17 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 188

எங்களுடைய மதுரை கிளை அப்போது மேல மாசி வீதியில் இருந்தது.

துவக்க முதலே கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்களே மேலாளர்களாக இருந்துவந்திருந்தனர் - ஒரேயொருவரைத் தவிர. அவர் கோவையில் இருந்த பெரும்பான்மையினத்தைச் சார்ந்தவர். வர்த்தகம் செய்வதில் வித்தகர். நேர்மையானவர். திறமையானவர். கடின உழைப்பாளி.

அவர் இருந்த சமயத்தில் கிளையின் வர்த்தகம் பன்மடங்கு உயர்ந்திருந்தது என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த இரு மேலாளர்கள் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

அவர்கள் இருவரும் மேலாளர்களாகவிருந்த சுமார் நான்காண்டு காலத்தில் கிளையின் வர்த்தகம் குறைந்ததுமல்ல internal housekeeping என்பதும் முற்றிலுமாக சீர்குலைந்து போயிருந்தது.

நான் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்திருந்த உள் (Internal) மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆய்வில் (Inspection) unsatisfactory என்ற ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்த மிகச் சில கிளைகளில் அதுவும் ஒன்றாயிருக்கவே அக்கிளை வங்கி சேர்மனின் நேரடி பார்வையில் கொண்டுவரப்பட்டிருந்தது.

எங்களுடைய வங்கியின் அப்போதைய சேர்மன் சென்னை மத்திய கிளையில் முதன்மை மேலாளராக இருந்த சமயத்தில் துணை மேலாளராக ஆறு மாத காலம் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஆகவே வீட்டிற்கு சென்று என்ன செய்வது என்ற நினைப்பில் வங்கிலேயே இரவு ஒன்பது மணி வரை இருந்து அலுவல்களை முடிப்பேன்.

கணினி என்ற நாமமே இல்லாதிருந்த காலம் அது. ஆகவே தினசரி அலுவல்களை முடித்துவிட்டுத்தான் வீடு திரும்ப வேண்டும் என்றால் இரவு பத்துமணி வரை அமர்ந்தாலும் முடியாது. அப்போது சென்னை பாரீஸ் கார்னரிலிருந்து நான் வசித்து வந்திருந்த பெரம்பூர் பகுதிக்கு கடைசி பல்லவன் பேருந்து 9.15 மணிக்கு. அதை விட்டுவிட்டால் நடராஜா சர்வீஸ்தான். சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் நடப்பதென்பது இயலாத காரியம் அல்லவா? ஆகவே வேலை முடிந்தாலும் முடியாவிட்டாலும் சரியாக ஒன்பது மணிக்கு நானும் என்னுடைய கணக்காளராக (Accountant) பணியாற்றிய என் நண்பரும் வங்கியின் முகப்பு ஷட்டர் கதவை இழுத்து மூடிவிட்டு ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தத்தை அடைவோம்.

என்னுடைய கடின உழைப்பை(!) பார்த்து என்னுடைய மேலாளர் அப்போதே சொல்வார், ‘TBR, take it from me.. You are destined to go to the top in your career.’ என்பார் பெருந்தன்மையுடன். நிதானமாக எதையும் சிந்தித்து மிகச் சரியான முடிவெடுப்பதில் மன்னர். எங்களுடைய வங்கியில் அடிப்படை அதிகாரியாக (Junior Officer) சேர்ந்து வங்கியின் முதல்வராக (Chairman) உயர்ந்த ஒரே அதிகாரி அவர். எனக்கு தெரிந்து இந்திய வங்கிகளில் அடிப்படை அதிகாரியாக சேர்ந்து அதே வங்கியில் சேர்மனாக பதவியமர்த்தப்பட்டவர்கள் மிக, மிகச் சிலரே. அவர்மேல் எனக்கு அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.

ஆகவே அவரே என்னுடைய பெயரை நினைவு கூர்ந்து மதுரை கிளைக்கு மேலாளராக நியமித்தபோது அவர் என்மேல் வைத்திருந்த நல்லெண்ணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன்.

நான் மதுரைக்கு மாற்றலான விஷயத்தை என்னுடைய தாய்க்கு கடிதம் மூலம் அறிவித்தபோது அவரிடமிருந்து இப்படி பதில் வந்தது. ‘நீ பிறந்த ஊர்ல கொஞ்ச நாள் வேலை செய்யணுங்கறது கடவுள் சித்தம் போல.. கவனமா செய். உங்கப்பா வீட்டாளுங்க அங்கதான் இருக்காங்க. மறக்காம போய் பார்.’ என்று ஞானஒளி புரத்தில் என் தந்தையின் மைனி (எனக்கு பெரியம்மா. பெரியப்பா காலமாயிருந்தார்) மற்றும் அரசரடியில் வசித்து வந்த என் தந்தையின் ஒரே சகோதரி (என் அத்தை)ஆகியோருடைய விலாசத்தையும் எழுதியிருந்தார்.

என்னுடைய முந்தைய மேலாளரும் அரசரடியில்தான் குடியிருந்தார். அந்த வீடு என்னுடைய வங்கியின் பெயரில் லீஸ் எடுக்கப்பட்டிருந்ததால் நானும் அவரைத் தொடர்ந்து அங்கேயே வசிக்க முடிந்தது. தூத்துக்குடியில் எதிரும் புதிருமாக இருந்த இரு சாதியினர்களில் ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் அவ்வீட்டின் உரிமையாளர்கள். அதைப் பற்றி பிறகு..

அதே பகுதியில் வசித்து வந்த என்னுடைய அத்தையின் வீட்டை நான் மதுரை வந்த அதே வாரத்தில் தேடிப்பிடித்தேன். அவரும் ஒரு மகளிர் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். ஆனால் அது ஒரு கிறிஸ்த்துவ பள்ளியென்றாலும் அரசு பள்ளியென்பதால் (Government aided school) என் மகளை அங்கு சேர்க்க நான் விரும்பவில்லை

அப்பகுதியில் என் மகள் படிக்க ஏதுவாக வேறு பள்ளிகள் இல்லாததால் சற்று தள்ளியிருந்த ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு சேர்த்தேன். மூன்றாவது வகுப்பிற்கு இடம் கிடைக்கவே இத்தனை சிரமமா என்று நொந்துபோனேன்.

ஒருவழியாக என்னுடைய பெர்சனல் தேவைகளான பள்ளி சேர்க்கை, கேஸ் இணைப்பு, இத்யாதி, இத்யாதிகளை செய்து முடிக்கவே முதல் ஒரு வாரம் போனது.

இருந்தாலும் இக்காரியங்களில் கவனத்தை செலுத்தி கூடிய விரைவில் செய்து முடிக்காவிட்டால் அலுவலக வேலைகளில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாமலே போய்விடும் என்பதால் அலுவலகத்திலிருந்து ஒரு நான்கு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவற்றை முடித்தேன். என் மகளுடைய பள்ளி நான் குடியிருந்த இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தாலும் வீட்டினருகிலிருந்தே பள்ளி பேருந்து வசதியிருந்ததால் முதல் இரண்டு நாட்கள் மட்டும் காலையில் பேருந்து வரை கொண்டு சென்றேன். அதன் பிறகு என் மகளே செல்ல பழகிக்கொண்டாள். அத்தனைச் சமர்த்து! பள்ளியிலும் சேர்ந்த ஒரே வாரத்தில் நண்பர்களைப் பிடித்துக்கொண்டாள். படிப்பிலும் சுட்டி என்பதால் அவளைப் பற்றி நான் கவலைப்பட தேவையிருக்கவில்லை.

என் மனைவியும் அப்படித்தான். குடும்பத்தை நடத்திச் செல்ல என்னுடைய உதவி அவருக்கு எப்போதுமே தேவையிருக்கவில்லை. திருமணமான புதிசிலும் நான் வீடு திரும்பவே இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிடும். தூத்துக்குடி போன்ற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தபோதே தன்னந்தனியாக நாள் முழுவதும் தன்னந்தனியாக இருக்க வேண்டி வந்தபோதும் எந்தவித புகாரும் கூறமாட்டார்.

அதுவும் மதுரை கிளை இருந்த நிலையில் முதல் ஆறுமாதம் இரவு பதினோரு மணிக்கு முன்னர் நான் வீடு திரும்பியதே இல்லை. அத்தனை குளறுபடிகளை என்னுடைய முந்தைய இரு மேலாளர்களும் செய்து வைத்திருந்தனர்.

அவர்களுக்கு முன்னர் இருந்த தமிழ் மேலாளர் வர்த்தகத்தை பன்மடங்கு விரிவாக்கியிருந்ததும் அதற்குப் பிறகு இத்தகைய கிளைய¨ நிர்வகித்திராத, உள்ளூர் மொழி மற்றும் இடம் பழக்கமில்லாத மேலாளர்கள் பொறுப்பில் இருந்ததுமே இதற்கு முக்கிய காரணம்.

கிளை பஜாருக்கு மத்தியில் இருந்ததாலும் மேல மாசி வீதியிலும் அதைச் சுற்றியும் இருந்த வர்த்தக நிறுவனங்களில் பெரும்பாலானவை அந்த தமிழ் மேலாளருடைய சமூகத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்பட்டவை என்பதாலும் அவருடைய சாமர்த்தியத்தையும் பழக்கத்தையும் விரும்பி பலரும் தங்களுடைய வர்த்தக கணக்கை எங்களுடைய கிளையில் வைத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்கு வர்த்தக கடன்களையும் (overdraft) கொடுத்திருந்தார். அவர் இருந்த நேரத்தில் அவற்றில் எந்தவித குளறுபடிகளும் இருக்கவில்லை. அவர் நேர்மைக்கு பெயர்போனவர் என்பதால் அவர் தெரிந்தெடுத்திருந்த அத்தனை வாடிக்கையாளர்களும் எங்களுடைய வர்த்தக பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் highly valuable customersஆக இருந்தனர்.

ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த மேலாளர்கள் கேரளத்திலும் சின்ன சின்ன ஊர்களில் அதுவும் deposit oriented கிளைகளிலும் மேலாளர்களாக பணிபுரிந்திருந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு வர்த்தக கடன்களை வினியோகிக்கும் விதமோ அல்லது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த கணக்குகளை பராமரிக்கும் விதமோ சரிவர தெரியாமலிருந்தது.

அதுவும் எனக்கு முன்னாலிருந்த மேலாளர் செல்வந்தர் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலை இல்லை. ஆகவே மெனக்கெட்டு எதையும் செய்ய விரும்பாமல் அப்படியே சமாளித்துக்கொண்டிருந்தார்.

உண்மையில் சொல்லப் போனால் அவருக்குக் கீழ் கடைநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்து நான்கு வருடங்களே ஆகியிருந்த உள்ளூரைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரிதான் அக்கிளையை நிர்வகித்து வந்திருந்தார். அவருக்கு மேல், துணை மேலாளராகவிருந்தவரும் கேரளத்தைச் சார்ந்தவராக இருக்கவே அப் பெண் அதிகாரி தனக்கிருந்த நான்காண்டு அனுபவத்தில் தனக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு அக்கிளையை நிர்வகித்து வந்திருந்தார். மேலாளரோ வங்கியில் இருந்த நேரத்தை விட வீட்டிலிருந்த நேரம்தான் அதிகம் என்று அவர் புறப்பட்டுச் சென்றபின் வீட்டு உரிமையாளரிடமிருந்து தெரிந்துக்கொண்டேன்.

வங்கியின் இயக்குனர் ஒருவருடைய நெருங்கிய உறவினர் என்பதால் அவரை அப்போது தட்டிக் கேட்க அக்கிளை இருந்த கோவை வட்டார மேலாளருக்கும் தைரியும் இருக்கவில்லை. சுமார் இரண்டாண்டுகள் பேருக்கு மேலாளராக இருந்துவிட்டு சொந்த ஊருக்கே போய்விடலாம் என்று நினைத்திருப்பார் போல் தெரிந்தது. ஆனால் என்னை மதுரை கிளைக்கு நியமித்த அதே சேர்மன் அவரை பலத்த எதிர்ப்பிருந்தும் ஆந்திராவிலிருந்த ஒரு கிளைக்கு மாற்றியிருந்தார். அவர் தலைகீழாக நின்று முயன்றும் அதை ரத்து செய்ய இயலாமல் போக நான் பொறுப்பேற்க சென்ற நேரத்தில் அதனால் ஏற்பட்ட கோபத்தில் என்னிடம் முகம் கொடுத்துகூட பேச விரும்பவில்லை.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடன் வந்திருந்து என்னுடைய வீட்டுக்குத் தேவையான தரமான இரும்புக் கம்பிகளை நியாயமான விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்தான் அவர். ஆனால் நான் பொறுப்பேற்க சென்றபோது என்னை ஏதோ வேண்டாதவர்போல் நடத்தியது மனதை கஷ்டப்படுத்தினாலும் அவர் இருந்த நிலையில் நான் இருந்தாலும் ஒருவேளை அப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பேன் என்ற எண்ணத்தில் அதை நான் பெரிதுபடுத்தவில்லை.

‘ஜோசஃப் ஒங்களுக்கு இந்த ஊர் பழக்கமான ஊர்தானே. நீங்களே போய் எல்லா கஸ்டமர்களையும் மீட் பண்ணிக்குங்க. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏதாச்சும் தெரியணும்னா மேடத்துக்கிட்ட கேட்டுக்குங்க.’ என்றார் ஒருவித சலிப்புடன்.

அவர் மேடம் என்று அழைத்தது அவரை விட சுமார் பத்து வயது இளைய அதிகாரியை. நான் கிளையில் பொறுப்பேற்க சென்றிருந்த முதல் இரண்டு நாட்களில் அவரை சந்திக்க யார் வந்தாலும் இரண்டொரு வார்த்தைகளுக்குப் பிறகு, ‘அந்த மேடத்த போயி கேளு’ என்று மலையாளம் கலந்த தமிழில் அனுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் குறிப்பிட்ட அந்த மேடமோ இருந்த இடத்தில் அமர்ந்தவாறே புருவத்தை ஸ்டைலாக உயர்த்தி என்னங்க என்பதுபோல் வாடிக்கையாளர்களைப் பார்ப்பார்.

சந்திக்க வந்தவர்களில் பலரும் 'இந்த ச்சின்னப் பொண்ணுக்கிட்ட போயி சொல்லி என்ன ஆவப்போவுது' என்ற முனுமுனுப்புடன் செல்வதைப் பார்த்த நான் இவரும் இங்கிருந்து மாற்றலாகிச் சென்றால்தான் நம்மால் இந்த கிளையை சரிவர நிர்வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

என்னை அக்கிளைக்குப் பரிந்துரைத்தவர் சேர்மன் என்பதாலும் அவரே நான் தூத்துக்குடியிலிருந்து விடுவிக்கப்பட்ட தினத்தன்று தொடர்புக்கொண்டபோது ‘ஒங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னே நேரடியா காண்டாக்ட் பண்லாம் ஜோசஃப்.’ என்று கூறியிருந்ததாலும் அன்றிரவே அவரை தொலைப் பேசியில் அழைத்து என்னுடைய எண்ணத்தை கூறினேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘You are absolutely right TBR. She is the culprit for most of the mess created there. I was expecting this request from you. She will not be there by the time you assume charge of the branch, don’t worry.’ என்றார்.

நான், ‘அவங்கள பக்கத்துலருக்கற திண்டுக்கல்லுக்கு மாத்தினா நல்லாருக்கும் சார். அவங்களுக்கும் அதிக டிஸ்டர்பன்ஸ் இருக்காம இருந்தா நல்லது.’ என்றேன் பணிவுடன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கறேன்.’ என்று உறுதியளித்தார்.

அடுத்த இரு தினங்களுக்குள் அவருக்கு மாற்றல் உத்தரவு வர கோபத்துடன் என்னிடம் வந்து, ‘சார் நா இல்லாம ஒங்களால இந்த பிராஞ்ச நடத்திர முடியும்னு நீங்க நினைச்சா அது தப்பு சார். போகப் போக ஒங்களுக்கே தெரியும்’ என நான் அவருடைய ஆணவத்தைப் பார்த்து அசந்துபோய் அவரைப் பார்த்தேன். எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த இந்த சம்பாஷனை என்னுடயை முந்தைய மேலாளரை சந்தோஷப்படுத்தியது என்பதுபோலிருந்தது அவருடைய பார்வை...

தொடரும்...

12 comments:

Krishna said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

என்னங்க ரெண்டு முறை 188 போட்டுட்டீங்கபோல இருக்கே.

இத்தனைநாள் சிவன்களோடு போராட்டமுன்னா இப்ப சக்தியோடா?

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

இரட்டை சதம் போட மனசில்லையா... //

அப்படீன்னா? இன்னும் ரெண்டு வாரத்துல 200வது பதிவு வந்துருமே..

tbr.joseph said...

வாங்க துளசி,

என்னங்க ரெண்டு முறை 188 போட்டுட்டீங்கபோல இருக்கே.//

ஐயையோ அப்படியா? முதல்ல போட்டது காணாமயே போயிருச்சின்னு நினைச்சேன். அதான் அரை மணி கழிச்சி ரெண்டாவத போட்டேன்.. இப்போ ரெண்டும் வந்துருச்சா.. கொஞ்ச நாளாவே இந்த ப்ளாக்கர் காம் ரொம்பவும் படுத்துது:(

இத்தனைநாள் சிவன்களோடு போராட்டமுன்னா இப்ப சக்தியோடா? //

அப்படியெல்லாம் இல்லை. அந்தம்மா கொஞ்சம் துடுக்கான பொண்ணு.. ஒரு வாரத்துல பேக் பண்ணி அனுப்புனதும் புத்தி வந்து போற நேரத்துல சாரி சார்னு சொல்லிட்டு போச்சி.

Krishna said...

பதிவு எண்ணை, 189 என்று போடாமல் 188 என்றே போட்டுள்ளீர்களே அதைச் சொன்னேன்.

துளசி கோபால் said...

இது ப்ளொக்கர் தப்பு இல்லை. நீங்கதான் போன பதிவுக்கும் இதுக்கும் 188 போட்டுருக்கீங்க.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

பதிவு எண்ணை, 189 என்று போடாமல் 188 என்றே போட்டுள்ளீர்களே அதைச் சொன்னேன். //

ஓ! அது வேற ஒன்னும் இல்லை.. 184க்கப்புறம் 186ன்னு போட்டுட்டேன்..
185ஐ காணோம்.. கணக்குப்படி இது 188தான்.. அதான்..

துளசியும் இதையே சொல்லியிருக்கறதுனால இந்த பதில் அவங்களுக்கும் சேர்த்து..

Krishna said...

சரி, சரி, கணக்கு வழக்கெல்லாம் ஓரந்தள்ளிட்டு மேட்டருக்கு வாடான்றீங்களா, வந்துட்டாப் போச்சு.

இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி, பொழுதைப் போக்க வழியில்லாம, 9 மணி, 10 மணின்னு வேலை செஞ்சிட்டு, பின்னாடி, 8 மணிக்கு (அலுவலக நேரமென்னமோ, 5.30 மணி வரைதான்) கிளம்பினாலும், பாத்தியா, கல்யாணம் ஆன பின்னாடி பையன் வேலையிலேயே கவனம் செய்யறதில்லன்னு சொல்ல ஆரம்பிசிடராங்க இங்க.

அதனால, புதுசா வர்ற நம்ம பசங்களுக்கு நான் கொடுக்கற முதல் அறிவுரையே, ஒரு லெவல்ல வேல பாரு கண்ணா, தினமும் 7 மணி வரை வேலை செஞ்சிட்டு, கல்யாணத்துக்கு பின்னாடி, 7.30 வரைக்கும் வேல செஞ்சா கூட, பரவாயில்லையே பையன்னு சொல்லுவாங்க. இப்ப, 9, 10 ன்னு வேலை செஞ்சுட்டு, அப்புறமா 8 மணிக்கு போனா கூட, பையனப் பார்றா, கல்யாணத்துக்கப்புறமா, சரியேயில்லன்னு சொல்லிடுவாங்க...

(45, 50 வயசுக்கு மேல, வீட்டுக்கு சீக்கிரம் போகப் பிடிக்காம, பணியில மூழ்கிடற ஆட்கள் அதிகமாகிடறாங்க இல்லயா...)

tbr.joseph said...

ஆன பின்னாடி பையன் வேலையிலேயே கவனம் செய்யறதில்லன்னு சொல்ல ஆரம்பிசிடராங்க இங்க. //

போச்சிரா. இங்கதான் இப்படீன்னா ஜப்பான்லயுமா?

45, 50 வயசுக்கு மேல, வீட்டுக்கு சீக்கிரம் போகப் பிடிக்காம, பணியில மூழ்கிடற ஆட்கள் அதிகமாகிடறாங்க இல்லயா//

நா அப்படியில்ல கிருஷ்ணா. இப்பல்லாம் ஆறு இல்லன்னா ஏழு மணிக்கு எழுந்துருவேன். அதுசரி வயசாயிருச்சின்னா வீட்டுக்குபோக பிடிக்காதா என்ன? ஓ! வீட்டுக்கு போயி என்ன ஆவப்போவுதுன்னா?

sivagnanamji(#16342789) said...

ஒரு நல்ல சான்ஸை மிஸ் பன்னவச்சிட்டாரே உங்க சேர்மன்.இதுவரை வாடிக்கையாள்ர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள்,அவற்றை சமாளித்த முறைகளை அறிந்தோம்
வங்கிக்குள்ளேயே ஏற்படுத்தப்படும்
பிரச்சினைகளையும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும், அந்த பெண் அதிகாரி இங்கேயே இருந்திருந்தால் அறிந்திருக்கலாமே!
சான்ஸ் போச்சே...போச்...கான்..கோயிந்தே

tbr.joseph said...

வாங்க ஜி!

வங்கிக்குள்ளேயே ஏற்படுத்தப்படும்
பிரச்சினைகளையும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும், அந்த பெண் அதிகாரி இங்கேயே இருந்திருந்தால் அறிந்திருக்கலாமே!//

ஒங்களுக்கு தெரியாததில்லே..

வங்கி வாடிக்கையாளர்களில் பிரச்சினைக்குரியவர்கள் இருந்தால் அவர்களை வழிக்கு கொண்டுவந்துவிடலாம். சிரமம் இருக்கும். ஆனாலும் அதை தீர்க்க பல வழிகள் உள்ளன. அத்துடன் அதனால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.

ஆனால் வங்கிக்குள் இருப்பவர்களால் பிரச்சினை என்றால் அது ஒட்டுமொத்த கிளையையுமே பாதிக்கும்.

ஒரு மேலாளருடைய தலையாய கடமை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது.. அவர்களால்தான் வங்கியின் வணிகம் வளரும்.

அந்த நோக்கத்தையடைய தடையாயிருக்கும் பணியாளர்களை கற்பித்து திருத்துவதல்ல ஒரு மேலாளரின் பணி.. ஓரிரு முறை சொல்லிப் பார்ப்போம் சரி வரவில்லையென்றால் மாற்றத்திற்கு ஏற்பாடு செய்வோம்.

திறமையில்லாதவர்களால் பிரச்சினை இருக்காது. ஆனால் திறமையிருந்தும் சேவை மனப்பான்மை இல்லாதவர்கள், திறமையை தவறான வழிகளில் உபயோகிப்பவர்கள்.. இத்தகையோரை வைத்துக்கொண்டு மேனேஜ் செய்ய முயல்வது வெகு சிரமம்.

நான் மதுரை கிளையைப் பொறுப்பேற்ற சமயத்தில் இருந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் இப்படியொரு அதிகாரி தேவைதானா என்றே நினைக்க தோன்றியது.. அதுதான் அவரை மாற்ற ஏற்பாடு செய்தேன்.

Sivaprakasam said...

<===== இந்த சம்பாஷனை என்னுடயை முந்தைய மேலாளரை சந்தோஷப்படுத்தியது என்பதுபோலிருந்தது அவருடைய பார்வை... ===>
இருக்காதா பின்னே!