22 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 189

மதுரை கிளையின் மொத்த வர்த்தகம் தூத்துக்குடி கிளையிலிருந்த வர்த்தகத்தை விட இரு மடங்குக்கும் கூடுதல்.

அதுபோலவே சிக்கல்களும் அதிகம் இருந்தன.

சாதாரணமாக வர்த்தகம் மற்றும் தொழில் துவங்கவும், விரிவுபடுத்தவும் வழங்கப்படும் கடன்கள் ஓவர்டிராஃப்ட் என ஓராண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதுண்டு.

வர்த்தக/தொழில் நிறுவனங்களின் நிதி நிலமை, கடன் கணக்கில் நடத்தப்பட்டிருக்கும் வரவு, செலவு ஆகியவற்றையின் அடிப்படையில் மட்டுமே அவை புதுப்பிக்கப்படும்.

ஆகவே ஒவ்வொரு வருடமும் புதிதாக வழங்கப்படும் கடன்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு புதிப்பிக்கப்பட வேண்டிய கணக்குகளையும் காலாகாலத்தில் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.

கிளை மேலாளரின் அதிகாரத்துக்குட்படாத கடன்  கணக்குகளை புதுப்பிக்க அதற்கென குறிக்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்திசெய்து கடன் பெற்றிருந்த நிறுவனத்தின் வருடாந்தர நிதியறிக்கையுடன் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.

மதுரைக் கிளையில் எனக்கு முன்பிருந்த இரு மேலாளர்களும் புதிதாக கடன் வழங்குவதில் குறியாயிருந்தனரே தவிர அதற்கு முன்பிருந்த மேலாளர் வழங்கிய கடன்களை புதுப்பிக்க எந்தவித முயற்சியும் செய்யாததால் அதுவே வங்கியின் ஆய்வாளர்களுடைய கணிப்பில் கிளையின் ஒட்டுமொத்த கணிப்பு கீழிறங்கியிருந்தது.

அத்துடன் கிளை துவக்கப்பட்டு பதினைந்தாண்டுகள்  ஆகியிருந்ததால் வழக்குத் தொடரப்பட்ட கணக்குகளும் இருந்தன. இத்தகைய கணக்குகளைப் பராமரிப்பது பெரிய தலைவலி.

வழக்குகள் தொடரப்பட்டுவிட்டபிறகு அவை எப்போது நீதிமன்றத்தின் விசாரனைக்கு வருகின்றன, அப்போதெல்லாம் வங்கியின் வழக்கறிஞர் தவறாமல் ஆஜராகிறாரா, பிரதிவாதிகளின் தரப்பில் வைக்கப்படும் வாதங்களை சரியான முறையில் எதிர்கொள்கிறாரா, விசாரனை முடிந்துவிட்டதென்றால் தீர்ப்பு தேதி எப்போது, தீர்ப்பு வங்கிக்கு சாதகமாக வந்திருக்கும் பட்சத்தில் அதை செயல்படுத்த வழக்கறிஞர் நடவடிக்கை எடுத்துள்ளாரா, வங்கிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அதை எதிர்த்து அப்பீல் மனு குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்கப்படுகிறதா என பல நிலைகளிலும் மேலாளர் கவனமாக இருக்க வேண்டும்.

ஓரிரண்டு வழக்குகள் இருந்தாலே மண்டை காய்ந்துவிடும். இந்த லட்சணத்தில் மதுரை கிளையில் இத்தகைய கணக்குகள் நூற்றுக்கும் மேல் இருந்தன.

பதினைந்து வருடத்தில் இத்தனை கணக்குகள் எப்படி என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அதற்கு காரணம் இருக்கிறது.

வங்கி மதுரையில் துவக்கப்பட்ட முதல் ஐந்தாண்டுகள் மேலாளராக இருந்தவர் ஒரு ஆடம்பரப் பிரியர். எதையுமே க்ராண்டாக (grand) செய்யவேண்டும் என்று நினைப்பவர். கிளை இருந்த கட்டடம் அப்போது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாயிருந்த ஒரு லாட்டரி சீட்டு விற்பனையாளருக்கு சொந்தமானது.

அவருக்கு அன்று ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சி பிரமுகர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது. அவருடைய தொடர்பு எங்களுடைய மேலாளருக்கும் அரசியல் சூதாடிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

‘சார் ஒங்களுக்கு நம்ம தலைவர்கிட்ட சொல்லி கவர்ன்மெண்ட் ·பண்ட்ஸ் டெப்பாசிட்டா வாங்கித் தரோம்’ என்று  அவர்கள் நம்முடைய மேலாளருக்கு ஆசையை ஊட்டி வளர்த்திருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் சிறியதொரு கிளையில் மேலாளராக இருந்துவிட்டு தமிழகத்திற்கு முதன்முதலாக மாற்றலாகி வந்திருந்தவர் அவர்களுடைய போலி வார்த்தைகளை நம்பி அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றிருக்கிறார்.

அவர்கள் அவரிடமிருந்து கறக்க வேண்டியதையெல்லாம் கறந்துவிட்டு கடைசியாக ஒரு அஸ்திரத்தை பிரயோகித்திருக்கின்றனர். ‘சார் வர்ற மாசம் நம்ம தலைவர் முதல்வரா பதவியேற்று முதல் வருசம் பூர்த்தியாவுது. நீங்க அன்னைக்கி ஒரு நூறு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கறதுக்கு கடன் குடுத்தீங்கன்னா தலைவரோட கவனத்த இழுத்துரலாம். இந்த நிகழ்ச்சிக்கு தலைவர கூப்பிட நீங்களும் மெட்றாசுக்கு எங்கக் கூட வாங்க. நீங்களே நேர்ல கூப்பிட்டா தலைவர் நிச்சயம் வருவார். விழா முடிஞ்சதும் நீங்களே கவர்ன்மெண்ட் டெப்பாசிட்ட கேட்டீங்கன்னா தலைவரே உடனே கூட வர்ற அதிகாரிங்கக் கிட்ட சொல்லிருவாரு. அப்புறம் சம்பந்தப்பட்ட அதிகாரிங்கக் கிட்ட பேசி அவங்களுக்கு குடுக்க வேண்டியத குடுத்து டெப்பாசிட்ட வாங்கிரலாம் சார்.’

நம் நண்பருக்கு உச்சி குளிர்ந்து போயிருக்க வேண்டும். அவர் அப்போதிருந்த சேர்மனுக்கு தூரத்து உறவாக வேறு இருந்தார். பிறகென்ன தலா ரூ.1500/- வீதம் நூறு பேருக்கு கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது.

அக்கட்சியைச் சார்ந்த மதுரை பிரமுகர்கள் புடைசூழ காரில் சென்னை சென்றார் நம் நண்பர். ஒரு வாரகாலம் அன்று சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட ச்சோழா நட்சத்திர விடுதியில் கட்சி பிரமுகர்களை தன் சொந்த செலவில் உபசரித்து, ‘தலைவர் கட்சி மாநாட்டு வேலையில பயங்கர பிசியாம் சார். நம்ம மதுரை வட்ட தலைவர வச்சி விழா நடத்திக்குங்க. மெனேசருக்கு டெப்பாசிட் குடுக்கறதுக்கு நா ஒடனே ஆர்டர் போடச் சொல்றேன்னு தலைவரே சொல்லிட்டார். வாங்க ஊருக்கு போய் ஆகவேண்டிய வேலைய பார்ப்போம்.’ என்றபோதாவது நம் நண்பருக்கு உரைத்திருக்க வேண்டும்.

கோடிக் கணக்கில் கிடைக்கப் போகிற டெப்பாசிட் தொகை அவருடயை கண்ணையும் மூளையும் மறைக்க கட்சியின் அப்போதைய மதுரை மாவட்ட முக்கியமான பிரமுகர் ஒருவரின்  தலைமையில் நடந்த அட்டகாசமான விழாவில் மேடையில் வைத்து  இருபத்தைந்து பேருக்கு  ரிக்ஷா  வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கும் அடுத்த ஒரு மாத காலத்தில் கடன் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

கடனை ரொக்கமாக பெற்றவர்களும் சரி விழா மேடையில் ரிக்ஷாவாக பெற்றவர்களும் சரி திருப்பியடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றவர்களல்ல என்பது நம்முடைய நண்பருக்கு தெரியவந்தபோது அவருடைய நிலமையே மோசமாகி போய்விட்டிருந்தது.

அரசு பணத்தை டெப்பாசிட்டாக பெறலாம் என்ற அவருடைய கனவும் கனவாகவே போக மனிதர் அதற்கென வங்கியிலிருந்து நியதிகளுக்கு புறம்பாக எடுக்கப்பட்டிருந்த தொகையும் முழுவதுமாக கரைந்து போனபிறகுதான் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது விளங்கியிருக்கிறது.

அப்போதைய சேர்மனுக்கு உறவுக்காரராக இருந்தும் கடுமையாக தண்டிக்கப்பட்டார். வேலை போகாமல் தப்பித்ததே பெரிய விஷயம்.

நல்ல வேளையாக அவரைத் தொடர்ந்து வந்த மேலாளர் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த தமிழர். பயங்கரமான புத்திசாலி. அவர் பொறுப்பேற்ற சமயத்தில்தான் முந்தைய மேலாளர் கொடுத்திருந்த அத்தனை கடன்களும் வழக்கு தொடரப்பட வேண்டிய கட்டத்தை நெருங்கியிருந்தன.

அவரும் கோவை மாவட்டத்திலிருந்த அரசியல் செல்வாக்குள்ளவர்களுடைய தொடர்புள்ளவர் என்பதால் அவர்கள் வழியாக கடன் பெற்றிருந்த அனைவரையும் சுற்றி வளைத்து அவர்கள் வழியிலேயே சென்று நயமாக பேசி வழக்கு தொடராமலிருக்க ஒவ்வொரு கடனுக்கும் ஒரு அரசு ஊழியருடைய ஜாமீன் என்ற கணக்கில் ஏறத்தாழ எல்லா ரிக்ஷா கடன்களுக்கும் ஜாமீன் பெற்று எங்களுடைய தலைமையகத்திலிருந்து கடன்களை மேலும் ஓராண்டுக்கு நீட்டி உத்தரவு பெற்றிருக்கிறார்.

ஜாமீன் பெற்றபோதே அவர்கள் கடனை எப்படியும் திருப்பி அடைக்க போவதில்லை என்பதை அறிந்திருந்தவர் சரியாக ஒருவருடம் காத்திருந்து முன்னறிவிப்பின்றி எல்லா கடன்களையும் வசூலிக்க பெரும்பாடுபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வங்கிக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டபோது அவர் மாற்றலாகி சென்றுவிட தீர்ப்புகளை செயலாக்கி கடனை வசூலிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு பின் வந்த இரு மேலாளர்கள் தலையிலும் விழுந்திருக்கிறது.

ஆனால் மதுரைக்கு மாற்றலாகி வந்ததே ஒருவிதத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்று நினைத்திருந்த இருவருமே உள்ளூர் மொழி தெரியவில்லையென்பதை சாக்காக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்ட கணக்குகளை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

இதுவும் மதுரைக் கிளை unsatisfactory என்ற கணிப்பிடப்பட ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

நான் சென்னை மத்திய கிளையில் பணியாற்றிய காலத்தில் இத்தகைய வழக்குகளை கையாண்ட அனுபவம் இருந்தது. இது அப்போது எனக்கு மேலாளராக இருந்த இப்போதைய சேர்மனுக்கு நன்றாக தெரியும். அதுவே என்னை மதுரைக்கு மேலாளராக நியமிக்க அவரை தூண்டியிருக்கவேண்டும் என்பது அப்போதுதான் எனக்கு விளங்கியது.

‘நீங்க பிராஞ்சோட பிசினஸ பல மடங்கு வளர்ப்பீங்கங்கறதுக்காக ஒங்கள போடல ஜோசஃப். I want you to concentrate on house keeping and follow up of the suit filed accounts. நீங்க தூத்துக்குடியில செஞ்ச மாதிரியே இங்கயும் செய்வீங்கன்னு நினைச்சித்தான் நானே ஒங்க பேர ப்ரொப்போஸ் செஞ்சேன்..’ நான் மதுரைக் கிளைக்கு பொறுப்பேற்றதும் என்னுடைய சேர்மனை தொலைப்பேசியில் அழைத்தபோது அவர் கூறிய அறிவுரை.

ஆக, அதுதான் என்னுடைய முதல் பணி என்பதை உணர்ந்த நான் அவ்வார இறுதியில் அவ்வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை திரட்டி மூட்டையாய் கட்டி என் சிப்பந்தி ஒருவர் மூலம் வீட்டுக்கு கொண்டு சென்றேன்.

அவ்வார சனிக்கிழமை பகல் என் மனைவியையும் இரு மகள்களையும் தூத்துக்குடிக்கு பேருந்தில் ஏற்றிவிட்டு விட்டு அன்றும் அடுத்த நாளும் கண்விழித்து எல்லா கோப்புகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. அந்த வயதில் அத்தனை மூர்க்கத்தனமாக இருந்தேன் என்னுடைய அலுவலக விஷயத்தில்.

அடுத்த திங்கட் கிழமை முதல் காரியமாக அவ்வழக்குகளை பொறுப்பேற்று நடத்திய எங்களுடைய வங்கியின் இரு வழக்கறிஞர்களை தொலைப்பேசியில் அழைத்து அன்று மாலையே அவர்களை சந்திக்க வருவதாக கூறிவிட்டு அவர்கள் இருவரில் மூத்தவரை முதலில் சென்று சந்தித்தேன்.

தொடரும்
13 comments:

அருண்மொழி said...

ஊருக்கு வந்தவுடன் பிரச்சனையா? ஆரம்பமே வக்கீல், கோர்ட், கேஸ்....

G.Ragavan said...

வேலையில மூர்க்கத்தனமா இருந்தீங்களா!!!!!!!!!!!

மென்பொருள் துறையிலயும் வேலையில மூர்க்கர்கள் உண்டு. வேல வேல வேல வேல...வேற ஒன்னும் வேண்டாம்.

அதே நேரத்துல நெறைய பேரு எதுக்கு வீணா பிரஷர் எடுத்துக்கனும். செய்யுற வேலைய பொறுமையா செய்வோம். குடும்பமும் கவனிக்க இருக்குல்லன்னு நெனைக்கிறவங்களும் இருக்காங்க.

work-life-balance ரொம்பவும் தேவை. இல்லைன்னா...டமால்தான்.

sivagnanamji(#16342789) said...

சமீபத்திய துயரத்தில் இருந்து மெதுவே விடுபடுவீர்கள் என்று நம்புகிறேன்..........
தூண்டில்காரருக்கு தக்கைமீது கண் அல்லவா? கடன் வசூல் அனுபவங்களை இனி கூறுங்கள்..........................உங்கள் முன்னாள் முகவர் அரசு அலுவலர்களிடம் ஜாமீன்
கையெழுத்து பெற்றதன் முலம் உங்கள் சுமையைக் குறைத்துள்ளார். அவ்வகையில் நீங்க அதிர்ஷ்டசாலிதான்

துளசி கோபால் said...

சரியான ஆளைத்தான் தேர்வு செஞ்சிருக்காங்க. அதுக்கு அவரை எவ்வளவு பாராட்டுனாலும் தகும்.

எடுத்தவேலையில் ஆர்வம் காமிச்சு ராட்சஸனாட்டம் வேலை செய்யறது
ரொம்பக் கொஞ்சபேர்தான்.

அந்த மாதிரி ஒரு ( ராட்சஸனை)ஆளை எனக்கும் தெரியும்.

லதா said...

// அந்த மாதிரி ஒரு ( ராட்சஸனை)ஆளை எனக்கும் தெரியும். //

அவர் (துளசி அக்காவின்) கோபால் அவர்கள்தானே ? :-)))

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

ஊருக்கு வந்தவுடன் பிரச்சனையா? ஆரம்பமே வக்கீல், கோர்ட், கேஸ்....//

முக்கால்வாசி வங்கி மேலாளர்களுடைய அலுவலக வாழ்க்கையே பிரச்சினைதாங்க.. ஆனா அதிலும் ஒர் த்ரில் இருக்குங்கறது உண்மைதான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அதே நேரத்துல நெறைய பேரு எதுக்கு வீணா பிரஷர் எடுத்துக்கனும். செய்யுற வேலைய பொறுமையா செய்வோம். குடும்பமும் கவனிக்க இருக்குல்லன்னு நெனைக்கிறவங்களும் இருக்காங்க.//

உண்மைதான். அவங்களும் ஜிவ்வுன்னு உயர போயிருவாங்க. மாங்கு, மாங்குன்னு ஒளச்சிட்டு அடிமட்டத்துலயே இருக்கறவங்களும் இருப்பாங்க. பாத்துருக்கேன்.

work-life-balance ரொம்பவும் தேவை. இல்லைன்னா...டமால்தான். //

ஆமாங்க. நம்மள்ல நிறைய பேருக்கு அது தெரியவரும்போது காலம் கடந்திருக்கும். இதை சரியாக மேனேஜ் செய்து போவதே ஒரு பெரிய கலை.. அது எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது.

tbr.joseph said...

வாங்க ஜி!

உங்கள் முன்னாள் முகவர் அரசு அலுவலர்களிடம் ஜாமீன்
கையெழுத்து பெற்றதன் முலம் உங்கள் சுமையைக் குறைத்துள்ளார். அவ்வகையில் நீங்க அதிர்ஷ்டசாலிதான் //

ஆமாங்க. அவர் ஜி.எம் பதவியிலருந்து சமீபத்துலதான் ஓய்வு பெற்றார். பயங்கர திறமைசாலி.

tbr.joseph said...

வாங்க துளசி,

எடுத்தவேலையில் ஆர்வம் காமிச்சு ராட்சஸனாட்டம் வேலை செய்யறது
ரொம்பக் கொஞ்சபேர்தான்.//

ஆமாங்க. ஆனா அவங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்த மத்தவங்க தட்டிக்கிட்டு போயிருவாங்க. சரிதானே?

அந்த மாதிரி ஒரு ( ராட்சஸனை)ஆளை எனக்கும் தெரியும். //

எனக்கும் தெரியுமே? லதா சொன்னவர்தானே:))

Sivaprakasam said...

<==== ஆமாங்க. ஆனா அவங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்த மத்தவங்க தட்டிக்கிட்டு போயிருவாங்க. சரிதானே? ======>
அதுக்குதான் பழமொழியெல்லாம் இருக்கே "வேலை செய்றவனுக்கு வேலயைக்கொடு செய்யாதவனுக்கு பதவி/ஊதிய உயர்வு கொடு".மேலும் உயர் அதிகாரியிடமிருந்து பாராட்டெல்லாம் கிடைகிறதே (கடந்த 10 வருடங்களாக ஒரே பதவியில் இருக்கும் ஒரு அனுபவசாலியின் பதில் இது)

tbr.joseph said...

வாங்க சிவா,

(கடந்த 10 வருடங்களாக ஒரே பதவியில் இருக்கும் ஒரு அனுபவசாலியின் பதில் இது)//

அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு சிவா. அதாவது நாம செய்யற வேலையோட க்ரெடிட்ட இன்னொருத்தன் தட்டிக்கிட்டு போறது.
அதுக்கு ஒருவேளை நாமளே காரணமா இருக்கலாமில்லே.

நான் எங்களுடைய பயிற்சிக்கல்லூரியில் முதல்வராக இருந்த சமயத்தில் எச்.ஆர் வகுப்புகளில் கூறுவது இதுதான். 'You should know how to sell yourself to your others, whether they are working under you or above you.'

அதாவது, நம்மளப்பத்தி நாமளேதான் சொல்லணும். அதுக்கு தம்பட்டம் அடிக்கறதுன்னு யாராவது சொன்னாலும் அதப்பத்தி கவலையே படக்கூடாது. வாயுள்ள பிள்ளைத்தான் பிழைக்கும்னு கேள்விப்பட்டதில்லே.. இன்னொன்னும் இருக்கே.. அழற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்னு.. அதுமாதிரிதான்.

srishiv said...

அருமை ஐயா
மதுரை அடுத்து கில்லி கணக்கா வருவீங்கன்னு நெனைக்கிறேன் :)
சிவா @ ஸ்ரீஷிவ்...:)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

கில்லி கணக்கா வருவீங்கன்னு நெனைக்கிறேன் //

அப்படியா? கில்லி கணக்காத்தான் வந்தேன்னு நினைக்கிறேன்.. மதுரையின் இறுதி எப்பிசோடில் மறுபடியும் இவ்வாக்கியத்தை நினைவுகூற்கிறேன்.