ல என்ன நினைப்பாங்களோ.. என்னால என் தங்கைகளோட கவுரவம் போயிரக்கூடாது.. நா நல்லாத்தான் இருக்கேன் ஜோசப்.. நீ டைம் கிடைக்கறப்ப வந்து போயேன்.. உன் வீட்டுக்கு எப்பனாச்சும் கூப்பிடு.. வரேன்..’

கனத்த மனத்துடன் திரும்புகிறேன்..

திரும்பும் போது தற்செயலாக நிமிர்ந்து பார்க்கிறேன்.. ‘ராஜா..
துணை மேலாளர்.. இந்திய உணவுக் கழகம்.’ என்ற வர்ணம் உரிந்து நிற்கும் மரப் பலகை கண்களில் படுகிறது.. அந்த பலகையைப் போலத்தான் அவரும்..

அவரை என்னால் எப்படி மறக்க முடியும்?

**************

23 September 2006

கடந்து வந்த பாதை - 4

நான் என்னுடைய வங்கியில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்திருந்த காலம்.

என்னுடைய வங்கியில் வாடிக்கையாளராகவிருந்த சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவருடன் பழக்கமாகி அது நாளடைவில் நட்பாக மாறியது.

அவருடைய பெயர் ராஜா (புனைப்பெயர்).

எனக்கும் அவருக்கும் சுமார் பதினைந்து வருட வயது வித்தியாசமிருந்தும் எங்களிடையே ஏற்பட்ட நட்பு ஒரு அலாதியான நட்பாக அமைந்தது என்றால் மிகையாகாது. வயதில் மூத்தவராயிருந்தும் தன்னைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்து சம்மதிக்க வைத்தார். ‘நீங்க என்ன அண்ணன்னு கூப்ட்டா நம்ம நட்புல ஒரு நெருக்கம் இருக்காது ஜோசப். You are so matured to your age.. அதனால சும்மா ராஜான்னு பேர் சொல்லியே கூப்டுங்க..’ என்பார்.

அவர் நான் குடியிருந்த வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் நானும் அவரும் தினமும் காலையில் எங்களுடைய வீட்டுக்கருகிலிருந்த பஸ் நிறுத்தத்திற்கு நடந்து செல்லும் அந்த பத்து நிமிடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.

ராஜா அப்போது இந்திய உணவுக் கழகத்தில் (இ.உ.க) இடை நிலை அதிகாரியாக இருந்தார். துணை மேலாளருக்கு கீழுள்ள பதவி.

ராஜா படித்து முடித்து இளநிலை அதிகாரியாக பணியில் சேரவும் அவருடைய தந்தை ஓய்வு பெறவும் சரியாக இருந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சகோதரர், பள்ளி இறுதியாண்டிலும் எட்டாவது வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்த இரண்டு தங்கைகள்.. ஓய்வு பெற்ற தந்தை, தாயார் என ஆறு பேர் கொண்ட குடும்பம் இவருடைய சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல்.

‘அப்பா ரிட்டையர் ஆயி வந்து நின்னதுமே எனக்கு ஒன்னும் புரியல ஜோசப். அப்பாவுக்கு அவங்களோட கையாலாகாத்தனத்த நினைச்சி நினைச்சே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருச்சின்னு நினைக்கேன். எப்பவும் எரிஞ்சி விழுந்து குடும்பத்துல அமைதியே போயிருது. அப்ப இருந்த மாதிரியே எல்லா வசதியும் வேணுங்கறார். சில சமயங்கள்ல என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது ஜோசப். நீ யார்கிட்டயாவது சொல்லி எனக்கு ஈவ்னிங் நேரத்துல ஒரு பார்ட் டைம் ஜாப் வாங்கித் தாயேன்.’ என்றார் ஒரு நாள்.

நான் வங்கியில் புதிதாய் சேர்ந்திருந்ததால் எனக்கு யாரையும் உதவியென்று கேட்க கூச்சமாக இருந்தது. ஆயினும் ராஜாவின் குடும்ப சூழலை நினைத்து ஒரு நாள் புரசைவாக்கத்தில் சிறியதாய் ஒரு ஜவுளிக் கடை வைத்திருந்தவரிடம் அவரைப் பற்றி சுருக்கமாய் கூறி ‘உங்களால் உதவி செய்ய முடியுமா’ என்று கேட்டேன். அவருக்கு என்ன தோன்றியதோ, ‘சரி நாளைக்கு சாயந்தரமா வரச் சொல்லுங்க பார்ப்போம்.’ என அடுத்த நாள் அவருடன் பஸ் நிறுத்தத்திற்குச் செல்லும் வழியில், ‘அவர பார்த்தா நல்லவரா தெரியுது ராஜ், நீங்க போய் பாருங்களேன்’ என்றேன்.

அவருக்கும் ஜவுளிக் கடை முதலாளிக்கும் பரஸ்பரம் பிடித்துப்போக அவர் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே ஊதியமும் அமைந்தது. ராஜா பி.காம் பட்டதாரியானதால் கணக்கு எழுத வந்தது. மாலை நேரங்களில் அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டிற்குக் கூட செல்லாமல் ஜவுளிக்கடைக்கு பின்பக்கம் இருந்த முதலாளியின் வீட்டில் கை கால் அலம்பிக்கொண்டு கடையில் கல்லா பெட்டிக்கு அருகில் அமர்ந்து அன்றைய கணக்கை எழுதி முடித்துவிட்டு கடையை பூட்டும் நேரத்தில் வீடு திரும்புவார்.

ஆயினும் காலையில் அவரை சந்திக்கும்போது பளிச்சென்று இருப்பார். வாரத்தில் ஆறு நாட்களும் ஒரே மாதிரியான வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும்தான். முழுக்கை சட்டையை மடித்து அரைக்கையாய் ஆக்கியிருப்பார்.

அப்போதெல்லாம் காட்டன் துணிகள்தான். பாலிஸ்டர் புதிதாக அறிமுகமாகியிருந்த காலம் அது. ஆனால் அதன் அபிரிதமான விலை எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் எல்லைக்கப்பாலிருந்தது.

‘எதுக்கு ராஜ் வெள்ளை சட்டையவே போடறீங்க? சாமியார் மாதிரி இருக்கீங்க?’ என்பேன் கேலியுடன்.

அதற்கு அவர் அளித்த விளக்கம் இப்போதும் மனதில் கிடந்து நெருடுகிறது. ‘அதுக்கு ஒரு காரணம் இருக்கு ஜோசப். எனக்கு இருக்கற குடும்ப கடமைகள்லாம் முடியறவரைக்கும் காதல், கத்தரிக்காய்னு எந்த பந்தத்துலயும் மாட்டிக்கற எண்ணம் இல்லை. இந்த உடுப்பைப் பார்த்தா எந்த பொண்ணுக்காவது என் மேல காதல் வருமா, சொல்லு. இந்த காலத்து பசங்களுக்கு பகட்டா இருக்கற ஆம்பளைங்களத்தான பிடிக்குது? அதான்.. மெய்ட்டெய்ன் பண்ண கொஞ்சம் கஷ்டமாருந்தாலும்.. இது நானே தேர்ந்தெடுக்கிட்ட கோலம்..’

ஆயினும் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. ராஜா என்னதான் வெள்ளை நிற ஆடையை உடுத்தினாலும் அவருடைய நிறமும், களையான முகமும், மெலிந்த அளவான தேகமும், சுருட்டை முடியும் அக்காலப் பெண்களைக் கவராமல் இல்லை. நாங்கள் இருவரும்
செல்லும் அதே பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் வரும் ஒரு பிராமணக் குலத்தைச் சார்ந்த அழகான பெண் ஒருவருக்கு இந்த கோலம் மிகவும் பிடித்திருந்தது.

ஆரம்பத்தில் அவருடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்து அந்த பெண்ணின் முயற்சியை மறுதலித்த ராஜா நாளடைவில் காதல் வசப்பட்டுப் போனார். என் கண் முன்னரே சாதாரணமாக ஆரம்பித்த அவர்களுடைய நட்பு காதலாய் மலர்ந்து ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லையென்ற நிலையை அடைந்தபோது திடீரென்று அப்பெண் சுமார் ஒரு மாத காலம் காணாமல் போனார். நான் பதறிப் போனேன். ஆனால் ராஜாவின் நடத்தையில் பெரிதாய் எந்த மாறுதலும் இல்லை.

‘என்ன ராஜ்.. அவங்கள கொஞ்ச நாளா பஸ் ஸ்டாப்புல காணமேன்னு நான் தவிச்சி போறேன்.. நீங்க ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கீங்க?’ என்றேன் ஒரு நாள்.

அவர் மெலிதாக சிரித்த வண்ணம் என்னைப் பார்த்தார். ‘அவங்களுக்கு போன வாரம்தான் கல்யாணம் நடந்தது ஜோசப்.’

நான் பதறிப்போய், ‘என்ன ராஜ் சொல்றீங்க? அதெப்படி ஒங்களுக்கு தெரியும்?’ என்றேன்.

அவர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பிறகு எந்தவித உணர்ச்சியும் இல்லாத குரலில் தொடர்ந்தார். ‘அவங்க வீட்ல அதுக்கு ஒத்துக்கல ஜோசப். ஆனா அவங்க (அந்த பெண்ணை மரியாதையுடன் அழைப்பார்) வீட்டை மீறி எங்கூட வந்துடறேன்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. எனக்கு அது சரின்னு படலை. எனக்கும் ரெண்டு தங்கைங்க இருக்காங்களே.. அவங்கள சமாதானம் செஞ்சி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன். நானும் கல்யாணத்துக்கு போய் வந்தேன். உன்கிட்ட சொன்னா நீ ஏதாச்சும் பிரச்சினை செஞ்சிருவியோன்னுதான் நான் சொல்லல.. அவங்க எடுத்த முடிவு தப்பானது ஜோசப். அதுமட்டும் நடந்திருந்தா என் குடும்பத்தோட கதி என்னாயிருக்கும்? அத்தோட அவங்க குடும்பத்தையும் நினைச்சிப் பாக்கணுமில்லே.. அதையெல்லாம் நினைச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். இனிமே நீ வேலைக்கு போவேணாம்னு சொல்லிட்டாராம்.. அவங்களோட ரிசிக்னேஷன் லெட்டரக் கூட நாந்தான் அவங்க ஆபீஸ்ல கொண்டு குடுத்துட்டு வந்தேன்.. எனக்கென்னவோ ஒரு தங்கையோட கல்யாணத்த நடத்தி முடிச்ச திருப்தி இருக்கு இப்ப..’

எப்படியொரு உயர்ந்த குணம்?

எங்களுடைய வங்கியின் புதிய கிளையொன்று சென்னை மிண்ட் தெருவில் திறக்கப்பட அங்கு மாற்றலாகிப் போனேன். என்னுடைய கிளையின் அலுவல் நேரமும் அவருடைய அலுவல் நேரமும் மாறிப்போனதால் அவருடனான என்னுடைய காலை நடை சற்று தடைபட்டுப் போனது. அவருடைய வீடு அருகாமையில் இருந்தும் அவருடைய வீட்டுக்கு நான் சென்றதே இல்லை. அப்போதெல்லாம் வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் அன்னியரை அழைக்கலாகாது என்ற ஒரு கொள்கை இருந்தது, முக்கியமாக நடுத்தர குடும்பங்களில்..

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிறு காலை அதே பஸ் நிறுத்தத்தில் நான் காத்திருந்தபோது அவரும் அங்கே வந்தார். அதே வெள்ளை நிற ஆடை. ஆனால் இன்னும் சற்று மெலிந்திருந்தார். என்னைக் கண்டதும் புன்சிரிப்புடன் நெருங்கி, ‘என்ன ஜோசப் எப்படியிருக்கே? பாக்கவே முடியல?’ என்றார் பாசத்துடன்.

நான் அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு ‘எப்படி இருக்கீங்க ராஜ்? உங்கள நினைக்காத நாளே இல்லை.. வீட்ல எல்லாரும் சவுக்கியமா? அப்பா எப்படியிருக்கார்?’ என்றேன் சரமாரியான கேள்விகளுடன்.

‘அப்பா காலமாயிட்டார் ஜோசப். ஒன்பது மாசமாச்சி. ஒனக்கு சொல்லணும்னு வீட்டுக்கு வந்திருந்தேன். நீ ஏதோ ட்ரெய்னிங்குக்கு போயிருக்கேன்னு அம்மா சொன்னாங்க. உங்கிட்ட சொல்லிரச் சொல்லிட்டு வந்தேன். சொல்லாம மறந்துருப்பாங்க. தம்பி காலேஜ் முடிச்சி திருச்சியில பெல்லுல இருக்கான். பெரிய தங்கைய டீச்சர் ட்ரெய்னிங் சேர்த்திருக்கேன். சின்னவ ஸ்கூல் ஃபைனல்.. இதான் இந்த ரெண்டு வருசத்துல நடந்தது.. அப்பா இறந்ததும் நாங்களும் வீட்ட ஷிஃப்ட் பண்ணிட்டோம் ஜோசப். இப்ப பெரம்பூர்ல இருக்கோம். அதான் ஒங்கள சந்திக்கவே முடியல. இன்னைக்கி எங்க ஆஃபீஸ் கொல்லீக் ஒருத்தருக்கு பக்கத்துல கல்யாணம்.. அதுக்காக வந்ததும் நல்லதாபோச்சி.. ஒன்னெ சந்திக்க முடிஞ்சதே’ என்றார் மென்மையான குரலில். அதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அவருடைய குரலை அருகில் எனக்குக் கூட கேட்காதவண்ணம் பேசுவார். சிரமப்பட்டுத்தான் கேட்க வேண்டும். பேச்சில் மட்டுமல்ல குணத்திலும் அப்படித்தான் பூவைப் போன்று மென்மையானவர். பெண்ணாய் பிறந்திருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரவர் பேருந்தில் ஏறி பிரிந்தோம். பிறகு அடுத்த சில மாதங்களில் நான் இளநிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று மும்பைக்கு மாற்றலாகிப் போனேன்.

அங்கு பதினெட்டு மாத காலம் இருந்துவிட்டு சென்னையில் முன்பு மிண்ட் சாலையில் இருந்து கடற்கரைச் சாலைக்கு மாற்றலாகியிருந்த கிளைக்கு உதவி மேலாளரக வந்தேன். அங்கிருந்து மிக அருகாமையில்தான் அவருடைய அலுவலகம் இருந்தது. ஒருநாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து இரவு கடைசி பேருந்துக்காக சென்னை பாரீஸ் கார்னர் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தபோது வெள்ளை வெளேர் நிற உடையில் தூரத்தில் நின்றிருந்த ஒரு உருவத்தைப் பார்த்ததும் என்னுடைய நண்பரின் நினைவு வர அவரை நோக்கி விரைந்தேன்.

அவரேதான்..

நாளை நிறைவு பெரும்..

22 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 197

ஆலையின் மேலாளரும் அவருடைய அலுவலக பணியாட்களும் மட்டுமே இருந்தனர்.

மேலாளரைப் பார்த்த முதற் பார்வையிலேயே அவரை எனக்கு பிடிக்காமற் போனது.

ஆலை உரிமையாளர் இவரை தன்னுடைய உறவினர்களுள் ஒருவர் என்று குறிப்பிட்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். அவருடைய உருவத்திற்கோ அல்லது குணத்திற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருந்தார்.

உரிமையாளரைப் பார்த்ததுமே ஒருவித அலாதியான மரியாதை தோன்றியது என்றால் மேலாளரைப் பார்த்ததுமே ஒருவித அச்சமே என்னுள் தோன்றியது.

இவரால் நிச்சயம் உரிமையாளருக்கு பிரச்சினையே வர வாய்ப்பிருக்கிறது என்றும் என் உள் மனது எச்சரித்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காரிலிருந்து இறங்கும் நேரத்தில், ‘சார் இவர் ஒரு மாதிரியான ஆளு.. சாக்கிரதையா பேசுங்க சார்.’ என்று என் காதில் கிசுகிசுத்த என்னுடைய கடை நிலை அதிகாரியைப் பார்த்தேன்.

‘ஏன் அப்படி சொல்றீங்க?’ என்றேன்.

‘சார் நானும் நம்ம கணேசனும் (என்னுடைய கிளை குமாஸ்தாக்களுள் ஒருவர். உள்ளூர்வாசி) ஆறு மாசத்துக்கு முன்னால கொடவுன் ரிலீசுக்கு வந்திருந்தப்போ இந்த மனுசன் ரொம்பவும் இல் ட்ரீட் பண்ணார் சார். அதான் சொல்றேன்.’ என்றவாறு ஓரக்கண்ணால் ஆலையின் முகப்பு வாசலில் நின்றிருந்த மேலாளரையும் அவருக்கருகில் நின்றிருந்த அவருடைய உதவியாளர்களையும் பார்த்தார்.

என்னுடைய அதிகாரி அவரைப் பார்த்த பார்வையிலேயே ஒருவித அச்சம் கலந்திருப்பதைக் கவனித்த நான் ‘நாமளும் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்’ என்று முடிவு செய்தேன்.

நாங்கள் இருவரும் வாகனத்திலிருந்து இறங்கியும் எங்களை வரவேற்க எவ்வித முனைப்பும் காட்டாத மேலாளர் நாங்கள் அவரை நெருங்கி என்னை அறிமுகப்படுத்தியதும் போனால் போகிறதென்று லேசாக புன்னகை செய்தார். ‘இப்பத்தான் சித்தப்பா ஃபோன் செஞ்சாங்க.’ அதாவது நான் வெறும் மேலாளர் அல்ல உரிமையாளரின் உறவினரும் கூட என்பதை சொல்லாமல் சொன்னார்.

‘கொஞ்சம் மில்ல சுத்தி பாக்கணுமே’ என்றேன்.

மேலாளர் தன்னுடைய உதவியாளர்களைப் பார்த்தார். கண்ணால் ஏதோ சைகை செய்ததுபோல் தெரிந்தது. கண்டுக்கொள்ளாமல் அவருடைய பதிலுக்கு காத்திருந்தேன்.

‘அதுக்கென்ன சார் பாக்கலாமே. அஞ்சாறு மாசமா லேபர் ஸ்டிரைக்.. மெஷின் மெய்ட்டனன்ஸ் ஸ்டாஃப் மட்டும்தான் மில்லுல இருப்பாங்க. வாங்க காமிக்கேன்.’ என்றவாறு தன்னுடைய உதவியாளர்கள் புடை சூழ என்னையும் என்னுடைய அதிகாரியையும் அழைத்துக்கொண்டு பேருக்கு ஆலையின் சில பகுதிகளை மட்டும் காண்பித்தார்.

மேலாளர் குணத்தில் எப்படியோ வேலையில் திறமைசாலி என்பது ஆலையை அவர் காட்டிய விதமே கூறியது. எந்த இடத்திலும் தூசு, தும்பு ஏதும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது. ஆலையின் உட்புறமும் வெளிப்புறமும் ஆறுமாதம் செயல்படாமல் இருந்த ஆலை என்றால் நம்ப முடியாத அளவுக்கு மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வந்ததை கண்கூடாகப் பார்த்தேன்.

‘எனக்கு சுத்தம்ங்கறது ஒரு மாதிரி அப்செஷன் சார். அதுல எந்தவித காம்ப்ரமைசும் செஞ்சிக்க மாட்டேன். சித்தப்பாவும் அப்படித்தான். நா மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடிச்சி எம்.பி.ஏவும் பண்ணிருக்கேன். பம்பாய்ல ஒரு ஃபேமஸ் மில்லுல இருந்த அனுபவமும் இருக்கு. சித்தப்பா கூப்டதும் அத விட்டுட்டு இங்க வந்துட்டேன். அங்க நான் பார்த்த அதே மாதிரி இங்கயும் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா வேலை செய்யாமயே சம்பளம் வாங்கணும்னு நினைக்கற ஒர்க்கர்ஸ் அத ஏத்துக்கல. அத்தோட அவங்களுக்கு சித்தப்பா மேல ஏதோ மனவருத்தம் இருக்கும் போல. நான் ஸ்ட்ரிக்டா இருக்கறத சாக்கா வச்சி ஸ்டிரைக் பண்றாங்க. பாப்போம்.. எவ்வளவு நாளைக்கு வெளியில நிப்பாங்கன்னு..’

அவருடைய குரலில் தொனித்தது ஆலையின் தற்போதைய நிலைக்கு வருத்தமாக தெரியவில்லை. இந்த வேலை நிறுத்தத்திற்கும் எனக்கும் எவ்வித காரணமும் இல்லை என்கின்ற அலட்சியமாகத்தான் தெரிந்தது.

ஆலையின் சில பகுதிகளை மட்டும் எனக்கு காண்பித்துவிட்டு, ‘என்னுடைய காபினுக்கு போலாமா சார்?’ என்றவரை வியப்புடன் பார்த்தேன்.

‘ஒங்க ஸ்டாக் வச்சிருக்கற கொடவுன பாக்கணுமே?’

மேலாளரின் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த கலக்கத்தை நான் மட்டுமல்ல என்னுடைய அதிகாரியும் கவனித்தோம். அவர் சமாளித்துக் கொண்டு தன்னுடைய உதவியாளரைப் பார்த்தார். ‘சார் நீங்க போய் என் காபின்லருக்கற ஸ்டாக் ரெஜிஸ்டரைக் கொண்டாங்க..’ என்றார்.

பிறகு திரும்பி, ‘ஒங்களுக்கு கொடவுன காட்டக் கூடாதுன்னு இல்ல சார். அங்க எப்படி இருக்கோ தெரியல. நான் அங்க போயி ரெண்டு வாரத்துக்கு மேல ஆகுது. நீங்க முன் கூட்டியே சொல்லியிருந்தா க்ளீன் பண்ணி வச்சிருப்பேன். அதான் யோசிக்கேன்..’ என்றார் தயக்கத்துடன்.

சற்று முன் வரை அவர் முகத்தில் தெரிந்த ஒருவித ஆணவம் முற்றிலும் மறைந்து போய் முகத்தில் ஒருவித கலக்கம் தெரிந்தது.

நான் சிரித்தவாறு, ‘கொடவுன் சுத்தமாருக்காங்கறதா சார் எனக்கு முக்கியம்.. ஆறு மாசத்துக்கும் மேல எந்த வித மூவ்மெண்ட்டும் இல்லாம இருக்கற கொடவுன்ல எங்க பேங்க் லோனுக்கு ஈடா ப்ளெட்ஜ் செஞ்சிருக்கற ஸ்டாக் எப்படியிருக்குங்கறதுதான சார் முக்கியம்.. ஒங்க அசிஸ்டெண்ட் ஸ்டாக் ரெஜிஸ்டர் கூட எடுக்க வேணாம்.. எங்கட்டருக்கற ஸ்டேட்மெண்ட் காப்பியிலருக்கற ஸ்டாக் இருக்குதான்னு செக் பண்ணாலே போறும்.. ஸ்டாக் முழுசையும் செக் பண்ணணும்கூட இல்ல.. ஒரு ரேண்டெம் (Random) செக்தான் பண்ணப் போறேன்.. நீங்க வாங்க..’ என்றவாறு என்னுடைய அதிகாரியை அழைத்துக்கொண்டு முன்னே செல்ல அவர் வேறு வழியில்லாமல் என்னை பின்தொடர்ந்தார்.

நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு நிமிட நடை தொலைவில்தான் இருந்தது அந்த பிரம்மாண்டமான கிடங்கு. சுமார் பத்தாயிரம் சதுர அடி பரப்பில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பருத்தி பஞ்சு மூட்டைகளிலிருந்து வந்த ஒருவித மணம் என்னை ஒரு நொடி திக்குமுக்காட வைத்தது. ஏற்கனவே எனக்கு Dust Allergy இருந்ததால் மூச்சு திணறி சட்டென்று கிடங்கிற்கு வெளியே வந்து நின்றேன்.

‘என்ன சார் என்ன ஆச்சி?’ என்றார் என்னுடன் வந்த அதிகாரி. ‘Are you allergic to dust Sir?’ என்றார்.

ஆமாம் என்று தலையை அசைத்தேன்.

‘அப்படீன்னா நீங்க இங்கயே நில்லுங்க சார். காட்டன் ஸ்மெல் கூட ஒங்களுக்கு அலர்ஜியாத்தான் இருக்கும். நீங்க எந்த போர்ஷன் ஸ்டாக்க வெரிஃபை பண்ணணும்னு சொல்லுங்க, நான் வெரிஃபை பண்றேன்.’ என்றார்.

நான் கிடங்கை விட்டு வெளியேறி என்னுடைய அதிகாரியிடம் உரையாடியதை சற்று தொலைவிலிருந்து கவனித்த மேலாளரின் முகம் இருண்டுப் போவதைக் கவனித்தேன். எங்கள் இருவருடைய உரையாடலின் காரணத்தை ஏதோ தவறாக புரிந்துக்கொண்டு கலக்கமடைகிறார் என்பதை உணர்ந்த நான் அங்கிருந்த சரக்கில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன். ஆகவே என்னுடைய மூச்சுத் திணறல் சற்று கட்டுக்குள் வந்ததும் ஒரு நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியே விட்டேன்.. நெஞ்சு லேசானதுபோல் இருந்தது..
‘நீங்க வாங்க.. நான் காட்டற மூட்டைய மட்டும் திறந்து கொஞ்சம் காட்டன் ரோல்ஸ் சாம்பிள் கொண்டு வாங்க. நான் பார்த்துட்டு சொல்றேன்..’ என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு மேலாளரை நெருங்கினேன்.

என்னுடைய அதிகாரி கொண்டு வந்திருந்த, மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுவனம் அளித்திருந்த சரக்கு அறிக்கையிலிருந்த சிலவற்றைக் காண்பித்து அவற்றை என்னுடைய உதவியாளருக்கு காட்டுமாறு கூறினேன்.

அவருடைய முகத்தில் கலக்கம் தெரிந்தாலும் நான் சுட்டிக் காட்டிய சரக்குகள் இருந்த பகுதிக்கு என்னுடைய உதவியாளரை அழைத்துச் சென்றார். கிடங்கில் மூட்டைகளுக்கு மேலிருந்த ஒரு பிரம்புக் கூடையைக் கையில் எடுத்துக்கொண்ட என்னுடைய உதவியாளர் நான் குறிப்பிட்டிருந்த மூட்டைகளில் இருந்த பருத்தி பஞ்சு உருண்டைகளில் சிலவற்றை அவற்றில் வைத்துக் கொண்டு செல்வதை நான் கிடங்கின் வாசலில் கிடந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு கவனித்தேன்.

சுமார் கால் மணி நேரத்துக்குப் பிறகு நான் அமர்ந்திருந்த இடத்தை வந்த என்னுடைய உதவியாளர் கையிலிருந்த கூடையைப் பார்த்ததுமே எனக்கு விவரம் லேசாகப் புரிந்தது. இருப்பினும் மேலாளரைப் பார்த்து, ‘சார் இந்த சாம்பிள எல்லாம் தனித்தனியா அதனதன் க்ரேட் பிரகாரம் லேபிள் பண்ணி ஒரு ப்ளாஸ்டிக் பேக்ல போட்டு குடுங்க. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்.’ என்றேன்.

பிறகு என் உதவியாளரிடம், ‘சார்.. சாம்பிள்ஸ் இது போறும். நீங்க பேக்ஸ மட்டும் கடகடன்னு எண்ணி இதோட கம்பேர் பண்ணிருங்க. நாம போலாம்.’ என்றேன்.

கிடங்கிலிருந்த சுமார் ஐயாயிரம் மூட்டைகளையும் எண்ணி முடிக்க அவருக்கு அரை மணி நேரத்துக்கும் கூடுதலாகவே எடுத்தது. அவர் எண்ணி முடிக்க அவருடன் சென்ற ஆலை மேலாளரும் அவருடைய உதவியாளரும் நான் கையோடு கொண்டு வந்திருந்த அறிக்கையை சரிபார்த்தனர்.

என்னுடைய உதவியாளர் அவரிடம் ஏதோ சொல்வதையும் அதை ஆலை மேலாளர் கோபத்துடன் மறுப்பதையும் நான் இருந்த இடத்திலிருந்தே கவனித்தேன். சற்று நேரத்தில் என்னுடைய உதவியாளர் மேலாளருடைய கரங்களிலிருந்த அறிக்கையை பிடுங்கி தன்னுடைய பேனாவால் ஏதோ எழுதுவதையும் மேலாளர் அவரை கெஞ்சுவதையும் காண முடிந்தது. ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த நான் வருவது வரட்டும் என்ற நினைப்பில் அவர்களை நெருங்கினேன்.

‘என்ன சார் எனி ப்ராப்ளம்?’ என்ற என்னுடைய குரலைக் கேட்டு அவர் திரும்பி என்னைப் பார்த்தார்.

‘ஆமா சார். எல்லா க்ரேட்லயும் இவங்க ஸ்டேட்மெண்ட்ல மென்ஷன் செஞ்சிருக்கற பேக் நம்பர்ஸ் இல்ல.. டென் டு ஃபிஃப்டீன் பர்சண்ட் கம்மியா இருக்கு.’ என்றார் என்னுடைய உதவியாளர்.

‘சரி.. நீங்க எல்லாத்தையும் கவுண்ட் பண்ணி முடிங்க. அப்புறமா பேசிக்கலாம்.. இல்லன்னா வேலை முடியாது..’ என்றவாறு என்னிடம் பேச முயன்ற மேலாளரைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மூச்சு திணறல் ஏற்படுவதற்கு முன் வெளியே சென்றுவிடலாம் என்ற நோக்கத்துடன் வாசலை நோக்கி விரைய அவசரத்தில் எனக்கு முன்னே தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகளில் கால் இடறி விழப் போய் விழாமல் இருக்க என் இடப்புறத்தில் ஆளுயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகள் அப்படியே சரிந்து விழுந்து என்னை சிறைப்படுத்தின.

அவற்றிலிருந்து கிளம்பிய பருத்தி தூசு என்னை பாதிக்காமல் இருக்க கைக்குட்டையால் என்னுடைய மூக்கை கெட்டியாக மூடிக்கொண்டேன்.

வாசலில் நின்றுக்கொண்டிருந்த மேலாளரின் உதவியாளர்கள் பதற்றத்துடன் ஓடி வந்து எனக்கு முன்னால் கிடந்த சுமார் ஐம்பது மூட்டைகளை அகற்றுவதில் தீவிரமாயினர்.

‘டேய், டேய் பார்த்து மூட்டை பிஞ்சிரப்போவுது.. சாருக்கு ஏற்கனவே டஸ்ட் அலர்ஜி இருக்கு போலருக்கு.. மூட்டை பிஞ்சி காட்டன் வெளிய கொட்டுனா கேக்கவே வேணாம்..’ என்றார் மேலாளர்.

அவருடைய குரலில் அளவுக்கு அதிகாமாக தெரிந்த கரிசனம் என் கவனத்தைக் கவர்ந்தது. நான் வியப்புடன் அவரை நோக்கி திரும்பிய அதே நேரத்தில் தொழிலாளர் ஒருவரின் கையிலிருந்த மூட்டை கைத்தவறி கீழே விழுந்து வாய் பிளக்க வெளியில் வந்து விழுந்தவற்றைப் பார்த்து மலைத்துப் போய் நின்றேன்..

கிடங்கில் என்னுடன் நின்றிருந்த என்னுடைய உதவியாளரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்.

தொடரும்..

20 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 196

மதுரையில் நான் இருந்தது ஒரு வருடம்தான் என்று கூறினேன்.

அதற்கு என்ன காரணம் என்று கோடிட்டு காட்டியிருந்தேன்..

அதற்கு முன் இன்னும் கொஞ்சம் மதுரையைப் பற்றி..

நான் கிளைக்கு பொறுப்பேற்ற நேரத்தில் இருந்த அதே அலுவலகர்கள்தான் நான் இருந்த ஒரு வருட காலத்திலும் இருந்தனர். அதாவது, மாற்றலாகிப் போன அந்த பெண் அதிகாரியைத் தவிர.

ஆயினும் என்னுடைய அதிர்ஷ்டமோ, அல்லது அணுகுமுறையோ தெரியவில்லை. நான் பொறுப்பேற்ற சமயத்தில் இருந்த அத்தனை குளறுபடிகளையும் சுமார் ஒன்பது மாத காலத்தில் என்னுடைய அலுவலகர்களின் முழு ஒத்துழைப்புடன் சரி செய்ய முடிந்தது.

எப்போதுமே ஒரு கிளையில் நடக்கும் அத்தனைக்கும் அக்கிளையின் மேலாளர்தான் பொறுப்பேற்க வேண்டி வரும். அவர் எத்தனை திறமையுள்ளவராக இருப்பினும் அவருடைய மேற்பார்வையில் பணியாற்றும் பணியாளர்கள் அவருக்கு தகுந்த விதத்தில் ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால் கிளையை சரிவர நடத்திச் செல்ல இயலாமற் போகும். கிளையில் குளறுபடிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில்தான் என்னுடைய கிளையும் இருந்தது. அப்போதிருந்த என்னுடைய வங்கியின் முதல்வர் அடிக்கடி இவ்வாக்கியத்தைக் கூறுவார். ‘If a branch is not showing desired results the Branch Manager would immediately try to take shelter by pointing out at his staff. Change him and things would look up.’

அவர் முதல்வராக இருந்த காலத்தில் அப்படித்தான் நடந்தது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் சம்பிரதாயமாக நடைபெறும் மேலாளர் மாற்றல்கள் அவர் பதவியில் இருந்த காலத்தில் வருடத்தின் எல்லா மாதங்களிலும் நடக்க ஆரம்பித்தது. யாருக்கு எப்போது மாற்றம் வரும் என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது என்றால் மிகையாகாது.

அப்படிப்பட்ட சூழலில்தான் என்னுடைய நண்பரும் மதுரைக் கிளைக்கு வந்த இரண்டே வருடங்களில் மாற்றப் பட்டார்.

மதுரையில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு அவரும் ஒரு வகையில் காரணமாயிருந்தார் என்றே நினைக்கிறேன். மதுரை போன்ற நகரங்களில் பணியாற்ற உள்ளூர் மொழி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். கேரளத்திலும் அப்படித்தான். நான் பணியாற்றிய கொச்சி போன்ற நகரங்களில் ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும், சமாளித்து விடலாம். ஆனால் திருச்சூர், கோட்டயம், ஏன் திருவனந்தபுரத்திலும் உள்ளூர் மொழி தெரியாமல் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாது.

சுமார் இருபதாண்டு காலம் தன்னுடைய சொந்த மாநிலமான கேரளத்திலேயே பணிபுரிந்திருந்த என்னுடைய நண்பர் மதுரை போன்ற பெரிய கிளைகளில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் மேற் பதவிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மதுரை மாற்றலை ஏற்றுக்கொண்டு வந்திருந்தார்.

ஆனால் மதுரைக்கு வந்த சில மாதங்களிலேயே தன்னுடைய அரைகுறை தமிழ் உள்ளூரில் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்து மனம் தளர்ந்து போனார் என்று நினைக்கிறேன். ஆகவே உள்ளூர்வாசியும் தன்னுடைய உதவி மேலாளருமான பெண் அதிகாரியிடம் கிளை சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு பேருக்கு ஒரு மேலாளராக இருக்க முடிவு செய்திருந்தார் என்றும் நினைக்கிறேன்.

ஒரு வங்கிக் கிளையின் மேலாளரோ அல்லது அவருக்கு துணையாக பணிபுரியும் கிளையின் மற்ற அதிகாரிகளோ அனுபவமில்லாதவர்கள் என்று தெரிந்தாலே போதும் கேட்கவே வேண்டாம், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள்.

என்னுடைய நண்பர் பணிபுரிந்திருந்த இரு கிளைகளுமே Deposit Oriented கிளைகள். அதிலும் எப்போதாவது வங்கிக்கு வந்து செல்லும் NRI வாடிக்கையாளர்கள். கிளை அமைந்திருந்த நகரமும் சிறு நகரங்களாயிருந்ததால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் என்ற நிலை. நீ இன்னார் மகந்தானே, சகோதரந்தானே.. என்ற நிலையில் பரஸ்பரம் தெரிந்திருக்கும் சூழலில் பணியாற்றிவிட்டு எப்படி வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம்,  லாபம் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் மதுரை சந்தையிலிருந்த வணிகர்களுடைய உள்நோக்கத்தை அறிந்துக் கொள்ள தவறியதுதான் அவருடைய ஒரே தவறு.

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக் கூடிய மனநிலை கொண்டவர்கள் வங்கி மேலாளராக திறம்பட செயல்பட முடியாது. சந்தையிலிருக்கும் வணிகர்களுக்குரிய சாதுரியம் வங்கி மேலாளருக்கும் இருக்க வேண்டும். பாம்பின் கால் பாம்பறியும் என்பது வங்கி மேலாளர் அனுபவத்தில் நான் படித்த மிக முக்கியமான பாடம்.

நியாயமாக, நேர்மையாக செயல்பட்டு தங்களுடைய வணிகத்தில் மிக சிறப்பான வெற்றியைக் கண்ட வணிகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். வணிகத்தில் எந்த தொய்வு ஏற்பட்டாலும் சரி தங்களுடைய சீரான பாதையை விட்டு விலகுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த அவர்களுடைய சோதனைக் காலத்தில் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது  வங்கி மேலாளர்களுடைய  தார்மீகக் கடமை என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு வாடிக்கையாளர் என்னுடைய கிளையிலும் இருந்தார்.

மதுரையிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது அவருடைய பருத்தி நூற்ப்பாலை.

பரம்பரையாகவே நல்ல செல்வந்தக் குடும்பத்திலிருந்த வந்தவர். ஆயினும் எவ்வித ஆணவமும், அகங்காரமும் இல்லாதிருந்த அவரை முதன் முதலில் சந்தித்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளைவெளேர் நிறத்தில் கதர் வேட்டி, அதே நிறத்தில் அரைக் கை வைத்த கதர் சட்டை. சிவந்த மேனி, அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே பார்ப்போரை கவர்ந்திழுக்கும் கூர்மையான பார்வை, எப்போதும் மாறாதிருந்த புன்னகை..

அவருடைய முப்பாட்டான் காலத்திலிருந்தே சிறப்பாக செயல்பட்டு  வந்திருந்த நூற்பாலை நான் கிளைக்கு பொறுப்பேற்ற காலத்தில் சற்றே நலிவடைந்திருந்தது. கடந்த மூன்று மாத காலமாக நூற்பாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக செயல்பட முடியாமல் முடங்கிப் போயிருந்தது.

இத்தனைக்கும் அவருடைய நூற்பாலையில் பணிபுரிந்த பெரும்பாலான தொழிலாளர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்தவர்கள்.   மத்திய, மாநில அரசுகளின் புலம்பெயர்வோர் புணர்வாழ்வு திட்டத்தின் கீழ் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வந்ததுதான் அவர் செய்த மிகப் பெரும் தவறு என்பதை நான் சுட்டிக் காட்டியபோது அவர் கோபப் படாமல் சிரித்தார்.

‘நீங்க சொல்றது சரிதானோன்னு இப்போ எனக்கு தோனுது சார். ஆனா நாலஞ்சு வருசத்துக்கு முன்னால என் நண்பரோட யாழ்ப்பாணம் போயிருந்தப்போ அங்கே இவங்க படற பாட்ட பார்த்து நான் மனமிளகிப் போனேன் சார். அப்புறமா ஊர் திரும்புனதும் இங்கருக்கற Repatriate Coop Bank மேனேசர ஒரு முறை நம்ம லயன் க்ளப்புல சந்திச்சேன். நீங்க நம்ம அரசாங்க திட்டத்துல Srilanka Repatriatesக்கு வேலை வாய்ப்பு குடுக்க முன்வந்தா நாங்க ஒங்க மில்லுக்கு வேண்டிய முழு ஃபைனான்சும் செய்யறோம்னார். நானும் யோசிச்சிப் பார்த்தேன். நம்ம சாதிப் பயல்கன்னு நினைச்சி வேல குடுத்தவனெல்லாம் நினைச்சா வேலை நிறுத்தம் செய்யறானுவளே நாடு விட்டு நாடு வந்து கஷ்டத்த மட்டுமே அனுபவிச்சிக்கிட்டிருக்கற இவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாமேன்னு தோனிச்சி. அதனோட பலனத்தான் நான் இப்ப அனுபவிக்கேன்.’

ஆம். வேலை கிடைத்த ஆரம்பக் காலத்தில் மிகவும் நன்றியுணர்வுடன் பணிக்கு வந்த ஊழியர்கள் அடுத்த ஆறே மாதத்தில் ஊதிய உயர்வு, எட்டு மணி  நேர வேலை என்ற கோரிக்கைகளை வைத்து வேலைநிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டியதுடன் தங்களுடைய பயமுறுத்தலுக்கு உரிமையாளர் பணியப் போவதில்லையென்று தெரிந்ததும், அடுத்த சில மாதங்களில்  இலங்கையில் நிலமை சற்றே சீரானவுடன் வேலையை உதறிவிட்டு செல்ல  எஞ்சியிருந்த சில பணியாட்களைக் கொண்டு மனிதர் நூற்பாலையை நடத்த முடியாமல் சிரமப்பட்டு போயிருக்கிறார்.

புலம்பெயர்ந்தோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு கடனுதவி அளித்திருந்த வங்கி அடுத்த சில மாதங்களில் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்த முன்பு அவருக்கு உதவியாயிருந்த ஸ்டேட் வங்கியினரும் கைவிரித்துவிட்ட சூழலில்தான் என்னுடைய வங்கியின் முந்தைய முதல்வரின் சிபாரிசில் எங்களுடைய வங்கி அவருக்கு Repatriate Coop Bank அளித்திருந்த முழுக் கடனையும் ஏற்றுக்கொண்டிருந்தது.

எங்களுடைய வங்கி கடனை ஏற்றுக்கொண்ட நேரமோ என்னவோ அவர் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் நோக்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த முந்தைய  ஊழியர்களில் பலரும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு பணிக்கு திரும்ப நூற்பாலை மீண்டும் செயல்பட துவங்கியிருந்தது.

ஆனால் காலங்காலமாக அவருடைய பாட்டனார் காலத்திலிருந்து அந்நூற்பாலையில் பணியாற்றி வந்திருந்த ஊழியர்கள் அவரைப் பழிவாங்கும் நோக்குடனே பணிக்கு திரும்பியிருந்தனர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

ஒரு வணிகத்தையோ அல்லது தொழிலையோ திறம்பட நடத்திச் செல்ல நேர்மையும், திறமையும் இருந்தால் மட்டும் போறாது சாணக்கியத்தனமும் இருக்க வேண்டும் என்பதை அவரைப் பார்த்துத்தான் நான் தெரிந்துக் கொண்டேன்.

பத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிறுவனங்களே ஊழியர் சங்கங்களால் அவதிப்படும்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அந்நிறுவனத்தில் புலம்பெயர்ந்தோருக்கென ஒரு சங்கமும் உள்ளூர் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமும் இருந்தது. ஒரு சங்கம் இருந்தாலே சமாளிப்பது சிரமம். அதுவும் நேரெதிர் நோக்கங்களைக் கொண்ட இரு சங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.

தங்களுடைய தாய் நாட்டுக்கு திரும்பிச் சென்றவர்களுடன் செல்லாமல் நின்றுப்போன சுமார் இருபது இலங்கையர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு தங்களுடைய முதலாளிக்கு விசுவாசமாக இருந்ததை சகித்துக் கொள்ள முடியாத உள்ளூர் தொழிலாளர்களின் சங்கத் தலைவர்கள் அவர்களை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாயிருக்க நூற்பாலையில் எந்நேரமும் பிரச்சினை..

இது போறாதென தன்னுடைய சொந்த ஊர்க்காரன் என்ற ஒரே காரணத்திற்காக புதிதாய் மேலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்தவர் நூற்பாலையின் செயல்பாட்டில் ஏற்படுத்தியிருந்த தேவையற்ற மாற்றங்கள் வேறு சிக்கலைப் பெரிதாக்கியிருந்தது.  

சிக்கல் மேலும் சிக்கலாகி இரு சங்க ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு நூற்பாலையை மூடப்பட்ட சூழலில்தான் நான் என்னுடைய கிளைக்கு பொறுப்பேற்றிருந்தேன்.

மதுரைக் கிளையிலிருந்து கொடுக்கப் பட்டிருந்த கடன் கணக்குகளில் மிகக் கணிசமான தொகையைக் கொண்டிருந்தது அந்நூற்பாலை.

கிளைக்கு பொறுப்பேற்ற மாதத்தில் நூற்பாலை மூடப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன.

நூற்பாலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டிருந்தாலும் அதிலிருந்த சரக்குகளை மேற்பார்வையிடலாம் என்ற நோக்கத்தில் அவரை ஏற்கனவே சந்திருந்த நான் தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு நூற்பாலைக்கு வருவதாக தெரிவித்தேன்.

‘கண்டிப்பா சார். ஆனா என்னாலத்தான் இப்ப வரமுடியாம கெடக்கு. ரெண்டு நாளா மேலுக்கு முடியல.. நா மேனேசருக்கு போன் போட்டு சொல்றேன்.. நீங்க புறப்பட நேரம் சொன்னீகன்னா நா ப்ளசர அனுப்ப சொல்றேன். ஒங்களுக்கு வழி தெரியாதில்லையா.. இருபது மைலுக்கு மேல இருக்குமே..’ என்றார்.

‘பரவாயில்ல சார். நான் என் ஸ்கூட்டர்லயே வந்துடறேன்.’ என்றேன்.

அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரை ஏற்கனவே சந்தித்து அவருடயை பேச்சில் கவரப்பட்டிருந்ததால் என்னால் மறுப்பேதும் கூற முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.

அன்று பிற்பகல் மூன்று மணியளவில் அவருடைய வாகனம் வந்ததும் என்னுடைய அதிகாரிகளில் ஒருவரை அழைத்துக்கொண்டு நூற்பாலையைச் சென்றடைந்தேன்..

ஆலையின் மேலாளரும் அவருடைய அலுவலக பணியாட்களும் மட்டுமே இருந்தனர்.

மேலாளரைப் பார்த்த முதற் பார்வையிலேயே அவரை எனக்கு பிடிக்காமற் போனது. அவருடைய உதவியாளர்களை? கேட்கவே வேண்டாம்.. தமிழ் திரைப்படங்களில் வரும் அடியாட்களுடைய அதே சாயல்!

தொடரும்..

18 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 195

சாதாரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய காப்பீட்டு பத்திரங்களில் ஆவரேஜ் ஷரத்து (Average clause) ஒன்றை சேர்த்திருப்பது வழக்கம்.

இது முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட வாடிக்கையாளரைப் போன்று தங்களுடைய சரக்கு முழுவதையும் காப்பீடு செய்யாமலிருப்பவர்களுக்காகவே சேர்க்கப்பட்டிருக்கும்.

அதாவது ஒரு வணிகர் தன் வசம் இருக்கும் சுமார் ரூ.1.00 லட்சம் மதிப்புள்ள சரக்கை ரூ.0.50 லட்சத்திற்கு காப்பீடு செகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது சரக்கின் மதிப்பில் 50% மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.

காப்பீட்டு நிறுவனத்தினரின் மதிப்பீட்டின்படி நஷ்டப்பட்ட சரக்கின் மதிப்பு ரூ.0.75 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். நஷ்டத்தில் 50%ஆன ரூ.37,500/- மட்டுமே நஷ்ட ஈடாக வழங்கப்படும்.

அத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்டப்பட்ட சரக்குகள் சம்பந்தப்பட்ட பில் (Bill) மற்றும் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களையும் சரிபார்த்தப் பிறகே நஷ்டப்பட்ட சரக்கின் மதிப்பை ஒத்துக்கொள்ளும்.

இந்த ஷரத்தைக் கருத்தில் கொண்டுதான் வங்கிகள் சரக்குகளை ஈடாக வைத்து கடன் வழங்குகையில் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கும் சரக்கின் முழு மதிப்பிற்கும் காப்பீடு செய்யவேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

இதன் முக்கியத்துவத்தை உணராத பல வணிகர்களும் வங்கி மேலாளர்களுடைய கருத்துக்கு ஒத்துப் போக மறுப்பதும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் எதற்கு வீணாக ப்ரிமீயம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான். ஆகவே சம்பந்தப்பட்ட வணிகர்களுடைய சம்மதம் இல்லாமல்  வங்கிகளே தங்களிடம் ஈடு வைக்கப்பட்டுள்ள சரக்கிற்கான முழு காப்பீட்டையும் செய்துவிட்டு சந்தா (Premium) தொகையை வணிகர்களுடைய கணக்கில் பற்று வைத்துவிடுவதுண்டு.

அப்படித்தான் நானும் செய்வேன். அதற்கெதிராக வாடிக்கையாளர் எந்த மறுப்பு தெரிவித்தாலும் அதை பொருட்படுத்தியதில்லை. ஆனால் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளருடைய கோபத்திற்கு அஞ்சி என்னுடைய முந்தைய மேலாளர் அவர் குறிப்பிட்டிருந்த தொகைக்கு மட்டும் காப்பீடு செய்திருந்தார். அதாவது வாடிக்கையாளர் வங்கியிலிருந்து பெற்றிருந்த கடனுக்கு ஈடாக வைத்திருப்பதாய் அவர் சமர்பித்திருந்த சரக்கு அறிக்கையில் (Stock Statement) குறிப்பிட்டிருந்த மதிப்பில் சுமார் 60%க்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் காப்பீடு செய்யப்பட்டிருந்த தொகை வங்கி கொடுத்திருந்த கடனுக்கு 10% குறைவாகவே இருந்தது.

அதாவது, சம்பந்தப்பட்ட தீவிபத்து ஒரேயொரு நாள் முன்பு நடந்திருக்கும் பட்சத்தில் வங்கி கொடுத்திருந்த கடனையும் கூட வசூலிக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பிருந்தது!

இதில் இனியொரு வில்லங்கமும் இருந்தது. தீ விபத்தில் கடையிலிருந்த மொத்த சரக்கும் எரிந்து போகவே உரிமையாளர் சரக்கு முழுவதுக்கும் நஷ்ட ஈடு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

ஆனால் அவரால் கடையிலிருந்த சரக்கிற்கான ஆவணங்களை முழுவதுமாக சமர்ப்பிக்க இயலவில்லை. கடையிலிருந்த மொத்த சரக்கில் ஐம்பது விழுக்காடுக்கான ஆவணங்கள் கூட அவர் வசம் இருக்கவில்லை. ஆகவே அவர் சமர்ப்பித்திருந்த வணங்களின் பேரில் அவருக்கு கிடைக்கக்கூடிய நஷ்ட ஈடு சரக்கின் மதிப்பில் சுமார் 25 விழுக்காடு மட்டுமே.

யார் செய்த அதிர்ஷ்டமோ அவர் எங்களுடைய வங்கி கடன் கணக்கை தாமாகவே முன்வந்து சம்பவம் நடந்த முந்தைய தினம் திருப்பி அடைத்திருந்தார். இல்லையென்றால்.. இப்போது நினைத்து பார்த்தாலும் மனம் கலங்குகிறது.

மேலாளர்களின் இப்படிப்பட்ட தவற்றால் வங்கிக்கு இழப்பு ஏற்படும் பட்சத்தில் விசாரனைக்கு முன்பே அவர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுவது நிச்சயம். பிறகு வங்கிக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் கணிசமான தொகையாக இருக்கும் பட்சத்தில் மேலாளரின் பணி பறிபோவதும் உண்டு. அத்துடன் அவருடைய ஓய்வூதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி எல்லாவற்றையும் பிடித்துக்கொண்டு வெறுங்கையராய் அனுப்பப்படுவதும் உண்டு..

என்னுடைய வாடிக்கையாளருக்கு அஞ்சி குறைவான மதிப்பிற்கு காப்பீடு செய்தது என்னுடைய முந்தைய மேலாளர்தான் என்றாலும் அதை நான் கிளைக்கு பொறுப்பேற்றவுடனே மேலதிகாரிகளுடைய பார்வைக்கு கொண்டு செல்லாத தவற்றிற்காக எனக்கும் அதற்குரிய தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தது.

இது ஒருபுறமிருக்க, என்னுடைய வாடிக்கையாளர் விபத்து நடந்த மறுநாளே என்னுடைய அலுவலகத்திற்கு காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளருடன் வந்தார். அவர் முன்னிலையில் என்னிடம், ‘ஏன் சார் பெரிசா ரூலெல்லாம் பேசறீங்களே நான் குடுத்துருந்த ஸ்டாக் ஸ்டேட்மெண்ட்லருக்கற தொகைக்கு இன்சூர் பண்ணாம இருந்தது ஒங்க தப்புத்தானே? அதுக்கு என்ன சொல்றீங்க?’ என்றார் வீம்புடன்.

அவருடைய மனசாட்சிக்கே தெரியும் நடந்தது என்னவென்று. நான் மறுபேச்சு பேசாமல் என்னுடைய உதவி மேலாளரை என்னுடைய அறைக்கு அழைத்து வாடிக்கையாளர் கூறியதை அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் சில நாட்களுக்கு முன் கூறியதையே காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வந்தவர் முன் போட்டு உடைத்தார். ‘சார் இவர் சொல்றதுல கொஞ்சம் கூட உண்மையில்ல. நாங்க இன்சூர் செஞ்ச இந்த பாலிசிக்கே ப்ரிமீயம் என் கணக்குலருந்து வசூலிக்கக் கூடாதுன்னு இங்க வந்து சத்தம் போட்டதும் இல்லாம நாங்க டெபிட் பண்ண ப்ரீமியம் தொகைய ரிவர்ஸ் பண்ண சொல்லி லெட்டரும் அனுப்பிச்சார். இருங்க அந்த லெட்டர கொண்டு வரேன்.’ என்று உடனே சென்று கோப்பிலிருந்த கடிதத்தைக் கொண்டு வந்து காட்ட வாடிக்கையாளரின் முகம் சுருங்கிப் போனது.

நான் உடனே, ‘சார் ஒங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பெரிசுதான். எனக்கும் கவலையாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக வெறுமனே எங்க பேங்க் மேல குத்தம் சொல்லாதீங்க. நான் ஒங்கள எங்க கடன திருப்பி கட்டுங்கன்னு கூட சொல்லலை.. அடகு வச்சிருக்கற சரக்குக்குண்டான பில்லுங்கள காமிங்கன்னு மட்டும்தான் கேட்டேன். நீங்களாத்தான் செக்க அனுப்பி அக்கவுண்ட க்ளோஸ் பண்ணீங்க. அத நீங்க எந்த நோக்கத்துல செஞ்சீங்களோ அதுமூலமா என்னோட வேலைய காப்பாத்திட்டீங்க. அதுக்கு ஒங்களுக்கு நன்றி.. மத்தபடி ஒங்களுக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் நடுவுல நா செய்யறதுக்கு ஒன்னுமில்ல சார்.. சாரி.’ என்றேன்.

ஆனாலும் மனிதர் தன்னுடன் வந்திருந்த காப்பீட்டு மதிப்பீட்டாளர் முன் தான் யார் என்று காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘சார் ஒங்க லோன க்ளோஸ் பண்ணிட்டேன்னு பொறுப்பிலருந்து கழண்டுக்க பாக்காதீங்க. எனக்கு ஏற்பட்ட நஷ்டம் ஒன்னு ரெண்டு இல்ல. ஒங்க வேல போறத பத்தி எனக்கென்ன சார் கவலை? ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு எழுதப் போறேன்.. நாந்த்தான் விவரமில்லாத ஆளுன்னு வச்சிக்குங்க.. ஒங்களுக்கு எங்க சார் போச்சி புத்தி? நான் ------ லட்சத்துக்கு ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கேன். நீங்க பாட்டுக்கு --------- லட்சத்துக்கு இன்சூர் செஞ்சிருக்கீங்க? ஒங்களோட அஜாக்கிரதையால எனக்கு ஏற்பட்ட நஷ்டத்த யார் ஈடுகட்டுறது? நிச்சயமா நான் ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு புகார் செய்யத்தான் போறேன்.. அங்கருந்தும் எனக்கு நியாயம் கிடைகலனா நான் கோர்ட்டுக்கும் போக தயார்.’ என்றார் காட்டு கத்தலாக.

என்னைக் கோபப்படுத்தி தாறுமாறாக பேசவைத்து அதற்கும் சேர்த்து புகார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசுகிறார் என்பதை புரிந்துக்கொண்ட நான் அமைதியாக இருந்தேன். அவருடன் வந்திருந்த காப்பீட்டு அதிகாரிக்கும் அவர் பேசுவதிலிருந்த அடாவடித்தனம் புரிந்ததால் தர்மசங்கடத்துடன் என்னைப் பார்த்தார். ஆனால் என்னுடைய வாடிக்கையாளர் விடுவதாயில்லை.

‘என்ன சார் நா பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு யாருக்கு வந்த விருந்தோன்னு ஒன்னும் பேசாம இருக்கீங்க. ஏதாச்சும் சொல்லுங்க சார்.’ என்றார்.

நான் அப்போதும் கோபப்படாமல் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்து நீங்க போங்க நான் பாத்துக்கறேன் என்று அனுப்பி வைத்தேன். என்னுடைய அறைக்கு வெளியே நின்றிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் என்னுடைய அறையையே பார்ப்பது தெரிந்தது. இவருடன் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பிரச்சினையை அதிகமாகவே க்கும் என்று நினைத்தேன். ஆனால் அதே சமயம் இவருக்கு என் மீதோ  அல்லது என்னுடைய வங்கியின் மீதோ எந்த தவறும் இல்லையென்பதை அப்போதே விளக்கிக் கூறாமல் விட்டுவிடுவதும் உசிதமல்ல என்று நினைத்தேன்.

‘சார் நீங்க சொல்றது சரின்னே வச்சிக்குவோம். நேற்றைக்கு முந்தைய தினம் நீங்க கணக்க க்ளோஸ் பண்ணதுமே ஒங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசிய அனுப்பி வச்சிட்டேன். நீங்க ஏறத்தாழ மதியம் மூனு மணிக்கு கையெழுத்து போட்டு வாங்கியிருக்கீங்க. அப்போதிருந்து இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சித்தான் விபத்து நடந்திருக்கு. நீங்க நெனச்சிருந்தா அந்த பாலிசி தொகைய உடனே இவர காண்டாக்ட் செஞ்சி கூட்டியிருக்கலாம். செய்யல. நான் இப்ப சொல்றதயும் பொருட்படுத்தாம நீங்க எங்க ஹெட் ஆஃபீசுக்கு புகார் செஞ்சீங்கன்னா போன மூனு வருசமா ஒவ்வொரு தடவையும் நாங்க இன்சூரன்ஸ் ப்ரீமியம் டெபிட் செஞ்சப்போ நீங்க அத அடைக்க முடியாதுன்னு எங்க பேங்குக்கு எழுதன லெட்டர அனுப்பினாலே போறும். எங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்காம விட்டுருவாங்க. அப்படியே நீங்க குடுத்திருந்த ஸ்டேண்ட்மெண்ட் தொகைக்கு நாங்க இன்சூர் செஞ்சிருந்தாலும் அந்த ஸ்டாக் எதுக்குமே ஒங்கக்கிட்ட பில் இல்லேங்கறதுனால நாங்க இன்சூர் பண்ண தொகைக்கு நீங்க க்ளெய்ம் வச்சாலும் இவங்க கம்பெனியிலருந்து செட்டில் செஞ்சிருக்க மாட்டாங்க. அதனால புகார் அனுப்பி ஒங்க நேரத்த வேஸ்ட் பண்ணாம இன்சூரன்ஸ் கம்பெனியில ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பாருங்க. போங்க, எனக்கு வேல இருக்கு.’ என்றேன்.

என்னுடைய வார்த்தைகளை விட நான் அமைதியாக பேசியதுதான் அவருடைய கோபத்தை மேலும் கிளறியது. கோபத்துடன் தன்னுடன் வந்திருந்த காப்பீட்டு நிறுவன அதிகாரியைப் பார்த்தார். ‘என்ன சார் இவர் என்னென்னமோ சொல்றாரு நீங்களும் பேசாம கேட்டுக்கிட்டு இருக்கீங்க? அதுக்கு இவர் சொல்றது சரின்னு அர்த்தமா சார்?’

அவர் தர்மசங்கடத்துடன் ஆமாம் என்று தலையை அசைக்க என்னுடைய வாடிக்கையாளர் ‘நீங்க ரெண்டு பேரும் ஏதோ பேசி வச்சிக்கிட்டு சொல்றா மாதிரியில்ல இருக்கு? ஒங்க மேலயும் கம்ப்ளெய்ண்ட் செய்யணும் போலருக்கு..’ என்றவாறு உரக்க சப்தமிட்டுவிட்டு கோபத்துடன் வெளியேற உடன் வந்திருந்த அதிகாரி, ‘சாரி சார்.. இவர் இப்படித்தான். ஒங்க மேல கம்ப்ளெய்ண்ட் ஏதும் அனுப்பாம நா பாத்துக்கறேன். வரேன்.’ என்றவாறு எழுந்து சென்றார்.

அவர் என்ன மாயம் செய்தாரோ என்னுடைய வாடிக்கையாளர் என் மீது எந்த புகாரும் அனுப்பாமல் இருந்துவிட்டார்.

அந்த விபத்திலிருந்து மீண்டு மீண்டும் கடையை சிறிய அளவில் திறக்க அவருக்கு சுமார் ஆறுமாத காலம் பிடித்தது. நான் மதுரைக் கிளையில் சரியாக ஒரு வருட காலம் மட்டுமே இருந்ததால் நான் மாற்றலாகி சென்ற வாரத்தில்தான் அவர் கடையை மீண்டும் திறந்தார்.

ஆனால் சுமார் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கு சென்றபோது அவர் கடையை பழைய நிலைக்கு கொண்டு வந்திருப்பதைப் பார்த்து அசந்துப் போனேன். முன்பு இருந்ததை விட அதிக பொலிவோடு கடை இருந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு கூடி கடையே வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது..

சரி.. என்ன சார் ஒரே வருடம் மட்டும்தான் மதுரையில் இருந்தீர்களா என்று கேட்டால் அதற்கும் காரணம் இருக்கிறது..

மோதுவது யார் என்று பார்க்காமல் மோதியதால் எனக்கு கிடைத்த பரிசுதான் அந்த மாற்றம்..

மாற்றம் மட்டுமா?

தொடரும்..