23 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 190

என்னுடைய கிளையிலிருந்து தொடுத்திருந்த வழக்குகளை கையாள்வதற்கு இரண்டு வழக்கறிஞர்களை வங்கி நியமித்திருந்தது.

அவ்விருவருமே நல்ல அனுபவம் மிக்கவர்கள். மதுரை வழக்கறிஞர்களுடைய ‘பார் கவுன்சிலின்’ மூத்த உறுப்பினர்கள்.

மொத்தமிருந்த சுமார் 125 வழக்குகளில் பெரும்பாலானவற்றை முத்துக்கருப்பன் என்பவரும் மற்றவற்றை கணேசன் (இரண்டுமே புனைப்பெயர்கள்) என்பவரும் கையாண்டு வந்திருந்தனர்.

அவர்களுள் முன்னவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த சமயத்தில் தான் அதிகம் வேலையிருந்ததுபோல் காண்பித்துக்கொண்டார். உண்மையிலேயே அவருடைய அலுவலகத்தை நான் சென்றடைந்தபோது நான்கைந்து வாடிக்கையாளர்கள் அவரை சந்திக்க காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவர் அபிநயித்த அளவுக்கு அவர் அத்தனை பிசியாக இல்லையென்பது மட்டும் தெரிந்தது. ‘சார் இன்னைக்கி திங்கக்கிழமை (அதான் தெரியுதே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்). சாதாரணமாவே திங்கக் கிழமைகள்ல நான் ரொம்ப பிசியா இருப்பேன். நீங்க சனிக்கிழமையே இன்னைக்கி வரேன்னு சொன்னதாலத்தான் நான் ஒங்கள பாக்க ஒத்துக்கிட்டேன். ஆனாலும் பாருங்க இன்னைக்கி ஹியரிங் வர்ற கட்டுங்களையெல்லாம் ஒருதரம் பார்க்கக்கூட எனக்கு நேரமில்லை. அதனால நீங்க நம்ம ஜூனியர் ஒருத்தர பார்த்து பேசிட்டு போங்க. நாம ரெண்டு மூனு நாள் கழிச்சி ஒருநாள் சாயந்தரமா சாவகாசமா சந்திச்சி பேசலாம்.’ என்று கழன்றுக்கொள்ள நான் முதல் நாளே வில்லங்கம் செய்யவேண்டாம் என்று நினைத்து நான் அவருடைய ஜூனியர் வழக்கறிஞரைச் சந்தித்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்கு சம்பந்தமாக  நான் முந்தைய இரண்டு நாட்களில் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை கொடுத்து, ‘எனக்கு இதுக்கெல்லாம் டீட்டெய்லா ஒரு ரிப்போர்ட் வேணும் சார்.’ என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.

அன்று மாலையே வழக்கறிஞர் கணேசனைம் சென்று சந்தித்தேன். அவர் முத்துக்கருப்பனைப் போலவே பிரபலமாயிருந்த வழக்கறிஞர் என்றாலும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே அவரிடம் உரையாடிக்கொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரை, ‘சார் ஒரு அரைமணி நேரம் காத்திருங்க. நான் இவரை அனுப்பிவிட்டு ஒங்கள கூப்பிடறேன்’ என்று சாமர்த்தியமாக அனுப்பிவிட்டு நான் சொல்ல வந்ததை முழுவதுமாக கேட்டு அவரே குறிப்பெடுத்துக்கொண்டார்.

‘சார். எனக்கு எங்க கேஸ் சம்பந்தப்பட்ட கட்டெல்லாம் வேணும். நானே அத படிச்சி பார்த்து ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணணும். ஒரு நாலு நாளைக்குள்ள திருப்பி தந்துருவேன்.’ என்றதும் ‘அதுக்கென்ன சார், தர்றேன்.’ என்று தன்னுடைய குமாஸ்தாவை அழைத்து, ‘சார் தான் நம்ம ----------க்கு வந்திருக்கற புது மேனேசர். இவங்க சம்பந்தப்பட்ட கேஸ் கட்டுகளையெல்லாம் கலெக்ட் பண்ணி ஒரு லிஸ்ட் போட்டு நாளைக்கு நீங்களே பேங்க்ல கொண்டு போய் குடுத்திட்டு அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கிட்டு வந்துருங்க. அப்புறம் திருப்பி வாங்கிக்கலாம். மறந்துராதீங்க. நாளைக்கு கொண்டு கொடுக்கணும்..’ என்று உத்தரவிட்டுவிட்டு, ‘வேற ஏதாச்சும் வேணுமா சார்?’ என்றார் புன்னகையுடன்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு திரும்பினேன்.

அவர்கள் இருவரிடமும் பேசிவிட்டு திரும்பும்போதே இருவரைப் பற்றியும் லேசாக கணிக்க முடிந்தது.

நான் என்னுடைய அலுவலகம் திரும்பி நான் குறித்துவைத்திருந்த குறிப்புகளை என்னுடைய கிளையிலிருந்த வழக்கு சம்பந்தப்பட்ட புத்தகங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன்.

வழக்கு தொடரப்பட்டிருந்த சுமார் 125 வழக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் வங்கிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் 95% வழக்குகளில் தீர்ப்பின் நகல் பெறப்பட்டு Execution Petition எனப்படும் தீர்ப்பை செயல்படுத்து மனுவை வங்கி குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே சமர்ப்பித்திருந்தது.

ஏறத்தாழ எல்லா கணக்குகளுக்கும் ஒரு அரசு ஊழியரின் ஜாமீன் இருந்ததால் அவர்களுடைய மாத வருமானத்திலிருந்து ஒரு பகுதியை மாதத் தவணையாக பிடித்து வங்கிக்கு அடைக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தன. ஆகவே, நீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட ஜாமீந்தாரர்கள் பணியாற்றிவந்த அரசு இலாக்கா அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமை வங்கியின் வழக்கறிஞர்களுக்கு இருந்தது.

வழக்கறிஞர் கணேசன் தன்னுடைய அலுவலை சரிவர செய்திருந்தபடியால் உத்தரவு வழங்கப்பட்டிருந்த எல்லா அரசு அதிகாரிகளிடமிருந்தும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி தவணைத் தொகை பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்தது.

இப்படி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்ட தொகையை பெற வங்கியின் சார்பில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மனு செய்யவேண்டும் என்பது நியதி. அதை அவர் குறிப்பிட்ட காலத்தில் என்னுடைய முந்தைய மேலாளரிடம் கையொப்பம் பெற்று நீதிமன்றத்தில் அவ்வப்போது சமர்ப்பித்து கிடைத்த காசோலையை வங்கியில் உடனே செலுத்தியிருந்ததையும் பார்த்தேன்.

ஆனால் முத்துக்கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து எந்த தொகையும் பெறப்படாமலிருந்ததால் எனக்கு அவருடைய நடவடிக்கையைப் பற்றி பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே அன்றே அமர்ந்து அவருக்கு ஒரு நீண்ட தெளிவான கடிதத்தை எழுதி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகள் சம்பந்தமான கேஸ் கட்டுகளை உடனே வங்கி அலுவலகத்துக்கு கொடுத்தனுப்பும்படி அனுப்பினேன்.

வழக்கறிஞர் கணேசனுடைய அலுவலகத்திலிருந்து அடுத்த நாளே அவருடைய குமாஸ்தா அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த எல்லா வழக்குகளின் கோப்பையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்ல முத்துக்கருப்பன் ஒரு வாரத்திற்கு மேலாகியும் என்னுடைய கடிதத்திற்கு பதிலும் அனுப்பாமல் இருந்தார்.

அவரைப் பற்றி என்னுடைய வாடிக்கையாளர்களில் சிலரிடம் விசாரித்ததில் அவர் மதுரையிலேயே பிரபலமாயிருந்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்றும் அரசியலிலும் செல்வாக்கு வாய்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

ஆக, அவரை என்னுடைய வழிக்கு கொண்டுவருவது அத்தனை எளிதல்ல என்பது தெளிவாகியது.

வழக்கறிஞர் கணேசனும் அவரைப் பற்றி ஒன்றும் கருத்து கூற விரும்பவில்லை என்று கழன்றுக்கொண்டார்.

அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்த தொகையையும் தோராயமாக கணக்கிட்டு பார்த்தபோது நீதிமன்றத்திலிருந்து பெறப்படவேண்டிய தொகை கணிசமானாதாக தோன்றவே அவர் அவற்றை நீதிமன்றத்திலிருந்து வங்கியின் சார்பாகவே பெற்றிருந்தாரா இல்லையா என்பதை கண்டுபிடித்தால்தான் ஆயிற்று என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இதைக் குறித்து என்னுடைய கிளையிலிருந்த எந்த அதிகாரிக்கும் தெரியாததால் திண்டுகல்லுக்கு மாற்றலாகிப் போயிருந்த அந்த பெண் அதிகாரியை தொலைப்பேசியில் அழைத்தேன். அவரும் ‘எனக்கு ஒன்னும் தெரியாது சார். மேனேசர்தான் வக்கீல பாக்க போவார். எங்கிட்ட ஒன்னும் டிஸ்கஸ் பண்ண மாட்டார் சார்.’ என்று ஒதுங்கிக்கொள்ள ஆந்திர கிளைகள் ஒன்றில் மேலாளராக இருந்த என்னுடைய முந்தைய மேலாளரை அழைத்தேன்.

‘எனிக்கொன்னும் பிடி இல்லையா கேட்டோ..  முத்துக்கருப்பன் ஒரு ஃப்ராடான.. அது மட்டும் அறியாம். நீயே போய் கேட்டுக்கோ.’ என தமிழில் பாதி மலையாளத்தில் பாதியுமாக கூறிவிட்டு என்னுடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டிக்க நான் மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன்.

ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும் என்றார்போல் நான் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு தீர்வு கிடைத்தது.

அடுத்த இரண்டு வாரங்களில் ஒருநாள் மாலை ஒரு கணவன் -– மனைவி ஜோடி என்னை வந்து சந்தித்தது.

அந்த பெண்ணுடைய கணவன் என்று மதிப்பிடமுடியாத வயதான தோற்றத்தில் ஆணும் அவருடைய மனைவியா என்று வியப்படையும் விதத்தில் மிக இளைய வயதும், அழகும் கொண்ட பெண்ணும் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஜோடி!

பிறகுதான் தெரிந்தது அவர் இரண்டாவது மனைவி என்று.

சரி அது நமக்கு முக்கியமில்லை.

கணவர் தான் கொண்டுவந்திருந்த மூடப்பட்டிருந்த ஒரு காகிதக் உறையை என்னிடம் நீட்டினார்.

அதனுள் அவருடைய மனைவியை என்னுடைய கிளையின் வழக்கறிஞராக நியமித்து என்னுடைய தலைமையகம் அவருக்கு அனுப்பியிருந்த உத்தரவின் நகல் இருந்தது. அதில் உத்தரவின் வேறொரு நகல் எனக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்படியொரு நகல் என்னுடைய கிளைக்கு வந்ததாக எனக்கு நினைவில்லாததால், ‘இந்த ஆர்டர் காப்பி எனக்கு இன்னும் வரலீங்க.’ என்றேன். ‘அதனால பரவாயில்ல¨. சொல்லுங்க. நா இப்ப என்ன செய்யணும்?’ என்றேன்.

அப் பெண் வழக்கறிஞர் தன்னை தேவகி (புனைப் பெயர்) என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘சார் நான் எல்.எல்.பிதான்னாலும் கோயம்புத்தூர்லருந்தப்போ ஒங்க பேங்க் கேஸ்லல்லாம் ஆஜராகியிருக்கேன். அங்கருந்த நிறைய கேஸ்ங்கள்ல ஈ.பி (Execution Petition) ஃபைல் பண்ணாமயே இருந்துது. கேஸ் டீல் பண்ண வக்கீல்ங்க ஈ.பி. ஃபைல் பண்றதுல பெருசா ஃபீஸ் கிடைக்காதுன்னு இதுல அக்கறையே காட்ட மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். அத நா எடுத்து சொன்னப்பதான் ஒங்க ஜோனல் மேனேஜருக்கே தெரிஞ்சிது சார். ஏறக்குறைய முன்னூறு கேசுங்கள்ல நானே ஈ.பி ஃபைல் பண்ணி அமவுண்ட கோர்ட்லருந்து வாங்கி குடுத்துருக்கேன். இப்ப இவருக்கு இங்க டிரான்ஸ்ஃபர் ஆயிட்டதால இங்க ஷிஃப்ட பண்ணி வந்துருக்கோம். ஒங்க கோயம்புத்தூர் ஜோனல் மேனேஜர்தான்  ஒங்கள எங்க மதுரை பிராஞ்சுக்கு வக்கீலா அப்பாய்ண்ட்மெண்ட் செய்ய ரெக்கமெண்ட் பண்றோம்னு சொல்லியிருந்தாங்க சார்.’ என்றார் விளக்கமாக.

அட! நமக்கேத்த ஆள் வந்தாச்சி என்று நினைத்து அவரிடம் கடந்த் இரு வாரங்களில் நான் செய்த முயற்சிகளை அவரிடம் விவரித்து முத்துக்கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளில் அவர் ஈ.பி ஃபைல் செய்திருந்தாரா, அப்படி செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த தொகை என்னவாயிற்று என்று விசாரித்து கூற முடியுமா என்று கேட்டேன்.

அவர் உடனே, ‘நிச்சயமா சார். எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க. நான் விசாரிச்சி சொல்றேன்.’ என்றார் உற்சாகத்துடன்.

நானும் மகிழ்ச்சியுடன், ‘அப்படி மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா இனி கொஞ்சம் கொஞ்சமா எல்லா கேஸ்கள்லயும் ஈ.பி ஃபைல் பண்ற பொறுப்ப ஒங்கக்கிட்டயே குடுக்கறதுக்கு நான் பொறுப்பு.’ என்றேன்.

இருவரும் விடைபெற்றுக்கொண்டு செல்ல நான் உருப்படியாய் ஒரு காரியம் இன்று செய்து முடித்தோம் என்ற திருப்தியுடன் என்னுடைய அலுவல்களைப் பார்க்க துவங்கினேன்.

அவர் கூறியிருந்தபடியே அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்றத்திலிருந்தவர்களை எப்படியோ வளைத்துப் போட்டு நான் கேட்டிருந்த எல்லா தகவல்களையும் சேகரித்து அவர் தயாரித்த ஒரு நீண்ட பட்டியலுடன் என்னை வந்து சந்தித்தார்.

நான் அவரை வரவேற்று அமர்த்தி அவர் அடுத்த பத்து நிமிடங்கள் தான் அதுவரை செய்து முடித்திருந்தவற்றை விவரித்து முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டேன்.

அவர் கூறிய விஷயங்களையே நம்பமுடியாமல் நான் மலைத்துப் போய் அமர்ந்திருக்க இறுதியில் அவர் கைவசம் கொண்டிருந்த நீண்ட பட்டியலை என் மேசையில் விரித்தபோது அசந்து போனேன்.

முத்துக்கருப்பன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருந்த அத்தனை தொகையையும் கடந்த ஒரு வருட காலமாக உடனுக்குடன் வங்கியின் சார்பாக மனுக்களை சமர்ப்பித்திருக்கிறார். நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காசோலைகளின் பணத்தை வங்கியில் கட்டாமல் கையாண்டிருக்கிறார் என்பதையும் கண்டேன்.

அவர் அதுவரை நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த தொகையைக் கண்டதும் மலைத்துப்போய் இதை அவரிடமிருந்து எப்படி வசூலிப்பது என்ற சிந்தனையில் அதிர்ந்துபோனேன்.

‘இதுக்கு ஒங்களால ஏதாச்சும் செய்ய முடியுமா தேவகி? (சார் என்னெ தயவு செஞ்சி மேடம்னு கூப்டாதீங்க என்று கேட்டிருந்தார்)’ என்றேன்.

அவர் வருத்தத்துடன், ‘சாரி சார். முத்துக்கருப்பன் நான் செஞ்சிருக்கறத கேள்விப்பட்டார்னா என்னெ பார் கவுன்சில்லருந்தே தூக்கறதுக்கு ட்ரை பண்ணுவார். இதுல அவர் கலெக்ட் பண்ணிருக்கற தொகைய நான் போய் கேட்டேன்னு வச்சிக்குங்க.. அவ்வளவுதான், நா இந்த ஊர்ல ப்ராக்டீசே பண்ண முடியாதபடி ஏதாச்சும் செஞ்சாலும் செஞ்சிருவார். அவரப்பத்தி நா கேட்டிருக்கறத வச்சி சொல்றேன். இத நீங்களே க்ளெவர டீல் பண்றதுதான் நல்லது.’ என்று விடைபெற்றுச் செல்ல என்னடா இது நாயர் புடிச்ச புலிவாலாயிருச்சே.. இப்ப என்ன பண்றது என்ற யோசனையில் நேரம் போனது தெரியாமல் அமர்ந்திருந்தேன், ‘என்ன சார் வீட்டுக்கு போகலையா?’ என்று என்னுடைய இரவு வாட்ச் மேன் வந்து கேட்கும் வரை.

தொடரும்..

     

6 comments:

துளசி கோபால் said...

திமிங்கிலம் இல்லேன்னா சுறாகிட்டே மாட்டிக்கிட்டீங்க போல இருக்கே.

பார்த்துங்க. கவனமாக் கையாளவேண்டிய ஆள் அவர்.

அதென்னங்க உங்களுக்குன்னே அங்கங்கே இப்படி ஆளுங்க காத்திருக்காங்க?

tbr.joseph said...

வாங்க துளசி,

அதென்னங்க உங்களுக்குன்னே அங்கங்கே இப்படி ஆளுங்க காத்திருக்காங்க? //

அப்படியில்ல. அவர் அஞ்சு வருசத்துக்கு மேல நம்ம வக்கீலா இருந்தவர்தான். நமக்கு முன்னால இருந்தவங்க அவர கண்டுக்காம இருந்துட்டாங்க. அவ்வளவுதான். பயமாவும் இருக்கலாம். எனக்கு அந்த வயசுல அது இல்ல.

ஜயராமன் said...

ஜோசப் சார்,

தங்களின் ஒவ்வொரு பதிவும் நடைமுறையின் பதிய பரிமாணங்களை எனக்கு காட்டுகிறது. நேரில் தங்களுடன் நான் பேசும்போது பல விஷயங்களை சில நிமிடங்களில் நீங்கள் சொல்வது வியப்பாக இருந்தாலும், இப்படி நின்று நிதானமாக படிப்பது அதைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு கதை போலவும் இருக்கிறது.

மிக்க நன்றி

srishiv said...

உண்மைலயே எனக்கும் பயம் வந்திருச்சி ஐயா,
பார்த்து ஹேண்டில் செய்யுங்க :( , பழம் தின்று கொட்டை போட்ட பெரிய முதலையா இருப்பார் போல இருக்கே முத்துகருப்பு? :(

Sivaprakasam said...

<===
நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காசோலைகளின் பணத்தை வங்கியில் கட்டாமல் கையாண்டிருக்கிறார் ===>

அது என்ன நீதிமன்றத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மாற்றும்படியான காசோலையாகவா கொடுப்பார்கள்? வங்கியின் பெயரில் அக்கௌண்ட் பேயி காசோலை கொடுக்கமாட்டார்களா?

G.Ragavan said...

அடப்பாவி மனுசன். இப்பிடி முழுங்கீருக்காரு...ம்ம்ம்...என்ன செஞ்சீங்கன்னு தெரிஞ்சிக்கிற ஆவலா இருக்கோம். பெரிய ஊருக்குப் போனதும் பெரிய பிரச்சனை வருது பாத்தீங்களா!