30 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 192

முத்துக்கருப்பனுக்கெதிராக எங்களுடைய வங்கியிலிருந்து அனுப்பப்பட்டிருந்த புகாரின் மீது மதுரை பார் கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு அவர் எங்களுடைய வங்கிக்கு அடைக்க வேண்டிய தொகையை ஒரு மாதத்திற்குள் வட்டியுடன் அடைக்க வேண்டும் என்று நம் வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது என்பதை எங்களுடைய பெண் வழக்கறிஞர் வழியாக கேள்விப்பட்டபோது எனக்கும் லேசாக வருத்தம் தோன்றியது.

அவசரப்பட்டுவிட்டோமோ என்றும் தோன்றியது. இத்தனை வருட காலம் மதுரையில் மதிப்புடன் தொழில்புரிந்து வந்த ஒரு மூத்த வழக்கறிஞரை அவருடைய சக வழக்கறிஞர்களின் முன்பு வைத்து தலைகுனிய வைத்துவிட்டோமோ என்றும் தோன்றியது.

அவர் கவுன்சில் உத்தரவை மறு பரிசீலனை செய்ய பலவாறு முயன்றும் வெற்றிபெறாமல் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மாதத்திற்குள் முழு தொகையையும் அடைக்க வேண்டியதாயிற்று.

அவருக்கிருந்த தொழிலுக்கும் வருமானத்திற்கும் இத்தொகை பெரியதல்ல. ஆனாலும் அவர் தலைவராயிருந்து இத்தகைய முடிவுகளை முன்பு எடுத்திருந்த நிலையில் அவரே அத்தகைய தீர்ப்புக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்பட்டதைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவர் அப்படி வங்கியை ஏமாற்றியதற்கு விவரமில்லாத என்னுடைய கிளையின் முந்தைய மேலாளரும் ஒருவகையில் காரணம்தானே என்று நினைத்தேன். வங்கியின் பெயரில் இருந்த காசோலையை வழக்கறிஞரின் கணக்கில் வரவு வைத்ததே பெரிய தவறு. அத்துடன் அவரை அத்தொகை முழுவதையும் கணக்கிலிருந்து எடுக்க அனுமதித்தது அதை விட பெரிய தவறு.

இந்த சிக்கலுக்குப் பிறகு அவரிடம் நிலுவையில் நின்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை அவரிடமிருந்து பெற்று கணேசன் வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்குள் போறும், போறும் என்றாகிவிட்டது.

மதுரை கிளையில் இருந்த பெரிய சிக்கல் ஒன்று தீர்க்கப்பட்டது என்னுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையாகாது.

முழு தொகையையும் அவரிடமிருந்து வசூலித்தாகிவிட்டதென்று என்னுடைய வட்டார மேலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்த இரு வாரங்களுக்குள் என்னுடைய சேர்மனே என்னைத் தொலைப்பேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்தது மறக்க முடியாத சம்பவம்.

***

நான்கு வருடங்களுக்கு முன்பு கோவையைச் சார்ந்த தமிழ் மேலாளர் வழங்கிய கடன்களில் ஒருசிலவற்றைத் தவிர எல்லா கணக்குகளும் அவற்றைச் சார்ந்த வணிகம், மற்றும் தொழில் நிறுவனங்களுமே மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக சந்தித்து அவர்களுடைய நிறுவன வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் தொகையை என்னுடைய தலைமையகத்திற்கு பரிந்துரைப்பதில் அடுத்த ஆறு மாதங்கள் கழிந்தன.

இதற்கிடையில் அக்கிளையில் இருந்த என்னுடைய பணியாளர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததில் கிளையின் வணிகமும் முந்தைய இரு வருடங்களில் இருந்த அளவைக் கடந்து முன்னேறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

மதுரையில் இருந்த சமயத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்த விஷயம் மதுரைய லயன் கிளப்பில் அங்கத்தினராயிருந்தது.

கிளைக்கு பொறுப்பேற்ற முதல் நாளே என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவராயிருந்த மதுரை மேற்கு லயன் க்ளப்பின் பொருளாளர் என்னை வற்புறுத்தி அவருடைய க்ளப்பில் அங்கத்தினராக்கினார்.

இத்தகைய க்ளப்பில் அங்கத்தினர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களும் தொழிலதிபர்களாகவுமே இருந்தனர் என்றாலும் பல நல்ல காரியங்களையும் அவர்கள் செய்து வந்திருந்தனர். மதுரையைச் சுற்றிலும் இருந்த பல குக்கிராமங்களையும் தத்தெடுத்துக்கொண்டு என்னைப் போன்ற வங்கி மேலாளர்கள் உதவியுடன் பல நலத்திட்டங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வந்தனர்.

அவர்களுடைய பரிந்துரையில் நான் என்னுடைய கிளையிலிருந்து பல சிறு வணிகர்களுக்கும், கைத்தொழிலாளர்களுக்கும் கடனுதவி செய்தேன். அவை அனைத்துமே மிகச் சரியாக திருப்பி அடைக்கப்பட அத்தொண்டு நிறுவனங்களே பொறுப்பேற்றிருந்ததால் என்னால் மேலும், மேலும் பல குடும்பங்களுக்கு கடனுதவி செய்ய முடிந்தது.

இத்தகைய சிறு, சிறு கடன்களை நலிந்த மக்களுக்கு அளித்து அவர்கள் அதன் மூலம் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டதை நேரடியாக கண்டு அனுபவிக்கும் சந்தோஷம் வேறெந்த தொழிலிலும் கிடைக்காது என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தகைய கடன்களை கொடுப்பதில் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படி ஏற்படுகின்ற நஷ்டம் வங்கிகளின் மொத்த வணிகத்தைக் கணக்கிட்டு பார்க்கையில் கேவலம் 0.01%க்கும் குறைவாகவே இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் பெரும் பணமுதலைகளுக்கும், மொத்த வணிகர்களுக்கும் கொடுத்த கடன்கள் வாராக் கடன்களாக மாறும்போது அதனால் பாதிக்கப்படுவது வங்கிகள் மட்டுமல்ல அத்தகைய கடன்களை வழங்கிய என்னைப் போன்ற மேலாளர்களும்தான்.

மதுரைக் கிளையிலிருந்த காலத்தில் அத்தகைய அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவி காலத்தில் அவரிடமிருந்து கடன் பெற்றிருந்த எல்லா நிறுவனங்களையுமே நான் பொறுப்பேற்றதும் சென்று சந்தித்திருந்தேன்.

என்னுடைய கிளை இருந்த இடத்திலிருந்து சுமார் பத்து பதினைந்து சதுர கிலோ மீட்டர் வட்டாரத்திலிருந்த பல வர்த்தக நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்திருந்த நான் என்னுடைய கிளைக்கு மிக அருகாமையிலிருந்த ஒரு மொத்த ப்ளைவுட் மற்றும் லாமினேஷன் பலகைகளை விற்பனை செய்து வந்திருந்த கடையை ஆய்வு செய்ய மறந்துப்போனேன்.

அருகிலிருந்த கடைதானே என்று மெத்தனமாக இருந்தது மட்டுமல்லாமல் முந்தைய மேலாளர் கொடுத்திருந்த தொகை தங்களுடைய் வளர்ச்சிக்கு போறுமானதாக இல்லையென்று பாகஸ்தர்கள் என்னை அணுகியபோது அவர்களுடைய நிதியறிக்கையை மட்டும் பார்த்து அவர்களுக்கு தேவையான தொகையை என்னுடைய வட்டார மேலாளருக்கு பரிந்துரைக்க அவரும் என்னுடைய பரிந்துரையை ஏற்று என்னுடைய தலைமையகத்திற்கு பரிந்துரைக்க முந்தைய மேலாளர் கொடுத்திருந்தை விட இரு மடங்கு தொகை வழங்கி உத்தரவும் வந்தது.

கூடுதல் தொகை வழங்கி என்னுடைய தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததும் அதை அவர்களுக்கு பைசல் செய்வதற்கு முன் அவர்களுடைய கிடங்கை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்பது உத்தரவிலிருந்த நியதிகளுக்குள் ஒன்று.

சாதாரணமாக இம்மாதிரியான மொத்த வணிகர்களுக்கு வழங்கப்படும் கடன் இருவகை. ஒன்று வணிகர்களுடைய கடையிலிருந்த சரக்கின் மேல் ஹைப்பாத்திகேஷன் (Hypothecation) எனப்படும் ஓவர்டிராஃப்ட் கணக்கு. இது கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கின் மதிப்பில் 75% வரை கடனாக வழங்கப்படும். கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கின் விவரத்தை மாதா மாதம் அறிக்கையாக வங்கிக்கு சமர்ப்பித்தால் போதும்.

இரண்டாவது வகை வணிகர்களின் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கை Pledge எனப்படும் அடகு முறையில் மொத்த மதிப்பில் 50ல் இருந்து 75% வரை வழங்கப்படும்.

இவ்விருவகை கடன்களிலும் உள்ள முக்கிய வித்தியாசம் முதல் வகையில் நிறுவனத்தின் சரக்கு கடை உரிமையாளருடைய பொறுப்பில் விட்டுவைக்கப்படும். இரண்டாவது வகை கடனுக்காக கிடங்கின் சாவி வங்கியில் வைக்கப்பட வேண்டும்.

அதாவது கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கின் மதிப்பில் கடனாக எடுத்த 50 அல்லது 75% மதிப்பை வங்கியில் திருப்பி அடைக்காமல் சரக்கை எடுக்க முடியாது. வங்கியில் அடைக்கப்பட வேண்டிய தொகை அடைக்கப்பட்டதும் வங்கி மேலாளரோ அல்லது துணை
அதிகாரிகளில் ஒருவரோ வங்கியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்துக்கொண்டு சென்று கிடங்கை திறந்து குறிப்பிட்ட சரக்கை மட்டும் வணிகர் எடுக்க அனுமதிப்பார்.

ஆகவே எந்த ஒரு நேரத்திலும் வங்கியில் எடுக்கப்பட்டிருந்த கடன் தொகைக்கும் கூடுதல் மதிப்புள்ள சரக்கு கிடங்கில் இருக்க வேண்டும்.

கிடங்கை ஆய்வு செய்ய வேண்டுமென்ற தீர்மானித்த நான் கிடங்கிலிருந்த சரக்கு விவரங்களைக் குறித்து வைத்திருந்த ரெஜிஸ்டரை எடுத்துக்கொண்டு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சாவியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு என்னுடைய வாடிக்கையாளரின் கடைக்கு சென்றேன்.

நல்ல வேளையாக நான் சென்றபோது கடையில் உரிமையாளர் இருந்தார். என்னைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றவர் என் கையிலிருந்த கனத்த புத்தகத்தைப் பார்த்தார்.

‘என்ன சார் புத்தகமும் கையுமா வந்திருக்கீங்க? எங்கயாவது இன்ஸ்பெக்ஷனுக்கு போய்க்கிட்டிருக்கீங்களா?’ என்றார்.

நான் புன்னகையுடன், ‘ஆமா சார். கரெக்டா சொல்லிட்டீங்க. வாங்க போலாம்.’ என்றேன்.

அவருடைய முகம் சட்டென்று இருளடைந்ததை என்னால் காண முடிந்தது. ‘என்ன சார் சொல்றீங்க?’ என்றார்.

‘நீங்க கேட்டிருந்த கூடுதல் லிமிட் சாங்ஷன் ஆகி வந்திருக்கு. அத டிஸ்பர்ஸ் பண்றதுக்கு முன்னால ஒங்க கொடவுன்லருக்கற ஸ்டாக்க வெரிஃபை செஞ்சி ரிப்போர்ட் பண்ணணும். அதான் வந்தேன்.. வரீங்களா?’

அவர் வருவதாயில்லை. ‘சார் இன்னைக்கி நாள் நல்லாயில்லை. நீங்க வந்த நேரமும் நல்லாயில்லை சார். நீங்க கிறிஸ்துவங்க, அதல்லாம் பாக்க மாட்டீங்க. ஆனா நாங்க அப்படியில்ல. கொடவுன திறக்கறதுக்கு நேரம் பார்த்துத்தான் சார் போவோம். நாளைக்கு காலைல வந்தா செக் பண்ணிரலாம்.. தப்பா நினைச்சிக்காதீங்க.’

என்னடா இது? நான் பிராஞ்சுக்கு வந்ததுக்கப்புறம் கூட பல நாட்கள்ல இதே நேரத்துல குட்ஸ் ரிலீஸ் செஞ்சிருக்காங்களே என்று நினைத்த நான் கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தை திறந்து ஆராய்ந்தேன். நான் நினைத்தது போலவே கடந்த வாரம் ஒரு நாள் இதே நாள் இதே நேரத்தில் கணிசமான தொகைக்கு ஈடான சரக்கை ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை அவரிடம் காட்டினேன்.

அதற்குப் பிறகும் அவர் வருவதற்கு தயங்கவே கடையிலிருந்த பணியாட்களைப் பார்த்தேன். எல்லோருமே என்னுடைய பார்வையை தவிர்க்கவே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறதென்பதை உணர்ந்த நான் பிடிவாதமாக, ‘சார் நீங்க வராட்டி பரவாயில்லை. ஒங்க மேனேஜர என் கூட அனுப்புங்க. இன்னைக்கே இன்ஸ்பெக்ட் செஞ்சி ரிப்போர்ட் அனுப்பணுங்கறது எங்க ஜோனல் மேனேஜரோட ஆர்டர். அவர் நாளைக்கே எங்க பிராஞ்ச் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்துட்டா எனக்கு பெரிய பிரச்சினையாயிரும். நீங்க சரக்கு எதுவும் எடுக்கவோ வைக்கவோ போறதில்லை இல்லையா? அதனால நேரம் அவ்வளவு முக்கியமில்ல, வாங்க.’ என்றவாறு அழைத்துக்கொண்டு சென்றேன்.

அங்கு சென்றதும்தான் தெரிந்தது அவர் ஏன் வர தயங்கினார் என்பது.

தொடரும்..

19 comments:

அருண்மொழி said...

முத்துக்கருப்பன் வேறு பிரச்சனை ஏதும் செய்யாதது ஆச்சர்யமே.

Hope you have recovered fully from the viral infection.

துளசி கோபால் said...

முழுவதையும் கணக்கிலிருந்து எடுக்க //அனுபவித்தது// அதை விட பெரிய தவறு.

'ம' வுக்குப் பதிலா 'ப' வந்துச்சு போல இருக்கு.


அது இருக்கட்டும், குடோன் காலியா இருந்ததா?

G.Ragavan said...

முத்துகருப்பனின் நிலை கொஞ்சம் துன்பமானதுதான். தானாட்சி செய்த இடத்திலேயே தனக்கு ஒரு அவமானம் என்றால்....என்ன செய்வது....

குடோன்ல என்ன இருந்தது? தங்கக் கட்டிகளும் வைரப்பாளங்களும் முத்துக்குவியலுமா இருந்துச்சா?

ஜயராமன் said...

ஒரு பிரச்சனை முடிந்து அடுத்ததா!

போகிற போக்கை பார்த்தால் கடன் வாங்கினவன் எல்லாம் ஏமாத்தியே பிஸினஸ் பண்ணுகிறாங்க போலிருக்கே!

தொடருங்கள்..

sivagnanamji(#16342789) said...

hypothication & pledge வித்தியாசம் இப்பதான் கிளீயர் ஆச்சு.
நன்றி!
பாவங்க சூரியன்
உடல்நலம் முன்னேற்ற மடைந்து விட்டதா?

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

முத்துக்கருப்பன் வேறு பிரச்சனை ஏதும் செய்யாதது ஆச்சர்யமே. //

செய்யாமல் விடுவாரா? செய்யவே செய்தார். ஆனால் என்னை தனிப்பட்ட முறையில் ஒன்றும் செய்யவில்லை. அலுவலக காரியங்களில், முக்கியமாக சம்பந்தப்பட்ட வழக்குகளை மேற்கொண்டு நடத்துவதில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் கணேசன் வக்கீல் படு சமர்த்தானவர்.. அமைதியாக தன்னுடைய அலுவலை நடத்துவதில் கில்லாடி.. நீங்க இதுல தலையிடாதீங்க சார்.. நா அவர டீல் பண்ணிக்கிறேன் என்று கூறியதால் நானும் ஒதுங்கி நின்றேன். இறுதியில் தன்னுடைய எண்ணம் நிறைவேறாது என்று தோன்றியதும் மு.கவும் அடங்கிப் போனார்.

Hope you have recovered fully from the viral infection. //

I hope so. Body pain is still there.. It might take another one week..

tbr.joseph said...

வாங்க துளசி,

'ம' வுக்குப் பதிலா 'ப' வந்துச்சு போல இருக்கு.//

ஆமாங்க 'அனுமதித்தது' என்று இருக்க வேண்டும். திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.


அது இருக்கட்டும், குடோன் காலியா இருந்ததா? //

நீங்க இப்படி கேக்கறீங்க. ஜி.ரா வ பாருங்க:(

tbr.joseph said...

வாங்க ஜி.ரா.

முத்துகருப்பனின் நிலை கொஞ்சம் துன்பமானதுதான். தானாட்சி செய்த இடத்திலேயே தனக்கு ஒரு அவமானம் என்றால்....என்ன செய்வது....//

ஆமாங்க.. ஆனால் அது அவராகவே வருத்திக்கொண்டது. இந்த விஷயம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும் மதுரையிலிருந்த பல வங்கி மேலாளர்களும் அடுத்த ஒரு மாதத்தில் நடந்த பல சங்க கூடங்களில் என்னை சந்தித்து சார் க்ளவரா அந்த ஆள மடக்குனீங்க.. நாங்களும் ரொம்ப நாளா அந்தாள்கிட்ட மாட்டிக்கிட்டு முளிச்சிருக்கோம் என்றனர். எல்லாரையும் எல்லா நேரத்துலயும் ஏமாத்திக்கிட்டிருக்க முடியாதுங்கற நியதிய மறந்துட்டார் போலருக்கு.

குடோன்ல என்ன இருந்தது? தங்கக் கட்டிகளும் வைரப்பாளங்களும் முத்துக்குவியலுமா இருந்துச்சா? //

அப்படி இருந்திருந்தாத்தான் பரவால்லையே.. தாரும்யா நமக்கும் கொஞ்சம் ஷேர்னு கேட்டிருக்கலாமே:)

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

ஒரு பிரச்சனை முடிந்து அடுத்ததா!//

இது அடுத்தடுத்து நடந்ததல்ல.. ஒரு ஆறு மாசம் கழித்துத்தான்.. முக்கியமான பிரச்சினைகளை மட்டுமே எழுதுவது என்று தீர்மானித்ததால் உடனே எழுதிவிட்டேன்..

போகிற போக்கை பார்த்தால் கடன் வாங்கினவன் எல்லாம் ஏமாத்தியே பிஸினஸ் பண்ணுகிறாங்க போலிருக்கே!//

அப்படியில்லை. ஆனால் நாளடைவில் இப்படியெல்லாம் செய்தால்தான் வணிகத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்று வணிகர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. இது என்னுடைய கிளைகளில் நடந்தவை மட்டுமே.. இன்னும் என்னுடைய வங்கியின் மற்ற கிளைகளில் நடந்துள்ளவற்றையெல்லாம் எழுத ஆரம்பித்தால் படு சுவாரஸ்யமாக இருக்கும்.. இன்னும் ஐந்தாறு மணி நேரமும் நான்கு கைகளும் இருந்தால் அவற்றையும் எழுதலாம்தான்..

tbr.joseph said...

வாங்க ஜி!

hypothication & pledge வித்தியாசம் இப்பதான் கிளீயர் ஆச்சு.
நன்றி!//

பேராசிரியருக்கே பாடமா?

பாவங்க சூரியன்//

இன்னும் அரை மணியில் மீண்டும் உதிக்கும்:)

உடல்நலம் முன்னேற்ற மடைந்து விட்டதா? //

முன்னேறிக்கொண்டேயிருக்கிறது. நன்றி.

sivagnanamji(#16342789) said...

//இன்னும் அய்ந்தாறு.....எழுதலாம்//
ஹ்ம்...அவ்ளோவ்தானே...ஏய்...
யார் அங்கே? ஜோஸப் சாருக்கு 6 கைகள் கொடு.......

srishiv said...

உள்ள எதுனா "சரக்கு" இருந்ததா ஐயா? ;)

ஜயராமன் said...

////இன்னும் ஐந்தாறு மணி நேரமும் நான்கு கைகளும் இருந்தால் ////

எழுதுங்க. நாங்கதான் இருக்கோமே படிக்க காத்துகிட்டு.

ஒருவேளை ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருந்தால் சினிமாவே எடுத்துடலாம்.

அப்படி எடுத்தால், குஷ்புவை போடலாமா வேண்டாமான்னும் யோசிச்சு வைங்க...

நன்றி

tbr.joseph said...

ஏய்...
யார் அங்கே? ஜோஸப் சாருக்கு 6 கைகள் கொடு.......//


என்ன ஜி! ஒரு மணி நேரமாயும் இன்னும் டெலிவரி ஆகலையே? காத்துக்கிட்டிருக்கேன்.. எந்த குரியர்ல அனுப்பினீங்க?:)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

உள்ள எதுனா "சரக்கு" இருந்ததா ஐயா? //

இருக்காம எங்க போவுது? ஆனா எவ்வளவுன்னுங்கறதுலதான் பிரச்சினையே..

sivagnanamji(#16342789) said...

போண்டா கூரியர்ஸ்லெ ...இன்னும்
வரலயா? ஒண்ணு செய்யுங்க....தூத்துகுடி இன்ஸ்.கிட்டே
ஒரு புஹார் கொடுங்க

tbr.joseph said...

ஜயராமன்,

ஒருவேளை ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருந்தால் சினிமாவே எடுத்துடலாம்.//

இதுவரைக்கும் ஓக்கே..

அப்படி எடுத்தால், குஷ்புவை போடலாமா வேண்டாமான்னும் யோசிச்சு வைங்க...//

இத படிக்கறப்போத்தான் .... இது ஒரிஜினல் அக்மார்க் ஜயராமன் நக்கலோன்னு ஒரு சந்தேகம்:(

SK said...

நீங்கள் செய்தது போல தவறு செய்த ஒரு நண்பரின் காண்ட்ராக்டை தள்ளுபடி செய்து, கம்பெனிக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்பை காத்தபின், அன்று மாலை, 'அவன் குடும்பத்தை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டேனோ?" எனக் கதறி அழுத என் அண்ணா நினைவுக்கு வந்தார்!


//அப்படி இருந்திருந்தாத்தான் பரவால்லையே.. தாரும்யா நமக்கும் கொஞ்சம் ஷேர்னு கேட்டிருக்கலாமே:)//


பின்னூட்டத்தில் நீங்கள் இட்ட மறுமொழி, சும்மா ஜாலிக்காக எழுதப்பட்டது மட்டுமே என நம்புகிறேன்!

பதிவின் தரத்தைக் கொஞ்சம் குறைப்பது போல இருந்ததால் கேட்டேன்!
தவறாக எண்ண வேண்டாம்!

இன்னொரு சந்தேகம்!

நீங்கள் இன்ஸ்பெக்ஷனுக்குப் போனது முறையான செயலே!
ஆனால், இது போன்ற நேரங்களில் முன் தகவல்[Prior Intimation] அளித்துச் செல்ல வேண்டும் என்ற நியதி கிடையாதா?
வாடிக்கையாளர் உரிமைகள் [Customers' rights]என்ற ஒன்று இதில் வராதா?

தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்!

tbr.joseph said...

வாங்க எஸ்கே.

பின்னூட்டத்தில் நீங்கள் இட்ட மறுமொழி, சும்மா ஜாலிக்காக எழுதப்பட்டது மட்டுமே என நம்புகிறேன்!//

ஆமாங்க.. சும்மா தமாஷ்தான்..

நீங்கள் இன்ஸ்பெக்ஷனுக்குப் போனது முறையான செயலே!
ஆனால், இது போன்ற நேரங்களில் முன் தகவல்[Prior Intimation] அளித்துச் செல்ல வேண்டும் என்ற நியதி கிடையாதா?
வாடிக்கையாளர் உரிமைகள் [Customers' rights]என்ற ஒன்று இதில் வராதா?//

சாதாரணமாக வாடிக்கையாளர்களுடைய வர்த்தக இடங்களை விசிட், இன்ஸ்பெக்ஷன் என்ற இரு வேறு காரணங்களுக்காக பார்வையிட செல்வதுண்டு. முதல் வகை வர்த்தக மேம்பாட்டுக்காக வங்கியின் தரப்பிலிருந்து என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதை விளக்கவுயும், வர்த்தகத்தை மேலும் அபிவிருத்தி செய்ய வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவும். அத்தகைய நேரங்களில் ஒரு நாள் முன் கூட்டியே அறிவித்துவிட்டு செல்வோம். இரண்டாம் வகை முழுக்க முழுக்க வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் தொகை சரியான வகையில் வாடிக்கையாளரால் பயன்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் கண்டறிய உதவும். அதற்கு சர்ப்ரைஸ் மிகவும் முக்கியம். அறிவிக்காமல் செல்வதுதான் வழக்கம். இதற்கெனவே கடன் பத்திரத்தில் பிரத்தியேகமாக ஒரு ஷரத்து வைக்கப்பட்டிருக்கும். அதாவது வங்கியின் அதிகாரிகள் எந்த நேரத்திலும், முன்னறிவிப்பின்றி தங்களுடைய வர்த்தக தளத்தை வந்து பார்வையிடவோ, ஆய்வு செய்யவோ அனுமதிக்கிறேன் என்று வாடிக்கையாளர் ஒத்துக்கொள்வதுபோல். ஆகவே இத்தகைய வர்த்தக ஆய்வுகளை எந்த் வாடிக்கையாளரும் சட்டபூர்வமாக மறுக்க முடியாது.