28 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 191

வழக்கறிஞர் முத்துக்கருப்பனுக்கு என்னுடைய வங்கியின் புதிய பெண் வழக்கறிஞர் மூலமாக நான் நீதிமன்றத்திலிருந்து விவரங்களைத் திரட்டிய விவரம் அடுத்த இரு நாட்களிலேயே தெரிந்துவிட்டது.

ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து கிளம்பிக்கொண்டிருந்தபோது என்னை தொலைப்பேசியில் அழைத்து, ‘சார் நீங்க ஃப்ரீயாருந்தா வரட்டுமா?’ என்றார்.

அன்று எனக்கு வேறெந்த அலுவலும் இல்லாததாலும் அவருடைய அலுவலகம் என் வீடு செல்கின்ற வழியிலேயே இருந்ததாலும் 'நானே வீட்டுக்கு போற வழியில வரேன் சார்.' என்றேன்.

ஆனால் அவர் பதறிக்கொண்டு, ‘வேணாம் சார். நீங்க இங்க வந்தா ப்ரைவசி இருக்காது. நானே அங்கே வரேன். பத்து நிமிஷத்துக்குள்ள வந்துருவேன்.’ என்று எனக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டிக்க நான் வேறு வழியின்றி அவருடைய வருகைக்காகக் காத்திருந்தேன்.

அவர் வாக்களித்தபடியே அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.

என் மேசைக்கெதிரிலிருந்த இருக்கையை அவருக்கு சுட்டிக்காட்ட அவர் அதில் அமர்ந்து சிறிது நேரம் எப்படி துவங்குவது என ஆலோசிப்பவர்போல் பேசாமல் இருந்தார். நானும் அவராகவே துவங்கட்டும் என்று என் முன்பிருந்த கோப்பை படிப்பதுபோல் அமர்ந்திருந்தேன்.

‘சார் நா ஒங்க பேங்க் இங்க துவங்குனதுலருந்தே லீகல் அட்வைசரா இருக்கேன். அஞ்சு வருசத்துக்கு முன்னாலருந்தாரே ஒரு கவுண்டர் மேனேசர் அவர் இருந்தப்போ எனக்கு நல்ல பழக்கம். அவர் போனதுக்கப்புறம் வந்த ரெண்டு பேரும் நம்ம ஆஃபீஸ் பக்கம் வந்ததுக்கூட இல்லை. இருந்தாலும் ஒங்க கேஸ் எதுவும் நமக்கு எதிரா தீர்ப்பானதில்ல சார். அவ்வளவு கவனமா நான் வேல செஞ்சிருக்கேன். அதயெல்லாம் நெனச்சி பார்க்காம நேத்து படிச்சி முடிச்ச அந்த லேடி அட்வகேட் சொன்னத வச்சி நீங்க இப்படி செஞ்சிருக்க வேணாம்னு தோனுது சார்.’

அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் இருந்த நான் அவரை கூர்ந்து பார்த்தேன். ‘நான் என்ன செஞ்சேன்னு சொல்ல வரீங்க சார்? நான் போன வாரத்துல ஒரு நாள் முன்கூட்டியே சொல்லிட்டு ஒங்கள பாக்க வந்தேன். நீங்க சரியாவே என்கிட்ட பேசல. அன்னைக் அட்வகேட் கணேசன் சார் ஆஃபீசுக்கும் போயிருந்தேன். அவர் எங்க கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா கட்டுகளையும் நான் கேட்டதும் மறுநாளே கொண்டு வந்து குடுத்துட்டார். அத பார்த்துத்தான் எவ்வளவு கேஸ்ல ஜட்ஜ்மெண்ட் வந்துருக்கு, எத்தனையில ஈ.பி ஃபைல் பண்ணிருக்கு, எத்தன ஈ.பில அட்டாச்மெண்ட் ஆர்டர் பாசாயிருக்கு, அதுல எத்தன கேஸ்ல ரிக்கவரி வந்திருக்குன்னுல்லாம் என்னால தெரிஞ்சிக்க முடிஞ்சிது. அத்தோட அவர் கோர்ட்லருந்து க்ளெய்ம் செஞ்சிருக்கற அமவுண்ட் எவ்வளவு? எவ்வளவு தொகைய அவர் பேங்க்ல இதுவரைக்கும் கட்டியிருக்கார்னு பார்த்தப்போ எல்லாத்தையுமே கோர்ட்லருந்து கிடைச்சதுமே இங்க கட்டியிருக்கார்னு தெரிஞ்சிக்க முடிஞ்சது. ஏறக்குறைய அதே சமயத்துல ஒங்க வழியா ஃபைல் பண்ண கேஸ்லயும் இதே மாதிரி ரிக்கவரி ஆயிருக்கணும் இல்லையா? அத தெரிஞ்சிக்கத்தான் எங்க கேஸ் கட்டுங்கள கேட்டேன். நீங்க இதோ, அதோன்னு இழுத்தடிச்சதுமல்லாம என் ஸ்டாஃப் கிட்ட இந்த கேஸ் கட்ட படிச்சி என்னத்தய்யா கிழிக்கப் போறார் ஒங்க மேனேஜர்னு கிண்டலா கேட்டிருக்கீங்க. அதான் ஒங்களுக்கு தெரியாம நானே அந்த லேடி வக்கீல் மூலமா எல்லா டீட்டெய்ல்சையும் கோர்ட்லருந்து கலெக்ட் செஞ்சேன். ஏன் அத ஒங்கக்கிட்ட காட்டவா?’ என்றேன் சற்றே கோபத்துடன்.

அவர் மறுபேச்சு பேசாமல் அமர்ந்திருந்தார்.

நான் தொடர்ந்தேன். ‘இங்க பாருங்க சார். இதுவரைக்கும் நீங்க கோர்ட்லருந்து எவ்வளவு கலெக்ட் பண்ணியிருக்கீங்கங்கற பர்ட்டிகுலர்ஸ் எங்கிட்ட இருக்கு. நான் போன மேனேசர கேட்டப்போ இத கோர்ட்லருந்து வித்ட்ரா பண்றதுக்கு ஒங்களுக்கு எந்தவிதமான பவர் டாக்குமெண்ட்லயும் கையெழுத்து போட்டு தரலைன்னு சொல்றார். அப்படி அவர் குடுத்திருக்காத பட்சத்துல ஒங்களால எப்படி கோர்ட்லருந்து பணத்த வித்ட்ரா பண்ண முடிஞ்சதுங்கறத நீங்கதான் சொல்லணும். அத்தோட எங்க பேங்க் பேர்லதான் கோர்டலருந்து செக் குடுத்திருப்பாங்க. அத எப்படி நீங்க என்கேஷ் பண்ணீங்கன்னு சொன்னா நல்லாருக்கும்.’

என்னுடைய நேரடி குற்றச்சாட்டுக்களின் தாக்கம் அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிந்தது.

சிறிது நேரம் எவ்வாறு பதிலளிக்கலாம் என்று சிந்தித்தவாறு அமர்ந்திருந்த முத்துக்கருப்பன் தான் கையோடு கொண்டு வந்திருந்த தன்னுடைய வங்கி கணக்குப் புத்தகத்தை என்னிடம் விரித்து காட்டினார். ‘சார் நீங்க சொல்றது ஒன்னுமே சரியில்லைங்கறத என் பாஸ் புத்தகத்த பார்த்தாலே தெரிஞ்சிரும். கோர்ட்லருந்து கிடைச்ச எல்லா செக்கையும் அந்தந்த டேட்லயே ஒங்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணியிருக்கேன். இந்தாங்க பாருங்க.’

நான் பதில் பேசாமல் அவர் நீட்டிய கணக்கு புத்தகத்தை வாங்கி பார்த்தேன். அவர் கூறியதுபோலவே கடந்த ஓராண்டு காலமாக அவருடைய கணக்கில் பல காசோலைகள் வரவு வைத்திருப்பதைக் கண்டேன்.

‘சரி சார். இதுலருந்து நான் என்ன தெரிஞ்சிக்கணும்னு நீங்க சொல்றீங்க?’ என்றேன்.

அவர் கேலியுடன், ‘என்ன சார் விளையாடறீங்களா? நான் ஒங்க பேங்க்ல எல்லா செக்கையும் டெப்பாசிட் செஞ்சிருக்கறப்போ நீங்க எப்படி நான் அத கட்டவேயில்லன்னு சொல்லலாம்?’ என்றார்.

எனக்குள் பொங்கிவந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘சார் நான் ஏறக்குறைய அஞ்சி வருசமா மேனேஜரா இருக்கேன். அதனால நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு நல்லாவே புரியுது. சரி. இப்ப நா கேக்கப்போற கேள்விக்கு பதில் சொல்லுங்க. இது யாரோட பாஸ்புக்?’

அவர் சீரியசாக, ‘ஏன் சார். பார்த்தா தெரியல? என்னோடதுதான். எதுக்கு கேக்கீங்க?’ என்றார்.

நான் என்ன நோக்கத்துடன் அந்த கேள்வியைக் கேட்டேன் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும் என்னை சோதிக்கவே அவ்வாறு கேட்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.

‘நீங்க கோர்ட்லருந்து எங்க பேங்க் பேர்ல கிடைச்ச செக்க ஒங்க கணக்குல எப்படி சார் டெப்பாசிட் பண்லாம்? அதுக்கு பதில் சொல்லுங்க. கணேசன் சார் ஒவ்வொரு செக்கோடயும் இந்த தொகை எந்த கணக்குக்காக கிடைச்சது அப்படீங்கற டீட்டெய்ல்ட் குறிப்பு வச்சி அனுப்புவார். அதனால அவர் டெப்பாசிட் பண்ண எந்த செக்குமே அவரோட பர்சனல் அக்கவுண்ட்ல வரவு வைக்கப்படல. ஆனா நீங்க அப்படி செய்யாம இருந்திருப்பீங்க. இந்த பிராஞ்சில ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேல செக்குங்கள கஸ்டமர்ஸ் டெப்பாசிட் செய்றாங்க. அதுல ஒங்க செக்கும் ஒன்னாருக்கும். செக்குங்க கிடைச்சி ஒரு மணி நேரத்துக்குள்ள க்ளியரிங்ல ப்ரெசெண்ட் பண்ணணும். இதுல நீங்க ஒங்க கணக்குக்குன்னு செல்லான் எழுதி குடுத்தனுப்பற செக்க ஒங்க கணக்குல வரவு வைக்க வேண்டியதுதானான்னு செக் பண்ணவேண்டியது எங்க பொறுப்புன்னு சொல்லி நீங்க தட்டிக்கழிக்க முடியாது. அதான் எல்லா செக்கையும் ஒங்க கணக்குல வரவு வச்சிட்டாங்க.’

அவர் எகத்தாளமாக, ‘சார் ஒங்க பேங்க்லருக்கறவங்க மூளை இல்லாம செஞ்ச காரியத்துக்கு என்னெ ஏன் சார் குறை சொல்றீங்க?’ என்றார்.

இனி வாளாவிருந்து பயனில்லையென்று நினைத்த நான். ‘சரி சார், அவங்களுக்குத்தான் மூளையில்லை ஒத்துக்கறேன். நீங்க எப்படி சார் அவ்வளவு பணத்தையும் வரவு வச்சவுடனே வித்ட்ரா பண்லாம்? நீங்க டெப்பாசிட் பண்ண செக் அமவுண்டையெல்லாம் அப்படியே கணக்குல மெய்ண்டெய்ன் செஞ்சிரூந்திங்கன்னா நீங்க சொல்ற வாதம் சரி. ஆனா உண்மை அது இல்லையே.. சும்மா கோர்ட்ல பண்ற வாதத்தையெல்லாம் இங்க வச்சி பயனில்லை சார். நீங்க செஞ்சிருக்கற காரியம் சரியில்லைன்னு ஒங்களுக்கே தெரியும். கோர்ட்லருந்து வாங்குன பணம் முழுசையும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கட்டிருங்க. இல்லன்னா ஒங்க பேர்ல பார் கவுன்சில்க்கு புகார் அனுப்பவும் தயங்க மாட்டேன்.’ என்றேன் சூடாக. ‘அதுமட்டுமில்ல சார். நீங்க ஹேண்டில் செஞ்சிட்டிருக்கற எல்லா கேஸ்களோட கட்டையும் ரெண்டு நாளைக்குள்ள எனக்கு அனுப்பித்தரணும்.’

என்னுடைய பதிலில் இருந்த மிரட்டல் தொனியும் என்னுடைய கோபமும் அவரை எந்த அளவுக்கு கோபப்படுத்தியிருக்க வேண்டும் என்பதை அவருடைய உதடுகள் நடுங்குவதிலிருந்தே என்னால் உணரமுடிந்தது. பேச முயன்றும் வார்த்தைகள் வராமல் தடுமாறினார்.

‘சார்.. ஒங்க வயசு எனக்கு அனுபவம். முப்பது, முப்பத்தஞ்சி வருசத்துக்கும் மேல நான் இங்க ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கிறேன். ரெண்டு தடவ பார் கவுன்சில் தலைவரா இருந்திருக்கேன். என்னோட இண்டெக்ரிட்டிய சந்தேகப்படறா மாதிரி பேசிட்டீங்க. போட்டும். நீங்க சொன்ன ஒரு வாரம் என்ன சார், நாளைக்கே முழுப்பணத்தையும் கட்டிடறேன். இனிமே ஒங்க பேங்கோட கேசும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் சார். எங்கிட்டருக்கற கேஸ் கட்டுங்களையெல்லாம் நாளைக்கே குடுத்து விடறேன். நீங்களே என்ன வேணுமோ செஞ்சிக்கிருங்க. நான் ஒரு வார்த்தை சொன்னா போறும் கணேசனும் ஒங்க பேங்க்லருந்து விலகிருவார். அப்புறம் அந்த பொம்பளைய வச்சிக்கிட்டு நீங்க எப்படி கேசுங்கள நடத்தி ஜெயிக்கறீங்கன்னு நா பாக்கத்தான போறேன்.. ஒவ்வொரு கேசா தோக்கும்போது ஒங்க எச்.ஓவுக்கும் தெரியவரும். நான் வரேன்.’

கோபத்துடன் செல்லும் அவரை தடுத்து நிறுத்த தோன்றாமல் நான் அமர்ந்திருந்தேன். ஒருவேளை நான் அவரை தடுத்து நிறுத்துவேன் என்று எதிர்பார்த்தோரோ என்னவோ வாசலை நெருங்கியும் வெளியேறாமல் சிறிது நேரம் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

ஆனால் நான் இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கவே திரும்பி என்னை ஒருமுறை கோபத்துடன் முறைத்துப்பார்த்துவிட்டு வெளியேற நான் சிறிது நேரம் கழித்து எழுத்து வங்கி வாசலில் அமர்ந்திருந்த நைட் வாட்ச்மேன் உதவியுடன் முன்கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

அவர் உறுதியளித்திருந்தபடி நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த தொகையை ஒரு வார காலமாகியும் திருப்பி அடைக்காததால் முன்னறிவிப்பின்றி நான் அவரைக் குறித்து ஒரு விளக்கமான கடிதத்தை மதுரை வழக்கறிஞர் சங்கத்திற்கு ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பினேன்.

என்னுடைய புகாரின் பலன் அடுத்த இரு தினங்களிலேயே தெரிந்தது..

தொடரும்..

28 comments:

tbr.joseph said...

நாலு நாளா கிருமிக்காய்ச்சல்ல (viral fever) பட்ட அவஸ்த்தையிலருந்து இன்னும் முழுசா மீளலைங்க. அதனால அடுத்த பதிவு ஒரு நாள் விட்டுத்தான் வரும். இன்னும் முழுசா பழைய நிலைக்கு வர ஒருவாரமாவது ஆகும்.

அருண்மொழி said...

Sir,

Take care.

sivagnanamji(#16342789) said...

wish u speedy recovery
(from viral fever)
(of bank dues frm the lawyer)

dondu(#4800161) said...

"நீங்க ஒங்க கணக்குக்குன்னு செல்லான் எழுதி குடுத்தனுப்பற செக்க ஒங்க கணக்குல வரவு வைக்க வேண்டியதுதானான்னு செக் பண்ணவேண்டியது எங்க பொறுப்புன்னு சொல்லி நீங்க தட்டிக்கழிக்க முடியாது. அதான் எல்லா செக்கையும் ஒங்க கணக்குல வரவு வச்சிட்டாங்க."
எனக்கு இது புரியவில்லை. இப்போது நான் பத்து செக்குகளை ஒரே சலானில் போடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் கிருஷ்ணமூர்த்தி பெயரில் சில செக்குகள் இருந்தால் ராகவன் அக்கௌண்டில் எப்படிப் போடலாம்? ராகவனை கூப்பிட்டு செவுளில் அறைய வேண்டாம்? அதுவும் எல்லா செக்குகளும் அக்கௌண்ட் பேயீ என்றல்லவா இருந்திருக்கும்?

வக்கீல் செய்ததை முதல் தடவையிலேயே கண்டு பிடித்திருக்க வேண்டாமா? பேங்கில் என்ன செய்கிறார்கள்? சம்பந்தப்பட்ட க்ளெர்க் ஆஃபீஸர் எல்லோருக்கும் சங்குதானே இது வெளியில் வந்தால்? அதுவும் ஐந்து வருடங்களாகவா செய்து வந்திருக்கிறார்கள்?

சம்பந்தப்பட்ட மேனேஜர் மேலும் ஆக்ஷன் வந்திருக்க வேண்டுமே?

வக்கீலுக்கு இம்மாதிரி செய்தால் சன்னது பறிபோகுமே? அவ்வாறு நடந்ததா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

உடம்பைப் பார்த்துக்குங்க. குணமான பிறகு எழுதுங்க. காத்திருப்போம்.

நம்ம டோண்டு கேட்டதுதான் நானும் கேக்கணும்.

tbr.joseph said...

நன்றி அருண்மொழி,

tbr.joseph said...

வாங்க ஜி!

wish u speedy recovery
(from viral fever)
(of bank dues frm the lawyer)//

ரெண்டாவது சொன்னது எதுக்கு? இருபத்து அஞ்சு வருசத்துக்கப்புறமா:)

G.Ragavan said...

என்னது கிருமிக் காச்சலா...காச்சல் நாலு நாள்ள சரியாப் போகும்..அப்புறம் ஒரு நாலு நாளைக்கு மேலுவலி இருக்குமே....நின்னா உக்காந்தா எந்திரிச்சா நடந்தான்னு....ஒடம்பப் பாத்துக்கோங்க. அப்புறமா திரும்பிப் ப்பாத்துக்கலாம்.

ஆக நடந்த தப்புல வக்கீல் மேல மட்டும் பிரச்சனை இல்லை. வங்கியிலயும் பிரச்சனை இருந்திருக்கு. அதுனால வக்கீல் செஞ்சது சரியாகாது. வங்கியில தப்பு செஞ்சவங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டு வக்கீலுக்கு என்ன ஆச்சோ அது நடக்கனும்.

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

வக்கீல் செய்ததை முதல் தடவையிலேயே கண்டு பிடித்திருக்க வேண்டாமா? பேங்கில் என்ன செய்கிறார்கள்? சம்பந்தப்பட்ட க்ளெர்க் ஆஃபீஸர் எல்லோருக்கும் சங்குதானே இது வெளியில் வந்தால்? அதுவும் ஐந்து வருடங்களாகவா செய்து வந்திருக்கிறார்கள்? //

அடடடடா.. எத்தனை கேள்விகள்? நீங்க சொல்ற எல்லாம் சரிதான். செக் செய்யத்தான் வேணும். செய்யத்தான் செய்கிறோம்.. ஆனால் இப்படி தவறுகள் நடப்பதற்கு கவனக்குறைவு மட்டுமல்ல காரணம்.. வேலைப்பளுவும் காரணம். அரசுடமை வங்கிகள் போல் தாராளமாக அதிகாரிகள் இருப்பதில்லை தனியார் வங்கிகளில். பத்து குமாஸ்தாவுக்கு ஒருத்தர் இருப்பார். அதிலும் இதில் சம்பந்தப்பட்டவர் வங்கியில் சட்ட ஆலோசகர். மதுரையில் ஒரு பெரிய சட்ட நிறுவனத்தின் சீனியர் வழக்கறிஞர். ஆகவே கொஞ்சம் அசட்டையாக இருந்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட மேனேஜர் மேலும் ஆக்ஷன் வந்திருக்க வேண்டுமே?//

நான் அவர்மீது அவதூறாக ஏதாவது எழுதியிருந்தால் ஒருவேளை ஆக்ஷன் எடுத்திருப்பார்கள். அதல்லவே என்னுடைய நோக்கம். பெருந்தவறு செய்திருந்தவர் நம் வக்கீல்தான் என்பது எனக்கு தெரியும். அவரிடமிருந்து வசூலிப்பதும் பெரிய விஷயமல்ல என்பதும் தெரிந்திருந்தது. அதனால்தான் என் அதிகாரிகளைக் குற்றம் காண எனக்கு மனம் வரவில்லை. ஆனால் இதுவே அரசுடமை வங்கியாக இருந்திருந்தாலும் உடனே இடைக்கால பணியிடை நீக்கம் செய்துவிட்டுத்தான் மறுவேலையே.

வக்கீலுக்கு இம்மாதிரி செய்தால் சன்னது பறிபோகுமே? அவ்வாறு நடந்ததா?//

சார் அவர் பயங்கரமான, influence உள்ள ஆள். அப்படியெல்லாம் ஒன்னுமே நடக்கல.

tbr.joseph said...

வாங்க துளசி,

நம்ம டோண்டு கேட்டதுதான் நானும் கேக்கணும். //

அவருக்கு சொன்ன பதில்தான் ஒங்களுக்கும்:))

tbr.joseph said...

வாங்க ராகவன்,

காச்சல் நாலு நாள்ள சரியாப் போகும்..அப்புறம் ஒரு நாலு நாளைக்கு மேலுவலி இருக்குமே....நின்னா உக்காந்தா எந்திரிச்சா நடந்தான்னு....//

அடடா. நல்ல அனுபவசாலிங்க நீங்க. அதே தான்.. இப்படியொரு வலிய அனுபவிச்சி பத்து வருசத்துக்கு மேல ஆவுதா.. ஆரம்பத்துல என்னடா இதுன்னு ஆயிருச்சி.. இப்ப பரவாயில்லை..//

ஒடம்பப் பாத்துக்கோங்க. அப்புறமா திரும்பிப் பாத்துக்கலாம்.//

அட! எதுகை மோனையோட இருக்கே அட்வைஸ்.. நன்றி.

ஆக நடந்த தப்புல வக்கீல் மேல மட்டும் பிரச்சனை இல்லை. வங்கியிலயும் பிரச்சனை இருந்திருக்கு. அதுனால வக்கீல் செஞ்சது சரியாகாது. வங்கியில தப்பு செஞ்சவங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டு வக்கீலுக்கு என்ன ஆச்சோ அது நடக்கனும். //

எங்க மாதிரி வங்கிகள்ல அதிகாரிகளா வேல செஞ்சி எந்த தண்டனையும் வாங்காம ரிட்டையர் ஆகறதே ரொம்ப அபூர்வங்க. ஏன்னா வேலைப் பளு அவ்வளவு இருக்கும். இதன் காரணமாக இதுபோன்ற தவறுகள் நடப்பது சகஜம். பிரைமா ஃபேசியா (prima facie) தவறான நோக்கம் (malafide intention) தெரியலனா நா யார் மேலயும் ஆக்ஷன் எடுக்க சொல்லி எழுதனதே இல்லை. என்னுடைய முதல் நோக்கம் இழந்த தொகையை வசூலிப்பது. அது முடியாத பட்சத்தில் மட்டுமே மேலிடத்தை அணுகுவேன். அப்படித்தான் இதிலும் செய்தேன்.

Krishna said...

காய்ச்சல் வந்தா (அடிக்கடி இல்ல சார், எப்பவாவது) நல்லது, உடம்பு தன்னை சரி செய்துகொள்கிறதுன்னு, என் மருத்துவ பெரியப்பா சொல்வார். கிருமிக் காய்ச்சலும் அதுல சேர்த்தியான்னு தெரியாது...

பூரணமா மேல் வலியிலிருந்து விடுபட்டபின் எமக்கு பாடம் நடத்த வரவும்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

கிருமிக் காய்ச்சலும் அதுல சேர்த்தியான்னு தெரியாது...//

அதுலதான் பிரச்சினையே..

பூரணமா மேல் வலியிலிருந்து விடுபட்டபின் எமக்கு பாடம் நடத்த வரவும்.//

சரிங்க:))

Sivaprakasam said...

எப்படியோ எங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லிடீங்களே. ரொம்ப நன்றி

SK said...

துளசி கோபாலுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

அமெரிக்க வங்கிகளில், யார் பெயருக்கு காசோலை வழங்கப்பாடிருந்தாலும், பின்னால் என் கையெழுத்து இருந்து, அதை என் கணக்கில் டெபாசிட் செய்தால், மறுபேச்சின்றி கணக்கில் ஏற்றப்படும். இது முழுக்க முழுக்க அந்த இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று விட்டு விடுகின்றனர். என் மனைவி பெயரில் வரும் காசோலைகளை நானோ அல்லது மாற்றுவிதமாகவோ இது நடந்து கொண்டிருக்கிறது! அ/பே விவகாரமெல்லாம் கிடையாது இங்கே!

ஆனால், உங்கள் விஷயத்தில் காசோலைகள் பேங்கின் பெயரில் அல்லவா வழங்கப் பட்டிருக்கும்?
மேலும், அ/பே வேறு இருந்திருக்குமே!
கவனக்குறைவாய் இருக்க முடியாது.
இதோ ஏதோ உள்கை இல்லாமல் நடக்க முடியாது!
இருபக்கமும் பெருந்தவறு நடந்திருக்கிறது எனவே கருதுகிறேன்.

நல்லவேளை நீங்களாவது கண்டுபிடித்தீர்களே!
நேர்மையற்ற மனிதர்களைக் கண்டால் பற்றிக் கொண்டுதன் வருகிறது!

சுவையான தொடர்!
[படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!]

உடம்பைக் கவனித்துக் கொள்ளவும்!
விரைவில் குணம் பெற ... முருகனருள் முன்னிற்க!

tbr.joseph said...

வாங்க எஸ்.கே,

ஆனால், உங்கள் விஷயத்தில் காசோலைகள் பேங்கின் பெயரில் அல்லவா வழங்கப் பட்டிருக்கும்?
மேலும், அ/பே வேறு இருந்திருக்குமே! கவனக்குறைவாய் இருக்க முடியாது.
இதோ ஏதோ உள்கை இல்லாமல் நடக்க முடியாது!
இருபக்கமும் பெருந்தவறு நடந்திருக்கிறது எனவே கருதுகிறேன்.//


உண்மைதான். இருந்திருக்கும். ஆனால் என்னுடைய இரு மேலாளர்களை மட்டுமல்ல அச்சமயம் வங்கியில் பணியாற்றிய துணை அதிகாரிகளையும் நான் நன்கு அறிந்திருந்ததால் இது முழுக்க முழுக்க கவனக்குறைவால் அல்லது அந்த வழக்கறிஞரைக் கண்டு அஞ்சியதால் மட்டுமே நடந்தது என்பதை உணரமுடிந்தது. Conclusive evidence to the contrary இல்லாததால் நான் அதை பெரிதுபடுத்தவில்லை.

Sivaprakasam said...

<=====
அல்லது அந்த வழக்கறிஞரைக் கண்டு அஞ்சியதால் மட்டுமே நடந்தது என்பதை உணரமுடிந்தது
======>
இதைத்தான் நாங்க எல்லாரும் சொல்றோம்/கேட்கிறோம்

G.Ragavan said...

//// tbr.joseph said...
வாங்க ராகவன்,

காச்சல் நாலு நாள்ள சரியாப் போகும்..அப்புறம் ஒரு நாலு நாளைக்கு மேலுவலி இருக்குமே....நின்னா உக்காந்தா எந்திரிச்சா நடந்தான்னு....//

அடடா. நல்ல அனுபவசாலிங்க நீங்க. அதே தான்.. இப்படியொரு வலிய அனுபவிச்சி பத்து வருசத்துக்கு மேல ஆவுதா.. ஆரம்பத்துல என்னடா இதுன்னு ஆயிருச்சி.. இப்ப பரவாயில்லை..//

கிருமிக் காச்சல் எல்லாருக்கும் வரும் சார். பெங்களூர்ல நான் இருந்த பக்கத்து வீட்டுல மொதல்ல அவங்க ரெண்டாவது பையனுக்கு வந்தது. அடுத்து மூத்த பையனுக்கு வந்தது. அடுத்து அவங்க அப்பா ( எனக்கு நண்பரும் கூட)...அடுத்து அந்த அக்காவிற்கு வந்தது. அடுத்து எனக்கு வந்தது. :-)) ஒரு வாரம் அவங்க வீட்டுலதான் சாப்பாடு.

// // ஒடம்பப் பாத்துக்கோங்க. அப்புறமா திரும்பிப் பாத்துக்கலாம்.//

அட! எதுகை மோனையோட இருக்கே அட்வைஸ்.. நன்றி. //

எழுதும் போது தோணுச்சான்னு நெனவில்லை. படக்குன்னு எழுதீட்டேன். இப்ப நீங்க சொல்லும் போது தெரியுது. :-)

// Krishna said...
காய்ச்சல் வந்தா (அடிக்கடி இல்ல சார், எப்பவாவது) நல்லது, உடம்பு தன்னை சரி செய்துகொள்கிறதுன்னு, என் மருத்துவ பெரியப்பா சொல்வார். கிருமிக் காய்ச்சலும் அதுல சேர்த்தியான்னு தெரியாது...//

இல்லைன்னு நெனைக்கிறேன் கிருஷ்ணா. நான் பைக்ல கீழ விழுந்தப்போ லேசா காச்சல் அப்பப்ப வரும். பேன் ஏசி போடாம போர்வைய வெச்சிப் போத்திக்கிருவேன். வேர்த்ததும் சரியாப் போகும்.

delphine said...

எங்க சார் உங்களை ஆங்கிலம் பக்கம் காணோம். ?

manasachi said...

Dear Josep sir,
I am a big fan of your writings. Your experience gave me lot of ides of how to tackle situation. I don’t post anything before cz I don't have any blog. Only 2day I created my blog to ask you to take care.
With Love
Mahesh.

srishiv said...

ஐயா
சிக்குன் குனியாவாக இருக்கப்போகின்றது, பத்திரமாக உடல் நலத்தினைப்பார்த்துக்கொள்ளுங்கள், வந்து அந்த வக்கீலைஒரு கை பார்த்துவிடுவோம் :)

dondu(#4800161) said...

"இது முழுக்க முழுக்க கவனக்குறைவால் அல்லது அந்த வழக்கறிஞரைக் கண்டு அஞ்சியதால் மட்டுமே நடந்தது என்பதை உணரமுடிந்தது."
உங்களுடைய ரிப்போர்ட்டிலிருந்தே பிற்காலத்தில் ஆடிட் இது சம்பந்தமாகக் கேள்வி கேட்டிருந்தால் உங்களால் கண்டிப்பாக இப்பதிலை கூறியிருக்கவே முடியாது.

இதை நான் என் வீட்டம்மாவிடம் கூறியபோது அந்த மாஜி பேங்க் ஆஃபீசர் ரொம்ப டென்ஷனாகி விட்டார். இம்மாதிரியும் ஒரு மேனேஜர் (நீங்கதான்) ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று பொங்கி விட்டார்.

நானும்தான் கேட்கிறேன், உங்கள் முந்தைய இரு மேனேஜர்கள் ஒழுங்காக பிராஞ்சுக்கு வந்ததில்லையென்று நீங்கள்தானே கூறினீர்கள், முக்கியமாக முந்தைய மேனேஜர்? வேலை பளு இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க முடியுமா?

எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால் உங்கள் அடிப்படையான நல்ல எண்ணம் உங்களுக்கு கை கொடுத்திருக்கிறது என்பதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

இம்மாதிரியும் ஒரு மேனேஜர் (நீங்கதான்) ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று பொங்கி விட்டார்.//

இதற்கு ஆங்கிலத்தில் பதிலளிப்பது எளிது என்று நினைக்கிறேன். தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.

There are two kind of risks. A reckless risk which is taken instinctively without looking at the after effects. The second one is a calculated risk which is taken based on our analysis of all the facts that are available to us knowing fully well the reactions our action might trigger.

You dont have any control on the risk taken recklessly or rather impulsively. You would be forced to face the consequences. Passage of time and experiece would teach a person to be more careful while taking decisions in future.

Any successful person or for that matter a Bank Manager, will have to take calculated risks to achieve anything meaningful in career. The ability to take such risks is looked upon by the senior management as an essential character to assume higher responsibilities. Despite the efforts taken to arrive at certain business decisions some of our decisions do go wrong and backfire. But if one were to ruminate on such failures and refrain from taking decisions, then no meaningful achievement is possible.

My decision to take on the Lawyer was also a calculated risk. I knew that I had enough material evidence to corner him, despite his seniority and political clout. It could have backfired. But still I went ahead because my intentions were clear, honest and straight forware. There was no anger or vengeance behind my action. It was a business decision taken with only one agenda: recover the Bank's money. It had to be taken. It should have been taken by my previous Manager. For reasons best known to he did not take.. or may be he could not.

tbr.joseph said...

வாங்க டெல்ஃபின்,

எங்க சார் உங்களை ஆங்கிலம் பக்கம் காணோம். ? //

வரணும்.. வந்திடறேன்..

tbr.joseph said...

வாங்க மனசாட்சி,

I am a big fan of your writings. //

அப்படியா? நன்றிங்க:)

Your experience gave me lot of ides of how to tackle situation.//

ஒருவருடைய சாதனைகளை விட தோல்விகளே மற்றவருக்கு பாடமாக அமையும்.

dondu(#4800161) said...

ஜோசஃப் சார், நீங்கள் வக்கீலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை பற்றி நான் பேசவே இல்லை.

உங்கள் முந்தைய மேனேஜர்களின் செயல் குறைபாட்டைப் பற்றி ரிப்போர்ட்டில் எதுவும் குறிப்பிடாது ரிஸ்க் எடுத்ததைத்தான் குறிப்பிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

சிக்குன் குனியாவாக இருக்கப்போகின்றது//

அதுதான் போலருக்குங்க. சிம்ப்டம் எல்லாம் அப்படியே இருக்கு. நேத்து டாக்டரும் அதுக்கு மருந்து குடுத்துருக்கார். சுமார் இரண்டு வாரம் ஆகுமாம். என்ன பண்றது?

பத்திரமாக உடல் நலத்தினைப்பார்த்துக்கொள்ளுங்கள், வந்து அந்த வக்கீலைஒரு கை பார்த்துவிடுவோம்//

சரிங்க. அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே :))

tbr.joseph said...

உங்கள் முந்தைய மேனேஜர்களின் செயல் குறைபாட்டைப் பற்றி ரிப்போர்ட்டில் எதுவும் குறிப்பிடாது ரிஸ்க் எடுத்ததைத்தான் குறிப்பிட்டேன்.//

ஓ! அதுவா?

அதுல என்ன ரிஸ்க் இருக்கு சார்? அதாவது அவரப் பத்தி நா ரிப்போர்ட் பண்ணாம அதனால நானே மாட்டிக்கிட்டிருப்பேன்னா? அப்படியொரு விளைவை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய முந்தைய மேலாளர் கொஞ்சம் விவரம் இல்லாதவர். கேரள மாநிலத்தில் வெறும் டெப்பாசி ஓரியண்டட் கிளைகளில் பணிபுரிந்து வந்திருந்ததால் நம்முடைய வில்லன் வக்கீலுடைய நடவடிக்கைகளைக் கண்டு மிரண்டு போயிருந்தார் என்றும் சொல்லலாம். மற்றபடி தில்லுமுல்லு செய்பவர் என்று நினைக்க எனக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும் கிளையிலிருந்த பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொண்டு தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே எங்களுடைய சேர்மன் என்னை தேர்ந்தெடுத்திருந்தார். அதை செய்வதை விட்டுவிட்டு முந்தைய மேலாளரை பழிசொல்லி புகார் அனுப்பியிருந்தால் அதற்கு எந்த அளவுக்கு எங்களுடைய தலைமையகத்தில் வரவேற்பு இருந்திருக்கும் என்பதும் கேள்விக்குறி. அத்துடன் முந்தைய மேலாளருடைய பெயரில் அதுவரை எந்த களங்கமும் இல்லாதிருந்த சூழலில் என்னுடைய புகாருக்கு பெருத்த மதிப்பிருந்திருக்காது. அதுவும் ஒரு காரணம் நான் அதை செய்யாதது.